தவத்திரு இராமானந்த சுவாமிகள் அருளிச்
செய்த
கந்தவேள் பதிகவந்தாதி
எண்சீர் ஆசிரிய விருத்தம்
பதிக்கரிய
பொருளுக்குத் தாரஞ் சொன்ன
பண்ணவனே யாறுமுகப் பரனே யுன்னைத்
துதிக்கரியேன்
னின்னன்பர் தமக்கே யுற்ற
தொண்டுசெயேன் வீணேநாட் தொலைத்து 1வாழ்ந்தேன்
மதிக்கரிய
பிழைபுரிந்த வஞ்ச னேனுன்
மலரடியே தஞ்சமென வந்து வீழ்ந்தேன்
கதிக்கெளிய
வழிகாட்டி யாள வெண்ணிக்
கருணையுட னென்னிருகண் காண வாவே.
பா.வே.
: 1. விட்டேன்.
(1)
கண்கண்ட
தெய்வநீ யென்றே யிந்நாள்
களித்திறுமாந் திருந்தேனிக் கடையேன் றன்னை
மண்கண்ட
மதனிடையி லோயாத் துன்ப
வாரியிடை யழுந்தவைத்து மறைந்தா யந்தோ
புண்கொண்ட
நெஞ்சினனாப் புலம்பா நின்றேன்
பொய்யனென வென்றனைநீ புறந்தள் ளாதே
தண்கொண்ட
கருணையொடு காப்பா யப்பா
சரணமுன்றன் பதமன்றிச் சார்பில் லேனே.
(2)
இல்லாத
கற்பனைக ளேடுத்துக் காட்டு
மென்மனத்தின் சேர்க்கையினா லிகத்து ளார்க்கும்
பொல்லாத
பாவியெனப் பேர்தான் கொண்டேன்
போதுமிது வரையிலிந்தப் புவியின் வாழ்க்கை
கல்லாத
பேரேனுங் கொண்ட தொன்றைக்
கடைப்பிடியாக் கொள்வாரக் கருத்து மில்லே
னெல்லாரு
மிகழநின்ற புலையேன் வேறோ
ரிடமறியேன் காத்தருள்வா யெந்தா யெந்தாய்.
(3)
எந்தாய்நீ
முன்பொருநாள் வணிக மாதுக்
கிரங்கியருள் செய்யவென வெதிரே காட்சி
தந்தாயே
விண்ணவருக் கிடையூ றியாவும்
தவிர்த்தாயே தரணிதனிற் சான்றோர் முன்பும்
வந்தாயே
யேழையெனக் கிரங்கி யின்னம்
வந்திலையே யான்வருந்தன் மரபோ நாயே
னொந்தாலு
முனதுமன மிரங்கா தென்ன
நோக்கமோ வறியேனா னுவல்வ தென்னே?
(4)
எந்நாளு
மிவ்வாறு சோதித் தேநீ
யிருந்தனையே லின்படைவ தெந்நா ளென்ன
சொன்னாலு
மனமிரங்கா திருந்தா லியாது
சொல்லுவே னியாரையினித் துணையாக் கொள்வேன்
முன்னாளி
லாண்டதுவும் பொய்யோ வீறின்
முடிவறியே னுன்கருத்தை மொழிவா யையா
விந்நாளே
நன்னாளா மெதிரே தோன்ற
விசைக்கரிய புகழ்படைத்த வெம்பி ரானே!
(5)
எம்பிரா
னிருக்கவெனக் கென்ன தாழ்வென்
றிறுமாந்து வினையிலியா யிருக்க வென்றன்
கும்பியால்
வேறொருவர் முகத்தை நாடிக்
குறையிரக்கச் செய்ததென்ன கொடுமை யையா
வம்பிலா
தினியேனு நீயி ரங்கி
மதியிலேன் றனையாள மனத்துட் கொண்டு
தம்பிரா
னெனவிளங்குஞ் சாமி நாதா
தருணமிதி லருள்புரிவாய் தஞ்சந் தஞ்சம்.
(6)
தஞ்சமென
வந்தடைந்த தேவர் கொண்ட
தாபத்தைத் தீர்த்தருளுந் தலைவா விந்நாள்
கொஞ்சமதி
யாற்சிறியே னுனைம றந்த
குற்றத்தை நீமனத்திற் கொண்டி டாதே
பஞ்சையெனக்
காரொருவர் துணைவே றில்லேன்
பரதவிப்பைத் தீர்ப்பையென்றுன் பதத்தை நாடிக்
கெஞ்சிநின்றே
னஞ்சலளித் தருள்வா யுன்றன்
கிருபைவர லெந்நாளோ கேடி லானே.
(7)
கேடுடைய
மாதர்கடம் மாசை யாலே
கெடுவதறி யாதுடலங் கெட்டு வீணே
பாடுபடு
மென்றனைக்கண் பார்ப்பா யிந்நாள்
பரமகரு ணாநிதிநின் பதத்தை நாளு
நாடுமவர்க்
கருள்செய்தாய் நாயேன் சற்று
நாடிலே னுலகவர்க ணகைக்க விங்கே
கோடதனிற்
குதித்துலவு மந்தி யேபோற்
குறைமதிகொண் டுழல்வதென்ன கொடுமை யையா.
(8)
கொடுமையுளே
னெனினுமிந்த வுலகத் துள்ளார்
குறைபுரித லநுதினமுங் குறித்து நோக்கப்
படுவதற்குச்
சம்மதியா தென்ற னெஞ்சம்
படும்பாட்டை யாரிடத்திற் பகர்வ தென்னை
யடிமைகொண்ட
கொற்றவனே நீதான் சற்றே
யருள்புரிந்தா லக்கொடுமை யகன்றே யிந்நாட்
படியின்மிசை
நீதிநட வாதோ சொல்லாய்
பரமகரு ணாநிதியே பார்த்தி லாயே.
(9)
பாரினிடை
யவதரித்திங் கிந்நாண் மட்டும்
பட்டதுயர் போதுமுனம் பகைத்து வந்த
சூரழித்த
வேற்படையா லின்றே யென்றன்
றுயரழித்துக் காத்தருளெந் துரையே திக்கிங்
காருமிலே
னுனையறியு மறிவு மில்லே
னப்பாவுன் றிருவடிக்கே யடைக்க லங்கா
ணேரிலுன்னைத்
தெரிசிக்க வாசை யுள்ளே
னெஞ்சமுனக் கெப்படியோ நீதி யோனே.
(10)
நீதியோ
டெனைக்காக்குந் தந்தை தாயு
நீயெனமுன் னறிந்துலக நிகழ்ச்சி யாலே
வாதியா
யென்மனமென் வழிநில் லாதுள்
வஞ்சகஞ்செய் திடமயங்கி மதிகெட் டேனா
னாதியே
யுனையடைந்தே னிந்நா ளென்மே
லணுவளவுங் குற்றமிலே னாள்வா யப்பா
பாதிமதி
சடைக்கணிந்த பரமன் செங்கட்
பாலனென வந்துதித்த பதியாந் தேவே!
(11)
முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக