திங்கள், 12 அக்டோபர், 2026

சைவ சமயப் பதிகம்

 

தவத்திரு இராமானந்தர் அருளிச் செய்த

சைவ சமயப் பதிகம்

அறுசீர் ஆசிரிய விருத்தம்

1.       எல்லாம் வல்ல சித்தனென

                        விலங்கு ஞானப் பரஞ்சுடரே

கல்லா மனத்துக் கசிந்துருகாக்

                        கடையேன் வஞ்சக் கொடும்புலையேன்

பொல்லா நெறியிற் சென்றுழலும்

                        பொய்ய னெனினும் புந்திதனி

னல்லா னெனவுன் கடைக்கணரு

                        ணாடி னல்லே னாவேனே.    

(1)

2.       நலிந்தோர் தமையும் வலிந்தோரா

                        நண்ணு முனமே செயவல்லாய்

மெலிந்தே நாளும் வெவ்வினையான்

                        மிகவும் வருந்தி வெதும்புகின்றேன்

வலிந்தே வந்து கருணைசெய்தால்,

                        வள்ளா லுனையார் தாழ்வுரைப்பார்

மலிந்தாற் கருணை செய்வதற்கு

                        மற்றா ரிடத்திற் புகல்வேனே.

(2)

3.       பனையைத் தென்னை மரமாக்கும்

                        பரனே பாவிப் பயலெனினுந்

தினையத் தனையுன் திருவுளத்திற்

                        சிறியேன் றனையு நினைப்பாயேன்

மினையொத் திலகு மேனியனா

                        விளங்கு வேன்மெய் யடியாருக்

கனையொத் தருள்செய் யப்பாவுன்

                        னடியே னாளு மடைக்கலமே.

(3)

4.       உள்ள வருத்த முனதுதிரு

                        வுள்ள மறியு முலகதனிற்

கள்ள மனத்தார் தமைப்போலக்

                        கபட நினைத்தே கடைப்புறத்திற்

றள்ள நினைத்தா லையோவித்

                        தனியே னியாரைச் சார்வேனோ

துள்ளித் துடிக்கப் பார்த்திருக்கிற்

                        சுகமோ வுனக்குச் சொல்வாயே.        

(4)

5.       பாவி யான போதினுமுன்

                        பாலன் பால னென்றுதினங்

கூவி யாற்று முறைசெவியிற்

                        கொள்ளா திருந்தா லன்தோவென்

னாவி துடித்துப் பதறுவதை

                        யந்தோ யாரோ டறைவேனான்

சேவி லிவரு மெந்தாயுன்

                        சித்த மறியேன் சிறியேனே.   

(5)

6.       அன்னை முதற்சுற் றங்களெலா

                        மகத்திற் பந்தம் விடுத்தகன்றே

னின்ன மெனைநீ பந்தவினைக்

                        கிழுத்தா லெளியே னென்செய்வேன்

முன்னை வினையோ விந்நாளின்

                        மூண்ட வினையோ கடையேனா

னென்ன பணிசெய் துன்னடியை

                        யெய்து வேனோ 1வெளியேனே.       

பா.வே. : 1. அறியேனே.

(6)

7.       என்னை யறியா தென்னகத்தே

                        யிருந்து நடிக்கும் விளையாட

லின்ன மறியா துழல்கின்றே

                        னெக்கா லத்துன் னருள்வருமோ

தன்னை யறியாக் குழவிகட்குத்

                        தாயே யிரங்கிக் கருணைசெய்வா

ளென்ன வின்ன மறிவிப்ப

                        தெளியேன் றரமோ வெந்தாயே.        

(7)

8.       வஞ்ச மனத்தை யுடையோனா

                        வாழ்ந்த வகையான் மருந்தினுக்கு

நெஞ்ச முருகிக் கண்ணீரந்

                        நிமையிற் படவுங் கண்டறியேன்

றஞ்ச மடைந்த வான்மாவைத்

                        தாங்கும் பெருமைச் சங்கரனே

யஞ்சி யடைந்தேன் றிருவடிமே

                        லாணை முக்கா லடைக்கலமே.          

(8)

9.       சூது செய்யு மனப்பேயாற்

                        றுடித்தே நாளுந் துவள்கின்றே

னேது செய்கை நலமுன்பா

                        லென்றா லேழை யென்சொல்வேன்

றீது புரியும் விடத்தினையுஞ்

                        சேர்த்துக் கண்டந் தனினிறுத்து

நீதி போலிப் பாவியையு

                        நீக்கா தளிப்பாய் நின்மலனே.

(9)

10.       சொல்லித் துதிக்கப் பண்ணறியேன்

                        றுதிப்பார் தமையுங் கண்டறியேன்

கல்லிற் கொடிய மனத்தினனாக்

                        கடையே னெதற்காப் பிறந்தேனோ

சொல்லிப் புகழுந் தூயோர்க்குத்

                        துரிசை யகற்றுஞ் சிவகாம

வல்லிக் கொடியோ டெளியேன்முன்

                        வருவா யிரங்கி மகிழ்வாயே. 

(10)

முற்றிற்று.


தனிக் கவிகள்

வெண்பாக்கள்

11.       அருணை நகர்வா ழரனே யெனக்குக்

கருணை புரிந்துனது கண்பார் - தருணமறிந்

தாதரிக்கு மன்னையென வன்போ டெனையணைத்துத்

தீதகற்றிக் காப்பாய் தினம்.

12.       குற்றாலம் விட்டுக் கொடியே னுனைத்தேடி

வற்றாச் சுகம்பெறவே வந்தடைந்தே - னிற்றோடு

பாவநா சத்திற் பரிந்தென்னை யாட்கொண்டுள்

ளாவலறச் செய்பரமே சா.

13.       பஞ்சபா வத்தினு பாதகமே லென்றிரங்கி

யஞ்சலளித் தாண்ட வருட்கடலே - மிஞ்சியதோர்

பாதகத்தே னைக்கடைக்கண் பாராது பார்த்திருக்குந்

தோதகத்தைக் கற்றவிதஞ் சொல்.

 

சைவ சமய முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக