திங்கள், 12 அக்டோபர், 2026

காணாபத்திய சமயம்

 தவத்திரு இராமானந்த சுவாமிகள் அருளிச் செய்த

காணாபத்திய சமயம்

1. தனிக் கவிகள்

நேரிசை வெண்பா

1.       சித்தி மகோர்க்கடப்பேர் செப்பத் திகழ்ந்துதின

நத்தியபேர் கோரு நலமருள்வோய் - பத்திகொடுத்

தாளும் பரனே யடியேனை யித்ததியின்

மூளும் வினையை முடுகு.      

(1)

2.       சீர்பூத்த சற்குருவாத் தேருந் திருவடிவோய்

கார்பூத்த சித்திக் கணபதியே - பார்பூத்த

வெத்திசையுங் கொண்டாடு மீடுடையாய் நீங்காத

பத்திகொடுத் தாள்வாய் பரிந்து.         

(2)

3.       என்போன்ற வேழைகளை யென்று மெடுத்தாளும்

பொன்போன்ற மேனியுடைப் புண்ணியனே - மின்போன்ற

மாயா வுலகினிடை மாழ்குகின்றே னித்தருணந்

தாயாகிக் காப்பாய் சரண்.      

(3)

4.       உள்ள மறிந்தே வுதவுவா ருன்னைவிட

வள்ள லெனுங்குருவே மற்றறியேன் - கள்ளக்

கரிசை யிலாதகற்றிக் காப்பாய் தருணம்

வரிசைபெற்று வாழ மகிழ்ந்து.

(4)

5.       சூதெல்லா மென்னுடைய சொந்த மெனச்சூழ்ந்த

வாதனையா லுள்ள மயங்குகின்றேன் - சோதனைநீ

செய்யாமற் கண்பாராய் சித்தி மகோர்க்கடனே

வெய்யோ னெனத்திகழ வே. 

(5)

6.       அறியாப் பருவத்தி லாண்டித் ததியிற்

குறியாது விட்டகுறை யேதோ - நெறியேதுங்

காணாது நெஞ்சகமுங் கண்ணுங் கலங்குகின்றேன்

வீணாமோ பாடெல்லாம் விள்.          

(6)

7.       பொய்யுலகை நம்பிப் புலையனேன் பட்டதுய

ரையாநீ யின்ன மறிந்திலையோ - மெய்யாக

வந்து மனதிரங்க வஞ்சகமோ வென்பிழையைச்

சிந்தை யினிற்குறித்தோ செப்பு.        

(7)

8.       உன்சொன் மறுத்தே யுரைத்தபிழை யெண்ணாம

லென்சொல்லைக் கேட்க விசைகின்றாய் - நின்சொல்லா

னாயேன் சுகமடைத னண்ணாக் கொடியேன்சொ

னீயேன்கேட் பாயோ நிகழ்த்து.         

(8)

9.       சிறுபருவத் தெற்குச் சிலையுருவாத் தோற்றி

யுறுபருவத் திற்குருவா யுற்று - மறுபருவத்

தெற்கு ளுயிர்ப்பா யிமைப்போது நீங்காதோய்

நிற்குக்கைம் மாறு நிகழ்த்து.  

(9)

10.       நீண்டு சினேக நெருங்கிப் பழகினுமென்

ணாண்டவனென் நெஞ்சறிவா ராருமிலை - தாண்டவஞ்செய்

யையாநீ தானறிவா யம்புவியு ளோர்துளியைப்

பெய்யாப்பொய்ம் மேகமெனப் பேசு. 

(10)

11.       பின்சுகத்தை நாடாத பேதைமதி கொண்டுலகின்

புன்சுகத்தை நாடிப் புலம்புகின்றே - னின்சுகத்தில்

வைக்கா தலைக்க மனஞ்சம் மதித்ததுவோ

வெக்காலத் துய்வே னினி.     

(11)

12.       இப்புவியி லென்னை யிதுநாள் வருத்தியதென்

னப்பனே போது மினியாற்றேன் - றப்பிதமா

யாது புரிந்தாலு மஞ்சலளித் தேற்றருள்வாய்

தாதையெனக் காவோய் சரண்.          

(12)

(வேறு)

அறுசீர் ஆசிரிய விருத்தம்

13.       மந்திரங் கிரியை பூத மனமுதற் சுத்த மில்லே

னெந்தைநின் றிருத்தாட் கன்போ ரெள்ளள வேனு மில்லேன்

மந்தன்செய் பூசை யுன்றன் மலரடிக் கொவ்வு மோசொல்

சுந்தரஞ் செறிந்த முக்கட் டும்பிமா முகப்பி ரானே.    

(13)

14.       தக்கனுக் காக வன்று தரிசனந் தந்து பின்னு

மிக்கதோ ரன்பா லியாரும் வியந்திட வரசு நல்கி

முற்கல ராகி நீதி மொழிந்தது மித்தை யாமோ

இக்கண மென்னை யாள்வாய் யெந்தைநின் னடிக்கே தஞ்சம்.       

(14)

            ஆரணமா கமம்முதலா யளந்துநிதங் காணறியா

வகண்ட மாய்மெய்ப்

பூரணமாய் நின்றருளும் புத்தமுதை யென்னுளத்திற்

புகுந்த தேவை

வாரணவா சியினிறைக்கு வந்துபல காட்சியினை

வழங்கி யன்று

காரணங்கண் மிகவிளைத்த மகோர்க்கடமூர்த் தியைப்பெரிதுங்

கருத்துள் வைப்பாம்.

(குறிப்பு : 1921இல் வெளிவந்த முதற்பதிப்பில் இப்பாடல், இதன் பின் வரும் சித்திமகோர்க்கட பஞ்சகத்தின் ஐந்தாம் பாடலாக வரிசை எண்.93இல் அமைந்திருப்பது இங்குக் கூடுதல் பாடலாகக் காட்டப்பெற்றிருக்கிறது).         

 

கலித்துறை

15.       பிரண வப்பொரு ளாகிய பெருவெளிப் பொருளே!

திரண மாகிய சிறியனேன் சிறுமைநீங் கிடவுன்

சரண மாகிய வுபயதா மரைத்துணை சார்ந்தேன்;

மரண வாதனை தீர்த்தருள்; வள்ளலே! யபயம்           

(15)


2. பதிகம்

அறுசீர் ஆசிரிய விருத்தம்

16.       விண்ணுலகத் துறைகின்ற மூவர்முத லைனைவர்களும்

விரிநீர் சூழ்ந்த

மண்ணுலகில் வசிக்கின்ற பத்தர்சித்தர் முத்தர்முதன்

மற்றை யாவுங்

கண்ணுதலே நீயானா யாகையா லுன்னடிக்கே

கடையேன் றஞ்சம்

புண்ணியனே யைங்கரத்தெம் புத்தமுதே யென்குறைகள்

பொறுத்தாள் வாயே.  

(1)

17.        பிறைமுடிக்கும் பெம்மான்றன் பெரும்பொருளே பெரியோர்கள்

பேசு நான்கு

மறைமுடிக்கு மெட்டாவுன் மலரடியை நினைந்தெளியேன்

மனத்தி லுற்ற

குறைமுடிக்க நினைந்ததுநின் னுளமறியு மப்படிநீ

கொடுத்தே யாள்வாய்

கறைதவிர்க்குங் கற்பகமே கண்மணியே யைங்கரனே

கடையேன் றஞ்சம்.    

(2)

18.       ஆதிநாளெனை யாண்டா யப்படியே யிந்நாளு

மன்னை போலச்

சோதியா தாண்டருளென் னப்பாநான் மிகமெலிந்து

துயரா னொந்தேன்

வாதியாய்த் திரிந்தாலு மலரடியே தஞ்சமென

வந்து வீழ்ந்தே

னீதியே நினைந்தேழை நெஞ்சமர்ந்து நீங்காது

நிற்பாய் தஞ்சம்.         

(3)

19.       எத்தனையோ பேர்க்குமுன்னா ளருள்புரிந்தா யிந்நாளி

லெளியே னுக்குன்

சித்தமகிழ்ந் தருள்புரிந்தாற் றிருவருளுக் கேதேனுஞ்

சிறுமை யுண்டோ

பத்தனலே னெனினுமுன்றன் பதமன்றி யோர்துணையும்

பாரி வில்லேன்

முத்தன்முதன் மூவர்களுந் தொழுதேத்த வருள்புரிந்த

முதன்மை யானே.      

(40

20.       தேசிகனா வந்தெனக்குத் திடமான பொருளளித்த

தேவா வுன்மே

னேசமிலே னெப்போது நினைந்தறியே னப்பிழையென்

னெஞ்சே கூறு

நீசனென வக்குறையை நீநினையா தெப்போது

நெஞ்சில் வாழ்ந்து

காசினியோ ரினியேனு மெனையலைக்கா தருள்வாயுன்

கழற்கே தஞ்சம்.         

(5)

21.       மனமான கொடும்பாவி வசமாகா தெனைவலித்து

வையத் தார்க்குங்

கனமான சுமையேற்றிக் கலக்கமுறச் செய்ததுன்றன்

கழற்கே தஞ்ச

மினியேனு மதன்பெருமை யடக்கியெனக் கருள்புரிந்தே

யிணையி லாவுன்

றனதாணை செலுத்தியெனைத் தற்காத்தே யருள்விளைப்பாய்

தலைமைத் தேவே.        

(6)

22.       தூங்காத சுகமோடு சோம்பலில்லா வாழ்வருளெந்

துரையே யின்னந்

தாங்காதென் மனத்துயரஞ் சகித்திடே னென்செய்வேன்

றரமி லேற்கு

வாங்காத சுகமருள மனமிலையே லுன்னைவிட

வகைவே றில்லே

னோங்காரப் பொருளான வுத்தமனே யுதாரகுணத்

தொப்பி லானே.

(7)

23.       வாக்கிறந்து காணரிய மாதேவா வுன்றனைநன்

மதியி லேனென்

சாக்கிரத்திற் கண்டுதொழ வாசையுற்ற தியாவர்கடாஞ்

சம்ம திப்பார்

தேக்கநம்பி யாண்டாருக் கருள்விளைத்த காரணமென்

சிறிதோ நாயேன்

போக்கிடம்வேற் றறியேனென் புன்மைதவிர்த் தாண்டருள்வாய்

புண்ய மூர்த்தி.  

(8)

24.       காசிநக ராசனுக்காக் காரணங்கள் பலவிளைத்த

கடவு ளேநான்

பேசரிய பிழைபுரிந்தே னெனினுமுன்றன் பதமன்றிப்

பிறிதொன் றில்லேன்

வாசியென்றன் வசமாக்கி மகோர்க்கடனா முனதுதிரு

வடிவைத் தந்து

நேசமொடு சித்தருளி யெந்நாளு முனடியென்

னெஞ்சில் வையே.     

(9)

25.       தூயதிருப் பதமன்றித் துணையெனக்கு வேறில்லேன்

றுரையே யிந்நா

டாயெனவந் தாதரித்தா லன்றியென்றன் மனத்துயரந்

தவிரா தெந்தாய்

காயமுட னௌவைதனைக் கயிலைவரை தனில்விடுத்த

கருணை யாள

னீயலவோ விந்நாளு மெனக்கருள மனதிரங்கி

நேர்வாய் தஞ்சம்.       

(10)

26.       முக்கியமாத் தொழுவார்க்கு முதற்றேவா யாங்கள்சொல்லு

முறையைக் கேளாய்

கைக்கரிதாந் தொண்டுசெய்தோ முன்பொருளைக் கவரவெனக்

கருத்துட் கொண்டு

புக்கினபேர் பொறியிழந்து புலனிழந்து போகவவர்

புந்தி நைந்து

செக்கினிடை யெள்ளெனவே யெந்நாளு மிகநசியச்

செய்கு வாயே.

(11)

போற்றி விருத்தம்

27.       தேவருக் கிடையூறு யாவுந் தீர்த்தமெய்த் தேவா போற்றி

மூவருக் கரச ளித்த முதன்மைநற் பொருளே போற்றி

சேவடிக் கடிமை யாக்கிச் சிறியனேன் றன்னைக் காப்பாய்

மேவிய புகழ்ப டைத்த விக்கின ராஜ போற்றி!

 (12)

முற்றிற்று. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக