வெள்ளி, 14 செப்டம்பர், 2018

சம்பந்தரைப் போற்றும் நூல்கள்

சமயக்குரவர் நால்வருள் ஒருவராக விளங்கும் திருஞானசம்பந்தர் திருவாய் மலர்ந்தருளிய தேவாரத்திற்குப் பிறகு அவரைப் பற்றியும், அவரது திருப்பதிகங்களைப் பற்றியும், அவரது திருச்செயல்களைப் பற்றியும் பல நூல்கள் எழுந்திருக்கின்றன. திருஞானசம்பந்தர் காலத்திற்குப் பிறகு அவரைக் குறித்து எழுந்த நூல்களையே 'சம்பந்தரைப் போற்றும் நூல்கள்' என்கின்றோம்.  இவ்வகையில் எழுந்த நூல்களை இரண்டு நிலைகளாகப் பகுக்கலாம்.  அவை,

1.  சம்பந்தரைப் போற்றும் தனிநூல்கள்
2.  சம்பந்தரைப் போற்றும் நூற்பகுதிகள் 

என அமையும்.

1.  சம்பந்தரைப் போற்றும் தனிநூல்கள்

திருஞானசம்பந்தப் பெருமானின் வரலாறு - சிறப்பு - பெருமை - அற்புதச் செயல்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு அந்தாதி, ஆனந்தக்களிப்பு, உலா, கலம்பகம், தாலாட்டு, நாமாவளி, மும்மணிக்கோவை, பிள்ளைத்தமிழ், விருத்தம் ஆகிய சிற்றிலக்கிய வகைகளில் நூல்கள் எழுந்திருக்கின்றன.  குறிப்பாக, ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி, திருஞானசம்பந்த சுவாமிகள் ஆனந்தக்களிப்பு, ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை, ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம், திருஞானசம்பந்த சுவாமிகள் திருத்தாலாட்டு, சிவபக்த நாமாவளி - திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை, திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ், ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம், ஆளுடையபிள்ளையார் திருத்தொகை போன்ற நூல்களைக் குறிப்பிடலாம்.

அ.  ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி

நம்பியாண்டார் நம்பிகளின் 'ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி' அந்தாதித் தொடையில் அமைந்த 101 பாடல்களால் ஆனது.  திருஞானசம்பந்தப் பெருமானின் பெருமைகளைப் பலவாறாகப் போற்றும் இந்நூல் பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது.

ஆ.  திருஞானசம்பந்த சுவாமிகள் ஆனந்தக்களிப்பு

மகிழ்ச்சியின் மிகுதியால் பாடப்பெறும் ஒருவகைப் பாடல் அமைப்பு 'ஆனந்தக்களிப்பு'  ஆகும்.  காழியம்பதியில் திருஞானசம்பந்தப் பெருமான் அவதரித்தது முதல் அவர்தம் வாழ்வில் நிகழ்த்திய திருவிளையாடல்கள் வரையுள்ள நிகழ்ச்சிகளின் தொகுப்பாக அமைந்தது 'திருஞானசம்பந்த சுவாமிகள் ஆனந்தக்களிப்பு' ஆகும்.  இந்நூலை மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள் யாத்துள்ளார்.  இது, பல்லவி ஒன்றும், தாழிசை 38ம் கொண்டதாகத் திகழ்கின்றது.

"ஆனந்த மானந்தந் தோழி - திரு
வாளர்சம் பந்த ரருள்விளை யாடல்
ஆனந்த மானந்தந் தோழி"

எனும் பல்லவியுடன் தோழியை முன்னிலைப்படுத்திப் பாடுவதாக இந்நூல் அமைந்துள்ளது.  இந்நூல் 'மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத்திரட்டு' எனும் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளது.

இ.  ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை

நம்பியாண்டார் நம்பிகளின் 'ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை' 143 கலிவெண்பாவாலானது.  திருஞானசம்பந்தப் பெருமான் வீதி உலா வருவதைக் கண்ட பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் ஆகிய ஏழு பருவ மகளிர் ஆளுடையாரின் தெய்வீகப் பேரொலியில் மயங்கிக் கூறுவதாக இந்நூல் அமைந்துள்ளது.

ஈ.  ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்

நம்பியாண்டார் நம்பியின் 'ஆளுடையபிள்ளையார் திருக்கலம்கம்' எனும் நூலில் இன்று 49 பாடல்களே கிடைத்துள்ளன.  திருஞானசம்பந்தர் 'தேவாரம்' அருளிய சிறப்பினையும் தமிழின் பெருமையினையும் எடுத்துக் கூறுவதாக இந்நூல் அமைந்துள்ளது.

உ.  திருஞானசம்பந்த சுவாமிகள் திருத்தாலாட்டு

காழிக்கண்ணுடைய வள்ளலாரின் 'திருஞானசம்பந்த சுவாமிகள் திருத்தாலாட்டு' காப்பு 1, நூல் 30 கலித்தாழிசைகளாலானது.  திருஞானசம்பந்தப் பெருமானின் வாழ்க்கை வரலாற்றைத் தாலாட்டு முறையில் இந்நூல் சுருக்கமாகக் கூறுகின்றது. காட்டாக இரண்டு பாடல்கள் பின்வருமாறு அமைந்திருப்பதைக் காணலாம்.

"தாரையோ தாதுணர்ந்த சம்பந்தன் வந்தானென்
றேர்பெருக வூத வெழுந்தருளி வந்தாரோ" (பா.10)

"காயாப் பனையையன்பர்க் காக்காய்க்கப் பண்ணுவித்து
வீயாம லப்பனைக்கு வீடு மளித்தாரோ" (பா.25)

ஊ.  சிவபக்த நாமாவளி - திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

சொக்கலிங்கச் செட்டியார் அவர்கள் திருஞானசம்பந்த சுவாமிகள் மீது சிவபக்த நாமாவளி ஒன்றைப் பாடியுள்ளார்.  இது காப்பு வெண்பா 1ம், நூல் 44 கண்ணிகளாலும் ஆனது.  சம்பந்தப் பெருமானின் திருச்செயல்களின் சிறப்பை எடுத்துக்கூறுவதாக இந்நூல் அமைந்துள்ளது.  காட்டாக, இரண்டு பாடல்கள் பின்வருமாறு அமைந்திருப்பதைக் காணலாம்.

"சுதைவளந் தருமிகு தூமணிமேல்
தோடுடை பாடிய நாமணியே" (பா.8)

"நந்தியை யேவியச் சோதியிலே
வந்துற யாவரும் ஓதினனே" (பா.35)

எ.  ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை

நம்பியாண்டார் நம்பியின் 'ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை' ஆசிரியப்பா, வெண்பா, கட்டளைக்கலித்துறை ஆகிய மூன்று வகையான பாக்கள் கோவைபட அமையப்பெற்ற 30 பாடல்களால் ஆனது.  ஆளுடைய பிள்ளையாராகிய ஞானசம்பந்தர் சிவபெருமான் திருவருள் பெற்று செய்தருளிய அற்புதச் செயல்களை இந்நூல் விரித்துரைக்கின்றது.

ஏ.  திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ்

திருஞானசம்பந்தரின் பேரில் பலர் பிள்ளைத்தமிழ் நூல்களை யாத்துள்ளனர்.  குறிப்பாக, காரைக்குடி ராம.சொ. சொக்கலிங்கச் செட்டியார், துறைசை ஸ்ரீமாசிலாமணி தேசிக சுவாமிகள், கூனம்பட்டி மாணிக்கவாசக ஞானதேசிக சுவாமிகள், வ.சு. செங்கல்வராய பிள்ளை ஆகியோரின் நூல்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இந்நூல்கள் எல்லாம் ஞானசம்பந்தப் பெருமானைக் குழந்தையாகப் பாவித்துப் பத்துப் பருவங்களில் பெருமானது சிறப்பினை நன்கு எடுத்துரைப்பதாக அமைந்துள்ளன எனலாம்.

காரைக்குடி ராம.சொ. சொக்கலிங்கச் செட்டியாரின் 'திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ்' காப்பு 1, நூல் 103 பாடல்களால் ஆனது.  காப்புப் பருவம் 12, சிறுதேர் பருவம் 11, ஏனைய பருவங்கள் 10 என இந்நூலின் பாடலமைப்பு அமைந்துள்ளது.  துறைசை மாசிலாமணிதேசிக சுவாமிகளின் 'திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ்' விநாயகர் வணக்கம் 1, நூல் 100 பாடல்களாலானது.  காப்புப் பருவம், வாராணைப் பருவம் ஆகிய இரண்டு பருவங்களும் முறையே பதினொரு பாடல்களையும்; முத்தப் பருவம், சிறுபறைப் பருவம் ஆகிய இரண்டு பருவங்களும் முறையே 9 பாடல்களையும்; ஏனைய பருவங்கள் பத்துப் பாடல்களையும் கொண்டதாக இந்நூல் அமைந்துள்ளது. கூனம்பட்டி மாணிக்கவாசக ஞானதேசிக சுவாமிகளின் 'திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ்'  பருவத்திற்குப் பத்துப் பாடல்கள் வீதம் 100 பாடல்களாலானது.  வ.சு. செங்கல்வராய பிள்ளையின் 'திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ்' பருவத்திற்கு ஒரு பாடல் வீதம் பத்துப் பாடல்களாலானது.

ஐ.  ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம்

நம்பியாண்டார் நம்பியின் 'ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம்' 11 பாடல்களாலானது.  திருஞானசம்பந்தப் பெருமானின் சிறப்பைக் கூறும் இந்நூல், ஒவ்வொரு பாடலின் ஈற்றிலும் 'சண்பையர் காவலன் சம்பந்தனே' என்று அமைந்துள்ளது.

ஒ.  ஆளுடையபிள்ளையார் திருத்தொகை

நம்பியாண்டார் நம்பியின் 'ஆளுடையபிள்ளையார் திருத்தொகை' கலிவெண்பாவாலான 65 அடிகளைக் கொண்டதாகத் திகழ்கின்றது.  திருஞான சம்பந்தரின் வரலாற்றைத் தொகுத்துக் கூறுவதாக இந்நூல் அமைந்துள்ளது.  அதாவது, திருஞானசம்பந்தர் ஞானப்பாலுண்டது முதல் அவர் திருநல்லூர் பெருமணத்தில் சிவசோதியில் கலந்தது வரையுள்ள வரலாற்றுச் செய்திகளை இந்நூல் நிரல்படுத்திக் கூறுகின்றது.

2.  சம்பந்தரைப் போற்றும் நூற்பகுதிகள்

திருஞானசம்பந்தப் பெருமானின் வரலாறு, சிறப்பு, பெருமை, அருளிச் செயல்கள் ஆகியவற்றில் தேர்ந்தெடுத்த சில நிகழ்ச்சிகளை வெளிக்காட்டும் நோக்கில் பல்வேறு நூல்களுக்கிடையே சுட்டிச் செல்லும் நிலையில் பல நூல்கள் எழுந்திருக்கின்றன.  குறிப்பாக, திருத்தொண்டத்தொகை, திருத்தொண்டர் திருவந்தாதி, பெரியபுராணச் சாரம், இருபுராண விருத்தம், திருத்தொண்டர் சதகம், பெரியபுராண சார வெண்பா, பசவ புராணம், திருத்தொண்டர் மாலை போன்ற நூல்களைக் குறிப்பிடலாம்.  சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச்செய்த தேவாரத் திருமுறைகளில் இடம்பெற்றுள்ள 'திருத்தொண்டர் தொகை'யில் திருஞானசம்பந்தரைப் பற்றி,

"வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்
மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்" (பா.3.1-2)

என்ற குறிப்பு காணப்படுகிறது.  நம்பியாண்டார் நம்பி அவர்களின் 'திருத்தொண்டர் திருவந்தாதி'யில் இரண்டு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அவை,

"வையம் மகிழயாம் வாழ அமணர் வலிதொலைய
ஐயன் பிரம புரத்தாற் கம்மென் குதலைச்செவ்வாய்
பைய மிழற்றும் பருவத்துப் பாடப் பருப்பதத்தின்
தையல் அருள்பெற் றனன்என்பர் ஞானசம் பந்தனையே" (பா.33)

"பந்தார் விரலியர் வேள்செங்கட் சோழன் முருகன்நல்ல
சந்தார் அகலத்து நீலநக் கன்பெயர் தான்மொழிந்து
கொந்தார் சடையர் பதிகத்தில் இட்டடி யேன்கொடுத்த
அந்தாதி கொண்ட பிரான்அருட் காழியர் கொற்றவனே" (பா.34)

ஆகியவையாகும்.  உமாபதி சிவாசாரியாரின் 'பெரியபுராணச் சாரம்' ஞானசம்பந்தரைப் பற்றி இரண்டு பாடல்கள் விவரிக்கின்றது.  அவை,

"காழிநகர்ச் சிவபாத விதயர் தந்த கவுணியர்கோன்
அமுதுமையாள் கருதியூட்டும்
ஏழிசையின் அமுதுண்டு தாளம்வாங்கி இலங்கிய
நித்திலச் சிவிகை இசையஏறி
வாழுமுயலகன் அகற்றிப், பந்தர் ஏய்ந்து,வளர்
கிழிபெற்று, அறவின்விடம் மருகல்தீர்த்து,
வீழிநகர்க் காசுஎய்தி, மறைக்கதவம் பிணித்து,
மீனவன் மேனியன் வெப்பு விடுவித்தான்".

"ஆரெரியிட்டு எடுத்த ஏடு அவை முன்னேற்றி
ஆற்றிலிடும் ஏடெதிர்போய் அணைய ஏற்றி
ஓரமணர் ஓழியாமே கழுவில் ஏற்றி, ஓது
திருப்பதிகத்தால் ஓடம் ஏற்றிக்
காருதவும் இடிபுத்தன் தலையில் ஏற்றிக்
காயாத பனையின் முதுகனிகள் ஏற்றி
ஈரமிலா அங்கம் உயிர் எய்த ஏற்றி,
இலங்கு பெருமணத்து அரனை எய்தினாரே"

என்பனவாகும்.  திருத்தொண்டர்களின் வரலாற்றுச் செய்திகளையும் திருவிளையாடற் புராணச் செய்திகளையும் இணைத்து அமைந்ததே 'இருபுராண விருத்தம்' எனம் நூல்.  இதில் திருவிளையாடற் புராணத்தில் இடம்பெற்றிருக்கும் நாகமெய்த படலச் செய்தியையும் திருஞானசம்பந்தரின் பாண்டிநாட்டுச் செய்திகளையும் இணைத்து,

"செஞ்சாலி முத்துதிர்க் கும்பொன்னி நாட்டுளே
சீர்காழி வேதர் குடியிற்
சென்மித் தருந்தமிட் பதிகமு முரைத்தென்பு
திருமினென வரவ ழைத்தே
யஞ்சாத சமணிரு ளறுத்துவெண் பூதியங்
கவனிமுழு தினும்வி ளங்க
வருள்செய்த திருஞான சம்பந்தர் பாதமல
ரகநினைக் கினுமுய் குவே
னஞ்சார புயங்கத்தை யவுணரோ மத்தீ
நலஞ்செய்து வரவ ழைத்து
நகரும்வழு தியுமழிவு செயெனவிட வருமரவை
நாடியம் பாற்று ணிந்து
மஞ்சார களித்தரச னந்தகுண னைக்காத்த
மதுரையா னுதவு புதல்வா
வளைசிந்து தரளங்க ளுயர்சந்த வரையின்கண்
வளர்செந்தில் வடிவே லனே" (பா.28)

எனும் பாடல் அமைந்துள்ளது.  திருப்பாண்டிக் கொடுமுடி மலைக்கொழுந்து நாவலரின் 'திருத்தொண்டர் சதகம்' எனும் நூலில் சம்பந்தர் குறித்து ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது.

"சிரபுரம் தனின்மறைச் சிவபாத இதையர்தம்
தேவிபக வதியார் அருட்
செல்வர்கவு ணியர்நீல வல்லிஅமு துண்டுபண்
சேர்ந்துநல் தாளம் ஏந்தித்
தரளநிரை சேர்சிவிகை ஏறிமுய லகன்நோய்
தவிர்த்துஇனிய பந்தல் மேவி
தக்ககிழி பெற்றிசையின் யாழ்முறித்து ஆலம்
தவிர்த்துஎழில் கதவு மூடிப்
புரவலன் சுரம்விடுத்து அமணர்நிலை போக்கிஇடி
புத்தனார் தலையில் ஏற்றிப்
பூவாத பெண்ணைகனி காய்த்துஅங்கம் மங்கையாய்ப்
புகழ்நம்பி ஆண்டார் தரும்
மருமலர்க் குழலிடின் திருமணம் செய்திடமுன்
வந்தடிமை கொண்ட கயிலை
வாசனே இராசலிங் கேசனே சிவதைநகர்
மாணிக்க மலை நாதனே" (பா.39)

என்பதே அப்பாடல்.  வல்லி.ப. தெய்வநாயக முதலியாரின் 'பெரியபுராண சார வெண்பா' எனும் நூலில் சம்பந்ததைப் பற்றி இரண்டு பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

"காழிக் கவுணியர்கோன் கௌரிமுலைப் பாலருந்தி
வாழுநித்தி லச்சிவிகை வண்பந்தர் - ஏழிசைக்காம்
தாளம் கிழிகாசு தான்கொடும றைக்கதவின்
தாளடைத்தார் சம்பந்தர் தான்" (பா,35)

"விடமுயல கன்மன்னோய் வெப்பகற்றிப் புத்தன்
படப்பனை பெண்ணாகப் பாடிச் - சுடுகனனீர்
ஏடிட்டெ டுத்தமண்டீர்த் தென்பணங்காக் கண்டொருங்கு
வீடுமண நாளிலுற்றார் மெய்" (பா.36)

என்பவையாகும்.  பசவபுராணத்துள் இடம்பெற்றுள்ள சுந்தரப் பெருமாணாயனார் புராணத்துள் திருஞானசம்பந்தரைப் பற்றி ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது.  அப்பாடல்,

"மண்ட ழைக்கச் சமணர் வலிகெட
வந்து செந்தமிழ் பாட உமைமுலைக்
கண்ட ரும்பயம் உண்டு புகலிமுக்
கண்ண னைத்துதத் தங்கம்பெண் ணாகவும்
பண்டு நீங்கு கதவம் அடைக்கவும்
பாலை நெய்தலாய்ப் பாம்ப திறக்கவும்
மிண்டு புத்தர் கெடஇடி வீழவும்
மிக்கபாச் செய்த சம்பந்தர்க் கடியேன்" (பா.17)

என்பதாகும்.  குமாரபாரதியின் 'திருத்தொண்டர் மாலை'யில் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன.  அவை, 
"பண்ணார் பசுந்தமிழ்ச்  'சம்பந்தனா' ரதிர வந்தமணர்
எண்ணாயிரங் கழுவிலேறினார் - ஒண்ணாது,
'வில்லே ருழவர் பகைகொளினுங் கொள்ளற்க
சொல்லே ருழவர் பகை" (பா.37)

"முத்தமிழ் ஞானத்தலைவர் முன்னம் பழகைசாரி
புத்தனெதிர் நின்றிடியிற் பொன்றினான் - இத்திறமென்
'கூற்றத்தைக் கையால் விளித்தற்றால், ஆற்றுவார்க்
காற்றா தாரின் செயல்" (பா.38)

"எறியவோடக் கோலிசை ஞானி செந்தமிழால்
ஆறுகடந்தார் தோணியார் மதனர் - வீறடங்கா
'வௌ¢ளத் தனைய மலர்நீட்ட மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு" (பா.39)

"கணவனெனக் காதலியைக் 'காழியூரர்' கைப்பற்றி
மணவறையி ல¦சன் கழலாய் வாழ்ந்தார் - குணமே,
'தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்" (பா.40)

போன்ற பாடல்களாகும்.  இப்பாடல்களில் முதல் இரண்டடி திருஞானசம்பந்தரின் சிறப்பினையும் பின்னிரண்டடி அதற்குத் தக்க திருக்குறளையும் இணைத்து அமையப்பெற்று இருப்பதைக் காணமுடிகிறது.

திருஞானசம்பந்தரைப் பற்றிய தனிநூல்களையும், நூற் பகுதிக்குள் இடம்பெற்றுள்ளதையும் பார்க்கும்போது, சம்பந்தப் பெருமான் மீது மக்கள் கொண்டிருந்த ஈடுபாட்டையும், அவரின் அருளிச் செயல்களின் மீது கொண்டிருந்த நம்பிக்கையையும் இது காட்டுகின்றது என்றால் அது மிகையாகாது.



ஆய்வுக்குப் பயன்பட்ட நூல்கள்

  1. இருபுராண விருத்தம், இ. சுந்தரமூர்த்தி(பதி.), சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, 1984-85
  2. சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம், காசி மடம், திருப்பனந்தாள், 5ம் பதிப்பு, 1987
  3. திருஞானசம்பந்த சுவாமிகள் ஆனந்தக்களிப்பு, மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை(ஆசி.), தி.சு. கோவிந்தசாமிப் பிள்ளை (பதி.), மெய்கண்டார் -  திங்களிதழ், திருவாவடுதுறையாதீனம், 9.6.1911, பக்.17-22
  4. திருஞானசம்பந்த சுவாமிகள் திருத்தாலாட்டு, ப.அ. முத்துத் தாண்டவராய பிள்ளை (பதி.), செந்தமிழ்ச் செல்வி - திங்களிதழ், கழக வெளியீடு, 8.1.1930, பக்.55-57
  5. திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ், துறைசை மாசிலாமணிதேசிக சுவாமிகள் (ஆசி.), திருவாவடுதுறை ஆதீன வெளியீடு, திருவாவடுதுறை, 1953
  6. திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ், கூனம்பட்டி மாணிக்கவாசக ஞானதேசிக சுவாமிகள் (ஆசி.), ந.ரா. முருகவேள் (பதி.), திருக்கோயில் - திங்களிதழ், தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறை வெளியீடு, சென்னை, 7.1.1964 -7.12.1965
  7. திருத்தொண்டர் சதகம், அன்னபூர்ணா பதிப்பகம், திருப்பனந்தாள், 1987
  8. திருத்தொண்டர் மாலை, குமாரபாரதி(ஆசி.), ந. வேங்கடாசாரியன்(பதி.), அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகப் பருவஇதழ், சென்னை, 3.1.1950, பக்.37-52
  9. திருவருட்செல்வரின் சரிதமும் கற்பனையும்-திருஞானசம்பந் மூர்த்தி நாயனார் புராணம், அன்பக வெளியீடு, அம்பாசமுத்திரம், 1988
  10. நால்வர் பிள்ளைத்தமிழ், சித்தாந்தம் - திங்களிதழ் அனுபந்தம், சனவரி 1948
  11. நால்வர் பிள்ளைத்தமிழ் நான்கு (திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ்), ராம.சொ. சொக்கலிங்கச் செட்டியார் (ஆசி.), ராம.மெ. ஞானசம்பந்த செட்டியார் (பதி.), சிதம்பரம் ஸ்ரீகுஞ்சிதசரணம் பிரஸ், 1912
  12. பதினோராம் திருமுறை, காசி மடம், திருப்பனந்தாள், 3ம் பதிப்பு, 1991.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக