வெள்ளி, 7 செப்டம்பர், 2018

ஓலைச்சுவடிப் பாதுகாப்பு முறைகள்


சுவடிப்பாதுகாப்பு என்பது சுவடிகளைப் பாதிக்கும் காரணிகளால் அழிவோ அல்லது அதன் உரிய  நிலையிலிருந்து மாற்றமோ ஏற்படாதவாறு காத்தல் ஆகும்.  சுவடிப் பாதுகாப்பு, மனிதன் எழுதத் தொடங்கிய நாள் முதல் நடைபெற்று வரும் பணியாகும்.  ஆனால் பாதுகாப்பு முறைகள் இடத்திற்கு இடம், எழுதப்பட்ட பொருள்கள், தட்பவெப்ப நிலை ஆகியவற்றிற்கு ஏற்ப மாறுபடும்.  

சுவடிகள் தூசு, ஒளி, வெப்பம், காற்றில் உள்ள ஈரப்பதம், சுற்றுப்புறமாசு, அமிலத்தன்மை, பூஞ்சைக்காளான், பூச்சிகள் போன்றவற்றால் அழிவு ஏற்படுகின்றன.  இவ்வழிவைத் தடுக்க நெடுங்காலமாக நம் முன்னோர்கள் எளிய முறையில் கிடைக்கக் கூடிய தாவரங்களையும் நாள்தோறும் கையாளும் பொருள்களையும் பயன்படுத்திப் பாதுகாத்து வந்துள்ளனர்.  

பாதுகாப்பு முறைகள்

பொதுவாகப் பாதுகாப்பு முறைகளை இரண்டு வகைகளாகப் பிரிப்பர்.  
1. மரபுவழிப் பாதுகாப்பு
2. அறிவியல்வழிப் பாதுகாப்பு
என அவை அமையும்.

1. மரபுவழிப் பாதுகாப்பு

தொன்றுதொட்டு காலங்காலமாக செய்யப்பட்டு வரும் பாதுகாப்பு முறைகளை மரபுவழிப் பாதுகாப்பு முறைகள் என்பர்,  சுவடிகள் இயற்கை மற்றும் செயற்கைக் காரணிகளால் அழிவதைத் தடுக்க, பல முறைகளை நம் முன்னோர்கள் கடைபிடித்துள்ளனர்.  அவற்றில் முக்கியமாகச் சுவடிகள் வைக்குமிடம், கையாளும் முறை, பூஞ்சை மற்றும் பூச்சிகளிலிருந்து பாதுகாக்கும் முறை, காலமுறை கண்காணிப்பு முறை, செப்பனிடுதல் மற்றும் படியெடுத்தல் போன்றவை மரபுவழிப் பாதுகாப்பு முறைகளாகும்.

அ. சுவடிகள் வைக்குமிடம்

சுவடிகளைப் பல்வேறு இடங்களில் வைத்துப் பாதுகாத்து வந்துள்ளனர்.  குறிப்பாக, ஜாடி, துணியில் சுற்றி வைத்தல், மர அலமாரி அல்லது மரப்பெட்டி, கோவில், சமாதி, பூமிக்கடியில் நிலவரை போன்ற இடங்களில் வைத்திருக்கின்றனர்.

i. ஜாடி

உலகில், குளிர்ப்பிரதேச நாடுகளில் உள்ள சுவடிகளை விட வெப்ப மண்டல நாடுகளில் உள்ள சுவடிகள் மிக வேகமாக அழிவிற்குள்ளாகின்றன.  இதற்குக் காரணம் மாறுபட்ட தட்பவெப்ப நிலையில் சுவடிகள் விரிந்து சுருங்குவதாலும், பூஞ்சைக் காளான் மற்றும் பூச்சிகளின் தாக்குதலுமே ஆகும். 

தொடக்க காலங்களில் எகிப்து, கிரேக்கம், ரோம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளில் ஓட்டுச்சில், பேப்பரைஸ் சுவடிகளைக் களிமண்ணால் செய்யப்பட்ட மூடியுடன் கூடிய ஜாடிகளில் வைத்துப் பாதுகாத்துள்ளனர்.

நாளடைவில் களிமண் ஜாடிகளுடன் மரம் மற்றும் தந்தத்தால் செய்யப்பட்ட  பெட்டிகளில் காற்றுப் புகா வண்ணம் வைத்துப் பாதுகாத்துள்ளனர்.  பெட்டிகள் மட்டுமின்றி மூங்கில், மரம் மற்றும் பித்தளையால் செய்யப்பட்ட குழாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.  

கி.மு.65இல் பேப்பரைஸ் சுவடிகளைச் சீடர் மர எண்ணெய் பூசி மண் ஜாடிகளில் வைத்துப் பாதுகாக்கப்பட்டதாக அறியமுடிகிறது.

ii. துணியில் சுற்றி வைத்தல்

முக்கியச் சுவடிகளுக்குப் பித்தளை, தாமிர, தந்தம் ஆகியவற்றால் ஆன பட்டைகள் சேர்த்து அலங்கரித்துள்ளனர்.  சுவடிகளைப் பாதிக்கும் காரணிகள் தூசு, ஒளி, காற்றில் உள்ள ஈரம் மற்றும் வெப்பத்தினால் சேதமடையக் கூடாது என்ற எண்ணத்தில் துணிகளில் கட்டி வைத்துள்ளனர்.  முக்கியமாக பட்டு மற்றும் பருத்தித் துணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.  இவ்வகைத் துணிகள் பூஞ்சை மற்றும் பூச்சிகளின் பாதிப்பு ஏற்படா வண்ணம் மஞ்சள் அல்லது சிவப்பு வண்ண துணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.  சில முக்கிய சுவடிகளைத் துணிகள் மட்டுமின்றி மான் தோலினால் சுற்றி வைத்தும், மற்ற மிருகங்களின் தோலினால் செய்யப்பட்ட பைகளில் வைத்து பாதுகாக்கப்பட்டுள்ளன.

iii. மரஅலமாரி அல்லது மரப்பெட்டி

பல மேலைநாட்டு நூலகங்கள் மற்றும் கிருத்துவ தேவாலயங்களிலும், மசூதிகளிலும் சுவடிகளை மரத்தால் ஆன அலமாரியில் தனித்தனியாக வைத்துப் பாதுகாத்துள்ளனர்.  இலங்கையில் உள்ள கண்டியன் கோவில் ஓலைச்சுவடிகளை மரப் பெட்டிகளில் வைத்துப் பாதுகாதுள்ளனர்.  இதனைப் பெட்டகம் என்று அழைத்துள்ளனர்.  இதுபோன்று இலங்கையில் உள்ள "தம்புலாவிகார" என்னும் புத்த விகாரத்தில் பெட்டிகளில் ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. 

இலங்கையில் முக்கியச் சுவடிகளை அழகுபடுத்தியும், அரக்கு பூசப்பட்ட பெட்டிகளில் வைக்கப்பட்டதாக 19ஆம் நூற்றாண்டில் இலங்கையில் பயணம் செய்த மேலைநாட்டுப் பயணிகளின் குறிப்புகள் உணர்த்துகின்றன.  மேலும் டச்சு நாட்டு மன்னருக்கு ஓலைச்சுவடியை முத்துக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட பெட்டியில் வைத்து அனுப்பியதாகவும் குறிப்பிடப்படுகிறது. 

பல்வேறு இந்திய நூலகங்களில் சுவடிகளைத் துணிகளில் சுற்றி மர அலமாரிகளில் வைத்துப் பாதுகாத்து வருவதைக் காணமுடிகிறது.  தஞ்சை சரஸ்வதி மகால் நூலகக் காகிதச் சுவடிகள் சிவப்பு அல்லது மஞ்சள் நிறப்பட்டு மற்றும் பருத்தித் துணிகளைக் கொண்டு சுற்றிக் கட்டி அவைகளை மர அலமாரிகளில் வைத்துப் பாதுகாக்கப்படுகிறது.  இம்முறையில் சுமார் 250 வருடங்களுக்கு மேல் பாதுகாக்கப்படுகிறது என்பதை அறியமுடிகிறது.  மர அலமாரிகளில் வைத்துப் பாதுகாப்பதால் ஒரே சீரான தட்பவெப்ப நிலையில் பாதுகாக்க முடியும் என்ற எண்ணத்தில் பாதுகாத்துவந்துள்ளனர்.  

தஞ்சையை ஆண்ட இரண்டாம் சரபோசி மன்னர் காலத்தில் தஞ்சைக்கு 1826இல் வந்த பிஷப் உறீபர் என்ற பாதிரியார் தஞ்சை அரண்மனையைப் பார்வையிட்ட பின், சரபோசி மன்னர் இரண்டு நூலகங்கள் வைத்திருந்தார் என்றும், ஒன்றில் புத்தகங்களும் மற்றொன்றில் சுவடிகளும் வைத்திருந்தார் என்றும் குறிப்பிடுகின்றார்.  மேலும், இச்சுவடிகள் 10 பெரிய அலமாரிகளிலும், 10 சிறிய அலமாரிகளிலும் வைக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடுகின்றார்.

iv. மூங்கில் பத்தை

மூங்கில் மரம் அதிகம் விளையும் பகுதியில் மூங்கில் பத்தை தயார்செய்து அவற்றுள்ளும் சுவடியை வைத்துப் பாதுகாத்து வந்துள்ளனர்.

v. கோவில் 

கோவில்களில் உள்ள பல்வேறு இடங்களில் சுவடிகளை வைத்துக் பாதுகாத்துள்ளனர்.  குறிப்பாக சாளரம், கிரந்த சமாதி, பரண் போன்ற பகுதிகள் குறிப்பிடத்தக்கனவாகும். 

சாளரம்

கோவில் கோபுரங்களில் உள்ள சாளரங்களில் சுவடிகள் வைத்துப் பாதுகாக்கப்பட்டுள்ளன.  சமீபத்தில் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறுக்கு அருகில் உள்ள மேலத்திருப்பூந்துருத்தி சிவன் கோவிலில் கும்பாபிஷேகம் செய்யச் செப்பனிடும் பணிகள் நடைபெறும் பொழுது உள்கோபுரத்தின் இரண்டாம் நிலையில் உள்ள அறையில், கோவில் கணக்குகள் எழுதப்பட்ட ஆவணச் சுவடிகள் மணல் மற்றும் சாம்பல் கொண்டு புதைத்து வைத்திருந்ததை நேரில் காணமுடிந்தது.  இதுபோன்று மற்ற கோவில்களின் கோபுரங்களிலும் சுவடிகள் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

கிரந்த சமாதி

வட இந்தியாவில் பல கோவில்களின் உள் பிரகாரத்தில் பிரமிட் அமைப்பு கொண்ட சிறு அறைகள் ஏற்படுத்திச் சுவடிகள் வைத்துப் பாதுகாத்துள்ளர்.  இதனைக் கிரந்த சமாதி என்பர்.

பரண்

தமிழ்நாட்டில் சுவடிகளைக் கர்பக் கிரகத்தின் மேற்பகுதியில் நான்கு மூலைகளிலும் பரண் அமைத்துப் பாதுகாத்துள்ளனர்.  சுவடிகள் இவ்விடங்களில் வைக்கப்படுவதால் வழிபாடு செய்யும் போது ஏற்படும் கற்பூரம் மற்றும் தூபப்புகை போன்றவை சுவடிகள் மீது படியும்.  இதனால் சுவடிகள் பூஞ்சைக் காளான் மற்றும் பூச்சிகளிடமிருந்து பாதுகாத்து வந்துள்ளனர்.  

vi. வீடு

வீடுகளில் உள்ள பல்வேறு இடங்களில் சுவடிகளை வைத்துப் பாதுகாத்துள்ளனர்.  கறிப்பாக வீடுகளில் உள்ள நிலவரை, பரண், பூஜையறை, துணியில் சுற்றி வைத்தல், மரப்பெட்டி போன்றவற்றில் வைத்துப் பாதுகாத்து வந்துள்ளனர். 

நிலவரை

ஒரிசாவில் உள்ள வீடுகளில் பூமிக்கடியில் நிலவரை ஏற்படுத்திச் சுவடிகளை வைத்துப் பாதுகாத்துள்ளனர். 

பரண்

சமையலறையின் மேற்பகுதியில் உள்ள பரண் போன்ற அமைப்பினை இரப்பை எனக் கூறுவர்.  சுவடிகளை இரப்பையில் வைத்துவிட்டு சரஸ்வதி பூஜை நேரத்தில் கீழே இறக்கிவைத்து பூஜை செய்வர்.  வீட்டுச் சமையிலறையில் பரண் அமைத்து அல்லது தூக்கு போன்று அமைத்து அதில் சுவடிகள் வைத்துப் பாதுகாத்துள்ளனர். ஆனால், இவ்விடங்களில் உள்ள அதிக வெப்பத்தால் சுவடிகள் விரைவில் சிதிலமடைந்துள்ளன. ஈரோடுக்கு அருகில் உள்ள காசிபாளையத்தில் சுவடிகளை இரப்பையில் போட்டு வைத்ததினால் நாளடைவில் பூச்சிகளின் தாக்கத்திற்கு உட்பட்டு மிகுந்த பாதிப்பேற்பட்டுள்ளது.

பூஜையறை

சுவடிகள் பூஜையறையில் வைத்தும் பாதுகாத்து வந்துள்ளனர். அதாவது, கற்றறிந்த வல்லுநர்கள், சோதிடர்கள், மருத்துவர்கள் போன்றோரின் இல்லங்களிலும் சுவடிகளைப் பூஜையறையில் வைத்துப் பாதுகாத்து வந்துள்ளனர். பூஜை செய்யும் பொழுது ஏற்றப்படும் கற்பூரம் மற்றும் தூபம் ஆகியவற்றினால் உண்டாகும் புகை அவ்வறையில் வைக்கப்பட்டிருக்கும் சுவடிகளுக்கு ஒருவகையில் பாதுகாப்பைத் தருகின்றது.  மேலும் சுவடிகளை முக்கிய பூஜை தினங்களில் பிரித்துப் படித்துக் கட்டி வைப்பதினாலும், நிரந்தரக் கட்டில் இல்லாமல் பயன்பாட்டில் இருப்பதாலும் ஓரளவு சுவடிகள் அழிவதிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது.

துணியில் சுற்றி வைத்தல்

சமையல் அறையில் வைக்கப்படாத சுவடிகளைப் பட்டு அல்லது பருத்தித் துணிகளைக் கொண்டு சுற்றி வைத்துப் பாதுகாத்துள்ளனர்.

சுவடிகளை மரப்பொருட்களில் மட்டுமின்றி மர அலமாரிகளில் வைத்தும் பாதுகாத்துள்ளனர்.  மர அலமாரிகளில் வைத்துப் பாதுகாப்பதால் சுவடிகள் ஒரே மாதிரியான தட்பவெப்ப நிலையில் வைத்திருக்க முடியும் என்ற எண்ணம் அவர்களிடம் இருந்துள்ளது.  சில முக்கிய சுவடிகளைப் பித்தளைப்பட்டை போட்ட மரப்பெட்டிகளில் பாதுகாத்ததையும், சுவடிகள் எடுத்து வைக்கச் சுவரிலேயே மரப்பலகைகளை இணைத்து பண்டகியம் (Bhandakiya) உருவாக்கி அதில் சுவடிகள் வைத்துப் பாதுகாத்ததையும் அறியமுடிகிறது.  

தூக்கு

பொதுவாக இல்லங்களில் சுவடிகளைப் பூஞ்சைக் காளான்களிடமிருந்தும் பூச்சிகளிடமிருந்தும் பாதுகாக்க சமையலறைப் பலகையில் தூக்குக் கட்டி அதில் வைத்துள்ளனர்.  இவ்வாறு சமையலறையில் வைப்பதால் புகை படியும்.  வெப்பம் அதிகமாக இருப்பதால் பூஞ்சைக் காளான் வளர்த்தல் மற்றும் பூச்சியினால் ஏற்படும் பாதிப்பு ஆகியன குறையும்.  ஆனால் வெப்பத்தின் மிகுதியால் சுவடிகளின் ஈரத்தன்மை குறையும்.  இயற்கையான வேதி மாற்றத்தினால் சுவடிகள் சிதிலமடையும்.  மேலும் புகைபடிந்து நிறமாற்றம் ஏற்படும்.

vii. பாரத நூலகங்களில் சுவடிகள் வைக்குமிடம்

கேரளாவில் சுவடிகளை மரப் பெட்டிகளில் வைத்துக் காற்று புகா வண்ணம் அடைத்து பாதுகாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

ஆந்திராவில் சுவடிகள் வைக்கும் அலமாரிகளில் வசம்புத் தூள் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

கர்நாடகாவில் சுவடிகளைச் சிவப்பு வண்ணத் துணிகளில் சுற்றி மரப் பெட்டிகளில் அல்லது அலமாரிகளில் வைத்துப் பாதுகாத்ததாக அறியமுடிகிறது.  மேலும் ஓலைச்சுவடிகளுக்கு இயற்கையில் கிடைக்கும் மூலிகைத் தாவரங்களிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் பூசப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஒரிசாவில் உள்ள நூலகங்களில் சுவடிகளைப் பாதுகாக்க சிவப்புத் துணிகளில் சுற்றிக் கட்டி வைத்ததாகவும், வேப்ப இலையை நிழலிற் காய வைத்து பொடி செய்து தூவப்பட்டதாகவும் அறியமுடிகிறது.  மேலும் அஸ்வகந்தி என்னும் மூலிகைத் தாவரத்தைப் பூச்சி எதிர்ப்புப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் அறியமுடிகிறது.

அசாமில் சுவடிகளைப் பாதுகாக்க பண்டரி என்னும் புல், வசம்பு, நிர்குண்ட தாவர இலை போன்ற மருத்துவ குணம் கொண்ட தாவரங்கள் பூச்சி எதிர்ப்புப் பொருட்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதை அறியமுடிகிறது.

வட இந்தியாவில் கற்பூரம், வேப்ப இலை, சந்தனமரக்கட்டை, அஸ்வகந்தி தாவர இலை, நாகப் பாம்பின் சட்டை, காக்கர் மரக்கட்டை, உகுரு கந்தா (Ugru gandha) தாவரம், அகர்மரக்கட்டை போன்ற பொருள்களை நேரடியாகவும், அகர் மரத்தூள், நாகப் பாம்பின் சட்டை, சந்தனத்தூள், சங்கு போன்ற பொருட்களைக் கொண்டு புகையூட்டியும், சுவடிப் பாதுகாப்பு செய்யப்பட்டதாக அறியமுடிகிறது.

சுவடிகளைப் பாதுகாக்க பூச்சி எதிர்ப்புப் பொருட்களை பயன்படுத்தும் பொழுது ஒரே பொருளைத் தொடர்ந்து திரும்பத் திரும்பப் பயன்படுத்துவதால் பூச்சிகள் இப்பொருட்களின் மணத்தைத் தாங்கும் நிலையை எட்டிவிடும்.  ஆகையால் பூச்சி எதிர்ப்பு பொருட்களை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்றி வெவ்வேறு பொருட்களைப் பயன்படுத்துதல் வேண்டும்.  அவ்வாறு பயன்படுத்தினால் பூச்சிகளின் தாக்கத்திலிருந்து சுவடிகளைப் பாதுகாக்கலாம்.

ஆ. சுவடிகளைக் கையாளும் முறை

நம் முன்னோர்கள் பிற்காலச் சந்ததியினருக்குச் சுவடிகளின் முக்கியத்துவத்தை அறிவிக்க தட்சிணாமூர்த்தி, சரஸ்வதி, பிரம்மா, ஹயகிரிவர் போன்ற கல்விக்கான கடவுளர்களின் கைகளிலும், திருவள்ளுவர், அவ்வையார், மாணிக்கவாசகர் போன்ற பெரும் புலவர்களின் கைகளிலும் சுவடி வைத்திருப்பதைப் போன்று உருவாக்கியுள்ளனர்.  சுவடிகள் சேதமுறா வண்ணம் ஒரு குழந்தை போன்று கையாண்டுள்ளனர்.  மேலும் அதனைப் படிக்க ஞானபீடம் என்றழைக்கப்படும் சுவடித் தாங்கி அல்லது சிக்குப் பலகை வைத்துப் படிக்கும் பழக்கத்தையும் உருவாக்கியுள்ளனர்.

இ. சுத்தம் செய்தல்

சுவடிப் பாதுகாப்பின் முதல் பணி சுவடிகளைச் சுத்தம் செய்தல் ஆகும்.  சுவடிகளில் படிந்துள்ள தூசு, புகை, பூச்சிகளின் எச்சம், பூஞ்ஞைக் காளாண் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள படிவு போன்ற பல்வேறு வடிவப் பொருட்களையும், சுவடிகளைப் பாதுகாக்கப் பயன்படுத்தும் தாவரச் சாறு அல்லது தைலங்களினால் ஏற்படும் படிவுகளையும் சுத்தம் செய்தல் வேண்டும்.  சுவடிகளின் மீது உள்ள தூசு மற்றும் இதரப் படிவுகளால் எழுத்துக்கள் மறைதல், நிறமாற்றம் அடைதல், நேரிடை மற்றும் மறைமுக வேதி மாற்றத்தால் சுவடிகள் சிதலமடைதல் போன்றன ஏற்படும்.

ஓலைச்சுவடிகளைச் சுத்தம் செய்ய முதலில் மெல்லிய தூரிகை (Brush) கொண்டு தூசு போன்ற பொருட்களைத் துடைத்துச் சுத்தம் செய்யலாம்.  மெல்லிய துணி அல்லது துணிகுள் பஞ்சு வைத்து மெத்தை போன்று தயாரிக்கப்படும் சிறு முடுச்சு கொண்டும் துடைத்துச் சுத்தம் செய்யலாம்.  பஞ்சினைக் கொண்டு ஓலைகளைச் சுத்தம் செய்தல் கூடாது.  பஞ்சைப் பயன்படுத்தும் போது பஞ்சில் உள்ள நார்ப்பொருட்கள் ஓலையில் எழுதப்பட்ட எழுத்து முகப்பு மற்றும் பூச்சிகளினால் பாதிப்படைந்த பகுதிகளில் சிக்கி ஓலைகள் உடையும்.

பூஞ்சைக் காளாண்களால் பாதிப்படைந்த சுவடிகளில் ஏற்பட்ட படிவுகளைப் பாதுகாப்பு செய்தபின் சுத்தம் செய்யவேண்டும்.  பூஞ்சைக்காளாண் படிவுகளைச் சுத்தம் செய்தபின் வேறு  துணி மாற்றவேண்டும்.  ஒரே துணியில் துடைப்பதால் பூஞ்சை நுண்ணுயிர்கள் மற்ற ஏடுகளுக்குப் பரவ வாய்ப்பு ஏற்படும்.
ஈ. பிரித்தெடுத்தல்

ஓலைச்சுவடிகள் நீண்ட நாட்கள் பிரித்துப் பார்க்காமல் கட்டி வைத்திருப்பதனால் மேற்பகுதியில் படியும் தூசு மற்றும் ஈரப்பதத்தினாலும் சுவடிகளைப் பாதுகாக்கப் பயன்படுத்தும் மேற்பூச்சுத் தைலங்கள் அதிகமாக இருப்பதினாலும், பூஞ்சைக் காளாண்களின் வளர்ச்சி மற்றும் புத்தகப் புழுவின் தாக்கத்தினாலும் சுவடியில் உள்ள ஓலைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும்.  இவ்வாறு ஒட்டிக்கொண்ட ஏடுகளை பாதுகாப்பிற்காகப் பூசப்படும் தைலங்களை மேற்பரப்பில் பூசியபின் சிறிது நேரத்தில் பிரிக்கப்பட்டுள்ளது.  

எ. ஓலை கிழிதல் மற்றும் உறிதல்

ஓலைகளின் ஓரங்களில் ஈரப்பதம் குறைவாக உள்ளபோது தவறாகக் கையாளுவதால் ஓலை உடையவும் கிழியவும் செய்யும்.  இவ்வாறு உடைந்த, கிழிந்த சுவடிகளை, நூல் கொண்டு தைத்துப் பாதுகாத்தனர்.  

ஏ. எண்ணெய் பூசுதல்

ஓலைகளில் உள்ள நீர்த்தன்மை காலத்தின் மாறுபாட்டால் ஆவியாவதால் சுவடிகள் சிதலமாவதைத் தடுக்க சில  விரைவில் ஆவியாகச் கூடிய தாவரத் தைலங்கள் மற்றும் எண்ணெய்கள் பூசப்பட்டுள்ளன.  

ஐ. சுவடிப்பாதுகாப்பு செய்யும் காலம்

சுவடிகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நம் முன்னோர்கள் பூசைகள், திருவிழாக்கள் போன்றவற்றை ஏற்படுத்தியுள்ளனர்.  குறிப்பிட்ட காலங்களில் சுவடிப் பாதுகாப்பு நடைபெற்றுள்ளதற்கு பூசைகளும் விழாக்களும் ஒரு காரணிகளாக அமைந்துள்ளன.  மழைக்காலங்களுக்கு முன்பு அல்லது மழைக்காலங்களுக்குப் பின்பு சுவடிகளை வெளியில் காற்றாட வைத்துப் பின் திரும்பக் கட்டி வைக்கும் பணி செய்யப்பட்டுள்ளது.  இவ்வாறு காற்றாட வைப்பதால் பூஞ்சைக்காளானின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கலாம்.

கர்நாடக மாநிலம், சிரவணபெலகோலாவில் அமைந்துள்ள சமணமடத்தின் மடாதிபதி 'தென்னிந்தியாவின் தட்பவெப்ப நிலையை கருத்தில் கொண்டு ஒவ்வொரு வருடமும் சதுர் மாதம் எனக் கூறப்படுகின்ற ஆனி முதல் புரட்டாசி வரையிலான மாதங்களில் சாதுக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு எங்கும் செல்வதில்லை என்றும், அந்தக் காலங்களில் நூல் படிக்கவும், பாதுகாக்கவும், படியெடுக்கவும் போன்ற பணிகள் செய்யப்பட்டன எனவும், ஒவ்வொரு ஆண்டும் சுவடிகளைச் சுற்றியுள்ள துணிகளுக்கு பதிலாக புதிய துணிகள் சுற்றுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.  மேலும் இந்த வழக்கத்தினால் தான் சுவடியைப் படித்த பண்டிதர்களைப் பாதுகாக்கவும், போற்றவும் மன்னர்கள் பண்டிதர்களுக்கு ஆடை அணிவித்தனர் என்றும் கூறுகின்றார்.

ஒ. பூச்சி எதிர்ப்புப் பொருட்கள்

சீடர் மர எண்ணெய் பூசுவதைப் போன்று பூச்சிகள் விரும்பாத மணம் கொண்ட பொருட்களான நிழலிற் உலர்த்திய வேப்பமர இலை, வேப்பம் பூ, வேப்பம் பருப்பு, நொச்சி இலை, புங்கன் மர இலை, யூகாலிப்டஸ் மர இலை, புகையிலை, சின்கோனா இலை, கிராம்புத் தைலம், கற்பூரத் தைலம், சந்தன தைலம், வசம்பு, கற்பூரம், வெட்டிவேர், மிளகு, கிராம்பு, படிகாரம், மஞ்சள், பண்ட்ரிபுல் போன்ற பூச்சி எதிர்ப்புப் பொருட்களும் சுவடிகள் பாதுகாக்க சுவடி வைப்பறைக்குள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறையின் சுவடி நூலகத்திலும், தஞ்சை சரஸ்வதிமகால் நூலகத்திலும் சுவடிகள் பாதுகாக்க, பூச்சி எதிர்ப்பு மணம் கொண்ட பொருட்களின் பொடியைத் துணியில் சிறுசிறு முடுச்சுகளாகக் கட்டிச் சுவடிகள் வைத்திருக்கும் அலமாரிகளில் வைக்கப்படுகிறது.  இதனை மணப்பொருள் முடிச்சு என்பர்.  இதில், வசம்பு 1 பங்கு, கருஞ்சீரகம் 1 பங்கு, இலவங்கப்பட்டை 1 பங்கு, மிளகு 1/4 பங்கு, கிராம்பு 1/4 பங்கு ஆகிய பொருட்களை நிழலிற் உலர்த்தி பொடி செய்து 12ஜ்12 செ.மீ. அளவுள்ள வௌ¢ளை மில் துணியில் 1 1/2 தேக்கரண்டி பொடியுடன் 5 கிராம் அளவுள்ள பூங்கற்பூரம் வைத்து முடிச்சுகளாகக் கட்டி சுவடி வைப்பறைகளில் வைக்கப்படுகிறது.  

சரஸ்வதிமகால் நூலகத்தில் இம்முறை சுமார் 120 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படுவதை 1882இல் சரஸ்வதிமகால் நூலகத்தில் பணிபுரிந்த நூலகர் குப்பாபட்டுலு என்பவரின் "பொருள்கள் தேவை" என்ற குறிப்புப் புத்தகத்திலிருந்து (Indent book) அறியமுடிகிறது.  

இதுபோன்ற பூச்சி எதிர்ப்பு மணப்பொருள்கள் மட்டுமின்றி "பாம்பு சட்டை"யின் துண்டுகளும் பூச்சி எதிர்ப்புப் பொருட்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.  சரஸ்வதி மகால் நூலகக் காகிதச் சுவடிகள் வைக்கப்பட்டுள்ள மர அலமாரிகளின் அடித்தட்டில் உள்ள சுவடிக் கட்டின் உள்பகுதியில் பாம்புச் சட்டை வைக்கப்பட்டுள்ளதைக் காணமுடிந்தது.  பாம்புச் சட்டைகள் வைப்பதால் சுவடிகள் வைத்துள்ள அலமாரிகளுக்குக் கரையான் பாதிப்பு இருக்காது என்பதையும், பல நூலகங்களில் பாம்புச்சட்டை பயன்படுத்தியதையும் ஓ.பி. அகர்வால் குறிப்பிடுகின்றார்.

i. வைப்பறையில் பூச்சி எதிர்ப்புப் பொருட்கள் 

பூச்சிகள் பாதிக்காதவாறு சுவடிகளை வைப்பறைகளில் வைத்தல் மட்டுமின்றி பல்வேறு வகையான பூச்சி எதிர்ப்பு மணம் கொண்ட இயற்கைப் பொருட்களைச் சுவடிகள் வைப்பறைக்குள்ளும் சுவடிகள் பெட்டகங்களுக்குள்ளும் வைத்துச் சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன.  இவ்வகையில் உலகிலேயே முதன் முதலில் பூச்சி எதிர்ப்புப் பொருளாக சீடர் மரப் பலகையிலான பெட்டிகள் செய்யப்பட்டு அவற்றில், சீடர் மர எண்ணெய் தடவப்பட்டதாக அறியமுடிகிறது.  

ஹோரஸ் (Horose) என்ற வரலாற்றாசிரியர் சீடர் மர எண்ணெய் 300 ஆண்டுகளுக்கு மேலாகச் சுவடிகள் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்படுவதாகக் குறிப்பிடுகின்றார். 

பிலினி (Philiny) என்ற வரலாற்றாசிரியர் சீடர் மர எண்ணெய் பூமியில் புதைக்கப்பட்ட ஆவணங்கள் 500 ஆண்டுகளுக்குப் பின் பார்வையிட்ட போது சேதமடையாமல் அதே நிலையில் இருந்ததாகக் குறிப்பிடுகின்றார். 

டாக்டர் இ.ஏ.பேக் (Dr.E.A. Back) என்பவர் பைபிலைப் பாதுகாக்க, சீடர் மர எண்ணெய் தடவி மண்குடுவையில் வைத்துப் பாதுகாக்கப்பட்டதாகக் குறிப்பிடுகின்றார். இன்றும் அமெரிக்காவில் சுவடிகள் மற்றும் நூல்கள் வைக்கப்பட்டுள்ள அலமாரிகளில் சீடர் மரத்தின் சிறுசிறு உருண்டைகளைப் பூச்சி எதிர்ப்புப் பொருட்களாகப் பயன்படுத்துகின்றனர்.

சுவடிகளைச் சுற்றி கட்டி வைக்கச் சிவப்பு வண்ணத் துணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.  இத்துணிகளில் பிரதிபலிக்கும் ஒளி சிவப்பு வண்ணத்துடன் அகநிற சிவப்புக் கதிர்களும் (Infra Red Rays)  வெளியிடப்படுகிறது.  இவ்வொளி பூச்சிகளின் கண்களுக்கு ஒவ்வாத வகையில் இருப்பதால், பூச்சிகள் சிவப்பு மற்றும் காவி வண்ணம் பூசிய பொருட்களிடம் நெருங்குவதில்லை.  பூச்சிகள் பாதிகாது என்பதால் பல்வேறு காரணங்களுக்காக நம் முன்னோர்கள் தொட்டு தொடர்ந்து சிவப்பு வண்ணத்தைப் பயன்படுத்தி வருகின்றோம்.

மழை காலங்களுக்குப் பின் ஏற்படும் தட்பவெப்ப நிலை மாற்றத்தால் அதிக பூச்சிகள் உருவாவதால் தமிழகத்தில் மார்கழி மற்றும் தை மாதங்களில் கோவில்களிலும் வீடுகளிலும் மழையினால் வளரும் பூஞ்சையை அழிக்க சுண்ணாம்பு கொண்டு வௌ¢ளையடித்தலும் பூச்சிகள் வராமல் சிவப்பு காவி கொண்டு கோடுகள் போடுதலும் செய்யப்பெறுகின்றன.  இக்காரணத்தினாலேயே தூர தேசங்களுக்குக் கால் நடையாகச் சென்ற முனிவர்களும், சாதுக்களும் பூச்சிகளின் பாதிப்பைத் தவிர்க்க சிவப்பு நிற உடையணிகின்றனர்.  பூச்சிகள் நெருங்காது என்பதாலேயே சுவடிகளைச் சிவப்பு நிறத் துணிகளில் கட்டி வைக்கும் வழக்கம் ஏற்பட்டது எனலாம்.  இந்த வழக்கம் இன்று வரை தமிழகம் மற்றும் தென்னிந்திய நூலகங்களில் கடைபிடிக்கப்படுகிறது.  

பாரதத்தின் வடபகுதியில் மதுராவிற்கு அருகில் பிருந்தாவன் நகரில் அமைந்துள்ள பிருந்தாவன் ஆராய்ச்சி மையத்திலும், புனேவில் அமைந்துள்ள பண்டார்கர் ஓரியண்டல் ஆராய்ச்சி நிறுவன நூலகத்திலும், ஒரிசாவின் தலைநகர் புவனேசுவரத்தில் அமைந்துள்ள மாநில அருங்காட்சியத்கதிலும் உள்ள காகிதச் சுவடிகளைச் சிவப்பு நிறத் துணிகளில் கட்டி வைத்திருக்கின்றனர்.  காகிதச் சுவடிகள் பாதுகாப்பில் சிவப்பு நிறத்துணிகளின் பயன்பாடு குறித்து ஓ.பி. அகர்வால் (O.P. Agrawal), சி.எல். பிரஜாபதி (C.L. Prajapathi) போன்றோர் ஆய்வு செய்துள்ளனர்.

துணிகளைக் கொண்டு சுவடிகள் கட்டி வைத்துப் பாதுகாக்கும் வழக்கம் சமணர்களின் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.  சமணர்கள் சுவடிகள் பாதுகாப்பிற்காக கட்டி வைக்கும் துணிகளைச் "சுறுதபாவாடை" (Srutha Paavaadai) என்று குறிப்பிட்டதாக அறியமுடிகிறது.

ii. வைப்பறைகளில் பூச்சிக்கொல்லி

மரபு வழியாகச் சுவடிகளைப் பாதுகாக்கப் பூச்சி எதிர்ப்புப் பொருட்கள் பயன்படுத்துதல் மட்டுமின்றி பூச்சிகளின் பாதிப்பைத் தடுக்க இயற்கையில் கிடைக்கும் பூச்சிக் கொல்லிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளதை அறியலாம்.  சீடர் மர எண்ணெய் பூச்சி எதிர்ப்புப் பொருளாக மட்டுமின்றி பூச்சிக் கொல்லியாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளதை கி.மு.65இல் «உறாரஸ் (Horace) என்ற வரலாற்றறிஞர் குறிப்பிடுகின்றார்.

கி.பி மூன்றாம் நூற்றாண்டில் சீனாவில் அமுர்கார்க் மரங்களிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட  வடிநீரிலிருந்து (Juice) உறீன்ங்-னெய் (huang-nieh) என்று அழைக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதை அறியமுடிகிறது.  இந்தப் பூச்சிக் கொல்லியைப் பயன்படுத்தியதால் காகிதம் மஞ்சள் நிறமானதாகக் குறிப்பிடப்படுகிறது.  கி.பி.674முதல் அரசாணியின்படி ஆவணங்கள் சுவடிகள் எழுதுவதற்குத் தயாரிக்கப்படும் காகிதங்கள் பூச்சிக்கொல்லி சேர்க்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

பதின்மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட 'ரெமிடியம் கன்ட்ரா வெர்மிஸ் லைபிரரியம்' (Remedium Contra vermes Librarium) என்ற நூலில் கி.பி.993இல் பாக்தாத்தில் சபூர் இபின் அர்டசி (Sabur Ibn Ardasi) ஏற்படுத்திய நூலகத்தில் ஒரு விதமான வேதிப்பொருள்கள் பூச்சிக்கொல்லியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

ஓலைச்சுவடிகளில் ஏற்பட்ட பூச்சிகளின் பாதிப்பைத் தடுக்கவும் பூச்சிகளைக் கொல்லவும் ஊமத்தை இலைச்சாறு பயன்படுத்தப் பட்டுள்ளதை அறிகிறோம்.   

தென்னிந்தியாவில் இயற்கையாக மரங்களிலிருந்து கிடைக்கும் சாம்பிராணி, அகில், சந்தனம் போன்றவற்றின் புகைகள் பூச்சிக் கொல்லியாகவும், பூச்சி விரட்டியாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.  

கர்நாடகாவில் கேசவளித் தாவரத் தண்டிலிருந்து கிடைக்கும் சாற்றையும், ஒரிசாவில் ஒரு வகையான பீன்ஸ் தாவரத்தின் சாற்றையும் பூச்சிகளின் பாதிப்பைத் தவிர்க்க ஓலைச்சுவடிகளுக்குப்  பூசப்பட்டுள்ளது.

18ஆம் நூற்றாண்டிலிருந்து பல்வேறு நூலகங்கள் மற்றும் சுவடிப் பாதுகாப்பகங்களில் பூச்சிகளின் பாதிப்பைத் தடுக்கப் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.  பல்வேறு ஆய்வுகளின் பலனாக இயற்கைப் பொருட்களைவிட வேதிமக் கூட்டுப் பொருட்களே பூச்சிக் கொல்லியாகக் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன.  கி.பி.1990க்குப் பின் வெப்ப மண்டல நாடுகளிலும் ஜப்பான் போன்ற கலைப்பொருட்கள், சுவடிகள், ஆவணங்கள் அதிகம் உள்ள நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வேதிமக் கூட்டுப் பொருட்களைச் சரியான தட்பவெப்ப நிலையில் பயன்படுத்தாமல் மாறுபட்ட சூழ்நிலையில் பயன்படுத்தும் பொழுது பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தும் பொருட்களே சுவடிகளைப் பாதிப்படையச் செய்யும்.  ஆகையால் வேதிமப் பொருட்களைப் பயன்படுத்தும் பொழுது அதன் தன்மை மற்றும் தட்பவெப்ப நிலையால் அதற்கு ஏற்படும் மாறுதல்களை அறிந்து பயன்படுத்துதல் நலம் பயக்கும் எனலாம்.  இதனால் தற்பொழுது உலகெங்கும் வேதிமப் பொருட்கள் இல்லாத பாதுகாப்பு முறைகள் அல்லது குறைந்த அளவு வேதிமப் பொருட்களின் பயன்பாட்டுடன் கூடிய பாதுகாப்பு முறைகள் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஓ. சுவடிகளைக் கண்காணிக்கும் முறை

சுவடிகளை வருடத்திற்கு ஒருமுறையாவது பிரித்துப் பார்த்துச் சுத்தம் செய்தல் வேண்டும்.  இவ்வாறு சுத்தம் செய்யும் பணியைக் கண்டிப்பாகக் கடைபிடிக்கவேண்டும் என்பதால் சரஸ்வதி பூஜை போன்ற பண்டிகைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  

ஓள. சுவடி பயன்படுத்தும் முறை

சில ஊர்களில் கல்வியாளர்கள் வருடத்திற்கு ஒரு முறையேனும் சுத்தம் செய்து வைப்பதுடன் ராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்களைப் பலர் கேட்பதற்காக இரவு நேரங்களில் வாசிக்கும் வழக்கம் இருந்துள்ளதை அறிகிறோம்.  இன்றும் இவ்வழக்கம் தமிழ் நாட்டில் காரைக்குடிப் பகுதிகளில் நகரத்தார் வாழும் ஊர்களில் நடைமுறையில் உள்ளதைக் காணமுடிகிறது.  அப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் கம்பராமாயணச் சுவடிகள் புரட்டாசி மாதம் பத்து அல்லது பதினைந்து நாட்கள் வாசிக்கப்படுகின்றன.  இறுதியாகப் பட்டாபிஷேக கதை சொல்லும் நாட்களில் கதை கேட்போர் அனைவரும் சுவடி வாசிப்போருக்குச் சன்மானம் வழங்கும் வழக்கம் இருக்கிறது. 

ஒரு குடும்பத்தில் உள்ள நபர்கள் வெளியூர் அல்லது வெளிநாட்டிற்குக் குடியேறினால், அக்குடும்பத்தில் உள்ள சுவடிகளின் நகல் கொடுத்தனுப்பப்படுகிறது.  இது ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சுவடியாவது வைத்துப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்திலும், வீடுகளில் சுவடிகளைப் பாதுகாப்பதால் பொன் பொருள் சேரும் என்ற நம்பிக்கையிலும், அனைத்துக் கல்வியாளர்களின் இல்லங்களிலும் சுவடிகள் வைத்துப் பாதுகாக்கப்பட்டுள்ளன என்பதை அறியமுடிகிறது.

க. ஓலைச்சுவடிப் பாதுகாப்பு

ஓலைச்சுவடிகள் எழுதுவதற்குத் தயாரிக்கும் பொழுதே அவ்வோலைகள் அதிக நாட்களுக்குப் பூச்சிகளின் பாதிப்பின்றி வளைந்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஓலைகளைத் தேர்ந்தெடுத்துப் பதப்படுத்தி எழுதப்படுகிறது.  பொதுவாக ஓலைகளின் மேற்புறம் கண்ணாடி போன்ற தோலால் மூடப்பட்டிருக்கும்.  இது ஓலைகள் காற்றில் உள்ள அதிகப் படியான ஈரத்தை உறிஞ்சுவதைத் தடுக்கும்.  எழுத்தாணி கொண்டு எழுதும் பொழுது இந்த மேல் தோல் பாதிப்படைகிறது.  மேலும் ஓலைகள் அதிக ஈரத்தை உறிஞ்சுவதால் பாதிப்பு ஏற்படும்.  எனவே, பாதுகாப்பு கருதியும், எழுத்துக்கள் தெளிவாகத் தெரிவதற்கும் ஓலைகளில் மஞ்சள், கோவையிலைச்சாறு, ஊமத்தஞ்சாறுடன் இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகியவற்றில் ஏதாவதொன்றைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட விளக்குக்கரி பயன்படுத்தப்பட்டுள்ளது.  சில பகுதிகளில் விளக்குக்கரிக்குப் பதிலாக தர்ப்பைப்புல்கரி, வசம்புக்கரி பயன்படுத்தப்பட்டுள்ளது.  இதன் மூலம் ஓலைகள் காற்றில் உள்ள ஈரத்தை உறிஞ்சாமல், பூஞ்சைக் காளான் மற்றும் பூச்சிகளின் பாதிப்பிலிருந்து தடுக்கமுடியும்.

இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் ஓலைச்சுவடிகளில் உள்ள ஈரப்பதம் வெளியேறுவதால் ஓலைகள் வளைந்து கொடுக்கும் தன்மையை இழக்கின்றது.  கவனமாகக் கையாளவில்லை எனில் ஓலைகள் உடைந்துவிடும்.  ஆகையால் சுவடிகள் வளைந்து கொடுக்கத் தாவர இலைச்சாறுகள் பயன்படுத்தப்படுகின்றன.  மேலும் விரைவில் ஆவியாகக் கூடிய தாவரங்களிலிருந்து கிடைக்கும் திடத்தன்மை குறைந்த எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.  உணவுக்காகப் பயன்படுத்தும் எண்ணெய்களில் நல்லெண்ணெய் மட்டும் ஒரு சில பகுதிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.  சிதம்பரத்தில் இராசராசன் வண்மிகத்தால் மூடப்பட்ட சுவடித் தொகுப்பைச் "சீர்த்ததில் தயிலமலி கும்பங் கொண்டு" என்ற திருமுறைகண்ட புராணப் பாடல் வரியிலிருந்து "தில தயிலம்" (திலம்-எய்) நல்லெண்ணெய் பயன்படுத்தியதை அறியமுடிகிறது.  தென்னிந்தியாவிலும் வங்காளத்திலும் நல்லெண்ணெய் பயன்படுத்தப்பட்டதாக அறியமுடிகிறது.

எழுத்தாணி கொண்டு எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளுக்குப் பல்வேறு நூலகங்களில் அங்கு அதிகமாகக் கிடைக்கும் தாவர எண்ணெய்களான கற்பூரத்தைலம், சிட்ரனிலா தைலம், ஆமணக்கெண்ணெய், லெமன்கிராஸ் தைலம், கடுகு எண்ணெய், வேப்ப எண்ணெய், யூகாலிப்டஸ் தைலம்,  நல்லெண்ணெய் போன்றவைகளை ஓலைச்சுவடிகளின் மீது பூசி பாதுகாக்கப்படுகிறது.  இத்தைலங்களை ஓலைச்சுவடிகளுக்குப் பூசுவதால், ஓலையில் உள்ள நீர் ஆவியாவதைத் தடுத்து சுவடிகள் பாதுகாக்கப்படுகிறது.  மேலும் இதன் மூலம் ஓலைகளுக்கு வளையும் தன்மை அதிகமாகி, சுவடிகள் உறுதித்தன்மை பெறுகின்றன.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறையில் ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்க வேப்ப எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.  வேப்ப எண்ணெய்யின் அடர்த்தி அதிகமாக இருப்பதால் அதைக் குறைப்பதற்கு 1லிட்டர் வேப்ப எண்ணெய்யைக் காய்ச்சி அதில் வாழைப்பழத்தோல் இரண்டு போட்டு எடுத்த பின் 10 கிராம் பூங்கற்பூரம் சேர்க்கப்படுகிறது.  இந்த முறையினால் வேப்ப எண்ணெய்யின் அடர்த்தி குறைவதுடன் கற்பூரத்தின் சேர்க்கையால் அதன் நாற்றம் குறையும்.  வேப்ப எண்ணெய் விரைவில் காற்றில்  ஆவியாகாததால் நீண்ட நாட்களுக்கு சுவடிகள் வளைந்து கொடுக்கும் தன்மை பெற்றிருக்கும்.  குறைந்தது ஐந்து ஆண்டுகள் வேப்ப எண்ணெய்யின் மணம் சுவடியின் மீது இருக்கும்.  மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு வளைந்து கொடுக்கும் தன்மை இருக்கும் என்று தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறையினர் ஆராய்ந்துள்ளனர்.  

இதேபோல் இப்பல்கலைக்கழகத்தில் வேப்ப எண்ணெய் காய்ச்சும் போது கொய்யா இலைகள் சிலவும் சேர்த்துக் காய்ச்சி கற்பூரம் கலந்தும் பயன்படுத்தப்படுகிறது.  இந்நிலைகளில் வேப்ப எண்ணெய்யின் அடர்த்தி குறைப்பதற்காக 1லிட்டர் வேப்ப எண்ணெய்க்கு 1லிட்டர் மண்ணெண்னை கலக்கப்படுகிறது.  மண்ணெண்னை கலப்பதால் சுவடியின் மீது தடவும் வேப்ப எண்ணெய் சீக்கிரம் காய வழிசெய்கிறது.  என்றாலும் சுவடிகள் எத்தனை ஆண்டுகளுக்கு வளைந்து கொடுக்கும் என்று சொல்வதற்கில்லை.

ஆந்திராவில் உள்ள சுவடி நூலகங்களில் ஓலைச்சுவடிகளுக்கு வேப்ப எண்ணெய் பூசப்படுவதாகஅறியமுடிகிறது.

அதிகமாக உள்ள எண்ணெய்யை ஓலையிலிருந்து துடைக்காமல் விடின், தூசி படியும், ஓலைகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளும்.  கர்நாடக மாநிலத்தில் உள்ள பல நூலகங்களில் ஓலைச்சுவடிகளுக்குத் தாவரப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் 'தாளகிரந்த தைலம்' பயன்படுத்தப்படுகிறது.  மைசூர், மேல்க்கோட்டை ஓலைச்சுவடி நூலகத்தில் பணிபுரிந்த வீரராகவன் என்பவர் மைசூர் ஓரியண்டல் ரிசர்ச் இன்ஸ்டிடூயூட் மற்றும் கன்னட அத்யயான ஸம்ஸ்த்தான நூலகங்களில் 'தாள கிரந்த தைலம்' போன்று கீழ்க்கண்ட பொருள்களைக் கொண்டு அவர்களே தயாரித்துக்கொள்வதாகக் கூறுகின்றார்.
10 லிட்டர் நல்லெண்ணெய்
100 மி.லி.  புங்க மர எண்ணெய்
100 மிலி.  வேப்ப எண்ணெய்
100 கிராம் கற்பூரம்
1/4 லிட்டர் ஆடாதொடை இலைச்சாறு
இவைகளைக் கலந்து அடுப்பிலேற்றிக் காய்ச்சி, ஆறிய பின் சுவடிகள் பாதுகாப்பிற்காகப் பூசியுள்ளனர்.

மரபு வழி ஓலைச்சுவடிகள் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தும் எண்ணெய்களில் ஆவியாகும் தன்மை மற்றும் அதனால் சுவடிகள் அமையும் உறுதித் தன்மையைக் கணக்கிட லக்னோவில் உள்ள தேசிய கலைப்பொருட்கள் ஆய்வகம் செய்த ஆய்வின் முடிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தைலத்தின் பெயர் காலம் ஆவியாகும்       உறுதித்
                                    நிலை   தன்மை
1. கற்பூரத் தைலம் 24மணி        29.20 54.40
2. சிட்ரனிலா தைலம்     "                    21 59.27
3. ஆமணக்கெண்ணெய்             "                    24 34.40
4. லெமன் கிராஸ் தைலம்     "                    21 43.73
5. கடுகு எண்ணெய்             "                    21.80 40.35
6. வேப்ப எண்ணெய்             "                    24.30 47.90
7. யூகாலிப்டஸ் தைலம்             "                    30.70 54.30
8. கிராம்புத் தைலம்             "                    26.70 62.64
9. இலுப்பை எண்ணெய்             "                     25.70 47.29

இவ்வாய்வின் மூலம் கிராம்புத் தைலம், சிட்ரனில்லா தைலம், கற்பூரத் தைலம், யூகாலிப்டஸ் தைலங்கள் விரைந்து சிதிலமடையக் கூடிய ஓலைகளுக்கு உறுதித் தன்மையும் வளையும் தன்மையும் கொடுக்கின்றன என்பதைக் கூறுகின்றது.  

கா. ஓலைச்சுவடிகள் செப்பனிடல்

சுவடிகள் சிதிலமடைந்திருந்தால் அதற்கு மாற்றாக படிச்சுவடி தயாரிக்கப்பட்டுள்ளது.  ஒரு சுவடியில் ஒரு ஏடு (ஓலை) சிதிலமடைந்திருந்தால் அவ்வேடு மட்டும் புதியதாக எழுதப்பட்டு மாற்றப்பட்டுள்ளது.  மற்றபடி சுவடிகள் முறிந்தாலோ, உடைந்தாலோ ஊசி நூல் கொண்டு தைத்துச் செப்பனிடப்பட்டுள்ளது.

கி. காகிதச் சுவடிகள் பாதுகாப்பு

காகிதச் சுவடிகளின் தாள்கள் அதிகமிருப்பின் அவற்றில் மேலும் கீழும் பலகைகள் வைத்து ஓரங்கள் சேதமுராவண்ணம் துணிகளில் கட்டி வைக்கப்பட்டுள்ளது.  கையாளும் போது தாள்கள் மாறிவிடுதல் மற்றும் தவறிவிடுதல் போன்றவற்றைத் தவிர்க்க நாளடைவில் தனித்தனி தாள்கள் கட்டுமானம் (Binding) செய்து பாதுகாக்கப்பட்டது.  சுவடிகளில் கையாளும் பொழுது கையாளுபவர் கையில் வியர்வைபடுதல் கூடாது என்பதற்காக சுவடிகள் முழுமையும் மறையும் வண்ணம் அட்டையின் ஒருபக்கம் நீட்டப்பட்டிருக்கும். மேலும் காகிதச் சுவடிகள் பாதுகாக்க அவ்வப்போது மரபுவழிப் பூச்சிக் கொல்லி பயன்படுத்தப்பட்டுள்ளது.

கீ. காகிதச் சுவடிகள் செப்பனிடும் முறை

மரபு வழியில் காகிதச் சுவடிகள் இழந்திருந்தால் அதே வகையான காகிதத்தைத் தேவையான அளவு வேம்பு அல்லது வேலா மரத்தின் பிசினைக் கொண்டு செப்பனிட்டுள்ளனர்.

கு. சுத்தம் செய்தல்

ஓலைச்சுவடிகளைப் போன்று காகிதச் சுவடிகளையும் சுத்தம் செய்தல் அவசியம்.  சுற்றுப்புற மாசினால் படியும் தூசுகள், காற்றில் உள்ள ஈரத்தை உறிஞ்சுவதால் காகிதச் சுவடிகள் நிறமாற்றம் ஏற்படுகின்றன.  ஆகையால் காகிதச் சுவடிகளில் படிந்துள்ள தூசுகளை புருசு, பஞ்சு அல்லது மெல்லிய துணி கொண்டு துடைத்துள்ளனர்.  

2. அறிவியல்வழிப் பாதுகாப்பு

அறிவியல் வளர்ச்சியினால் அறிவுப்பூர்வமாக சிந்தித்து பல்வேறு கண்டுபிடிப்புகளாலும் நவீனக் கருவிகள் மற்றும் வேதிப் பொருட்களைப் பயன்படுத்திச் செய்யப்படும் பாதுகாப்பு முறைகளை அறிவியல்வழிப் பாதுகாப்பு முறைகள் என்பர்.  அதாவது, அறிவியல்வழிப் பாதுகாப்பு என்பது அறிவியல் வளர்ச்சியினால் கண்டறிந்துள்ள பல்வேறு வேதிப் பொருட்களைச் சுவடிப் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு சாதனங்களைத் தேர்வு செய்து சுவடிகளின் தன்மை, பாதிக்கும் காரணிகள், பயன்படுத்தும் பொருட்களினால் ஏற்படும் பாதிப்பு போன்றவற்றை ஆய்வு செய்து தேவையான முறைகளை, கால முறையில் பயன்படுத்துதல் ஆகும்.

அறிவியல் வளர்ச்சியினால் சுவடிப்பாதுகாப்பு முறைகள் மற்றும் வேதிப்பொருட்களின் பயன்பாடு அதிகரித்தாலும் சுவடிகளின் தன்மை மற்றும் தட்பவெப்ப நிலைக்குத் தகுந்த முறைகளைப் பயன்படுத்தவேண்டுவது அவசியமாகும்.  மனிதனின் "தேவையே புதிய கண்டுபிடிப்பின் தாய்" (Necessity Mother of Invention) எனக் கூறப்படுவது போல் தேவைக்கேற்ப பல்வேறு புதிய பாதுகாப்பு முறைகள் பல நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  நுண்படமெடுத்தல், ஒளி நகலெடுத்தல், கணினி மூலம் மின்னணு உருப்பதிவு செய்தல் போன்றவைகளும் அறிவியல்வழிப் பாதுகாப்பு முறை எனக் கொள்ளலாம்.  

அ. லேமினேசன்

சுவடிகள் மிகவும் சிதிலமடைந்திருப்பின் அவற்றைச் செப்பனிட பல முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.  மிகச் சிதிலமடைந்த சுவடிகளைக் கையாளும் பொழுது பாதிப்பு ஏற்படா வண்ணம் பாதுகாக்க லேமினேசன் என்னும் மேல் ஒட்டும் முறை பயன்படுத்தப்படுகிறது.  இம்முறையில் சிதிலமான சுவடிகளைச் சுத்தம் செய்து ஒவ்வொரு சுவடியின் இருபுறமும் அதன் புற அளவைவிட 2செ.மீ. அதிக அளவுள்ள செல்லுலோஸ் அசிட்டேட் தாள் சுவடியின் மேலும் கீழும் வைத்து அதன் பின் ஜப்பான் டிஷ்யூ தாள் மேலும் கீழும் வைக்கவேண்டும்.  இவ்வாறு சேர்க்கப்பட்ட தாள்களுடன் சுவடியை 70டிகிரி செல்சியஸ்க்கு வெப்பப்படுத்தினால் செல்லுலோஸ் அசிட்டேட் தாள் உருகி ஜப்பான் டிஷ்யூ தாளுடன் சுவடியின் மீது ஒட்டிக்கொள்ளும்.  

இதே முறையை வெப்பப்படுத்தாமல் வேதிமக் கரைசலான அசிட்டோனை பஞ்சில் நனைத்து இருபுறமும் தடவுவதால் அசிட்டோன் திரவம் ஜப்பான் டிஷ்யூ வழியாக ஊடுருவி செல்லுலோஸ் அசிட்டேட் தாளை அடைக்கும்.  அது பசை போன்று மாறுவதால் டிஷ்யூ தாள் சுவடியின் மீது ஒட்டிக்கொள்ளும்.  இவ்வகையில் லேமினேசன் செய்யப்படும் சுவடிகளின் ஏடுகள் உறுதியடையும்.  ஆனால் எழுத்துக்கள் சிறிது மங்களாகத் தெரியும். 

வெப்பத்தைக் கொண்டு லேமினேசன் செய்யும் போது சுவடிகள் பாதிக்கப்படுகின்றன.  மேலும் இன்று பல்வேறு வியாபார நிறுவனங்களில் பாலிஸ்டர் தாள்களைக் கொண்டு வெப்பப்படுத்தி லேமினேசன் செய்யப்படுகிறது.  இந்த முறையில் லேமினேசன் செய்த பின் பிரித்து எடுக்க இயலாது.  மேலும் இம்முறையில் லேமினேசன் செய்த சுவடிகளைக் கையாளும் நுண்துகள்களால் கீறல் ஏற்படும்.  மேலும் தட்பவெப்ப நிலையால் பாதிப்பு ஏற்படும் ஆகையால் சுவடிகளுக்குப் பிரித்தெடுக்க முடியாத லேமினேசன் முறை உகந்தது அல்ல.

ஆ. சுற்றுறையிடுதல் (Encaptulation)

சிதிலமடைந்த சுவடிகளைக் கையாளவும், செப்பனிட்ட சுவடிகளைப் பாதுகாக்கவும், ஓலை மற்றும் தாள் சுவடிகளுக்கு மேல் சுற்றுறையிடுதல்முறை செய்யப்படுகிறது.  இம்முறையில் சிதிலமடைந்த சுவடிகளைச் சேதமுறாமல் கையாளலாம்.  சுவடிகளைச் சுத்தம் செய்து அமில நீக்கம் செய்த பின் வேதிமக் குணமற்ற பால¦ஸ்டர் தாள்களைச் சுவடிகளின் புற அளவைவிட 1 செ.மீ. அதிக அளவுள்ளதாக எடுத்துக்கொண்டு சுவடியின் மேலும் கீழும் ஓரங்களைப் பசையுடன் கூடிய ஒருபுறம் அல்லது இருபுறம் ஒட்டும் நாடாவைப் பயன்படுத்தி மத்தியில் உள்ள காற்றினை வெளியேற்றி ஒட்டுதல் வேண்டும்.  மேலை நாடுகளில் உயர்வேக காற்றழுத்த முறையில் (Ultrasonic pressere)  ஓரங்கள் ஒட்டப்படுகின்றன.  இந்த முறையில் சுவடிகளில் வெப்பம் பயன்படுத்துவதில்லை.  நாம் பயன்படுத்தும் பால¦ஸ்டர் தாள் சுவடியின் இருபுறமும் படிந்து சுவடிகள் சிதிலமடையாமல் பாதுகாக்கிறது.  தேவையான பொழுது பிரித்தெடுக்கலாம்.  

பால¦ஸ்டர் தாளில் உள்ள மிக மெல்லிய துளைகளால் வெளிப்புறத்தில் உள்ள தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற மாறுதல் ஏற்படும்.  மேலும் வெளிப்புற தூசு, நீர், வெப்பம், கவனமின்றிக் கையாளுதல் போன்றவற்றால் பாதிப்பு ஏற்படுவதில்லை.  இவ்வாறு சுற்றுறையிடப்பட்ட ஓலைச்சுவடிகளை நூல் அல்லது கயிறு கோர்த்துக் கட்டுதல் முடியாது.  அவற்றை வரிசைப்படுத்தி அட்டைப் பெட்டிகளில் வைத்துப் பாதுகாக்கலாம்.  சிதிலமடைந்த சுவடிகளைப் பாதுகாக்க இதுவொரு சிறந்த முறையாகக் கொள்ளலாம்.

இ. குளிர்சாதன முறை

சுவடிகளுக்கு ஏற்படும் பல்வேறு பாதிப்புகளைத் தட்பவெப்பநிலை  சீராக்குவதன் மூலம் தவிர்க்க முடியும்.  இதற்குச் சுவடிகள் வைப்பறையில் அனைத்து நாட்களும், 24 மணி நேரம் சீரான குளிர்சாதன வசதியைச் செய்யலாம்.  சில நூலகங்களில் 24 மணி நேரத்திற்கு பதிலாக வேலை நாட்களில் மட்டும் பணி நேரத்தில் குளிர்சாதன வசதிகள் செய்துள்ளனர்.  இதனால் சுவடிகள் ஒவ்வொரு நாளும், தட்பவெப்ப நிலைக்கேற்றவாறு விரிவடைந்து, சுருங்குவதால் சாதாரண நிலையில் வைத்திருப்பதை விட வேகமாக அழிவிற்குள்ளாகும்.  மேலும் குளிர்சாதன இயந்திரங்கள் பழுதடைந்தால் 24 மணி நேரத்திற்குள் இயந்திரத்தை செப்பனிடவேண்டும் அல்லது பதிலியைப் பொருத்தும் வசதி பெற்றிருத்தல் வேண்டும்.  சுவடி வைப்பறையில் 22டிகிரி செல்சியஸ் முதல் 25டிகிரி செல்கியஸ் வரை வெப்பமும், 50% முதல் 55% வரையிலான காற்றின் ஈரதப்பதமும் இருப்பின் சுவடிகளை அழிவிலிருந்து காப்பாற்றலாம்.  சுவடிகளைச் சீரான தட்பவெப்பநிலை செய்யப்பட்ட அறையில் வைப்பதால் தூசு, அதிக சூரிய ஒளி, வெப்பம் மற்றும் காற்றில் உள்ள ஈரத்தைக் கட்டுப்படுத்த முடியும்.  இவற்றைக் கட்டுப்படுத்துவதால் சுவடிகளின் மீது பூஞ்சைக் காளான் வளர்ச்சியடையும்.   அதைத் தொடர்ந்து ஏற்படும் பூச்சிகளின் பாதிப்பையும் கட்டுப்படுத்தலாம். 

ஈ. படியெடுத்தல்

சுவடி பிரதி செய்தல் அல்லது படியெடுத்தல் என்பது தொன்று தொட்டு இருந்துவரும் பழக்கம் ஆகும்.  பிரதி செய்யும் வழக்கம் ஒன்றே மிகப் பழைய நூல்கள் காலங்கள் பல கடந்து இன்றும் நம் கைகளில் தவழும் வாய்ப்பினைப் பெற்றுள்ளது எனலாம்.  பாரதத்தின் தட்ப வெப்ப மாறுபாட்டினால் ஓலைச்சுவடிகள் 400 முதல் 500 ஆண்டுகளுக்கு மேல் பாதுகாப்பது அரிது.  ஆகையால் ஒரு நூல் சிதிலமடையும் நிலையை எட்டியவுடன் தகுந்த நபரைக் கொண்டு பிரதி செய்வதால் தொடர்ந்து அந்த நூலின் கருத்துக்களைப் பிற்கால சந்ததியினர்க்குப் பாதுகாக்கலாம்.  

இன்று நம் கைகளில் தவழும் இரண்டாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட பாணினி, தொல்காப்பியம் போன்ற பல்வேறு நூல்களும் இம் முறையிலேதான் பாதுகாக்கப்பட்டுள்ளன.  சிதிலமடைந்த சுவடிகள் மட்டுமின்றி கற்றறிந்த பெரியோர்களின் கருத்துக்களைத் தங்கள் வசம் வைத்துக்கொள்ள வேண்டி பல மன்னர்கள், செல்வந்தர்கள், கல்வியாளர்கள் பிரதி செய்துள்ளனர்.  சில மன்னர்கள் தாங்கள் செய்யும் தானங்களுடன் கிரந்த தானமும் செய்துள்ளனர்.  

சிரவணபெலகோலா சமண மடாதிபதி, சதுர் மாதத்தில் முக்கிய சுவடிகளைப் பல மாணவர்களைக் கொண்டு படியெடுத்து அவர்கள் செல்லும் இடங்களிலுள்ள முக்கிய நூலகங்கள் மற்றும் கல்வியாளர்களுக்குக் கொடுப்பது வழக்கம் என்றும், அவ்வாறு பிரதி செய்யும் பொழுது தவறு ஏற்படா வண்ணம் மிகவும் கவனமாகச் செய்தனர் என்றும் கூறுகின்றார்.  மேலும் அவர், படியெடுத்தல் முறையினைப் பின்வருமாறு கூறுகின்றார். "ஒரு சுவடியைப் படியெடுக்க அச்சுவடியில் உள்ள ஏடுகளின் எண்ணிக்கைக்குக் குறையாமல் ஏடுகள் தயாரித்து ஒவ்வொரு மாணவரிடமும் கொடுத்து ஆசிரியர் வாசிக்க மாணவர்கள் எழுதுவார்கள்.  ஆசிரியர் வாசிக்கும் பொழுது மாணவர்களைப் பார்த்தால் கவனம் சிதறி பிழை ஏற்படும் என்பதால் ஆசிரியர் ஒரு வரி படித்தவுடன் மாணவர்கள் எழுதத் தொடங்குவார்கள்.  அவர்கள் எழுதி முடிந்ததை ஆசிரியரின் உதவியாளர் மணி அடித்து அறிவித்ததும் ஆசிரியர் அடுத்த வரியைப் படிப்பார்.  இவ்வாறு கண்ணும் கருத்துமாகப் படியெடுக்கும் முறை இருந்தது என்கின்றார்.".

சுவடிகளில் எழுதப்பட்ட பொருளை அல்லது கருத்தினை நாம் பிரதி செய்தல் மூலம் எளிமையாகப் பாதுகாக்க முடியும்.  இவ்வாறு பழைய சுவடிகளில் உள்ள கத்துக்களை புதிய சுவடிகளில் படியெடுத்து இடமாற்றம் செய்யும் முறையே மரபு வழியாகக் கையாளப்பட்டுள்ளது.

இவ்வாறு கால எல்லைகளால் ஏற்படும் அழிவிலிருந்து சுவடிகளைக் காக்கும் பொறுப்பைப் பழங்காலத்தில் வாழ்ந்த மன்னர்கள், செல்வந்தர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் ஆகியோர்களால் ஓலைச்சுவடிகளில் எழுதும் பயிற்சி பெற்ற எழுத்தர்களைக் கூலிக்கு அமர்த்தி ஏடுகளைப் பிரதி செய்துள்ளனர்.  பல சுவடிகளைக் காத்த பெருமை பயிற்சி பெற்ற எழுத்தர்களையே சாரும் எனலாம்.  சுவடிகள் படியெடுப்பவர் நல்ல கல்வி அறிவு உள்ளவராக இருத்தல் வேண்டும்.  இல்லையெனில் கருத்துப் பிழைகள் ஏற்பட வாய்ப்புகள் ஏற்படும்.  கல்வி கற்போர் தனது ஆசான் வாய்மொழியாக கூறும் கருத்துக்களை எழுதுவதால் எழுத்துப் பிழையும், பாடவேறுபாடும் ஏற்படும்.  இதுபோன்ற சுவடிகளைப் படியெடுப்பதால் மேலும் பிழைகள் கூடும்.  இதனை ஒரே தலைப்பில் உள்ள பல்வேறு சுவடிகளில் உள்ள பாடவேறுபாடுகளைக் கொண்டு அறியலாம்.  எனவே ஏட்டுச் சுவடியிலிருந்து படியெடுப்பவர் தெளிவுடனும் பொறுப்புணர்வுடனும் படியெடுத்தல் வேண்டும்.

படியெடுக்கும் பணி இன்றும் பல்வேறு நூலகங்களில் தொடர்கிறது.  ஆய்வு மாணவர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் தேவையான சுவடிகளை ஓலைச்சுவடிகளிலிருந்து காகிதங்களில் படியெடுத்துக் கொடுக்கும் முறை 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை பல்வேறு சுவடி நூலகங்களில் நடைபெற்றதை அறியமுடிகிறது.

உ. நுண்படமெடுத்தல்

சுவடிகளைப் படியெடுக்கும் பொழுது, படியெடுப்பவரின் கவனக் குறைவால் சுவடிகளில் உள்ள வார்த்தைகள் தவறலாம் அல்லது அவருடைய கல்வியின் தரத்தைப் பொறுத்து வார்த்தைகள் மாறலாம்.  இதனால் படியெடுத்த பின் படிப்போருக்குத் தவறான செய்திகள் சென்றடையும்.  இக்குறையைப் போக்கவும், மிக எளிதாகச் சுவடிகளைப் பாதுகாக்கவும், பல நவீன முறைகள் விஞ்ஞான வளர்ச்சியினால் ஏற்பட்டுள்ளன.  அவற்றுள் நுண்படமெடுத்துப் பாதுகாத்தல் ஒரு முறையாகும்.  நுண்படமெடுக்கும் தொழில் நுட்பம் மிகவும் பலனளிப்பதாக இருந்ததால், மிக வேகமாக வளர்ச்சியடைந்து பல்வேறு துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதில் நூலகத்துறை, அருங்காட்சியத்துறைகளில் கலைப்பொருட்கள் பாதுகாப்பிற்குப் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

1870இல் பாரீஸ் நகரிலிருந்த புகைப்பட வல்லுநர் ரேனி டாங்ரோன் (Rene Dagron) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.  1925 நியூயார்க் நகரில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.  இதன் வளர்ச்சி மற்றும் முக்கியத்துவத்தை அறிந்து அமெரிக்காவைச் சார்ந்த ஈட்மென் கொடாக் கம்பெனி 16mm, அளவுள்ள நுண்படச் சுருள்களைக் கண்டுபிடித்து உலகெங்கும் பயன்படுத்த விற்பனை செய்தார்கள்.  1960ஆம் ஆண்டு வரை நுண்படத் தொழில் நுட்பம் வணிகம், வங்கித் துறைகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுப் பின்னர், தகவல் தொகுப்புப் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நுண்படமெடுத்தல் முறை மிகவும் பாதுகாப்பானது.  ஒரு சுவடியின் பிரதியினை எத்தனை இடங்களில் வேண்டுமானாலும் பாதுகாக்கலாம்.   குறைந்த இடவசதியிருப்பின் போதுமானது, அதிக பளு இல்லாதது.  சுவடிகளை அடிக்கடி எடுத்துக் கையாளுவதைத் தவிர்க்கலாம்.  மேலும் பிரதிகள் தேவைப்படுவோருக்கு எத்தனை பிரதிகள் வேண்டுமானாலும் எடுக்கலாம்.  மேலை நாடுகளில் மிகப் பழைய புத்தகங்கள் மற்றும் நாளிதழ்களைப் பாதுகாக்க நுண்படத் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.  இதன் மூலம் சுவடிகளில் உள்ள தகவல்களை அதிக நாட்களுக்குப் பாதுகாக்கலாம்.  நுண்படமானது சுருள் வடிவிலும் அட்டை வடிவிலும் பயன்படுத்தப்படுகின்றன.

நுண்படச்சுருள் (Microflim) என்பது 16mm அகலமுள்ள 100 அடி நீளம் கொண்ட சுருள்.  அதில் சுமார் 600லிருந்து 850 கட்டங்களில் (Frames) பதிவு செய்யலாம்.  ஒரு கட்டத்தில் குறைந்தது இரண்டு சுவடிகள் பதிவு செய்யலாம்.  நுண்படச் சுருளை அதைப் பாதுகாப்பாக வைக்க உதவும் உருளையில் சற்றி சரியான தட்பவெப்ப நிலையில் (22டிகிரி செல்சியஸ் முதல் 25டிகிரி செல்சியஸ் வெப்பத்திலும், 50% - 55% ஈரப்பதத்திலும்) பாதுகாத்தல் சுமார் 400லிருந்து 500 ஆண்டுகளுக்குப் பாதுகாக்கலாம்

நுண்படச் சுருள் போன்ற நுண்பட அட்டைகளையும் சுவடிகளைப் பதிவு செய்யப் பயன்படுத்தப்படுகிறது.  இவ்வகை அட்டை 105x140mm அளவும், 96 கட்டங்கள் கொண்டு இருக்கும்.  ஒரு கட்டத்தில் இரண்டு முதல் நான்கு சுவடிகளைப் பதிவு செய்யலாம்.

சுவடிகளை அடிக்கடி கையாளாமல் இருக்கவும் அதில் உள்ள தகவல்கள் அனைவருக்கும் தெரிவிக்கவும் நுண்படத் தொழில் நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

இந்தியாவில் உள்ள சில நூலகங்கள் நுண்படம் எடுக்கும் வசதியைப் பெற்றுள்ளன.  இந்தியாவில் உள்ள அனைத்து ஓலைச்சுவடி நூலகங்களில் உள்ள சுவடிகளைப் பாதுகாத்து ஒரே இடத்தில் வைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் புதுதில்லியில் மத்திய அரசின் நிதியுதவியுடன் நடைபெறும் இந்திராகாந்தி தேசிய கலை மையம் (Indira Gandhi National centre for Arts) சுவடிகள் பாதுகாப்பு நுண்படத் திட்டத்தினை தொடங்கியுள்ளது.  இத்திட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள முக்கிய நூலகங்களில் உள்ள ஓலைச்சுவடிகளை நுண்படமெடுத்து அவற்றை இந்திராகாந்தி தேசிய கலை மையத்தில் ஒரு பிரதியும், சுவடிகள் உள்ள நிறுவனத்தில் ஒரு பிரதியும் பாதுகாக்கப்பட உள்ளன.  

மேலும், இத்திட்டத்தின் மூலம் நுண்படம் எடுக்க வசதியில்லாத நூலகங்களிலும் சுவடிகள் பாதுகாப்பு செய்யும் வாய்ப்பும், இந்தியாவில் உள்ள அத்துனை நூலகங்களில் உள்ள சுவடிகளின் பிரதிகளை ஒரே இடத்தில் வைத்துப் பாதுகாக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

இதுபோன்று பல்வேறு நாடுகளிலும் நுண்படப் பிரதிகள் பாதுகாக்கப்படுகின்றன.  அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழக நூலகத்தில் தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் வெளியாகும் நூல்களை நுண்படமெடுத்து பாதுகாக்கப்படுகிறது என்பதை அறியமுடிகிறது.  அடையாறு நூலகமும், சிகாகோ பல்கலைக்கழக நூலகமும் இணைந்து வகுத்துள்ள ஒரு முதன்மைத் திட்டத்தின்படி அடையாறு நூலகச் சுவடிகள், நூல்கள் ஆகியவற்றை நுண்படமெடுத்து இரு நிறுவனங்களும் பயன்படுமாறு செய்யப்பட்டுள்ளது.

ஊ. வைப்பிடம்

அறிவியல் முறையில் சுவடிகளை நல்ல தட்பவெப்பநிலை கொண்ட அறையில் மரஅலமாரிகளில் வைக்கப்பட்டுள்ளது.  குறைவான சுவடிகள் உள்ள தனியார் மற்றும் நிறுவனங்களில் சுவடிகளைத் தனித்தனியான அட்டைப் பெட்டிகளில் வைத்தோ துணிகளில் சுற்றி மரமேசை இழுப்பறை (Table Drawer)யில் வைத்தோ பாதுகாக்கப்பட்டுள்ளது.  அதிக சுவடிகள் உள்ள நிறுவனங்களில் மூடி வைக்கப்பட்ட மரஅலமாரிகளிலோ திறப்புள்ள அமஅலமாரிகளிலோ இரும்பு அலமாரிகளிலோ வைத்துப் பாதுகாத்து வருகின்றனர்.  இவ்வாறான அலமாரிகள் காற்றோட்டமான இடங்களில் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். 

எ. சுத்தம் செய்தல்

துணிகளைக் கொண்டு சுவடிகளில் உள்ள படிவுகளைச் சுத்தம் செய்தபின் வேறு கரைகள் மற்றும் பூச்சிகளின் எச்சங்கள் இருப்பின் அவற்றைச் சுத்தமான நீருடன் மற்றும் சம அளவில் எதில்ஆல்கஹால் சேர்த்துச் சுத்தம் செய்யலாம்.  வேதிம குணம் கொண்ட படிவுகளை வேதிமக் கரைசல் அசிட்டோன் அல்லது கார்பன் டெட்ரா குளோரைடு குறைவான அளவினைப் பயன்படுத்திச் சுத்தம் செய்யலாம்.

அதிகமாக வேதிக் கரைசலைப் பயன்படுத்தினால் சுவடிகளில் உள்ள சேர்ப்புப் பொருட்கள் கரைந்து சுவடியின் உறுதித் தன்மை இழக்க நேரிடும்.  ஓலைகளைக் கிளிசரின் மற்றும் சுத்தமான நீர் 1:10 விகிதத்திலும், அல்லது கிளிசரின் மற்றும் எதில் ஆல்கஹால் 1:1 விகிதத்திலும் கலந்துகொண்டு சுத்தம் செய்யலாம்.

ஏ. பிரித்தெடுத்தல்

ஓலைச்சுவடிகள் நீண்ட நாட்கள் பிரித்துப் பார்க்காமல் கட்டி வைத்திருப்பதனால் மேற்பகுதியில் படியும் தூசு மற்றும் ஈரப்பதத்தினாலும் சுவடிகளைப் பாதுகாக்கப் பயன்படுத்தும் மேற்பூச்சுத் தைலங்கள் அதிகமாக இருப்பதினாலும், பூஞ்சைக் காளாண்களின் வளர்ச்சி மற்றும் புத்தகப் புழுவின் தாக்கத்தினாலும் சுவடியில் உள்ள ஓலைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும்.  இவ்வாறு ஒட்டியுள்ள சுவடிகளைக் குளிரூட்டும் கருவியில் 24 மணி நேரம் வைத்து பிரிக்கப்படுகிறது.  மேலும் நீராவியில் 15 முதல் 30 நிமிடங்கள் ஒட்டியுள்ள ஓலைச்சுவடிகளை வைத்துப் பிரிக்கப்படும் முறையும் பயன்படுத்தப்படுகிறது.  மேலை நாடுகளில் குளிர்ந்த அல்லது வெப்பமான நீராவி உருவாக்கும் இயந்திரத்தில் நீராவியைப் பாய்ச்சி பிரிக்கப்படுகிறது.  இம்முறையில் பிரித்தெடுக்கச் சிரமம் இருப்பின் பாதுகாப்புத் தைலம் அல்லது சுத்தமான நீருடன் சம அளவு எதில் ஆல்கஹால் சேர்த்துப் பூசிப் பிரித்தெடுக்கலாம்.  

ஐ. ஓலை கிழிதல் மற்றும் உறிதல்

மரபுவழியில் நூல்களில் தைப்பதால் சுவடிகளுக்கு ஏற்படும் பாதிப்பைக் கருத்தில் கொண்டும், தைக்கப்பட்ட சுவடிகள் உறுதியுடன் இல்லை யென்பதாலும் உடைந்த கிழிந்த ஏடுகளைச் செல்லோடேப் என்னும் பசைநாடா பயன்படுத்தப்படுகின்றது.  பசைநாடாவில் ஒட்டப்பட்ட ஓலைகளுக்கு அருகில் உள்ள ஓலைகளின் அழுத்தத்தால் நாடாவில் உள்ள பசைநாடாவின் இருபுறமும் வெளியேறி பக்கத்து ஓலைகளை ஒட்டச் செய்யும்.  இவ்வோலைகளைப் பிரித்தெடுக்கும் பொழுது ஏடுகள் உடைவதற்கு வாய்ப்புண்டு.  ஆகையால்  தற்பொழுது இம்முறை பயன்பாட்டில் இல்லை. 

உடைந்த ஓலைகளை ஒட்டுவதற்கு புதிய ஓலைகளின் பொடியுடன் பி.வி.ஏ. எமல்ஸன் சேர்த்து ஒட்டும் முறையை லக்னோ தேசிய பாதுகாப்பு ஆய்வகம் பயிற்றுவிக்கிறது.  இம்முறையில் ஒட்டப்பட்ட சுவடிகள் நல்ல நிலையில் வளையும் தன்மை கொண்டுள்ளது.  மேலை நாடுகளில் உடைந்த ஓலைகளைச் சேர்த்து மெல்லிய டிசு காகிதத்தின் நார்ப்பொருட்களைக் கொண்டு ஒட்டப்படுகிறது.  

உடைந்த, தவறிய ஓலைப்பகுதிக்கு ஓலையின் நிறத்தில் உள்ள மூங்கில் காகிதம் கொண்டு செப்பனிடப்படுகின்றது.  இதுபோன்று உடைந்த சுவடிகளைச் செப்பனிட புதிய ஓலைகளைப் பதப்படுத்தி பழைய ஓலையில் நிறமாற்றம் செய்தல் அல்லது அந்த நிறத்தில் உள்ள எழுதாத ஓலைகளைக் கொண்டு செப்பனிடப்படுகிறது.

மிகவும் சிதிலமான சுவடிகளைப் பாதுகாக்க ஓலைச்சுவடிகளின் இருபுறமும் செல்லுலோஸ் அசிடேட் தாள் மற்றும் ஜப்பான் டிசுத்தாள் கொண்டும், சீபான் துணி, மெதில் செல்லுலோஸ் பசை கொண்டும் லேமினேசன் செய்யப்படுகின்றது.  மேலை நாடுகளில் சிதிலமான சுவடிகளைப் பாதுகாக்கவும், கையாளவும் தற்பொழுது என்கேப்புசுலேசன் என்ற முறை பயன்படுத்தப்படுகிறது.  

ஒ. எண்ணெய் பூசுதல்

தைலம் மட்டும் பூசும் பொழுது ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்க வேதிமப் பொருட்களான பாலிஎதிலின் குளுகால்-200 (Poly ethylene glucol 200), லெமன்கிராஸ் தைலம், சுத்தமான 1:4 என்ற விகிதத்தில் கலந்து பயன்படுத்தப்படுகிறது.  இம்முறையில் சிதலமான சுவடிகள் விரைவில் உறுதியடைந்து வளைந்து கொடுப்பதைக் கண்டறிந்துள்ளனர்.  மேலும் சில ஆய்வுகளின் மூலம் புதிய ஓலைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் தைலங்களைப் பூசுவதாலும் சுவடிகள் உறுதித்தன்மை பெறுகிறது எனக் கூறப்படுகிறது.

ஓள. காகிதச் சுவடிகள் பாதுகாப்பு

i. சுத்தம் செய்தல்

காகிதச் சுவடிகள் மீது படிந்துள்ள படிவுகள் மற்றும் கறைகளைச் சில வேதிப் பொருட்கள் கொண்டும் சுத்தம் செய்யலாம்.  முக்கியமாக,
1. பசைநாடா ஒட்டப்பட்ட கறைகளைப் போக்குவதற்கு 
                       - பென்சின்
2. பசை மற்றும் பிசின் படிவினைப் போக்குவதற்கு
சூடான தண்ணீர்
3.   அரக்கு போன்ற பொருட்களை நீக்குவதற்கு
- அசிட்டோன்
4. இரப்பரினால் ஏற்பட்ட கறையை நீக்குவதற்கு
- கார்பன்டை சல்பைடு
5. மெழுகுக் கறையைப் போக்குவதற்கு
- கெக்ஜேன், டொலுவின் கரைசல்
6. பூஞ்சைக் காளாணால் ஏற்படும் கறையைப் போக்குவதற்கு
                       - எதில் ஆல்கஹால்
7. டீ மற்றும் காபி கறையைப் போக்குவதற்கு
                       -      பொட்டாசியம் பெர்மாங்கனேட்
8. இரும்புத் துரு கறையைப் போக்குவதற்கு
               - ஆக்சாலிக் அமிலம்
9. எண்ணெய்க் கறையைப் போக்குவதற்கு
                       - பென்சின் அல்லது டொலுவின்
தூசு மற்றும் புகை படிவினால் ஏற்படும் நிறமாற்றத்தைச் சுத்தம் செய்ய மேலை நாடுகளில் வேதிமக் குணம் கொண்ட ரப்பர் கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது.  ரப்பர் துகள்களும் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது.  

காகிதச் சுவடிகள் வெவ்வேறு அளவுகளில் தனித்தனி தாள்களாக எழுதப்பட்டுள்ளன.  அதனைக் கையாளும் பொழுது முதல் மற்றும் கடைசி காகிதங்கள் சேதம் அடையும்.  எனவே, காகிதங்களின் மூலைகள் வளைவதைத் தடுக்க எழுதாத நான்கு அல்லது ஐந்து காகிதங்களை வேலாம் பிசின் கொண்டு ஒட்டி அட்டைபோல் வைத்துப் பாதுகாக்கப்பட்டுள்ளது.  இதுவன்றி மேலும் கீழும் மரப்பலகை வைத்தும் கட்டி பாதுகாக்கப்பட்டுள்ளது.  

நாளடைவில் பாதுகாப்பு பற்றி அறியாமல் இருபுறம் அமிலத் தன்மை கொண்ட மரக்கூழ் காகிதங்கள், அட்டைகள் வைத்துக் கட்டப்பட்டுள்ளன.  இவ்வட்டைகளில் உள்ள அமிலத் தன்மை சுவடிகளின் தாள்களுக்குச் சென்று சுவடிகளின் நிறம் மற்றும் உறுதித் தன்மையைப் பாதிப்படையச் செய்கிறது.  

19ஆம் நூற்றாண்டில் பல சுவடிகள் நீண்ட தாள்களின் மையத்தில் நூல்களினால் தைக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளன.  அவ்வாறு எழுதப்பட்ட சுவடிகளின் பாதுகாப்பிற்காக மேற்பகுதி காகிதத்தின் மீது பட்டு அல்லது பருத்தித் துணி ஒட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.  சில முக்கிய சுவடிகளுக்குத் தற்போது உள்ள நோட்டுப்புத்தகங்கள் போன்று துணி அல்லது தோல் கொண்டு கட்டடம் (பைண்ட்) செய்யப்பட்டு அடியில் உள்ள அட்டையை மேற்பகுதி வரை மடித்து பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.  நாளடைவில் காகிதச் சுவடிகளின் இருபுறமும் அமிலமில்லா அட்டை வைத்துக் கட்டியும், அமில மில்லா அட்டைப்பெட்டிகளில் வைத்தும் பாதுகாக்கப்படுகிறது.

காகிதச் சுவடிகளைச் செப்பனிட ஆரம்ப காலங்களில் கிடைக்கக் கூடிய ஏதேனும் ஒரு காகிதத்தைக் கொண்டு ஒட்டிப் பாதுகாத்தனர்.  பசைநாடா கொண்டு ஒட்டியும் செப்பனிட்டுள்ளனர்.  நாளடைவில் பயன்படுத்தக் கூடிய காகிதம் மெல்லியதாகவும் சுவடியின் நிறத்திற்கு மெதில் செல்லுலோஸ் கொண்டு செப்பனிடப்படுகிறது.  

மிகவும் சிதலமான காகிதங்கள் ஒருபக்கம் மட்டும் எழுதப்பட்டிருந்தால் டிசு தாள் கொண்டு மெண்டிங் முறையிலோ செல்லுலோஸ் அசிட்டேட் தாள் மற்றும் டிசுத்தாள் கொண்டு லேமினேசன் முறையிலோ பாதுகாக்கப்படுகிறது.  காகிதச் சுவடிகளை என்கேப்சுலேசன் முறையிலும் பாதுகாக்கப்படுகிறது.  

காகிதச் சுவடிகள் அமிலத்தன்மையால் சிதலமடைந்தால் அமில நீக்கம் செய்தல் அவசியம்.  தொடக்க காலங்களில் தனித்தனியாகக் காகிதச் சுவடிகளுக்கு இடையே அமிலமில்லா மெல்லிய காகிதங்களை வைத்து காகிதச் சுவடிகளில் உள்ள அமிலத் தன்மையைக் குறைக்கும் முறையைக் கையாண்டணர்.  பின் அமோனியா போன்ற வேதிப்பொருட்களைப் பயன்படுத்தி ஆவியூட்டல் முறையில் காகிதச் சுவடிகளில் உள்ள அமிலத் தன்மைக் குறைப்பு செய்யத் தொடங்கினர்.

ii. சுவடி வைப்புமுறைகள் 

காகிதச் சுவடிகளைத் தொடக்க காலங்களில் தூக்கு என்னும் தொங்கும் பலகையில் சமையல் அறையில் வைத்திருந்தனர்.  பின் மரப்பெட்டிகளில் ஒன்றன் மீது ஒன்றாக வைத்திருந்தனர்.  அம்முறை மாறி மர அலமாரிகளில் ஒன்றன் மீது ஒன்றாக வைத்திருந்தனர்.  இவ்வாறு வைப்பதால் காகிதச் சுவடிகளுக்கு ஏற்படும் பாதிப்பையும் கையாள்வதில் உண்டாகும் இடர்ப்பாட்டினையும் கருத்தில் கொண்டு காகிதச் சுவடிகளைத் தனித்தனியாக வைக்கும் அளவிற்கு குறுகிய இடைவெளியில் தட்டுகள் கொண்ட மர அலமாரிகளில் வைக்கத் தொடங்கினர்.  

குறைவான காகிதச் சுவடிகள் கொண்ட பல நூலகங்களில் காகிதச் சுவடிகளைத் துணிகளில்  சுற்றி வைத்துள்ளனர்.  மேலை நாடுகளில் காகிதச் சுவடிகளுக்குத் தனித்தனியாக அமிலமில்லா அட்டைப் பெட்டிகளில் வைத்துப் பாதுகாக்கப்படுகிறது.  

iii. காகிதச் சுவடி வைப்பறைகள்

ஓலைகள் மற்றும் காகிதச் சுவடிகளின் வைப்பறைகள் பல நூலகங்களில் குளிரூட்டும் வசதி கொண்டுள்ளது.  ஆனால் ஒரு சில நிறுவனங்களில் தவிர மற்ற நிறுவனங்கள் அலுவலக நேர குளிரூட்டு வசதி மட்டும் கொண்டுள்ளது.  மேலும் இவ்வகைக் குளிரூட்டும் வைப்பறைக்குத் தேவையான வெப்பம் மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தும் இயந்திரங்கள் இல்லை.  இதனால் சுவடிகள் அழிவிற்குள்ளாகின்றன.  

காகிதச் சுவடிகளின் வைப்பறைகள் 50% முதல் 55% ஸி.பி. சதவீதம் ஈரப்பதமும், 22 முதல் 25டிகிரி செல்சியஸ் வெப்பமும் கொண்டிருக்கவேண்டும் எனக் கண்டறிந்துள்ளனர்.  

70 சதவிகிதத்திற்குமேல் ஈரப்பதம் இருப்பின் பூஞ்சைக் காளாண் மற்றும் பூச்சிகள் வளர வாய்ப்பு ஏற்படும்.  ஆகையால் சுவடிகள் வைப்பறை தேவையான அளவு வெப்பம், ஈரப்பதங்களைக் கொண்டதாக அமைக்க வேண்டும்.  தேவையான வெப்பம் மற்றும் ஈரப்பதங்கள் கொண்ட கடடுகளை 24 மணிநேர குளிரூட்டும் முறையைக் கொண்ட வைப்பறைகளில் வைக்கப்பட்டுள்ள சுவடிகளைத் தூசு, வெப்பம், பூஞ்சை, பூச்சிகளின் பாதிப்பு போன்றவற்றிலிருந்து பாதுகாக்கலாம். வைப்பறைகளில் ஒளியும் 15லக்ஸ் இருக்கவேண்டும். ஒளியின் அளவைக் கூட்டிக் குறைக்கும் வசதியும் இருப்பின் சுவடிகளைப் பல ஆண்டுகாலம் பாதுகாக்க முடியும்.

அமெரிக்கச் சுவடிகள் மற்றும் புத்தகங்கள் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் வைப்பறைகளில் உள்ள பாதுகாப்புச் சூழல் சரியான முறையில் கண்காணித்து வந்தால் மாறுபட்ட  வெப்பம், ஈரப்பதங்களைத் தவிர்க்கலாம் என்கின்றனர்.  மேலும், சுவடிகளின் வாழ்காலமும் மாறுபடும் நிலையில் அதன் வாழ்காலம் குறித்தும் ஆய்வு செய்துள்ளனர்.  அதன்படி, ஒரு காகிதச் சுவடி 5% ஸி.பி. ஈரப்பதத்தில் 32டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் இருந்தால் அதன் வாழ்காலம் 2634 ஆண்டுகள் எனவும், அதே சுவடி 50% - 47டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தில் இருந்தால் அதன் வாழ்காலம் 197 ஆண்டுகள் எனவும், 95சதவிகிதம் ஈரப்பதத்தில் 92டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தில் இருந்தால் அதன் வாழ்காலம் 3 ஆண்டுகள் மட்டுமே எனக் கண்டறிந்துள்ளனர்.

இதனைக் கருத்திற் கொண்டு ஜப்பான், தலைநகரம் டோக்கியோ தேசிய அருங்காட்சியகத்தின் ஒரு பிரிவில்  உலகிலுள்ள முக்கிய அரும்பொருட்கள் காட்சியகம் ஒன்றுள்ளது.  இக்காட்சியகம் மழைக் காலங்களிலும், வெப்பக் காலங்களிலும் திறக்காமல் மற்ற பருவ காலமான ஆறு மாதங்களில் வாரத்திற்கு ஒரு நாள் வியாழக்கிழமை மட்டும் திறக்கப்படுகிறது.  அதிலும் 100 பேர்களுக்கு மேல் உள்ளே இருக்க அனுமதிப்ப தில்லை.  பார்வையாளர்களின் மூச்சுக் காற்றினால் ஏற்படும் வெப்பமோ ஈரப்பதமோ வைப்பறையின் தட்பவெப்பம் மாறுபடக்கூடாது எனக் கருதுகிறார்கள்.

iv. காகிதச்சுவடி வைப்பறைகளில் பூச்சி எதிர்ப்பு வேதிப்பொருட்கள்

காகிதச் சுவடிகளை வைத்திருக்கும் வைப்பறைகளில் பூச்சிகளின் பாதிப்பு ஏற்படா வண்ணம் இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களையும், சில வேதிப்பொருட்களையும் பூச்சிக் கொல்லியாகப் பயன்படுத்தியுள்ளனர்.  குறிப்பாக, கீட்ஸ் பொடி (Keals powder) என்ற பூச்சி எதிர்ப்பு வேதிப்பொருட்களின் கலவை பயன்படுத்தியுள்ளனர்.  

பொதுவாக நாப்தலின் உருண்டைகள், நாப்தலின் கட்டிகள் பல இடங்களில் பூச்சி எதிர்ப்புப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.  பாரதத்தில் நிபால் (Nifol) என்னும் தானாக ஆவியாகக் கூடிய வேதிக் கூட்டுப்பொருள் பயன்படுத்தப்படுகிறது.  இன்று பல்வேறு நூலகங்களிலும் நாப்தலின் உருண்டைகள் தான் பயன்படுத்தப்படுகின்றன.  இப்பொருளைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் பூச்சிகள் எதிர்ப்புச் சக்தியைத் தாங்கும் சக்தியைப் பெற்றுவிடுகின்றன.  

பூச்சிகளைக் கட்டுப்படுத்த பூச்சிக் கொல்லிகளான டிடிடி, பிஎச்சி, மெதில் புரோமைடு போன்ற மருந்துகள் நூலகங்களில் தெளிக்கப்பட்டன.  இவற்றால் நூலகத்தைப் பயன்படுத்துவோருக்கும், நூலகச் சுற்றுப்புறச் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதால் இம்முறைகள் கைவிடப்பட்டுள்ளன.

v. புகையுட்டல் அல்லது ஆவியூட்டல்

சுவடிகளின் பாதுகாப்புக்  குறைவினால் பூஞ்சைக் காளாண் அல்லது பூச்சிகளைக் கட்டுப்படுத்த பழங்காலத்தில் புகையூட்டல் முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.  சாம்பிராணி, அகில் போன்ற பொருட்களின் புகையினைப் பூச்சிக் கொல்லியாகவும், பூஞ்சைச் கொல்லியாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.  கற்பூரமும் பூஞ்சைக் கொல்லியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.  அறிவியல் வளர்ச்சியினால் ஆவியூட்டல் தனியான அலமாரியில் வைத்துப் பாதுகாப்பு செய்யப்படுகிறது.  ஆவியூட்டல் அலமாரி (Fumigation Chamber) மரம் அல்லது இரும்பால் செய்யப்படுகிறது.  அதில் துளை உள்ள தட்டுகள் அல்லது கம்பி வலை பொருதப்பட்ட தட்டுகள் இருக்கவேண்டும்.  மேலும் பயன்படுத்தக் கூடிய வேதிப்பொருளை வெப்பப்படுத்த உரிய மின் விளக்கு பொருத்தும் வசதியுடன் இருக்கவேண்டும்.  இவ்அலமாரி மூடியுள்ள போது காற்று வெளியேறாமலும், காற்று புகாமலும் இருக்கவேண்டும்.

பூஞ்சை காளாணைக் கட்டுப்படுத்த தைமால் என்ற வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது.  ஒரு கன மீட்டர்  அளவுள்ள அலமாரியில் சுமார் 250கிராம் தைமால் வைக்கப்படுகிறது.  தைமால் தானாகவே ஆவியாகக் கூடிய தன்மை கொண்டது.  அதன் ஆவியாதல் தன்மையை அதிகப்படுத்த தினமும் அரை மணிநேரம் 25 வாட்ஸ் மின் விளக்கினைப் பயன்படுத்தினால் அதன் வெப்பத்தினால் மிக வேகமாக ஆவியாகும்.  இம்முறையில் 5 நாள் முதல் 1 வாரம் வைத்திருப்பதால் சுவடிகளில் உள்ள பூஞ்சைக் காளாணைக் கட்டுப்படுத்தலாம். 

தைமாலின் ஆவி காற்றின் எடையை விட குறைவாக இருப்பதால் இது மேல் நோக்கிச் செல்லும்.  ஆகையால் தைமாலை ஆவியிடல் பெட்டியின் கீழ்ப்பகுதியில் வைக்கப்படுகிறது.  ஆவியூட்டல் அலமாரியில் ஓலைச் சுவடிகள் மற்றும் காகிதச் சுவடிககளுக்குள் ஆவி செல்லும் அளவிற்குச் சுவடிகளை விரித்து வைக்கவேண்டும்.  கட்டிய காகிதச் சுவடிகள் '    ' வடிவில் அல்லது காற்று புகுமாறு சுவடிகள் வளையாமல் இருக்குமாறு வைக்கப்படுகிறது.

சுவடிகளில் பூச்சிகள் மற்றும் பூஞ்சைக் காளாண் பாதிப்பு இருக்குமானால் அதைக் கட்டுப்படுத்த பாரா டை குளோரோ பென்சின் என்னும் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது.  இதன் ஆவி காற்றின் எடையை விட அதிகமாக இருப்பதால் ஆவியூட்டல் பெட்டியின் மேல் தட்டில் வைத்து அதனை மின் விளக்கால் வெப்பப்படுத்தப்படுகிறது.  இந்த வேதிப்பொருள் முட்டையிலிருந்து வரக்கூடிய லார்வ (Larve) என்னும் புத்தகப்புழுவினைக் கொல்லும். இவ் ஆவியூட்டு முறையில் சுவடிகளை 7 முதல் 10 நாட்கள் வரை வைத்திருக்கவேண்டும்.

மிகப் பெரிய நூலகங்கள் மற்றும் ஆவணக் காப்பகங்களில் சுவடிகளைப் பாதுகாக்க வெற்றிடப் பெட்டி (Vaccum Chamber) பயன்படுத்துகின்றனர்.  இவ்வகையான பெட்டிகளில் சுவடிகளை பெட்டியின் உள் வைத்து மூடிய பின் உள்காற்றை வெளியேற்றப்பட்டு வெற்றிடம் ஏற்படுத்தப்படுகிறது.  பின்னர், கார்பன் டை ஆக்ஸைடு 9 பங்கும், எதிலின் டை ஆக்ஸைடு 1 பங்கும் சேர்த்துப் பெட்டிக்குள் செலுத்தப்படுகிறது.  இந்தக் காற்றுக் கலவையில் சுவடிகள் 24 மணி நேரம் வைத்திருக்கும் பொழுது பூச்சிகள் மற்றும் பூஞ்சைக் காளாண்கள் அழிக்கப்படுகிறது.  இவ்வகை ஆவியூட்டல் மிகவும் எளிதாக இருப்பினும், பயன்படுத்தும் வேதிப்பொருட்கள், காற்றில் கலந்து மாசுபடுத்துவதாலும், பயன்படுத்துவோர் நுகர நேர்ந்தால் ஆபத்தை உண்டாக்குவதாலும் மேலை நாடுகளில் இம்முறையைத் தடைசெய்துள்ளனர்.  இந்தியாவில் இம்முறையைப் பயன்படுத்தவேயில்லை.  

இம்முறையில் மேற்கண்ட வேதிப்பொருட்களுக்குப் பதில் பாதிப்பை ஏற்படுத்தாத நைட்ரஜன் வாயுவை வெற்றிடப் பெட்டிக்குள் நிரப்பி 24 மணிநேரம் வைத்திருந்தால் பூச்சிகளைக் கட்டுப் படுத்தும் முறையினைக் கண்டறிந்துள்ளனர்.  

அதன் பின்னர், பூச்சிகளைக் கட்டுப்படுத்த குளிரூட்டல் முறையும் கண்டுபிடித்தனர்.  இம்முறையில் சுவடிகளைச் சாதாரண வெப்ப அளவிலிருந்து சிறிது சிறிதாகக் குறைத்து -10டிகிரி செல்சியஸில் 24 மணி நேரம் வைப்பதால் பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. பின் சிறிது சிறிதாகச் சாதாரண வெப்ப நிலைக்குக் கொண்டு வரவேண்டும்.  இம்முறை எளிய முறையாகும்.  மேலும், வேதிப்பொருள்களின் பாதிப்பும் இல்லை.

சுவடிகள் மற்றும் புத்தகங்களை அழிக்கும் பூச்சிகளின் வாழ்க்கை முறையைக் கண்டறிந்து அதனைக் கட்டுப்படுத்த பலவகையான பொறிகள் பயன்படுத்தப்படுகின்றனர்.  பூச்சிகள் விரும்பும் நிறத்தில் விளக்குகள் அமைத்து பூச்சிகள் பிடிக்கப்படுகின்றன.  மேலும் பசைத் தன்மையுள்ள பூச்சிப் பிடிப்பொறிகள் அமைத்து பூச்சிகள் நடமாட்டத்தைக் கண்டறிந்து கட்டுப்படுத்தும் முறையும் பயன்படுத்துகின்றனர்.

க. மேலை நாடுகளில் ஓலைச்சுவடிப் பாதுகாப்பு

இந்தியா, பர்மா, தாய்லாந்து, மலேசியா, இலங்கை போன்ற தென்கிழக்காசிய நாடுகளிலிருந்து பெறப்பட்ட ஓலைச்சுவடிகள் பல்வேறு நாடுகளில் உள்ள நூலகங்களிலும் அருங்காட்சியகங்களிலும் பாதுகாத்து வருகின்றனர்.  குறிப்பாக, லண்டன் விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகம், வெல்கம் மருத்துவமனை ஆராய்ச்சி நிலையம், இந்திய ஆபீஸ் நூலகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நூலகம், ஆக்ஸ்போர்டில் உள்ள போர்புலியின் நூலகம் போன்ற இடங்களில் ஓலைச்சுவடிகள் பாதுகாத்து வருகின்றனர்.

அங்குள்ள தட்பவெப்ப நிலையில் அதிகமாக புத்தகங்கள் சுவடிகள் அரும்பொருட்கள் விரைவில் அதிவதில்லை.  ஆண்டுதோறும் சீதோஷ்ண நிலையில் மாறுதல் ஏற்படா வண்ணம் சுவடி வைப்பறைகள் பாதுகாக்கப்படுகின்றன.  இதனால் இங்குப் பூச்சிகள் மற்றும் பூஞ்சைக் காளாண்களின் பாதிப்புகள் இல்லை என்று கூறலாம்.  இங்குப் பல வகையான தொழிற்சாலைகள் உள்ளதால் சுற்றுப்புறக் காற்று மாசுபட்டுள்ளது.  இதனால் அமிலத்தன்மையின் பாதிப்புள்ளது.  மேலும், இங்கு மின்சார உபகரணங்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் தீயினால் ஏற்படும் அழிவினைத் தடுக்கவும் பல்வேறு தடுப்பு முறைகளைப் பயன்படுத்துகின்றனர்.

இங்கிலாந்து அரசாங்கம் சில வேதிப்பொருள்களைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது.  எனவே, வேதிமப்பொருட்களைப் பயன்படுத்தாமல் பாதுகாப்புப்பணி செய்யப்படுகிறது.  சுவடிகளைப் பட்டுத் துணிகள் அல்லது அமிலமற்ற அட்டையில் செய்யப்பட்ட பெட்டிகளில் வைத்து ஒவ்வொரு சுவடிகளையும் தனித்தனியாகப் பாதுகாக்கப்படுகிறது.  சிதலமான சுவடிகளை என்கேப்சுலேசன் (சுற்றுறை) என்ற முறையில் ஒவ்வொரு ஓலையையும், ஓலையின் அளவைவிட கொஞ்சம் பெரிதான பாலிஸ்டர் தாள்களை ஓலையின் இருபுறமும் வைத்து அதன் ஓரங்களை அல்ட்ராசோனிக் முறையில் ஒட்டப்படுகிறது.  இவ்வாறு ஒட்டப்பட்ட சுவடிகளை அட்டைப்பெட்டிகளில் வைத்துப் பாதுகாக்கப்படுகிறது.  இங்குள்ள நூலகங்களில் குறைந்த எண்ணிக்கையிலான சுவடிகள் இருப்பதால் அவற்றை மிகவும் சிரத்தையுடன் பாதுகாக்கப்படுகின்றது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக