செவ்வாய், 6 அக்டோபர், 2026

குவிபாவொருபது உரையுடன்

 

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த

குவிபாவொருபது உரையுடன்

சாத்துக் கவி

(நேரிசை வெண்பா)

கோலக் குகனைக் குவிபா வொருபதினாற்

சாலத் துதித்தெவர்க் குந்தந்ததே – சீலமிகு

பைந்தமிழார் நெல்லைப் பதிமுருக தாசனென்னுஞ்

சந்தமலி வாய்ச்சரபந் தான்.

குவிபாவொருபது – அதாவது, தமிழெழுத்துக்கள் இருநூற்று நாற்பத்தேழுள் இதழ் முயற்சியால் உண்டாகிற நூற்றுப்பத்தொன்பது எழுத்துக்களை மட்டும் கொண்டு மற்றைய எழுத்துக்கள் எல்லாவற்றையும் நீக்கிப் பாடும் பாட்டு பத்தினைக் கொண்டதோர் பிரபந்தம் என உணர்க.  இதழ் – உதடு, முயற்சி – அது ஒட்டுதலுங் குவிதலுமாகிய முயற்சி.

இதழ் குவிதலே அன்றி இதழொட்டுதலும் உளதாகலிற் குவிபா வொருபது என எங்ஙனம் பெயர் பெறும் என்னில், இயல்பாயுள்ள இதழ்கள் ஒட்டுவதுங் குவிதலோடொக்குமாதலின் இப்பெயர் பெற்றதெனக் கொள்க.

(காப்பு)

ஒருபது குவிபா வோதுவ கோடு

மருவுபே ருவாவு மாவடும் வேலுமே.

பதவுரை : ஒருபது – பத்தென்னுந் தொகையை உடைய, குவி – இதழ் குவியப் பாடும், பா – பாக்களை உடைய இப்பிரபந்தத்தை, ஓதுவ – குற்றமறச் சொல்லுவிக்குந் தெய்வங்கள், கோடு – ஒற்றைக்  கோட்டினை, மருவு – பொருந்தி, பேர் – பெரிய, உவாவும் – விநாயக மூர்த்தியாகிய யானையும், மா – கசமுகாசுரனை, அடும் – மாய்த்த, வேலும் – அம்மூர்த்தியின் ஆயுதமுமாம்.  ஏ – அசை.

கருத்துரை : விநாயகக் கடவுளாகிய யானையுங் கசமுகாசுரனைக் கொன்ற கொம்பாகிய அக்கடவுள் ஆயுதமும் என்று சொல்லப்பட்ட தெய்வங்கள் இக்குவிபாவொருபது என்னும் பிரபந்தத்தைக் குற்றமறச் சொல்விக்கும் என்பதாம்.

            கோடு மருவு பேருவாவு மாவடும் வேலும் என்பதற்கு மலையின் உச்சிகளில் வசிக்கும் பெருமை பொருந்திய இளையவராகிய சுப்பிரமணியக் கடவுளும், மாமரமாகிய சூரனை மாய்த்த வேலாயுதமுமாகிய தெய்வங்களெனவும் பொருளுரைத்துக் கொள்க என்றவாறு.  ஓதுவ என்பது பிறவினைப் பொருளில் வந்தது. 

வேலுமயிலுந் துணை.

(நூல்)

(கலி விருத்தம்)

முருகோ விபவர் மூவர் மேலோ

ருருவா வருவா யோதோ தோமூ

டொருவா துறுமா வூமா வேமா

குருகோ லுமவை கொளுமா லுகுமோ.!

பதவுரை : முருகோ – முருகக் கடவுளே, விபவா – மகத்துவங்களை உடையவரே, மூவா – கெடாத, மேலோர் – மகான்களுடைய, உருவா – வடிவங்களைக் கொண்டு, வருவாய் – வருபவரே, ஓம்ஊடு – பிரணவாட்சரத்தின்கண், ஒருவாது – நீங்காமல், உறும் – பொருந்தியுள்ள, ஆஊமாவே – அகார உகார மகாரங்களின் பொருளையே, ஓதுஓது – அதிசீக்கிரத்தில் அடியேனுக்கு உபதேசித்து அருள்வீராக. அங்ஙனஞ் செய்தருள்வீராயின், மா – அழகிய, குருகு – வளையல்கள், ஓலுமவை – சத்திக்கின்ற மாதர் கரங்களை, கொளும் – பற்ற நினைக்கும், மால் – எனது மயக்கமானது, உகும் – கெடும். ஏ – அசை.

கருத்துரை : முருகக் கடவுளே மகத்துவங்களை உடையவரே! மகான்களுடைய வடிவங்களைக் கொண்டு தொண்டர்கள் எதிரில் வருபவரே! தேவரீர் பிரணவத்தின் கண்ணுள்ள அகார உகார மகாரங்களின் பொருளைச் சீக்கிரத்தில் அடியேனுக்கு உபதேசித்து அருள்வீராக.  அங்ஙனஞ் செய்வீராயின் எனக்கும் மாதர் மயக்கங்கெடும் என்பதாம்.

(1)

கூவா வருமா குருகும் வேலும்

பாவா னுவலும் பவமீகு வையோ

கோவா ழொருவா குவவாம் வாகு

வோவா வேவா வுமைகோ வதுவே.

பதவுரை : கூவா – கூவிக்கொண்டு, வரும் – வருகின்ற, மா – பெருமை பொருந்திய, குருகும் – கோழிக் கொடியையும், வேலும் – வேலாயுதத்தையும், பாவால் – தமிழ்ப் பாட்டால், நுவலும் – துதிக்கத்தக்க, பவம் – பிறப்பினை, ஈகுவையோ – கொடுத்தருள்வீரோ, கோ – பருவதங்களினிடத்து, வாழ் – வாழ்கின்ற, ஒருவா – ஒப்பற்றவரே, குவவாம் – திரட்சியாகிய, வாகு – புயத்தின்கண், ஓவா – நீங்காதிருக்கின்ற, ஏவா – பாணங்களை உடையவரே, உமை கோவதுவே – உமாதேவிக்கு நாயகனாகிய சிவபெருமானுடைய செல்வமே.

கருத்துரை : பருவதங்களில் வசிக்கும் ஒப்புயர் இல்லாதவரே! புயத்தின்கண் ஒருபோதும் நீங்காத பாணங்களை உடையவரே! சிவபெருமானுடைய செல்வமே! அடினேனுக்குத் தேவரீர் கோழிக் கொடியையும் வேலாயுதத்தையுந் தமிழ்ப் பாட்டாற் றுதிக்கும் படியான பிறவியைத்தான் கொடுப்பீரோ? அன்றி முத்தியே  கொடுப்பீரோ? இன்னம் யாது செய்வீரோ? அறியேன் என்பதாம்.

 

(2)

கோகோ வருளோ கொடுமைப் படுமோ

மாகோ துறுமெம் மைவவா கொளுமோ

வாகோ டுமுவா வதுகூ டுகுகோ

போகோ வுருவப் புதுமா வுருவே.

பதவுரை : கோகோ – அந்தோ வந்தோ, அருளோ – உயர்ச்சியை உடைய தேவரீரருளும், கொடுமைப் படுமோ – பொல்லாங்கைப் பொருந்துமோ, மா – மகத்தாகிய, கோது – குற்றத்தை, உறும் – பொருந்திய, எம்மை – எங்களை, வவாகொளுமோ – விரும்பிக் கைக்கொள்ளுமோ, ஆகு – பெருச்சாளி வாகனத்திலேறி, ஓடும் – செல்லும், உவாவது – யானையாகிய விநாயகக் கடவுள், கூடு – விரும்பிச் சிநேகிக்கத்தக்க, குகோ – குகக் கடவுளே, போகு – செல்லுகிற, ஓஉருவப் புதுமா – பிரணவ வடிவமாகிய புதுமை பொருந்திய மயிற் பரியையுடைய, உருவே – திருவுருவத் தெய்வமே.

கதுத்து : விநாயகக் கடவுள் வலியச் சிநேகிக்கத் தக்க குகக் கடவுளே! பிரணவ வடிவமாகிய மயில் வாகனத்தையுடைய தெய்வமே! யந்தோ வந்தோ தேவரீ ரருளானது கொடுமையைப் பொருந்துமோ? எங்களை விரும்பிக் கைக்கொள்ளுமோ? அறியேன் என்பதாம்.

(3)

பாவம் படுமிப் பருநோ வறுமா

கோவம் பொயொடோ டுறுகோ வுகொடோ

மாவம் புறுமா துமைபா லுணுவா

வாயம் புகுமெம் முளுமா மவிபுவே.

பதவுரை : பாவம்படும் – பாவம் சம்பந்தமாகிய, இப்பருநோ வறுமா – இந்தப் பெரிய துன்பமானது நீங்கும்படி, கோவம்  - கோபமானது, பொயொடு – அசத்தியத்துடனே, ஓடுறு – நீங்குதற்கு ஏதுவாகிய, கோவு – ஞான நேத்திரத்தை, கொடு – அடியேனுக்குக் கொடுத்தருள்வீராக, ஓமா – பிரணவத்தின் பொருளாய் இருக்கின்றவரே, வம்புறு – கச்சினையுடைய, மாதுமை – உமாதேவியினது, பால் – முலைப்பாலை,  உண் – உண்ட, உவாவா – இளைமைப் பருவத்தை உடையவரே, அம்பு – கண்ணீரை, உகும் – துயரத்தால் உதிர்க்கின்ற, எம்முளும் – எங்கள் உள்ளத்தினும், ஆம் – நிறைந்திருக்கின்ற, விபுவே – வியாபகரே.

கருத்து : உமாதேவியின் முலைப் பாலையுண்ட இளமைப் பருவத்தை உடையவரே! கண்ணீரை விட்டிரங்கும் எங்கள் உள்ளத்தினும் நிறைந்து இருக்கின்றவரே! இப்போது நேரிட்டிருக்கும் பெருந்துன்பம் நீங்கும் பொருட்டு ஞான நேத்திரத்தை அடியேனுக்குத் தந்தருள்வீராக வென்பதாம்.

(4)

உருவோ வருவோ வுனுமா றுறுவா

யுருகோ முயுமா வொருவா வருவா

யொருவே றுமையோ குளுவா ருளுளோ

ரொருவா குருவா யுவவா விகுவே.

பதவுரை : உனுமாறு – தொண்டகணினைத்த பிரகாரமாக, உறுவாய் – பொருந்தி இருக்கின்ற தேவரீர், உருவோ – உருவப் பொருளோ, அருவோ – அருவப் பொருளோ, உருகோம் – அன்பினாதுருகாத நாங்கள், உயுமா – ஈடேறும்படி, ஒருவா – ஒரே பிரகாரமாக, வருவாய் – வந்தருள்வீராக, ஒரு – ஆட்டுக்கடா வாகனத்தில், ஏறும் – ஏறுகின்ற, ஐ – கடவுளே, யோகு – தியானத்தால், உளுவார் – இடைவிடாது நினைப்பவர்களால், உளுன் – உள்ளத்தினுள்ளே, ஓர் – உணரப்படும், ஒருவா – ஒப்பற்றவரே, குருவாய் – பரமாசாரியராயிருந்தும், உவவா – தேனான் மகிழ்வடையாத, விகுவே – கெம்பீரத்தை உடையவரே.

கருத்து : ஆட்டு வாகனத்திலேறுங் கடவுளே தியானிப்பவர்களால் அறியப்படும் ஒப்புயர் இல்லாதவரே! பரமாசாரியராய் இருந்தும் அதனால் இறுமாப்புறாத கெம்பீரத்தை உடையவரே! தேவரீருருவமே யாயினும் அன்றியருமேயாயினும் அன்பர்கணினைத்த பிரகாரம் விளங்குகின்றவராதலால் அன்பில்லாத நாங்கள் உய்யும்படியொரே பிரகாரமாக வந்தருள் வேண்டும் என்பதாம்.

(5)

ஓவா வேலோ டொருதூ வலுறோ

மாவா மதுமீ வருகோ முருகோ

வீவா குவனோ வீனோ விதுவோ

வூவா வருளோ யுருமே றுதுவே.

பதவுரை: ஓவா – நீங்காத, வேலோடு – வேலாயுதத்துடனே, ஒரு – ஒப்பற்ற, தூவல் – தோகையை, உறு – பொருந்திய, ஓம் – பிரணவம் போன்ற, மாவாமதுமீ – வாகனமாகிய மயிலின் மீது, வரு – வருகிற, கோ – குருவாகிய, முருகோ – முருகக் கடவுளே, வீவாகுவனோ – இறந்துவிடுவேனோ, இது – யான்படும் இவ்வருத்தம், வீண் – வீணாகிய, நோவோ – வருத்தமோ, ஊவா – கெடாத, அருளோய் – கருணையை உடையவரே, உருமேறுதுவே – துட்டர்களுக்கு இடியேறு போன்றவரே.

கருத்து : மயில் வாகனத்தில் ஏறி வேலாயுதத்தோடு வரும் குருவாகிய முருகக் கடவுளே! அழியாத பெருங்கருணையை உடையவரே! துட்டர்களுக்கு இடியேறு போன்றவரே! அடியேனை வீணாக இறந்து விடுவேனோ? எனதுயிடெல்லாம் வீண் பாடாகி விடுமோ? கூறுவீராக வென்பதாம்.

(6)

குவவூ டுறுவா குபலோ புவிமே

வவவூ மனுமா மதுலோ வவமே

வௌவூ றுகொளோம் வழுவா விழுமம்

மிவ்வூ ழொடுமே விடுமா தொகுவே.

பதவுரை: குவவூடு – குவவென்னும் எழுத்தின்கண், உறு – பொருந்தி இருக்கின்ற, வாகுபலோ – புசபலத்தை உடையவரே, புவி – பூலோகத்தில், மேவ – பொருந்திய, அவ்வூமனுமாம் – அத்தன்மையை உடைய ஊமைப் பிள்ளையுமாகிய, அதுலோ – சமானம் இல்லாதவரே, அவமே – பயனின்மையையே, வௌவு – அபேட்சிக்கின்ற, ஊறு – குற்றத்தை, கொளோம் – அங்கீகரியாத எங்களது, வழுவா – குற்றமற்ற, விழுமம் – மேல்வரு மேன்மையையும், இவ்வூழொடு – இத்தேகத்திற்குரிய ஊழினுடனே, மேவிடுமா – கூடும்படி, தொகு – கூட்டி விடுவீராக. ஏ – அசை.

கருத்து : குவவென்னும் பீசாட்சரத்திற் பொருந்திய பராக்கிரமம் உடையவரே! அளவற்ற மகிமையோடு மதுரையில் ஊமைப் பிள்ளையாய் அவதரித்த ஒப்பில்லாதவரே! பெரும் பயனை அபேட்சித்த எங்களுக்குரிய சிறப்பினை இந்தப் பிறவியிலே தானே கொடுத்தருள வேண்டும் என்பதாம்.

(7)

வாளோ வெனுமை வாகோ மதுவீ

வேளோ டுபனோ மிகுமா சுடுமா

கோளோ வுவையோ குமவே வுவையோ

வாளோ வருகோ வறுகோ ணொருமே.

பதவுரை: வாயோவெனும் – வாளாயுதந் தானோ வென்று நினைக்கத்தக்க, மை – அஞ்சனந் தீட்டிய, வா – பாயுந் தன்மையை உடைய, கோ – மாதர்களுடைய கண்கள், மது – தேன் பொருந்திய, வீ – புட்ப பாணங்களை உடைய, வேளோடு – மன்மதனோடு, பல – பலவிதமாகிய, நோ – துன்பங்கள், மிகுமா – அதிகரிக்கும்படி, சுடும் – சுடுவதாகிய, மா – மகத்தாகிய, கோள – தீமையை, ஓவுவையோ – நீக்குவீரோ, கும் – வருந்தும்படி, ஏவுவையோ – அவற்றை ஏவுதல் செய்வீரோ, ஆள் – அடியார்கள், ஓவரு – நீங்குதற்கரிய, கோ – மலைகளுக்கும், அறுகோண் – அறுகோணத்துக்கும், ஒரு – ஒப்பற்ற, மே – சார்பே.

கருத்து : பருவதங்களுக்கும் அறுகோணத்துக்குஞ் சார்பாய் இருக்கின்றவரே! மாதர்களாலும் மன்மதனாலும் உண்டாகிற பெருந்துன்பங்களை நீக்குவீரோ? வின்னமும் அவர்களால் வருந்தும்படி செய்வீரோ? அறியேன் என்பதாம்.

(8)

கோவே டுவமா குருகோ வவணோ

மாவே யுணுமா மறுகோ ருருவா

கூவே குகுகூ குகுகூ நுவலும்

வீவே றுவமை வெலுமே ணதுவே.

பதவுரை: கோ – மலையின் கண்னுள்ள, வேடுவமா – வேடுவக் கலத்திற்றோன்றிய லட்சுமி போன்ற வள்ளிநாயகி, குருகு – பறவைகளை, ஓவு – ஓட்டும், அவண் – அத்தினைப்புனத்தில், ஓ – ஓவென்று இரக்கத்தினாற் கொடுத்த, மாவே – தினைமாலையே, உணுமா – புசிக்கும்படி  கொண்ட, மறுகு – மனச்சுழற்சியொடுங் கூடிய, ஓர் – ஒரு, உருவா – வடிவத்தை உடையவரே, கூவே குகுகூ குகுகூ – கூவே குகுகூ குகுகூ வென்று, நுவலும் – கூவுகின்ற, வீ – பட்சியாகிய சேவலானது, வேறு – வேறெயுள்ள, உவமை – உவமானத்தை, வெலும் – செயிக்கவல்ல, ஏணுது – வலிமை உடையதாய் இருக்கின்றது. ஏ – அசை.

கருத்து : தினைப்புனத்தின் கண் வள்ளி நாயகி இக்ககத்தோடு கொடுக்குந் தினைமாவுக்காக மனச்சுழற்சியோடுங் கூடிய ஒர் வடிவங் கொண்டவரே! தேவரீர்! சேவற் கொடியானது தனக்குத் தானே சமானமானதாதலால் அம்மேன்மையை யாவர்க்கும் நன்கு விளங்கும் படி செய்ய வேண்டும் என்பதாம்.

(9)

ஒப்பா வொருவே லுறுதோ ளுருமீ

முப்பா விடுமா முருகோ முருகு

துப்பா மருவு தொடுபூ மிகுவா

வப்பா பவநோ வறுகோ வெதுவே.

பதவுரை: ஒப்பா – சமானமில்லாத, ஒருவேல் – ஒரு வேலாயுதத்தை, உறு – தாங்கிய, அரு – அழகிய, தோள்மீ – புசத்தினிடத்தில், முப்பா – முத்தமிழ்ப் பாக்களையும், இடும் – தரித்துக் கொள்ளும், மா -  பருமை பொருந்திய, முருகோ – முருகக் கடவுளே, முருகு – தேனை, துப்பு – உமிழ்கிற, ஆ – ஆச்சரியத்தை, மருவு – பொருந்திய, தொடு – தொடுக்கப்பட்டுள்ள, பூ – பூ மாலைகளை, மிகு – அதிகமாகச் சூடிய, உவா – இளமைப் பருவத்தையுடைய, அப்பா – எனது தந்தையே, பவநோ – பிறவித் துன்பத்தை, அறு – நாசஞ் செய்யத்தக்க, கோ – பருவதமானது, எது – யாது. ஏ – அசை.

கருத்து : வேலாயுதத்தைத் தாங்கிய புயத்தின்கண் முத்தமிழ்ப் பாக்களையுஞ் சூடிக் கொள்ளும் முருகக் கடவுள் ஏதேன்றுளிக்கின்ற பூமாலைகளை மிகவுஞ் சூடிக் கொண்டிருக்கும் எனது தந்தையே! பிறவித் துன்பத்தை நீக்கத் தக்க பருவதம் யாது? தேவரீர் சொல்லி அருள வேண்டும் என்பதாம்.

வேலு மயிலுந்துணை.

(10)

முற்றிற்று.

கூறு மருமை குவிபா வொருபது

பேறும் வீடும் பெருகுவ வாமே.

பதவுரை: கூறும் – சொல்லப்பட்ட, அருமை – அருமையானது, குவி – திரண்டிருக்கின்ற, பா – இப்பாட்டுகள், ஒருபது – பத்தினால், பேறும் – சித்தியும், வீடும் – முத்தியும், பெருகுவவாம் – உண்டாவனவாம். ஏ – அசை.

கருத்து : இக்குவிபா வொருபதினான் முருகக் கடவுளைத் துதிப்பவர்களுக்குப் போக மோட்சங்கள் உண்டாகும் என்பதாம்.

வேலும் மயிலுந் துணை.

தெய்வமே துணை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக