மனிதனின் மிக முக்கியத் தேவைகளில் ஆடையும் ஒன்று. இவ்வாடையைத் தயாரிப்பவன் 'நெசவாளி'. நெசவாளியின் தொழில் 'நெசவுத் தொழில்'. இத்தொழில் இன்று இருநிலைகளில் நடைபெறுகிறது. ஒன்று, கைத்தறி; மற்றொன்று, விசைத்தறி. அண்மைக் காலமாக நெசவாளர்களிடையே விசைத்தறியின் மோகம் அதிகரித்து வருவதால் கைத்தறி செய்வோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே, கைத்தறியில் வழங்கப்பெறும் கலைச்சொற்கள் இன்று பல மறையத் தொடங்கிவிட்டன. அச்சொற்களை நிலைநிறுத்தும் வகையானும் அத்தொழிலில் நடைபெறும் வழிபாடு மற்றும் நம்பிக்கைகள் குறித்தும் இவ்வாய்வு அமைகிறது. தமிழ்நாடு, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம் பொதட்டூர்பேட்டையில் வழங்கக் கூடிய கலைச்சொற்களைத் தொகுத்தும் அங்கு நிகழ்த்தப்பெறும் வழிபாடான 'தறிபுகு விழா' குறித்தும் இங்கு ஆராயப்பெறுகிறது.
வழிபாடு : தறிபுகு விழா
ஒவ்வொரு தை மாதத்தின் இரண்டாம் வார நன்னாளில் தறியில் புகுதலே 'தறிபுகுதல்' என்பர். இந்நாளை நெசவாளர் அனைவரும் விழாவாகக் கொண்டாடுவர். இவ்விழாவே 'தறிபுகு விழா' எனப்படும். இத்தறிபுகு விழா ஆண்டிற்கு ஒரு முறை மட்டும் நடத்தப்பெறுகிறது. தை மாதமே ஆண்டின் தொடக்கமாகவும் இவர்கள் கருதுகின்றனர். ஆண்டுத் தொடக்கம் நன்றாக அமையவேண்டும் என்று கதிரவனை வணங்கித் தங்கள் தொழிலைத் தொடங்குகின்றனர். இவ்விழா பற்றி இங்குக் காண்போம்.
மார்கழி மாத இறுதியில் தங்கள் தொழிலை நிறுத்தும் நெசவாளர்கள் தை மாதம் முதல் வாரம் முழுவதும் தைப்பொங்கல் கொண்டாடுகின்றனர். இரண்டாம் வாரம் 'மயிலேறி'(தைப்பொங்கல் நாளிலிலிருந்து எட்டாம் நாள்)யைக் கழித்த பிறகு ஒரு நல்ல நாளில் தறிபுகுகின்றனர். இந்நாளை ஊர்ப் பெயரியவர்கள் தண்டோரா மூலம் அறிவிப்பர். அறிவித்த நாளன்று நெசவாளர் அனைவரும் தங்களூரில் இருப்பர். வெளியூர் சென்றவர்களும் ஊர் திரும்பிவிடுவர்.
குறிப்பிட்ட நாள் வந்தவுடன் அதிகாலையில் குடும்பத்தார் அனைவரும் குளித்துவிட்டு வீட்டைச் சுத்தம் செய்து தெருவில் கோலம் போடுவர். பின்னர் கைத்தறிப் பொருட்கள் அனைத்தையும் நீர் விட்டுக் கழுவியும் துடைத்தும் சுத்தம் செய்வர். அதன்பின், விபூதி, சந்தனம், குங்குமம் மற்றும் பூ ஆகியவற்றைக் கொண்டு அலங்காரம் செய்வர். அன்று போட்ட பசுஞ்சாணத்தைக் கொண்டு சாணப்பிள்ளையார் செய்வர். இச்சாணப்பிள்ளையாரைச் சந்தனம், குங்குமம் மற்றும் அருகம்பில்லால் அலங்காரம் செய்வர். இச்சாணப்பிள்ளையாரைக் கைத்தறிக்குப் பக்கத்தில் கதிரவன் ஒளிபடும் இடத்தில் வைப்பர். இங்குப் படைப்பதற்குச் பச்சரிசி, வெல்லம், தேங்காய், மற்றும் வாழைப்பழம் ஆகியவற்றைப் பயன்படுத்துவர். ஊறவைத்த பச்சரியுடன் வெல்லம் கலந்து ஒரு தட்டில் சாணப்பிள்ளையாருக்கு எதிரில் வைப்பர். அடுத்துத் தட்டில் பூ, பழம், வெற்றிலை, பாக்கு, தேங்காய் மற்றும் மாவிளக்கு வைப்பர்.
ஊர்ப் பெயரியவர்கள் குறிப்பிட்ட நேரம் வந்தவுடன் நெசவாளர் அனைவரும் மாவிளக்கேற்றி கதிரவனை நோக்கிச் சாணப்பிள்ளையாரின் எதிரில் ஊதுபத்தி, சாம்பிராணி, கற்பூரம் காட்டித் தேங்காய் உடைத்து வழிபாடு செய்வர். குடும்பத்தார் அனைவரும் இவ்வழிபாட்டில் கலந்துகொள்வர்.
இவ்வழிபாடு முடிந்தவுடன் குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரும் நெசவுத் தொழிலில் தங்கள் தங்களின் பணிகளைச் செய்யத் தொடங்குவர். முதலில், குடும்பத்தில் குடும்பத் தலைவியோ அல்லது பெண் பிள்ளையோ பல்லைராட்டினம் கொண்டு பல்லையில் நூல் சுற்றிப் பின் தார்ராட்டினத்தில் தார் சுற்றுவர். அடுத்து, குடும்பத் தலைவரோ அல்லது ஆண்பிள்ளையோ புதியதாகத் திரித்த தாரைக் எடுத்துக்கொண்டு தறியில் புகுவர். புகுந்து புதியதாகத் திரித்த தாரால் நெசவு செய்வர். அதன்பின் ஒவ்வொருவராகத் தறியில் புகுந்து கொஞ்சம் கொஞ்சமாக நெசவு செய்வர். கூலியாட்கள் இருப்பின் அவர்களும் அவர்கள் பணிபுரியும் வீட்டினரின் தறியில் தறிபுகுவர். அதன் பின்னர்ப் படைத்த பச்சரிசி, வெல்லம், தேங்காய் ஆகியவற்றைக் கலந்து குடும்பத்தார் அனைவரும் உண்டு சுற்றத்தாருக்கும் கொடுத்து மகிழ்வர். இம்மகிழ்ச்சி என்றும் நிலைக்க கதிரவனையும் முழுமுதற் கடவுளான சாணப்பிள்ளையாரையும் வணங்கி வழிபடுவதே இத்'தறிபுகு விழா'வாகும்.
இதற்குப் பிறகு தாங்கள் நூல்பெறும் மளிகைக்குக் குடும்பத்தலைவர் சென்று புதிய கணக்குத் தொடங்கி நூல், பணம், இனிப்பு ஆகியவற்றைப் பெற்று வருவர். இவ்வாறு ஆண்டுத் தொடக்கத்தில் பெறுவதால் ஆண்டு முழுவதும் தொழில் மேன்மேலும் வளர்ச்சி பெற்று மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று எண்ணுகின்றனர்.
இவ்வாறு முதலில் பெற்றுவந்த நூலை இழைத்துப் பாவாக்குகின்றனர். இப்பாவைத் தெருவில் தோயும் போதும் சிறப்பு வழிபாடு செய்கின்றனர். தெருவில் போடும் ஒவ்வொரு குடும்பத்து முதற் பாவிற்கும் முன்னர் சொன்னது போல் கதிரவன்-சாணப்பிள்ளையார் வழிபாடு நிகழ்த்துவர். இவ்வழிபாடு நிகழ்த்தாமல் தைமாத முதல் பாவை எவரும் வீட்டிற்குள் எடுத்துச் செல்வதில்லை.
சில நம்பிக்கைகள்
அ. எதிர்ப்பலகையில் தறியைவிட்டு ஏறக்கூடாது. எதிர்ப்பலகை என்பது படமரத்தின் குழியுள்ள பக்கம் நெசவாளிக்கு எதிர்ப் பக்கத்தில் இருப்பது. இப்பக்கத்தில் படமரம் இருக்கும் பொழுது எந்தவொரு சூழ்நிலை ஏற்பட்டாலும் தறியைவிட்டு ஏறக்கூடாது. அப்படி ஏறினால் குடும்பத்தில் பல தீங்குகள் நிகழும் என நம்புகின்றனர். எதிர்ப் பலகையில் ஏறக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது என்றால் படமரத்தின் பக்கத்தை மாற்றுப் பக்கத்திற்குத் திருப்பிவிட்டு ஏறவேண்டும் என்பர்.
ஆ. குறை இழைட்டையில் ஒருநாள் பணியை நிறுத்தக் கூடாது. இழைட்டை என்பது இரண்டு அல்லது மூன்று கெஜம் நீளம் பாவை விரித்து நெய்வதற்காக இழைட்டையைக் கம்பத்தில் கட்டி இருப்பர். இதனை முழுதாக நெசவு செய்து அன்றைய பணியை முடிக்கவேண்டும். குறையாகச் செய்தால் மறுநாள் நெசவு சரிவர நடைபெறாது என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது.
இ. காலை எழுந்தவுடன் கதிரவன் உதயத்திற்குமுன் அன்றைய பணியைத் தொடங்கினால் தான் நெசவு நன்றாக இருக்கும், முழுமையாக நடைபெறும் என்று நம்புகின்றனர். கதிரவன் உதயமாகி பலமணி நேரங்கழித்துப் பணியைத் தொடகினால் அன்றைய பணியில் நிறைவு ஏற்படுவதில்லை என்று கருதுகின்றனர்.
கலைச்சொற்கள்
அச்சு - இழையை(நூல்) ஒன்றுடன் ஒன்று இறுக்கும் ஓர் கருவி.
இது சம அளவு நீளம், அகலம், உயரம் கொண்ட இரும்புக்
கம்பிகள். சம அளவு இடைவெளியில் இவை
ஒன்றனையடுத்து ஒன்றாக வைத்து இறுக்கிக்
கட்டப்பட்டது. இழைகளின் நெருக்கத்திற்குத் தகுந்தவாறு
இதன் இடைவெளி மற்றும் கம்பியின் நீள அகலங்கள்
மாறும்
அச்சு ஊசி - அச்சுக்குள் இழையை இழுக்கும் ஓர் கருவி
அச்சுக்குழாய் - விழுதும் அச்சும் இணைந்த ஓர் அமைப்பு.
இதனைப் பண்ணை என்றும் அழைப்பர்
அச்சுக்குழாய்
போடுதல் - அச்சுக்குழாயில் பாவை(பாவு)ப் போடுவது.
இதனைப் பண்ணை போடுதல் என்றும் அழைப்பர்
அச்சுப்பலகை - தறியில் அச்சை நிற்கவைத்து மேற்புறம் அழுத்தித்
தாங்கும் மரத்தாலான குழியுள்ள ஓர் பலகை
அச்சுமரம்1 - அச்சைத் தாங்கி நிற்கும் மரத்தாலான ஓர் கருவி
அச்சுமரம்2 - அச்சு பொருத்தப் பெற்றிருக்கும் ஒட்டுமொத்த
அமைப்பு, இதனுள் அச்சு, அச்சுமரம்,
தண்டவாளம், நாடாப்பெட்டிகள், கைப்பிடி,
கைப்பிடிக்கயிறுகள் அடங்கும்.
அருகி - துணியின் இரு கரைகளிலும் (எல்லைகளிலும்)
இரண்டிரண்டு இழைகளாகச் சேர்த்து
இறுக்கமான இழைகளாக்கி 1-2செ.மீ. அகலம்
கொண்டது. இதனை அரிகி என்றும், கரை
என்றும் அழைப்பர்
அலகு - பாவோடநிரைக்குமலகு. பாவை அலகப்படுத்த
உதவும் ஓர் கருவி. இது மெல்லிய மூங்கிலை
நெடுக்காகப் பிளந்து செய்யப்பட்டது
அலகுபிடித்தல் - பாவு தோயும் போது இழைகள் ஒன்றுடன்
ஒன்று இணையாமல் இருக்க இருவர்
எதிரெதிராக அலகை மேலும் கீழும்
அழுத்திவிடுதல்
ஆலை - பாவுநூல் சுற்றும் உருளை
இரட்டை ஊசி - இரண்டொன்றான ஊசி. விழுதுக்கண்களில்
நூலிழுக்கும் ஓர் கருவி
இழைட்டை - 2-3கெஜ நீளம் பாவை உருவி நெய்வதற்குத்
தகுந்தாற்போல் இழைகளை அட்டைபோல்
பரப்பி சமன் செய்து இறுக்கிக் கட்டப்பட்ட ஓர் அமைப்பு
இழைத்தல் - சிலப்பையில் உள்ள நூலைப் பல்லையில் சுற்றுதல்
ஊசி - நூல் இழுக்கும் ஓர் கருவி. இது, அச்சு மற்றும்
விழுதுக்கண்களில் நூலை இழுக்கப் பயன்படுவது
ஊணி - பாவைத் தெருவில் ஊன்ற பயன்படும் ஓர்
கருவி. இது, இரண்டு சிறுதடிகளைக் குறுக்காகக்
கட்டப்பட்டது. இதனை ஊணித்தடி என்றும் அழைப்பர்
ஊணிக்கயிறு - ஊணி கட்டும் கயிறு. இக்கயிறு ஊணியின் இரு
பக்கங்களிலும் அமையும். ஒருபக்கம் அமையும்
கயிறு நீளமாகவும் மறுபக்கம் அமையும் கயிறு
இரண்டு பிரி(பிரிவு)களாகவும் இருக்கும். இது
பாவைச் சமநிலையில் இறுக்கமாக நிறுத்த
பாவுக்கோலுடன் இணைக்கப்படுகிறது
ஊணிக்கோல் - ஊணி அமைக்கப் பயன்படும் உருட்டுக் கோல்
எதிர்ப்பலகை - படமரத்தின் நான்கு பக்கங்களில் மடிக்கம்பியைப்
பொருத்தும் குழியமைந்த பக்கமானது, நெசவு
செய்பவர்க்கு எதிராக அமைந்திருப்பது
எழட்டை - 2-3கெஜ நீளம் பாவை உருவி நெய்வதற்குத்
தகுந்தாற்போல் இழைகளை அட்டைபோல்
பரப்பி சமன் செய்து இறுக்கிக் கட்டப்பட்ட ஓர்
அமைப்பு. இது, இழைட்டை எழட்டை ஆகியது
எனலாம்
எழட்டைக்கம்பம் - இழைட்டை கட்டும் கம்பம்
எழட்டைக்கயிறு - இழைட்டை கட்டும் கயிறு. இதனை வலிகயிறு
என்றும் கூறுவர்
எழட்டைக்கோல ¢ - இழைட்டை கட்டும் உருண்டைக்கோல்
ஒத்தகுறி - ஒரு அடையாளம்
ஒருபத்தை - துணி நெய்யும்போது மடி கிழிக்க விடப்படும்
ஒரு இடைவெளி
கஞ்சிப்பை - பாவிற்குப் பசையூட்டும் போது பயன்படுத்தும்
நீளமான பை
கட்டு நூல் - நூல் சுற்றும் போதும், தார் திரிக்கும் போதும்,
நெசவு செய்யும் போதும் வீணாகும் நூல்
தொகுப்பு. வீணாய்ப்போன நூல் இழைகள்
கட்டைத்தறி - மரத்தாலான தறி. இதனை அச்சுமரம் என்றும்
அழைப்பர்
கண்ணி - பாவில் எஞ்சிய இழைகளை ஒன்றாகச் சேர்த்துச்
சுற்றிவைத்த சுருணை
கண்ணிகட்டுதல் - பாவில் பற்றாத (குறைந்த) இழைகளைக் கண்ணி
கொண்டு நிரப்பி பாவுடன் தனியாகக் கட்டித்
தொங்கவிடுதல்
காக்குழி - நெசவு செய்யும் போது நெசவாளி இருக்குமிடம்
கால்குழி - நெசவு செய்யும் போது நெசவாளி இருக்குமிடம்
கால்மெருடி - கால்மிதியடி. இது, பண்ணையில் புணி
அமைக்கக் காலால் மிதிக்கப்படும் மிதியடியின்
மேல் சிறிய அளவில் பொருத்தப்பட்டது. இது,
உயரம் குறைந்தவர்கள் மெருடியின் மேல்
கால்மெருடியைப் பொருத்தி நெசவு
செய்வதற்குப் பயன்படுகிறது
கால்மெருடி ஆணி - மிதியடியில் கால்மெருடியைப் பொருத்தப்
பயன்படும் இரும்புக்கம்பி
கிட்டி அலகு - நீளமான மூங்கில் தாங்கி. இது, இரண்டு
அலகுகளைக் கயிற்றால் குறுக்காகக்
கட்டப்பெற்றது. இதனைக் கெடை, கிட்டி
என்றும் அழைப்பர்
கிட்டிக்கோல் - நூலிலுள்ள ஈரத்தைப் பிழியும் உருண்டைக்கோல்
கீழ்த்தார் - குழலில் நூலைக் கீழ்ப்பக்கமாகச் சுற்றப்படுவது
கீறுகம்பி - பாவிலுள்ள இழைகளைச் சமனாகக் கீறப்
பயன்படும் ஓர் கருவி. இது, கீறுகின்ற
காரணத்தால் கீறு கம்பியானது
கீறுகுச்சி - கீறுகம்பி
குச்சிராட்டினம் - சிலப்பை போடும் உருளை
குஞ்சம் - சிலப்பையின் ஒரு பகுதி. இது 120 இழைச்சுற்று
கொண்டது
குழல் - துளையுடைய சிறிய உருளை
குறி - அடையாளம்
குறிகோல் - அடையாளமிடும் அளவுகோல்
குறிவிடுதல் - அடையாளம் வைத்தல்
கெடை - நீளமான மூங்கில். இது, நூலில் பசைபோட்டு
காயவைப்பதற்கும், சாயம் போட்டு
காயவைப்பதற்கும் பயன்படுகிறது
கெடைகிட்டி - கிட்டி அலகு
கைப்பிடி - நெசவு செய்யும்போது நாடாவை இடம் மாற்ற
வலது கையால் பிடிக்கப்படும்
சிறுஉருண்டை(கைப்பிடிக்குள் அடங்குவது)
கைப்பிடிக்கயிறு - கைப்பிடி அமைந்த கயிறு
கொமக்கோல் - குச்சிராட்டினம் வைக்கும் ஓர் கருவி
சிம்பில் - மெல்லிய குச்சி. இது, பாவைச் சுற்றும் போது
புணியில் வைக்கப் பயன்படுவது
சிம்பில்கம்பி - மெல்லிய கம்பி. இது, பாவைச் சுற்றும் போது
புணியில் வைக்கப் பயன்படுவது
சிம்பில் குச்சி - சிம்பில்
சிலப்பை - ஏழு குஞ்சங்களைக் கொண்டது
சிலப்பைக்கட்டு - குஞ்சக்கட்டு. இது குஞ்சங்களை முறைப்படி
அமைத்துக் கட்டப்பட்டது
சீர் - பண்ணைக்கோல் ஒழுங்கு
சீர்க்கயிறு - பண்ணைக்கோலை ஒழுங்கு செய்யும் கயிறு
சீர்பாவு - பலவண்ண இழைகள் ஒழுங்குடன் முறையாக
ஒன்றனைத் தொடர்ந்து ஒன்று அமைந்தது
சீர்வண்டி - சீர்க்கயிறு உழலும் சக்கரம்
தக்கட்டை - நாடாவைத் தள்ளுர் ஓர் கருவி. இது,
நாடாப்பெட்டியல் முன்பின் நகரும் அமைப்பில்
இருக்கும். நாடாவிலுள்ள நாடாமுள் இந்தக்
கட்டையில் உட்கார்ந்து எழுந்துவரும் நிலையில்
அமைக்கப்பட்டிருக்கும்
தக்கட்டைக்கயிறு - நாடாப்பெட்டியில் தக்கட்டையை இணைக்கும்
கயிறு
தண்டவாளம் - நாடா செல்லும் இரும்புத் தகரத்தாலான பாதை
தார் - இழை சுற்றப்பட்ட குழல்
தார் ஊசி - குழலைச் சுற்றப் பயன்படுத்தப்படும் ஓர் ஊசி
தார் திரித்தல் - பல்லையிலுள்ள நூலைத் தண்ணீரில் ஊர
வைத்து தார்ராட்டினம் கொண்டு குழலில்
சுற்றுதல்
தார்ராட்டினம் - தார் சுற்றப் பயன்படுத்தப்படும் ஓர் உருளை
திருகுபாவு - பாவை இடப்பக்கம் தொடங்கி இணைக்கும்
பொழுது நேருக்குநேர் இணைக்காமல்
புணிமுடியைத் திசைமாற்றி இணைக்கப்படுவது
நாடா - துணி செய்ய தாரின் மூலம் நூல் தரும்
கட்டையாலான ஓர் கருவி
நாடாக்கம்பம் - நாடாவுள் அமைந்த கம்பம். இது, தார்
பொருத்தப் பயன்படுவது
நாடாக்கம்பி - நாடாவுள் அமைந்து ஓர் கம்பி. இது, தாரைப்
பிடித்துக்கொள்ளப் பயன்படுவது
நாடாப்பெட்டி - நாடா சென்றுவரும் பெட்டி
நாடாமுள் - நாடாவின் இருமுனைகளிலும் உள்ள
கூர்மையான இரும்புப்பகுதி
நுமுட்டு - இரண்டு இழைகளை இணைத்தல்
நுமுட்டு வலித்தல் - புதிய பாவையும் பழைய பாவையும்
நுமிட்டி(இணைத்து)ப் பிறகுப் புதிய
பாவை அச்சுக்குள் இழுத்தல்
நூலிழைத்தல் - சிலப்பையாக உள்ள நூலை பல்லையில்
சுற்றுதல்
நூலூசி - பல்லையில் நூல் சுற்றும்போது நூலைத்
தாங்கிவரும் ஓர் ஊசி
நூல் - இழை, பஞ்சி நூல்
நூல்ராட்டினம் - பல்லையில் நூல் சுற்றும் உருளை
நேர்பாவு - பாவை நேருக்குநேர் இணைக்கும் பாவின்
வலப்பக்கம்
பஞ்சாடுதல் - பாவில் பசை குறைவாக இருந்து நெசவு
செய்யும்போது நூலிலிருந்து பஞ்சு பிரிந்து
உதிர்வது
படமரக்கம்பி - படமரத்தைச் சுற்றும் கம்பி
படமரக்கால் - படமரத்தாங்கி
படமரம் - மடி சுற்றும் மரம். இது நான்குப் பக்கங்களைக்
கொண்டோ அல்லது உருளையாகவோ இருக்கும்
பண்ணை - அச்சுக்குழாய்
பண்ணை ஊசி - அச்சு ஊசி
பண்ணைக்கோல் - இரண்டு விழுது கம்பிகளையும் சமநிலையில்
நிறுத்திக் கட்டப்படும் கோல்
பண்ணை போடுதல் - அச்சுக்குழாய் போடுதல்
பத்தை - ஒரு பத்தை
பலகை - படமரத்தின் நான்குப் பக்கங்களில் ஒன்று
பல்சக்கரம் - உருளைப் பாவில் கயிற்றை விடுவிக்கும் (பாவை
விடுவிக்கும்) சக்கரம்
பல்லை - நூல் சுற்றும் ஓர் கருவி
பல்லை ஊசி - நூல் சுற்ற பல்லையைப் பொருத்தும் ஊசி
பாவடி - தெருவில் பாவு போடுமிடம்
பாவு - துணி நெய்வதற்குத் தகுந்தாற்போல் நூல்களைப்
பக்குவப்படுத்திச் சுற்றப்பட்டிருக்கும் ஓர்
அமைப்பு. இது, பாவுசுத்தியாலோ
உருளையாலோ சுற்றப்பட்டிருக்கும்
பாவு ஓடுதல் - பாவு ராட்டினத்தால் பாவை உருவாக்குதல்
பாவுக்கோல் - பாவின் இரண்டு முனைகளிலும் வைக்கப்பெறும்
கோல்
பாவுசுத்தி - பாவு சுற்றப் பயன்படும் கெடை
பாவுசுத்தும்கோல் - பாவு சுற்றும் உருளை
பாவு தோய்தல் - தெருவில் பாவைப் பக்குவப்படுத்துதல்
பாவுபொணைத்தல் - பாவை இணைத்தல். புதிய பாவையும் பழைய
பாவையும் இணைத்தல்(நுமுட்டுதல்)
பாவுராட்டினம் - பாவாக்கும் உருளை
பில்லூறு - வெட்டிவேரினாலான ஓர் கருவி. இது, பாவில்
பசை போடப்பட்ட பின் இழைகள்
ஒன்றுடனொன்று ஒட்டிக்கொள்ளாமல் பிரிக்கப்
பயன்படுவது
பில்லூறுகட்டை - பில்லூறை இழுத்துச் செல்லும் ஓர் கோல்
பீஸ் - எட்டு கெஜத்துணி. இதனை மடி என்றும்
அழைப்பர்
புணி - இழை, மேலும் கீழும் முறையாக ஒன்றுவிட்டு
ஒன்று என மாறிமாறி அமைந்த ஓர் அமைப்பு
புணி கட்டுதல் - இழை அறுந்து புணியில் சிக்குதல்
புணி கயிறு - புணியில் உள்ள கயிறு
புணிகோல் - புணியிலுள்ள கோல்
புணிமுடி - புணி முடிச்சு. புணியை உருவாக்கி புணியின்
இறுதியில் இடப்படும் முடிச்சு
பெரல் - பண்ணைக்கோல் மற்றும் மிதியடி(மெருடி)யால்
புணியை உருவாக்கும் உருளை
பெரல் கயிறு - பெரலுக்கும் பண்ணைக் கோலுக்குமிடையே
கட்டப்பட்ட கயிறு
பெரூட்டம் - கையால் நூல் சுற்றும் வேல் வடிவில்
உருண்டையான ஓர் கருவி
பேட்டு - துணியில் கூடுதலாக இழைகளைச் சேர்த்து
வண்ண ஓவியங்கள் உருவாக்கும் ஓர் அமைப்பு
பேட்டுக்கம்பி - வண்ண ஓவியங்களை உருவாக்கும் இழைகள்
செல்லும் விழுதுகளைக் கொண்ட ஓர் கம்பி
பேட்டுக்கயிறு - பேட்டுக் கம்பியை இழுக்கும் கயிறு
பேட்டு மூட்டை - பேட்டுக் கம்பியைச் சமநிலையில் வைத்திருக்கும்
மணல்முடிச்சு
பேல் - நூல் கட்டுகள் 144 கொண்ட ஓர் கட்டு
பொணைத்தல் - நூல் இணைத்தல், நூல் பிணைத்தல்
பொந்து - பத்து சிலப்பை கொண்ட ஓர் நூல் கட்டு
பொந்துகட்டு - பத்து சிலப்பைகளையும் ஒன்றன்பின் ஒன்றாகச்
சேர்த்து கயிற்றால் கட்டப்பட்டது
பொறை - துணி மடிப்பிலுள்ள அடுக்கு
மடக்கு - தார் வைக்கும் மண்ணாலான தட்டு
மடி - எட்டு கெஜத் துணி
மடிக்கம்பி - மடியிலுள்ள ஒத்தை பத்தையில் நுழைக்கும் ஓர்
கம்பி
மடிக்குறி - எட்டாவது கெஜத்தைக் குறிக்கும் மூன்று
அடையாளம். இது முக்குறி எனப்படும்
மடிக்கோல் - மடி சுற்றும் கோல்
மரக்கால் - நூல் சுற்றும் ஓர் கருவி
மிந்தண்டு - முன் தண்டு. பண்ணைக்கு முன்னால் பாவைத்
தாங்கி வரும் ஓர் தண்டு
மிந்தண்டுக்கால் - முன்தண்டுத் தாங்கி
முக்குறி - மூன்று அடையாளம்
மெருடி - மிதியடி. இது புணியை உருவாக்கக் காலால்
மிதிக்கப்படுவது
மெருடி ஆணி - மிதியடித்தாங்கி
மெருடிக்கம்பி - இரண்டு மிதியடிகளையும் இணைக்கும் ஓர் கம்பி
மெருடிக்கயிறு - பண்ணைக் கோலையும் மிதியடியையும்
இணைக்கும் கயிறு
மேல்தார் - குழலில் நூலை மேல் பக்கமாகச் சுற்றப்படுவது
ரெட்டு - இரண்டிழை, இணையிழை
ரெட்டைபத்தை - இரண்டு பத்தை
ரோல் - உருளை
ரோல்கயிறு - ரோலிருந்து(உருளை) பாவை விடுவிக்கும் கயிறு.
இதனை வலிகயிறு என்றும் அழைப்பர்
ரோல் கால் - உருளைத்தாங்கி
வலிகயிறு - பாவை விடுவித்து இழட்டையை சமஅளவு
இழுவிசை கொடுக்கும் கயிறு
விசை முள் - நெய்யும் போது மடியின் இருமுனைகளையும்
ஒரே அளவு இழுவிசை இருக்க சிம்பிலின்
இரு முனைகளிலும் கட்டியிருக்கும் கூர்கம்பி
விசைக்குச்சி - விசைமுள் பொருத்தப்பட்டுள்ள மெல்லிய குச்சி
விழுது - நூல் செல்லும் கண்ணுள்ள கம்பி
விழுதுக்கண் - விழுதிலமைந்துள்ள நூல் செல்லும் துவாரம்
விழுதுக்கம்பி - விழுதுகள் கோர்க்கப்பட்ட கம்பி
விழுதுக்கோல் - விழுதுக்கம்பியின் மேலும் கீழும் சமனாகக்
கட்டப்பட்ட கோல். இது சதுரமாகவும்,
செவ்வகமாகவும் உருளையாகவும் இருக்கும்.
நலிந்துவரும் கைத்தறித் தொழிலில் வழங்கப்பெற்று வரும் இக்கலைச்சொற்கள் தொழிற்பெயராகவும், வினைப்பெயராகவும், பொருட் பெயராகவும், காரணப் பெயராகவும் அமைந்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக