திங்கள், 12 அக்டோபர், 2026

பிடித்த பதிகம்

 

தவத்திரு இராமானந்த சுவாமிகள் அருளிச் செய்த

பிடித்த பதிகம்

எண்சீர் ஆசிரிய விருத்தம்

படித்தறிய மாட்டாத பாவி யானேன்

            பாருலகி லொருவரிலை யெனைப்போன் மூடர்

மடித்துயிரைக் குடித்திடவே காலன் வந்தால்

            வகையொன்று மறிந்திலனே யுனையல் லாது

முடித்தகுழல் வள்ளிபங்கா முருகா கந்தா

            முகுந்தனுரித் தாமருகா முதல்வா நின்னைப்

பிடித்தபிடி யினிநழுவ விடவு மாட்டேன்

            விட்டாலும் பிழைபொறுக்கப் பிதாநீ தானே.

(1)

சற்றேனு ஞானவழி தெரியாப் பாவி

            சண்டாள ரொருவரிலை யெனைப்போன் மண்ணி

லற்றேமன் வந்துயிரைக் கொடுபோ நாளி

            லொருவர்துணை கண்டிலனே யுனையல் லாது

கற்றோர்கள் பாமாலை சூட்டி யுன்றன்

            கழலிணையை யடைவார்கள் கல்லாப் பேயேன்

பெற்றேனுன் பதமலரை விடவு மாட்டேன்

            விட்டாலும் பிழைபொறுக்கப் பிதாநீ தானே.

(2)

அரியதொரு பவத்தொழிலைச் செய்த பேர்க

            ளாருமிலை யவனிதனி லெனைப்போன் றோர்கள்

கரியநிறக் காலனெதிர் வருமந் நாளிற்

            கடவுளே யுனையல்லாற் கதிவே றுண்டோ

தெரியுமெனை யேழையென வுன்சிந் தைக்கே

            தெரிவிக்க வென்றரமோ திருத்தா டன்னைப்

பிரியமுடன் பிடித்தபிடி விடவு மாட்டேன்

            விட்டாலும் பிழைபொறுக்கப் பிதாநீ தானே.

(3)

சுறுக்கமாச் சொல்லிடினும் பாவி யானோர்

            தொல்லுலகி லொருவரிலை யென்னை விட்டு

மறக்காம லேமனுயிர் பிடிக்கு நாளின்

            மயிலோனே யுனையல்லால் வழிவே றுண்டோ

வறக்கடவு ளேவலினா லழிந்தி டாம

            லயன்கரத்தி லலைந்துநித மவனி தன்னிற்

பிறக்காமற் பிடித்தபிடி விடவு மாட்டேன்

            விட்டாலும் பிழைபொறுக்கப் பிதாநீ தானே.

(4)

முத்தரெனு மடியவரைப் பணியாப் பேரின்

            மொழிவதற்கு முதன்மையுள மூட னேனைக்

குத்தியிழுத் தேமனுயிர் கொடுபோ நாளிற்

            குறையுரைக்க வொருவருண்டோ வுனையல் லாது

சித்தமதி லென்பிழையை வைத்தா யானாற்

            சிறியேனை யாதரிக்கத் திக்கு வேறார்

பித்தனுனைப் பிடித்தபிடி விடவு மாட்டேன்

            விட்டாலும் பிழைபொறுக்கப் பிதாநீ தானே!

(5)

ஞாயமெனு ஞானமதை யுணரப் பாவி

            நானிலத்தி லொருவரிலை யென்னைப் போன்றார்

காயநுழை யாவிநமன் கொடுபோ நாளிற்

            காப்பவர்க ளொருவருண்டோ வுனையல் லாது

மாயன்மரு மகனெனிலுண் மகிழுஞ் சீலா

            வஞ்சகனை யீடேற்றி மதியைத் தாராய்

பேயனுனைப் பிடித்தபிடி விடவும் மாட்டேன்

            விட்டாலும் பிழைபொறுக்கப் பிதாநீ தானே.

(6)

சாணுநீள் வயிறுவளர்த் திடப்பொய் சூதுஞ்

            சாற்றினேன் கொலைகளவுந் தவிர்த்த தில்லை

கோணினால் விடுவாரோ வேம தூதர்

            குறையுரைக்க வொருவருண்டோ குகனே 1யென்றுங்

காணியென வுன்பதத்தைக் கருதாப் பாவி

            கடைத்தேற வருள்புரியுங் கால நின்னைப்

பேணினேன் பிடித்தபிடி விடவு மாட்டேன்

            விட்டாலும் பிழைபொறுக்கப் பிதாநீ தானே.

பா.வே. : 1. யென்பால்

(7)

வேசையர்போல் வெளிவேடம் பூண்டு கொண்டேன்

            வெட்டவெளி காணாமல் விழிக்கின் றேனைப்

பாசமெறிந் தேமனுயிர் பிடிக்கு நாளிற்

            பாவிதனைத் தடுப்பவரா ருனையல் லாது

நேசனென வடியார்க்கு நிகழும் வேலா

            நெஞ்சகத்தில் வைத்திருத்தி நின்றா டன்னைப்

பேசரியேன் பிடித்தபிடி விடவு மாட்டேன்

            விட்டாலும் பிழைபொறுக்கப் பிதாநீ தானே.

(8)

தருமமெனச் சிந்தைதனி னினையாப் பாவி

            சண்டாள ரொருவரிலை தமியன் போலக்

கருமியெனக் காலனுயிர் பிடிக்கு நாளிற்

            கருணையுடன் காப்பவரா ருனையல் லாது

வருமமென்மே லெள்ளளவும் வைத்தா யானான்                                 

               மதியிலேன் றனைக்காக்க வகைவே றில்லேன்

பிரமமெனப் பிடித்தபிடி விடவு மாட்டேன்

            விட்டாலும் பிழைபொறுக்கப் பிதாநீ தானே!

(9)

ஆருமற்ற வேழைதன்னைக் காப்பா யப்பா

            வடைக்கலமுன் னடியிணைக்கே யபய மையா

காருருவக் காலனவன் வரும்போ தங்கே

            கடவுளே யுனையல்லாற் கதிவே றுண்டோ

வீரனுன்போ லெங்கேனும் பார்த்த தில்லை

            மெய்யாக நம்பினேன் விமலா வுன்னை

பேருதவி யெனப்பிடித்தேன் விடவு மாட்டேன்

            விட்டாலும் பிழைபொறுக்கப் பிதாநீ தானே.

(10)

மாதர்தமை நினைந்துதிரிந் தழன்று வாடி

            வையகத்தின் பந்தமதை மறவா தாலே

தூதர்தொடர்ந் தெனதுயிரைக் கொடுபோ நாளிற்

            றுணையொருவ ரிலையெங்கு முனையல் லாது

சோதனைநீ பார்த்திடிலென் னுயிர்நில் லாது

            துதிராமா னந்தனுக்குத் துணைவந் தாள்வாய்

பேதையுனைப் பிடித்தபிடி விடவும் மாட்டேன்

            விட்டாலும் பிழைபொறுக்கப் பிதாநீ தானே.

(11)

முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக