திங்கள், 12 அக்டோபர், 2026

கௌமார சமயத் தனிக் கவிகள்

 

தவத்திரு இராமானந்த சுவாமிகள் அருளிச் செய்த

கௌமார சமயத் தனிக் கவிகள்

பதினான்கு சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

சுடர்மணி யடுத்த கடல்புடை யுடுத்த

               தொல்புவி தனிலெமன் விடுத்த

   தூதையே வன்னக் கோதைமா ரென்னத்

               துணிந்துமற் றவர்வளர் சொன்னக்

குடமுலை யிடையிற் படரிரு துடையிற்

               கொழுநறு மலர்விழிக் கடையிற்

   குலவிய மணத்திற் கலவிசெய் குணத்திற்

               குலங்குபு புலம்புகங் கணத்திற்

றிடநறை மொழியிற் றடவுடை வழியிற்

               றீக்கடி தடவிடு குழியிற்

   சிந்தையைப் போக்கி நிந்தையைத் தேக்கித்

               தியங்குறு தியக்கெலா நீக்கி

யடல்கெழு பத்தி யுடனுயர் சித்தி

               யளித்தெனை யாண்டருண் முத்தி

   யடியனேற் குதவு படியெலாம் பரவு

               மறுமுகா மயின்மிசை வாவே.

(1)

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தன்னினந்தன் னைக்காக்கு மெனவுலகர் பழயமொழி

சாற்று மாபோ

லுன்னினத்தா ளென்றோமுன் செட்டிப்பெண் டனைநாடி

யுதவி செய்தா

யன்னிய நானல்லனீ வேளாள னாகையா

லஞ்ச லென்றே

தன்னியனாக் கிடவுன்ற னருட்செல்வந் தனிற்சிறிது

            தந்தாள் வாயே.

(2)

உலக நடை

இரட்டையாசிரிய விருத்தம்

வாயினாற் றுன்மார்க்க மாகாதெனச் சொல்வார்

                        மனநினைவு துன்மார்க்கமாம்

            வஞ்சகஞ் செய்யொணா தொருவர்க்கு மென்பார்பின்

                        வஞ்சித்த லேசெய்கையாம்

போயினார் தம்மைப்பி னிகழொணா தென்பார்

                        புறங்கூற லேவார்த்தையாம்

            புன்மைதரு பிறன்மனைவி புல்லொணா தென்பார்கள்

                        போகிப்ப தவரிடத்தாங்

காய்சினம்வெ நகரவழி காட்டிவிடு மென்பார்

                        கடிந்தசொல் லேவாசகங்

            களவினைக் கனவிலுங் காணொணா தென்பார்கள்

                        கவருவது பிறர்பொருளதா

மாய்மறைசொல் வழியதனி னிற்கவே சொல்வரவ

                        ரரைநாழி நிற்கமாட்டா

            ராறிருகை வேன்முருக நீர்பெருகும் வாரிசூ

                        ழம்புவியு ளோர்செயலிதே.

(3)

கட்டளைக் கலித்துறை

வேன்மணி லுந்துணை யென்பார் கிரத்தின் விதிவிலக்கும்

வேன்மயி லுந்துணை யென்பார் வினைதனை வேரறுக்கும்

வேன்மயி லுந்துணை யென்பார் பகைதனை வீட்டிவிடும்

வேன்மயி லுந்துணை யென்பார்க் கிணைசொல வேறில்லையே.

(4)

அறுசீர் ஆசிரிய விருத்தம்

பொன்னைப் பூவைப் பூவையரைப்

            பொருளென் றுன்னிப் புவியுழன்று

தன்னை மறந்த சண்டாளர்

            தங்க ளுறவு தணந்துநித

முன்னைப் பரவுலம் படிக்கருள

            லுண்டோ விலையோ வுளதுரையாய்

முன்னைப் பொருளாய் நின்றோனே

            முருகா முறையோ முறையேயோ.

(5)

எழுசீர்த் தாழிசை

சிவகிரி தனிலொரு தண்டொடு நின்றிடு

            சேவ கனற் கழலைத்

தவநெறி யொடுமலர் கொண்டு பணிந்திடு

            தக்க வரைத் துதியா

தவநெறி கொண்டுமி கழ்ந்திடு மானிட

            ரருநர கது புகுவார்

நவமல விதுமறை கண்டு தெளிந்திடு

            நற்றவர் வா சகமே.

(6)

நேரிசை வெண்பா

பொற்குவடு நேர்பழனிப் பொற்பொருப்பிற் றண்டூன்றி

நிற்குமவன் றன்னுருவை நெஞ்சகத்திற் – சற்குருவாக்

கொள்ளுங் குணத்தார் குறித்தபயன் கைகூடு

மெள்ளும் பிழையிதிலின் றே.

(7)

உண்மை கூறல்

அறுசீர் ஆசிரிய விருத்தம்

நாவரசும் வாசகனு மற்றறிஞர் களுமிங்கே

            நடிப்பே நிற்கப்

பூவுலகிற் பொய்புகன்றே பிறப்பிறப்பற் றாடியன்

            புகல்வ துண்மை

தேவர்சிறைமீட் டோனே சிறியருள நாட்டாத

            திருத்தா ளானே

யோவில்பஞ்ச பாதகத்தே னுண்மையுரைத் தேனெனையா

            ளுசித வேளே.

(8)

கட்டளைக் கலித்துறை

அறைமேற் றகிலற்றுப் பொற்பாகை சென்னைக் கணிபவர்போற்

கறைசேர் மிடற்ற னடியாரை நிந்தித்துக் கால்சலிக்கத்

தறைமீ தளவி றலந்தோ றுஞ்சுற்றிடுஞ் சண்டிகட்குக்

குறைதீர் கதியும் வருமோ சிவாசலக் கொற்றவனே.

(9)

அறுசீர் ஆசிரிய விருத்தம்

சூரழித்த வேற்கந்தா விண்ணப்ப மெங்கண்மனச்

            சோர்வு சோல்வோ

மாரொருத் தருன்பொருளை யபகரிக்க நினைந்தாலு

            மவரை யுன்றன்

கூர்பொறுத்த வேன்முனையாற் குலைத்தவர்ள் வங்கிசத்தைக்

            குன்றச் செய்து

பாரிடத்தோ ரதிசயிக்க வெங்களைக்கண் பார்த்தருளிப்

            பகைதீர்ப் பாயே.

(10)

முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக