திங்கள், 12 அக்டோபர், 2026

ஆத்துமராம சரித்திரம் என்னும் தத்துவ விசாரணை

 

தவத்திரு இராமானந்த சுவாமிகள் அருளிச் செய்த

ஆத்துமராம சரித்திரம் என்னும் தத்துவ விசாரணை

விநாயகர் துதி

(நேரிசை வெண்பா)

ஆனை முகத்தானே யன்பர்கட்குத் தாயகனே

மோனை யறியேன் முதற்றமிழான் - ஞானமிகு

மாத்துமரா மச்சரிதை யன்புடனே கூறுதற்குத்

தோத்தரித்தே னின்றாள் டுணை.       

(1)

சற்குருநாதன் துதி

(அறுசீர் விருத்தம்)

ஒருவரா லறிந்து ரைக்க வொப்பிலாச் சிறப்பு வாய்ந்த

சொருபமா யுலகில் வந்த சோதியின் மகவா யுற்றே,

யருவுமா யுருவு மான வாத்மராம் சரிதங் கூறக்

குருவென வுருக்கொண் டுற்ற குமரன்றாள் குறித்து ளேனே.

(2)

நூற்பொருள்

(எண்சீர் விருத்தம்)

ஒருமனிதன் றனக்கறிவு புருட னாகு

            முற்றமனம் பெண்டீரா யுகந்து மேவி

யிருவருமே சுகித்திருக்கு நாளிற் பெண்டா

            மிவன்மனது வஞ்சகமா யிகத்தி லுற்றுக்

கருவிகளாந் தோழிகள்பாற் சேர்ந்து நேரிற்

            கண்டவரைக் கலந்துலக போகந் துய்த்து

மருவியதன் புருடனுக்கு நலம்போற் காட்டி

            வஞ்சஞ்செய் ததையாரு மறிந்தி லாரே.         

(3)

அவையடக்கம்

(அறுசீர் விருத்தம்)

முன்னோர் பலவாச் சாத்திரங்கண் மொழிந்த தறிந்து நாணாம

லிந்நா ளறிவி லிழிவுள்ளே னியம்ப லெதனை யொக்குமெனிற்

றென்நாட் டுறைநா வல்லோராற் செப்பச் சிறந்த பொழிற்கரையின்

முன்னா மணக்கா வரையெருக்கு முடுகிப் பூத்த விதமாமே.        

(4)

வாழி

(எழுசீர் விருத்தம்)

மனதுதன் வசமாய் நின்றிடப் பணித்த

            மாதவர் பதத்துகள் வாழி!

தனதுயிர் எனப்பல் லுயிரையு மோம்புஞ்

            சாந்தர்செந் தாட்டுகள் வாழி!

எனதுளங் குடியா யேற்ற தேசிகன்ற

            னிருசர ணஞ்சதா வாழி!

வினைதவி ராத்ம சரித்திரங் கேட்போர்

            விளக்குவோர் வாழி நித்தியமே.        

(5)


 

நூல்

சகல வளங்களும் குறைவின்றி யமைந்துள்ள அகண்டாபுரி யென்னும் பட்டினத்தில் புண்ணியமே திரண்டோ ருருக்கொடு வந்ததற்கொப்ப ஓர் சாது சீலருள்ளார். அவர் திருநாமம் நிர்மலபரஞ்சோதியாரென் றறிந்தோராற் றெரிந்துரைக்கப் பட்டுள்ளது. அவருக்குக் கற்பினுறைவிடமாயுள்ள ஏகாம்பாளென்னும் ஓர் பத்தினியுண்டு. இப்பெயர் வாய்ந்துள்ள சதி பதிகளிருவரும் பாலும் நீரும் உடலு முயிரும்போற் பிரிவின்றிக் கூடிச் சுகானந்த வாழ்வுற் றிருக்குந் தருவாயில் இவர்களது லீலா விளையாட்டால் ஓர் புத்திரனவதரித்தான். அதுகண்ட வன்னையப்ப ரிருவரு மப்புத்திரனது திவ்யமங்கள சொரூபத்தைக் கண்ணுற்றுப் பேரானந்தங் கொண்டு, ஆத்துமராமன் என்று அருமைப் பெயரிட்டு, அன்பு பாராட்டி வளர்த்து வந்தார்கள். பின் தங்கள் சந்தோஷ மேலீட்டாற் சிறிய பருவத்திலேயே மிகவுஞ் சாதுத் தன்மை பூண்ட நிராங்கார னேன்பவருடைய மகள், அழகிலுங் கற்புத் தன்மையிலும் மேன்மையுற்ற சுமதியென்னும் பெயருடைய பெண்ணரசியை விவாகஞ் செய்து வைத்துச் சகல சுதந்தரங்களையு மைந்தன்பா லொப்புவித்துச் சதிபதிகளிருவரு முன்போலக் கூடிச் சுகித்திருந்தார்கள்.

அத்தருவாயில் விடயயூகன், விடயமோகன், திடசித்தன், தீரகுணன், சாந்தமதி, சபலன், அபலன், மௌடீகன், ஆத்திரன் என்னும் பற்பல புத்திரர்கள் உற்பவித்தார்கள்.

அவர்களுக்கும் முன்போலவே, தனித் தனி யொவ்வோர் பெண்ணை விவாகஞ் செய்துவைத்துச் சதிபதிகளிருவரும் ஏகாந்தத் தானத்தில் ஆனந்த மேலீட்டாற் றம்மை மறந்து சுகாதீதமுற் றிருந்தார்கள்.

இவர்களிவ்வாறிருக்க, முதற்புத்திரராகிய ஆத்துமராமர் தன் பெண்ணரசியாகிய சுமதியுடன் கூடித் துன்பமென்பதோ ரணுவுமில்லாது சிறிதுநாட் கழித்திருந்தார்.

அப்போது அண்டை வீட்டில் அநாதைகளா யாதோ ராதரவுமின்றி யுற்சாகத்துடன் றிரியும் அற்ப சந்தோஷிகளாகிய, மானசன், சித்தன், ஆணவன், அகங்காரன் என்பவர்களுடன் அதிநட்புக் கொண்டார்.

அவர்களுக்கு நேயர்களான சுரோத்திரன், பரிசன் முதலியர் வாசஞ் செய்யும் தெருக்கடோறுஞ் சோம்பாது திரியலானார்.

அப்போது காமன், குரோதன், உலோபன், இடம்பன், வம்பன் முதலிய பேர்களும், அவர்களுறவாள ரனேகரும் ஓர் கண நேரமும் நீங்காது சிநேகங்கொண்டார்கள். இவர்கள் தன்னை விட்டுப் பிரியாது இருப்பதாலும், தானு மவர்களை விட்டிருக்கச் சகியா ரைகையாலும், சற்று நேரமாயினுந் தனது சொந்த வீட்டில் தங்குவதையும் தனது உத்தம பத்தினியாகிய சுமதியையுஞ் சொற்பனத்தும் நினையாதவராகி, முதல் சிநேகரி லொருவனாகிய அகங்காரனுடைய பெண் அகந்தை யென்பவளை விவாகஞ் செய்து கொண்டு, பின் வரும் பெரும் துன்பத்தை யோசிக்காம லவளால் அச்சமயம் நேர்ந்த சுகத்தி லாழ்ந்திருந்தார்.

இது சங்கதி முழுதும் அவரது முதற் பத்தினியாகிய சுமதி கேள்வியுற்று, “ஐயோ தெய்வமே! எனக்கிப்படியும் விதி வரலாமா? எனது நாயகருக்குத் திரிகரணங்களாலும் யாதொரு தீங்குஞ் செய்தறியேனே? அவருத்தரவை மாறி நாளதுவரை நடந்தறியேன். இப்படியிருக்க, எனது பிராணநாதர் என்னை வெறுத்ததும், வேறு விவாகஞ் செய்து கொண்டதும் எனது விதியோ? அல்லதவர் மதியோ? யாவர் செய்த சதியோ? அப்படிச் செய்தவ ரடைவதும் நற்கதியோ? அல்ல தென்னை வேண்டாது வெறுக்கினும், நல்ல உத்தமர்களுடைய பெண்ணை விவாகஞ் செய்துகொண்டு வாழ்ந்தாலுங் கேள்வியுற்றுப் பேரானந்த மடைவேனே; இப்போது பெண்கொடுத்த அகங்காரன் துட்டருக்குட் டலைமை பெற்றவ னென்பதுலக முழுது மறிந்த செய்தியே; அந்தத் துட்டனுக்குப் பிறந்த அகந்தையென்பவள் சிறு பிராயத்திலேயே அநேக அக்கிரமங்களைச் செய்த சிறுக்கியென்று பலராலுங் கேள்வி பன்முறை கேட்டிருக்கின்றேன்; இப்போது பருவம் வந்த கால மாகையா லென்னவெல்லாஞ் செய்யமாட்டாள்? தந்தை யெப்படி மைந்தரப்படி யென்ற மேலோர் வாக்கியம் பொய்த்துப் போமா? இந்த வுண்மை முழுதுமெனது நாயக ரறியாத தல்லவே? அவருக் கவ்வகந்தையாற் பின்னாலென்னென்ன கெடுதிகள் நேரவிருக்கின்றனவோ? அக்காலத்தி லத்துன்பங்களை யெவ்வாறு பார்த்துங் கேட்டு முயிர் தரித்திருப்பேன்? ஐயோ! தெய்வமே! தெய்வமே!” என்றிவ்வாறு பற்பல விதங்களா யெண்ணாதன வெல்லா மெண்ணி யெண்ணித் துன்பக் கடற்கோ ரெல்லை காணாது தத்தளித்துக் கொண்டிருந்தாள்.

இவ்வாறு புலம்பிக்கொண்டிருக்குஞ் சுமதியின் குணாதிசயத்திற் சிறிது சொல்வோமாக.

தெய்வ பக்தியிற் சிறந்தவள், சீவகாருண்யம்த்தில் நிறைந்தவள்; பொய்தனை யுள்ளம் குறைந்தவள்; புன்மைகள் யாவுந் துறந்தவள்; புருடனைத் தெய்வமாப் போற்றுவாள்; புலம்பி நைவாரைத் தேற்றுவாள்; மருடனை மனதின் மாற்றுவாள்; மகான்கள் புகழைச் சாற்றுவாள்; சத்தியந் தவறிடாப் பற்றவள்; பத்தியே மேலெனக் கற்றவள்; முத்தியே பொருளெனச் சொற்றவள்; இத்தரைப் பெண்கள் மீதுற்றவள்; துட்டர் கண் காணாம லோடுவாள்; தூயரெங்கே யெனத் தேடுவாள்; இட்ட மாதவர் குணங் கூடுவாள்; இன்ப மேலிடும் பண்கள் பாடுவாள்; அருட்சத்தி யிவளெனச் சொல்லலாம்; ஆனந்த மேலிடப் புல்லலாம்; இருட் சற்று மில்லாது கொல்லலாம்; இவளருட் கொடுமாயை வெல்லலாம். இச்சுபகுணங்கள் வாய்ந்த சுமதிக்கே யித்துன்ப மிவ்வுலகில் நேருமாயின், மற்றையருக் கென்னா மென்பது, ஆழ்ந்த விசாரணை யுள்ளோ ரறியத் தக்கதே.

இனியிளையாளாகிய அகந்தையின் குணத்திற் சிறிதுரைப்போமாக. ஏழையை எதிரியாக்குவாள்; இழிவிற் காலம் போக்குவாள்; காளையர்க் கின்ப முண்டாக்குவாள்; கணவற் கெதிர்ச்சொற் றாக்குவாள்; கண்டோர் நகைக்கப் பேசுவாள்; கடவுளைத் தொழவுள் கூசுவாள்; கொண்டோன் றனையு மேசுவாள்; குறையேதென்று கை வீசுவாள்; இவ்வித நடைகள் வாய்ந்த அகந்தையின் றீய குணங்களை விரித்துரைப்போ மெனில், “தீயோர் குணங்க ளுரைப்பனவுந் தீதே” என மூதாட்டி வாக்கிய மிருப்பது நினைந்து அஞ்சி யிம்மட்டில் நிறுத்தி மேல் நடந்தவிதங் கூறுவோமாக.

இவ்வாறு அகந்தையோடு மருவி யாத்துமராமர் சிலநாட் கழித்திருங்கால், தனது சிநேகரான மானஸன், சித்தன், அகங்காரன் முதலிய கூட்டத்தார் செய்யுங் கொடுஞ் செயல்களை நேரிற் பார்த்தறிந்தும், எவ்வித கர்மத் தடையாலோ தானுஞ் சம்மதித்துச் சந்தோடமா யவர்களுடன் கூடியிருந்தார். இப்படிச் சிலநாட் சென்றபின் பஞ்சைகளாகிய அவ்வஞ்சகர்கள் கொஞ்சமேனும், நெஞ்சிரக்கமின்றித் தங்களிடத்தில் அதிக நேயம் வைத்திருந்த ஆத்துமராமரை வஞ்சிக்கக் கருதி, கபடமாயவருக்குள்ள ஆஸ்தி முழுதும் நாளடைவிற் கவர்ந்து வந்தார்கள். அவ்வஞ்சகர் செய்யுங் கொடுமைகளை விதி வசத்தாலோ, மதி மோசத்தாலோ அவர் சற்றுங் கவனிக்கவில்லை. இது சங்கதிகள் முழுதும் முன்னமே தெரிந்து, இவரது தந்தையாராகிய நிர்மல பரஞ்சோதியார் அந்தத் துட்டர்களுறவை விட்டுவிடாயேற் கெட்டுவிடுவாயென்று பட்டப்பகல்போற் பலபெரியோர்களாலுஞ் சுருதி மூலமாகவும் அடிக்கடி வற்புறுத்திக் கூறியும் பின்வருங் கஷ்டத்தை யோசிக்காமற் றந்தையாருடைய வார்த்தையையுஞ் சற்றுங் கவனிக்காமலே மறந்திருந்தார்.

இவரிவ்வாறிருக்கச் சிநேகரென் றெண்ணியிருந்த வஞ்சகர்கள் நாளளவி லிவருக்குத் தெரியாமற் கரவடமா யுள்ள பொருண் முழுதுங் கவர்ந்ததன்றி யிவரையும் இம்சிக்க நினைந்து, தாங்களாக வெதிர்நின்று செய்யக் கூசித் தங்களுக்குத் தொன்று தொட்டுச் சிநேகரான தென்நாட்டிலுள்ள கிங்கரர்களுக்குத் தெரிவிக்கக் கருதித் தங்களினத்தி லொவ்வொருவனே பிரவேசித்த காரியத்தைத் தடையின்றி முடிக்கவல்ல வாதன், பித்தன், சிலேட்டுமன் எனுமூவர்களையும் அழைத்து நீங்கள் ஓர் கணநேர மாயினும் ஒருவரை விட்டொருவர் நீங்காது அதிசீக்கிரமாய்த் தென்னாட்டிற் சென்று நமது சிநேகரான கிங்கரர்களையுடனாகக் கூட்டிவந்து, இந்த ஆத்துமராமனைக் கட்டிப் போம்படி செய்துவிட்டு, நம்மிடம் வந்து சேருங்களென உத்தரவு செய்தார்கள்.

அப்போதவர்கள், இதோ! தங்கள் வாக்கியப்படியே சென்று, அக்காரிய முடித்துப் பின் மற்றைக் காரியம் பார்க்கின்றோமென்று அதிக விரைவுடன் சென்று மேற்சொல்லிய கிங்கரர்களுக்குத் தெரிவித்தார்கள்.

அச்செய்தி கேட்டவுட னவர்களதிக ஆக்ரோஷத்துட னெழுந்து புறப்பட்டார்கள்.

அவர்கள் செய்கை யெவ்வாறெனில் எவ்வளவு கட்டுக் காவலையுடைய பட்டணத்தும் பிரவேசித்துப் பகலிரவென்று யோசிக்காமல் அச்சமின்றிப் பார்ப்பவரும், கேட்பவரும் பதறப் பதறக் கதறக் கதறக் கொள்ளை கொண்டு செல்லுங் குண்டர்கள். அக்கொடுமையாளர்கள் அரைக்கணத்தில் விரைந்து சென்று, ஆத்துமராமர் வீட்டில் நுழைந்து, அவரெதிரில் நின்று, ஆர்ப்பரித்தார்கள்.

அக்கோரத்தை யவர் பார்த்துச் சகிக்கலாற்றாதவராய்க் கிடுகிடென நடுநடுங்கி, அந்தோ! இதென்ன விபரீதம்! இவர்களைப் பார்த்தாற் சாஸ்திரங்களாலும், பெரியோர்களாலுஞ் சொல்லப்பட்ட யமதூதர்களைப் போற் றோற்றுகின்றதே? என்ன செய்வேன்? தெய்வமே! இது சமயத்தில் யாருந் துணை காணோமே யென்று சுற்றுமுற்றும் பார்த்துத் தனக்குப் பால்ய சிநேக ரானவர்களைத் தேடிக் கூச்சலிடத் தொடங்கி, ஓ மானஸா! அடே சித்தா! ஏ ஆணவா” என்றிவ்விதமா யொவ்வொருவர் பெயரையுஞ் சொல்லிக் கூவியழைத்தார்.

அவர்களனைவரும் ஒன்று கூடித் தூரத்திற் சென்று பதுங்கிக் கொண்டார்கள். இவர் நெடுநேரம் ஓலமிட்டும் யாரும் எதிர் வாராமையாற் றனக்குள் யோசிக்கலானார். ஓகோ, மோசம் போனோம்; பல நாளைக்கு முன்னமே நமது தந்தையார் சில முதியோர்களை நமதிடத்தனுப்பிச் சுருதிகளாலும் அநுபவங்களாலும் வற்புறுத்தி அறிவித்ததாவது இவ்வஞ்சகர்கள், உலகில் முன்னமே அநேக கனதனவான்களை வஞ்சித்தார்க ளென்றும், அநேக இராசாக்களையும் அவ்விதஞ் செய்ததன்றி நெடுநாட் கடின யாகஞ் செய்து பரசிவனிடத்தில் அழியாத வச்சிரதேகத்துடன், ஆயிரத்தெட்டண்டத்தை நூற்றெட்டு யுகம் அரசாளும்படி வரப்பிரசாதம் பெற்ற சூரபத்மன்முதல் இரணியன் இரணியாக்கன் இராவணன் போன்ற பராக்ரமசாலிகளையும் இவ்வஞ்சகர்களே அழியும்படி செய்தார்க ளென்றால், இவ்வுலகின்கணுள்ள பஞ்கைகளாகிய கொஞ்ச மனிதரை மிஞ்ச விடுவார்களா? என்று இது சங்கதி முழுதும் நம்மீது கிருபைவைத்து, மேலோராலுஞ் சுருதியாலுந் தெரிவித்த தல்லாமல், நேரிலும் கூறி வற்புறுத்தியதையும் நமது புத்தி யீனத்தால் கேளாமற் போனதா லிப்போ திவ்வாபத்துக் காளானோம் எனப் பற்பல வெண்ணங்களை யெண்ணி இப்போதாவது தந்தைபாற் சரணடைவோ மென்று, நாற்றிசையு மோடித் தேடிக் காணாமல் மனம் வாடித் தந்தையே! தந்தையே! யெனக் கூவி, யோலமிட் டறிவழிந்து, சோர்ந்து, பூமியின் மீது மூர்ச்சையாய் வீழ்ந்துவிட்டார்.

இவை முழுதும் பார்த்திருந்த கிங்கரர் பின்றொடர்ந்தோடி, என்னடா! அங்குமிங்குமா யோடிக் கூச்சலிடுகின்றா யுன்னை விட்டுப் போகவா வந்திருக்கின்றோ மெனச் சினந்து, கிட்டி நெருங்கிப் பிடி அடி கட்டு குட்டு யென்றாக்கிரமத்துடன் பிடித்துக் கட்டிக்கொண்டு தென்றிசை நோக்கிச் சென்றார்கள்.

சில தூரஞ் சென்றபின் ஆத்துமராமர் மூர்ச்சை தெளிந்து தனக்குள் யோசிக்கலானார்.

ஓ தெய்வமே! இனியென்ன செய்வேன்? இத்துட்டர்க ளிவ்விடத்திலேயே யிவ்விதமா யிம்மை செய்கின்றவர்க ளிவர்களூர் சென்ற பின் னெவிதம்ஞ்செய்வார்களோ? நினைக்க நினைக்க மனம் பதறி யுடலம் நடுங்குகின்றதே; இவ்வாபத்தி லெதிர்வந்து காப்பா ரொருவரையுங் கண்டிலேன். அந்த மூடர்க ளுறவை மெய் யென்று நம்பினதாலல்லவா இப்போதிந்த வேடர்கள் கையிலகப்படலானேன்?” என முன் சிநேகிதர்களைப் பற்றிச் சிந்திக்கலானார். ஆ! விசுவாசத் துரோகிகளே! உங்களுக்கு நேர்ந்த சுக துக்கங்களை யெனக்கு வந்ததா யுண்மையா யெண்ணியிருந்தேனே. ஆ! வஞ்ச நெஞ்சர்களே! எனக்குற்ற இப்பேராபத்தி லுங்களி லொருவராவது உதவி செய்யலாகாதா? துரோகிகளே!

சுலோகம்

கிஞ்சித் பர்வதம் பாரம் கிஞ்சித் ஸ்யாத் சப்த சாகரம்!

சுவாமித்ரோகி மஹா பாரம் பாரம் விஸ்வாச காதகம்!!

என முன்னோர் வாக்கியம் மிருப்பதல்லவா? விசுவாச பாதகம் எல்லாப் பாதகத்திலு மதிகமென் றறியீர்களா? அதற்கெவ்விதத்தாலும் பிராயச்சித்த மின்றென்று குறியீர்களா? எனக்குற்ற விவ்வாபத்திலும் வஞ்சக வெண்ணங்களை யெண்ணலாமா?” என்று பலபல விதமாய்த் தனக்குட்டானே யோசித்துப் பின்னுஞ் சிந்தித்ததாவது:- உங்களைச் குற்றஞ் சொல்வ தென்மீது தோஷமே; எவ்வாறெனில்,

சுலோகம்

பட்சிணாம் காக சண்டாளம் மிருக சண்டாள கர்த்தபம்!

யதீநாம் கோப சண்டாளம் சர்வ சண்டாள தூஷணம்!!

என ஆன்றோர் கூறியிருப்பதால் பிறரைத் தூஷிப்பவன் சண்டாளர்க்குட் டலைவனாவான். உங்கள் குணங்களைப் பற்றி எனது தந்தையார் முன்னமே, யிவ்வஞ்சகர் சிநேகத்தாற் பெருந் துன்பமும், தப்பமுடியாத ஆபத்தும் நேருமெனப் பலபல விதமாய் வற்புறுத்திக் கூறிய நற்புத்தியை யசட்டை செய்த தோஷமே யிவ்வாபத்துக் கிடமுண்டாக்கியது என்று சொல்லி, மதி தப்பினால் விதி என்ற வாக்கிய மிப்போ துண்மையானது. இவ்வித ஆபத்துகள் நம்மோடு விட்டதாகவு மில்லையே; நமது சகோதரர்கள் அளவிறந்த பேர்க ளிம்மண்ணுலகில் நாளையு மேமாந்து நாள் கழித்திருக்கின்றார்களே? அப்பாவிகள் சிநேகங் கூடாதென்று, நமது சகோதரர்களுக்கு நாம் போய்த் தெரிவிப்போமென்றால் இந்தக் கண்டகர்கள் நம்மை விடமாட்டார்களே? ஒரு சமயம் மனதிரங்கி விட்டாலும் நாம் போய் இத்துன்பங்களைத் தெரிவித்தாலும் சிலர் மாத்திரம் உண்மைதா னென்று கேட்பதுபோ லப்போ தபிநயஞ் செய்வர்களன்றி எப்போதும் மனத்திலழுத்தி அவ்வஞ்சகர்க ளுறவை நீக்கமாட்டார்களே; ஏனெனில் நமது தந்தையார் பலதடவை வற்புறுத்தி யவ்வஞ்சக ருறவை விடும்படி கூறியதை நாம் கேட்டோமா? ஆகையா லிவ்வாபத்துக் காளானோம். அவர்கள் மீதுங் குற்றமில்லை; விதிவலி நடத்தல் யார்க்கு மரிதென்ப துண்மையே. சோம்பலின்றி விசாரணை செய்பவன் எவ்விதமாகிலுங் கடைத் தேறுவான்.

மற்றவர்க ளிவ்வாபத்தினின்று தப்பித்துக் கொள்வ தருமை யருமையேனத் தனக்குள் தானே சிந்தித்துத் தெய்வத்தை வந்தித்துச் செல்லலானார்.

பற்றிச் சென்ற கிங்கரர்கள் தங்களூர் சென்று, ஆத்தும ராமரைப் பலவிதமாக இம்சை செய்து, ஒளியென்பதோர் சிறிது மில்லாத ஆழ்ந்த குழியிற் றள்ளிவிட்டார்கள்.

அக்காலவ ரநுபவித்த துன்பத்தைக் கடவுளும் அவர் மனமும் அறிவதன்றி மற்றையராற் கணித்துரைக்க முடியாது. ஒருவாறு தெரிந்தமட்டிற் சொல்லவென்றாலும் அத்துன்பத்தை விரித்துரைக்க வென்மன மொப்பவில்லை. ஆகையாலிது சங்கதியை யிமட்டில் நிறுத்தி மேல் நடந்தவிதங் கூறுவோமாக.

இவ்விதமா யாத்துமராமரைப் பிடிக்கக் கிங்கரர்கள் வந்து வீட்டில் நுழைந்தவிதந் தெரிந்த அவரது தந்தையாராகிய பரஞ்சோதியார் அக்கொடுமையைப் பார்க்கச் சகியாதவராய், பெருந்துன்பமும், அடங்கா விசாரமுமாய்ப் புலம்புந் தனது பத்தினியுடன் காட்டிற் சென்று, தனது குமாரனை யவ்வாபத்தினின்று நீக்கும்பொருட்டாய் பரசிவத்தை நோக்கி, யரிய தவஞ் செய்து கொண்டிருந்தார்.

ஆகையாற்றான் ஆத்துமராமர் அதுசமயம் தேடிக் கூவியும் காணாதது, அவர் காட்டிற் றவஞ்செய்யச் சென்றதே யன்றி வேறன்று.

இவர் சரித மிவ்வாறாக, அவரது முதற் பத்தினியாகிய சுமதி தன்னாயகனுக்கு நேர்ந்தவாபத்தைக் கேள்வியுற்றுக் கிடுகிடென வுடலும் மனமும் நடுநடுங்கி, ஆ! தெய்வமே! என்னைத் துன்பத்துக்கென்றே விதித்தாயா? சூது செய்யவே மதித்தாயா? இன்பங் கூடாதெனப் பதித்தாயா? இளையவள் பட்சங் கதித்தாயா? வென்று பலவாறு புலம்பித் தான்கொண்ட துன்ப சாகரத்துக்கோ ரெல்லையின்றித் தேற்றுவார் யாரையுங் காணாததாற் றன்றந்தையாராகிய நிராங்காரனுடைய வீடுபோய்ச் சேர்ந்து, தனதாற்றாத் துயரைச் சொல்லித் தந்தைபான் முறையிட்டாள்.

அக்குறை முழுதுங் கேட்ட அவள் தந்தையார் தன் மகளைப் பற்பல விதங்களாலுந் தேற்றி, அம்மா உனது நாயக னுன்னிடம் வந்து சேர வேண்டுமாயின் நீ கௌரி விரதத்தை யநுசரித்து வந்தால், அவ்விரத பலத்தால் அவருன்னிடம் வந்து சேருவாரெனக் கூறி, அவ்விரதம் அநுட்டிக்கும் முறையையுங் கூறினார். அன்று தொடங்கிச் சுமதியானவள் அதிக பய பக்தியுட னவ்விரதத்தை யநுட்டித்து வந்தாள். இச்சுமதி யநுட்டித்து வரும் விரதத்திற்கும், ஆத்துமராமரது தந்தை தாயர் தவத்திற்கும், உமாபரமேசன் திருவுளமிரங்கி ஆத்துமராமரை யிருட்குகைச் சிறையினின்று நீக்கி, யவர் தந்தை தாயர் முன் விடுத்து, அந்தரத்தின் மறைந்தனர்.

ஆத்துமராமர் தனது தாய் தந்தையரைப் பார்த்தவுடன், தானிதுவரை யநுபவித்த துன்பத்தை நினைந்து அடங்கா விசாரத்தால், ஓ! தந்தைதாயர்களே! நீங்களுங்கள் கருணையா லெனக்குப் பலதடவைகளிலும் வற்புறுத்திக் கூறிய நற்புத்திகளைக் கேட்காத தோஷத்தினா லிதுவரையா னநுபவித்த துன்ப சாகரத்துக்குச் சப்த சாகரமும் ஓர் திவலைக்கு நிகராகாதெனின், பாவியேன் பட்ட துன்பத்திற்கோ ரெல்லையுண்டோ? ஐயனே பேதையேன் அறியாமையா லிழைத்த குற்றமனைத்துந் திருவுளத் தடையாது மன்னித்துத் திருவடிப் பணிக்கு ஆளாக்கி ரட்சிக்க வேண்டும்; அப்பாவெனப் பரபரப்புடன் கோவெனப் புலம்பி, யடியற்ற விருட்சம்போற் றந்தையாரது திருவடியில் வீழ்ந்து, அவர் பதத்தைத் தனது கண்ணீரா லலம்பித் தனது நயனமலரைச் சாத்திப் பிரேதம்போ லசைவற்று மூர்ச்சையாகிவிட்டனர்.

அப்போது பரஞ்சோதியார் தனது மைந்தனை வாரியெடுத்து மார்புடனணைத்து, தனது கண்ணீராலவர் தேகமுழுதும் நனைத்து, என்னருமைப் பாலனே! அந்தத் துட்டர்களுறவா லல்லவோ யிவ்விதக் கஷ்டத்துக் கதளாயினை? அவர்களுறவை விடும்படி பலவிதஞ் சொல்லியுங் கேளாததால் பெருந்துன்ப மநுபவித்தனை; எனக்கியாதொரு குற்றமுஞ் செய்யவில்லையே; செய்திருந்தா லல்லவோ மன்னிக்க வேண்டும்? நீயென்சொற் கேளாததாற் படாதபாடு பட்டனை; யானு முனதன்னையுந் தொலையா விசாரத்தழுந்திப் பரசிவத்தின் கருணையா லுன்னை மறுபடியுங் காணப்பெற்றோம்; இனிமேலாகிலு மத்துட்டர்களுறவை நீக்கி, யுனதுத்தம பத்தினியுடன் கூடிச் சீரஞ்சீவியாய் நீடூழி வாழக் கடவை யெனப் பரிவுட னாசீர்வாதஞ் செய்தனர். அவரது தாயாரு மவ்வாறே செய்தனர்.

பின்னர் ஆத்துமராமர் தான் வந்த சமாசாரத்தைத் தன் மாமன் வீட்டிற் தனது நாயகனை யெப்போது தரிசிப்போமெனக் கௌரி நோன்பை யதிவிநயத்துட னநுட்டித்துவருந் தனது முதற் பத்தினியாகிய சுமதிக்குத் தெரிவிக்கும் பொருட்டுச் சில வேவலர்களை யனுப்பினார். அவர்களா லச்செய்தி கேட்ட சுமதியானவள் உடலை விட்டு நீங்கிய வுயிர் பின்னு மவ்வுடலில் வந்து தங்கியது போலவும், எப்போதுந் தரித்திர திசையில் வாதனைப்பட்டோனுக்கு நாகரத்தினங் கிடைத்தது போலவும், என்புருகத் தவஞ் செய்தோர் பரசிவ தரிசனங் கிடைத்த காலத்தி லெவ்வா றானந்த முறுவார்களோ அதுபோலவும் கணவன் செய்தி கேட்டவுடன் இமை கொட்டு நேரமுந் தகப்பன் வீட்டிற் றங்காது ஓடோடியும் வந்து தனது கணவனைத் தெரிசித்தவுடன் அவரடியில் வீழ்ந்து மூர்ச்சையாயினாள். அது தெரிந்த ஆத்துமராமர் தன் பெண்ணரசியைத் தனது அஸ்தத்தாலெடுத்து, மார்புடனணைத்துச் சொல்லத் தொடங்கினார் “ஓ! என்னருமைப் பெண்ணரசியே! பெண்கள் நாயகமே! நீ செய்து வருவதே புருஷபத்தி; உன்னிழல் தெரிசிப்பார்க்குறும் நற்புத்தி; ஆசையற்றவள் நீ சிற்சத்தி; உனை யடுத்தேனடைவேன் பரமுத்தி; வீட்டுக்குகந்த சுகமதியே! உனை விட்டுப் பிரிந்த தவமதியே; காட்டிக் கொடுப்பாய் நற்கதியே; இனிக் கணம் பிரிந்தாலுறுந் துற்கதியே.

என்றிவ்வித சந்தோட வார்த்தைகள் கூறி, யிருவரு மேகமனதுடன் றாய்தந்யைர் பணிவிடை செய்வதிற் சோம்பலின்றிச் செய்து பேரானந்த முற்றிருந்தார்கள்.

இவர்களிவ்வாறு பக்தி செய்திருக்குஞ் செய்தியை யிவரது முன் சிநேகராகிய ஆணவன் முதலிய கூட்டத்தார் கேள்வியுற்று, அனைவரும் ஒன்றுகூடி யோசிக்கலானார். ஏது? ஆத்துமராமன் நமது தென்னாட்டுச் சிநேகரை யேமாற்றஞ் செய்து, எவ்விதத்தாலோ தப்பித்து வந்துவிட்டான் போலும். ஆகையால் நாமனைவரு மவனிடம்ஞ் சென்று, நயவஞ்சகமாய்ப் பேசி, நமது வசமாக்கி, முன்போற் செய்து விடுவோம்; வாருங்களென்று அனைவரும் கூடிச் சென்று, ஆத்துமராமரைக் கண்டு, ஐயா! ஆத்துமராமரே! உமக்கு அநேக வந்தனந் தந்தனம். நீர் நெடுநாளா யெங்களைப் பரிதவிக்க விட்டெங்குச் செற்றிருந்தீர்? எவ்விதம்தா னெங்கள் சிநேகத்தை மறந்தீர்? உமது நெஞ்சமென்ன வயிரப் பாறையா? உம்மை யாங்கள் பிரிந்த நாண்முதலாய்த் தங்குவதற்கோ ரிடமின்றி, யிங்கு மங்குமா யலைந்து கொண்டிருந்தோம்; எங்களுக்குரிய வுணவையு மிழந்தோம்; நீர் பிரிந்தது முதலொவ்வொரு நாளையு மொருயுகம் போற் கழித்திப்போ தும்மை யாங்கள் செய்து வந்த தவத்தாற் கண்டு பேரானந்த மடைந்தோம்; இனிமேலாவது தயை கூர்ந்து, எங்களை விட்டுக் கணநேரமும் பிரியாதிருக்க மிகவும் வேண்டுகின்றோமென் றிவ்வாறு சில கபட வார்த்தைகளுரைத்தார்கள்.

அவ்வார்த்தை முழுதுங் கேட்டு ஆத்துமராமர் கண்க ளரக்கெனச் சிவந்து, நெருப்புப் பொறி சிந்த, அத்துட்டர்களைப் பார்த்து, அடா! பஞ்ச பாதகத்துக் குறைவிடமான வஞ்சக நிறைந்த நெஞ்சர்களான பஞ்சைகளே! ஏன் கொல்லைக்காட்டு நரிபோற் பல்லைக் காட்டிக் குலைக்கின்றீர்கள்? உங்கள் சொல்லைக் கேட்டதால் யான்பட்ட துயரெல்லைக் களவு உண்டோ? போதும் போதும் உங்களால் யானடைந்த சுகம்; இனி நாயைப் போலக் குலைக்காமல், வாயை மூடிக்கொண்டு வந்தவழி பாருங்கள் பேயர்களே! மூத்தாளின் நேயர்களே! இனிமே லிவ்விடம் நில்லாதீர்கள்; மட்டிப் பயல்களே! நின்றாலுங்களை வெட்டிவிடுவேனென்று சொல்லி, உங்களைப் பார்த்தாலுந் தோஷம் நேரிடுமென்று அந்தப்புரத்திற் சென்றுவிட்டார். அப்போ தந்தத்துட்டர்கள் தங்களுக்குள் யோசிக்கலானார்கள். ஏது? இனி ஆத்துமராமன் நமது வசப்படான் போலும்; அவனது தந்தை சொற்குட் கட்டுப்பட்டதாய்த் தெரியவருகின்றது; இல்லாவிடி லிவனுக்கிவ்வாறு தாட்டீகமாய்ப் பேசுந் தன்மையேது? இனி நாம் யோசிப்பதிற் பிரயோசனம் யாதென்று வந்தவழியே திரும்பிச் சென்றார்கள்.

இவர்களிவ்வாறாக இவர்களி லொருவனாகிய அகங்காரன் மகளாகிய அகந்தை யென்பாள், தன்னாயகன் வரவைக் கேள்வியுற்று, ஓடோடியும் வந்து, ஓ என் பிராணநாதா! பிராண வல்லவா! இப்படியு மென்னைப் பரிதவிக்க விட்டுப் பிரிந்திருக்க வுன்மனஞ் சம்மதித்ததல்லவா? வென்று அடியற்ற மரம்போல் வீழ்ந்து புலம்பினாள். ஆத்துமராமர் பார்த்து, அடி நாயே! அறிவிலாப் பேயே! ஏன் வீணா யுளைக்கின்றா யுளைத்துக் களைக்கின்றாய்? அடி நீலி! மோட்ச வழிக்கோர் வேலீ! உன் பட்சமனைத்தும் போலி! உனக்கு மிங்குண்டோ சோலி? மூத்த மனைவியே சீதேவி; உன் முகத்தைப் பார்த்தவர்க்குறும் மூதேவி; என்று கடுகடுத்துரைத் திந்தப் பாவியைப் பார்க்கவுங் கூடாதென அப்புறம் போய்விட்டார். அப்போது அகந்தை தனக்குள் யோசிக்கலானாள். நமது சொல்லைச் சற்றுந் தள்ளாதிதுவரை கேட்டு நடந்தவரிப்போது கடுகடுத்துப் பேசுவதை யோசிக்கின் மூத்தாளிவருக்கு மருந்திட்டுத் தன் வசமாக்கிக் கொண்டாளென்பது சத்தியம். இல்லாவிடில் நம்மீதிவருக் கிவ்வளவு வெறுப்புண்டாகுமா? அவள் மாந்திரீகத்திலுங் கை தேர்ந்தவளாகத் தெரிய வருகின்றது. நமது நாயகருக்கு நம்மீதிருந்த விசுவாசத்தைப் பிரித்ததே சாக்ஷியாய் விளங்குகின்றது. அவள் பாசாங்குக் கள்ளி யென்பது முன்னமே தெரிந்த சங்கதி தானே? எவ்விதத்தாலோ இவரை யேமாற்றிவிட்டாள். இனி நம்மிடம் வரமாட்டா ரென்பது நிச்சயம். பலவாறு யோசிப்பதிற் பிரயோசனமில்லை, நமது மனதுக்கிசைந்தவருடன் கூடிச் சுகிப்பதே நலமென்றெண்ணி வந்த வழியே திரும்பிச் சென்றாள்.

அப்போது ஆத்துமராமர் இன்றுடன் நம்மைப் பிடித்த சனி யனைத்துந் தொலைந்தனவென்று சந்தோஷ சாகரத்தில் மூழ்கிச் சுமதியுட னேக மனதாய்த் தந்தை தாயர் பணி செய்வதற்கும் அவர்களுத்தரவிற்குஞ் சோர்வின்றி நடந்து அவர்களைக் கணநேரமும் விட்டுப் பிரியாது பேரானந்த வாழ்விற் றம்மை மறந்து சுகித்திருந்தார்.

முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக