தொல் பழங்காலந் தொடங்கி உலக நாடுகளில் விலங்கினங்கள் குறித்த அறிவு நிலவி வந்துள்ளது என்பதற்குப் பல வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்பதற்குப் பல அறிவியல் உண்மைகள் நிறுவப்பட்டுள்ளன. ‘ஸுவாலஜி’ எனும் கிரேக்கச் சொல் ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் விலங்கியலைக் குறிக்கும் பொதுச்சொல்லாய் நிலைபேறாக்கம் பெற்றுள்ளது. சிந்து சமவெளி கண்டுபிடிப்புகளில் விலங்கு வடிவங்களும் முத்திரைகளும் காணப்படுகின்றன. பழந்தமிழர்களிடையே விலங்குகள் குறித்த அறிவு மிகத் தெளிவாக இருந்துள்ளது என்பதற்குத் தொல்காப்பிய மரபியல் சான்று பகர்கின்றது. பதினைந்து வகைப்பட்ட ஆண்பாற் விலங்குகள் பற்றியும், பதின்மூன்று வகைப்பட்ட பெண்பாற் விலங்குகள் பற்றியும், அவ்வவற்றின் இளமைப்பெயர்கள் பற்றியும் தொல்காப்பிய மரபியல் நூற்பாக்கள் (நூற்பா. 2 முதல் 26) உணர்த்துகின்றன. ஓரறிவு உயிர் முதல் ஐயறிவு உயிர் வரையிலான பாகுபாடுகளையும் அவற்றிற்கான உணர்வுகளையும் தெளிவான அறிவியல் அடிப்படையில்,
“ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே” (தொல்.மரபு.27)
என்ற நூற்பா தெளிவுபடுத்தும். அகப்பொருள் துறைகளின் கருப்பொருளாக விலங்கினங்கள் நிலவாரியாகச் சேர்க்கப்பட்டிருப்பது விலங்குகள் குறித்த அறிவை வலுப்பெறச் செய்கின்றது. சங்க இலக்கியத்தில் விலங்குகள் இடம்பெற்றுள்ள விதம் பற்றி இனிக் காண்போம்.
செம்முகமந்தி, மாமுகமுசு, நரைமுக ஊகம், கருங்கலை, வருடை, ஆமான், இரலை, நவ்வி, மரையான், கலைமான் (உழை), கடமா, கேழல், கணநரி, கோநாய், தீநாய், செந்நாய், எண்கு, வெருகு, வரிப்புலி, புள்ளிப்புலி, யானை, நீர்நாய், இல்லெலி, கருப்பை, வௌ¢ளெலி, அணில், வெளில், முயல், முளவுமா, தீர்வை, மகண்மா (தேவாங்கு), பன்மயிர்ப் பேரெலி, பெருமீன் (பனைமீன்), வாவல், கவரிமா போன்ற முப்பதைந்து விலங்குகள் பற்றிச் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. இவ்விலங்குகளின் செயற்பாடுகள், அவ்வவற்றின் குணங்கள், உடலமைப்புகள், பயன்பாடுகள் பற்றி இவ்வியலக்கியப் பாடல்களில் பரவலாகக் காணப்படுகின்றன. இப்பாடல்களில் விலங்குகள் பற்றித் தெரியலாகும் சில சிறப்புக் கூறுகளை இக்கட்டுரையில் காணலாம்.
குரங்கும் பாம்பும்
விலங்குகளின் செயற்பாடுகளில் இருந்து அவற்றிற்கான பழமொழிகள் தோன்றியுள்ளன. பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பர். குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்பர். குரங்கிற்கும் பாம்புக்கும் உள்ள உறவு வித்தியாசமானது. குரங்குகளுக்குப் பாம்பைக் கண்டால் மிகவும் அச்சம் மேலிடும் என்று விலங்கியலார் கூறுகின்றனர். மலைப்பாம்புகள் மரத்தில் விழுதுகள்போல் தொங்கிக் குரங்குகளைப் பிடித்துக் கொன்று உண்ணும் என்பர். இதன் காரணமாகவே குரங்குகளுக்குப் பாம்பைக் கண்டால் அச்சமும் நடுக்கமும் ஏற்படுகின்றன எனலாம். இச்செய்தியைப்,
“பைங்கண் ஊகம் பாம்புபிடித் தன்ன
அங்கோட்டுச் செறிந்த அவிழ்ந்துவீங்கு திவவின்” (சிறுபாண்.221-222)
என்று சிறுபாணாற்றுப்படை கூறுகிறது. ஊகக் குரங்கு பாம்பிற்கு அஞ்சிப் பாம்பைப் பிடித்துக்கொண்டு, விட்டுவிட்டால் கடித்து விடுமோ என்று அஞ்சிப் பிடித்த பிடியைத் தளரவிடாமல் இறுக்கிப் பிடித்துக் கொள்ளும் என்கிறது. இச்செய்தியை உள்ளடக்கிய சிற்பம் ஒன்று விசயநகர் மன்னர்களின் அழிந்த தலைநகரான அம்பியில் இன்றும் இருப்பதைக் காணலாம். இலக்கியச் செய்திகள்-காட்சிகள் பின்னாளில் சிற்பங்களாக வளர்ந்திருப்பது-வளர்த்திருப்பது தமிழர்கள் பெருமைப்படக் கூடிய செய்தியே. தமிழிலக்கியக் காட்சிகள் பல இவ்வாறு ஓவியங்களாகவும், சிற்பங்களாகவும், கலைச்சின்னங்களாகவும் வரைந்தும், வடித்தும், வார்த்தும் இருப்பது தமிழிலக்கியம் ஏற்றம் பெற்றிருந்தமைக்கு இதுவொரு சான்றாகக் கொள்ளலாம். குரங்கு பாம்பை அச்சத்தின் காரணமாக இறுக்கிப் பிடித்திருப்பதை மனதிற் கொண்டே விடாத பிடியை ‘குரங்குப்பிடி’ என்ற வழங்கு தோன்றிற்று எனலாம். பாம்பிற்குக் குரங்குகள் அஞ்சும் என்பதை,
“அருவரை யிழிதரும் வெருவரு படாஅர்க்
கயந்தலை மந்தி உயங்குபசி களைஇயர்
பார்ப்பின் தந்தை பழச்சுளை தொடினும்
நனிநோய் ஏய்க்கும் பனிகூர் அடுக்கத்து” (அகம்.288)
என்று அகநானூறு சுட்டுவதைக் காணலாம். பாம்பைப் போன்று போலியான உருவ ஒப்புமையுடைய பாம்புச் செடியைக் கண்டு பயந்த குரங்கு பலாப்பழச் சுளையைத் தோண்டினும் பாம்பென்று பயந்து துன்புறும் என்கிறது இப்பாடல்.
சங்க இலக்கிய விலங்கின் வடிவம்
சங்க இலக்கியத்தில் காணப்படுகின்ற விலங்கின் வடிவங்களைப் பல சங்கப் பாடல்கள் விதந்தோதுகின்றன. இருப்பினும் எடுத்துக்காட்டாக சிலவற்றை மட்டும் இங்குச் சுட்டத்தகும்.
சங்க இலக்கியத்தில் இரலை, நவ்வி, மரையான் என்று மூன்று வகையான மான்கள் பற்றிக் குறிப்பிடுகின்றன. இம்மான்களில் இரலை மான் மிகவும் அழகியது என்றும், கருநிறமுடையது என்றும், கழுத்துப் பகுதி கருமையாகவும், கழுத்தின் அடிப்பகுதி வெண்மையாகவும் இருக்கும் என்றும் குறிப்பிடுவர். இந்த வெண்மை-கருமை அமைப்பு ஆண் இரலைக்கே உண்டு, பெண் இரலைக்கு இல்லை என்று விலங்கியலார் கூறுகின்றனர். இதனை மெய்ப்பிக்கும் விதமாக சங்கப் பாடல்கள் அமைந்திருக்கின்றன.
“....இருங்கேழ் இரலை சேக்கும்ப¬லுயர் பதுக்கை” (அகம்.91)
என்னும் அகநானூற்றுப் பாடல் வரியில் ‘இருங்கேழ’ என்ற சொல் அழகிய கருமையைக் குறிப்பதாக அமைந்துள்ளது.
“தண்ணறும் படுநீர் மாந்திப் பதவருந்து
வெண்புறக் குடைய திரிமருப்பு இரலை
வார்மணல் ஒருசிறைப் பிடவவிழ் கொழுநிழற்
காமர் துணையொடு ஏமுற வதிய” (அகம்.139)
என்ற அகநானூற்றுப் பாடல், கார்காலத்து மழைநீரை அருந்தி இரலையின்ஆண்மான் பிடவ மரத்தின் நிழலில் தன்னுடைய துணையுடன் பயமின்றித் தங்கி இருந்து ஓய்வெடுக்கும்போது சாய்ந்துபடுத்து மாடு அசைபோடுவது போல் அசைபோட்டுக் கொண்டு இருக்கும். அந்நேரத்தில் ஆண் இரலைமானின் வயிற்றுப்புறம் வெண்மையாக இருந்தது என்ற இப்பாடலின் கருத்துப்படி இரலைமானின் வயிற்றுப்புறம் வெண்மையாகவும் முதுகுப்புறம் கருமையாகவும் இருக்கும் என்றும் குறிப்பிடும் விலங்கியலாரின் கூற்று ஒத்திருக்கக் காணலாம்.
“நான்முலைப ¢பிணவல் சொலிய கானொழிந்து” (அகம்.248)
“பிணர்ச்சுவல் பன்றி தோன்முலைப் பிணவொடு” (நற்.336)
என்று அகநானூறும், நற்றிணையும் பெண் காட்டுப் பன்றிக்கு நான்கு மடிக் காம்புகள் இருப்பதையும், தோல் போன்ற முலையென்று மடியின் தோற்றத்தை விளக்கியுள்ளதையும் கருத்தில் கொள்ளவேண்டும். மேலும், காட்டுப் பன்றியின் தலையானது கீழே கவிந்து உரல்போன்று காணப்படும் என்கிறது மதுரைக்காஞ்சியும், புறநானூறும்.
“சேணோன் அகழ்ந்த மடிவாய்ப் பயம்பின்
வீழ்முகக் கேழ லட்ட பூசல்” (மதுரைக்.294-5)
“புழற்றலைப் புகர்க்கலை யுருட்டி யுரற்றலைக்
கேழற் பன்றி வீழ வயல” (புறம்.152)
என்ற பாடல் வரிகளிலிருந்து காட்டுப் பன்றியின் முகம் ‘வீழ்முகம்’ என்றும், உரல் போன்ற தலை என்றும் அறியமுடிகிறது. உரல் ஒப்ப காட்டுப் பன்றியின் தலை என்று இங்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது. உரலின் ஒரு பக்கம் அகன்றும், மறுபக்கம் குவிந்தும் சிறுத்தும் இருப்பதைப்போல் காட்டுப் பன்றியின் தலை காணப்படும் என்று கூறி இருப்பது நல்லதொகு உவமையாகும்.
புலியும் யானையும்
புலியும் யானையும் வலிமை மிக்க இரண்டு விலங்கினங்கள். இவ்விரண்டும் காட்டில் எப்போதும் ஒன்றாக இருந்ததில்லை. உணவுக்கான ஒன்றுக்கொன்று போரிட்டுக் கொள்ளும். சங்க இலக்கியத்தில் புலியும் யானையும் போரிடும் செய்திகள் அடங்கிய பாடல்கள் பல இருக்கின்றன. இரவுக் காலத்தில் காட்டில் காணப்படும் புலி யானையைத் தாக்கிக் கொல்வது எளிதன்று. தனித்த பெண் யானையையும் நிரையில் பின்தங்கிய கன்றையும் பெரும்பாலும் புலி தாக்கிக் கொன்றுவிடும் என்பர். புலி ஆண் யானையைக் கொல்வது மிகவும் அரிது.
சங்கப் பாடல்களில் புலியை யானை கொல்வதும், யானையை புலி கொல்வதும், யானையும் புலியும் போரிட்டு ஒன்றையொன்று வெல்ல முடியாது வலியிழந்து புண்களுடன் போவதும் ஆங்காங்கே சுட்டப்பெற்றுள்ளவற்றைக் காணலாம்.
நிரையில் உள்ள ஆண் யானைகள் புலியிடமிருந்து கன்றைக் காத்ததை,
“அருவி ஆர்க்கும் பெருவரைச் சிலம்பின்
ஈன்றணி இரும்பிடி தழீஇக் களிறுதன்
தூங்குநடைக் குழவி துயில்புறங் காப்ப
ஓடுங்களை புலம்பப் போகிக் கடுங்கண்
வாள்வரி வயப்புலி கன்முழை உரறக்” (அகம்.168)
என்ற அகநானூற்றுப் பாடல் விளக்குகின்றது. புலி பாய்ந்ததற்குப் பயந்து பெண்யானை தன்னுடைய கன்றை விட்டுவிட்டு ஓடியதை,
“ஒண்கேழ் வயப்புலி பாய்ந்தெனக் குவவடி
வெண்கோட் டியானை முழக்கிசை வெரீஇக்
கன்றொழித் தோடிய புன்றலை மடப்பிடி
கைதலை வைத்த மையல் விதுப்பொடு
கெடுமகப் பெண்டிரிற் றேரும்” (அகம்.347)
என்ற அகநானூற்றுப் பாடல் விளக்குகின்றது. பெண்யானையின் கன்றைத் தூக்கிக் கொண்டு புலி ஓடுவதை,
“குறுங்கை யிரும்புலிக் கோள்வ லேற்றை
நெடும்புதற் கானத்து மடப்பிடி யீன்ற
நடுங்குநடைக் குழவி கொளீஇய பலவின்
பழந்தூங்கு கொழுநிழ லொளிக்கு நாடற்கு” (ஐங்.216)
என்ற ஐங்குறுநூற்றுப் பாடல் விளக்குகின்றது. யானை புலியைக் கொன்று வென்றதை,
“வயங்குவௌ¢ ளருவிய குன்றத்துக் கவாஅன்
கயந்தலை மடப்பிடி இனனே மார்ப்பப்
புலிப்பகை வென்ற புண்கூர் யானை
கல்லகச் சிலம்பிற் கையெடுத் துயிர்ப்பின்” (ஆகம்.202)
என்றும்,
“இரும்புலி தொலைத்த பெருங்கை வேழத்துப்
புலவுநாறு புகர்நுதல் கழுவக் கங்குல்
அருவி தந்த அணங்குடை நெடுங்கோட்டு” (அகம்.272)
என்றும்,
“கிளையொடு மேய்ந்த கேழ்கிளர் யானை
நீர்நசை மருங்கின் நிறம்பார்த் தொடுங்கிய
பொருமுரண் உழுவை தொலைச்சிக் கூர்நுனைக்
குருதிச் செங்கோட் டழிதுளி கழாஅக்
கன்முகை அடுக்கத்து மென்மெல இயலிச்” (அகம்.332)
என்றும்,
“இரும்புலி தொலைத்த பெருங்கை யானை
வெஞ்சின உருமின் உரறும்” (நற்.353)
என்றும் கூறப்பட்டுள்ள செய்திகளைக் காணும் போது புலி யானையைக் கொல்வது மட்டுமல்ல யானையும் புலியைக் கொல்லும் என்ற கருத்தை வலியுறுத்தச் செய்கிறது.
புலி பசித்தாலும் புல்லைத் திண்ணாது. யானை பசித்தாலும் மாமிசம் உண்ணாது. புலி தனது இரையாக மான்களையும் பன்றிகளையும் கொன்று உண்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கும். புலி தான் கொன்ற விலங்குகளை நெடுந்தொலைவு இழுத்துச் சென்று அல்லது கவ்விச் சென்று பதுக்கி வைத்து உண்ணும். கொன்ற இடத்தில் உண்ணாது இபத்துச் சென்று பதுக்கி உண்ணும் குணம் புலிக்கு உண்டு. புலி தான் உண்டது போக எஞ்சிய உணவைத் தனது குகையிலோ முழையிலோ பதுக்கி வைத்துக் கெட்ட நாற்றம் அடித்துப் புழுத்துப் போனாலும் மீண்டும் மீண்டும் அதையே உண்ணும் இயல்புடையது. புலியின் இக்குணங்களை,
“ஆடுகழை நரலும் அணங்குடைக் கவாஅன்
ஈருயிர்ப் பிணவின் வயவுப்பசி களைஇய
இருங்களி றட்ட பெருஞ்சின உழுவை
நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த
மேய்மணி விளக்கின் புலர ஈர்க்கும்
வாள்நடந் தன்ன வழக்கருங் கவலை
உள்ளுநர் உட்கும் கல்லடர்ச் சிறுநெறி” (அகம்.72)
என்னும் அகநானூற்றுப் பாடல் தெளிவுபடுத்துகின்றது.
காடுகளின் அருகேயுள்ள விளைநிலங்களில் புகுந்து பயிரை உண்டு அழிப்பதையும், தினைப்புனத்தில்அ இரவுக் காலத்தில் யானை மேய்வதையும், யானை காடுகளில் உள்ள மூங்கிலையும் மூங்கில் முளையையும் விரும்பி உணவாகக் கொள்வதையும் பல சங்கப் பாடல்கள் எடுத்தியம்புகின்றன. குறிப்பாக, குட்டியீன்ற பெண் யானைக்கு முற்றாத மூங்கில் முளையை ஆண் யானை தருவதை,
“ஈன்றுநா ளுலந்த மென்னடை மடப்பிடி
கன்றுபசி களைஅய பைங்கண் யானை
முற்றா மூங்கில் முளைதரு பூட்டும்
வென்வேற் றிரையன் வேங்கட நெடுவரை” (அகம்.85)
என்ற அகநானூற்றுப் பாடல் விளக்குகிறது. வேழம் என்பது பேய்க்கரும்பைக் குறிக்கும். இதனை வேழக்கரும்பை என்றும் அழைப்பர். யானைகள் பேய்க்கரும்பை விரும்பி உண்பதால் வேழம் என்ற பெயர் யானைக்கு ஆகுபெயராக வழங்கிற்று என்பர்.
“காம்பு கண்டன்ன தூம்புடை வேழத்து”
என்ற ஐங்குறுநூற்று வரி கூறுவதால் மூங்கில் போன்றது வேழம் என்றாகிறது. மூங்கில், பேய்க்கரும்பு, கொறுக்காந் தட்டை ஆகிய மூன்றும் யானைக்கு விருப்பமான உணவாகும்.
இதுபோன்று சங்க இலக்கியத்தில் காணப்படக் கூடிய விலங்குகளின் பல்வேறு விதமான குணங்களையும், உருவ அமைப்புகளையும், பழக்க வழக்கங்களையும் கண்டறிந்து தமிழரின் பண்பாட்டுக் கூறுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் மனித மனத்தோடு விலங்கினக் கூறுகள் மணம் வீசுவதைக் காணலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக