வியாழன், 13 பிப்ரவரி, 2014
வியாழன், 23 ஜனவரி, 2014
தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார்
அருணாசலம் பிள்ளை என்கிற தேவசகாயத்திற்கும் ஞானப்பூவிற்கும் 07.09.1774இல் திருநெல்வேலியில் வேதநாயக சாஸ்திரியார் மகனாகப் பிறந்தார். 1794இல் தரங்கம்பாடியில் அருட்தந்தை சுவார்ட்சு அவர்கள் தொடங்கிய பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றினார். சிறந்த கவிஞர், கிறித்துவ போதனை நூல்கள் பலவற்றை அரங்கேற்றியவர். தஞ்சை இரண்டாம் சரபோஜிக்கு இவர் நெருங்கிய நண்பராக விளங்கினார். சரபோஜி மன்னர் இவருக்கு ஆண்டு தோறும் 50 வராகன் கொடுத்துள்ளார். சரபோஜியின் அரண்மனைக்கு இவர் வந்து செல்ல தனியாக பல்லக்கு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. தாம் இறந்தால் கவிஞர் வேதநாயகம் சாத்திரியார் வந்து பாடல் பாடிய பின்புதான் தம் சடலத்தை அரண்மனையிலிருந்து எடுக்க வேண்டும் என்று சரபோஜி மன்னர் சொல்ல அவ்வாறே அவர் இறந்த காலத்து சாஸ்திரியார் நேரில் வந்து பாடல் பாடியவர்.
அண்ணாவியார், ஞானதீபக் கவிராயர், சுவிசேடக் கவிராயர் போன்ற பட்டங்களைப் பெற்றவர்.
பெத்லகேம் குறவஞ்சி, சென்னைப் பட்டினப் பிரவேசம், ஆரணாதிந்தம், சாத்திரக்கும்மி, ஞான அந்தாதி, ஞான உலா, ஞான ஏற்றப்பாட்டு, ஞானபதக் கீர்த்தனைகள், தோத்திரப்பாடல்கள், பராபரமாலை, பாலசரித்திரம், பேரின்பக் காதல், வண்ண சமுத்திரம், சாத்திரக்கும்மி, ஞானதச்சன் நாடகம், ஞான நொண்டி நாடகம், சுவிசேட நாடகம் போன்ற இயல் இசை நாடக நூல்களை யாத்த பெருமைக்குரியவர்.
தொண்ணூறு ஆண்டுகள் இப்பூவுலகில் வாழ்ந்து இறைத்தொண்டாற்றிய இவர் 24.01.1864இல் மறைந்தர். இவரின் 150ஆம் நினைவுநாள் 24.01.2014இல் வருகிறது. இந்நினைவு நாளைப் போற்றும் வகையில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறையில் மறைந்த பெரியவர்களின் பிறந்த மற்றும் நினைவு நாளில் கருத்தரங்கு, சொற்பொழிவு நடத்தும் என்னத்தில் 24.01.2014இல் தஞ்சாவூர் சி.நா.மீ. அறக்கட்டளைச் சொற்பொழிவு மற்றும் காசி குமரகுருபரர் மாநாட்டு நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவரின் தொண்டினைப் போற்றும் வகையில் இவரது இந்த 150ஆம் நினைவு ஆண்டில் சிறப்பாக ஒரு மாநாடு நடத்தி தமிழுலகம் இவருக்குப் பாராட்டுச் செய்தல் வேண்டும் என்ற எண்ணத்தை இதன் வாயிலாக வெளிப்படுத்துகிறேன்.
சனி, 30 நவம்பர், 2013
சிவகங்கை மாவட்டம் - களப்பணி
கடந்த வாரம் 23.11.2013 முதல் 30.11.2013 வரை சிவகங்கை மாவட்டத்தில் களப்பணி மேற்கொண்டு ஓலைச்சுவடிகள் திரட்டும் பணியில் ஈடுபட்டேன். இம்மாவட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் இருக்கக் கூடிய ஓலைகள் வீட்டுக் கணக்குகளாகவும்,கோயில் கணக்குகளாகவும், நில உரிமைப் பத்திரங்களாகவும், விழாக்காலங்களில் கோயில் சபையில் அமர்ந்தவர்களின் பெயர்களாகவும், கோயில் விழாக்களின் போது எழுதப்பட்ட வரவு செலவுகளாகவும், கோயில் முறையுடையோரின் பெயர்களாகவும், ஜாதகங்களாகவும் இருக்கின்றன. சிலரிடம் மட்டும் மருத்துவம், நாட்டுப்புற இலக்கியம் போன்ற சுவடிகள் காணப்படுகின்றன.
பலரிடம் இருந்த சுவடிகள் இன்று இல்லை. காரணங்களை வினவிய போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அத்தகவல்களை இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன்.
பலர் பழைய வீட்டை இடித்து புதிய வீடு கட்டும்போது வீட்டில் தேவையில்லாமல் இருக்கிறது என்று வெளியில் வைத்துவிட்டோம். அவை கரையானுக்கும் செல்லுக்கும் இரையாவரைக் கண்டு அந்தக் காலத்தில் ஆற்றில் சுவடிகளை விட்டதாகக் கேள்விப்பட்டு இருக்கிறோம். அதனால் இவ்வாறு வீணாவதைப் பார்க்க முடியாமல் ஆற்றில் விட்டுவிட்டோம் என்கின்றனர்.
1954ஆம் ஆண்டு சிவகங்கைப் பகுதியில் பலத்த புயல் வந்ததாகவும், அப்போது குடிசை வீடுகள் எல்லாம் அடித்துச் சென்றதாகவும், அவ்வீடுகளில் இருந்த சுவடிகள் அவ்வீடுகளோடு அழிந்து விட்டமாகவும் தெரிவிக்கின்றனர்.
ஓலைச்சுவடிகளை இம்மாவட்ட மக்கள் ஓலைமுறி என்கின்றனர். ஓலை எழுதுதலையும் ஓலைமுறி என்கின்றனர். இன்றும் சில இடங்களில் ஓலைமுறி எழுதுகின்றனர் என்கின்றனர்.
பெரும்பாலான செட்டியார்கள் அயல்நாடுகளிலும், அயலூர்களிலும் குடியேறி விட்டதால், அவர்களிடம் உள்ள சுவடிகளைக் காணமுடியவில்லை. அவர்கள் வருடத்திற்கு ஒரு முறை நிச்சயம் அவர்கள் பிறந்த வீட்டிற்கு வருவார்கள் என்று கூறுகின்றனர். பொங்கலுக்கு அடுத்த செவ்வாய்க்கிழமை எல்லோரும் தங்கள் பிறந்த ஊருக்கு வந்து செவ்வாய்ப்பொங்கல் வைப்பது வழக்கமாகக் கொண்டுடிருக்கின்றனர் என்றனர். அவர்களின் இந்தச் செவ்வாய்ப்பொங்கல் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வரமுடியாதவர்கள் அவர்கள் வீட்டு வேலைக்காரியையோ அல்லது தெரிந்தவர்களைக் கொண்டோ செவ்வாய்ப் பொங்கல் வைக்கச் சொல்லுவர் என்கின்றனர்.
ஏனைய இன்னும் சில சுவையான தகவல்களை அடுத்த கட்டுரையில் காணலாம்....
ஞாயிறு, 3 நவம்பர், 2013
செம்மொழித்தமிழ் இலக்கியங்களில் கிரகணம்
கிரகணம் பற்றி பலவாறான செய்திகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம். பாம்பு நிலவை விழுங்குகிறது என்றும், அந்நேரங்களில் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்றும், கிரகணம் முடிந்தவுடன் கோயிலுக்குச் சென்று சாமியைக் குப்பிட்ட பிறகுதான் உணவு உட்கொள்ள வேண்டும் என்றும் சொல்லும் செய்திகளைக் கேட்டிருக்கின்றோம். கிரகணம் என்பதன் அறிவியல் உண்மை இப்பொழுது எல்லோருக்கும் தெரிந்ததுதான். நிலவும் பூமியும் நேர்க்கோட்டில் வரும் போது நிலவின் வீச்சு பூமியில் தெரியாது. அந்த நேர்க்கோடு வரும் போது நிலவு மறையவும், விலகும் போது நிலவு தெரியவும் செய்யும். இந்த நேரம் பூமியின் இயல்புகளில் சற்று மாறுதல் நேரிடும். எனவேதான், இந்த நேரத்தில் வெளியில் வரவேண்டாம் என்றெல்லாம் கூறுவர். கோயில்களில் அந்நேரத்தில் நடை அடைப்பதும் உண்டு.
கிரகணம் பற்றிய செய்தி செம்மொழித் தமிழ் இலக்கியங்களில் இருக்கிறதா என்று ஆயப் புகும் போது, எட்டுத்தொகை அக இலக்கியங்களில் ஒன்றான அகநானூறு மற்றும் நீதி இலக்கியங்களில் தலைசிறந்ததான திருக்குறளில் இதுபோன்ற செய்திகள் இருப்பதைக் காணமுடிகிறது.
கேளாய், எல்ல! தோழி! வேலன்
வெறிஅயர் களத்துச் சிறுபல தாஅய
விரவுவீ உறைத்த ஈர்நறும் புறவின்,
உரவுக்கதிர் மழுங்கிய கல்சேர் ஞாயிறு,
அரவு நுங்கு மதியின், ஐயென மறையும்
சிறுபுள் மாலையும் உள்ளார், அவர்என... (அகம்.114.1-6)
என்னும் பாடலில் தலைவன் தலைவியை நினைக்காததைத் தோழி கூறுவதாக அமைந்த இப்பாடலில், ஏண்டி தோழி, யான் கூறுவதைக் கேட்பாயாக, வேலன் வெறியாடும் களத்தில் பரவிக் கலந்து கிடக்கும் பூக்கள் உதிர்ந்து கிடக்கும். வலியினையுடைய ஞாயிறு, தன் வெம்மை குறைந்து பாம்பு விழுங்கும் நிலவினைப் போல மேற்கு மலையினைச் சேர்ந்து மெல்ல மெல்ல மறையும். அத்தகைய சிறிய புல்லிய மாலைக் காலத்தும் நம் தலைவர் நம்மை நினைக்கவில்லையே என்று கூறுகின்றதாக இப்பாடல் அமைந்துள்ளது. திருக்குறளில்,
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று. (குறள்.1146)
இடையீடுகளானும் அல்லகுறியானுந் தலைமகனை எய்தப் பெறாத தலைமகள் அவன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய் அலரறிவுறீஇ வரைவுகடாயதாக இப்பாடல் அமைந்துள்ளது. யான் காதலரைக் கண்ணுறப் பெற்றது ஒருஞான்றே, அதனினாய அலர் அவ்வளவிற்றன்றித் திங்களைப் பாம்பு கொண்ட அலர்போன்று உலகெங்கும் பரந்தது என்பதாக இப்பாடல் பொருள் அமைகிறது.
இவ்விரு பாடல்களால் நிலவைப் பாம்பு விழுங்கும் செய்தி பதிவு செய்யப்பட்டு இருப்பதைக் காணும் போது சங்க காலந்தொடங்கி இச்செய்திப் பரவல் நம் தமிழரிடையே நீடித்து நிலைத்திருக்கிறது என்பது உண்மை.
வியாழன், 24 அக்டோபர், 2013
ஆழ்வார் திருநகரியில் - சுவடிகள் களப்பணி
ஆழ்வார் திருநகரியில் பெரியன் வெ. நா. சீனிவாச ஐயங்கார் அவர்களின் பயன்பாட்டில் இருந்த 85 ஓலைச்சுவடிக் கட்டுகளை அவரது மகன் பெரியன் வெ.சீ. அழகியநம்பி அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு அளித்துள்ளார்கள். அவர்களைப் பற்றிச் சிறிது இங்குக் கூறவேண்டும். வெ.நா. சீனிவாசன் அவர்கள் அக்காலத்தில் ஆழ்வார்திருநகரியில் திருஞானமுத்திரைப் பிரசுராலயம் ஒன்றை வைத்து அதன் மூலம் பல சுவடிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளார். குறைந்தது 20க்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்துள்ளார். குறிப்பாக கம்பராமாயணம் காண்டம் காண்டமாக பதிப்பித்துள்ளார். சுவாமி நம்மாழ்வார் நூற்றெட்டுத் திருப்பதி தாலாட்டு, சடகோபன் திவ்ய சரிதம், சடகோபன் சந்திர கலாமாலை, இராமாணம், துலைவில்லி மங்கலம் தேவர்பிரான் சந்திர காலமாலை, நம்மாழ்வார் பிள்ளைத்தமிழ், திருக்குருகூர் மகிழ்மாறன் பவனிக்குறம், குருகூர்ப்பள்ளு, ஆழ்வார்கள் வைபவம், தெந்திருப்பேரை திருக்கோளூர் திருப்பணிமாலை, திருவைகுந்தநாதன் பிள்ளைத்தமிழ், கம்பராமாயணம் பாலகாண்டம், தெய்வச்சிலையார் விறலிவிடுதூது, கம்பராமாயணம் பால காண்டம் ஆழ்வார்திருநகரிப் பிரதிகளின்படி, கம்பராமாயணம் அயோத்தியா காண்டம், கம்பராமாணயம் ஆரண்யா காண்டம், கம்பராமாயணம் கிட்கிந்தா காண்டம், கம்பராமாயணம் சுந்தர காண்டம், கம்பராமாயணம் யுத்த காண்டம், கம்பராமாயணம் உத்தர காண்டம், பராங்குச நாடகம், குருகாஷேத்திர மகாத்மியம், திருக்குருகூர் திருப்பணிமாலை போன்ற பல நூல்களைப் பதிப்பித்த பெருமைக்குரியவர். அவர் வெளியிட்ட பல நூல்கள் இன்னும் முற்றிலும் விற்பனை ஆகாமல் ஆழ்வார் திருநகரியில் திரு. அழகிய நம்பியிடம் இருக்கின்றன. தமிழன்பர்கள் அவரிடம் +914639273039 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு நூல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
இவையன்றி பல அரிய நூல்களையும் அவர்கள் பாதுகாத்து வைத்துள்ளனர். பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்திருக்கின்றார். பல பழம் பெரும் தமிழறிஞர்கள் அவர்களிடம் பழக்கம் வைத்திருந்திருக்கின்றனர்.
இவையன்றி பல அரிய நூல்களையும் அவர்கள் பாதுகாத்து வைத்துள்ளனர். பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்திருக்கின்றார். பல பழம் பெரும் தமிழறிஞர்கள் அவர்களிடம் பழக்கம் வைத்திருந்திருக்கின்றனர்.
செவ்வாய், 30 அக்டோபர், 2012
ஆத்திசூடித் திறவுகோல்
மக்களிடம் அதிகமாகப்
புழக்கத்திலுள்ள ஒரு நூல் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு வகையான இலக்கியங்களாக
முகிழ்வதும், இலக்கியங்களில் இடம்பெறுவதும் இயல்பு. ஒரு நூலின் சிலபல பாடல்களைக் கொண்டோ, அனைத்துப்
பாடல்களைக் கொண்டோ அவற்றுக்கு விளக்கம் தரும் வகையில் பல செய்யுள் நூல்கள்
காலந்தோறும் உருவாகிக்கொண்டே இருக்கின்றன.
முருகேசர் முதுநெறி வெண்பா, சிவசிவ வெண்பா, திருத்தொண்டர் வெண்பா, முதுமொழி
மேல்வைப்பு, திருக்குறள் குமரேச வெண்பா, திருத்தொண்டர் மாலை போன்றவை திருக்குறளுக்கு
விளக்க நூல்களாக அமைந்திருப்பதைக் காணலாம்.
இந்நூல்களில் திருக்குறள் அல்லது திருக்குறள் கருத்துக்கள்
இடம்பெற்றிருக்கும்.
திருக்குறளுக்கு
அடுத்த நிலையில் ஔவையாரின் ஆத்திசூடிக்கும் விளக்க நூல்கள் பல
எழுந்திருக்கின்றன. ஆத்திசூடி வெண்பா
(இராமபாரதி), ஆத்திசூடி வெண்பா (ஆசிரியர் பெயர் தெரியவில்லை), ஆத்திசூடி அந்தாதி,
ஆத்திசூடிச் சிந்து, ஆத்திசூடிப் புராணம், ஆத்திசூடித் திறவுகோல் போன்றவை
ஆத்திசூடிக்கு விளக்க நூல்களாக அமைந்திருப்பதைக் காணலாம். இவ்வகையான விளக்க நூல்கள் செய்யுள் நடையில்
அமைந்திருக்கின்றன. இவைகளைச் செய்யுள்
நடையில் அமைந்த உரை நூல்கள் என்றே கூறலாம்.
இங்கு ஆத்திசூடித் திறவுகோல் குறித்துக் காண்போம்.
ஆத்திசூடித்
திறவுகோல்
குருமுனியின் ஆத்திசூடித் திறவுகோல் 13
விருத்தப்பாக்களாலானது. ஆத்திசூடியின்
உயிர்வருக்க எழுத்துக்களுக்கு மட்டும் திறவுகோலாக – உரையாக இந்நூல் அமைந்துள்ளது. அதாவது,
அறஞ்செய விரும்பு முதல் அஃகம் சுருக்கேல் வரையுள்ள 13
ஆத்திசூடிச் சொற்களுக்குப் பொருள் கூறும் முகமாக ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு
விருத்தம் என்ற முறையில் 13 விருத்தங்களாக இந்நூல் அமைந்துள்ளது. அத்திசூடியின் ஏனைய உயிர்மெய் வருக்கங்களுக்கு
இந்நூலாசிரியர் எழுதினாரா என்று தெரியவில்லை.
13ஆவது பாட்டின் இறுதியில் ஆத்திசூடி குருமுனித் திறவுகோல்
உயிரெழுத்து 12க்கும் விபர முற்றும் என்று எழுதப் பெற்றிருக்கின்றது. இதனைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது
உயிர்மெய் எழுத்துக்களுக்கான ஆத்திசூடித் திறவுகோல் தனியாக எழுதப்பெற்றிருக்க
வேண்டும் என்றே நினைக்கத் தோன்றுகின்றது.
ஆனால் அந்நூல் இதுவரை கிடைக்கவில்லை.
இதுவரை கிடைத்த உயிரெழுத்துக்களுக்கான ஆத்திசூடித் திறவுகோல் பாடல்களில்
ஆசிரியர்தம் நோக்கும் போக்கும் உரைத்திறனும் வெளிப்படுவதைக் காணலாம். இந்நூல் சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள்
நூலகத்தில் உள்ள சுவடியை ஆதாரமாகக் கொண்டு அந்நூலகப் பருவஇதழ்த் தொகுதி 2, பகுதி
1, 1949இல் வ.ரா. கல்யாணசுந்தரம் அவர்களால் பதிப்பிக்கப்பெற்றிருக்கிறது.
நூலமைப்பு
ஔவையின் நீதிவாக்கம் முதலிலும் இதன்பொருள்
(இ-ள்) என்ற முறையில் ஒவ்வொரு சொல்லிற்கும் முறையே அமைந்திருக்கின்றது. இதனுள் அண்டத்தன்மை, சித்தர்கள்-யோகிகள்,
இறைவன், இறையடியவர்கள், மனிதர்கள் போன்றோரின் தன்மைகள் பலவாறாக எடுத்தோதி,
பொருத்தமுடைய வாக்கியங்களுக்கு மேற்கோளாக எடுத்துக் காட்டப்பெற்றிருக்கின்றது.
ஆறுவது சினம் என்ற வாக்கியத்திற்குக்
கோபம் தனியத் தகுவதாகும் என்பர். இதற்குக் குருமுனி அவர்கள் சிறந்ததொரு
எடுத்துக்காட்டுடன் இவ்வாக்கியப் பொருளைத் தருகின்றார். மார்க்கண்டேயன் இடைவிடாது சிவபூசையில்
ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றான். அப்போது அவன்
ஆயுட் காலம் முடிகின்றது. இதனால் இயமன்
பாசக் கயிற்றினை மார்க்கண்டேன் மீது வீசுகின்றான். அக்கயிறு, மார்க்கண்டேன் வழிபாடு நிகழ்த்திக்
கொண்டிருந்த சிவலிங்கத்தையும் சேர்த்து இழுத்தது.
இதனால் சிவலிங்கம் இரண்டாகப் பிளந்து, சிவபெருமான் வெளிப்பட்டு காலனைக்
காலால் மிதித்து காலாரி என்னும் வடிவம் தாங்குகின்றார். சிவபூசையில்
ஈடுபட்டிருக்கும் ஒருவன் மீது பாசக்கயிறு வீசக்கூடாது என்பது பொதுவிதி. ஆனால் அதையும் மீறி இயமன் மார்க்கண்டேயன் மீது
பாசக்கயிறு வீசுகின்றான். அக்கயிறு இறைவன்
மீதும் பட, இறைவனாகிய எனக்கே பாசக்கயிறு வீசுகின்றாயா! என்று சினங் கொண்டு காலதேவனைக் காலால் மிதித்து
வைத்துக்கொள்கின்றார். இதனால் நாட்டில்
உயிரிழப்பு இன்றி மக்கள்தொகை அதிகரித்துவிடும் என்றஞ்சிய தேவர்கள் சிவபெருமானிடம்
வேண்டுகின்றனர். அவர்களின் வேண்டுகோளை
ஏற்றுக் காலனை விடுவித்தார் என்பது புராணக்கதை.
சிவபெருமான் சினம் தணிந்ததால் தான் இயமன் தன்பணி தொடர முடிந்தது என்ற
கருத்தை மையமாக்கிப் பொருள் கொண்டிருக்கின்றார்.
அதேபோல், அறுமூன்று நாயன்மார்களில்
ஒருவராகிய சிறுத்தொண்டர், இறைவடியவர்க்கு அமுதினை முன்னூட்டிப் பின்னுண்ணும்
பழக்கத்தினை உடையவர். எத்துன்பம்
வந்திடினும் அடியவர்க்கு அமுதூட்டும் நிலையில் சிறிதும் வழுவாதவர். தன் பிள்ளையின் கறி சமைத்து பைரவர்க்கு
அமுதூட்டும் போதும் நிலைதடுமாறாதவர்.
அவரின் இச்செயலையும் ஒவையின் ஐயமிட்டுண் என்னும் வாக்கியத்தையும்
இந்நூலாசிரியர் தொடர்புபடுத்திப் பொருள் கொண்டிருக்கின்றார். இதுபோல் இந்நூல் முழுமைக்கும் பொருள்
அமைந்திருப்பதைக் காணலாம்.
ஒவையின் ஆத்திசூடி வாக்கியங்களை மூலமாகக்
கொண்டு குருமுனி அவர்கள் தன்னுடைய உயரிய எண்ணங்களை மக்கள் மத்தியில் சென்றடைய
இந்நூலின் மூலம் வழி செய்திருக்கின்றார் எனலாம்.
உயரிய சித்தாந்தக் கருத்துக்களை அனைவரும் எளிதில் உணர்ந்துகொள்ளும் விதமாக
ஔவையின் வாக்கினைத் துணைக்கழைத்திருக்கும் குருமுனியின் போக்கு
பாராட்டுக்குரியதே. ஓர் பாலபாட நூலுக்கும்
சித்தாந்தக் கருத்துக்கள் உண்டு என்பதை இந்நூலாசிரியர் எடுத்தியம்பியிருப்பது
பாராட்டுக்குரியது என்றால் அது மிகையன்று.
மேலும், இந்நூலைச் சுவடிப்போர் சுவைப்பதற்காக இங்கு அவ்வாறே தரப்படுகிறது.
1.
அறஞ்செய விரும்பு
அரனென்ற பொருளல்லா லுககிலண்
டருண்குத்தான் முனிவருமே காணா
சூக்ஷ்மம்
சரமென்றும் பெயர்பெற்று வுலகில்தானும்
தனக்குள்ளே தானாகி யண்டமாகிப்
பரமென்ற கீர்த்தியுள்ள சித்தர்யோகி
பரிவாக பஷ்டரித்தும் நமனைவெல்வார்
குருவென்றுஞ் சீஷரென்றுங் கற்பமென்றுங்
குவலயத்தி லறஞ்செய்ய விரும்புமாச்சே.
2.
ஆறுவது சினம்
ஆருவது ஆரு(று)தலம் நிலையைக்கண்டு
அனுதினமு மிருபத்தெட் டக்ஷரத்தினாலே
பேருபெற வோம்நமசி வாயத்திற்குப்
பிறவிதனை மாற்றிவிடப் பெருமைபெற்றுக்
கார்சொரியுஞ் சரமாரி பழக்கஞ்செய்து
காலனைக்கா லாலுதைத்துக் கருணைகொண்டு
சீருடனே சின்மயத்தைத் தியானஞ்செய்து
தீருவதுதா
னாறுவதுசினம் நமக்குள்ளாச்சே.
3.
இயல்வது கரவேல்
தாராத வித்தையை யெடுத்துவிட்டாலிடி
தானே யுன்தலையில் விழுமேபாரு
புவிதனிலே யின்னதென் றறிந்தறஞ்செய்தாய்
புண்ணியனே யுனக்குவசம் புனிதவாழ்வு
கயமான மிலகுங் கருத்துந்தோணுங்
காணாத சிலம்பொலியின் காக்ஷிகாணுஞ்
சுயம்புலிங்க மாகவேநீ யாவாயல்லோ
சடுதியாய்நீ யியல்வதை மறந்திடாதே.
4.
ஈவது விலக்கேல்
ஈவதுதா னாதவிந்து பூதியத்தில்
இனிதாக்குந் தினந்தினமு
மருச்சித்தாக்கால்
கெவனமதில் தூக்கிவிடும் கிருபையோடு
கம்பீரம் பெற்றுச்சில யோகியாவாய்
மௌனமது கைகூடும் யுகாந்தகாலம்
வச்சிரம்போல் தேகமது வாசிநிற்குங்
கவனமா யீவதுதான் விலக்கிவிட்டால்
சண்டாள நற்கதியைச் சாருவாயோ.
5.
உடையது விளம்பேல்
அண்டசத்துக்களின் சங்கதிகளைக் கல்லாதா
னொருத்தனுக்கு நீயுரைத்தால்
மூழ்கிப்போவா
யுடைவன்தான் மூதண்டங் கண்டுகொள்வா
னொருவனுமே தானருந்தித் தாயைக்கண்டு
படைமுகத்தில் வில்லெடுப்பான்
சுரம்தொடுத்துப்
பாழான வொன்பதுபத் தாறுபேரை
விடவிடென நடுக்கமது செய்துவைத்து
விருதாக வுடையவனே விளம்பானைய்யா.
6.
ஊக்கமது கைவிடேல்
ஊக்கமது அண்டவிந்த யெனவாறுந்தா
னுற்பனமா யிருதயத்தி லிருத்திக்கொண்டு
ஆக்கையதை யழிக்காமல் நடேசர்பாத
மனுதினமு மர்ச்சித்து அருளைப்பெற்று
வாக்குமன மொன்றாகச் சமாதிபூண்டு
மயிற்பால மீதினிலே மனக்கண்சாத்தித்
தேக்கில்லா
வமுதமதைக் கொண்டுநித்தம்
சின்மயத்தி னூக்கமதைக் கைவிடாதே.
7.
எண்ணெழுத்திகழேல்
எண்ணெழுத்தைக் கைப்பற்றிக் கொண்டுந்தா
னிருந்துவிளை யாடிடுவா யஷ்டசித்தும்
கண்ணெழுத்தாற் கருவிகளைச் சுட்டறுத்துக்
கருணையுள்ள தண்டியின்மே லேறியாடி
வண்ணனைத்தான் மாடாக்கிச் சமைத்துவுண்டு
மார்க்கமதைக் கருத்தாலே யறிந்துகொண்டு
திண்ணமுள்ள எண்ணெழுத்தை மாய்ப்பாயானால்
தெரித்துவிடு முன்சிரசு சித்தமாமே.
8.
ஏற்பதிகழ்ச்சி
ஏப்பதுதா னாரென்று லானைக்கல்லை
யில்லறத்தை வைத்தவன் பூசியாத
கார்த்திகையா மருச்சுனன்றான் கண்டெத்த
கருத்தனை யறியாத கசட்டுமாக்கள்
பார்த்திருந்தும் பெண்டுபிள்ளை
பெண்ணைத்தேடிப்
பாழான நரகத்தி லழுந்திநிற்கும்
போற்றியதோர் பொருளறிந்து தின்பானானா
லெக்காலும் மாய்ப்பதில்லை
யிகழ்ச்சியாமே.
9.
ஐயமிட்டுண்
ஐயயமிட்டான் சிறுத்தொண்டன் பிண்டத்தாலே
ஆத்தாளுங் கருணைவைத்துக்
கடாக்ஷித்தாள்தான்
பைய்யரவமே கொண்டான் காரமான
பாவையைத்தான் சிரசில்வைத்தான்
பரிசில்தேகம்
மெய்யதனை நீக்கிவிட்டான் மகாரத்தாலே
மேதினியி லவனுமொரு சித்தனானான்
வைய்யகத்து மயக்கமதை நீக்கிவிட்டு
மருவிஐய மிட்டுண்ண மகிழுந்தானே.
10.
ஒப்புரவொழுகு
ஒப்புரவய்ப் பூதியத்தைச் சீர்படுத்தி
யுயர்ந்திருக்குந் தாம்பரத்தைத்
தகடுதட்டிக்
கப்பில்லாப் பூபதியை மேலேயேற்றிக்
கருவான தேய்வினிலே கதிக்கவாட்டித்
தப்பில்லா யெருவாலே புடத்தைப்போட்டுத்
தருவான விருதுருத்தி கொண்டுவூதி
அப்பனே உருக்கியபின் ஆ,ஊநாடி
அழகான வொப்புரவா யழகுசெய்யே.
11.
ஓதுவதொழியேல்
ஓதுவ தண்டபிண்டம் நந்திபிண்ட
மொருக்காலும் மறந்துவிட்டா
லாண்டுபாழாம்
சேதமது செய்யாமல் செய்தாயானால்
திருமகளே ஆண்டுக்கு முன்னூறாகும்
பாதமதை பின்னதென்று பூசைசெய்து
பண்பான வரியென்று பகர்வாயானால்
காதமது போய்விடு மோதுவதில்
கலங்காதே தோளிலேதான் கண்டுகொள்ளே.
12.
ஔவியம் பேசேல்
ஒளவியமது இருந்தநீ பேசுவாயாகி
லைந்திருந்துங் காலாகி
மடித்துப்போவாய்
ஔவியமதை விட்டுநீ யாதிதன்னை
யஞ்சலித் தடிதொழுது அமர்ந்துநின்றால்
ஔவியத்தால் கூக்குரல்கள் ரொம்பவுண்டு
ஆறிரண்டு பன்னிரெண்டி லடங்குஞ்சோதி
ஔவியத்தை யின்னதென் றறிந்தாயானா
வண்டரண்ட முன்வசமே யாகுந்தானே.
13.
அஃகஞ் சுருக்கேல்
சுருக்குவது மயிர்ப்பால மீதில்தானுந்
தூண்டாத தீபம்போ லிருக்கவேணும்
பழகச்சே தெரியுமல்லோ காயின்போகம்
பலிதமா மில்லையென் றறிந்துகொள்ளு
பெருக்கவே போசனமு நீருமுண்டால்
பேதைகளே மனிதருக்குச் சாவுமுண்டோ
உருக்கலந்த போதேதா னெல்லாமாச்சு
ஊஅக்கஞ் சுருக்கமழை யுன்னிப்பாரே.
ஆத்திசூடி குருமுனித்
திறவுகோல் உயிரெழுத்து 12க்கும் விபர முற்றும்.
கோவைமொழி : உண்மை பேசி மென்மையாய் இருந்தால் நன்மைகள் பல
தானே விளையும்.
வியாழன், 13 செப்டம்பர், 2012
விருக்ஷாதி ஸம்ரக்ஷ்ண சாஸ்திர தீபிகை - ஓர் அறிமுகம்
வழிவழியாக பின்பற்றப்பட்டு வந்த வேளாண் முறைகள் அவ்வக்காலத்து எழுந்த
இலக்கியங்களில் ஆங்காங்கு இடம்பெற்றுள்ளமையைக் காணமுடிகிறது. மகாபாரதம், தந்வந்திரி தந்திரம், பிரஹத்
ஸம்ஹிதை,சுக்கிர நீதி, விஷ்ணு தர்மோத்திரம் மற்றும் பல வகையான சிற்றிலங்களில்
வேளாண் செய்திகள் இடம்பெற்றிருக்கின்றன.
இவை மட்டுமல்லாமல் கிருஷி சாஸ்திரம், விருக்ஷாதி ஸம்ரக்ஷ்ண சாஸ்திர தீபிகை
போன்ற நூல்கள் வேளாண் செய்திகளை மட்டுமே கொண்ட நூல்களாகத் திகழ்கின்றன. இந்நூலில் உள்ள செய்திகள் இன்றைய வேளாண்மைக்கு
உதவக்கூடியதாக இருக்கும் என்ற நோக்கத்தில் அவற்றில் உள்ள சில செய்திகள் மட்டும்
இங்குச் சுட்டிக்காட்டி, இதுபோன்ற செய்திகள் அக்காலத்தில் எழுதப்பெற்றிருந்த
தன்மையை வலியுறுத்தும் முகத்தான் இந்நூல் இங்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.
விருக்ஷாதி ஸம்ரக்ஷ்ண சாஸ்திர தீபிகை
இந்நூல் உரைநடையால் அமைந்த 80
பக்கங்களை (கிரவுன்)க் கொண்டுள்ளது. இதன்
பதிப்பாசிரியர் ஆர். கோபால அய்யர்.
இந்நூல் தஞ்சை சரஸ்வதிமகால் நூலகத்தில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இந்நூலின் செராக்ஸ் படியை மட்டுமே பார்க்க
முடிந்தது. “இந்நூலுள் சொல்லப்பட்டிருக்கின்ற
செய்திகள் எல்லாம் மகாபாரதம் சாந்தி பர்வத்தில் பிருகுபாரத்வாஜஸம் வாதத்திலும்,
தன்வந்திரி மகரிஷி தந்திரத்திலும், பிரஹத் ஸம்ஹிதை, சுக்கிரநீதி போன்ற நூல்களில் சொல்லப்பட்டு
இருக்கின்றன” என்று
இந்நூலின் பதிப்பாசிரியர் குறிப்பிடுகின்றார்.
நூலின் பதிப்பாண்டையோ நூலின் காலத்தையோ அறியமுடியவில்லை. ஐந்து அத்தியாயங்களாக இந்நூல்
பகுக்கப்பட்டுள்ளது. என்றாலும், செய்திகள்
அனைத்தும் தொடர் எண் பெற்று பத்திப் பத்தியாக அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பத்தியும் ஒரு தனிச் செய்தியைக்
கொடுக்கிறது. பொதுவாக இந்நூல் மரம், செடி,
கொடிகளை எவ்வாறு வளர்ப்பது, அதிக பலனைத் தரத்தக்க வழிமுறைகள் யாவை? இவைகளுக்கு
ஏற்படும் நோய்கள் என்னென்ன? அவற்றை நீக்குவதற்கான வழிமுறைகள் யாவை? மண்ணின்
வகைகள், விதைகளைத் தேர்வு செய்வதும் பாடஞ்செய்வதும், மரங்களும் அவற்றுக்கான
இடைவெளியும், மரம் வைக்கும் முறை, மரங்களுக்கான மூவகை நோயும் மருந்தும், மரங்களின்
வகைகள், ஒட்டு விதைகள் போன்ற பல செய்திகளைத் தருகிறது. இவற்றுள் சில மட்டும் இங்குக் காண்போம்.
மண்ணின் வகைகள்
மரங்கள் செழிப்புடன் வளர்ந்து நல்ல
பலனைக் கொடுப்பதற்கு முக்கியக் காரணமாக அமைவது மண். மண்ணின் தன்மையைப் பொருத்தே மரங்களின்
வளர்ச்சியும், சுவையும், நிறங்களும் அமையும்.
அப்படிப் பார்க்கும் போது மரங்கள் வளரத்தக்க மண் என்றும், மரங்கள் வளரத்தகா
மண் என்றும் மண்ணை இரண்டாகப் பகுக்கலாம்.
கருப்பும் சிவப்பும் மஞ்சளும்
கலந்த மண், கருப்பும் சிவப்பும் கலந்த மண், சிவப்பு மண், வெள்ளை மண், மஞ்சள் மண்
போன்ற மண்கள் மரங்களை வைக்கத்தக்க மண் என்றும்; கற்பாறை நிறைந்த இடத்திலுள்ள மண், உவர்மண், புத்துமண்,
தரிசுமண், கெட்டநீர் உள்ள மண் போன்ற மண்கள் மரங்கள் வைக்கத்தகா மண்கள் என்றும்
இந்நூல் குறிப்பிடுகின்றது.
விதைகளின் தேர்ச்சி
மரஞ்செடிகொடிகளில் முற்றிய விதைகளை
எடுத்து உலரவைத்து விதைக்குப் பயன்படுத்துவதைவிட அவ்விதைகளைப் பாடஞ்செய்து
பயன்படுத்தினால் உடனடியாக நல்ல பலனைத் தரும் என்பது இந்நூலின் கருத்து. விதைகளை எவ்வாறெல்லாம் பாடஞ்செய்யலாம் என்பதைப்
பின்வாருமாறு இந்நூல் சுட்டுகிறது.
1. நன்கு காய்ந்த விதைகளைப்
பசுவின் பாலில் ஊரவைத்து, பசுவின் சாணி, மூத்திரம், நெய் முதலியவைகளினால் பிசரி
பூமியில் ஊன்றி தண்ணீரும் பசுவின் பாலும் கலந்து தினமும் ஊற்றி வந்தால் மரங்கள்
நல்ல பலனைக் கொடுக்கும்.
2.
அழிஞ்சில் விதை எண்ணையிலாவது, நருளிப் பழத்தின் சாற்றிலாவது
எவ்வகையான விதையையும் 100 முறை நன்றாக நனைத்துக் காயவைத்து விதைத்தால் விதைத்த
சிறிது காலத்திற்குள் அந்தச் செடியானது பூவுடனும் காயுடனும் நன்றாகக் காணப்படும்.
3.
நருளிப்பழத்தின் விதையைப் போக்கி
அந்தச் சாற்றில் எந்த விதையையாவது ஊற வைத்து, பிறகு அழுஞ்சில் பழச்சாற்றில்
மேற்படி விதையை ஏழு தடவை ஊறவைத்து நிழலில் உலர்த்திய பின் ஏழு தடவை எருமைச்
சாணியில் புதைத்து எடுத்து இளநீரால் நனைக்கப்பட்ட பூமியில் மேற்படி விதையைப்
புதைத்தால் ஒரே நாளில் முளை கிளம்பி நல்ல பலனைத் தரும்.
4.
எந்தை விதைகளையும் 10 நாட்கள் வரையில்
தினந்தோறும் ஒரு மணிநேரம் வரையில் பாலில் ஊறவைத்து, பிறகு நெய்யில் பிசரி, மான்,
முள்ளம்பன்றி இவைகளினுடைய இறைச்சியை வேகவைத்து அதிலிருந்து உண்டாகும் புகையில்
காட்டி, பின்பு மீன், பன்றி இவைகளின் இரத்தத்தில் நனைத்து, அந்த விதைகளை நல்ல
சாரமுற்ற பூமியில் நட்ட பிறகு பாலும் நீரும் கலந்து விட்டால் முளைக்கும்போதே
மலர்களுடன் உண்டாகும்.
5.
அரிசி, உளுந்து, எள்ளு,
வார்க்கோதுமை இவைகளை வறுத்துப் பிறகு சமனிடையாகப் பொடி செய்து நன்றாகக் கலந்து
அழுகிப்போன இறைச்சிகளுடன் சேர்த்து நீரில் கலந்து அதில் புளியங்கொட்டையை ஊறவைத்து,
மஞ்சள் புகையில் மேற்படி விதையைக் காட்டி அந்த விதையைப் பயிர் செய்தால் நன்றாய்த்
தழைத்துக் கொண்டு கிளம்பி ஏராளமாய்ப் பலனைத் தரும்.
இதுபோன்ற
பாடங்கள் விதைக்குச் செய்வதனால் விதை மேலும் உரம்பெற்று வீணாகாமல் உரிய
காலத்துக்கு முன்னதாகவே நல்ல பலனைத் தருவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இம்முறைகளை நாம் இன்று பயன்படுத்தினால் நல்ல
பலனை எதிர்பார்க்கலாம்.
மரங்களும் இடைவெளியும்
மரங்களின்
தன்மையைக் கொண்டு ஒவ்வொரு மரத்திற்கும் உள்ள இடைவெளியைக் கணக்கிட்டு
இருக்கின்றனர். அடிமரம் பருப்பதாகவும்
அதிகக் கிளைகளை விடுவதாகவும் மிகப் பரந்து வளரக் கூடியதாகவும் உள்ள மரங்களை உத்தம
மரங்கள் என்றும்; அடிமரம் சிறுத்தும் குறுகிய கிளைகளை
விடுவதாகவும் உள்ள மரங்களை மத்திம மரங்கள் என்றும் குறிப்பர்.
உத்தம
மரங்களாக ஆல், அரசு, அத்தி, இச்சி, மா, புளி, சந்தனம், அசோகு, இராஜதனம், அமிருதம்,
புன்னை, வெண்கடம்பு, வன்னி, தேவதாரு, வாகை, கடுக்காய் மரம், வேம்பு, வெப்பாலை,
எழிலம்பாலை போன்றவைகளை 25 முழம் இடைவெளி விட்டுப் பயிர் செய்யவேண்டும். மத்திம மரங்களான எலுமிச்சை, நாரத்தை, மகிழ்,
வில்வம், விளா, ஜண்பகம் (பிஸ்மடாகம்), சிம்சுவாகர்ஜீரம் (தாபிஞ்சம்), காட்டாத்தி, கருங்காலி,
தேக்கு, மூங்கில், வெள்வேல், மருது, புரசு, நெல்லி போன்றவைகளை 20 முழம் இடைவெளி
விட்டுப் பயிர் செய்யவேண்டும். மேலும்,
இவ்விரண்டு வகைக்குள் அடங்காததும் நீண்டு வளருவதும் பக்கக் கிளைகள் அதிகம்
இல்லாததுமான தென்னை, பாக்கு, பன்னீர், பேயகத்தி, வாதா, மாதுளை, பனை, சீதா, கொன்னை,
நாகல், மரமல்லிகை போன்ற மரங்களை 10 முழம் இடைவெளிவிட்டுப் பயிர் செய்யவேண்டும்
என்ற வரையறை செய்யப்பட்டுள்ளது.
.இம்முறைகள் இன்றும் வேளாண் துறையினரால் பின்பற்றப்பட்டு வந்தாலும் வீட்டுத்
தோட்டம் அமைப்பவர்களால் இவ்விடைவெளி முறையைப் பின்பற்றப்படுவது இல்லை. தோப்பு மரங்களை விட வீட்டுத் தோட்டத்து
மரங்களின் வளர்ச்சியிலும் விளைச்சலிலும் குறைவான பலன் இருப்பதற்கு இதுவும் ஒரு
காரணமாக இருக்கலாம்.
மரம் வைக்கும் முறை
மரங்கள்
வைப்பதற்கும் சில விதிமுறைகள் இருப்பதைக் காணமுடிகிறது. விதைகள் பாடஞ்செய்து பயன்படுத்தியதுபோல்
மரங்கள் வைக்கத்தக்க இடத்தையும் பக்குவப்படுத்த வேண்டும். இதனை இந்நூல், ஒரு முழ சதுரம் 2 முழ ஆழம் உள்ள
ஒரு குழி வெட்டி, அதில் மீன் இறைச்சியையும் நீரையும் சேர்த்துவிட வேண்டியது. நன்றாய் அந்தக் குழியானது காய்ந்துபோன பிறகு
மேற்படி குழியில் நெருப்பைப் போட்டு வெப்பப்படுத்தி அக்குழியில் நான்கு
பக்கங்களிலும் தேன் மற்றும் நெய் இவைகளைச் சாம்பலுடன் சேர்த்துப்
பூசவேண்டும். உளுத்தமா, எள்ளுப்
பிண்ணாக்கு இவைகளைக் களிமண்ணுடன்
நன்றாய்க் கலந்து பிறகு ஒன்றாகப் பிசைந்து குழியை நிரப்பவேண்டும். மீன் இறைச்சி கலந்த நீரை அக்குழியில் ஊற்றி
நன்றாய் மேற்படி குழியிலுள்ள களிமண் இறுகிய பிறகு எந்த விதையையாவது நான்கு அங்குல
ஆழத்திற்குக் கீழ் நட்டு மீன் இறைச்சி தொடர்பான நீரை வார்த்து வரவேண்டும்.
இவ்வாறு
செய்வதால் விதை நன்கு முளைத்துத் தளிர்த்துப் படர்ந்து நல்ல பலனைத் தரக்கூடியதாக
வளரும். இன்று இம்முறை நடைமுறையில்
இருப்பதாகத் தெரியவில்லை. முதலில்
குழியின் சுற்றுப்புறத்தைச் செடிக்குத் தக்கபடி பாதுகாப்பு செய்யவேண்டும்
என்பதையும், செடிக்குத் தக்கபடி மண்ணைப் பக்குவப்படுத்திக் கொள்வதால் எவ்விடத்தும்
எவ்விதையும் பயன்படுத்தலாம் என்பதையும் நன்கு அறிந்து கொள்ளமுடிகிறது.
மரங்களுக்கான நோயும் மருந்தும்
உயிரினங்களுக்கு வாத, பித்த, கப நோய்கள் இருப்பதுபோல் மரங்களுக்கும் இவ்வகையான
நோய்கள் இருப்பதைக் காண்கிறோம்.
அனுபானம் முதல் உந்திவரை வாதநிலை
உந்தியின்
மேல் மார்பு மட்டும் பித்தநிலை
மார்பு
முதல் உச்சி வரை கபநிலை
என்னும் சித்த மருத்துவச் சுடரில்
கூறப்படும் கருத்து மரங்களுக்கும் பொருந்துவதாக உள்ளது. மனிதனுக்குத் தோன்றும் நோயின் அறிகுறிகளை
மூன்றாகப் பிரித்துள்ளனர். அதாவது பாதம்
முதல் உந்திவரை தோன்றும் நோயின் அறிகுறிகளைக் கொண்டு வாதநோய் என்றும், உந்தி முதல்
மார்பு மட்டும் தோன்றும் நோயின் அறிகுறிகளைக் கொண்டு பித்த நோய் என்றும், மார்பு
முதல் உச்சி வரை தோன்றும் நோயின் அறிகுறிகளைக் கொண்டு கபநோய் என்றும்
பிரித்துள்ளனர். இதேபோல் மரங்களையும்
மூன்றாகப் பகுப்பர். வேரிலிருந்து கிளைகள் பிரியத் தொடங்கும் வரை
உள்ள பகுதியை அடிப்பாகம் என்றும், கிளைகள் உள்ள பகுதியை இடைப்பாகம் என்றும்,
கிளைகளின் நுனியில் உள்ள பகுதியை கடைப்பாகம் என்றும் கொள்ளலாம். அதாவது, அடிப்பாகத்தை வாதநிலை என்றும்,
இடைப்பாகத்தைப் பித்தநிலை என்றும், கடைப்பாகத்தைக் கபநிலை என்றும் கூறலாம். வாத, பித்த, கபத்தின் அறிகுறிகளைச் சித்த
மருத்துவ நோய்நாடல் நோய் முதனாடல் திரட்டு என்னும் நூலில்,
கண்டாயோ வாதத்தாலெ ழுந்த தேகம்
கண்டிமையாய்த்
தடித்திருக்குங் கருமை செம்மை
என்று வாதத்தின் குறிகுணத்தையும்,
அறிவான பித்தத்தாலெ ழுந்த தேகம்
யறமெலிவு
நிறம்வெள்ளை யரிவை யோடு
என்று பித்தத்தின் குறிகுணத்தையும்,
தானான சிலேற்பனத்தாலெ ழுந்த தேகம்
கனத்திருக்கு மனம்பெலக்குஞ் சரீரம்
வேர்க்கும்
என்று
கபத்தின் குறிகுணத்தையும் குறிப்பிடும்.
இதுபோன்ற குறிகுணங்கள் மரங்களுக்கும் இருப்பதை விருக்ஷாதி ஸம்ரக்ஷ்ண சாஸ்திர
தீபிகை கூறுகிறது.
உயரமாகவும் அதிகப் பருமனாக வளரக் கூடியதும்,
கடினமாக இருப்பதும், தூக்கம் இல்லாமலிருப்பதும், வெய்யில் சிறிது பட்டால்
வாடுவதும், நீர் கொஞ்சமும் படாமல் வளர்வதும் வாதத்தின் குணம் ஆகும். இதனைப் போக்கக் காரம், கசப்பு, கஷாய சாறுகளையோ
மாமிச இரசங்களையோ வேர்களில் ஊற்றி வந்தால் இந்நோய்கள் குணமடையும். மேலும், மரங்களில் முண்டுகள் உண்டாகினாலும் வாத
நோயின் குணம் ஆகும். இதற்கு
மரஉருவிப்பட்டை, கோமயம், வசம்பு இவைகளைத் தடவுவதால் வாதநோய் குணமாகும். பொதுவாக எவ்வகையான வாத நோயாயினும் மாமிச
இரசத்தை வேரில் ஊற்றினால் வாத நோய்கள் குணமடையும்.
வெயில்பட்டால் வெளுப்பதும் திரும்பத்திரும்ப கிளைகள் ஒடிவதும் பித்தத்தின்
குணம் ஆகும். இதனைப் போக்கக் காரம்,
உப்பு, புளி இவைகளைச் சேர்த்துக் காய்ச்சப்பட்ட சாறுகளை மரத்தின் அடியில்
ஊற்றினால் பித்த நோய்கள் குணமடையும்.
விசேஷமான கொம்புகள் கிளைகள் கூடியும் பல
புஷ்பங்கள் சுமர்த்தியாகவும் அதன் சுற்றுப் பக்கங்கள் குளிர்ச்சியாகவும் இருந்தால்
அது சிலேத்துமத்தின் குணம் ஆகும். இதனைப்
போக்கத் தித்திப்பு, புளி, உப்பு போன்ற சாறுகளை வேரில் ஊற்றுவதினால் சிலேத்தும
நோய்கள் குணமடையும்.
இவ்வாறு வாத, பித்த, கப நோய்களுக்கான பொதுவான
நோய்களையும் அந்நோய்களுக்கான மருத்துவ முறைகளையும் மட்டும் அல்லாமல் பல தனிப்பட்ட
நோய்களுக்கும் மருத்துவ முறைகளைக் கூறியிருக்கிறது இந்நூல். அவற்றுள் சில மட்டும் இங்குக் காண்போம்.
காய்ந்த கிளைகளை வெட்டிவிட வேண்டும். வெட்டப்பட்ட பாகத்தை வாய்விளங்கம், நெய், களிமண்
இவைகளைச் சேர்த்துப் பிசைந்து தடவிவிட வேண்டும்.
அம்மரத்தின் வேர்களில் பாலும் தண்ணீரும் கலந்து ஊற்றி வரவேண்டும். இலைவிழுந்த மரத்தின் சாம்பலைக் கொண்டு வந்து
தோட்டங்களிலுள்ள மரஞ்செடி கொடிகளின் வேரில் தெளிக்கவேண்டும். அப்படி தெளிப்பதினால்
தோட்டங்களிலுள்ள மரஞ்செடிகள் வியாதி, அக்கினி முதலியவைகளால் பீடிக்கப்படாமல்
காப்பாற்றப்படும். கார்த்திகை மாதத்தில்
சொக்கப்பானை கொளுத்தப்பட்ட சாம்பலையும், குயவன் சூளை சாம்பலையும், சுடுகாட்டுச்
சாம்பலையும் மரஞ்செடி கொடிகளுக்குத் தெளிப்பதினால் பூச்சி முதலிய வியாதிகள் நீங்கி
நல்ல பலனைத் தரும்.
மரத்தில் காய்கள், பிஞ்சுகள்
உதிர்ந்துகொண்டிருந்தால், கொள்ளு, உளுந்து, மொச்சை, வார்க்கோதுமை, எள்ளு இவைகளை
சமனிடை கலந்து வறுத்து சூடு ஆறிய பிறகு அம்மரங்களின் அடியிற் போட்டு மண்ணைப்
போட்டு மூடி வைத்தால் அம்மரங்கள் நன்றாகப் பிஷ்பித்து அதிகமாக நல்ல பலனைத்
தரும். ஆட்டுப்புழுக்கை ஒரு மரக்கால்,
எள்ளு அரை மரக்கால், வறுத்த அரிசிமா ஒரு மரக்கால், மாட்டின் மாமிசம் பன்னிரண்டரை
சேர் இவைகளை நீரில் கலந்து ஏழு நாட்கள் வைத்திருந்து ஏழாம் நாள் காலையில்
மரங்களின் வேர்களில் எருவாகப் போட்டால் அம்மரங்கள் நல்ல பலனைத் தரும். பூச்செடியாக இருந்தால் அதிக பூக்களைத் தரும்.
மரத்தின் மீது இடி விழுந்து வெளிவளர்ச்சி
மட்டும் இருந்து பலன் எதுவும் இல்லாமல் இருக்கும் மரத்திற்குக் கோரைக்கிழங்கு,
வெட்டிவேர், இலுப்பைவேர், பச்சைப்பயறு, உளுந்து, எள்ளு இவைகளைச் சமனிடையாக
எடுத்துக் கொண்டு மாவாகச் செய்து பாலும் நீரும் கலந்து மேற்படியான மரத்தின் வேரில்
ஊற்றினால் அந்த மரம் முன்போல் ஆகும்.
மரங்களிலுள்ள இலைகள் சுருண்டுபோதல், மீன்நாற்றம் அடித்தல், இலைகள் உதிர்தல்,
எறும்புகள் ஜாஸ்தியாக மொய்த்துக் கொண்டிருத்தல், இலைகள் அடிக்கடி சருகுகளாய்ப்
போதல் போன்ற நோய்கள் மரங்களுக்கு உண்டானால் அம்மரத்தின் அடிமரத்தில் கோடரியினால்
சிறு கொத்துகளாகக் கொத்தினால் அம்மரத்திலுள்ள விஷநீர்கள் வடிந்துவிடும். அதன் பேரில் தேன், நெய், வாய்விளங்கம் இவைகளைத்
தண்ணீரில் அரைத்துப் பாலுடன் கலந்து மேற்படி மரத்தின் வேரில் போட்டு மண்ணினால்
மூடி பாலும் தண்ணீரும் கலந்து ஊற்றி வந்தால் நல்ல பலனைத் தரும். இதுபோன்ற செய்திகள் இன்னும் பலப்பல இந்நூலுள்
இடம்பெற்றிருக்கின்றன.
ஒட்டு
விதைகள்
பொதுவாக ஒரு செடியையோ மரத்தையோ இன்னொரு
செடியுடனோ மரத்துடனோ ஒட்டி ஒட்டுச் செடியையோ ஒட்டு மரத்தையோதான் உருவாக்கிக்
கொண்டிருக்கின்றோம். ஆனால் பழங்காலத்தில்
ஒட்டு விதைகளையே உருவாக்கி இருக்கின்றனர்.
பூசணிக் கொடியில் கத்தரிக்காய் காய்ப்பதை, கொடியிலிருக்கும் இளம்பூசணிப்
பிஞ்சின் நடுவில் சிறு துவாரஞ் செய்து நெய், தேன் இவைகளினால் நனைக்கப்பட்ட கத்தரி
விதையை மேற்கண்ட பூசணிப் பிஞ்சுக்குள் செலுத்தி மேற்படி பாகத்தை மூடி வைத்து
மேற்படி பிஞ்சு நன்றாய் முற்றிப் பழுத்த பிறகு அதனுள் இருக்கும் விதையை எடுத்து
பூமியிற் போட்டு பயிர் செய்து வந்தால், பூசணிக்கொடியாகப் படர்ந்து அதில் காய்க்கும்
காய்கள் கத்தரிக்காயாக இருக்கும் எனவும், முருங்கை மரத்தில் பாகற்காய் காய்ப்பதை,
நன்றாய் முற்றிய முருங்கை நெற்றைக் கொண்டு வந்து அதிலிருக்கப்பட்ட விதைகளில் பாதி
விதையை எடுத்துவிட்டு அந்தப் பள்ளத்தில் கொம்புப் பாகல் விதையை வைத்து மறுபடியும்
மேற்படி நெற்றைக் கட்டி மண்ணில் அதைப் புதைத்து வைத்தால், அது முருங்கை மரமாகப்
பயிராகி அதில் பாகற்காய், முருங்கைக்காய் இவைகள் இரண்டும் காய்க்கும் எனவும்
குறிப்பிடுகின்றதைப் பார்க்கமுடிகிறது.
ஒரு நிறப்பூவை மற்றொரு நிறப்பூவாகச்
செடியிலேயே மாற்றுவதற்கான ஒட்டு வகைகளையும் இந்நூல் கூறுகிறது. பல வர்ணங்களுள்ள புஷ்பங்களைப் புஷ்பிக்க
(சிவப்பு, வெள்ளை, கருப்பு, மஞ்சள்) இப்படி புஷ்பிக்கப்பட்ட செடிகளின் கிளைகளைப்
பதியனாகப் போட்டு மேற்படி பதியன்கள் பயிரானவுடன் அவைகளை ஒன்றாகச் சேர்த்து
நூல்களினால் கட்டி அதன்பேரில் நெய், தேன் இவற்றைத் தடவி பூமியில் நட்டு நீர் ஊற்றி
வந்தால் அவைகள் அடிமரம் ஒன்றாயும் மேல் கிளைகள் பல கிளைகளாகப் பிரிந்து
நானாவர்ணமுள்ள புஷ்பங்களைக் கொடுக்கும்.
இதே விதமாக நார்த்தை, எலுமிச்சை, கிடாரை முதலிய ஜாதிகளுக்கும் செய்யலாம்.
பல வர்ணமாக செடிகளுண்டுபண்ண வேண்டுமானால் அவ்வித விதைகளை எந்தவர்ணமாக
செய்யவேண்டுமோ அந்த வர்ணத்தையும் அழிஞ்சில் தைலத்தையும் சேர்த்து அதில் மேற்படி
விதையை ஊறவைத்து பூமியில் ஊற்றின பிறகு அவைகள் எந்த வர்ணத்தினால் நனைக்கப்பட்டனவோ
அந்த வர்ணத்தையும் தண்ணீருடன் கலந்து தினந்தோறும் காலை மாலை இரண்டு வேளைகளிலும்
மேற்படி செடிகளுக்கு ஊற்றி வந்தால் அதே நிறமுள்ள புஷ்பங்களைக் கொடுப்பதுடன்
செடிகளும் அதே வர்ணமாகிவிடும். மேற்கண்ட விதமாகப் பருத்தியும் செய்யலாம்.
இதுபோன்ற ஒட்டு விதை முறைகளும் ஒட்டு வண்ண முறைகளும் வீட்டுத் தோட்டத்தில்
பயிரிட்டு வந்தால் குறைந்த இடத்தில் நிறைந்த செடிகளையும் பூக்களையும் வைத்த
பெருமைக்குரியவராக இருப்போம். இந்நூலில்
கூறப்பட்டுள்ள செய்திகளின் உண்மை நிலையை அறிந்து இன்றைய வேளாண் துறையில்
செயல்படுத்த வேண்டும் என்பதும், இதுபோன்ற நூல்களை அரசே பதிப்பித்து வேளாண்மைத்
துறைக்குப் படிக்கும் மாணவர்களுக்குப் பாடமாக வைக்கவேண்டும் என்பதும்,
பழையமருத்துவ முறைகளுக்கும் புதிய
மருத்துவ முறைகளுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆய்வு செய்து வேளாண்மை செய்திட
இதுபோன்ற நூல்கள் பயன்படும் என்பதும் இவனின் எண்ணமும் ஆசையுமாகும்.
கோவைமொழி: மனம் திறந்தால் சினம் குறையும்.
கோவைமொழி: மனம் திறந்தால் சினம் குறையும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


