திங்கள், 12 அக்டோபர், 2026

சற்குரு அந்தாதி மாலை

 

தவத்திரு இராமானந்த சுவாமிகள் அருளிச் செய்த

சற்குரு அந்தாதி மாலை

அறுசீர் ஆசிரிய விருத்தம்

முத்தொழிலாய் முக்குணமாய் மும்முதலா

            யம்முதற்கு முதல்வ னாகி

யத்தொழிற்கு மப்புறமா யநாதியா

            யகண்டமா யளவி லாத

சத்தெழிலாய் விளங்குகின்ற சற்குருநின்

            பொன்னடியைச் சார மாயைப்

பித்தொழிந்தார் காண்பதன்றிப் பேயேனா

            லுன்பெருமை பேசற் பாற்றோ.          

(1)

பேசரி தாயபுகழ் படைத்தனைநின்

            சீரனைத்தும் பேசன் முற்றும்

வாசக மாத்திரமன்றி மனத்தினினைந்

            துருகாத மடமை யான்மண்

ணேசுவது குறையன் றுள்ளென்பிழை

            பாராதரு ளுமேந்தாய் சற்றும்

யோசனைநீ செய்திடிலேன் னுயிர்க்கொருவர்

            துணையிந்த வுலகிற் காணேன்.         

(2)

காணேனின் செயல்முழுதுங் கருதுகிலேன்

            கேட்டறியக் கருத்தாழ் வில்லேன்

வீணேநாட் கழித்தலன்றி யோர்பயனு

            மறிந்திலேன் விளங்கி டுங்கற்

றூணேனு மோர்சுமையைத் தாங்கிநிற்கும்

            யான்வினைக்குச் சுமையா ளானேன்

சாணேனுந் திருவடிக்கீ ழிடங்கொடுத்தாற்

            பிழைப்பனன்றேல் சாவேன் மெய்யே.           

(3)

மெய்யாக நம்பினர்க்கு மெய்யாக

            விளக்குகின்ற மெய்யா முற்றும்

பொய்யாகக் கருதினர்க்குப் பொய்யாகக்

            காட்டிநடம் புரிந்து போக்கு

மையாநின் றிருவிளையாட் டென்றரமோ

            சொல்லவெனி லறிவி லேன்காண்

வெய்யோன்போ லாரிடத்து மின்னருளாய்

            விளங்குகின்ற விமல வாழ்வே.          

(4)

வாழ்வனைத்தும் பொய்யாகக் காணுமா

            றருளினையே மற்று மண்ணிற்

றாழ்வடைய வைத்திடுத றருமமோ

            விதுவினக்குத் தகுதி யாமோ

சூழ்பொருள்கள் போம்வழிக்குத் துணையாமோ

            யேதுசுகஞ் சொல்வே னந்தோ

பாழ்வினையி லுழலவிட்டாய் பாவிபடுங்

            கண்கலக்கம் பார்த்தி லாயோ?

(5)

ஆயநா ளெல்லாமென் பாழ்வயிற்றுக்

            கிரைதேடிற் றல்லான் மற்றுன்

றூயதா மரைப்பதத்தின் துகளினையென்

            சென்னிமிசை தோய்ந்தே னில்லை

காயமிது கடைத்தேறுங் காலமெது

            வோவறியேன் கதறுஞ் சேய்முன்

றாயெனவே ழைக்கிரங்கித் தண்ணருளா

            மதியமுதைச் சாதிப் பாயே.    

(6)

சாதியென்றுஞ் சமயமென்றும் வாதுசெயுஞ்

            சண்டாளர் தமக்குள் ளஞ்சிப்

பாதிமதி யுடையவனா யுழலுகின்ற

            பாவியைநீ பார்த்தி ரங்கி

நீதிநெறி காட்டாயேற் கெடுவது

            நிச்சயமாகு நினைவோ ருக்குட்

சோதியெனத் திகழ்கின்ற நிராமயனே

            யென்றுயரந் தொலைத்தாள் வாயே.  

(7)

தொலையாத பிறவியெனுஞ் சாகரத்தின்

            மூழ்கிவளர் சுறாவாய் மாதர்

வலையாலே யகப்பட்டுக் காமவழ -

            லாற்கருகி மறுகி வீழ்ந்து

நிலையாதுந் தெரியாமற் றதத்தளித்து

            நெட்டுயிர்த்து நிற்கின் றேனே

தலையான நின்பெருமைத் தண்ணருளீந்

            தெளியனைநீ தற்காப் பாயே.

(8)

ஏதமுளவென் போல்வார்க் கிவ்வுலக

            மனிதவுரு வியற்கை காட்டிப்

பேதமிலா மனத்தினர்க்கு நின்னருளாம்

            பெருஞ்சோதிப் பெருமை காட்டு

மாதியே யுன்பெருஞ்சீ ரளவறிவா

            ராரோயா னறியேன் கஞ்சப்

பாதமிரண் டுங்கவிக்குப் பரிசாயென்

            சிரஞ்சூட்டிற் பவம்தீர்ந் துய்வேன்.    

(9)

உய்வேனென் றுள்ளமிசை யிருந்துகூத்

            தாட்டுவதை யுன்னி யுன்னை

வைவேனுன் பெருங்கருணைத் திறத்தினையென்

            மனத்திலுன்னி வாழ்த்து வேனென்

செய்தாலும் பிழைபொறுக்கை தொன்மையாஞ்

            சிறுமையுறச் செகத்தி லுள்ளோர்

கொய்தாலு நிழல்கனிகா யிலைகொடுக்குந்

            தருவெனநின் குறிப்பா மன்றே.         

(10)

குறியாகக் கல்லெறிந்த சாக்கியற்குங்

            கூடலினிற் குறித்துத் தாவும்

பரியூரும் பாண்டியன்கைப் பிரம்படிக்கும்

            பஞ்சவரிற் பார்த்தன் றன்கை

வரியான வில்லடிக்கு மிகவுமகிழ்ந்

            தருள்புரிந்தாய் வஞ்ச னான

சிறியேனா னெப்பணிசெய் துன்னருளைப்

            பெறுவேனோ தெரிகி லேனே.           

(11)

ஏனேனென் றசரமெல்லா வாய்திறப்ப

            வேகுமுனி போல வெந்நாள்

யானாகப் பெறுவேனோ வன்றேநின்

            றிருவடிக்கா ளான துண்மை

தேனேமென் கனிச்சுவையே சித்தமிசை

            மறவார்க்குத் திரட்டுப் பாலே

வானாடர் தேடவிந்த மண்ணாடர்க்

            கருள்சுரக்க வந்த தேவே.       

(12)

தேவேநின் றிருவடியை யிமைப்போது

            மறவாமற் சிந்தை யுன்ன

நாவேயுன் றிருப்புகழை யல்லாது

            வேறொன்றை நவிலா தாகக்

கோவேயென் னவையவங்க ளுன்பணி

யல்லாவொன்றைக் கொள்ளா வாக

வாவேவந் தெவ்விடத்து முன்னுருவைக்

            காணவருள் வழங்கி டாயே.   

(13)

இடுவாயோ வுன்பணியே செயவெனக்குக்

            கட்டளைநீ யின்றென் றேகை

விடுவாயோ வுன்விளையாட் டின்னதென

            வறியாமல் வேட்கை முந்தும்

வடுவாய மனத்தினுடன் வாழ்ந்திடநா

            னொப்பேனுன் மனதி ரங்கிக்

கடுவாய வினையினான் மிகமெலிந்து

            வாடுவதைக் காணா தென்னே.          

(14)

என்னதான் சொன்னாலு முன்மனது

            சற்றிரங்கா திருந்தா லேழை

சொன்னதேசொல் வதல்லால் வேறொன்றைச்

            சொலவறியாத் தொழும்ப னேற்கு

மின்னருடான் வந்திடுமோ வில்லாது

            போமோவென் றெண்ணி யெண்ணி

யின்னலுறு மனத்தினனா வாடியழுங் -

            குவதல்லா லென்செய் வேனே?         

(15)

என்செய்கை முழுதுமன மொருவழியாங்

            காலத்தி லேற நோக்கி

லுன்செயலே யல்லான்மற் றொருவர்செய

            லில்லையென வுண்மை கண்டேன்

பின்செய்கை யென்னதுவாப் பிதற்றிடநீ

            வைத்தகலும் பேத மென்னோ

முன்செய்த தீவினையென் றுரைத்திடினு

            மதுவுமுன்னுண் முடிந்த தன்றே.        

(16)

அன்றேயாட் கொண்டிந்நா ளகலப்போ

            யதிசயிப்ப தழகோ வேழைக்

கென்றுதா னற்கால மிசைவாமோ

            வலதுமண்ணோ ரிகழ்ச்சிக் காமோ

நன்றேவந் தெனக்குறினுந் தீதுறினு

            முனக்கல்லால் னாயி னேற்கோ

குன்றேயொத் திலகுபுகழ் படைத்தனைநின்

            பதநம்பிற் குறைதா னுண்டோ.

(17)

குறைவுண்டோ வெப்பொருட்குங் கற்பகத்தை

            நாடிவந்து குறுகு வோர்க்கு

நிறைவுண்டே யல்லாது மிறைவுண்டோ

            வுன்னடியை நேசித் தோர்க்கு

மறைவுண்டே னுன்னடிக்கீழ் வஞ்சகனென்

            றெண்ணாது மகிழ்ச்சி கூர்ந்து

பொறைகொண்ட முறையானே பொதுவழியென்

            மெய்யறிவிற் புணர்த்து வாயே.         

(18)

புணரிசூழ் வையகத்தின் தோற்றமெலா

            நினதுருவாப் போதங் கொண்டுள்

ளுணர்வழியா தெந்நாளும் போற்றிடநா

            னாசைகொண்ட துளங்கா ணாதோ

விணையெதன்று மில்லானே யாசைமயற்

            கடனீத்த விருபா தப்பூம்

புணைபற்றி னல்லாது கரைகாண்டன்

            முடியாது பொய்ம்மை யன்றே.           

(19)

பொய்யாதும் புகலாத புனிதருக்கே

            கருணைசெயும் பொருளே பூவின்

மெய்யாதும் புகலாத பாவிக்கு

            முன்கருணை விளங்கு மோசொல்

லையாநீ மனதிரங்கி யருள்செய்தா

            லுய்குவே னல்லான் மண்ணி

லுய்யேனா னென்பதற்குச் சாட்சியென்ற

            னெஞ்சகமென் றுளங்கொண் டேனே.           

(20)

கொண்டலென வடியார்க்குக் கருணைமழை

            பொழிகின்ற குருவே யுற்ற

தொண்டரெலா மருளடைய யானொருவ

            னயலவனாத் துன்பத் தாழின்

மண்டலத்தோர் நகைப்பதுவும் வசைமொழியு

            முனக்கிலையோ மடமை யென்னிற்

பண்டொருவன் நுசிதத்தை மேன்மையெனக்

            கொண்டகதை பார்த்தி லேனோ.       

(21)

இலவுகாத் திட்டசுகம் போலவெனை

            யாக்காம லிகழ்ச்சி கூறும்

புலவுகாத் திட்டசுகம் போதுமதி

            னுட்பொருளைப் போற்றும் வண்ணங்

குலவுவா யென்றுநிதங் கூறியது

            மறியாயோ குறையொன் றில்லா

வலகில்சோ திப்பொருளே யடைக்கலமா

            வுன்னடிக்கீ ழடைந்திட் டேனே.        

(22)

இட்டபணி புரியாம லிங்குமங்கு

            மாய்வயிற்றுக் கிரையே தேடித்

துட்டனெனப் பேர்புனைவ தல்லால்மற்

            றேதுசுகஞ் சொல்வாய் நெஞ்சே

கட்டமெலா நீங்கிடுமிக் காசினியிற்

            புகழெய்துங் கருணை கூர்ந்து

சிட்டனெனப் புகழ்கொடுக்குஞ் சற்குரவன்

            பொன்னடியைச் சேர்ந்து கொள்ளே. 

(23)

கொள்ளேனின் றிருவடிக்கன் புடையவர்பாற்

            சென்றுநிதங் கூடே னாழ்ந்த

வள்ளல்வா யிடைமூழ்க வாசையாய்த்

            திரிவேனை யன்ப னென்று

வள்ளனீயி ரங்கியருள் செய்ததையா

            னென்சொல்வேன் மனத்தி னுள்ளே

யெள்ளலெனக் கெய்துவதா லிவ்வுலகி

            லுள்ளார்சற் றிணையி லேனே.          

(24)

இணையுறுவார் குவிமுலைமீ திச்சையுறுங்

            குறைதீரென் றெண்ணி யின்ன

மணைமீறுஞ் சிந்தையனா யநுதினமு

            மலைவதுனக் கழகோ நாயேன்

பணைதீரென் றுன்செவியிற் பகருமுறை

            கேளாதேன் பசிக்குஞ் சேய்முன்

றுணைகூறுந் தாயெனவந் தாதரிக்கி

            லெப்பிழையார் சொல்லு வாரே?       

(25)

சொல்லுவார் நின்புகழே யல்லான்மற்

            றொன்றினையுந் தோயா ராசை

கொல்லுவார் வினையாவுங் குடியோடச்

            செய்திடுவார் கோலப் பாதம்

புல்லுவார் சித்தியெலாம் புல்லுவா

            ரென்பதுமெய் பூவின் மாயை

வெல்லுவார் பேரன்பே வேண்டினன்யான்

            மற்றொன்றும் வேண்டி லேனே.        

(26)

வேண்டுவோர் வினையாவுங் கணத்தினிலே

            விலகிடச்செய் வித்தே யன்பு

பூண்டிலனென் றகலவிடி லடிநாளி

            லுரைத்தமொழி பொய்மை யாமே

யாண்டவநீ யென்செயினுஞ் செய்திடுக

            வல்லவெனி லார்தான் மேலோ

ரீண்டெனக் குன்னருள் புரியென்றாசிப்

பேன்னல்லான்மற் றென்செய் வேனே?         

(27)

செய்யும்வகை யின்னதென வறியாமல்

            வாடுகின்ற சிந்தை யேனை

யுய்தியென வாய்திறந்தே யோர்மொழியா

            நிறைமொழியை யுரைத்தா லுய்வேன்

பைதறதவிர்ந் தெந்நாளு நீங்காத

            பூசிதனாப் பாரிற் றூய

செய்தியுட னுலகிலுளோர் புகழ்ந்தேத்தும்

            படியான சித்தி சேர்வேன்.     

(28)

சித்திபெற்ற மேலோர்தஞ் சேவடிக்கே

            தொண்டுசெய்து சிலநா ளேனும்

பத்திபுரிந் தவரருளே பாலிக்க

            வாழ்வேனோ பாரில் வீணாய்த்

தத்தையர்கண் மையலினாற் றாழ்வேனோ

            யானறியேன் றதியிவ் வேளை

யித்தையெனக் குண்மையா யினியேனு

            முரைசெய்வா யெம்பி ரானே.

(29)

எம்பிரா னிகலவர்க்குங் கருணைபுரி

            வானெனவே யிறைஞ்சித் தாழ்ந்து,

நம்பிரானீ யன்றிவே றிலையென்

            றடைவோர்க்கு ஞாலமீ தில்

வம்பிரான் றேவர்முதல் வையகத்தோர்

            சந்ததமும் வாழ்த்தி யேத்துந்

தம்பிரா னெனையாளுந் தாதையா

            முத்தொழிற்குந் தலைமை யானே.     

(30)

சற்குருவந்தாதி மாலை முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக