திங்கள், 12 அக்டோபர், 2026

சௌர சமயப் பதிகம்

 

இராமானந்த சுவாமிகள் அருளிச் செய்த

சௌர சமயப் பதிகம்

வெண்டளைக் கலிப்பா

1.         விண்மணி யாய்நின்ற மெய்ப்பொருளே நாயேன்றன்

கண்மணியா யென்றுங் கருத்துட் கலந்துநின்ற

வுண்மைதனைக் கண்டு முறுதியின்றி வாடுகின்றேன்

வண்மையுட னென்மேன் மனமுவந்து காப்பாயே.    

(1)

2.         உலகிருளை நீக்கவொளிர் கின்றபொரு ளேயென்

மலவிருளை நீக்க வலிமையுனக் கின்றேயோ?

சலனமுறு மென்மனத்தாற் றட்டழிந்து வாடுகின்றே

னலமருளிக் காப்பாய் நாதா வடைக்கலமே.  

(2)

3.         காட்சிக் கெளிதாகக் கண்டுங் கருத்திலனாச்

சூழ்ச்சியறி யாது துயருற்று வாடுகின்றேன்

மாட்சி யெனக்கருள மனமுவந்தே யிவ்வேளை

தாழ்ச்சி யடையாமற் றற்காத் தருள்வாயே.   

(3)

4.         அன்னையென வந்தெனைநீ யாதரித்தா லல்லாது

பின்னை யெதுசெயினும் பேதைமனந் தேறாது

முன்னை வினையை முடுகி மனதிரங்கி

யென்னைப் பிரியா திணையடிதந் தாள்வாயே.         

(4)

5.         காணும் பொருளெல்லாங் கண்ணேநின் றன்வடிவாத்

தோணும் படியருளிற் சுகம்பெற்று வாழ்வேனான்

கோணுமனத் தாலே குரங்கின்கை மாலையெனச்

சாணும்வளர்த் திடவடியேன் படுதுயரஞ் சாற்றரிதே.

(5)

6.         மெய்யாக வெவ்வுயிர்க்கும் விளங்குந் தனிப்பொருளே

கையிற் கிடைத்துங் கருத்தழிந்து வாடுகின்றே

னையோ வெனைப்போ லவலமதி யார்க்குளது

நையா தெனது நவைதீர்த் தருள்வாயே.         

(6)

7.         தந்தைதாய் பந்துசனர் சற்குருவு நீயானாய்

சிந்தை மயக்காற் றிரிவாக வேநினைத்தே

னெந்தைநீ யென்குறைக ளெண்ணாது காத்தருள்வா

யுய்ந்திடநின் றாளன்றி யோர்துணையிங் கில்லேனே.          

(7)

8.         பத்தி நிலையாமற் பாவிமனத் தானிநிதமும்

புத்தி மயங்கிப் புலம்புந் தமியேனான்

சித்திபெற வுன்றன் றிருவடியை யேதினமு

நத்துகின்றே னென்னை நலியாமற் காத்தருளே.       

(8)

9.         மாதர் மயக்கான் மதிகெட் டலையவெனைச்

சோதனைநீ செய்யத் துணிந்தாற் சுகிப்பேனோ

பாதகத்தேன் குற்றத்தைப் பாராம லேபரிவாய்த்

தீதகற்றிக் காப்பாய் திருமுன் னடைக்கலமே.

(9)

10.       முன்னை வினையின் முடிவை யறியாம

லென்ன வருமோவென் றேங்குந் தமியேனுக்

கின்னந் தடைசெய்யா தின்றே மனமிரங்கி

யன்னையென வன்பா லருள்வா யடைக்கலமே.       

(10)

11.       செருக்குற்றே யொன்றுந் தெரியாம லேமறைத்த

விருட்சற்று மில்லாம லெங்கு மிரிந்தோட்டி

விருப்புற்ற வான்மாக்கள் வேண்டு வனவளிப்பா

யருட்சத்தி யாய்வந் தனைப்பா யடைக்கலமே.          

(11)

12.       வீடு பெறமுயன்றும் வினைப்பேய்த் தடையாலே

மாடுமக்கள் சுற்றமெனு மயல்சூழ மாழ்குகின்றேன்

வாடும் பயிர்க்குதவு மாரியென வந்தருள்வாய்

நாடும் பொருட்கெல்லா நாயகமா நின்றோனே.        

(12)

13.       பத்தியுட னீராறு பானுவின்மேற் பாவாக

நத்தி யுரைராமா னந்தனெனு நாயேற்குப்

புத்தியளித் தாண்டருளுன் பொன்னடியே தஞ்சமலா

லித்தரையில் வேறுகதி யில்லை யிதுநிசமே. 

(13)

முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக