ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டிருக்கும் எண்கள் (அளவுக் குறியீடுகள் உட்பட) மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். "எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்" என்னும் கொன்றைவேந்தன் நூற்பாவிலிருந்து எழுத்தைவிட எண்ணிற்கே முதலிடம் கொடுத்திருப்பது தெளிவு. ஏனெனில், சுவடி படிப்பதற்கும் எழுதுவதற்கும் பிரிப்பதற்கும் தொகுப்பதற்கும் பெரும்பாலும் எண்களே முக்கிய அங்கம் வகிக்கின்றன. ஓலைகளைப் பொருத்தவரை எண்களைப் புறவெண், அகவெண் என்று இரண்டு நிலைகளாகப் பாகுபடுத்திக் காணலாம்.
புறவெண்
புறவெண், ஓலைச்சுவடியின் ஒவ்வொரு ஏட்டின் முதல் பக்கத்தில் இடப்பக்க ஓரமாகவோ வலப்பக்க ஓரமாகவோ கொடுக்கப்பட்டிருப்பதாகும். இவ்வெண் ஏட்டெண் எனப்படும். நூற்பொருளின் கனத்தைப் பொருத்து இவ்வெண்களின் எண்ணிக்கை அமையும். புறவெண் அமைப்பதில் பலர் பல முறைகளைக் கையாண்டுள்ளனர். சுவடி ஒன்றில் ஒரே நூல் இருந்தாலும் நூற்பல இருந்தாலும் சுவடி ஒன்றே என்பதைக் கருத்தில் கொண்டு அடுத்தடுத்த நூல்களுக்கும் முன்னூலின் தொடர் ஏட்டெண்ணையே கொடுத்திருக்கின்றனர்.
நூலினை மையமாகக் கொண்டு புறத்தே இடப்படும் எண்களை நூலெழுதியவரால் இடப்பட்ட நூலேட்டெண், நூல் தொகுத்தவரால் இடப்பட்ட தொடரெட்டெண், நூல் படிப்பவரால் இடப்பட்ட துணையேட்டெண் என மூன்றாகப் பகுத்துக் கொள்ளலாம். மேலும், சுவடிக் காப்பகங்களில் சுவடியெண், நூலெண் என்ற இரண்டு வகை எண்கள் கொடுக்கப்படுகின்றன. இவ்விரு எண்களும் ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டதாகும்.
அ. நூலேட்டெண்
நூலேட்டெண், சுவடியில் ஒரு நூலோ ஒன்றுக்கும் மேற்பட்ட நூல்களோ இடம்பெற்றிருக்கும்போது ஒவ்வொரு நூலுக்குமென தனித்தனி ஏட்டெண்கள் கொடுக்கப்பட்டிருப்பதாகும். இவ்வேட்டெண் ஏடெழுதுபவராலேயே கொடுக்கப்படும். ஒரே நீள அகலங்கொண்ட வௌ¢ளோலைகளில் பல நூல்களை ஒருவரோ பலரோ தனித்தனியே எழுதிச் சேர்க்கும் போது பலநூல் கொண்ட ஒரு சுவடியாகிவிடுதல் இயல்பு.
நூல் எத்தனை ஏடுகளைக் கொண்டது என்பதையும், பலநூல் கொண்ட சுவடியில் நூல்களை எளிதில் பிரித்துக் காணவும், பிரித்த சுவடியை முறையாக மீண்டும் அடுக்குவதற்கும், நூல் பாடலாகவோ உரைநடையாகவோ இருக்குமாயின் ஒரு ஏட்டின் ஒருபக்கத்தில் காணப்படும் வரிகளையும் எழுத்துக்களையும் கருத்தில் கொண்டு உடனடியாக அச்சில் ஏறத்தாழ எத்தனை பக்கங்கள் வரும் என்பதை நிர்ணயிக்கவும், நூல் முழுமையா? குறையா? என்பதை நிர்ணயிக்கவும் நூலேட்டெண் பயன்படுகிறது.
தமிழில் அச்சு நூல்கள் வெளிவரத் தொடங்கிய காலந்தொட்டு நூலேட்டெண் மறைந்து பக்க எண்கள் அச்சேறி வருகின்றன. அச்சு நூலின் மேல் மற்றும் கீழ் மையப் பகுதி அல்லது ஒவ்வொரு ஏட்டின் முன்பக்க மேல் வலது ஓரத்திலும் ஏட்டின் பின்பக்க மேல் இடது ஓரத்திலும் பக்க எண்களை இட்டு வருகின்றனர். ஏட்டெண்ணிற்கும் பக்க எண்ணிற்கும் வேறுபாடு உண்டெனினும் பயன்பாடு ஒன்றாகவே இருக்கிறது.
ஓலைச்சுவடிகளிலும் பழம்பதிப்பு நூல்களிலும் தமிழ் எண்களே பக்க எண்களாகக் குறிப்பிட்டிருக்கின்றனர். இன்றும் பல சுவடிப்பதிப்பு நூல்களில் தமிழ் எண்களைக் குறிப்பிடுவதைக் காணமுடிகிறது. பெரும்பாலும் சுவடிகளில் எண்கள் இரண்டு அமைப்புகளில் எழுதியிருக்கின்றனர். ஐம்பத்து மூன்றைத் தமிழில் 'ருயங' (5-10-3) என்றும், 'ருங' (53) என்றும்; இருநூற்று ஐம்பத்து மூன்றை 'உளருயங' (2-100-5-10-3) என்றும், 'உருங' (253) என்றும் எழுதி இருக்கின்றனர். இவ்வடிவ அமைப்பில் எது முந்தியது? எது பிந்தியது என்பது ஆய்வுக் கருத்தாகக் கொள்ளப்படுகிறது.
காலத்தால் முந்திய பல சுவடிகளிலும் பிந்திய சில சுவடிகளிலும் முதல் முறையே (5-10-3) கையாளப்பட்டுள்ளது. தற்காலத்தில் பயன்படுத்தும் ரோம, அராபியத் தாக்கத்தால் இம்முறையில் மாற்றம் பற்று இருக்கலாம். சுவடிகளிலும் சுவடிப்பதிப்பு நூல்களிலும் ரோம, அராபிய எண்களைப் பயன்படுத்தாமல் பலர் பலகாலம் அதன் அமைப்பிலேயே தமிழ் எண்களைப் பயன்படுத்தி எழுதி வந்தனர் எனலாம். சில சுவடிப்பதிப்பு நூல்களில் (5-10-3) என்ற பழைய எண்ணமைப்பு முறையே கையாளப்படுகின்றதையும் காணமுடிகிறது.
ஆ. தொடரேட்டெண்
தொடரேட்டெண், சுவடியில் பல நூல்கள் இடம்பெற்றிருந்து அவ்வெல்லா நூல்களுக்கும் இடப்பட்ட முறையானதொரு ஏட்டெண்ணே தொடரெட்டெண்ணாகும். இவ்வெண் நூல் தொகுத்தவராலேயே பெரும்பாலும் கொடுக்கப்பட்டிருக்கும். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகச் சுவடி எண்.1555யில் 52 நூல்கள் உள்ளடங்கிய தொடரேட்டெண்ணைக் காணமுடிகிறது.
பலரால் எழுதப்பட்ட பல்வேறு நூல்களை ஒன்றாகத் தொகுக்கும்போது தொகுத்தவர் அவ்வெல்லா நூல்களுக்குமென தனியேவோர் ஏட்டெண் கொடுப்பர். இது நூல் தொகுத்தவரால் கொடுக்கப்பட்ட தொடரேட்டெண் ணாகும். ஆனால், நூல் எழுதுபவராலேயும் தொடரேண்ட்டெண் கொடுக்கப்படுவதுமுண்டு. பல நூல்களை ஒருவரே எழுத முற்படும்போது நூலேட்டெண்ணையும் தொடரேட்டெண்ணையும் தனித்தனியே இட்டுச் செல்வதுமுண்டு. அதாவது, சுவடிக்கு முறையான ஏட்டெண்ணைக் கொடுத்துப் பல நூல்கள் எழுத முற்படும்போது நூலை வேறுபடுத்திக் காட்டவேண்டும் என்பதற்காக ஒவ்வொரு நலின் தொடக்க மூன்று அல்லது நான்கு ஏடுகளுக்கு மட்டும் நூலேட்டெண் கொடுக்கப்படுதலும் உண்டு. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகச் சுவடி எண்.2265இல் தொடரேட்டெண் 'கசுடி' (160)இல் வேறொரு நூல் தொடங்குகிறது. இவ்வேட்டில் 160ஆம் தொடரேட்டெண்ணிற்கு மேல் நூலேட்டெண் 'க' (1) என இடப்பட்டுள்ளது. இந்நூல் முழுமைக்கும் நூலேட்டெண் குறிக்காமல் மூன்று ஏடுகளக்கு மட்டும் க, உ, ங (1,2,3) எனக் குறிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அதே சுவடியில் 'கசகூ' (149)ஆம் தொடரேட்டெண்ணிற்கு மேல் நூலேட்டெண் தொடங்குவதையும் காணமுடிகிறது.
பல நூல் கொண்ட சுவடி எத்தனை ஏடுகளைக் கொண்டுள்ளது என்பதை அறியவும், சுவடிக்கட்டு பிரிந்த நிலையில் நூலேட்டெண் மாறாமல் மீண்டும் அடுக்குவதற்கும் தொடரேட்டெண் பயன்படுகிறது.
நூலேட்டெண்ணைக் குறிக்காமல் தொடரேட்டெண்ணைக் குறிப்பிட்டிருக்கும் ஒரு சுவடியில் பல நூல்கள் இருந்தும் ஒரே நூல் என்ற எண்ணத்தையே உருவாக்கும். நூலேட்டெண்ணும் தொடரேட்டெண்ணும் இல்லாத ஒரு சுவடியில் சில ஏடுகள் முறிந்தோ சிதைந்தோ இல்லாமலோ போயிருக்குமாயின் அங்குப் பாடல் இல்லை என்பதைக் கருதாமல் நூல் தொடர்ச்சியைக் கொண்டு தவறான பாடத்தைக் கொள்ள வாய்ப்பேற்படுத்தும். தொடரேட்டெண் இல்லாத பல நூல் கொண்ட ஒரு சுவடியில் இடையில் சிலபல ஏடுகள் இல்லாமல் போகும்போது முன்னுள்ள நூலின் இறுதிப் பகுதியும் பின்னுள்ள நூலின் முற்பகுதியும் இணைந்து பொருள் விளங்காத சூழ்நிலையில் ஒரே நூலாகக் கருத வாய்ப்பேற்படுத்தும். சுவடிகளில் காணப்படக்கூடிய இந்தத் தொடரேட்டெண் அமைப்பு அச்சுநூல்(தொகுப்புநல்)களில் தொடர்ப்பக்க எண்களாக இட்டு வருகின்றனர்.
இ. துணையேட்டெண்
துணையேட்டெண், சுவடியில் சில ஏடுகள் முறிந்தோ செல்லறித்தோ மறைந்தோ விடுபட்டோ இருக்கும்போது சுவடி படிப்பவர் விடுபட்ட பாடத்தைக் கண்டு எழுதி அதில் சேர்க்கும் போது சேர்த்த ஏடு சுவடியோடு தொடர்புடையது என்பதைக் குறிப்பதற்காகத் தொடரேட்டெண்ணையோ நூலேட்டெண்ணையோ இரண்டையுமோ இட்டுச் செல்வர். இவ்வாறு இடும் எண்ணே 'துணையேட்டெண்' எனப்படும். இவ்வாறு ஒவ்வொரு ஏட்டிற்கும் புதியதான எண்களை இட்டுச் செல்வதால் உண்மையான ஏட்டெண் எது என்பதை உணர்ந்துகொள்ள முடியாத நிலை ஏற்படும் (தமிழ்ப் பல்கலைக்கழகச் சுவடி எண்.2273). இவ்வாறான துணையேட்டெண் இடப்படுவதால் யாதொரு பயனுமின்றி குழப்பமே மேலோங்கும் என்பது தெளிவு. இம்முறை அச்சுநூல்களில் காண்பதரிது.
ஈ. சுவடியெண்
சுவடியெண், சுவடி நூலகத்தில் சுவடிகளுக்கு இடப்படும் எண்ணாகும். இவ்வெண் காப்புக் கட்டையின் மீதோ காப்பேட்டின் மீதோ நூலகரால் தனித்தாளில் எழுதி ஒட்டப்பட்டிருக்கும். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடிகளுக்கு சுவடியெண்ணை வௌ¢ளோலைகளில் தட்டச்சுப் பொறியின் வௌ¢ளைப் புள்ளியில் தட்டச்சுசெய்து கோர்க்கப்பெற்றுள்ளது. இம்முறை முதன் முதலில் இவ்வாய்வாளனாலே சுவடி நூலகங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுவடிக்கு எண்ணிடுதல் என்பது, ஓரிரு சுவடிகளை வைத்திருக்கும் வீடு முதல் பல்லாயிரக்கணக்கான சுவடிகளை வைத்திருக்கும் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் வரை ஒரே முறையைக் கையாண்டுள்ளனர்.
தனிப்பட்ட ஒருவரால் சேகரித்ததையோ தன்னால் எழுதப்பட்டதையோ மூதாதையர் எழுதி வைத்ததையோ மூதாதையர் சேகரித்து வைத்ததையோ முறைப்படுத்தி சுவடியெண் கொடுக்கப்பட்டிருப்பது தனியார் எண்ணிடுதல் என்றும், நிறுவனங்களின் வாயிலாக சேகரித்து கொடுக்கப்பட்டிருப்பது நிறுவனங்கள் எண்ணிடுதல் என்றும் குறிப்பர். தனியார் கொடுத்த எண், சுவடியை நிறுவனங்களுக்குக் கொணடத்து பொதுமைப்படுத்தும் போது அவ்வெண் பிறிதொரு எண்ணாக மாற்றமடையும். நிறுவனங்கள் வாயிலாக கொடுக்கப்பட்ட சுவடியெண்ணை எந்தக் காரணம் கொண்டும் மாற்றவியலாது. நிறுவனங்களுக்கு மேலும் மேலும் சுவடிகள் வந்துகொண்டே இருப்பதால் பழைய எண்ணை மாற்றுதல் என்பது குழப்பத்தையே ஏற்படுத்தும். மேலும் நிறுவனங்கள் சுவடி அட்டவணை, சுவடி விளக்க அட்டவணை போன்றவற்றை வெளியிட்டுவரும் இந்தக் காலத்தில் சுவடியெண் மாற்றுதல் என்பது இயலாத ஒன்று. சுவடியாய்வு செய்பவருக்கு அட்டவணையே முதலுதவி நூலாகக் கருதப்படுவதால் சுவடியெண் மாற்றுதல் நாகரீகமற்ற செயலாகும்.
உ. நூலெண்
நலெண், சுவடி நூலகத்தில் நூல்களுக்கு இடப்படும் எண்ணாகும். இவ்வெண்ணைச் சுவடி அட்டவணைப் பெட்டியின் துணையைக் கொண்டோ சுவடி விளக்க அட்டவணையைக் கொண்டோ அறியமுடியும்.
அட்டவணைப்படுத்தப்பட்ட பிறகு சுவடியெண்ணும் நூலெண்ணும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டதென்றாலும் ஒத்த இயல்புகளைக் கொண்டது. நூலெண்ணைக் கொண்டு சுவடியெண்ணையும், சுவடியெண்ணைக் கொண்டு நூலெண்ணையும் கண்டெடுக்கலாம். சுவடியெண் தொலைந்துவிட்ட பிறகு சுவடி எண்ணைக் கண்டுபிடிப்பது கடினமான செயலேயாகும். ஒரே நூல் பல இருக்கும் சுவடியில் சுவடியெண் தொலைந்துவிட்டதானால், சுவடி விளக்க அட்டவணைப்படுத்தப்பட்ட அத்தலைப்பு நூல்களோடு பலமுறை பல்நோக்கான் ஒப்பிட்டே மீண்டும் எண்கொடுக்கவேண்டும். இப்பணிக்கு ஓரிரு நாள்கள் கூட செலவிடவேண்டி வரும்.
அட்டவணைப்படுத்தப்பட்ட சுவடியின் சுவடியெண்ணும் நூற்பெயரும் தொலைந்துவிட்ட பிறகு சுவடியெண்ணைக் கண்டுபிடிப்பது இயலாத செயலேயாகும். சுவடியெண்ணைக் கண்டுபிடிக்கச் சுவடியின் நீற, அகல, கனங்களும்; தொடக்க முடிவுகளுமே மூல காரணமாக அமையும். இதில் தொடக்கமும் முடிவும் இல்லாமற் போகும்போதும், தொடக்கமும் முடிவும் இருந்து இடையில் சிலபல ஏடுகள் இல்லாமற் போகும்போதும் சுவடியெண் கண்டுபிடிப்பது கடினம். ஒரு சுவடியில் தொடக்கம், முடிவு, நீள அகலம் சரியாக இருந்து கன அளவு வேறுபட்டாலும்; நீள அகலம், கன அளவு சரியாக இருந்து தொடக்கமோ முடிவோ தன்னிலையில் மாற்றம் பெற்றிருந்தாலோ வேறு எண்கொண்ட சுவடியாகக் கருத வாய்ப்பேற்படுத்தும். எனவே அட்டவணைப்படுத்தப்பட்ட பிறகு சுவடியில் எந்தவொரு மாற்றமும் ஏற்படாதவாறு காத்தல் அவசியமாகிறது.
அகவெண்
அகவெண், ஒரு சுவடியில் இடம்பெற்றிருக்கும் நூலின் ஒவ்வொரு ஏட்டின் முன் பக்கத்திலும் பின் பக்கத்திலும் நூற்பகுதிக்கிடையில் கொடுக்கப்பட்டிருக்கும் எண்ணேயாகும். இவ்வெண் நூற்பகுதிக்கு ஏற்ப எண்ணிக்கையில் மாறுபட்டமைவதோடு பொருளுக்கேற்றவாறும் வேறுபட்டமையும். இம்மாறுபட்ட வேறுபட்ட தன்மையை அடிப்படையாகக் கொண்டு அகவெண்ணை பாடலெண், தொகுப்பெண், பாடலுரையெண், உரையெண், பாடலுருவெண், அளவெண், காலவெண் என ஏழு வகைகளாகப் பிரிக்கலாம்.
அ. பாடலெண்
சுவடியில் இடம்பெற்றிருக்கும் நூல் பாடல் (செய்யுள்) வடிவில் அமைந்திருக்கும் போது ஒவ்வொரு பாடலின் இறுதியில் முறையாக கொடுக்கப்பட்டு இருக்கும் எண்ணே பாடலெண்ணாகும்.
"சீரணி கொன்றை சூடுஞ் செஞ்சடை யுடையான் பங்கில்
நாரணி கவுரி முக்கண் நாயகி புவனை போற்ற
காரணி யுமையாள் சோதி கருமங்கள் தானாய் நிற்கும்
பூரணி பெற்ற யானை முகவனைப் போற்றி செய்வாய்-க-"
என்னும் தமிழ்ப் பல்கலைக்கழக மாந்திரீகச் சுவடி 'தொட்டியம்' (சுவடி எண்.507) முதற்பாடலின் இறுதியில் -க- எனக் குறிக்கப்பட்டு இருப்பதைக் காணலாம். இதே அமைப்பில் எல்லாச் சுவடிகளிலும் பாடலெண் குறிக்கப்பட்டிருக்கும். பாடலெண்கள் எழுத்து வடிவத்திலேயே இருப்பதால் பாடலெண்யையும் நூற்பகுதியையும் வேறுபடுத்திக் காட்ட பாடலெண்ணிற்கு முன்னும் பின்னும் சில குறியீடுகள் பயன்படுத்துவர். குறிப்பாக, - (படுக்கைக்கோடு), . (புள்ளி), (பிள்ளையார்சுழி), | (குத்துக்கோடு), / (சாய்வுக்கோடு) போன்றவற்றைப் பயன்படுத்துவர்.
தொடர்ச்சியாக ஒரு நூலுக்குப் பாடலெண் கொடுக்கப்பட்டுள்ளதால் நூலின் மொத்தப்பாடல் எணை அறிந்துகொள்ளவும், நூலின் நூலேட்டெண்ணோ தொடரெட்டெண்ணோ இல்லாத நேரத்தில் பாடலெண்ணே சுவடித் தொகுப்பிற்குத் துணைநிற்கச் செய்யும். மேலும் நூலெட்டெண்ணோ தொடரெட்டெண்ணோ இல்லாத சுவடியில் சிலபல ஏடுகள் இல்லாதபோது நலின் தன்மையை (நிறை/குறை) அறியவும்; நூற்பகுதிக்குள் பாடலெண் கொடுக்கப்பட்டிருப்பதால் பாடலை எளிதில் இனங்காணவும்; சுவடியில் பலநூல் இருக்கும்போது ஒரு நூலின் இறுதிப் பகுதியும் அடுத்த நூலின் முற்பகுதியும் இல்லாதபோது பாடலெண் வேறுபட்டாலோ பாடல்-உரைநடை வேறுபட்டாலோ வேறுபடுத்திக் காணப் பாடலெண் பயன்படும்.
சுவடிகளிலும் பழம்பதிப்பு நூல்களிலும் பாடலெண் பாடலின் இறுதியில் கொடுப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தனர். இன்றோ, பாடலெண் பாடலுக்கு முன் இடப்பக்கத்தில் கொடுத்து வருகின்றனர். இதனால் தாள்ப்பகுதி அதிகமானதோடு பாடல்வரி நீளமாக இருக்கும்போது பாடலை மடக்கிப் போடுதலும் தேவையாகிவிடுகிறது. மடக்கிப் போடுதல் சில நூல்களில் மேல் வரியின் இறுதியிலோ அல்லது அடுத்த வரியாகவோ போடுவதால் சிக்கல் ஏற்படும். படிப்பதில் விடுபாடுகளுக்கு இம்முளை வகைசெய்யும். எனவே, பாடலெண்ணைப் பாடலின் இறுதியில் (வலதுபுறம்) கொடுப்பதே சாலச்சிறந்தது.
ஆ. தொகுப்பெண்
சுவடியில் ஒருபொருள் குறித்த பல நூற்செய்திகளைத் தொகுத்து வழங்குமிடத்தோ ஒரே நூலின் பல படலங்களின் பாடல் தொகையைக் குறிக்குமிடத்தோ தொகுப்பெண் அமையும். அதாவது, ஒவ்வொரு நூலின் இறுதியிலும் தொடர்ந்து வந்த பாடல்களின் எண்ணிக்கையை நூலின் இறுதிப் பாடலுக்கு அடுத்தோ படலத்தின் இறுதிப் பாடலுக்கு அடுத்தோ அமைக்கப்பட்டிருப்பதேயாகும். இவ்வெண் பெரும்பாலும் மிகப்பெரிய நூல் வடிவங்கொண்ட சுவடிகளிலேயே அமைந்திருக்கும். தமிழ்ப் பல்கலைக்கழகச் சுவடி எண்.1995-1, திருவாலவாய்ப்புராணம் என்னும் சுவடியில் 25ஆம் ஏட்டில்,
"ஙஎ(37) மூர்த்தி விசேட முற்றும். ஙஉரு(325)"
எனக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் '37' என்பது படலத்தின் இறுதிப் பாடலெண்ணையும், '325' என்பது இதுவரை இந்நூலுள் இடம்பெற்ற பாடல்களின் எண்ணிக்கையும் குறிக்கும். மேலும் தொகுப்பெண்ணைக் குறிக்கும்போது இத்தொகுப்பெண் எத்தனைப் படலம் வரை உட்படுத்தியது என்பதை, மேற்காணும் சுவடியில் 32வது ஏட்டில்,
"கூஎ(97) முதலாவது இந்திரன் பழிதீர்த்த படலம் முற்றும். ஆகத் திருவிருத்தம் சஙஎ(437)"
எனக் கொடுக்கப்பட்டுள்ளதையும் காணலாம். இதேபோல் தொகுப்பெண் கூறும்போது 'ஆகத் திருவிருத்தம்', 'ஆக விருத்தம்', 'ஆகப் பாடல்', 'ஆக' போன்ற சொற்களைப் பயன்படுத்தியும் பயன்படுத்தாலும் எண்ணிட்டு வந்துள்ளனர். இன்றைய பதிப்பு நூல்களில் இவ்வமைப்பைக் காண்பதரிது.
இ. பாடலுரையெண்
சுவடியில் பாடலும் அதற்குண்டான உரையும் அமைத்து இறுதியில் முறையாக இடப்பட்டிருக்கும் எண்ணே பாடலுரையெண்ணாகும். தமிழ்ப் பல்கலைக்கழகச் சுவடி எண்.457, திருக்குறள் பரிமேலழகர் உரையில்,
"நனவினான் நம்நீத்தார் என்பர் கனவினான்
காணால்கொல் இவ்வூ ரவர். (குறள்.1220)
என்பது இதுவுமது. இவ்வூர் மகளினர் நனவின் கண் நம்மை நீத்தார் என்று நம் காதலரைக் கொடுமை கூறா நிற்பர். அவர் கனவின் கண் நீங்காது வருதல் கண்டறியாரோ என்றவாறு. என்னோடு தன்னிடை வேற்றுமை இன்றாயின் யான் கண்டதுதானும் கண்டமையும். அது காணாது அவரைக் கொடுமை கூறுகின்றமையின் அயலாரேயாம் என்றும் கருத்தால் இவ்வூரவள் என்றார்-க0-" எனும் பாடலுக்குத் தக்க உரைவிளக்கம் கொடுத்தபிறகு அப்பாடல் உரையெண் கொடுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். பாடலெண் கொடுப்பதால் ஏற்படும் பயன்களும் சிக்கல்களும் பாடலுரையெண் கொடுப்பதிலும் ஏற்படும்.
ஈ. உரையெண்
மூல நூல் பாடலால் மட்டும் இருக்கும்போது அம்மூல நூலுக்கெனத் தனியே உரைநூல் எழும்போது மூல நூலின் பாடலெண்ணையே உரைநூலுக்கும் கொடுக்கப்படும் எண்ணே உரையெண்ணாகும். தமிழ்ப் பல்கலைக்கழகச் சுவடி எண்.664, ஞானவாசிட்டம் என்னும் சுவடியில்,
"பாடல் 33க்கு ஞானபூரணமே. இதன்பொருள். ஞானபூரணமே மெய்தானமயால் ஆதி மகத்துவ ஞானம் பரிச்சின்ன விஷயமாயிருத்தலின் இந்த நெடிய மோகத்திகிரிக்கு சக்கரம்போற் சுழலுமியல்புள்ள விச்செகத்து ரூபமாகிய மாயா விலாசத்திற்கு மானதந்தானே யச்சதாம். சக்கரபமா விருத்திக்கு யேதுவாதலினென்க. அதனை அத்தன்மையுள்ள மாயா சக்கரத்துக்கச்சான சித்தத்தை வலிந்தடர்வுறில் எவ்விதமு நிரோதஞ் செய்து நிருவிகாரனாய் இருக்கின் அது அம்மாயா சக்கரம் நலியா அற்பமும் வாதியாது" என்றிருப்பதைக் காணலாம்.
பாடலெண், தொகுப்பெண், பாடலுரையெண் போன்றவற்றிற்கு இறுதியில் எண் கொடுக்கப்பட்டிருக்கும் போது இதில் மட்டும் உரைப்பகுதியின் தொடக்கத்திலேயே எண் கொடுக்கப்பட்டுள்து. இது ஏனெனில், மூலபாடல் வேறு சுவடியில் இருக்கும்போது வேறொரு தனிச் சுவடியில் உரை மட்டும் இருந்தால் மூலத்தையும் உரையையும் அருகருவே வைத்துப் படிப்பதற்கும், மூலத்தை நினைவில் கொண்டு படிப்பதற்கும், மூலப் பாடலெண்ணை உணர்த்தும் தருவாயாகவும் உள்ளது எனலாம். இதில் பாடலுக்கான உரை என்பதைத் தொடக்க நிலையில் உணர்த்த அப்பாடலெண்ணை முதலில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அப்பாடலின் தொடக்கத்தினையும் (ஞானபூரணமே) உரைப்பகுதிக்கு முன்னர் குறிப்பிட்டிருக்கின்றனர் என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்க ஒரு செய்தியாகும்.
உ. பாடலுருவெண்
சுவடியில் பயன்படுத்தப்பட்ட எண்களுக்கும் குறியீடுகளுக்கும் வரிவடிவ விளக்கப் பாடலே பாடலுருவெண்ணாகும். தவத்திரு தண்டபாணி சுவாமிகளின் அறுவகை இலக்கணம் என்னும் நூலில்,
"ககரமும் உகரமும் ஒன்றிரண் டாகும்
ஙகரத் தீற்று நிலைவரை தள்ளில்
மூன்றாம் சகரத் தீறுதொட் டொருநிலை
வரைமேல் நோக்கி நிறுவிடில் நாலாம்;
ருகரத்து ஈற்றைக் கொம்பென வளைக்கில்
ஐந்தாம்; தகரத்து ஈற்றைக் குறைத்துஒரு
ரகரம் பொருத்திடில் ஆறாம்; எகரமும்
அகரமும் ஏழு, எட்டு ஆகும்; ககரத்து
ஈறுதொட்டு ஒருசிறு கொம்பென வளைக்கில்
ஒன்பது ஆகும்; ஐகா ரத்தின்
கீழ்உறு பகுதியைத் தனிப்படக் காட்டில்
பத்துஎன விளங்கும்; றகர முதல் வளைவு
உடனொரு ரகரம் பொருந்த நூறாம்;
ககரத்து ஈற்றைச் சிறிதுஇடம் மேலா
வளைத்துச் சூஎன நிறுவல் ஆயிரம்". (நூ.39)
என்று 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10, 100, 1000 ஆகிய தமிழ் எண்களுக்கு வரிவடிவம் கொடுத்திருக்கக் காணலாம்.
ஊ. அளவெண்
மருத்துவச் சுவடிகளிலும் கணக்கியல் சுவடிகளிலும் அளவுகளைக் குறிக்கும் குறியீட்டெண்ணே அளவெண்ணாகும். இவ் அளவெண்ணின் வகைகளையும் அவற்றைப் பற்றிய குறியீடுகளையும் இவ்வாய்வாளனால் எழுதப்பட்ட பிறிதொரு கட்டுரையான 'தமிழ்ச் சுவடிகளில் எழுத்தமைதி' என்பதில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
எ. காலவெண்
சுவடியில் இடம்பெற்றுள்ள நூலின் முற்பகுதியிலோ பிற்பகுதியிலோ நூலைப் பற்றிய புறச்செய்திகள் இடம்பெற்றிருக்கும். அதில் இச்சுவடி யாருக்காக யார் எழுதியது என்பது பற்றியும், நூலெழுதிய காலத்தைப் பற்றியும் நூலெழுதத் தொடங்கிய காலத்தைப் பற்றியும் குறிப்பிடப்பட்டிருக்கும். இதில் காலத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் குறியீட்டெண்ணே காலவெண் ஆகும்.
"சுக்கில வருஷம் ஐப்பசி மாதம் யருஉ குறலேரிதஞ்சிகவுண்டர் குமாரன் நல்லண்ணகவுண்டன் தான் எழுதிய நூற்றெட்டு சாத்திரம்" என்றிருப்பதில் ஒற்றைமேற்கோள் குறிக்குள் இருப்பவை காலவெண்ணைக் குறிக்கும்.
ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் இவ்வெண்கள் இன்றைய சுவடிப்பதிப்பு நூல்களிலும் நடைமுறைகளிலும் இருந்து மறைந்து வருகின்றன. இவற்றைக் காப்பது நம் கடமையாகும். இனிவரும் சுவடிப்பதிப்பு நூல்களிலாவது தமிழ் எண்களைப் பயன்படுத்துதல் வேண்டும். மருத்துவச் சுவடிகளில் காணப்படும் அளவுகள் இன்று நடைமுறையில் இல்லை. மருத்துவச் சுவடிகளைப் பதிப்பிப்பவர்கள் அதில் காணும் அளவுக் குறியீடுகளை எழுத்தால் எழுதி பதிப்பித்துவிடுகின்றனர். இந்நிலையைப் போக்கி இன்றைய அளவை ஒப்பிட்டு, ஒப்பீட்டுப் பட்டியலுடன் கொடுத்தால் நலம் பயக்கும். இதனால் பழைய அளவுகளையும் குறியீடுகளையும் நினைவில் வைத்துக்கொண்டு எல்லோரும் பழமையின் காப்பகங்களாகத் திகழலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக