வெள்ளி, 14 செப்டம்பர், 2018

சப்தமாதர் வடிவங்கள்

பிராமி, மகேசுவரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி மற்றும் சாமுண்டிதேவி என்கின்ற ஏழு தாய்த்தெய்வங்களைச் சப்த மாதர்கள் என்று குறிப்பிடுவர்.  இவர்கள் முறையே பிரம்மன் (நான்முகன்), மகேசுவரர் (ஈசன்), குமரக்கடவுள் (முருகன்), விஷ்ணு, வராகர் (திருமாலின் வராக அவதாரம்), இந்திரன் மற்றும் யமன் என்கின்ற ஏழு தெய்வங்களுக்குச் சக்தியாகக் கருதப்படுகிறார்கள்.  கி.பி.6ஆம் நூற்றாண்டில் எழுதப்பெற்ற பிருகத்சம்கிதை என்ற நூலில் சப்தமாதர்கள் பற்றிக் குறிப்பிடப்படுகின்றது.  இவர்கள்  அந்தந்த ஆண் தெய்வங்களுக்குரிய ஆயுதங்கள், சின்னங்கள், வாகனங்கள், முக அமைப்பு, அணிகலன்களைப் பெற்றிருப்பவர்களாக செய்யவேண்டும் என்று சிற்ப சாஸ்திரங்கள் கூறுகின்றன.1

பிராம்மி, பிரம்மனைப் போன்று நான்கு முகங்கள் கொண்டு, கமண்டலம், கரண்டி, அக்கமாலை அல்லது புத்தகம் ஆகியவைகளைக் கொண்டிருப்பவளாகவும், மகேசுவரி, மகேசுவரனைப் போன்று சூலாயுதம் மற்றும் மழுவும் (வில், அம்பு, மான்), மண்டை ஓடு (கபாலம்), மாலை தரித்தவளாகவும், கௌமாரி, முருகக் கடவுளைப் போன்று சக்தியாயுதம் மற்றும் வஜ்ராயுதத்தினைக் கொண்டிருப்பவளாகவும், வைஷ்ணவி, திருமாலைப் போன்று சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரை (பத்மம்) கொண்டிருப்பவளாகவும், பன்றி முகத்துடனான வராகிதேவி, திருமாலின் வராக அவதாரம் போன்று உலக்கை, சக்தி, கண்டா மணி, கலப்பை அல்லது சங்கு, சக்கரம், கதை கொண்டிருப்பவளாகவும், இந்திராணி, இந்திரனைப் போன்று வஜ்ராயுதம், சக்கரம், அங்குசம் மற்றும் தோமரம் போன்றவைகளைப் பெற்றவளாகவும், சாமுண்டி, இயமனைப் போன்று சூலம், கத்தி, கபாலம் மற்றும் ஈட்டி போன்றவைகளைக் கொண்டு முண்ட மாலை அணிந்தவளாகவும் செய்யப்பட்டுள்ளது.

சப்தமாதர்களின் பிரதிட்டைக்கு முன் விநாயகர், வீரபத்திரர், பைரவர் திருமேனிகளில் ஏதேனும் ஒன்றினை நிறுவி வழிபடுவர்.  வலப்புறமாக விநாயகரும், இடப்புறக் கோடியில் வீரபத்திரரும் இருப்பதைக் கோயில்களில் பார்க்கலாம்.  பாண்டியர் காலக் குடைவரைகளில் (கி.பி.6ஆம் நூற்றாண்டு) முதன் முதலாக இடம்பெற்று, பின்னர் படிப்படியாக பல்லவர் காலக் கட்டுமானக் கோயில்களில் சிறிது சிறிதாக இடம்பெறத் தொடங்கியது.  திருக்கோகர்ணம், மலையடிப்பட்டி (கி.பி.812), குன்னத்தூர் (மதுரை மாவட்டம்), திருக்காளக்குடி (இராமநாதபுரம் மாவட்டம்), ஆலம்பாக்கம் (தந்திவர்மன் பல்லவன் காலம், கி.பி.796-846), திருக்கட்டளை மற்றும் வேளச்சேரி (ஆதித்த சோழன், கி.பி.871 - 907), திருத்தணி வீரட்டானேசுவரர் கோயில் (அபராஜித பல்லவன், கி.பி.903) ஆகிய இடங்களில் சப்தமாதர் சிற்பங்களின் தலைசிறந்த படைப்புக்கள் காணப்படுகின்றன.2 முற்காலச் சோழர்கள் காலத்திலும், பின்னர் வந்த சோழ மன்னர்களும், பாண்டியர்களும் விஜயநகர மன்னர்களும், சப்தமாதர்களின் வழிபாட்டினைப் போற்றினர்.  சாளுக்கியர்களிடமிருந்து விநாயகர் வழிபாடு, ஏழு மாதர்கள் வழிபாடு, ஜேஷ்டாதேவி வழிபாடு தமிழகத்தில் குறிப்பாக  பாண்டியப் பகுதியில் பரவி, பின்னர் பல்லவர் நாட்டுப் பகுதிக்குப் பரவியது.3
சப்தமாதர்கள் தோற்றம் தொடர்பாகப் புராணக் கதைகள் கூறப்படுகின்றன. அக்னிபுராணம், அம்சுமத்பேதாகமம், பூர்வ காரணாகமம், மட்சியபுராணம், உரூபமந்தணம், விஸ்வகர்ம சாஸ்திரம், சிற்பரத்தினம், ஸ்ரீதத்துவநிதி ஆகிய நூல்களில் படிமக்கலைக் கூறுகள் விளக்கப்பட்டுள்ளன.4  சிவனுக்கும் அந்தகா சூரனுக்கும் போர் ஏற்பட்டபோது சிவனுக்கு உதவிட தோற்று விக்கப்பட்டவர்கள் இவர்கள் என வராக புராணத்தில் கூறப்படுகிறது.  போரின்போது அந்தகாசூரனின் உடலில் இருந்து சிந்திய இரத்தத்துளி ஒவ்வொன்றிலுமிருந்து மற்றொரு அந்தகாசூரர் உருவாகி பல்கிப் பல கோடி அந்தகாசூரர்கள் உருவாகினார்கள். அந்த இரத்தத்துளிகள் கீழே சிந்தி மற்றொரு அந்தகாசூரர்கள் உருவாகக் கூடாது என்பதினால் தாகினி தேவியர்களைச் சிவன் உருவாக்கினான்.  இவர்கள் இரத்தத்தினைக் குடித்து புதிய அசுரர்கள் உருவாகாமல் தடுத்து நிறுத்தினர்.  அப்போது ஏழு மாதர்கள் தோற்றுவிக்கப்பட்டு, சிவனுக்குத் துணையாக போரின் போது செயல்பட்டனர்.

சும்பநிசும்பர்களை அழிப்பதற்காக துர்க்கைக்குத் துணையாக ஏழு மாதர்கள் தோற்றுவிக்கப்பட்டனர் என்று தேவிமகாத்மியம் கூறுகின்றது.  நிருத்தி என்ற அரக்கனை அழிக்க, பிரம்மாவிற்குத் துணையாக இவர்கள் தோற்றுவிக்கப்பட்டனர் எனச் சுப்ரபேதாகத்திலிருந்து அறியமுடிகிறது.5

இவர்கள் ஆண் தெய்வங்களின் சக்திகளாக உருவம் பெற்றதினால் அவரவர்களின் ஆயுதங்கள், ஆபரணங்கள், வாகனம், கொடி, செயல்பாடு, குணம், தன்மை என்பனவற்றினைக் கொண்டு காணப்படுவர்.

பிராமி

பிராமி, பிரம்மனின் சக்தியாவாள்.  நான்கு முகங்களும், நான்கு அல்லது ஆறு கைகளுடன் காணப்படுவர்.  அபயம், வரதம், புத்தகம், கமண்டலம் அல்லது அக்கமாலை பெற்றிருப்பவள் அன்னவாகன முடையவள்.  தலையில் கரண்ட மகுடம் அணிசெய்யப்படவேண்டும் என்று அம்சுமத்பேதாமம் குறிப்பிடுகிறது.6

மகேஸ்வரி

இவள் ஐந்து முகமுடையவள்.  இவள் சிவனின் சக்தி என்பதினால் வான், வஜ்ரம், திரிசூலம், பரசு, பாசம், மணி, நாகம், அங்குசம் மற்றும் அபய வரதமுத்திரைகளைக் காட்டியிருக்கவேண்டும் என்று ஸ்ரீதத்துவநிதி குறிப்பிடுகிறது.  இவரது தலையில் ஜடாமகுடம் இருக்கவேண்டும்.  எருதினை வாகனமாக உடையவள்.  பிறைச் சந்திரனைத் தலையில் சூடியவள் என்று விஷ்ணுதர்மோத்ரம் குறிப்பிடுகிறது.7

கௌமாரி

இவள், குமரக்கடவுள் அல்லது சுப்பிரமணியரின் சக்தியாவாள்.  ஆறு முகங்களும், பன்னிரு கரங்களையும் உடையவள்.  வேல், சேவல் ஆகியவைகளுடன் மற்ற கருவிகளையும் பெற்றிருக்க வேண்டும்.  மயிலினை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டவர்.

வைஷ்ணவி

விஷ்ணுவின் சக்தியான இவள் நீலநிறமுடையவள்.  சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவற்றினைப் பெற்றிருக்க வேண்டும் என்று விஷ்ணுதர்மோத்ரம் குறிப்பிடுகிறது.  மஞ்சலாடையும், கிரீட மகுடமும், கருட வாகனத்தையும் கொண்டிருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறது.8

வராகி

இவள், வராக மூர்த்தியின் சக்தி.  கறுப்பு நிறமுடையவர்.  பன்றியின் முகத்தினை ஒத்தவர்.  தண்டம், வாள், கேடயம், பாத்திரம், சங்கு, சக்கரம் ஆகியவற்றுடன் அபய முத்திரைகளையும் பெற்றிருப்பவர்.  எருமையை வாகனமாகக் கொண்டவர்.

இந்திராணி

இவள் இந்திரனின் சக்தியாவாள்.  அக்கமாலை, சக்தி அல்லது வஜ்ரம், தாமரை, பாத்திரம், அல்லது அங்குசம் இவைகளைக் கொண்டிருப்பவள்.  தலையில் கிரீடமகுடம் காணப்படவேண்டும்.9

சாமுண்டி

இவள் இயமனின் சக்தியாவாள்.  கறுப்பு நிறமுடையவர்.  பயங்கரத் தோற்றம் கொண்டவர்.  பிரேதத்தின் உடலை இருக்கை யாகக் கொண்டவர்.  பாம்புகளை உடலில் அணிந்திருப்பவர்.  ஒட்டிப்போன மெலிந்த வயிறு, குழிவிழுந்த கண்களைக் கொண்டவர்.  வலது கரங்களில் உலக்கை, சக்கரம், சாமரம், அங்குசம், வாய் ஆகியனவும், இடது கரங்களில் கேடயம், பாசம், வில், தண்டம், கோடரி ஆகியனவும் காணப்படவேண்டும் என்று விஷ்ணுதர்மோத்ரம் குறிப்பிடுகிறது.  ஆந்தையை வாகனமாகக் கொண்டவர்.10

முடிவுரை

      இவ்வாறு அமைந்துள்ள ஏழு தாய்த்தெய்வங்களின் வழிபாடு முதலில் பாண்டிய மன்னர்களால் போற்றப்பட்டு, பின்னர் பிற்காலப் பல்லவர்களாலும், சோழர்களாலும் வளர்க்கப்பட்டு இன்றளவும் வழிபாட்டிலும், போற்றுதலுக்குரியதாக அமைந்திருக்கிறது.
அடிக்குறிப்புகள்

1. சில்பரத்தினம் (சக்தி மார்க்கம்), அத்தி.24, பா.76-82;
ஸ்ரீதத்துவநிதி (சக்தி), பா43-50 (நரசிம்ம பிரசாதத்தில் உள்ளபடி); 
K.S. Gupte, p.98; H.K. Sastri, pp.190-196.
2. K.R. Srinivasan, "Some Aspects of Religion.... ," p.155.
3. சு, இராசவேல், தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பக்.108-9.
4. Bhagawant Sahai, Iconography of Minor Hindu and Buddhist Deities, 
p.209.
5. T.A.G. Rao, vol.1, p.t.2, p.383.
6. Ibid., pp.383-4.
7. Ibid., p.387.
8. Ibid., p.384.
9. Ibid., p.385.
10. Ibid., p.386.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக