வியாழன், 13 செப்டம்பர், 2018

குருபரம்பரை அகவல்

சைவம், வைணவம் இவ்விரண்டும் இந்து மதத்தின் இரு கண்கள்.  சைவ சமயச் சார்புடையனவும் சைவண சமயச் சார்புடையனவும் எனப் பல ஆதீனங்களும் மடங்களும் தோன்றின.  இவ்வாதீனங்கள் மற்றும் மடங்களின் வரலாற்றையே குருபரம்பரை என்று கூறுகின்றோம்.  ஒவ்வொரு ஆதீனத்திற்கும் மடத்திற்கும் எனக் குருபரம்பரை தனித்தனியே உள்ளது.  வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய ஆதீனங்களில் துறைசையாதீனம் என்று கூறப்படும் திருவாவடுதுறை ஆதீனமும் ஒன்று.  இவ்வாதீனத்து குருபரம்பரையை அகவற்பாவில் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களும் பூஜை சுப்பிரமணியத் தம்பிரான் அவர்களும் பாடியிருக்கிறார்கள்.  இவ்விரு அகவல்களும் பெயரால் ஒன்றுபட்டதென்றாலும் சொல்லும் பொருளால் வேறுபட்டுள்ளது.

குருபரம்பரை - ஓர் விளக்கம்

திருக்கயிலாயத்தில் சிவஞானச் செங்கோல் ஓச்சிக் கொண்டிருக்கும் ஸ்ரீகண்ட பரமசிவத்திடம் தெரிந்துகொண்டு சனத்குமாரர், சனதர், சனாதனர், சனகர் ஆகிய நால்வருக்கும் உபதேசித்தார்.  இந்நால்வரும் தனித்தனியே மடங்களை நிறுவி சைவசமயத் தொண்டாற்றி வரலாயினர்.

சனத்குமாரர் ஆமர்த்தக மடத்தையும், சனதர் ரணபத்திர மடத்தையும், சனாதனர் கோளகி மடத்தையும், சனகர் புஷ்பகிரி  மடத்தையும் நிறுவி அம்மடங்களின் முதல் தலைவராக முறையே இருந்தனர்.  இவர்கள் காலத்திற்குப் பிறகு இவ்விவரர்களின் சந்ததியினர் மடத்தின் தலைவராக இருந்து வந்தனர்.  இம்மடங்கள் வடக்கே கோதாவரி தீரத்தில் சைவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த மந்திரகாளி என்னும் பட்டணத்தைச் சூழ்ந்திருந்தன.

குருபரம்பரையை திருநந்தி (சயிலாதி)த் தேவரைக் குருவாகக் கொண்டு, அவர் மரபுவழி வந்ததால் சயிலாதி மரபுடையது எனவும், திருக்கயிலாயத்திலிருந்து தொடங்கிப் பரம்பரையாக இன்றுவரை செங்கோலாட்சி புரிந்து வருவதால் திருக்கயிலாயப் பரம்பரை எனவும் போற்றப்படுகின்றது.  ஆமர்த்தக மடத்தை நிறுவிய சனத்குமாரரால் விஞ்ஞான தேவர் சந்தானம் என்றும், மெய்கண்டதேவர் சந்தானம் என்றும் இரண்டாகிப் பின் பலவாயின.  சந்தானக் குரவர்களை அகச்சந்தானக் குரவர்கள் என்றும், புறச்சந்தானக் குரவர்கள் என்றும் இரண்டாகப் பிரிப்பர்.  அதாவது, தேவபரம்பரையைச் சேர்ந்த திருநந்தித்தேவர், சனத்குமாரர், சத்தியஞானதரிசினி, பரஞ்சோதி முனிவர் ஆகிய நால்வரும் அகச்சந்தானக் குரவர்கள்; பூத பரம்பரையைச் சேர்ந்த மெய்கண்டார், அருணந்திசிவம், மறைஞான சம்பந்தர், உமாபதிசிவம் ஆகிய நால்வரும் புறச்சந்தானக் குரவர்கள் என்பர்.  புறச்சந்தானக் குரவரான உமாபதி சிவத்தின் மாணவர் அருள்நமச்சிவாயர்; அவருடைய மாணவர் சித்தர் சிவப்பிரகாசர்; அவரது மாணவர் ஸ்ரீநமச்சிவாய மூர்த்திகள்.  இவரே திருவாவடுதுறை ஆதீனத்தை கி.பி.1360ஆம் ஆண்டு தோற்றுவித்தவர்.  இவரைத் தொடர்ந்து ஞானபீடத்தில் எழுந்தருளும் குருமூர்த்திகளே 'அபிடேக பரம்பரையினர்'.  இன்று 23ஆவது குருமூர்த்தியான சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிகப் பரமாசாரியார் அவர்கள் இவ்வாதீனத்தை செங்கோலாட்சிச் செய்து வருகின்றார்.

குருபரம்பரை அகவல்

இந்நூல் திருவாவடுதுறை ஆதீன வரலாற்றை அறிவிப்பனவாகும்.  திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளைவர்களும் பூஜை சுப்பிரமணியத் தம்பிரான் அவர்களும் தனித்தனியே இவ்வாதீன வரலாற்றைப் பாடி இருக்கிறார்கள்.  வரலாறு ஒன்று என்றாலும் செய்திகள் வேறுவேறானவை.

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்துக் குருபரம்பரை அகவல் என்னும் நூலில் புறச்சந்தானக் குரவர்கள் நால்வர்க்கும் அபிடேக குருமூர்த்திகள் முதல் பதினான்கு பேர்களுக்கும் குருபூஜை தினத்தையும் மாதம் மற்றும் நட்சத்திரங்களையும் நிரல்படுத்திக் குறிப்பிடுகின்றார்(காண்க: பின்னிணைப்பு). இப்பின்னிணைப்பில் அண்மைக் கால குருமூர்த்திகள் வரை நிரல்படுத்தப்பட்டிருக்கின்றது.  இந்நூல் 53 அகவல் வரிகளைக் கொண்டது.  உ.வே. சாமிநாதையர் அவர்கள் பதிப்பித்த 'மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் பிரபந்தத்திரட்டு' என்னும் நூலில் 1049ஆம் பாடலாக இவ்வகவல் இடம்பெற்றுள்ளது.  கி.பி.1910 மற்றும் 1926 ஆகிய ஆண்டுகளில் இப்பிரபந்தத்திரட்டு பதிப்பாகியுள்ளது.  அதற்குப் பிறகு இந்நூல் இன்னும் அச்சாகாமல் - மறுபதிப்பு காணாமல் இருக்கின்றது.  இருப்பினும் இவரது நூல்களைப் பல இலக்கியப் பருவ இதழ்கள் வெளியிட்டுள்ளன.  அந்த வகையில் 'குருபரம்பரை அகவல்' செந்தமிழ்ச் செல்வி என்னும் இலக்கியத் திங்கள் இதழில் (சிலம்பு 3, பரல் 1, 1925, பக்.47-48) வெளிவந்துள்ளது.  இதனைத் திருவாவடுதுறையாதீனத்துச் சீடன் வாங்கல் மு. அப்பாவுப் பிள்ளையவர்கள் பதிப்பித்திருக்கின்றார்.  பிரபந்தத் திரட்டில் உள்ளதை உள்ளவாறே பதிப்பித்திருக்கின்றார்.  இவரின் பதிப்புரையோ குறிப்புரையோ ஏதுமின்றி இந்நூல் செந்தமிழ்ச் செல்வியில் வெளிவந்துள்ளது.

பூஜை சுப்பிரமணியத் தம்பிரான் அவர்கள் 'துறைசை மடத்துத் தம்பிரான்களின் பரம்பரை' எனும் பெயரோடு திருவாவடுதுறை ஆதீனத்துக் குருபரம்பரையை எழுதி உள்ளார்.  இந்நூல் 151 அகவல் வரிகளைக் கொண்டது.  பிள்ளையவர்களின் குருபரம்பரை அகவலிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது.  என்றாலும் இரண்டும் திருவாவடுதுறையாதீனக் குருபரம்பரையையே குறிப்பிடுகின்றது.  பிள்ளையவர்கள் குறிப்பிடாத செய்திகளைப் பூஜை சுப்பிரமணியத் தம்பிரான் அவர்கள் குறிப்பிடுகின்றார்.  அதாவது, இவர் முதலில் மடங்களின் வரலாற்றையும் அம்மடங்கள் நிறுவியவர்களின் வரலாற்றையும், திருக்கயிலாயப் பரம்பரையின் தொடக்கத்தையும் கூறி தேவபரம்பரையைச் (அகச்சந்தானக் குரவர்கள், புறச்சந்தானக் குரவர்கள்) சேர்ந்தவர்களின் அருட்பணிகளையும் ஆக்கச் செயல்களையும் எடுத்தியம்புகின்றார்.  இந்நூல் 'சித்தாந்தம்' என்னும் சைவ சமயத் திங்கள் இதழில் (மலர் 12, இதழ் 7, ஜுலை 1939, பக்.328-336) வெளிவந்துள்ளது.  இதில் "திருவாவடுதுறையாதீன வரலாற்றை அறிவிக்கும் இவ்வகவல் அரசினர் கையெழுத்து நூனிலையத்திலுள்ள ஒரு சுவடியில் 'துறைசை மடத்துத் தம்பிரான்களின் பரம்பரை' என்னும் பெயரோடு காணப்படுகிறது.  பூஜை சுப்பிரமணியத் தம்பிரான் இயற்றிக் குரோதன வருடம் (1926) மகர ரவியில் அச்சான திருவாவடுதுறை ஆதீனக் குருபரம்பரை விளக்கம் வெளிவராமலே இருக்கிறது" என்னும் எஸ். அனவரதவிநாயகம் பிள்ளை அவர்களின் குறிப்புரையுடன் இந்நூல் வெளிவந்துள்ளது.  1926இல் அச்சான இந்நூல் 1939 வரை (சித்தாந்தத்தில் வெளிவந்த காலம்) ஏன் வெளியாகவில்லை என்ற காரணத்தையும், இதற்குப் பிறகாவது இந்நூல் வெளிவந்ததா என்றும் ஆராயவேண்டும்.

மகாவித்துவான் அவர்கள் குறிப்பிடும் செய்திகளையும் பூஜை சுப்பிரமணியத் தம்பிரான் அவர்கள் குறிப்பிடும் செய்திகளையும் ஒவ்வொரு குருமூர்த்திக்கும் எனத் தனித்தனியே பிரித்து ஒன்றாக இணைத்தால் கவிதையோட்டத்தில் தடையேற்படுவது இல்லை.  மகாவித்துவான் அவர்கள் எழுதாத செய்திகளை இவர் நிரப்பியிருக்கின்றார் என்றே சொல்லவேண்டும்.

"திக்கொத் திறைஞ்சத் திகழுமா பதியார்
மெய்க்கொற் றவன்குடி மேடமதி யத்தம்" (வரி.18-19)

என்னும் வரிகளை மகாவித்துவான் அவர்கள் உமாபதியாரைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.  இவரையே பூஜை சுப்பிரமணியத் தம்பிரான் அவர்கள்,

"திருவருள் செய்திடப் பெற்றவத் தேசிகர்
மருவல ரெட்டரும் மருவலர்ப் பொழில்சூழ்
தில்லையம் பலத்திற் றிருநடம் புரிதரும்
நல்லவ ருருவமாய் மல்குமூ வாயிரர்
மறையவ ரும்புகழ் நிறையருட் டேசிகர்" (வரி.48-52)

என்னும் வரிகளால் குறிப்பிடுகின்றார்.  பூஜையாரின் வரிகளை முன்னதாகவும் மகாவித்துவானின் வரிகளைப் பின்னதாகவும் வைத்துப் படித்தால் செய்தி ஒன்று போலவே இருக்கக் காணலாம்.  இதுபோல் பதினான்கு அபிடேக குருமூர்த்திகளுக்கும் பொருத்திப் பார்க்கலாம்.

குருபரம்பரை அகவல்களின் காலம்

பிள்ளைவர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் (6.4.1815 - 1.2.1876) வாழ்ந்தவர்.  திருவாவடுதுறை ஆதீனத்துப் பதினைந்தாவது குருமூர்த்தியான சீர்வளர்சீர் அம்பலவாண தேசிகர் (கி.பி.1845-1869) காலத்தில் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் கி.பி.1860ஆம் ஆண்டு ஆதீன வித்துவானாக அமர்த்தப்பட்டார்.  பிள்ளையவர்கள் தம்முடைய குருபரம்பரை அகவலில் முதல் பதினான்கு குருமூர்த்திகள் வரைப் பாடியிருக்கின்றார்.  15ஆவது குருமூர்த்திகளின் காலமாக 1869க்குப் பிறகும் மகாவித்துவான் அவர்கள் ஏழு ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்.  ஆயின் குருபரம்பரை அகவலில் முதல் பதினான்கு குருமூர்த்திகள் மட்டுமே இடம்பெற்றிருப்பதால் ஆதீனத்துப் பதினைந்தாவது குருமூர்த்தியான சீர்வளர்சீர் அம்பலவாணதேசிகர் வாழ்ந்த காலத்திற்குள்ளும், மகாவித்துவான் அவர்கள் திருவாவடுதுறை ஆதீனத்து வித்துவானாக அமர்த்தப்பட்டதற்குப் பிறகுமான காலத்தில் (கி.பி.1860-1869) தான் இந்நூல் இயற்றப்பெற்றிருக்கிறது என்பது உறுதி.  மகாவித்துவான் அவர்களின் நூலைப் பின்பற்றியே தம்பிரான் அவர்களும் முதல் பதினான்கு குருமூர்த்திகள் வரை திருக்கயிலாய குருபரம்பரையை எழுதியிருக்கிறார்.  இவரது காலம் தெளிவாகத் தெரியவில்லை.  என்றாலும், மகாவித்துவான் அவர்களின் காலமாகவோ அல்லது அவருக்குப் பிந்திய காலமாகவோ இருந்திடல் வேண்டும் என்று துணியலாம்.

பிள்ளையவர்களின் தமிழ்ப்பற்று

மகாவித்துவான் அவர்கள் தம்முடைய செய்யுட்களில் பெரும்பான்மை தமிழ்ச் சொற்களையே கையாள்வதில் வல்லவராக இருந்துள்ளார்.  சிறுபான்மை வடமொழிச் சொல்லாயினும் அதற்குத் தமிழ் எழுத்தையே பயன்படுத்துகின்றார்.  குறிப்பாக, அஸ்தம் - அத்தம் என்றும், அனுஷம் - அனுடம் என்றும் நட்சத்திரப் பெயர்களைப் பயன்படுத்துவதைப் பார்க்கலாம்.  இதேபோல் மாதப் பெயர்களையும் தமிழிலேயே குறிப்பிடுவதைப் பார்க்கமுடிகிறது.  குருபரம்பரை அகவலில் மாதப் பெயர்கள்,
தை        - சுறவம் மாசி - கும்பம்
பங்குனி        - மீனம் சித்திரை - மேடம்
வைகாசி        - விடை ஆனி - மிதுனம்(ஆடவை)
ஆடி        - கடகம் ஆவணி - மடங்கல்
புரட்டாசி        - கன்னி ஐப்பசி - துலை
கார்த்திகை      - நளி மார்கழி - சிலை
எனக் குறிப்பிடுகின்றார்.  இவற்றைக் காணும் போது பிள்ளையவர்களின் தமிழ்ப் பற்று நன்கு வெளிப்படுகிறது.

முடிவுரை

மகாவித்துவான் அவர்களின் குருபரம்பரை அகவலில் பெயர் மற்றும் அவரவரின் குருபூஜைக் குறிப்பு(மாதம், நட்சத்திரம்)கள் மட்டும் இடம்பெற்று இருக்கும்.  தம்பிரான் அவர்களின் அகவலில் இவை தவிர குருமூர்த்திகளின் ஏனைய குறிப்புகள் இடம்பெற்றிருக்கும்.  குருமூர்த்திகளின் குருபூஜையை நினைவு கொள்ளும் பொருட்டே மகாவித்துவான் அவர்களால் இவ்வகவல் இயற்றப்பெற்றிருக்கவேண்டும்.  இவர்விடுத்த குறிப்புகளைத் தம்பிரான் அவர்கள் தனியே ஓரகவல் பாடி நிறைவு செய்திருக்கின்றார் என்றே எண்ணவேண்டும்.  இவ்விரு அகவலையும் பிரித்து - இணைத்து வேறுபாடு காணாதவாறு ஒரு நூலாகவும் ஆக்கலாம்.  காட்டாக,

"இத்திருச் சிற்றம் பலகுரு விறைவர்
மெய்த்தவர்க் கெளிதாய் வீணருக் கரிதாய்ச்
சுத்தசிற் குணமாய்த் தொன்மறைப் பொருளாய்க்
கல்விக் கடலாய்க் கருணைமக மேருவாய்ச்
செல்வமுங் கல்வியுஞ் சிவமுந் தவமும்
நல்லறி வுண்மைமெய்ஞ் ஞானமும் பொருளும்
சொல்லவல் லபங்கொடு தோன்றியிச் சைவமாஞ்
சந்தா னத்தொரு சந்தான மாய்வளர்" (வரி.120-127) 

எனும் தம்பிரானின் வரிகளையும்,

"யாப்புகழ்த் திருச்சிற் றம்பல தேசிகர்
வேய்புகழ்த் துறைசை மிதுனமதி பரணி" (வரி.46-47) 

எனும் பிள்ளையவர்களின் வரிகளையும் இணைத்துப் படிப்பின் விளங்கும்.


பின்னிணைப்பு
துறைசையாதீன குருபரம்பரை - காலநிரல்
                             குருபூஜை   காலம்
குருமூர்த்திகளின் பெயரும் பட்டமும் மாதம் நட்சத்திரம்   (கி.பி.களில்)
ஸ்ரீலஸ்ரீ மெய்கண்டா ஐப்பசி சுவாதி
ஸ்ரீலஸ்ரீ அருணந்திசிவம் புரட்டாசி பூரம்
ஸ்ரீலஸ்ரீ மறைஞானசம்பந்தர் ஆவணி
ஸ்ரீலஸ்ரீ உமாபதிசிவம் சித்திரை அஸ்தம்
ஸ்ரீலஸ்ரீ நமச்சிவாயமூர்த்திகள்(1)
ஸ்ரீலஸ்ரீ மறைஞானதேசிகர்(2) தை சுவாதி
ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிகர்(3) சித்திரை அவிட்டம் 1360-1621
ஸ்ரீலஸ்ரீ உருத்திரகோடிதேசிகர்(4) கார்த்திகைஅனுடம் (1-4)
ஸ்ரீலஸ்ரீ வேலப்பதேசிகர்(5) கார்த்திகைஉத்திராடம்
ஸ்ரீலஸ்ரீ குமாரசாமிதேசிகர்(6) கார்த்திகைஉத்திராடம் 1621-1625
ஸ்ரீலஸ்ரீ பின்குமாரசாமிதேசிகர்(7) ஆவணி உத்திரட்டாதி 1625-1627
ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணிதேசிகர்(8) சித்திரை ரோகிணி 1625-1658
ஸ்ரீலஸ்ரீ இராமலிங்கதேசிகர்(9) கார்த்திகைஅனுடம் 1658-1678
ஸ்ரீலஸ்ரீ வேலப்பதேசிகர்(10) புரட்டாசி மூலம் 1678-1700
ஸ்ரீலஸ்ரீ பின்வேலப்பதேசிகர்(11) வைகாசி பூரட்டாதி 1700-1730
ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பலதேசிகர்(12)ஆனி பரணி 1730-1770
ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிகர்(13) மார்கழி கேட்டை 1770-1789
ஸ்ரீலஸ்ரீ வேளுர் சுப்பிரமணிய
                 தேசிகர்(14)                          கார்த்திகைகார்த்திகை1789-1845
ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிகர்(15) ஆனி பூரம் 1845-1869
ஸ்ரீலஸ்ரீ மேலகரம் சுப்பிரமணிய
                             தேசிகர்(16)                 மார்கழி சுவாதி 1869-1888
ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிகர்(17) சித்திரை சதயம் 1888-1920
ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணியதேசிகர்(18) தை பரணி 1920-1922
ஸ்ரீலஸ்ரீ வைத்தியலிங்கதேசிகர்(19)ஐப்பசி அவிட்டம் 1922-1937
ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிகர்(20) பங்குனி திருவாதிரை 1937-1951
ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணியதேசிகர்(21) புரட்டாசி பரணி 1951-1967
ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிகர்(22) பங்குனி         1967-1983
ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாசதேசிகர்(23)         1983முதல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக