வியாழன், 13 செப்டம்பர், 2018

குமாரபுரி முருகன் மும்மணிக்கோவை

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் 50,000க்கும் மேற்பட்ட இனிய செந்தமிழ்ப் பாக்களை இயற்றியுள்ளார்.  இப்பாக்களைப் பல்வேறு வகையான யாப்பு மற்றும் இலக்கிய வடிவங்களில் அமைத்திருக்கிறார்.  இதனை அவரே ஒரு பாடலில்,

"மும்மணிக் கோவைபல, மாலைபல அந்தாதி
மூவகைய பல,இன் னவா
முதுநெறிப் பனுவல்பல, புதுநெறிப் பனுவல்பல
முத்தமிழ்ச் சுவை வழாமல்....."

எனத் தெளிவுறுத்துகின்றார்.  இப்பாடலில் 'மும்மணிக்கோவை பல' என முதல் வரியிலேயே குறிப்பிடுகின்றார்.  மாலை மற்றும் அந்தாதி நூல்களைக் காட்டிலும் மும்மணிக்கோவை நூல்கள் அதிகம் செய்திருக்கின்றார் என்றும், இவ்விலக்கிய வடிவம் அவருக்கு விருப்பமானது என்றும் எண்ணத் தோன்றுகிறது.  ஆனால் இன்று மாலைகளைக் காட்டிலும் அந்தாதிகளைக் காட்டிலும் மும்மணிக்கோவைகள் குறைவாகவே (குமாரபுரி முருகன் மும்மணிக்கோவை, திருவையாறு முருகன் மும்மணிக்கோவை, புதுவை ஆவனவீதி மும்மணிக்கோவை) கிடைக்கின்றன.  மேலும் பல மும்மணிக்கோவைகள் எழுதி நமக்குக் கிடைக்காமல் போய்விட்டிருக்கலாம்.  இங்குக் 'குமாரபுரி முருகன் மும்மணிக்கோவை' என்னும் நூல் பற்றி இவ்வாய்வு அமைகிறது.

குமாரபுரி

குமாரபுரியைத் திருச்சேஞ்ஞலூர் என்றும் அழைப்பர்.  இது முருகப்பெருமான் தலமாகும்.  முருகப்பெருமான் தாருகாசுரனுடன் யுத்தம்செய்து தங்கிய இடமே குமாரபுரி.  இவ்வூரைப் பற்றி - இவ்வூரில் எழுந்தருளியிருக்கும் தெய்வங்களைப் பற்றிப் பல்வேறு வகையான இலக்கியங்கள் தோன்றியுள்ளன.  அவைகள் கண்ணன் பதிகம், கணபதி பதிகம், கந்தமாலை, குமரன் பதிகம், கூத்தாடும் சிவன் பதிகம், கூத்துச் சிவன் பதிகம், சண்முகசாமி பதிகம், சண்முகசாமி வகுப்பு, சண்முகத் திருப்புகழ், சண்முகன் வகுப்பு, சிவகாமி பதிகம், சிவபெருமான் தோத்திரம், சைவப்பதிகம், சைவச் சந்தப்பன் பதிகம், திருவருள்நாயகர் பதிகம், நடராசர் பதிகம், நடராசர் வகுப்பு, பெரியநாயகி பதிகம், பெரியநாயகியம்மை தோத்திரம், முத்தாலம்மன் பதிகம், முத்தாலம்மை ஊஞ்சல், மும்மணிக்கோவை, முருகன் பதிகம், வரதராசப்பெருமாள் பதிகம், விநாயகர் பதிகம், வில்வநாயகர் பதிகம், வில்வவிநாயகர் பதிகம், விஷ்ணு பஞ்சாயுதத் திருப்புகழ், விஷ்ணு பதிகம் ஆக 29 வகையான இலக்கியங்களைச் சுட்டலாம்.  இந்நூல்களில் கணபதி பதிகம்(12), முருகன் மும்மணிக்கோவை(32), சண்முகன் வகுப்பு(1), சிவன் பதிகம்(1), விஷ்ணு பதிகம்(12), பெரியநாயகி பதிகம்(12), நடராசர் பதிகம்(12), முருகன் பதிகம்(13), விஷ்ணு பஞ்சாயுதத் திருப்புகழ்(7), திருவருள் விநாயகர் பதிகம்(12), திருப்புகழ்(8), கந்தமாலை(38), முருகன் பதிகம்(13), திருக்கூத்து சிவன் பதிகம்(12), அம்பிகை - விநாயகர் பாடல்(2), முருகன் திருப்புகழ்(1), சிவன் சந்தப்பன் பதிகம்(12), கண்ணன் பதிகம்(12), சிவகாமசுந்தரி பதிகம்(12), சண்முகசாமி பதிகம்(13), சண்முகசாமி வகுப்பு(1), ஓரடிக் கீர்த்தனை(1), கூத்தாடும் சிவன் பதிகம்(12), திருவருக்கரந்த பதிகம்(13), சிவன் பவனிப் பதிகம்(13), நடராஜர் வகுப்பு(1) ஆக 26 நூல்களில் 277 பாடல்களை வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இயற்றியிருக்கின்றார்.

மும்மணிக்கோவை

'ஒருபொருள் பற்றி ஒரு யாப்பில் அமைந்த இலக்கிய வகைகள் பண்டைக் காலம் முதல் வழங்கிவர, பக்திக் காலம் ஒரு இலக்கியத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட யாப்பு விவரலை வளர்த்தது.  சிலப்பதிகாரம் பல பா வடிவுகள் பயின்ற நிலையைத் தருவதை இதன் முன்னிலையாகக் கொள்ளலாம்' என்பார் ச.வே. சுப்பிரமணியனார் (தமிழ் இலக்கிய வகையும் வடிவும், ப.458).  அதன்பின் காரைக்காலம்மையார் கட்டளைக் கலித்துறையும் வெண்பாவுமாகிய இருவகைப் பாக்களும் ஒன்றன்பின் ஒன்றாக அந்தாதித் தொடையில் தொடுத்துவர இருபது செய்யுட்களால் திருவிரட்டை மணிமாலையைப் பாடியருளினார்.  அவ்விருவகைப் பாக்களுடன் ஆசிரியப்பாவையும் சேர்த்துக்கொண்டு சேரமான் பெருமாள் நாயனார் அவர்கள் கி.பி.8ஆம் நூற்றாண்டில் மும்மணிக்கோவையைப் பாடினார்.  இவர் பாடிய 'திருவாரூர் மும்மணிக்கோவை'யே மும்மணிக்கோவைகளுள் காலத்தால் முந்தியது எனலாம்.  இந்நூல் தோற்றத்திற்குப் பிறகு பதினோராம் திருமுறையில் ஏழு மும்மணிக்கோவைகள் இடம்பெற்றிருப்பதைக் காணலாம்.  சேரமான் பெருமாள் நாயனாரைப் பின்பற்றி நக்கீரதேவ நாயனார், இளம்பெருமானடிகள், அதிராவடிகள், திருவெண்காட்டடிகள், நம்பியாண்டார் நம்பி ஆகியோர் இவ்விலக்கிய வகையை மேலும் வளர்த்தனர்.

சிற்றிலக்கிய வகை 96இல் இம்மும்மணிக்கோவையும் ஒன்று.  ஆசிரியம், வெண்பா, கலித்துறை ஆகிய மூன்றும் முறையே முப்பது பாடல்களால் அந்தாதி முறையில் வருவது மும்மணிக்கோவை.  இதனைப் பாட்டியல் நூல்கள் அனைத்தும் குறிப்பிடுகின்றன.  குறிப்பாக,

"அகவல் வெண்பாக் கலித் துறையின்
கலித்துறை வரவந் தாதி யாகி
முறைமையின் இயல்வது மும்மணிக் கோவை" (பன்னிரு.262)

எனக் கூறுவதைக் காணலாம்.  தமிழிலக்கிய வகைக்குப் பெருமை சேர்க்கும் இம்மும்மணிக்கோவை தமிழிலக்கியத்துள் பல நூல்கள் இருப்பதைக் காண்கிறோம்.  அவைகள், அகிலாண்டநாயகி மும்மணிக்கோவை, ஆறுகாடு சுப்பிரமணியசுவாமி மும்மணிக்கோவை, ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை, இராசீபுரம் மும்மணிக்கோவை, ஏற்றைக்கடை மும்மணிக்கோவை, கருவை மும்மணிக்கோவை, குமரகுருபரர் மும்மணிக்கோவை, குமரவேள் மும்மணிக்கோவை, கொழுந்துமாமலை முருகவேள் மும்மணிக்கோவை, சிதம்பரம் முருகவேள் மும்மணிக்கோவை, சிதம்பரம் மும்மணிக்கோவை, சிவபெருமான் திருமும்மணிக்கோவை, ஞானசித்தர் மும்மணிக்கோவை, திருக்கழுமல மும்மணிக்கோவை, திருச்செந்தூர் மும்மணிக்கோவை, திருத்தணிகை மும்மணிக்கோவை, திருநெல்லை மும்மணிக்கோவை, திருப்பரங்கிரி மும்மணிக்கோவை(2), திருவலஞ்சுழி மும்மணிக்கோவை, திருவாரூர் மும்மணிக்கோவை, திருவாவடுதுறை சுப்பிரமணியதேசிகர் மும்மணிக்கோவை, திருவிடைமருதூர் மும்மணிக்கோவை, திருவேங்கட மும்மணிக்கோவை, திருவொற்றியூர் முருகர் மும்மணிக்கோவை, நம்பெருமாள் மும்மணிக்கோவை, பண்டார மும்மணிக்கோவை, மதுரை மும்மணிக்கோவை, மயிலாசல முருகர் மும்மணிக்கோவை(2), முத்தால நாயக மும்மணிக்கோவை, முதலாழ்வார்கள் மும்மணிக்கோவை, மும்மணிக்கோவை(3), மூத்த பிள்ளையார் மும்மணிக்கோவை, வலிவல மும்மணிக்கோவை என 39 மும்மணிக்கோவைகளை மட்டும் டாக்டர் ந.வீ. செயராமன் அவர்கள் குறிப்பிடுகின்றார்(சிற்றிலக்கிய அகராதி, பக்.287-288).  இவரின் நூற்பட்டியலில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் எந்தவொரு மும்மணிக்கோவையும் இடம்பெறவில்லை.  மேலும் ஓலைச்சுவடிகளில் தத்துவராயரின் சொரூபானந்தர் மும்மணிக்கோவை, சிவக்கொழுந்து தேசிகரின் துறைசை மும்மணிக்கோவை, பலபட்டடை சொக்கநாதப் புலவரின் மதுரை மும்மணிக்கோவை, பட்டினத்தாரின் சீகாழி மும்மணிக்கோவை போன்ற நூல்கள் இருப்பதைக் காண்கிறோம்.  எனவே மும்மணிக்கோவை இத்தனை என்று உறுதியிட்டுச் சொல்லமுடியவில்லை. என்றாலும் ஐம்பதிற்கும் மேற்பட்ட மும்மணிக்கோவை நூல்கள் தமிழிலக்கியத்துள் இருக்கின்றன என்று உறுதியாகக் கூறலாம்.

குமாரபுரி முருகன் மும்மணிக்கோவை

குமாரபுரியில் குடிகொண்டிருக்கும் முருகப்பெருமான் மீது வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளால் பாடப்பெற்றது இந்நூல்.  காப்பு, நூற் பயன் உட்பட முப்பத்திரண்டு பாக்களுடையது.  அகவல், வெண்பா, கட்டளைக்கலித்துறை என மும்மணிக்கோவை இலக்கண மரபில் அமைந்தது.  சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகப் பருவ இதழ், தொகுதி 10, பகுதி 2, 1957இல் புலவர் மு. பசுபதி அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு இந்நூல் வெளியாகியுள்ளது.  இதன் சிறப்புகளை இனி ஆராய்வோம்.

சுவாமிகளின் பார்வையில் குமாரபுரி

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் குமாரபுரி எனும் திருத்தலம் பற்றி 29 வகையான நூல்களை இயற்றியிருக்கின்றார்.  இந்நூல்களில் இத்தலச் சிறப்பைப் பலவிதமாக விதந்தோதுகின்றார்.  குமாரபுரி முருகன் மும்மணிக்கோவையில் அவர், கைகூப்பிக் கும்பிடுவார்க்குக் குமாரபுரி முருகன் குடிகொண்டு இருக்கும் இவ்வூரைப்போல் முற்றிலும் நம்பிடும் ஊர் வேறு இல்லை என்றும், தீங்காளர் போறாத ஊர் என்றும், பூவுலகும் வானுலகும் பரவி நிற்கும் ஊர் என்றும் பலவாறு கூறுகின்றார்.  இதனைக்,

"......     .......      ........      கரங்கொண்டு
கும்பிடுவார்க் கிந்தக் குமாரபுரி போலமுற்று
நம்பிடுமூ ரில்லை சொன்னேன் நான்" (20:2-4)

"தீங்காளர், போற்றாக் குமாரபுரி" (29:2-3)

"யிகதலமும் குலவுந், பொற்புறு குமார புரி" (13:12-13)

"கொந்தலர் சோலைக் குமாரபுரி" (4:2)

எனச் சுவாமிகளின் வாக்கால் உணரலாம்.

குமாரபுரியான் செயல்கள்

திருவிளையாடல்களில் சிவபெருமானை அவர்மகன் முருகப்பெருமான் விஞ்சிவிட்டார் என்றே சொல்லவேண்டும்.  தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்பது இவர்களின் திருவிளையாடல்களைப் பொருத்தமட்டில் சரியே.  முருகப்பெருமானின் திருவிளையாடல்களைச் சுவாமிகள் குமாரபுரி மும்மணிக்கோவையின் முதற்பாடலிலேயே,

"பலவிளை யாடற் பயின்றுவாழ் குகனே" (1:10)

என்று கூறுபவர்,

"சீதரன் முதலோர் தெண்டனிட் டேத்தச்
சேந்திவர்க் கிரியெனத் திகழ்ந்து
முந்துமெஞ் ஞான மொழிபகர் குகனே" (10:8-11)

"புகழ்பெருங் குமார புரியில்
நிகரில்வேல் பிடித்து நின்றசே வகனே" (22:13-14)

"கிழவனுருக் கொண்டு குறக்கிள்ளை யிடஞ்சென்றாய்" (26:1)

எனப் பலவாறாகக் குறிப்பிடுகின்றார்.

குமாரபுரியான் திருப்பெயர்கள்

முருகப் பெருமானைத் தண்டபாணி சுவாமிகள் கந்தா, குமரா, வேலவா, குகனே, சண்முகனே, ஈசன் மகனே, சேவகனே, தேசிகனே, கொற்றவனே, கைத்தெய்வமே, குருபரனே, கோமானே, சரவணனே, மயிற்கை வானவனே, கிழவோனே, பெரியவனே, காங்கேயனே, காரணனே எனப் பலவாறாகக் குறிப்பிடுகின்றார்.  இதனைத்,

"தேசிகனை வேலெடுத்த சேவகனைச் செம்பவளப்
பாசியணி வாட்கினிய பான்மையனை" (8:1-2)

"இலையார்ந்த வெண்பொடி நல்கியன்" (9:1)

"குகனைக் குமாரபுரிக் கொற்றவனை யீசன், மகனை" (11:1-2)

"குமாரபுரி யாளும் வேற்படைக் கதைத்தெய்வமே" (12:4)

"சிற்பர மாகித் திகழ்ந்தசண் முகனே" (13:14)

"சேலார் கட்குஞ் சரிபாகா! புனத்துச் சிறுகொண்கா!
கோலா! கலாநங் குமார புரியிற் குருபரனே!" (15:3-4)

"குமாரபுரியின், நம்புநர் வேண்டுவ நல்கி
யம்புவி புரக்கு மயிற்கைவா னவனே" (16:7-9)

"உறையிரந் துற்றமெஞ் ஞானானு பூதியுடையவர்" (18:1)

"அழகியபொற்,
றோகைமயில் வீரா! துகடீர் குமாரபுரி
வாகைவடி வேற்கை யிறைவா" (16:2-4)

"சேவேறு வார்க்கினிய தேசிகனைச் செங்கமலப்
பூவேறு வானைப் புடைத்தானை" (23:1-2)

"பொந்தமர் கிள்ளை" (24:4)

எனக் குமாரபுரி மும்மணிக்கோவைப் பாடல்களில் குறிப்பிடுவதால் அறியமுடிகிறது.

குமாரபுரியானின் வடிவம்

முருகப்பெருமான் ஒவ்வொரு தலத்திலும் அத்தலத்திற்குத் தக்கவாறு தன்னுடைய வடிவத்தை அமைத்துக்கொண்டிருக்கின்றான்.  குமாரபுரியில் குடிகொண்டிருக்கும் முருகப்பெருமான் வண்ணமயிலின் மேல் கையில் வேல்கொண்டு அமர்ந்திருக்கின்றான்.  இதனைச் சுவாமிகள்,

".......   வன்னமா யிரம்பெறு மயின்மேல்
மின்னகும் வேலொடு விளங்கு தேசிகனே" (7:15-16)

"தோகையில் வீரா! துகடீர் குமாரபுரி
வாகைவடி வேற்கை யிறைவா" (16:2-3)

எனக் குறிப்பிடுகின்றார்.

சுவாமிகளின் கூற்று

சுவாமிகள் முருகப்பெருமானிடத்து மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.  சைவம், வைணவம் என இருவேறு சமயங்களில் நூல்கள் இயற்றியிருந்தாலும் சைவத்தில் முருகப்பெருமானையே முழுமுதற் கடவுளாக எண்ணிப் பல்லாயிரம் பாடல்கள் இயற்றியிருக்கின்றார்.  இப்பாடல்களில் சுவாமிகளின் கூற்றுகள் பல வெளிப்படுவதைக் காணமுடிகிறது.  முருகப்பெருமான் தனக்குக் காட்சி தரவில்லை என்பதற்காகத் தானெழுதிய பல நூல்களை அழித்திருக்கின்றார்.  அழித்து ஆக்கியும் இருக்கிறார்.  கிடைத்த நூல்களில் சுவாமிகளின் கூற்றைத் தெளிவாக அறியமுடிகிறது.  குமாரபுரி முருகன் மும்மணிக்கோவையிலும் சுவாமிகளின் கூற்றுகள் பல இடம்பெற்றிருக்கின்றன.

குமாரபுரியில் வீற்றிருக்கும் முருகப்பெருமானைப் போற்றிப் பாடாத புலவர்கள் துயரடைவர் என்பதை,

"சேவேறு வார்க்கினிய தேசிகனைச் செங்கமலப்
பூவேறு வானைப் புடைத்தானைப் - பாவேறுஞ்
செல்வக் குமாரபுரிச் சேந்தனைப்போற் றாப்புலவர்
சொல்வக் கணைநந் துயர்" (23)

என்கிறார்.  மேலும் அவர்,


  • நானென்ற அகந்தைப் பேய் என்னை வந்து முற்றிலும் ஆட்கொள்ளுவதற்கு முன்னால் தானென்ற நன்னிலையை எனக்கு என்று அளிக்கப் போகிறாய் சண்முகக் கடவுளே! (21)
  • குமாரபுரியில் மயிலின் மேல் வேலாயுதத்தோடு வீற்றிருக்கும் முருகா! உன்னுடைய வேலாயுதப் பூசையில் ஆசை கொண்ட என்னை உருத்திராக்கம் அணிவார் புகழும் நாளை என்று எனக்கு  வருவிக்கப் போகிறாய் (15)
  • உயிர்க்கொலை செய்ய சற்றும் அஞ்சாதவர்களும் பொல்லாதவர்களும் வாழுகின்ற இவ்வுலகத்தில் உன்னையே நினைத்திருக்கும் என்னைத் தாழ்வுபடுத்திப் பார்ப்பது உனக்குத் தர்மமா?(10)
  • சளி நோயால் தவிக்கும் என்னைச் சீர்செய்ய வரமாட்டாயோ? நீ என்னிடம் சொன்னதெல்லாம் பொய்யோ? (12)
  • உன்னையே முழுமுதற் கடவுளாக ஏற்றவர் அன்பினாற் சொன்ன சொற்களை என்னிடம் கூறுக என்று உன்னிடம் கேட்க எனக்குத் தகுதி யில்லையோ(5)


என்றவாறெல்லாம் வினாவெழுப்புகின்றவர்,


  • எவரெவரெல்லாம் என்னை எவ்வாறெல்லாமோ இகழ்ந்தபோதும் நீ அவர்களுக்கெல்லாம் அருள் தருகின்றாய்(19)  
  • எக்காலத்தும் யாவர்க்கும் அஞ்சாத குமரா! உன்னையே கதியென்று இருக்கும் என்னை எக்காலத்தும் எதற்கும் அஞ்சாமல் காத்தருள்வாய்.  இன்சுவை பொருந்திய கடலை உருண்டை, எள்ளுருண்டை, பயறுருண்டை, கனிந்த பல வகையான பழங்களின் மீது விருப்பமாக இருக்கின்ற குமரா! என்மீதும் விருப்பம் கொண்டு என்னைக் காத்தருள்வாயே (2)
  • காப்பாற்று! காப்பாற்று! என்று எத்தனை நாள் உன்னைக் கேட்டேன்.  காக்க மறந்துவிட்டாயோ!  உன்னை நாடாதவர்களுக்கும் கூட உனதருள் இனிதே கிடைத்துவிடுகிறது.  ஆனால் உன்னையே தினந்தோறும் துதித்துக் கொண்டிருக்கும் நான் உனக்கு ஆகாதபிள்ளையாகிவிட்டேனா? குமாரபுரிக் கோயிலை வீடென்று வாழ்கின்ற கந்தப்பெருமானே! எனக்கு என்று காட்சி கொடுக்கப் போகிறாய்(3)
  • எவ்வகைத் துன்பம் என்னை வந்து ஆட்கொண்ட போதும் தேவர்கள் பாற்கடலைக் கடைந்து அமுதுண்டு வாழ எண்ணியது போல் நான் என்றும் வாழ நினைத்ததில்லையே.  அப்படிப்பட்ட நான், வாழும் நாளெல்லாம் உன்னையே நினைத்து உன்னுடைய திருவிளையாடற்களிலேயே மூழ்கிக் கிடக்கும் நான், வோறொருவரை நினைப்பதும் நினைத்துப் பாடலியற்றுவதும் இல்லையே(1) அப்படிப்பட்ட எனக்கு மட்டும் காட்சிதர மறுப்பது ஏன்?

என்று வினவுகின்றார்.

முருகனைப் போற்றுதல்

உன்னுடைய அடியார்களுக்கு இன்னல் செய்வார்க்கு இன்னலும் மற்றவர்களுக்கு இன்பமும் அளிப்போனே! சிவன், திருமால், நான்முகன் ஆகியோர் தாங்களே உயர்ந்தவர்கள் என்றும், தங்களின் சமயமே உயர்ந்தது என்றும் வாதிட்டபோழ்து அவர்களுடன் தன்னுடைய பேரறிவாற்றலால் வாதிட்டுத் தானே எல்லோரைக் காட்டிலும் உயர்ந்தவன் என்று அறிவுருத்தி நின்றவனே!(4) என்று குமரப்பெருமானின் அறிவுத் திறனைப் புகழ்கின்றார் சுவாமிகள்.

குன்றுதோறும் தன்னுடைய சேவற் கொடியை நாட்டிவிட்டு குமாரபுரியில் மயில்மேல் வேலுடன் காட்சி தந்து அடியவர்களுக்காக வாழுகின்ற குமரா,

"முற்றுநின் செயலென் மொழிதரு மென்னை
யெற்றுறுந் தொழிலு மென்வாய்ச் சொற்கள்" (25:1-2)

என்றே இருக்கும் நான், உன்னை விரும்பி உன்னோடு புணர்ந்த அழகுத் தமிழில் உன்னைப் போற்றிப் பாடுகின்றேன்.  என்னைப் புறந்தள்ளாமல் ஏற்று அருள்புரிய வேண்டும்(19) என்றவர், உன்னுடைய திருவடியையே தினந்தோறுந் துதிக்கும் அடியவர்களுக்கும் எனக்கும் நீர் என்ன செய்யவேண்டும் தெரியுமா? அவர்களை, 'பிறைமுடிக் கும்படி செய்வாய்' (27:4) எனக் கேட்கின்றார்.

இவ்வாறாகத் தண்டபாணி சுவாமிகள் முருகப்பெருமானிடம் வேண்டியும் உருகியும் கட்டளையிட்டும் எனப் பல நிலைகளில் செல்வதைக் காண்கிறோம்.  மேலும், முத்தியடைய விரும்புவோர் முருகப்பிரானை வணங்கி எளிதில் முத்தி அடையலாம் என்றும், ஆதி முதல் தெய்வம் முருகப்பெருமானே என்றும், இயற்கைத் தெய்வம் என்றும், முருகனே மற்ற கடவுளர்களைக் காட்டிலும் உயர்ந்தவர் என்றும் கூறுகின்றார்.  இப்படிப்பட்ட இவரே 'தன்னை வன்மாய வனிதையர் வலையினில் ஆட்பட்டு அலைமோதாது நின்திருவடியின் நிழலில் என்றும் இருக்க அருள்தா' என்று வரம் கேட்கின்றார்.  நாமும் அவ்வரமே கேட்போமாக.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக