திங்கள், 12 அக்டோபர், 2026

சண்முகமாலை

 

தவத்திரு இராமானந்த சுவாமிகள் அருளிச் செய்த

சண்முகமாலை

காப்பு

(எழுசீர் ஆசிரிய விருத்தம்)

1.         திருமலிந் திலகுஞ் செம்மலர்ச் சோலைத்

                        தென்பழ னாபுரிக் குன்றின்

மருவுசண் முகன்மேல் வழுத்துபா மாலை

                        வழுவற முடிவுறற் பொருட்டு

தருவென வுலகர் விழைபல வரமுந்

                        தருபவன் றனதடி யாரைக்

கருவிடைப் புகுதா தருள்புரி பாதக்

                        களிற்றினைப் பணிந்து நாடுதுமே.

நூல்

2.         சீரடி யிணையைத் தேவர்க டுதிக்கத்

                        தென்கிரி முடியினிற் றிகழ்ந்து

பாருள மனுக்கள் கண்களி கூரப்

                        பதித்தநற் கருணையென் சொல்வே

னாருனைப் போல வடியர்செய் பிழையை

                        யகற்றி யாண்டிடுகுண முடையார்

தாருவை நிகர்த்தா யென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.

(1)

3.         கூடல்வாழ் புலவர் குழுவி லோர்முனியை,

                        குறள்கொடு செலவது காலைப்

பாடலான் மற்றைத் தேவரைத் துதித்தும்

                        பாதுகாத் திடுபவ ரிலாம

னாடியே யுன்னைத் துதிசெய வேலா

                        னன்குபே யொடுமலை பொடியச்

சாடிரட் சித்தா யென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.

 (2)

4.         உன்னையே தந்தை தாயெனக் கருதி

                        உளங்களி கூர்ந்துநா னிருக்க,

வென்னையே வாதி போலநீ யெண்ணி

                        யிடர்செயில் யானென்ன செய்வேன்

கன்னிகை யீன்ற கருணைவா ரிதியே

                        கடுகியே மயின்மிசை வந்து

தன்னிய னாக வென்னையாண் டருள்வாய்                                                                                        சரவணா னந்தசண் முகனே.           

(3)

5.         •பங்கயன் புரத்திற் பாலனா வந்து

                        பாரினிற் புன்சம யத்துக்

கங்குலை நீக்கி விளக்கிய தேபோற்

                        கடையனேன் படுந்துய ரறிந்து

மங்கைய ராசை யெனுமிரு ளகற்ற

                        மனமிலா திருப்பதென் னையா

சங்கடந் தவிர்த்தே யென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

•மங்கயன்புரம் - பிரமபுரமென்னும் சீகாழி.

 (4)

6.         மற்றுமோர் தெய்வ முண்டென நினையேன்

                        வையகத் தாசையை மதியேன்

பற்றிடு முறவோர் தம்மையும் பற்றேன்

                        பதமலர் தஞ்சமென் றடைந்தேன்

குற்றமே தினமுங் கோடி செய்திடினுங்

                        குமரனே மனம்பொறுத் திந்நாள்

சற்றுநீ தயைசெய் தென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(5)

7.         பிரணவப் பொருளா விளங்கிய முதல்வன்

                        பின்னவா பிழைபடு நாயேன்

மரணகா லத்திற் படுந்துய ரறிந்துன்

                        மாணடி தஞ்சமென் றடைந்தேன்

கரணநான் கினையும் நீத்தமா தவர்கள்

                        கண்டுகண் களித்திடுந் தேவே

தருணநீ யெதிர்வந் தென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(6)

8.         உன்னையே பாட வுன்னையே தேட

                        வுன்பணி யேநிதம் புரிய

வுன்னையே மறவா வுள்ளமே தந்திட்

டுன்னடிக் கன்ப னாக்கிடுவா

யென்னையே காக்க விரக்கமி லார்போ

                        லின்னமு மெண்ணுவ தேனோ

தன்னிய னான வென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(7)

9.         மனிதராப் பிறப்ப துன்னையே யறிய

                        வழிதடு மாறியே மறந்திட்

டநியமாக் கெட்டே யழிந்து போவதனை

                        யாவரு மறிகில ரையா

கனிவுட னேழை யவ்வித மழியாக்

                        கருணைசெய் வாயென வடுத்தேன்

றனிமுத லானா யென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே   

(8)

10.       உலகவாழ் வதனை யோர்பொழு தேனு

                        முள்ளத்தில் வேண்டிடில் வீண்சஞ்

சலமத லாம லுற்று நோக்கிடிலென்

                        சாற்றிட வகையிதி லுண்டோ

மலரினும் மெலிய நினதடி நினைக்கின்

                        மகிழ்ச்சி யாம்வினை யிருளகலுந்

தலைமை வேலவனே யென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(9)

11.       கனவினி லொருகாற் றோன்றிநின் றனையே

                        காப்பனென் றுரைத்தது போல

நனவிலு முரைத்த வாய்மைபொய் யாகி

                        னவிலவும் வேறிட முண்டோ

மனமதி லுனையே கதியென நம்பி

                        மலரடி போற்றியுன் னருளாற்

றனதனா கச்செய் தென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(10)

12.       இந்தமா நிலத்தி லிருந்துனைப் போற்றி

                        யேறலாங் கதியெனி லறிவு

மந்தமாச் சோம்பி மயங்குவ தல்லால்

                        வழிதெரிந் துன்பதந் தனையே

சொந்தமென் றடைந்து விலகிடா நிலையாய்த்

                        துணையென நம்பிடா தலைந்தேன்

தந்தைதாய் நீயே யென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(11)

13.       பஞ்சபூ தத்தா லாகிய வுடலைப்

                        பாவியே னென்னதென் றெண்ணிக்

கொஞ்சியே மனைவி மக்களென் றுலகிற்

                        குலவியே நாட்கழித் தலைந்தேன்

வஞ்சக னிவனென் றெண்ணிடா திரங்கி

                        மகிழ்வொடு நாயினேன் மனத்திற்

சஞ்சல நீக்கி யென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(12)

14.       அறிவிலாச் சிறிய மதியுனா லுனையே

                        யகத்தினுட் பொருளென நினையாச்

சிறியனா கியவென் பிழைபொருத் தருளிச்

                        சேவடிக் கன்பனாக் கிடுவாய்

வெறியனென் றயலே நீக்கிடி லுன்னை

                        விடவழிவே றுண்டோ தவத்தின்

றறியினிற் றிகழ்வாய் யென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(13)

15.       உயிரினைக் கவருங் கூற்றனே வலினா

                        லுலகினிற் றமதுரு மாற்றி

யயர்வுற மனத்தைக் கவர்ந்திடு மாத

                        ராசையாற் படுந்துய ரறிந்து

மயிலிவர்ந் தேழை முன்புவந் திலக

                        மனஞ்சிறி திரங்கிடா தேனோ

தயவுட னினிமே லென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(14)

16.       மாற்றுயர் பொன்னே முப்பழச் சுவையே

                        மாணிக்கத் தீபமே தேவர்

போற்றிய முதலே கிருபைவா ரிதியே

                        புண்ணிய மூர்த்தியே மீறுங்

கூற்றனை யுதைத்த முதல்வனா ரடுத்துக்

                        குனிந்துகேட் டிடவுந்தா ரகத்தைச்

சாற்றிய முதல்வா வென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(15)

17.       ஆலத்தை நிகர்த்த விழியினார் மயக்கி

லடிக்கடி துன்புறு மனத்தன்

சீலத்தை நாடிக் கதிபெற மறவாச்

                        சிந்தனை புரியுநா ளுளதோ

பாலொத்த மொழியாள் பாலனே யுலகப்

                        பார்வையின் மெய்யெனு மிந்த்ர

சாலத்தை நீக்கி யென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(16)

18.       சஞ்சல மனத்தை யொருவழிப் படுத்தச்

                        சாத்தியப் படவிலை யிதனை

நெஞ்சினிற் குடியா யிருந்தநீ யறியா

                        நேர்மையை யோசிக்கின் முழுதும்

வஞ்சக மாகத் தோன்றலால் வேறு

                        வகையிலை யுன்னடி யிணையே

தஞ்சமென் றடைந்தே னென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(17)

19.       மெய்யடி யார்க ளன்பினாற் றுதிக்க

                        வேண்டிய வரமருள் செய்தாய்

பொய்யடி யானா நாட்கழித் தலைந்த

                        புலையனைப் புவியுளோ ருனைத்தேர்ந்

துய்யடி யானென் றுன்னுவ ரதனை

                        யுண்மையாச் செய்குவ தென்றோ

தையல்கை யளித்தா யென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(18)

20.       சின்மயப் பொருளே பொதுவழி கண்ட

                        திறத்தினர் காணுமெய்த் தேவே

யென்மனத் துள்ளே யிருண்மறைத் திட்டா

                        லேழையே னெவ்வண மலிந்த

புன்மய நீங்கி யுன்வயப் படுதல்

                        புரிவதோ வெங்கினுந் தானே

தன்மய மானா யென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(19)

21.       கார்முகில் போல வியமன்வந் திடுங்காற்

                        காசினி தனிலுள மாந்தர்

யார்முனம் வந்து தடுப்பவ ருள்ளார்

                        யாவர்தாம் பின்வரற் பாலார்

சீர்மலிந் திலகுமெய்த் தொண்ட ரல்லாற்

                        றேவரும் வெல்வரோ கடப்பந்

தார்மிளிர் மார்பா யென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(20)

22.       துற்குணக் குப்பை மேடெனு முடலைச்

                        சுமந்திது வரையுமென் கண்டே

னற்குணப் பெரியோர் பணிபுரிந் திலன்மெய்

                        நாடிய நிலையுங் கண்டி லன்யா

னெக்குணங் கொண்டுன் யிணையடி பணிவே

                        னிறைவனே மனமுவந் திந்நாள்

சற்குரு வாவந் தென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(21)

23.       நல்லவர் கண்ணிற் கண்டிடு நாக

                        நாசமா காதெனு மொழிபோற்

புல்லனே னெனினு நின்கணிற் கண்டும்

                        பொய்யுல கதனில்வா டுவதேன்

செல்லவும் வேறோர் திக்கினி யுண்டோ

                        தீவினை யாற்படுங் கட்டச்

சல்லிய நீக்கி யென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(22)

24.       பாவியே னெனினு முன்றிரு வடியைப்

                        பணிந்ததும் பொய்கொலோ வன்பாச்

சேவியா விடினு முனதெழி லதனைத்

                        தெரிசித்த பலனது போமோ

கூவிய முறையுன் செவிபுக விலையோ

                        குறைதவிர்த் திடப்பசும் மயிலிற்

றாவியே வந்திங் கென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(23)

25.       புன்புல னைந்தின் வழிசெலு மனத்தைப்

                        புந்தியாற் றடுத்துநன் னிலையா

யுன்பதம் போற்றி யுள்ளிரு ளகற்றி

                        யுயர்கதி காணுநா ளென்றோ

தென்பரங் குன்றி லுறைமுரு கோனே

                        திருவிழி மூன்றுடைப் பரமன்

றன்புதல் வோனே யென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(24)

26.       சீக்கிர மாக வந்துவந் தெனது

                        சிந்தையை மயக்கிடுங் கன்மம்

போக்கிடுங் கால மென்றுதான் வருமோ

                        புண்ணியா மனஞ்சிறி திரங்கிக்

காக்கிறே னென்ற வார்த்தை வீணாகக்

                        கழிந்ததோ கடலிடைச் சூர்மாத்

தாக்கிய வேலா வென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்த சண்முகனே.  

(25)

27.       எத்தனை பேர்க்கோ வருள்புரிந் தாயின்

                        றேழையே னிமித்த மக்கதைகள்

சத்திய மலவென் றுரைசெய லிந்தத்

                        தரணியிற் 1றென்கிரி யதனிற்

கத்தனே யுனது திருவடிச் சுவடு

                        காட்டிய வாடலும் பொய்யோ

சத்திதன் பாலா வென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்த சண்முகனே.  

பா.வே. : 1. றென்கரை யதனிற்.

(26)

28.       வஞ்சக முலோபங் கொடுமையுங் கள்ள

                        மாயையோ டாணவ மிவையென்

நெஞ்சக நிரப்பி மறைத்ததா லயர்ந்தே

                        னிமிடத்தி லவ்வினை நீக்கிற்

கொஞ்சமு முன்னை விட்டுநீங் குவனோ

                        குறைதவிர்ப் பாயெனக் குறித்துத்

தஞ்சமென் றடைந்தே னென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(27)

29.       விற்பனர் சிறப்பாய் நீமகிழ்ந் திடவே

                        வேண்டிய கவிபுகன் றிடுவா

ரற்பனா கியவென் புன்கவி தனக்கு

                        மருள்புரிந் திடுவையோ யறியேன்

சொற்பனத் தேனு நித்தமு மயின்மேற்

                        றோகைய ருடன்வந்து தோன்றித்

தற்பரம் பொருளே யென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(28)

30.       வாதிக்கும் கள்ள மனத்துடன் றினமும்

                        வாழ்வதே யதிதுயர் மறந்து

போதிக்கப் புகுவே னென்செய்கை நோக்கிற்

                        பூதலத் துள்ளவர் நகைப்பார்

சூதற்ற மனத்தோ டுனைத்துதி செய்யிற்

                        றொழும்பனேற் கருள்வையோ நன்மை

சாதிக்கும் படிவந் தென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(29)

31.       சூத்திரப் பாவை யாகிய வுடலைச்

                        சொந்தமென் றெண்ணி வேட்கையினா

லாத்திரப் பட்டு வினையுரு மாத

                        ரணைவதே சுகமென வடைந்தேன்

றோத்திரம் புரிவோர் கண்களிப் படையச்

                        சுகத்தொடு கடம்புகூ தளத்தார்

சாத்திய தோளா யென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(30)

32.       அனைத்து நின்செய லென்றுணர்ந் திடாப்பாவி

                        யாகிவீ ணாட்கழித் ததலாற்

றினைத்துணை யேனு மெய்நிலை கண்டு

                        சேவித்த திலையென்ன செய்வேன்

வனத்தினிற் குறமான் றனத்தினுக் காக

                        வருந்திய திருவடி யென்னுந்

தனத்தினைத் தந்தே யென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(31)

33.       எப்பணி புரிந்தோ வெத்தவ மிருந்தோ

                        லேவ்விதச் செய்கையி னாலோ

வப்பனே யுனைப்போற் றிடுமறி வடைந்து

                        மயர்ந்தன னாரிடம் புகுவேன்

சொற்படி கேளாப் பிள்ளையென் றாலுந்

                        துன்புறக் காண்பரோ பெற்றோர்

தப்பித நீக்கி யென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்த சண்முகனே.  

(32)

34.       தொல்லுல கத்தில் வழங்கிடும் பொருளைச்

                        சுகமெனத் தேடினே னில்லை

யல்லது நின்னை யடிதொழு வார்க

                        ளடிதொழு துய்ந்தது மில்லை

கல்லினை நிகர்க்கு மனநெகிழ்ந் துருகிக்

                        கருணைபெற் 1றுய்யுமா றெதுவோ

தல்லியிற் சிறந்தோ யென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

பா.வே. : 1. றுய்யுங்கறு வெதுவோ.

(33)

35.       கூடிய மட்டி லிப்புவி வாழ்ந்து

                        குறைதவிர்த் தேறலா மென்னி

னாடிவந் திடுவோர் மனத்தினுக் கிசைந்து

                        நலமிலா யுரைசொல வேண்டும்

பீடித மென்று தள்ளிடிற் 1கெட்டான்

                        பேயனென் றுரைப்பருன் கடைக்கட்

சாடையா னோக்கி யென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

பா.வே. : 1. கெட்டேன்.

(34)

36.       குவலயந் தனிலு மென்னைப்போல் வீணர்

                        குரைகடற் றீவினு மில்லை

கவலையே குடிகொ ளுளத்தினேற் குன்றன்

                        கனைகழற் செல்வம் வந்துறுமோ

திவலைநீ ரளவும் பத்தியோ டுறுநல்

                        றிடவயி ராக்கிய மில்லேன்

சவலைநோய் நீக்கி யென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(35)

37.       உன்னருட் செல்வ மடைந்திடாப் பாவி

                        யுலகினி லுயிர்தரித் தென்ன

வின்னமு நெடுநா ளிருப்பினு மிதனா

லெச்சுக மடைந்திடு வேன்யா

னன்னெறி யறியா தந்தகன் போல

                        நானிலத் திடருழத் தலைந்தேன்

சன்னிதி சேர்த்தே யென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(36)

38.       படிமிசை யுனைப்போன் மெய்த்தெய்வ மெங்கும்

                        பார்த்திலன் பாவியே னெடுநாட்

கொடியவெம் பிறவிப் பிணியினான் மெலிந்தேன்

                        குறையுள தாய்யெணி யின்ன

மடிமையின் றேகம் பிணியினால் வாட

                        வமைத்தது மென்கொலோ யின்னே

சடிதியி லெதிர்வந் தென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(37)

39.       ஏதுநான் சொல்லி முறையிடும் போது

                        மென்பிழை யெண்ணியோ கலியிற்

சூதுதான் மிகவுங் கற்றத னாலோ

                        தொல்லுல கத்தினி லிந்நாள்

வாதிபோ லெண்ணி வஞ்சிப்ப தேனோ

                        வருத்திய திதுவரை போதுஞ்

சாதுசங் கத்தோ டென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(38)

40.       என்பெருந் துயர மநுதின முரைத்து

                        மிரக்கமென் பதுசற்று மில்லை

முன்பொரு வணிக மாதுசொற் கிரங்கி

                        முருகனே யென்னவு நேர்ந்தாய்

துன்புறு மடியன் கூவியுங் கேளாச்

                        சூழ்ச்சியை யறிந்திலன் குறமான்

றன்பெருங் கணவா வென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(39)

41.       பொங்கிய சீற்ற வினையினான் மெலியும்

                        புழுத்தநா யிற்கடைப் புலையேன்

சங்கடந் தவிர மெய்ப்பணி புரியாச்

                        சண்டிக்குச் சற்றுநீ யிரங்கி

மங்கிநொந் தழியா வாழ்வுதந் திடவே

                        மயிற்பரி மிசையெதிர் தோன்றிச்

சங்கரன் சிறுவா வென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(40)

42.       ஒருவரைக் காணா விடத்தினின் மிக்க

                        வுதாசினஞ் சொல்வதே வழக்கம்

வருவதல் லாம லென்கொடுஞ் செய்கை

                        மனத்தினி லெண்ணுவ தில்லை

யிருநிலத் திருந்து நல்வழி நடந்தீ

                        டேறுவ தென்றுகொல் லிருபெண்

சருவிய மார்பா வென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(41)

43.       கல்லினா லெறிந்தோன் பிரம்பினா லடித்தோன்

                        காற்செருப் பான்முகத் துதைத்தோன்

வில்லினா லடித்தோ னிவர்கட்குங் கிருபை

                        வேணமட் டுதவினோன் விழியிற்

புல்லிய புதல்வ னாகையா லுனக்கப்

புந்தியு முண்டெனத் துதித்தேன்

சல்லகக் கரத்தோ யென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(சல்லகம் - கைத்தாளம், சம்பந்தரை நினைந்தவாறு)

(42)

44.       நோயொரு பாலிற் பற்றிவாட் டிடவு

                        நுண்ணிடை மாதர்மே லாசைப்

பேயொரு பாலிற் பற்றியாட் டிடவும்

                        பின்னையு மளவிலாத் துயர்கொள்

காயமே யெடுத்த திதுவரை போதுங்

                        கடையனென் றாலுநீ யெனக்குன்

சாயலுற் றிடத்தந் தென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(43)

45.       ஏந்திய தனத்து மாதர்மேற் சிந்தை

                        யிடையிடை செலுத்திநல் லறிவின்

காந்தியை மழுக்கி யிருளுறு மனத்தன்

                        கண்ணெதிர் காணுநா ளென்றோ

சேந்தனே யேழை பிழைபொறுத் தணிசால்

                        செஞ்சிகி யிவர்ந்தினி யேனுஞ்

சாந்தநற் குணத்தோ டென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(44)

46.       கோறிய படியே யனைவர்க்கு முதவுங்

                        கொள்கைகண் டுன்னையே குறித்தேன்

சீறியே யென்னைப் புறந்தள்ள நினைக்கிற்

                        செல்வதற் கோர்வழி யுண்டோ

கூறிய முறையுன் திருச்செவி கேளாக்

                        குறையிதற் கென்செய்வேன் கருப்பஞ்

சாறென வினிப்போ யென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(45)

47.       கற்குவ டதனின் னின்றுல கனைத்துங்

                        காத்திடு மப்பனே கடையே

னெற்குநீ மோக்க மீந்திடக் கருணை

                        யில்லையேற் றிருவடி யிணைமே

னற்கவி மாலை சூட்டிட வேனு

                        நல்லருள் செய்திடி லிழிவோ

சற்குணக் கடலே யென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(46)

48.       சிந்தையை யொடுக்கி யோகினைப் புரியத்

                        திருவருட் டுணையென்று வருமோ

வெந்தைநீ யதனுக் கிடர்செயி லிந்நா

                        ளேழையே னுய்யுமா றெதுவோ

சந்தத முனையே துதிசெய வாக்குத்

                        தந்திடி லருள்குறைந் திடுமோ

தந்திர மகற்றி யென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(47)

49.       யாருக்கு நல்லோ னெனப்பெயர் கொள்வ

தரிதரி தாகையா லிந்தப்

பாருக்கு ளிருந்து பயன்பெற லென்னோ

                        பாழில்வீழ்ந் தலறுமென் நெஞ்சஞ்

1சீருற்ற வடிக்கா ளாவது மென்றோ

                        செய்வகை யின்னதென் றறியேன்

சாருற்ற தவரோ டென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

பா.வே. : 1. சீருற்றடிக்கா.

(48)

50.       பக்குவ முள்ள சீடர்க ளுனையே

                        பத்திசெய் துன்னருள் பெறுவார்

சக்கிரி திகிரி போலலை நெஞ்சன்

                        றானுயு மாறுள தேயோ

திக்குவே றிலையென் றோர்தர மேனுஞ்

                        செப்பினே னல்லனோ சிறியேன்

சக்குமுந் நான்கா லென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(49)

51.       மும்மல மகற்றி வாசியி னாதி

                        முடிவையுங் கண்டுமுச் சுடரின்

செம்மையை யறிந்தே யொன்றெனக் கண்டு

                        சேவித்த லென்றுதான் வருமோ

கைம்மையே னெனினுஞ் சற்றுநீ யிரங்கிக்

                        கண்ணருள் புரியவென் றுள்ளஞ்

சம்மத மாவந் தென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(50)

52.       சிந்தையின் கலக்கந் தீரவென் றுனது

                        திருவடிக் கடைக்கலம் புகுந்தேன்

சந்தத நீங்கா வாகுல மீந்தாற்

                        றனையனே னெவ்வித முய்வே

னந்தகன் போல நல்வழி யறியா

                        தலைந்துநொந் துருகினே னருணைச்

சந்தவான் கிளிபோ லென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(51)

53.       வார்த்தைதா னெதுநாள் வரையினு முளதோ

                        வதுவரை மனநிலை யறியேன்

றூர்த்த னாகியயா னுயும்வகை மவுனஞ்

                        சொல்லுவ தென்றுகொல் சுனைப்பாற்

கார்த்திகைத் தாயர் மகிழ்சிறு பாலா

                        கவின்றிருப் புகழ்சொல்வோர் வேட்கை

சாத்தியம் புரிவோ யென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(52)

54.       துன்புறுஞ் செயலை யடிக்கடி மறைக்குந்

                        தொல்புவி யாசையின் மறந்தே

யென்பெரு மையினை யாவருங் கேட்க

                        வெடுத்துரை விரித்திடுங் கடையே

னுன்பெரு மையினை யோதினே னில்லை

                        யுய்வகை யெவ்வணம் மலர்ப்போ

தன்பெறப் புடைத்தோ யென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(53)

55.       எந்தவே ளையினு நீங்கிடாப் பத்தி

                        யெனக்கென்று வருவதென் றேங்கிச்

சிந்தைநொந் துருகிக் கூவிய முறையுன்

                        றிருச்செவி கேட்கவு மிலையோ

சொந்தமென் றென்னைக் 1காத்திடிற் குற்றஞ்

                        சொல்லுவார் யாவரோ வானோர்

தந்துயர் களைந்தா யென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

பா.வே. : 1. காத்திடல் குற்றஞ்.

(54)

56.       மெய்யதா யுலகில் யாவருங் காண

                        விளங்கிய தெய்வநீ யிருக்கப்

பொய்யர்க ளான மானிடர்க் கஞ்சிப்

                        புந்திநொந் தழுங்கவேன் விடுத்தாய்

யையனே யின்ன மவனியோர்க் காளா

                        யலைந்திடா துன்னடி யடையச்

சையமே னடிப்பா யென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(55)

57.       உலகினி லளவுக் கடங்கிடாச் சமய

                        முள்ளதால் யாவரு மயங்கிக்

கலகமிட் டுழன்று நாள்கழித் திடநீ

                        காட்சிபார்த் திருப்பது மேனோ

குலவிய சித்து விளக்கிடச் செய்து

                        குருவுருக் காட்டியென் மனச்சஞ்

சலமறக் களைந்தே யென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(56)

58.       தீதிலாச் சைவ நெறியினை யுலகிற்

                        சிறந்திடச் செய்த சம்பந்தர்

வாதவூ ரடிக ளப்பமூர்த் திகள்பின்

                        வன்றொண்ட ராதிமெய் யறிஞர்

பாதக மகற்றும் பண்பின ரவர்தாள்

                        பழிச்சு 1பேறேயெனக் குரிய

சாதக மாக்கி யென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

பா.வே. : 1. பேறெனக்குரிய.

(57)

59.       மலரினு மணக்கு நின்பதம் போற்றி

                        வாழ்தலே வாழ்வென மதித்துஞ்

சிலர்சொலுங் கொடிய வுரையினுக் கஞ்சிச்

                        சிந்தைபுண் ணாகவு மெலிந்தே

னுலகினில் வயிற்றின் கொடுமையா லொருவ

                        ருதாசினங் கேட்டிட லகற்றித்

தலமதிற் றோன்றி யென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(58)

60.       கருவிடைப் புகுதா தடியருட் சேர்க்கக்

                        கண்ணருள் புரிவையே லுன்றன்

றிருவடி யறிய வுலகவாழ் வதனைச்

                        சிறிதுமே வேண்டிடே னையா

குருவெனக் குறுமா முனிக்கருள் குகனே

                        குறைதவிர்த் திடமன மிரங்கித்

தருவினுஞ் சிறந்தா யென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(59)

61.       ஓரணு வேனு முள்ளத்தி னுள்ளே

                        யுன்னுருக் கண்டு சேவித்துக்

காரெதிர் கண்ட மயிலினம் போலக்

                        களித்திட வருள்செயி லுன்றன்

சீரடிப் பெருமை குறையுமோ வொன்றுந்

                        தெரிகிலேன் செந்தமிழ்க் கவியின்

சாரமேற் றிந்நா ளென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(60)

62.       பாலர்க ளழுகை கேட்டதா யோடிப்

                        பாலமு தூட்டுதல் வழக்கம்

போலவு முலகின் மாயையா லுழன்று

                        புந்திநொந் தழுங்கியே மிகவு

மோலமிட் டடியன் கூவிய வழுகை

                        யுன்செவி கேட்கவு மிலையோ

சாலமதி யற்றா தென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(61)

63.       தரணியி லுயிர்கள் யாவுந்தம் முயிர்போற்

                        சாந்தங் கொள்ளாதவர் தம்மான்

மரணமா யுயிர்கண் மடிவதை யறிந்த

                        மனமென்று மகிழ்வதோ வறியேன்

பரணிபின் வந்த மாதரார் கொங்கைப்

                        பாலமு துண்டிடு மெந்தாய்

சரணமுன் னடிக்கே யென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(62)

64.       நெஞ்சக மதனிற் றன்மசிந் தனையோர்

                        நிமிடமு மெண்ணிடாக் கொடிய

வஞ்சகக் கபட நிறைந்திடு மனத்து

                        மாந்தர்க ளுறவினை நீக்கிப்

பஞ்சையா கியவென் பிழைபொறுத் திடவுன்

                        பாதமே கதியென வடுத்தேன்

சஞ்சிதங் கெடுத்தே யென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(63)

65.       மாதர்மேற் கொண்ட மையலைப் போக்கி

                        மலரடிக் காட்செயென் றுன்பா

லோதினா லதற்கு மாறுத லாக

                        வொழிவிலா விச்சையைத் தந்தாய்

பூதல மதனி லுன்குண முரணாப்

                        போயிற்றோ யறிகிலேன் புவிமேற்

சாதலை நீக்கி யென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(64)

66.       சுற்றிலுங் கெட்ட துற்குணத் தோரைத்

                        துதையவைத் தென்மனக் குரங்கைப்

பற்றியாட்டச் செய்தே விந்தை யாகப்

                        பார்த்திருப் பதுமுனக் கழகோ

வெற்றிவே லதனா லென்பகை முழுதும்

                        வேரறக் களைந்துள மகிழ்வாய்ச்

சற்றுநீ தயைசெய் தென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(65)

67.       மதனனைங் கணையா லுளமிகக் கொதித்து

                        வாட்டமுற் றுடன்மிக மெலிந்து

விதனமா யேழை யுன்னடிக் கன்பே

                        வேண்டுமென் றாசையாத் துதித்தேன்

சுதனெனக் கவுரி மகிழ்வுறு குமரா

                        தொண்டனேற் குன்னடி தனையே

சதமெனக் கொடுத்திங் கென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(66)

68.       குவலயந் தன்னின் மாதர்மே லிச்சை

                        கொள்ளுதல் குறையென மனத்திற்

கவலைகொண் டிருக்க வனலினெய் சொரிந்த

                        காட்சியாச் செய்வது மழகோ

திவலைநீ ரளவுன் னடிமலர்க் கன்பு

                        செய்திடத் தெரிகிலாப் பாவி

சவமென வீழா தென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(67)

69.       கடையுக மான கொடுமையா லென்றன்

                        கண்செவி சகித்திடாக் கொடுமை

யிடையிலா திருக்கு மிவ்வுல கதனி

                        லேழையே னெவ்வித முய்வேன்

விடையுகந் தேறும் விமலனார் புதல்வா

                        வேண்டுமென் றுனதுள மிரங்கித்

தடையிலா தெதிர்வந் தென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(68)

70.       மெய்வெறும் பொய்யாய்ப் பொய்யெலா மெய்யாய்

                        விளங்குவதே கலியுக தன்ம

மைய கோவிந்த வவனியின் மிசைமெய்

                        யடியவ ரெவ்வித முய்வார்

தெய்வமே யிலையென் றொருவன்சொல் சொல்லைச்

                        செவியினிற் கேட்கவேன் விதித்தாய்

சைவ நாயகனே யென்னையாண் டருள்வாய்

                        சரவாணானந்த சண்முகனே! 

(69)

71.       உள்ளது பேசு மெய்யர்க ளெல்லா

                        முழன்றுமெய் வருந்திடுங் காலங்

கள்ளமுங் கசடு நிறைந்திடு மனத்தர்

                        கவுரவ மடைந்திடுங் கால

மெள்ளள வேனு மறிந்திலார் போனீ

                        யிருந்திடில் யானென்ன செய்வேன்

றள்ளிடா திதுநா ளென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(70)

72.       கோலமார் சிகண்டி மீதுவந் தன்பர்

                        குறைதவிர்த் தாண்டகத் தாவே

ஞாலமீ தடியன் பிழைபொறுத் துயவே

                        நல்வர மீவதெந் நாளோ

வேலவா காவென் றோர்தரம் விடுத்து

                        விளம்பினேன் பன்முறை சசியா

டாலிநாண் புரந்தா யென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண்முகனே!   

(71)

73.       பூமியின் மிசைமெய் யடியவர் வேண்டும்

                        போகத்தைக் கொடுத்தது மல்லாற்

றோமிலா வயிக்க மோக்கமுங் கொடுத்தாய்

                        தொழும்பனேற் கவைகொடா விடினுங்

காமியந் தவிர்த்தாட் கொள்ளுகென் றேழை

                        கதறிய முறைதனைக் கேட்கத்

தாமத மாகா தென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(72)

74.       அமரர்கண் முன்னைச் சூரனாற் றளைப்பட்

                        டயர்வுறுங் காலையிற் றோன்றிச்

சமர்செய்து காப்போ மென்றவர் கனவிற்

                        சாற்றிய படியருள் புரிந்தாய்

குமரனே யேழை மாயையின் றளையாற்

                        குலைவதை நீக்கியுன் னன்பர்

தமரெனக் கூவி யென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(73)

75.       பேணினேன் வயிறு வளர்த்திடுங் கன்மம்

                        பெரிதென வெண்ணியே யுன்னைக்

•காணிய விழைந்துன் பதத்தினி லன்பாய்க்

                        கவின்மலர் தூவிடாக் கடையே

னாணிலேன் புவிக்குச் சுமையென யிருந்தே

                        னாயகா விரங்கிநின் கமலத்

தாணிழ லளித்தே யென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

• காணிய – காண.

(74)

76.       மின்னனை யார்க ளாசைநோ யதனான்

                        மெய்தளர்ந் தேனெனத் தினமுஞ்

சொன்னசொல் லெதுவுஞ் செவிகளிற் கேட்காத்

                        தோதக வித்தைகற் றாயோ

முன்னமே யனந்தம் பேர்களைக் காத்தாய்

                        மோசமென் பங்குவந் ததுவோ

தன்னமைக் குணத்தா லென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(75)

77.       செகமுழு தாளும் வரமளித் தாலுஞ்

                        சிறிதுநான் வேண்டிடேன் றீரா

விகல்செயுங் கரும வினையகற் றாயே

                        லெவ்விதத் திலுங்கடைத் தேறேன்

சுகமுறும் படிவைத் திரங்கியென் மீதிற்

                        சூழ்ச்சிசெய் யாமலே யழியாச்

சகசவாழ் வினிற்சேர்ந் தென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(76)

78.       தரணியிற் பொய்யாந் தாய்தந்தை சுற்றஞ்

                        சதமென வெண்ணிடி லுடல

மரண காலத்திற் றடுப்பரோ வந்நாள்

                        வழித்துணை தான்வரு வாரோ

கரணத்தை யொடுக்கி யுனைப்பணி யாமற்

                        காலத்தை வீண்கழித் தேன்யான்

சரணவா ரிசத்தா லென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(77)

79.       முந்தியே பலகா லாட்கொள்ளென் றுரைத்து

                        மோசமா யுழன்றிட விடுத்தா

யிந்தநா ளேனு மனஞ்சிறி திரங்கி

                        யேழைமேற் கண்ணரு ணாட்டிச்

சந்தத நீங்காச் சிந்தனை புரிந்துன்

                        சரண்டோழப் பணித்துய வருள்வா

சந்தழைத் திடவே யென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(78)

80.       எதிரினின் முகம னியம்பிய வுறவா

                        லெனக்கென்ன பயனுள துலகிற்

சதிசெயு மாந்த ருறவினை நீக்கிச்

                        சற்றுமுன் சரணிணை நீங்கா

மதியளித் துடற்பற் றாதிய போக்கி

                        வள்ளலே யுன்னொடு கலக்கத்

ததியிதா தலினா லென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(79)

81.       உள்ளத்தின் கருத்தைச் சத்திய மாக

                        வுரைக்கினு முத்தமக் கருணை

வள்ளலா கியவுன் றிருவுள மறியும்

                        வஞ்சகர் தாமறி வாரோ

வெள்ளள வேனும் பிசகிலை யிதனி

                        லிகத்துள மையலை நீக்கிச்

சள்ளைதீர்ந் துயுமா றென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(80)

82.       இகத்துவாழ்க் கையினிற் சுற்றமோ டுறவா

                        யிருந்ததே யிதுவரை போதுஞ்

சுகப்பரம் பொருளே யுன்னரு ளறியச்

                        சொல்லுவேன் சதமுறை சிறியே

னகத்தினிற் குடியா யிருந்தநீ யறிந்து

                        மறிகிலார் போலிருப் பதுமிச்

சகப்பழிப் பாமே யென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(81)

83.       அடியனே னொன்றைக் கேட்டிடி னீயெற்

                        களிப்பதுவே றொன்றாய் யிருந்தாற்,

படிமிசை யிதனை யாரிடத் தெடுத்துப்

                        பகருவேன் பதநிழ லதனிற்

குடிகொள வைக்கி லிடமணு வளவுங்

                        குறையுமென் றெண்ணிட வேண்டாஞ்

சடமெடுத் துழலா தென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(82)

84.       இன்னமு மெதுநாள் வரையினுங் கரும

                        மிடர்செயு மென்பதை யேனுஞ்

சொன்னதா லென்ன குறைவரு முனக்குச்

                        சூட்சமா யுள்ளதோர் சொல்லைப்

பன்னகா பரணன் றனக்கருள் செய்தாய்

                        பாவியேன் றனக்குள மிரங்கிச்

•சன்னத மறவே யென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

• சன்னதம் – பெருஞ்சினம்.

(83)

85.       அண்டமோ டணுவும் யாவையுங் கலந்த

                        தசத்திய வுரைகொலோ வென்றன்

பிண்டமா கியவிவ் வுடலினி லுயிராய்ப்

                        பிரிவிலா 1திருந்ததும் பிழையோ

தொண்டனே னுளத்தி லுளதுயர் நீக்கிச்

                        சுகமுறச் செய்திருட் பகடூர்

சண்டன்வந் தடரா தென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

பா.வே. : 1. திருப்பதும்.

(84)

86.       நாற்கவி சொல்லும் புலவருக் கிரங்கி

                        நல்லருள் செய்குவா யெளியே

னாற்கவி யதுபோற் பாடிட முடியா

                        தடியனேற் குஞ்சிறி திரங்கிப்

பாற்கட லெழுந்த வமுதெனத் தோன்றிப்

                        பலவிதத் துன்பமு மகலச்

சாக்கிர மதில்வந் தென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(85)

87.       என்மனத் துள்ளே புலப்படும் வார்த்தை

                        யின்னதென் றேமுன மறியேன்

பன்முறை பேசிக் கழிந்ததை யொழுங்காப்

                        பகரவு மறிந்திடேன் சிறியே

னுன்மனக் கருத்தை யெவ்வண மறிவே

                        னுயர்புகழ்க் காழியிற் சேயாய்ச்

சன்மமுற் றனையின் றென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(86)

88.       பொங்கிய வாழி கரைகடந் திட்ட

                        போதினும் புவியினை மறைக்குங்

கங்குலை யகற்று மதியொடு கதிரோன்

                        கதிநிலை பிசகிய போதும்

பங்கயப் பதத்தை யுளத்தினிற் கொண்ட

                        பத்தர்கள் கலங்கிடா ரவர்பாற்

றங்கிடச் செய்தே யென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(87)

89.       சத்தமோ டுருவ மிரசம்நற் கந்தஞ்

                        சாற்றிய கண்டத்தின் மேலாச்

சுத்தமாச் சட்கோ ணப்பிரி வாகிச்

                        சுகசடாக் கரவெழி லாக

வொத்துநீ யிருந்த வடிமுடி தோன்றா

                        வொளியினைக் காணுநா ளென்றோ

தத்துவா தீதா வென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(88)

90.       குருவடி வாபார்த் திடுமிட மெங்குங்

                        கோலத்தைக் கண்டு நெக்குருகித்

திருவடி யதனி லென்சிரம் பொருந்தச்

                        சேவித்த லென்றுதான் வருமோ

கருவிடைப் புகுதா தருள்செய வெண்ணிக்

                        கண்ணெதிர் காட்டியிவ் வுலகிற்

சருவசித் தியுந்தந் தென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(89)

91.       யோகத்தைப் புரியு நற்றவர் விருப்ப

                        முதவிநல் லருள்புரிந் திடுவாய்

மோகத்தை விரும்பி யுழன்றிடுங் கெட்ட

                        மூர்க்கனேற் குன்னருள் வருமோ

வேகத்தி லோடு மனத்தினை யடக்கி

                        வினையினேற் குதவிடிற் பெறுவேன்

றாகத்தை நீக்கி யென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(90)

92.       குத்திரம் கோள்கள் கற்றவ ரநந்தங்

                        குடிகெடுப் பவர்களைக் கூற்ற

னெத்தியே கொடுபோய்த் தண்டிக்கும் போதி

                        லிவ்வுடற் சுகமங்கு வருமோ

பத்தியோர் சிறிது நன்குண ராத

                        பாமரற் குங்கதி யுண்டோ

சத்திவேற் குமரா வென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(91)

93.       குளத்துநீ ருள்ள மட்டுநீர்ப் பறவைக்

                        கூட்டங்கள் கூடிவாழ் வதுபோ

லளப்பரும் போக முள்ளநா ளளவு

                        மனைவருங் கூடுவ ருயர்போர்க்

களத்திடை தனிக்கை விடுவது போலக்

                        கைவரண் டிடில்விட்டுப் போவார்

சளத்தினை நீக்கி யென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(92)

94.       ஓடுநீ ரதனிற் கம்பளி மூட்டை

                        யுருவெனக் கரடியே மிதப்ப

மேடிருந் தொருவ னவாவொடும் பற்ற

                        விரும்பியே மூட்டையுந் தாவ

நாடியே மனிதன் விட்டும் விடாத

                        நற்கதை யானதிஞ் ஞாலந்

•தாடலை யமைத்தே யென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

• தாடலை – தாள்தலை எனப் பிரிக்க.

(93)

95.       எத்தனை நாளா யென்குறை யதனை

                        யெடுத்தெடுத் தியம்பியு முனக்கு

நித்திரைக் கால மாயிருந் ததுவோ

                        நெஞ்சத்தி லிரக்கந்தா னிலையோ

கத்தனே செவிதான் கேட்கவு மிலையோ

                        கடையனே னென்செய்வே னந்தோ

சத்துரு நாசா வென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(94)

96.       உன்பெயர் சொல்லும் பேர்களை நவகோ

                        ளுபத்திரஞ் செய்திடா தெனவே

முன்புள வறிஞ ருரைத்தசொல் வீணோ

                        முருகனே யெனத்தினந் துதித்துந்

துன்புற வென்னைப் பார்த்திட லழகோ

                        கருதியும் பொய்த்ததோ மகவான்

றன்புரி புரப்போய் யென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(95)

97.       புலவனென் றோர்பேர் கொண்டதா லென்றன்

                        புன்கவி தன்னையு மகிழ்ந்து

நலமதென் றேற்றுத் திருமுடி துளக்கி

                        நல்லருட் பேறதந் தருளா

தலவென்று தள்ளி லவனியி லிதனுக்

                        கார்கொடை யளிப்பவ ரகத்திற்

சலனமுற் றலையா தென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(96)

98.       விண்ணிடை யநந்தந் தேவர்கண் முதலோர்

                        வேண்டிய படியருள் செய்தாய்

மண்ணிடை யேழைக் கருள்புரிந் திடுங்கால்

                        வந்துனைத் தடுப்பவ ராரோ

புண்ணிய ரூபா பொதுவழித் தேவா

                        புத்தமு தேசுகப் பொருளே

தண்ணருண் மழைபெய் தென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(97)

99.       காரிகை நன்னூ லிலக்கணந் தொல்காப்

                        பியமுத னூல்பல கற்றுச்

சீரியர் சொல்லுந் தமிழ்ச்சுவை யறிந்த

                        செவியினிற் சிற்றறி வுடையே

னாரிலா துரைத்தல் கேட்கவு மிரக்க

                        நண்ணுவா யோபசு மயின்மேற்

சாரியாத் தோன்றி யென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(98)

100.     குருவடி வாக வந்த சேவகனே

                        குறைதவிர்த் தாளநீ நினைத்தா

லொருநிமைப் போதிற் றீப்படும் பஞ்சா

                        யோடுமென் மாயைக ளனைத்துங்

கருணையோ டெனக்குன் னருள்பொழிந் திடுநற்

                        காலமென் றெய்துமோ கழியாச்

சரதவா சகஞ்சொற் றென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(99)

101.     உலகினிற் றோற்றுங் கதிரவன் சிவன்மா

                        லுமைகண பதிமுத லோதும்

பலவுரு வாநீ விளங்கிய செயலைப்

                        பார்ப்பர்மெய்த் தவரிழி மதியோர்

கலகமிட் டுழன்று நாட்கழித் தவமே

                        கசங்குவ ருன்றன துபய

சலசவார் கழற்கீ ழென்னையாண் டருள்வாய்

                        சரவணா னந்தசண் முகனே.  

(100)

சண்முகமாலை முற்றிற்று.

 

வாழி விருத்தம்

102.     வையகங் காக்கு மயிலுட னயிலும்

                        வாரணத் துவசமும் வாழி

யுய்யுநன் னெறிகண் டுயிர்க்கொலை புரியா

                        வுத்தமர் வாழிசண் முகவேள்

செய்யவாய்க் குறமான் சுரர்பிடி வாழி

                        திகழ்ந்தசற் குருபதம் வாழி

பையலாகிய வென்புன் கவிக்கு வக்கும்

                        பத்தரும் வாழி வாழியவே.

(101)

போற்றி விருத்தம்

103.     சேவலு மயிலுங் கொண்ட

                        திருக்கைவே லவனே போற்றி

பாவல னெனப்பேர் கொண்ட

                        பரமசற் குருவே போற்றி

தேவர்மா தோடு வேடர்

                        திருமகட் கொண்டாய் போற்றி

யோவிலா தடியார்க் கென்று

                        முதவுவாய் போற்றி போற்றி

(102)

அடியர் வணக்கம்

104.     சேவலைக் கரத்தில் வைத்துத்

                        திகழ்ந்தசண் முகன்றன் கீர்த்தி

நாவினாற் றுதித்து நெஞ்சி

                        னாடொறும் நினைந்த பேர்க

டேவரா னாலும் பின்னுஞ்

                        செனித்திடும் மனித ரேனும்

யாவரா யினுமன் னோர்தா

                        ளென்றலைக் கணிபூ ணாமே.

(103)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக