புதன், 12 செப்டம்பர், 2018

குறள் கூறும் குற்றங்கள்

சமுதாயத்தில் வாழ்கின்ற மக்கள் தம் சமுதாய வாழ்க்கையிலும் தனிமனித வாழ்க்கையிலும் பல குற்றங்களைச் செய்ய நேரிடுகின்றது.  சமுதாய மேம்பாட்டுச் சிந்தனைகளை வெளிப்படுத்தும் திருவள்ளுவர் தம்முடைய திருக்குறளில்  மக்கள் எவ்வெவ் குற்றங்களைச் செய்ய நேரிடுகின்றது என்றும், அவற்றால் எவ்வெவ்வற்றை இழக்க நேரிடுகின்றது என்றும் கூறுகின்றார்.  இதன் மூலம் சமுதாய மேம்பாட்டுக்கும் தனிமனித மேம்பாட்டுக்கும் வழி செய்கின்றார்.  

   அளவறியாது ஈதல், அறிவின்மை, அன்பின்மை, இறைவனை வணங்காமை, ஈயாமை, ஊக்கமின்மை, ஊன் உண்ணல், ஒழுக்கமின்மை, கல்லாமை, களவு செய்தல், கள்ளுண்ணல், காமத்தில் மயங்கல், கேள்விச் செல்வமின்மை, கொலைத்தொழில் செய்தல், சினம் கொள்ளல், சூதாடல், சோம்பல் கொள்ளல், தீச்சொல் கூறல், தீயன செய்தல், நடுவுநிலைமை தவறுதல், நல்ல நட்பை இகழ்தல், நல்லாரைத் துணைக்கோடாமை, நற்பண்புகளைக் காக்காமை, நன்றி மறத்தல், நாணமின்மை, பகுத்துக் கொடுக்காத செல்வம், பயனில் கூறல், பிறரை வருத்திச் செல்வம் தேடல், பிறர் பொருளைக் கவர நினைத்தல், பொருளல்லவற்றைப் பொருள் என்று உணர்தல், பொறாமைப்படல், மக்கட் பண்பு இல்லாமை, மறதியுடைமை, விருந்தோம்பாமை, விலைமகளிர் தொடர்பு, வினைசெய்து முடித்தற்குரிய இடத்தினை அறியாமை, வெறுப்பை வளர்க்கும் தீய எண்ணம் கொள்ளல் போன்ற குற்றங்களைக் கூறுகின்றார்.  இவ்வெல்லாக் குற்றங்கள் பற்றிக் காண்போம்.

1. அளவறியாது ஈதல்

ஒருவன் தன்னிடமுள்ள வலியை அறிந்து கொள்ளாமல் அளவறியாது ஈவானாயின், அதனால் தீமையே விளையும்.  பொருள் வருகின்ற வழி சிறிதாக இருந்தாலும் கேடில்லை.  ஆனால், பொருள் போகின்ற வழி அதைவிடப் பெரிதாக இருந்துவிடக் கூடாது.

"வளவனாயினும் அளவறிந்தளித் துண்" (கொன்றைவேந்தன், 81)

என்கிறது கொன்றைவேந்தன்.  வள்ளுவமும் எவ்வளவு செல்வம் இருந்தாலும் ஈயும் நெறியால் தமக்குள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கேற்ப ஈதலே, பொருளைப் பேணிக் கொண்டொழுகும் நெறியாகும் என்கிறது.  மேலும் அளவறியா ஈதலால் ஒருவன் பொருட் செல்வத்தை விரைவில் இழக்க நேரிடும் என்றும் எச்சரிக்கின்றது.

"உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்" (குறள்., 480)

"அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்பது போல ஒப்புரவேயாயினும் அளவறிந்து கொடுக்காததால் செல்வத்தின் எல்லை குன்றி விரைவில் செல்வத்தை இழந்து வருந்த வேண்டி வரும் என்கிறது வள்ளுவம்.

2. அறிவின்மை

அறிவு என்பது கற்றலால் மட்டுமே வருவதன்று.  கற்றதை உள்ளவாறு உணர்ந்து அதன் படி நடத்தலே சிறந்த உண்மையான அறிவாகும்.  இதனாலேயே வள்ளுவர்,

"கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்கு தக" (குறள்., 391)

என்று கூறுகின்றார்.  அறிவே ஒருவனுக்கு இறுதி வரைக்கும் அழிவு வராமல் தடுக்கும் கருவியாகும்.  பாதுகாக்கும் அரணாகும்.  மனத்தைப் போன போக்கெல்லாம் போக விடாமல் தீமையை நீக்கி நல்வழிப்படுத்துவது அறிவு.  யார் எதைச் சொன்னாலும் அதனைத் தீர ஆராய்ந்து உணர வல்லது அறிவு.  இந்த அறிவைப் பெறாதவர் நிலையை வள்ளுவர்,

"அறிவுடையாரி ஆவது அறிவார் அறிவிலார்
அஃதுஅறி கல்லா தவர்" (குறள்., 427)

என்கிறார்.  அறிவின்மையால் ஒருவன் தனக்கு வரப்போகின்றதை அறியாதவனாக இருப்பதால் அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாமையாகிய பேதமைத் தன்மை அதிகரித்து அல்லல் உறுவான் என்று கூறுகின்றார்.

இதிலிருந்து அறிவில்லாதவன் தனக்கு வரக்கூடிய இன்னலை முன்பே அறிந்து கொள்ளும் திறனில்லாததால் அதிலிருந்து தப்பக் கூடிய நிலையினை இழக்க நேர்கின்றது என்பதை அறியலாம்.

3. அன்பின்மை

அன்பு என்பது வாழும் உயிர்களுக்குப் பொதுவான ஒன்றாகும்.  இது இயற்கையான உணர்வுகளில் ஒன்று. அதனால்தான் மனிதப் பிறவி விழுமியது என்று ஆன்றோரால் போற்றப்படுகிறது.  நட்புப் பாராட்டுதல், இல்லறத்தில் சிறத்தல் உயிர்களிடம் இரக்கம் கொள்ளுதல், நாட்டில் ஒற்றுமையை நிலவச் செய்தல் இத்தகைய பண்புகள் மூலம், மனித உலகத்தை இணைத்து வாழச் செய்யும் அற்புதச் சக்தி அன்பிற்கே உண்டு.  உலகத்தின் குற்றங் குறைகளைக் கொடுமைகளை அகற்றித் தூய்மை செய்யும் ஆற்றல் அன்பிற்கே உண்டு.

மண்ணில் மனித குலம் தழைக்க அன்பின் ஊற்று தடையின்றிப் பெருக்கெடுத்து ஓட வேண்டும்.  இன்று தடையிலா அன்பு இந்த உலகத்திற்குத் தேவை.  இத்தகைய உயரிய அன்பியலை வாழ்வியலின் உயிர்நிலையாகக் காட்டுகிறது வள்ளுவம்.

"அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு" (குறள்., 80)

எவ்வளவு கடுமையாக அன்பின்மையை வள்ளுவம் விமர்சிக்கிறது.  ஒருவர்க்கு உயிர் இருக்கிறதா, இல்லையா என்பதை அவர் சுவாசிப்பதிலிருந்துதான் நாம் தீர்மானிப்போம்.  ஆனால் அவன் வாழ்வில் அன்பின் விளக்கம் இருந்தால்தான் அவனுக்கு உயிர் உண்டு.  இல்லையானால் உயிரற்ற உடம்பே என்று வள்ளுவம் தீர்மானிக்கிறது.

இத்தகைய அன்பை நாடாதவனால் குற்றங்கள் அதிகரித்துச் சமுதாயம் பாழ்படும்.  இந்நிலையினைத் தடுக்கவே வள்ளுவம்,

"என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்" (குறள்.,77)

என்ற குறளில் காட்டுகிறது.  எலும்பில்லா உயிரை வெயில் வருத்துவது போல அன்பில்லாத உயிரை அறக்கடவுள் தண்டிக்கும் என்று கூறுகின்றது.

இதிலிருந்து ஒருவன் அன்பின்மையால் தனி மனித வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நல்லறத்தினையும், சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய அறத்தினையும் செய்யாமல் அவற்றால் விளையக் கூடிய பயனை இழப்பதோடு, அறவழியிலிருந்து பிறழ்ந்ததால் அறக்கடவுளால் தண்டிக்கப்படும் நிலைக்கும் ஆளாவான் என்று வள்ளுவம் எச்சரிக்கின்றது.

4. இறைவனை வணங்காமை

பிறவித் துன்பத்திற்குக் காரணமாகிய காம, வெகுளி, மயக்கங்களைப் போக்கி, பேரின்ப அருள் அளிக்க வல்லது இறைவன் திருவடியாகும்.  அதனைச் சேராதவர்கள் பிறவித் துன்பத்திலிருந்து மீள முடியாமல் இன்னலுறுவர்.  இதனையே வள்ளுவர்,

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார்
இறைவன் அடிசேரா தார்" (குறள்.,10)

என்ற குறள் மூலம் காட்டுகிறார்.  இறைவன் அடியைச் சேர்ந்தவரே பிறவியாகிய பெருங்கடலைக் கடப்பர் என்றும், இறைவனை வணங்காமையாகிய குற்றத்தைப் புரிந்தோர் அதனைக் கடக்க முடியாமல் காம, வெகுளி மயக்கங்களில் அழுந்தி வருந்துவர் என்றும் எச்சரிக்கின்றார்.

5. ஈயாமை

'செல்வத்துப் பயனே ஈதல்' என்பது நம் நாட்டில் பண்டு தொட்டே வந்த ஒரு அறநெறிக் கொள்கை.  ஈட்டியானுக்கும் பிறருக்கும் பயன்படாத செல்வம் 'நன்றியில் செல்வம்' என ஒதுக்கப்பெறுகிறது.  சமுதாய நலங்களுக்குச் செலவழிக்கப் பெறாமல் ஒரு நாட்டில் செல்வம் குவிந்து கிடந்தாலும், அதனால் அவனுக்கோ சமுதாயத்துக்கோ, யாதொரு பயனுமில்லை. தீமையே விளையும்.  இதனைத் தடுக்கவே வள்ளுவர்,

"எச்சமென்றுஎன் எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவர்" (குறள்., 1004)

என்ற குறளில் அறிவுரை கூறுகின்றார்.  பிறருக்கு உதவி செய்தால் தான்  உலகில் அன்பை வளர்க்கலாம்.  அதனால் புகழ் தானே வந்தெய்தும்.  மக்களாய்ப் பிறந்த ஒவ்வொருவரும், தாம் இவ்வுலகை விட்டு நீங்கும் போது நிலைத்த புகழை விட்டு வைத்துச் செல்ல வேண்டும்.  ஆனால், பிறருக்கு ஈயாத செல்வமுடையவன், அன்பையும் சுற்றத்தையும் வளர்க்கவில்லை.  ஆதலால் இறுதிக் காலத்தில் எச்சம் என்று எண்ணுவதற்கு ஒன்றுமில்லாமல் போகும் என்று எச்சரிக்கின்றார்.

6. ஊக்கமின்மை

ஊக்கமுடைமையே வெற்றிக் கதவைத் திறந்து வைக்கும் திறவு கோலாகும்.  பொய்கை நீரின் ஆழத்திற்கு ஏற்றவாறு நீர்ப்பூக்களின் தாள்கள் நீள்வது போல, மக்களுடைய உள்ளத்தின் ஊக்கத்திற்கு ஏற்றவாறு அவர்களுடைய வாழ்க்கையும் உயரும்.  எனவே தான் வள்ளுவர்,

"உடையர் எனப்படுவது ஊக்கம்அஃது இல்லார்
உடையது உடையரோ மற்று" (குறள்., 591)

என்கிறார்.  ஊக்கம் உடையவரையே உடையவர் என்று சொல்லலாம்.  அவ்வூக்கமுடைமை இல்லாதாரை, அவர்க்கு முன்னோர் தேடி வைத்த பொருளை அவர்கள் பெற்றிருந்தாலும் ஊக்கமில்லாமையால் உறுதியாகக் காக்க இயலாது.

ஊக்கம் உடைமையே நிலையான உடைமை.  அது மனத்துள் நீங்காது நிற்கும் செல்வம் ஆகும்.  ஆனால் பொருளோ நில்லாது நீங்கிவிடும்.  ஆதலால், அது உடைமை ஆகாது.  ஊக்கத்தை, நிலைத்த செல்வமாக உடையவர்கள் தாம் பெற்றிருந்த பொருட் செல்வமெல்லாம் இழந்தாலும் இழந்து விட்டோமே, என்று அலமந்து வருந்த மாட்டார்கள்.  ஆனால் ஊக்கமில்லாதவன் தன்னிடமுள்ள செல்வத்தையும் ஊக்கமின்மையால் இழந்து வருந்துவான்.

இதனையே கொன்றைவேந்தனும்,
"ஊக்கமுடைமை ஆக்கத்திற் கழகு" (கொன்றைவேந்தன், 86)

என்று எடுத்துரைக்கின்றது.  'குந்தியிருந்து உண்டால் குன்றும் கரையும்' என்பது பழமொழி.

7. ஊன் உண்ணல்

ஒருவன் தன் உடம்பை வளத்தற் பொருட்டு, பிறிதொரு உயிரின் உடம்பைத் தின்கின்றான்.  ஊன் உண்பதன் பொருட்டே பல விலங்குகள் கொல்லப்படுகின்றன.  ஊன் உண்ணாமையால் அவை காக்கப்படும்.  உயிர்வாழும்.  ஆகவே ஊன் உண்ணாதவனை எல்லா உயிர்களும் கைகூப்பித் தொழும்.  ஊன் உண்பவர்கள் அன்பையும், அருளையும் இழந்து கொடியவராகின்றனர் என்று கருதிய வள்ளுவர்,

"நன்றூக்காது ஒன்றன் உடல்சுவை உண்டார் மனம்" (குறள்., 253)

என்று கூறுகின்றார்.

'கொன்றால் பாவம் தின்றால் போச்சு' என்ற பழமொழி உயிரைக் கொல்பவன் மேல் கொலைப்பாவம் நிற்றலின், பின் அதனை உண்பார்க்குப் பாவமில்லை என்கிறது.  வள்ளுவரோ,

"உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு" (குறள்., 255)

என்கிறார்.

ஒருவன் உடம்பில் உயிர் நிலைத்திருப்பதற்கு அடையாளம் அவன் செய்கின்ற அறமாகிய ஊனுண்ணாமையே.  அவ்வாறின்றி ஊன் உண்டால் அக்குற்றத்தினின்று நீங்காமல் உயிர்களின் தூற்றலுக்கும் ஆளாகி,  நரகில் விழுவான் என்று அறிவுறுத்துகிறார்.

8. ஒழுக்கமின்மை

மனித வாழ்க்கையை முறையாக வளப்படுத்தி வளர்ப்பது ஒழுக்கம்.  ஒழுக்கம் என்பது மருந்துமன்று; பத்தியமுமன்று.  ஒழுக்கம் வாழ்வாங்கு வாழும் பாங்குடையவர்க்கு எளிதாக இனிதாக அமைவதேயாகும்.  மனிதன் பெற்றுக்கொண்ட, வளர்த்துக் கொண்ட அறிவு, ஆள்வினை ஆற்றல், அன்பு முதலியன சிதறிச் சிறு நெறிகளில் சென்று வீணாகாமல் தடுத்து நிறுத்தி அவனை அகநிலையில் வளர்த்துப் புறநிலையில் உயர்த்திச் சிறப்பிப்பது ஒழுக்கமேயாகும்.  இத்தகைய ஒழுக்கத்தை வள்ளுவர் உயிரினும் சிறந்ததெனக் கூறுகின்றார்.  இதனையே,

"ஓதலின் சிறந்தன்று ஒழுக்க முடைமை" (முதுமொழி, சிறந்தபத்து : 1)

என்று முதுமொழிக் காஞ்சியும், உயிரைத் தேயாது காப்பது ஒழுக்கமே என்று சீவக சிந்தாமணியும் எடுத்துரைக்கின்றது.

ஒழுக்கத்தின் தன்மையை அறிந்து வாழாதவர் அறிவிலார்.  அவர்கள் உள்ளத்துக் கோடியினும் பல எண்ணங்கள் வீணான எண்ணங்கள் இப்படி வாழ்வதிலும் உயிரினும் சிறந்த ஒழுக்கத்துடன் வாழ்தலே உயர்ந்தது என்கிறார் வள்ளுவர்.  ஒருவனுக்கு வாழ்வில் புகழையும், உயர்வையும் ஏற்படுத்தித் தருவது ஒழுக்கமே.  இத்தகைய ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்காதவன் வாழ்வில் உயர்வடையமாட்டான்

"அழுக்காறு உடையார்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு" (குறள்., 135)

என்று வள்ளுவர் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்காத குற்றத்தால் ஒருவனுக்கு வாழ்வில் உயர்வில்லை என்று சுட்டிக் காட்டி நெறிப்படுத்துகிறார்.

9. கல்லாமை

உலக வாழ்வின் மக்களாய்ப் பிறந்தோருக்கும் பிற உயிரினங் களுக்குமுள்ள வேற்றுமையை மக்களுக்கு இருக்கும் அறிவினாலும் அது பிற உயிரினங்களுக்கு இல்லாமை யாலும் கண்டு கொள்ள முடியும்.  இயற்கையாகவே அமைந்துள்ள அறிவொடு நூற்கல்வி, கேள்வி வாயிலாகப் பெறும் செயற்கை அறிவும் சேர்ந்து மக்கள் வாழ்க்கை சிறப்பது போல, கல்லாதவன் வாழ்க்கை சிறக்காது. கல்லாமை இருளில் கிடந்துழலும் குடிமக்கள் நிறைந்த நாடு முன்னேற்றம் இல்லாத நாடாகும்.  எனவேதான் ஒரு நாட்டு அரசுக்குத் தலைவனாகிய அரசனுக்கு, கல்வி, கேள்வி, அறிவுடைமை இன்றி அமையாதவைகளாக வகுத்த வள்ளுவர், முதியர், இளைஞர், ஆண், பெண் அனைவருக்குமே அவை வேண்டுமென்று கருதி,

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப, இவ்விரண்டும்
கண்ணென்ப வாழு முயிர்க்கு" (குறள்., 392)

என்று கல்வியின் அவசியத்தை வற்புறுத்தினார்.

"கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே" (வெற்றிவேற்கை : 35)

"கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி" (கொன்றைவேந்தன், 22)

என்று கல்வியின் தேவையைப் பிற நீதிநூல்களும் எடுத்துரைக்கின்றன.

கல்வி வேண்டுமென்பது மட்டும் போதாது.  கல்லாவிட்டால், கல்லாமை நிலவினால், நாட்டு மக்களின் நிலையும், நாட்டின் நிலையும் என்னாகும் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

கல்லாதவர்களுக்கு அறிவு சிறவாதாதலால் அவர்கள் கற்றறிந்தார் அவையின் கண் ஒன்றையும் எடுத்துச் சொல்ல இயலாது விழிப்பார்கள்.  அவ்வாறு எடுத்துச் சொல்ல விரும்பினாலும் அது பெண் தன்மை அற்ற அலிகள் காதல் வேட்கை கொள்வது போல் பயன் இல்லாமல் போகும்.  கல்லாதவர்கள் உயிரோடு உள்ளார்கள் என்ற அளவிலே யன்றி, விளைபொருள் தராத களர் நிலம் போன்று தனக்கும், சமுதாயத்திற்கும் பயனற்றவர்கள் என்றும், கல்வியால் நுட்பமாக ஆராய்ந்து தெளியும் பகுத்தறிவின் மாண்பு அற்றவர்கள் அழகாகத் தோன்றினாலும் உயிரற்ற மரப்பாவை போன்றவர்கள் என்றும் கல்லா¬மையின் பயனின்மையைக் கூறும் வள்ளுவர்,

"மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்துஇலர் பாடு" (குறள்., 409)

என்கிறார்.  கல்லாதார் உயர்ந்த குலத்தில் பிறந்திருந்தாலும் தாழ்ந்த குலத்தில் பிறந்த கற்றாரின் பெருமைகளைப் பெற இயலாது என்று கல்லாமையால் ஏற்படும் இழப்பினைச் சுட்டிக்காட்டுகின்றார்.  இதனையே நாலடியாரும்,

"கடைநிலத்தோ ராயினும் கற்றுணர்ந் தோரைத்
தலைநிலத்து வைக்கப் படும்" (நாலடி., 133)

என்கின்றது.  கற்றவர் என்ற பெருமை சமுதாய, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு அப்பாற்பட்டது.  கல்லாதவனிடம் என்ன தான் அறிவு, அழகு, செல்வம் இருந்தாலும் அவற்றால் எந்தவொரு பயனும், பெருமையும் இல்லை.

10. களவு செய்தல்

உயிரைப் பேணிக்காப்பதற்கு அறத்தை நாடுவதே சிறந்த வழியாகும். அழியும் உடம்பைக் காத்தற் பொருட்டுப் பொருளை விரும்பி, அதைப் பிறரிடமிருந்து வஞ்சித்துக் கொள்ளக் கருதுதல் இழுக்கினையே தரும்.  களவினால் வருகின்ற பொருள் வளர்வது போலத் தோன்றினாலும், விரைவில் அழிந்து விடும்.  மேலும் முயற்சியும், உழைப்பும் இன்றி வந்த பொருளாதலால் மனநிறைவும் இருக்காது.  இத்தகைய களவைத் தொழிலாகக் கொண்டவர்கள் தினம் தினம் செத்து மடிவர்.  மனத்தாலும் செயலாலும் களவு தவிர்த்து வாழ்கின்றவர்களே புகழடைவர்.

"கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு" (குறள்., 290)

என்பதிலிருந்து களவு செய்பவன் எல்லோராலும் இகழப்படுவதோடு, சேர்த்து வைத்த செல்வத்தையும் விரைவிலேயே இழந்து, மனநிறைவு இன்றி, வீடு பேற்றை அடையும் தகுதியையும் இழந்து அல்லல் உறுவான் என்கிறது வள்ளுவம்.

11. கள்ளுண்ணல்

கள்ளுண்ணல் சமுதாய வாழ்வில் மட்டுமின்றி இல்லற வாழ்விலும் கேடு விளைவிக்கும்.  கள்ளுண்பவனைக் கண்டு சான்றோர் விலகிச் செல்வர்.  கள்ளுண்பவன் மகனாக இருந்தாலும் தாயும் ஏற்றுக்கொள்ள மாட்டார்.  அறிவைக் கெடுக்கும் கள்ளை உண்பவர்களுக்குச் சமுதாயத்தில் எந்த ஒரு மதிப்பும் இல்லை.  வள்ளுவர் 'கள்ளுண்பவரை நஞ்சுண்பவர்' என்கிறார்.  மேலும், கள்ளுண்ணலால் ஏற்படும் இழப்பை,

"உட்கப் படாஅர் ஒளிஇழப்பர் எஞ்ஞான்றும்
கள்காதல் கொண்டு ஒழுகுவார்" (குறள்., 921)

என்கிறார்.  கள்ளின் மேல் தீராத வேட்கை கொண்டு அறிவு கெட்டுத் திரிபவர்கள் தம் புகழை இழப்பதோடு, சமுதாயத்தில் மதிப்பற்ற நாணமுடைய வாழ்க்கையே வாழ வேண்டிவரும் என்று எடுத்துரைக்கின்றார்.

12. காமத்தில் மயங்கல்

காமம் மனிதனுடைய ஆக்கத்தைச் சிதைப்பதோடு அழிவையும் தேடித் தருகின்றது.  இல்வாழ்க்கையில் இருந்து கொண்டே, பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர் ஒரு சில நேரம் தம் பொதுக் கடமைகளை மறந்து, தம் குடும்பத்தின் நல்த்தில் மட்டும் நாட்டத்தைச் செலுத்தி, அதுவும் அவர் மனைவிமாரின் தன்னலம் மட்டும் கருதி, அதனால் இழுக்கப்பட்டு விடுகின்றனர்.  அம்மனைவிமாரும் இத்தவற்றை உணர்வதில்லை.  கணவன் மாரின் பெரும் பதவியைப் பயன்படுத்திக் கொண்டு, வீடு வாசல், நிலபுலம், ஆடை அணிகலன் முதலிய பொருட் செல்வத்தைத் திரட்டிக் கொள்ள விரும்புவதால் இன்று அரசியல் அலுவலர்களில் சில இதற்கடிமையாகி நடுவுநிலை பிறழ்ந்து கையூட்டுக் கொடுமைக்கு ஆளாகி விடுகின்றனர்.

பெண்வழி ஒழுகுதல் பற்றி வள்ளுவர்,

"இமையாரின் வாழினும் பாடுஇலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர்" (குறள்., 906)

என்ற குறளில் மேட்டுக் குடி மக்களாக இன்பத்தின் உச்சியில் வாழ்ந்தாலும், மனைவியின் அழகிய தோள்களில் மயங்கி அஞ்சுபவர்கள் பெருமையுடனும் புகழுடனும் வாழ இயலாது.  பெண்வழி ஒழுகும் குற்றத்தால் வீரர் தோள்களை வென்ற ஆண்மையாளனாயினும் பிறர் மத்தியில் நாணமுற்று நிற்க வேண்டிய நிலையையே அடைவான்.  இதனால் அவன் பெருமை யையும், புகழையும் இழக்கின்றான் என்று சுட்டுகின்றார்.

13. கேள்விச் செல்வமின்மை

கற்று அறிய வேண்டிய நூல்களைக் கற்றார் கூறக் கேட்டலே செவிக்குணவாகும்.  இக்கேள்விச் செல்வமே எல்லாச் செல்வத்தையும் விட எல்லாம் மேலான செல்வமாகும்.  கல்வி கற்றலைவிடக் கற்றார் சொல் கேட்டல் நன்று என்று நீதி நூல்கள் எடுத்துரைக்கின்றன.

"மேன்மக்கள் சொல் கேள்" (ஆத்தி., 94)

"முற்றப் பகலும் முனியா தினிதோதிக்
கற்றலின் கேட்டலே நன்று" (பழமொழி., 143)

என்று கேள்விச் செல்வத்தின் சிறப்பை ஆத்திச்சூடியும், பழமொழி நானூறும் வலியுறுத்துகின்றன.  வள்ளுவரும் 'செவிக்கும் சிந்தைக்கும் உணவில்லாத போது மட்டும் வாய்க்கும் வயிற்றுக்கும் தருக' என்று கூறுவது, தமிழர்  இச்செவியுணவை எவ்வளவு போற்றிப் பெருமைப் படுத்தியுள்ளனர் என்பதைத் தெற்றெனக் காட்டும்.

கற்றறிந்த ஆன்றோர் உரைகளைச் செவி வழியாகக் கேட்டு மனத்தில் நுழைத்துக் கொள்ளாதவர்களுக்கு மற்ற ஒலிகளை உணரும் செவிகள் இருந்தாலும் அவை,  செவிட்டுத் தன்மையை உடையதாகவே கொள்ளப்படும் என வள்ளுவர் கூறுகிறார்.  கேள்வி அறிவு இல்லாதவன் செவியினால் உண்டாகக் கூடிய பயனை இழக்கின்றான் என்கின்றான்.  மேலும் பலவற்றை நுட்பமாகக் கேட்டு, தெளிவாக அறியாதவர்கள், பலர் முன்பு பணிவான சொல் வல்லராகப் பண்பு பெறல் இயலாது என்றும் கூறுகின்றார்.  இறுதியாகக் கேள்வியறிவில்லாதவரின் இழிநிலையை,

"செவியின் சுவைஉயரா வாய்உணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்" (குறள்., 420)

என்று காட்டுகின்றார்.  கேள்வியின் இன்பத்தைச் செவி வழியாக, மனத்தால் சுவைக்க இயலாதவர்கள், வாயின் சுவையான உணவிற்கே வாழ்பவர்கள்.  அவர்கள் இருந்தாலும், கெட்டழிந்தாலும் ஒன்றே என்று அலுத்துக் கொள்கின்றார்.  இதிலிருந்து கேள்வி இன்மையால் ஒருவன் செவியின் பயனை இழப்பதோடு, இறந்தவர்க்குச் சமானமாக நடைப்பிணமாகவே மதிக்கப்படுவான் என்றும் குறிப்பிடுகின்றார்.

14. கொலைத்தொழில் செய்தல்

உயிர்களைக் காத்தலே அறநூல்கள் தொகுத்துக் கூறிய அறங்கள் பலவற்றிலும் தலையாய அறம்.   வள்ளுவரும் உள்ளவற்றைப் பகுத்துண்டு பல்லுயிர்களையும் காக்கும் அறமே தலையாயது என்று தெளிவுபடுத்து கின்றார்.  உயிரைக் கொல்லுவது பாவச் செயல் அனைத்தையும் தருவதாகும்.  தாயுமான அடிகளும்,

"கொல்லா விரதம் ஒன்று கொண்டவரே நல்லோர் மற்(று)
அல்லாதார் யாரோ? அறியேன் பராபரமே"

                                                     (தாயுமானவர் பாடல்கள், பராபரக்கண்ணி, 192)

என்று கொல்லாமையை நோன்பாகக் காட்டுகின்றார்.  வள்ளலாரும்,

"உயிர் கொலையும் புலைப் பொசிப்பும்
உடையவர்கள் எல்லாம்
உறவினத்தார் அல்லர் அவர்
புற இனத்தார்" (திருவருட்பா, 4160 : அருள்விளக்கமாலை, 71)

என்று உலக மக்களைப் புலை கொலையுடையவர்கள் புறவினத்தார் என்றும், புலால் மறுத்தலும் கொல்லாமையுமாகிய நோன்புகளை உடையவரே அகவினத்தார் என்றும் பிரிக்கின்றார்.  வள்ளுவரும்,
"கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவார் அகத்து" (குறள்., 329)
என்று கூறுகின்றார்.  கொலை வினையராகிய மாக்கள் புலைவினையர் ஆகிய இரண்டு குணங்களையும் இணைத்துப் பகுத்தறிவை இழந்து, விலங்குகளைப் போலக் கொலைத்தொழில் செய்பவர்கள் இழிவான வாழ்க்கையே வாழ்கிறார்கள் என்று எடுத்துக்காட்டுகின்றார்.

இதிலிருந்து அறம் வழுவிக் கொலைத்தொழில் செய்தலால் நலமான பேரின்ப வாழ்வை இழக்க நேரிடுகிறது என்று சுட்டுகின்றார் வள்ளுவர்.

15. சினம் கொள்ளல்

'ஆறுவது சினம்' என்பது ஔவைப் பாட்டியின் வாக்கு.  சிறிதளவு உண்டாகும் மனவெப்பமே சினம் என்பது.  சிறிய மனவெப்பமே பெரும் தீமைகளை விளைவிக்கின்றது.  சினம் என்பது ஒரு நெருப்பு; சேர்ந்துள்ள இடத்தையே அழிக்கும் நெருப்பு; ஆகவே சினம் எவரிடத்து உள்ளதோ அது அவர்களையே அழித்துவிடும்.  சினத்தின் கேட்டைப் பாரதியாரும்,

"சினங்கொள்வார் தமைத்தாமே தீயால் சுட்டுச்
செத்திடுவார் ஒப்பாராவார் சினங்கொள் வார்தாம்
மனங்கொண்டு தம் கருத்தைத் தாமே வெய்ய
வாள்கொண்டு கிழித்திடுவார் மானு வாராம்"
(பாரதியார் கவிதைகள், சுயசரிதை, பாரதி அறுபத்தாறு, 8:1-4)

என்று குறிப்பிடுகின்றார்.  வள்ளுவர் சினம் கொள்வதற்குக் காரணம் ஒருவனிடத்தில் இருந்தாலும் சினம் கொள்ளாதிருத்தலே அறமாகும் என்கிறார்.

நகையும், உவகையும் சொல்லும் சினமே ஒருவனுக்கு எல்லா அறத்தையும் கொன்று இறுதி வரைக்கும் வருகின்ற பகையாகும்.  சினம் கொள்வதால் அச்சினம் அவனை மட்டுமின்றி, அவனைச் சேர்ந்த இனத்தாரையும் அழித்துவிடும்.  ஆதலால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும் என்பதை வள்ளுவர் பெருமான்,

"தன்னைத்தான் காக்கின் சினம்காக்க; காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்" (குறள்., 305)

என்கிறார்.

தன்னையும், தனக்குத் துணையாக இருப்பவரையும் இழக்காமல் இருக்கச் சினம் வராமல் காத்தலே சிறந்தது என்று அறிவுறுத்துகின்றார்.  நான்மணிக்கடிகையும்,

"எல்லாம் வெகுண்டார்முன் றோன்றாக் கெடும்"       (நான்மணி., 8)

என்கிறது.

16. சூதாடல்

காமம், கள் போன்ற அறத்திற்குப் புறம்பாக, பொதுக்கடமையினின்றும் வழுவச் செய்து விட வல்லது சூது.  சூதினால் செல்வம், பெருமை, பதவிகளை இழந்துள்ள அரசர் பலர் உள்ளனர்.  இவ்வுலகில் பல குடும்பங்களும் சூதினால் அழிந்துள்ளன.  இதற்கு மகாபாரதமே சிறந்த எடுத்துக்காட்டு.

நாடு, பொருள், செல்வம் முதலியவற்றைச் சூதில் இழந்தது போதாதென்று, அறிவிழந்து, மனைவியையும், பந்தயம் வைத்துத் தோற்கும் அளவுக்குச் சூது ஒருவனைத் தூண்டக் கூடியது என்பதைப் பாரதக்கதை பாண்டவர்கள் மூலம் எடுத்துக்காட்டுகின்றது.  இதனாலேயே வள்ளுவரும்,

"பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்" (குறள்., 937)

என்று கூறுகின்றார்.  சூதாடும் இடமே புகலிடமென்று தினமும் அங்குக் கிடப்பவன் பாரம்பரியமாகப் பழகிய செல்வத்தையும், சமுதாய நற்பண்புகளையும் இழப்பான்.  மேலும், அச்சூதாட்டமே பொருளை அழித்தது, பொய்யனாக ஆக்கி, மனத்தின் கனிவையும், அன்பையும் நீக்கி, மீளாத துன்பத்தில் ஆழ்த்தி விடுகிறது என்று சூதாட்டத்தினால் வரும் இழப்புகளைக் கூறுகின்றார்.

"உருளாயம் ஓவாது கூறின் பொருள்ஆயம்
போஓய்ப் புறமே படும்" (குறள்., 933)

இதிலிருந்து சூதாட்டத்திற்கு இடைவிடாது  அடிமைப்பட்டவர்கள் ஈட்டிய செல்வத்தை இழப்பதோடு, குலப் பெருமையையும் கெடுத்துச் சீரழிவர் என்கிறார் வள்ளுவர்.

17. சோம்பல் கொள்ளல்

மனிதனிடம் சோம்பல் இருந்தால்  அதைவிடத் தீமை பயக்கக் கூடியது வேறெதுவும் இல்லை.  ஒரு குடும்பத்தை மேன்மேலும் நல்ல குடும்பமாக்க விரும்புபவர் தமது சோம்பலை ஒழித்துக் கட்டி ஒழுக வேண்டும்.  அவ்வாறு ஒழுகத் தாம் உயர்வர்.  தாம் உயரக் குடியும் உயரும்.  மடியைத் தம் மடியிலேயே வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்தும் பேதை பிறந்த குடியானது, அவன் அழிவதற்கு முன்பே அழிந்து விடும்.  இவ்வாறு சோம்பலுடையவனின் குடி மடிவதோடு குற்றமும் பெருகும்.

மடியினால் விளையும் குற்றங்கள் பலவாகும்.  விரைந்து செய்வதனை நீட்டித்துச் செய்யும் இயல்பும், மறதியும், சோம்பலும் அளவு கடந்த தூக்கமும் கேட்டைத் தருவன.

"படியுடையார் பற்றுஅமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது" (குறள்., 606)

என்று வள்ளுவர் நிலத்தை ஆளுகின்றவனின் உதவி பொருந்திய விடத்தும் சோம்பலுடையார் முயற்சி இன்மையால் சிறந்த பயனை அடைதல் இல்லை என்று கூறுகின்றார்.

18. தீச்சொல் கூறல்

ஒரு சொல் அதைச் சொல்பவனது மனதைப் பிரதிபலிக்கும் திறன் வாய்ந்தது.  அச்சொல்லே அவனை அளக்கும் கருவியாகவும் அமைகின்றது.  ஆதலால் சொல்லை மிகக் கவனமுடன் கையாள வேண்டியது அவசியம்.  இதனால்தான் 'யாகாவார் ஆயினும் நாகாக்க' என வள்ளுவர் நாவடக்கத்தின் அவசியத்தைக் கூறினார்.

மேலும் தீயினால் சுட்ட புண் ஆறும்.  ஆனால் ஒருவன் கூறும் கடும் சொல்லினால் பிறர் உள்ளத்தில் ஏற்பட்ட  வடுவோ ஆறாது என்று தீச்சொல்லின் வீரியத்தை எடுத்துரைக்கிறார்.  இத்தகைய கடும் சொல்லைப் பிறர் எளிதில் மறப்பதில்லை.  இதனால் பகையும், ஒற்றுமையின்மையும் அதிகரித்து சமூகம் சீர்கேடடையும்.  ஆகவே சொல்லில் அடக்கத்தைக் கடைபிடிக்க வேண்டியது சமூக வாழ்க்கையில் மிக அவசியமாகிறது.

ஒருவன் நாவடக்கமின்றி, பிறர்க்குத் தீங்கு பயக்கக் கூடிய சொல்லைக் கூறுவானாயின் சொற் குற்றத்தின் கண்பட்டு, அவன் செய்யும் பிற அறங்களும் நன்மையற்றதாகி விடும்.

"ஒன்றானும் தீச்சொல் பொருள்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்" (குறள்., 128)

என்று கடுஞ்சொல் கூறுபவன் பிற அறங்களைச் செய்தாலும் அதனால் வரக்கூடிய நன்மையை இழக்க நேரிடுகிறது என்கின்றார் வள்ளுவர்.

19. தீயன செய்தல்

உயிரை விட மானத்தையே உயர்ந்தோர் போற்றினர்.  தம் மானம் தாழ்வதற்கு ஏதுவான தீய செய்கைகளை மானமுடையார் செய்யமாட்டார்.  மானத்தை இழந்தால்தான் உயிர் வாழ முடியும் என்ற அளவுக்கு நெருக்கடி ஏற்பட்டாலும் குடிப்பிறப்புத் தாழ வரும் செய்கைகளை ஒழிக்க வேண்டும்.  அவ்வாறின்றித் தம் மான நிலையியின்றும் தாழ்ந்தவரை, 'தலையினின்றும் கீழே விழுந்த மயிரினையே ஒப்பர்' என்று வள்ளுவர் மானமிழப்பதால் இழிவை எடுத்துக் காட்டுகின்றார்.  மேலும், இழி செயல்களால் ஏற்படும் இழப்பை வள்ளுவர்,

"குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்" (குறள்., 956)

என்ற குறளில் கூறுகின்றார்.  இழிவைத் தரக்கூடிய செயல் குன்றிமணி அளவானாலும், குன்று போல் உயர்ந்த பண்புடையவர்களுக்குத் தாழ்வினை ஏற்படுத்துவதோடு, மானம் இழப்பும் ஏற்படுத்துகின்றது.  மானத்தை விட்டுத் தன்னை அவமதிப்பார் பின்னே சென்று ஒருவர் வாழ நினைத்தால் அது இம்மையிலும் புகழைத் தராது.  மறுமையிலும் சிறப்பில்லை.  வீணே மான இழப்பு தான் என்று எடுத்துரைக்கின்றார்.

20. நடுவுநிலைமை தவறுதல்

பகை, நொதுமல், நண்பு என்னும் மூன்று பகுதியினும் அறத்தின் வழுவாது ஒப்ப நின்று, விருப்பு வெறுப்பு பாராட்டாமல் எந்நிலையிலும் நெறிபிறழாமல் நடந்து கொள்ளும் நடுவு நிலைமையாகிய அறமே ஒருவனுக்குத் தன் வாழ்நாள் முழுவதற்கும் போதுமானது.  அவ்வாறின்றி நடுவு நிலைமை இகந்து ஒருவன் எய்தும் ஆக்கம் தீங்கின்றி நன்மையே தரினும், அதனை ஒழித்தலே சிறந்தது.

'நெஞ்சம் கோடாமை சான்றோர்க்கு அணி' என்பர் வள்ளுவர்.  இத்தகைய சிறந்த அறமாகிய நடுவு நிலைமையிலிருந்து விலகி நடக்க ஒருவன் நினைப்பானாயின் அதுவே அவனை அழித்துவிடும் என்பதை,

"கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்"  (குறள்., 116)

என்ற குறள் மூலம் காட்டுகிறார்.  மனத்தால் குற்றம் செய்ய நினைத்தலே குற்றம் செய்தற்கு ஒப்பாகும்.  ஆதலால் நடுவுநிலை தவறும் எண்ணம் தோன்றும் போது 'யான் கெடுவேன்' என்று கூறித் தடுக்க வேண்டும் என்று எச்சரிக்கின்றார் வள்ளுவர்.

இதிலிருந்து நடுவுநிலையிலிருந்து தவறுதலால் ஒருவன் புகழ், செல்வம் போன்றவற்றை இழப்பதோடு, தன் மரபினருக்குத் தீராத பழியையும் சேர்த்து வைக்கின்றான் என்பதை அறியலாம்.  இதனையே அதிவீரராமபாண்டியரும் வெற்றி வேற்கையில்,

"மனுமுறை நெறியின் வழக்கிழந் தவர்தாம்
மனமுற மறுகிநின் றழுத கண்ணீர்
முறையுறத் தேவர் மூவர் காக்கினும்
வழிவழி யீர்வதோர் வாளா கும்மே" (வெற்றிவேற்கை, 75)

என்று கூறி நடுநிலைத் தவறுபவன் கெடுவான் என்று எடுத்துக்காட்டுகின்றார்.

21. நல்ல நட்பை இகழ்தல்

தன் வினையின் கண் எப்பொழுதும் முயற்சியுடையான் உரிமையால் தனக்குக் கேளிர்செய்யும் உரிமை எல்லாஞ் செய்து ஒழுகுகின்ற தன்மையை, அது பொறுக்காதவர் சொல் கேட்டு மாறுபடக் கருதி அவனை அவமதிப்பானாயின் அவனுடைய செல்வமும், பெருமையும் தாமாகவே அழிந்து விடும்.

"வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறாக
நினைப்பானை நீங்கும் திரு" (குறள்., 519)

நல்ல நட்பை இகழ்பவனிடம் பிறர் துணை செய்ய முயலார்.  ஆகையால் அவன் செல்வத்தையும் பெருமையையும் இழப்பான் என்கிறார்.

22. நல்லாரைத் துணைக்கோடாமை

அறிவு, குணம், செயலாற்றல் முதலியவற்றில் தம்மைவிட உயர்ந்த நல்லாரைத் துணையாகக் கொண்டவனின் வாழ்க்கையில் எத்துன்பமும் இழப்பும் ஏற்படுவதில்லை.  அதனாலேயே 'பெரியாரைத் துணைக்கொள்' என்று நீதி நூல்கள் எடுத்துரைக்கின்றன.  வள்ளுவரும்,

"அரியவற்றுள் எல்லாம் அரிதே; பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்" (குறள்., 443)

என்று பெரியவர்களைத் தமது சுற்றத்தாராகக் கொள்ளலே அரிய செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் பெரியது என்கிறார்.  இத்தகைய நல்லாரைத் துணையாகக் கொள்ளாதவன் முதலீடு செய்யாத தொழில் ஆதாயம் தராதது போல, தனக்குத் துன்பம் நேரும் போது மதில் போன்று தாங்கும் துணை இல்லாததால் துன்புறுவான்.  இதனால் நிலையான வெற்றி பெற இயலாது.  வெற்றியை இழக்க நேரும் என்கிறார்.

"முதல்இலார்க்கு ஊதியம் இல்லை, மதலையாம்
சார்புஇலார்க்கு இல்லை நிலை" (குறள்., 449)

என்பது குறள்.

23. நற்பண்புகளைக் காக்காமை

ஒருவனுக்கு வரும் குலப்பெருமைகள் எல்லாம் அவனுடைய நற்பண்புகளால் அமைவனவாகும்.  ஒவ்வொருவனும் தன் குலப் பெருமையைக் காக்க நினைப்பானாயின் ஒழுக்கம், வாய்மை, நாணம் ஆகியவற்றின்கண் இழுக்காதவனாய் அன்பும், நகையும், ஈகையும், இன்சொல்லும் ஆகிய நற்பண்புகளை உடையவனாய் இருக்க வேண்டும்.  அவ்வாறில்லாமல் நற்பண்புகளை இழக்க நேரிட்டால் அது அவன் குலத்தையே ஐயத்திற்கு உள்ளாக்கும்.

"நலத்தின்கண் நார்இன்மை தோன்றின் அவனைக்
குலத்தின் கண்ஐயப் படும்" (குறள்., 958)

என்று வள்ளுவம் கூறுகிறது.  நற்பண்புகளைப் பேணிக் காப்பதில் பற்றில்லாத போக்கு ஒருவர் தோன்றிய சமுதாயத்தின் பண்பையே ஐயத்திற்கு உள்ளாக்கும்.  மேலும் அவன் குலப்பெருமையையும் கெடுக்கும் என்று எச்சரிக்கின்றது.

24. நன்றி மறத்தல்

இனியவை கூறி இல்லறம் வழுவாதார்க்கு உய்தி இல் குற்றம் செய்ந்நன்றி மறத்தலாகும்.  இதனாலேயே 'நன்றி மறவேல்', 'செய்த நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்' என்று ஆத்திச்சூடியும் எடுத்துரைக்கின்றன.  வள்ளுவரும் 'நன்றியை மறப்பது நன்றன்று' என்று கூறுகின்றார்.

மேலும் தன் நிலையிலிருந்து தாழ்ந்தவிடத்து எந்த கைம்மாறும் கருதாது காலத்தில் ஒருவர் செய்த உதவியை ஞாலத்தை விடவும், கடலை விடவும் பெரியதாகப் போற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். இத்தகையோர் செய்த நன்றியை மறவாமலும் அவருடைய நட்பைத் துறவாமலும் இருக்க வேண்டும் என்று கூறும் வள்ளுவர் 'பாவங்களில் எல்லாம் பெரும்பாவம் ஒருவர் செய்த நன்றியை மறப்பது தான்' என்கின்றார்.

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு" (குறள்., 110)

பிற நன்றி கொன்றவர்களுக்கு ஒருவேளை கடைத்தேறும் வழி இருந்தாலும் இருக்கலாம்.  ஆனால் செய்ந்நன்றியைக் கொன்றவனுக்கு அக்குற்றத்தி லிருந்து மீளும் வழியில்லை.  இவ்வுண்மையைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனுக்கு,

"நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்
செய்ந்நன்றி கொன்றோர்க்கு உய்தி இல்லென
அறம்பா டிற்றே ஆயிழை கணவ!"  (புறம்., 34:5-7)

என்று ஆலத்தூர்க்கிழார் அறிவுறுத்தி, செய்ந்நன்றியறிதலை உயர்த்திப் போற்றியுள்ளார்.  கல்வியிற் பெரிய கம்பரும்,

"வதைபுரி குநர்க்கு முண்டா மாற்றலா மாற்றல்; மாயா
உதவிகொன் றார்க்கென் றேனும் ஒழிக்கலா முபாய முண்டோ"  
                                                              (கம்ப. கிட்கிந்தைப் படலம், 62:5-8)

என்று இச்செய்ந்நன்றி மறத்தலின் கொடுமையை எடுத்துக் காட்டுகின்றார்.

இதிலிருந்து செய்ந்நன்றியை மறந்தவன் பல கொடுமைகளை அனுபவிப்பதோடு, உற்றார், உறவினர் நண்பரையும் இழந்து  வருந்துவான் என்பதை அறியலாம்.

25. நாணமின்மை

ஓரறறிவுயிர் முதல் ஆறறிவுடைய மக்கள் வரையில் அனைத்துயிரினங்களும், உண்ண உணவையும், உடுக்க உடையையும், உறக்கத்தையும், அச்சம், காமம் போன்ற இயல்பு ஊக்கங்களையும் கொள்வதில் வேறுபடுவதில்லை.  ஆனால், பழி பாவங்களுக்கு அஞ்சும் நாணம் நன்மக்களுக்குச் சிறப்பாக உரியதாகும்.

சான்றோர்க்கு நாணமே சிறந்த அணிகலனாகும்.  அது இல்லையென்றால், நடையில் மட்டும் விளங்கும் பெருமிதம் ஒரு நோயேயாகும்.  எனவே, பிறருக்கு வரும் பழியையும், சமுதாயத்திற்கு வரும் பழியையும் தம் பழி போல் ஒப்ப மதித்து நாணுகின்றவர்களே, நாணுடைமைக்கு உறைவிடம் என்று உலகம் மதிக்கும்.

இத்தகைய சிறந்த நாணத்தைப் பண்பாகக் கொள்ளாமல்  நாணத்தக்க செயலைச் செய்பவனைக் கண்டு அறமும் நாணும் என்கிறார் வள்ளுவர்.  மேலும் நாணமின்மை நலம் யாவற்றையும் கெடுக்கும் என்பதை,

"குலம்சுடும் கொள்கை பிழைப்பின் நலம்சுடும்
நாணின்மை நின்றக் கடை" (குறள்., 1019)

என்று கூறுகிறார்.  கொண்ட கொள்கையில் தவறினால் குலப்பெருமை கெடுவது போல நாணத்தைத் துறந்து பழி நிலைத்தால் மற்ற பிற நல்ங்களை எல்லாம் இழக்க நேரிடும் என்று வலியுறுத்துகின்றார்.

26. பகுத்துக் கொடுக்காத செல்வம்

செல்வம் சேர்ப்பது தனக்கு மட்டுமன்று.  பலருக்கும் பகுத்துக் கொடுத்து, செய்ய வேண்டிய நற்பணிகளுக்கும் பயன்படுத்துவதற்கும் ஆகும்.  அவ்வாறில்லாமல் பொருள் மீது பற்றுக் கொண்டு செலவழிக்காமல் பாதுகாப்பதை, சிக்கனத் தன்மை அல்ல 'குற்றம்' என்கிறார் வள்ளுவர்.  மேலும் பகுத்துக் கொடுக்காத செல்வம் நிலைத்திருக்காது வீணாகக்கெடும் என்கிறார்.

"செயற்பால செய்யாது இவறியான் செல்வம்
உயற்பாலது அன்றிக் கெடும்" (குறள்., 437)

இதனையே நாலடியாரும்,

"வழங்கான் பொருள்காத் திருப்பானேல் அஆ
இழந்தானென் றெண்ணப் படும்" (நாலடி., 9)

என்கிறது.

"ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்" (கொன்றைவேந்தன், 4)

என்று கொன்றை வேந்தனும் கொடுக்காமல் சேர்த்து வைத்த செல்வம் அவனிடம் நிலைக்காமல் தீயோன் கையில் போய்ச் சேரும் என்று வலியுறுத்துகின்றது.

27. பயனில் கூறல்

தமக்கும் பிறர்க்கும் அறம், பொருள், இன்பமாகிய பயன்களுள் ஒன்றும் பயவாத பயனில சொற்களைக் கூறுவதால் ஒருவன் சொற்குற்றத்திற்கு ஆளாகின்றான்.  இன்றைய உலகியலில் எங்குப் பார்த்தாலும் மனிதர்கள் கூடி கூடிப் பேசித் திரிகிறார்கள்.  பெரும்பாலும் அவை பொருளற்ற வீண் பேச்சாகவே இருக்கின்றது.

மனிதனிடத்தில் சொல்லாட்சி தோன்றியதே பொருளை உணர்த்து வதற்குத்தான்,  பொருள் வழிப்பயன் பெறுதலும் தருதலுமே சொல்லாட்சியின் இறுதி இலட்சியம்.  மேலும் உள்ளத்து உணர்ச்சிகளை வெளிப்படையாகக் காட்டி உறவு முறையை வளர்த்துக் கொள்ளலே சொல்லாட்சி.  மனிதர்களுக்குள் வளர்கின்ற பகை, பிளவு உணர்ச்சிக்கும் பெரும்பாலும் காரணம் தகுதியில்லாதோர் சொற்களைத் தகுதியில்லாத முறையில் கையாளுவதேயாகும்.

இயற்கை அமைப்பில் பல்வேறு தடைகளைக் கடந்து மனிதனின் வழிவழிப்பட்ட முயற்சியால் தோன்றும் சொற்கள் பயனற்றவைகளாகப் போவதைப் பார்த்து வள்ளுவர் வருந்துகிறார்.  சொல்லாட்சியும் உழைப்பின் விளைவே.  இத்தகு மேம்பட்ட சொல்லாட்சி பெரும்பான்மையான மக்கள் வாழ்வில் அவர்கட்கும் பிறருக்கும் பயனில்லாமலே அழிவதைப் பார்த்து,

"பல்லார் முனியப் பயனில் சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்" (குறள்., 191)

என்கிறார்.  வீணான பேச்சு பேசுபவன் எல்லோராலும் இகழப்படுவதோடு, நற்பண்புகளையும் இழப்பதா«ல், அவனுடைய மேன்மையும், அதனால் உண்டாகக் கூடிய மதிப்பையும் ஒருங்கே இழப்பான் என்பதை,

"சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்" (குறள்., 195)

என்ற குறள் மூலம் எடுத்துக்காட்டுகின்றார்.

28. பிறரை வருத்திச் செல்வம் தேடல்

ஒருவன் பொருளைத் தேடும் போது அறத்தையும், புகழையும் சிதைக்காத வண்ணம் தேட வேண்டும்.  நல்வழியில் தேடிய செல்வமே அவனுக்கும் நிலைத்து நின்று, சமுதாயத்திற்கும் பயன் அளிப்பதாய் அமையும்.  அவ்வாறில்லாமல் பிறர் அழும்படி கொடிய செயல்கள் செய்து வருத்தித் தேடிய செல்வம் நாம் அழுமாறு விரைவிலே அழிந்துவிடும்.  தூய வினைகள் செய்வதனால் பொருளை இழக்கும் படி நேரிட்டாலும், பின்னர் பயன்கொடுக்கும் என்பதனையே வள்ளுவர்,

"அழக்கொண்ட எல்லாம் அழப்போம்; இழப்பினும்
பின்பயக்கும் நற்பால் அவை" (குறள்., 659)

என்று குறிப்பிடுகின்றார்.

29. பிறர் பொருளைக் கவர நினைத்தல்

பிறர் பொருளைக் கண்டு பொறாமைப்படுதலே குற்றம் என்கின்ற போது அதை வௌவக் கருதுவதும் குற்றம் என்பது கூறாமலே விளங்குகின்றது.  பொருள் விருப்பமும், அப்பொருளை அடைகின்ற வேட்கையும் மனிதனிடம் காணப்படுகின்ற இயல்பான உணர்ச்சிகளாகும்.

இன்றைய சூழ்நிலையில் பொருளைத் துறந்து விட்டு மனிதன் வாழ்தல் என்பது அரிது.  அதனாலன்றோ "முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னால் முடியும் என்றார் மாணிக்கவாசகர்".  ஆனால் பொருளைத் தேடும் வழி உழைப்போடு கூடிய முயற்சியாக அமைய வேண்டும்.  அவ்வாறின்றித் தீய வழியில் தேடிச் சேர்த்த  பொருள் நிலைத்து நிற்காது.

சாதாரணமாக நேரிய வழியை விட்டு விட்டுப் பிறர் பொருளை எடுத்துக் கொள்ளும் உணர்வே மக்களிடம் மேலோங்கி நிற்கிறது.  இக்குறை பல தரப்பட்ட மக்களிடமும் காணப்படுகிறது.  இந்நிலை நீடித்தால் சமுதாயத்தில் ஒழுக்கக்கேடு ஏற்பட்டுக் குற்றங்கள் தலைவிரித்தாட ஆரம்பித்துவிடும்.  இதைக் கண்டித்து,

"நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்" (குறள்., 171)

என்கிறது வள்ளுவம்.

பிறர் பொருளைக் கவர்தலால் வரும் சிற்றின்பத்திற்காக ஒருவன் அறநெறியில் வரும் பெரிய இன்பத்தை இழப்பதோடு சேர்த்து வைத்த செல்வத்தையும் இழக்கின்றான்.  எனவே தான் வள்ளுவம்,

"அஃகாமை செல்வத்திற்கு யாதுஎனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்" (குறள்., 177)

என்கிறார்.  செல்வம் குறுகி, நல்வாழ்வை இழக்கின்றான் என்கிறது.  ஆதலால் நல்வாழ்வு வாழ்வதற்கு ஒருவன் பிறர் கைப்பொருளைக் கவர நினைக்கக் கூடாது என்பதை,

"பிறன் கைப் பொருள் வௌவான் வாழ்தலினிது"  (இனியவை., 22)

என்று இனியவை நாற்பதும் கூறுகின்றது.

31. பொறாமைப்படல்

அழுக்காறு என்ற தீமை மக்கள் மத்தியில், மக்கள் மொழியில் 'பொறாமை' என்று வழங்கப்படுகிறது.  அதாவது தம்மையல்லாத பிறிதொருவர் அடைந்து அனுபவிக்கும் "புகழ், கல்வி, வலி, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ், நுகர்ச்சி, அறிவு, அழகு, பெருமை, இளமை, துணிவு, நோயின்மை, வாழ்நாள் ஆகிய பதினாறு பேறுகளைக் கண்டு பொறுத்துக் கொள்ளாத இழிகுணம் பொறாமை".

இப்பொறாமைக் குணம் உடையவன் பிறருடைய ஆக்கம் கண்டு பொறாமல் அவர்களிடம் குற்றம் காண்பதிலும், பழி தூற்றுவதிலும், காலத்தையும், சக்தியையும் செலவழித்துத் திரிவதால் எந்த முயற்சியிலும் ஈடுபடாமல் சோம்பலுற்று அலைவான். அதனால் அழுக்காறுடையவனின் முன்னேறுவதற்குரிய வாயில்கள் அடைபட்டுப் போகின்றன.  மேலும் அவன் எந்தவொரு அறத்தையும், செல்வத்தையும் அடையமாட்டான்.  இதனால் தான் வள்ளுவர்,

"அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்" (குறள்., 163)

என்ற குறளில் மறுமைக்கும் இம்மைக்கும் அறமும், செல்வமும் தனக்கு வேண்டாதவன் பிறர் செல்வங் கண்ட வழி அதைக் கண்டு பொறாமைப் படுவான்.  மேலும் பிறருக்கு உதவியாகக் கொடுக்கும் பொருட்களைக் கண்டு அழுக்கறுப்பானின் சுற்றம் உணவும் உடையுமின்றிக் கெடும்.  இத்தகைய அழுக்காற்றை உடையவர் புகழைப் பெற்று நிலைத்தவர் இல்லை.  அழுக்காற்றை நீக்கியதால் மேல்நிலையிலிருந்து தாழ்ந்தவரும் இல்லை என்கிறார்.

இதிலிருந்து அழுக்காறு ஒருவனுடைய செல்வத்தையும், புகழையும் அழிப்பதோடு, அவனுடைய சுற்றத்தையும் அழித்துவிடும் என்பதை அறியலாம்.

30. பொருளல்லவற்றைப் பொருள் என்று உணர்தல்

வாழ்க்கையில் அறியாமையும், போலி அறிவும் உள்ளவரையிலும், இல்லாத துன்பமெல்லாம் இருப்பதாகக் கருதிக் கவலையும் அச்சமும் மிகுந்து வருந்த நேர்கின்றது.  அதனால் உள்ள துன்பத்தைப் போக்கிக் கொள்ள வழியறியாமல் திகைக்கின்றோம்.  ஆகையால் மெய்ப்பொருளை உணர்தலே துன்பத்திலிருந்து விடுபடுவதற்கும், சிறப்பான வாழ்க்கை அமைவதற்கும் வழியாகும்.

"பொருளல்ல வற்றைப் பொருள்என்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு" (குறள்., 351)

என்று வள்ளுவர் மெய்ப்பொருள் அல்லாத பயனற்றவைகளை ஆதாரமாக எண்ணி மயங்குபவர்களுக்கு வாழ்க்கை சிறப்பாக அ¬யை£து என்று  அறிவுறுத்துகின்றார்.

32. மக்கட் பண்பு இல்லாமை

சான்றோர்கள் சமுதாய வாழ்க்கையில் தாம் பழகி, ஊடாடி, வாழ்க்கை நடத்தும் பலரின் இயல்புகளும் அறிந்து ஒத்த ஒழுகுவர்; உலகத்தோடு ஒட்டி வாழ்வர்.  இதுவே மக்கட் பண்பு என்று சொல்லப்படும்.  இதையே,

"பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்" (கலித். நெய்தல்கலி., 133:8)

என்று கலித்தொகை நெய்தல் கலிப்பாடல் குறிப்பிடுகின்றது.  இதற்கு மாறாக பண்பில்லாதாரது இழிவை வள்ளுவர்,

"அரம்போலும் கூர்மையர் ஏனும் மரம்போல்வர்
மக்கள்பண்பு இல்லா தவர்" (குறள்., 997)

என்று கூறுகிறார்.  கூர்மையான அறிவுடையவராக இருந்தாலும் சமுதாயத்தில் மக்கட் பண்பில் திளைக்காதவர்கள் புலன்களில் குறைந்த மரம் போன்றவர்களாகவே மதிக்கப்படுவர்.  இதனால் அவர்கள் அறிவினால் ஒரு பயனும் இல்லை.  பிறரால் இகழப்படுவர் என்று சுட்டிக் காட்டுகின்றார்.

33. மறதியுடைமை

மனிதன் கடமைகளை ஆற்றும் போது கடமைகளை மறந்து விடாமலும் சோர்வில்லாமலும் செயலாற்ற வேண்டும்.  பெருஞ்செல்வம், பேரின்பம், பெருமிதம் முதலியவற்றால் மிகுந்த மகிழ்ச்சியுற்றிருப்பவன் இவ்வுவகைக் களிப்பால் வரும் மறதியை ஒழிக்க வேண்டும்.  மறதி அவர்களுக்கு அளவிறந்த வெகுளியைவிடத் தீமை பயக்கும்.  வெகுளி ஓரோ வழி பகைவரை அழிக்கலாம்.  ஆனால் மறதியோ தம்மையே அழித்துவிடும்.

நாள்தோறும் இரந்து வயிற்றை நிறைத்துக் கொள்ளும் நிலைமை ஒருவருக்குவரின், அது அவருக்கு இழிவு, பாவம் எள்ளற்பாடுகளை, விளைவிக்கும்.  அதனால் அவர் பிறரால் நன்கு மதிக்கப்படுவதையும் இழப்பர்.  அதுபோல, மறதியும் புகழுடையார் கண் உண்டாயின், அவருக்குத் தம்மைக் காவாமையாலும், காரியக் கேட்டாலும் எள்ளற்பாட்டினை விளைவித்து, நன் மதிப்பினையும் அழித்துவிடும்.

"பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன்று ஆங்கு" (குறள்., 532)

யாவர்க்குமே, கடமை மறதி ஏற்படுமாயின் அறம், பொருள், இன்பம், வீடு பேறுகள் கைக்கூடாமல் போவதோடு, புகழையும் அவர் அடைய முடியாது.  அச்சமுடைய கோழைகளுக்கு எத்தகைய வலிய அரணிருந்தும் பயனில்லாதவாறு போல, கடமையை மறந்தவர்கள் செல்வம் எல்லாம் பெற்றிருந்தும் அவற்றால் பயனில்லாமல் போய்விடும்.

ஒருவனுக்கு மறதியில்லாமல் வினையாற்றும் திறம் தொடர்ந்து வாய்க்கப்பெற்றால் அதுவே சிறந்த பயனைத் தரும்.  மறவாமையாகிய கருவியை உடையவனுக்கு அரியதென்று ஒன்றுமில்லை. ஆனால் மறதியுடையவனுக்கு இம்மையில் மட்டுமின்றி எழுமையிலும் நலமான வாழ்க்கையும் புகழும் இல்லை என்கிறது வள்ளுவம்.

"புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்" (குறள்., 538)

34. விருந்தோம்பாமை

தம் இல்லத்துக்குப் புதிதாக வருகின்றவரை அன்புடன் வரவேற்று உணவிடும் முறை சிறந்த அறமாக நம் முன்னோர்களால் போற்றப்பட்டு வந்துள்ளது.

மேலும் உள்ளத்தால் இணைந்து வாழ்கின்ற இல்லறத்தார்க்கு அது விருந்தோம்பல் சிறந்த கடமையாகவும், அறமாகவும் கொள்ளப்பட்டு வந்துள்ளது.  அதனால் தான் வள்ளுவர்,

"இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு" (குறள்., 81)

என்று வலியுறுத்தியுள்ளார்.

கணவனை விட்டுப் பிரிந்து இருந்ததனால், விருந்தோம்பல் போன்ற இல்லறக் கடமைகளிலிருந்து வழுவ நேர்ந்ததைக் கணவனுக்கு வள்ளுவர் வழி நின்று கண்ணகி கூறுவதாக,

". . . . .  தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை" (சிலப்., 16:72-73)

என்று இளங்கோவடிகளும் எடுத்துக் காட்டியுள்ளார்.  இதிலிருந்து விருந்தோம்பல் பண்பாட்டு முறையாக நம் முன்னோர்களால் போற்றப்பட்டு வந்துள்ளதை அறியலாம்.

"மருந்தே யாயினும் விருந்தோருண்" (கொன்றைவேந்தன், 70)

"விருந்திலோர்க் கில்லை பொருந்திய ஒழுக்கம்"  (மேலது, 83)

என்று 'கொன்றை வேந்தனும்' விருந்தோம்பலின் இன்றியமையாமையை எடுத்துரைக்கின்றது.  வள்ளுவர்,

"பரிந்துஓம்பிப் பற்றுஅற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்" (குறள்., 88)

என்ற குறளில் விருந்தோம்பல் என்னும் அறத்தினை மேற்கொள்ளாதவர்கள், ஓடி ஓடிச் சேர்த்த செல்வத்தையும் பிறர் பற்றையும் இழந்து வருந்துவர் என்று விருந்தோம்பாமையால் ஏற்படும் இழப்பை எடுத்துக்காட்டுகின்றார்.

35. விலைமகளிர் தொடர்பு

மன உறுதியும், அறிவுத் தெளிவும் இல்லாத சிலர் நாடுகின்ற இழி செயல்களாகிய பொதுமகளிர் நாட்டம், கள்ளுண்ணல், சூதாடுதல் போன்றவைகள் குடும்பத்தை மட்டுமல்ல, சமுதாயத்தையும் சீர்குலைக்கின்றன.

நெஞ்சத்தை நிலை நிறுத்தி ஆளும் திறன் இல்லாதவர்களும் எதையும் ஆராய்ந்து காணும் அறிவில்லாதவர்களும், உயர்வு சிறிதும் இல்லாத கீழ்மக்களும், பொது மகளிரை விரும்பித் தம் வாழ்நாளை வீணாக்கு கின்றனர்.   அவர்களைப் பார்த்து பொய்யாமொழியார்,

"இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு" (குறள்., 920)

என்ற குறளில் கூறுகின்றார்.  வஞ்சகம் கொண்ட விலைமகளிர் நாட்டம், மயக்கும் மது, கெடுக்கும் சூது இவற்றால் ஒருவரின் அறிவும், செல்வமும் கெடும் என்று கூறி எச்சரிக்கின்றார்.

36. வினைசெய்து முடித்தற்குரிய இடத்தினை அறியாமை

ஒருவன் எந்த ஒரு வினையையும் செய்து முடித்தற்குப் பொருத்தமான இடத்தை அறிந்தே தொடங்க வேண்டும்.  அப்பொழுது தான் தொடங்கிய வினையில் வெற்றியும் பெருமையும் வந்து சேரும்.  ஒருவன் இடனறியாமல் செயல்பட்டால் தொடங்கிய வினை கெட்டு, பெருமை அழிந்து விடும்.

"சிறுபடையான் செல்இடம் சேரின்; உறுபடையான்
ஊக்கம் அழிந்து படும்." (குறள்., 498)

என்கிறார் வள்ளுவர்.  இடனறியாமையால் பெரும்படையை உடைய அரசன், சிறுபடையுடையானை வெல்ல நினைத்து அவனுக்குரிய இடத்தில் சென்றால், மன எழுச்சி கெட்டுப் பெருமையை இழப்பான் என்கிறார்.

37. வெறுப்பை வளர்க்கும் தீய எண்ணம் கொள்ளல்

தொடர்புடையவர்களிடத்தில், நட்பு நிலைத்தால் ஒரு நாட்டில் ஒற்றுமையும் ஆக்க வேலையும் மிகும்.  ஆனால், அதற்கு மாறாக வெகுளி காரணமாய், வெறுப்பு நிலைத்தால், மாறுபாடும் அழிவு வேலையும் மிகும்.  மாறுபாட்டிற்குக் காரணமான வெறுப்பு எண்ணத்தளவில் நிற்பது.  அதுவே உயிர்கள் பிற உயிர்களோடு கூடாது பிரிக்கும் நோயாகும்.

எல்லா வகையிலும் ஒத்திருக்கும் ஒருவரை அல்லது இரண்டு பொருள்களை உலகத்தில் காண முடியாது.  ஒற்றுமையில் வேற்றுமையும், வேற்றுமையில் ஒற்றுமையும் இருக்கின்றன.  எதை மிகுதிப் படுத்தி வளர்க்கிறோமோ அது தான் மேலோங்கும்.  ஆதலால் வேற்றுமையைப் பெரிதாக்கி வளர்த்துக் கொண்டே போகாமல் வேற்றுமையில் ஒற்றுமையைக் கண்டு, அன்பு கொண்டு நட்பை வளர்ப்பதே கடமை.  இதை விட்டுச் சிறுசிறு வேறுபாடுகளைக் கண்டு அவற்றைப் பெரிது பண்ணி வளர்ப்பது நல்லதன்று.

ஒற்றுமைப் பகுதியைக் காணாமல் வேற்றுமையையே வளர்ப்பதனால் தான் உலகில் பல நாடுகளிடையேயும் குடும்பங்களிடையேயும் வெறுப்புணர்வே மிகுதியாக இன்று காணப்படுகின்றது.  இதனாலேயே வள்ளுவர் வெறுப்பை வளர்க்கும் தீய எண்ணத்தை ஒழிக்க வேண்டும் என்கின்றார்.  வெறுப்பு கொள்வதனால் ஏற்படும் இழப்பை,

"மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்" (குறள்., 857)

என்ற குறளில் காட்டுகின்றார்.  வெறுப்பை வளர்க்கும் தீய எண்ணங்களை ஒருவன் வளர்த்து வந்தால் அவன் வாழ்க்கை தவறுவதும் அடியோடு அழிவதும் விரைவில் நிகழும்.  ஆதலால் அவன் வெற்றிக்கு வாய்ப்பான நல்ல வழிகளை அறியமாட்டான் என்று வலியுறுத்துகின்றார் வள்ளுவர்.

     இவ்வாறு திருவள்ளுவப் பெருந்தகை தம்முடைய திருக்குறளில் மக்கள் ஆற்றும் குற்றங்களை பட்டியலிட்டிருக்கிறார்.  இவற்றினை உணர்ந்து திருந்தி நன்னடத்தையில் செயல்படவேண்டும் அவரது அவாவும் இக்கட்டுரையாளரின் அவாவுமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக