திங்கள், 12 அக்டோபர், 2026

மெஞ்ஞானக் காதல்

 

தவத்திரு இராமானந்த சுவாமிகள் அருளிச் செய்த

மெஞ்ஞானக் காதல்

கண்ணிகள்

பூவிலு ளோர்நிதமும் போற்றுங் கணபதிமேற்

பாவின்மலர் சூட்டவவர் பாதமென்றுங் காப்பாமே.

(1)

முன்னே மொழிந்தருளு முதல்வன்மேற் காதல்சொல

வன்னையிடப் பாகம்வைத்த வம்பலவன் காப்பாமே.

(2)

அம்பலவன் றானருளு மைங்கரன்மேற் காதல்சொல

வும்பர்தினம் போற்று முமைபாதங் காப்பாமே.          

(3)

உமையாண் மகிழ்பாலற் குரிய கவிதைசொல

விமையோர் துதிமா லிருபாதங் காப்பாமே.   

(4)

மாலின் மருகனென வழுத்துவன்மேற் காதல்சொல

நாலு மறைபுகன்ற நாமகடாள் காப்பாமே.    

(5)

நாமக ளேமுதலி னாடுமவன் காதல்சொலப்

பூமகிழுங் குமரேசன் பொற்பாதங் காப்பாமே.

(6)

பொற்பாத மென்மனத்திற் பூட்டி யிருளோட்டி

நற்போத மேயருளி நலியாமற் காத்தருளே.   

(7)

நலியாமற் காத்து நாயே னிடர்கெடுத்துச்

சலியாம லித்ததியிற் றயாநிதியே வந்தருளே.

(8)

வந்தருளுங் குருபரனே மாயப் பிறப்பறுத்துச்

சிந்தை மகிழ்வுடனுன் றிருவடியிற் சேர்ப்பாயே.       

(9)

சேர்ப்பாய் திருவடியிற் சிந்தை கலங்காமற்

காப்பாயே யென்றன் கருத்தோர் நிலைநிறுத்தி.        

(10)

நிறுத்தியுன்றன் பாத நிட்டைதனிற் காணவினை

திருத்தி யடியருடன் சேர்த்தாள்வ தெக்காலம்.

(11)

ஆளுவதும் போராடு மைம்புலனை யொன்றாக்கிச்

சூழும் பவம்போக்கித் தொடக்கறுப்ப தெக்காலம்.

(12)

தொடக்கறுத்து ளாசை துறந்து வெறுப்பறுத்துச்

சடக்கருத்தை நீக்கித் தனித்திருப்ப தெக்காலம்.

(13)

தனித்திருந்து நிட்டைத் தனத்தைத் தினந்தேடிச்

சனிக்க வரும்வறுமை தனைத்தவிர்ப்ப தெக்காலம்.

(14)

வறுமை தவிர்க்க வாசி யடக்கிவருங்

கருமந் தவிர்த்துண்மை காட்டுவது மெக்காலம்.

(15)

காட்டிக் கரையேற்றிக் கலங்கு மனந்திருகப்

பூட்டி நறுந்தேனைப் புசித்திருப்ப தெக்காலம்.

(16)

புசித்துக் கரைகாணாப் பொங்கு கடலதனில்

வசித்துப் பிறப்பகன்று வாழ்வதுவு மெக்காலம்.

(17)

வாழ்வதுவுஞ் சிந்தை வாட்ட முறாமலெந்த

நாளு முனைமனத்தி னாடுவது மெக்காலம்.

(18)

நாடுவது முன்பதத்தை நாடிப் பணிபவரைக்

கூடுவது மென்றன் குறைதீர்வ தெக்காலம்.

(19)

குறைதீர்க்க வேழை குறிப்பை யறிந்துசொலு

முறைகேட் கவுமடியேன் முன்வருவ தெக்காலம்.

(20)

வருவதுவு மாய வஞ்சமறுத் துனருள்

பெருகுவதும் பொல்லாப் பிறப்பறுப்ப தெக்காலம்.

(21)

பிறப்பறுத்து ஞானப் பெருவா ரிதிமூழ்கிச்

சிறப்படைந்து மாசு தீர்த்திருப்ப தெக்காலம்.

(22)

தீர்த்திருக்க வுன்றன் செந்தா மரைத்தாளைப்

பார்த்திருக்க வோர்சொற் பகருவது மெக்காலம்.

(23)

பகருவது மென்னுட் பகையை யறுத்துநிதஞ்

சுகமுறவே யுண்மை சொல்லுவது மெக்காலம்.

(24)

சொல்லுவது மெஞ்ஞான சூட்ச மறிந்துவினை

கொல்லுவார் பொற்பாதங் கூடுவது மெக்காலம்.

(25)

கூடு மடியேன் குற்றங் களைந்துனையே

நாடி யெனதுமன நைந்திருப்ப தெக்காலம்.

(26)

இருந்தெனது பாசவினை யெய்தா வகையோட்டித்

திருந்துமுத லைந்தெழுத்தைச் செபித்திருப்ப தெக்காலம்.

(27)

செபித்திருந் துண்மைத் திறத்தைமகிழ் வாகவநு

பவித்திருந்து மெய்ப்பொருளைப் பாடுவது மெக்காலம்.

(28)

பாடித் தினந்தேடிப் பதியா நிலையறிந்து

கூடித் தினம்போற்றக் குருவாக வந்தருளே.   

(29)

குருவாக வந்து கொடியேன் வினைபோக்கித்

தருவாய் திருவடியைத் தருணமிது வந்தருளே.           

(30)

தருணமிது வேளை சலியாம னீயிரங்கிக்

கருணை புரிந்து காப்பா யடைக்கலமே.        

(31)

காப்பாயே நாயேன் கன்ம வினைபோக்கிச்

சேர்ப்பா யடைக்கலமே சிவமே யடைக்கலமே.

(32)

முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக