புதன், 7 அக்டோபர், 2026

அனந்தசயனத் தியமகவந்தாதி

 

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த

அனந்தசயனத் தியமகவந்தாதி

(காப்பு)

(கட்டளைக் கலித்துறை)

அனந்த சயனவைத் திற்றியிற் சேர்க்கு மவர்ப்பணியார்

அனந்த சயனற் றணப்பாய் குருகை யருட்புலவா

அனந்த சயனந்தஞ் சக்கரந் தாங்கி யவிர்முகினேர்

அனந்த சயனத் தரிவேண்டந் தாதி யளித்தருளே.

(நூல்)

திருவனந் தையலர் சீயமன் னாரெனத் தேர்ந்துமஞ்சேந்

திருவனந் தயனென் றேத்தலுண் டாற்றள்ளல் செங்கனிவாய்த்

திருவனந் தைய கமலத் தடாகஞ் செறிந்ததெய்வத்

திருவனந் தையதில் வாழ்முகுந் தாசிந்தை சேர்ந்தருளே.

(1)

சேரன் பராவி யனையாய் பொருவி றிருவனந்தைச்

சேரன் பராவிய தாண்மா தவாவெழிற் செய்யவணச்

சேரன் பராவியற் யின்சென்ற மாட்சி தெரித்திமற்றோர்ச்

சேரன் பராவியன் பார்வாழ்கின் றார்பொய்மைச் சீரொல்கவே.

(2)

சீரத் தரங்கக் கடவே யனைய திருவனந்தைச்

சீரத் தரங்கத் துதிகேட்டுக் கொஞ்சஞ் சிரித்தநின்வாய்ச்

சீரத் தாங்க நினைத்தியான் வருந்தச் செயலென்கொனச்

சீரத் தரங்கணி லங்காக்கச் செய்யருள் சிந்தியதே.

(3)

சிந்தைக் கரியவன் றென்னனந் தைப்பதிச் செல்வன்றுழாய்

சிந்தைக் கரிய வகைக்குவப் போனருட் சீலமிலார்

சிந்தைக் கரிய வரத்தா னிடங்கர்கைச் சிக்கியுள்க

சிந்தைக் கரியவண் கூவமுன் னின்ற திறம்பெரிதே.

(4)

திறங்கண்ட வாணவர் களிகூர வேண்டிவெந் தீயரக்கர்

திறங்கண்ட வாறடுஞ் சீதரற் பாவஞ் செறிபிழைய

திறங்கண்ட வாதுயக் காணப்பெற் றார்புகழ் செப்பல்விட்டெய்த்

திறங்கண்ட வாமொழி யாரா டனந்தையிற் செல்வர்களே.

(5)

செல்வம் படைத்த மனத்தார் குலத்தைச் செகுக்குமடற்

செல்வம் படைத்த நெடுமா லனந்தைத் திருநகர்க்குச்

செல்வம் படைத்தகைக் கட்சீ ரணங்கின் செயலடைவேஞ்

செல்வம் படைத்தனத் தாராதி யாய்நுகர் தீதஞ்சுமே.

(6)

தீய வனத்தை யழற்கூட்டி னான்பரித் தேர்விடுங்கூர்த்

தீய வனத்தைய லார்சோர வூதினன் றெண்மறைக்கொத்

தீய வனத்தையற் றந்தா னனந்தையிற் செய்பவனி

தீய வனத்தைய லார்வளை யாவுஞ் சிதறியதே.

(7)

சிதந்தந்த வார மலையா ரிசைந்தன்பிற் சேர்ந்திடப்பே

சிதந்தந்த வாரமிக் குஞ்சிந்தை யார்பொருட் டேடச்செய்யேல்

சிதந்தந்த வாரறி தாளா வனந்தையிற் சீதருகுச்

சிதந்தந்த வாரணங் கொன்றன்று மாமனைச் செய்தவனே.

(8)

செய்ய கனகங் குடையாக்கொண் டானினஞ் சேர்த்தவனைச்

செய்ய கனக மதிள்சூ ழனந்தையிற் செல்வனைநச்

செய்ய கனக னமர்விளை யாமுற் செகுத்துநலஞ்

செய்ய கனகர் தொறுமலைக் கேலென்சொற் சித்தித்ததே.

(9)

சித்தங் கலங்கிய மானார் மனைமுன்றிற் சென்றவர்க்கெஞ்

சித்தங் கலங்கியல் கைக்கெண்ணல் வேண்டிலஞ் சீரருணே

சித்தங் கலங்கி யழனீதி யோநுவ றென்னனந்தை

சித்தங் கலங்கி யனைத்தாம்புட் கோவுடைச் சீதரனே.

(10)

சீதக் கமலங் கொடிதாமென் றெள்ளிச் செகமளந்த

சீதக் கமலத் திருவடி வேட்டுத் தியங்குமென்பேச்

சீதக் கமல முறாதுனைக் காட்டுங்கொ றேர்கிலன்செஞ்

சீதக் கமலர் நிகரா மனந்தைச் செயசித்தனே.

(11)

செயங்கண் டனங்கைய ராடு மனந்தைத் திருப்பதியிற்

செயங்கண் டனந்தந் தரித்தகை யாய்நின் சிறந்ததொண்டே

செயங்கண் டனஞ்செய்து தள்ளேன் மதனன் செழுமலரஞ்

செயங்கண் டனகர் புகவுழைப் பாருஞ் சிரித்திடவே.

(12)

திடங்காட் டியகளிற் றானைமுன் கூவிய சீரொலிசேர்ந்

திடங்காட் டியங்குமென் சொற்றோய்ந் திடாதுகொ றேரருஞ்சோ

திடங்காட் டியக்கந் தராதாள் பொதுவர்பஃ றிற்றிகள்செய்

திடங்காட் டியமுகில் வென்றா யனந்தையிற் செங்கண்வெற்பே.

(13)

செங்கட் கரிய முகில்போன் றனந்தையிற் சேரரிநச்

செங்கட் கரிய பயனல்கி டானெனிற் றேவர்நெஞ்சிற்

செங்கட் கரியன்பிற் கந்தா ளிரங்க றிறங்கொல்செப்பாய்

செங்கட் கரியன் மருங்கானை வாண்முகச் சேனையனே.

(14)

சேனைய னாதியர் போற்று மனந்தையின் செல்வனடற்

சேனைய னாதிய லாதும்பர் வாழச் செயுங்குரக்குச்

சேனைய னாதியக் கஞ்செய்த மாயன் றிருப்புகழ்பே

சேனைய னாதி யடிமையென் றேமிகச் செப்பினனே.

(15)

செப்பத்த காதனல் லார்மைய லேனுட் டெரிசனத்திற்

செப்பத்த காதன செப்பிலை யோகடற் றிண்புவியிற்

செப்பத்த காதனக் கொப்பிலெந் தாய்தென் றிருவனந்தைச்

செப்பத்த காதனந் தங்கொடுள் ளாயென்சொற் சீர்வினவே.

(16)

சீரத்த னன்னப் பரியான்விண் ணோர்புகழ் தென்னனந்தைச்

சீரத்த னன்னலம் வேட்டிரந் தேனைத் தியக்கிடன்மிஞ்

சீரத்த னன்னனப் பாட்டளிப் பூமிகச் சிந்திலனின்

சீரத்த னன்னஞ் சுமிழ்வா யராவையும் சேர்த்தனையே.

(17)

தனக்கஞ்ச மங்கை யணைவா னனந்தைத் தலைவன்விதி

தனக்கஞ்ச மங்கை யருமறை யாதிதந் தானரவா

தனக்கஞ் மங்கைய தாள்வேண்டு மன்பர்பொற் றாள்வெறுத்தோ

தனக்கஞ்ச மங்கையம் போன்றிறு மாக்குந் தகுக்கினரே.

(18)

தருவா னவரைப் புரப்பானின் பாலமு தம்பெருகத்

தருவா னவரைய னெட்டெழுத் தோதிலர் தங்கள்சித்தத்

தருவா னவரைவிட் டாட்டும் பிரான்மலர்த் தையலர்தோய்

தருவா னவரை யனந்தா புரியின் றலைவனன்றே.

(19)

தலையந் தணனைத்த னுந்தியிற் றந்தவன் றண்ணந்தழாய்

தலையந் தணனை யனத்தாலையிற் பார்க்கத் தகாதுகொலோ

தலையந் தணனை மலர்ப்பீடத் தாயென் றனதுளத்துந்

தலையந் தணனையத் தோடவன் மார்பினுஞ் சார்ந்தனையே.

(20)

சார மறியகில் லார்புகழ் கூறுநர் தம்மையொத்தா

சார மறியற்கை யார்க்கொல்கி னேன்மகந் தன்னிடைநெஞ்

சார மறியறுக் கின்றாரிற் றாழ்த்த றனகவனசஞ்

சார மறிய லுரத்தா யனந்தைத் தலத்தண்ணலே.

(21)

தலத்தி லனந்தைய னாரா யணன்பொய்யர் தாம்படவும்

தலத்தி லனந்தைய லார்க்கொரு மோகன்றண் டாமரைக்கா

தலத்தி லனந்தைய சேயுடை யான்றினந் தங்குபல

தலத்தி லனந்தை யதிகமென் றோதத் தகுந்தகுமே.

(22)

தகுந்தகுந் தத்திமிழ் கூற்றணு காமலென் றன்னிடைநீ

தகுந்தகுந் தத்திமி யென்றாட வேண்டுந் தனிகர்முன்னேத்

தகுந்தகுந் தத்திமிர்ச் சொற்கேட்கச் செய்யறரைமகணா

தகுந்தகுந் தத்திமி சாரா வனந்தை தனக்கரசே.

(23)

தனக்கடத் தாரைய ராமைக் குழைப்பவர் தாமெனப்பொய்த்

தனக்கடத் தாரையுங் கெஞ்சிநொந் தேன்செந் தமிழ்வரைச்சந்

தனக்கடத் தாரை தருஞ்சாப மெய்தித் தளர்ந்துசெய்வந்

தனக்கடத் தாரைக்குன் றாண்டா யனந்தைத் தடங்கண்ணனே.

(24)

தடத்தா லிலைவெண் கடனே ரனந்தை தனிற்றுயில்வாய்

தடத்தா லிலைமுனி யெய்தச்செய் தாயண்டர் தம்மைவென்றுந்

தடத்தா லிலையப் படப்பொரு வாய்புலைத் தன்மையரைத்

தடத்தா லிலையென்செய் வேன்பசு வாதி தயங்கினவே.

(25)

தயரத னாதரங் கண்டெழிற் சேயிற் றழைத்தும்பரி

தயரத னாத ரனேகரிற் சீர்த்தவ தம்பத்தினு

தயரத னாதரத் தக்காள் கொழுநற்றந் தாயகலத்

தயரத னாதரந் தீரனந் தைக்கணெற் றாங்குதியே.

(26)

தாங்கந் தரங்கக் கடல்சூ ழனந்தைத் தலைவன்வஞ்சித்

தாங்கந் தரங்கவின் பாரளந் தான்சினைத் தன்மையின

தாங்கந் தாங்கடுக் குங்கொலத் தான்றிருத் தாள்கள்விழைந்

தாங்கந் தாங்கமெய் தேம்புறம் போஞ்சஞ் சலக்கட்டமே.

(27)

கட்டுக் கடங்கிய தோற்பையொத் தாடுறுங் காமநெஞ்சென்

கட்டுக் கடங்கி யருள்சேர்வ தென்றுவன் காதகரிக்

கட்டுக் கடங்கி யனைத்தென்செய் வேன்றவிர் காசில்கைப்ப

கட்டுக் கடங்கியச் சீரனந் தாபுரிக் காகுத்தனே.

(28)

காகள மன்ன கணைக்கான்மின் னார்மகிழ் காமருடைக்

காகள மன்னர் கலவே ரறுத்தபைங் கார்கடுநீங்

காகள மன்னரன் வேதனன் னார்தங் கருத்தினிற்கைக்

காகள மன்ன வயலா ரனந்தையின் காவலனே.

(29)

காவலங் காரண விந்திர னூர்க்குமிக் காசினிக்குங்

காவலங் காரணன் றென்னனந் தாபுரிக் கண்ணனெங்கட்

காவலங் காரண னைப்பயந் தானவற் கண்டிகற்றாக்

காவலங் காரணங் குள்ளானொப் பாஞ்சினங் காத்துளமே.

(30)

காத்தவ ராகங் கனகமன் னார்பலர் கைகுவிப்பக்

காத்தவ ராகனைத் தென்னனந் தாபுரிக் காரைமயங்

காத்தவ ராகர்க் கெளியானைச் செந்தமிழ்க் கன்னியின்சங்

காத்தவ ராகநெஞ் சாலெந்த நாளுங் கருதுதுமே.

(31)

கருதக் கருத விடார்வாழ்த் தனைய கலக்கநொந்த

கருதக் கருதகைக் கூந்தன்மின் னார்க்குழல் கள்ளநெஞ்சே

கருதக் கருததி போன்றேத் தனந்தைக் கரியவனைக்

கருதக் கருதக் கலிக்கன லாறிக் களிமிஞ்சுமே.

(32)

களியனந் தாவு மலர்வாவி சூழுங் கவினனந்தைக்

களியனந் தாழி முகில்போற் றுயிலுங் கடவுள்பல்ச

களியனந் தாதனனன் செஞ்சிறைக் கோரக் கலுழப்பிரான்

களியனந் தாழ்வறக் கொண்டான் மகிமைக் கடல்பொங்குமே.

(33)

கடலை மதித்தட மத்தினிற் பாந்தட் கயிறுசுற்றிக்

கடலை மதித்த பெருமான் பதுமக் கழல்விருப்பங்

கடலை மதித்தங்க மேதென் னனந்தைக் கவின்முகம

கடலை மதித்தண்டர் வந்தேத்து மாண்மையுங் கைவருமே.

(34)

கைவந்த வாறுன் குழல்போற்ற லேயன்றிக் காண்கிலன்றாட்

கைவந்த வாறுடை யானென்ன வாழ்வி கறையின்பொய்த்த

கைவந்த வாறு நெறிசொற்று ளாற்செய் கமலகடக்

கைவந்த வாறுஞ் சியப்பா லனந்தைகொள் காரணனே.

(35)

காரணத் தானை யனந்தைப் பிரானைக் கதறிடும

காரணத் தானையைக் காத்தானை நாடிக் களிப்புறும

காரணத் தானைகொள் வார்பெரு வாழ்வினைக் காதலித்தேங்

காரணத் தானையன் சீர்வேண்டு வாரையுங் கைப்பவரே.

(36)

கைப்பக டாதிய வென்றுண ராறிற்சில் காதல்கொள்வேன்

கைப்பக டாதியஞ் சென்றேமற் காயுங் களியெய்துமோ

கைப்பக டாதிய லாதளித் தாய்நெஞ்சின் கட்செவிப்ப

கைப்பக டாதிய ரேவா ழனந்தைக் கதைக்கையனே.

(37)

கதையாதி யைந்து படையேந்தி னான்றன் கவினனந்தை

கதையாதி யைந்துள வாரத்தி னான்பல கற்றுவம்பிற்

கதையாதி யைந்து பணிவார்க் கெளியன் கழல்கணினை

கதையாதி யைந்துங்க வீரத்தொ டெய்துமெய் காண்மனமே.

(38)

காணப் பரவச ராரேனுஞ் சென்று கரங்குவிக்கக்

காணப் பரவத் துணிவாரிற் சேர்த்திடல் கண்மலராற்

காணப் பரவக் கடல்சூ ழனந்தைக் கரியவகற்

காணப் பரவமண் கண்டுவந் தானுட் கலந்தவனே.

(39)

கலங்கக் கலங்கக் கலியால் வருத்தல் கருமமன்றேங்

கலங்கக் கலங்களிக் கப்புரிந் தாள்பண்டு காட்டிடையக்

கலங்கக் கலங்கணிப் பெண்ணாகச் செய்த கழற்பெருமை

கலங்கக் கலங்கலிக் கத்தோற் றனந்தைக் கதிக்கொண்டலே.

(40)

கதியிலை யாகத் தமைத்தா னனந்தைக் கருமுகினற்

கதியிலை யாகிநின் றானரு ணாடிடிற் காதனெனக்

கதியிலை யாநல முண்டா மறமுற் கழறிடுஞ்சங்

கதியிலை யாமுள மென்பாரொப் பார்நிசங் கண்டனமே.

(41)

கண்ட னையமொழி யும்புட் குரலுங் கலந்திசைக்குங்

கண்ட னையமொழி யாரா டனந்தைக் கரியவனைக்

கண்ட னையமொழிக் கைகுவித் துய்ந்த கவிஞரவைக்

கண்ட னையமொழிந் தாலுடன் ஞானக் கனியெய்துமே.

(42)

கனியஞ் சனத்திரு மேனியி னான்கொலைக் கையரந்த

கனியஞ் சனந்த ரினுங்களிப் போனண்டர் கண்ணருந்துங்

கனியஞ் சனல்கி யனந்தையில் வாழுங் கடவுணெஞ்சின்

கனியஞ் சனகன் மகளான நன்மையிக் காசினிக்கே.

(43)

காசை மலரை யனையாய் மதுர கவிசொறுதிக்

காசை மலரைய நல்லனந் தாபுரிக் கள்வவுள்ளொல்

காசை மலரை யரச்செகுத் தாயென்றன் காதலென்னுங்

காசை மலரையர் கண்டேங்கு மாறு கடிந்தருளே.

(44)

கடிக்கு மராவணைக் கோற வனந்தையின் கண்விரித்த

கடிக்கு மராவணை விட்டெழுந் தாயிடைக் கன்னியர்தங்

கடிக்கு மராவணை யத்தாழி சங்கங் கரத்தமைத்தாய்

கடிக்கு மராவணைங் கோலார்நின் சேயையெற் காச்சிறிதே.

(45)

காச்சிக் கடைந்தகைக் கூந்தலென் றேத்துங் கவிகள்வெறுக்

காச்சிக் கடைந்த மனத்தேனை யாள்வைகொல் காதன்மின்னார்

காச்சிக் கடைந்தவெண் ணெய்கவர்ந்த தாயுரங் காணுமுல

காச்சிக் கடைந்தரக் கண்ணா லனந்தையைக் காப்பவனே.

(46)

காப்பணி யும்பர தத்தானும் வேதனுங் கண்டுளொல்கக்

காப்பணி யும்பர வையேத் தனந்தையிற் கண்டுயில்வாய்

காப்பணி யும்பர வப்புணர்ந் தாய்கொடுங் காற்பகைக்கேங்

காப்பணி யும்ப ரனுமானு மெச்சுங் கவியருளே.

(47)

கவியனந் தம்படை யாக்கொண் டரக்கக் களைகளைந்தாய்

கவியனந் தம்பமென் றுள்ளாற்பெற் றாய்தொனிக் காட்டலின்மிக்

கவியனந் தம்புனைந் தாய்தென் னனந்தையிற் கண்டுயின்றாய்

கவியனந் தம்பரத் தூடு முலாவக் கடைக்கணியே.

(48)

கடகந் தரித்த கயத்தேறு மன்னர்பொய்க் காட்சியிச்சை

கடகந் தரித்தகை நீத்தன்பர் தம்மிற் கலகனகக்

கடகந் தரித்தமின் னாரா டனந்தைக் கரியபிரான்

கடகந் தரித்தயக் கந்தணப் பானுண்மை காமர்நெஞ்சே.

(49)

காம னலைய முரசஞ்சி மங்கையர் காதல்விஞ்சிக்

காம னலையா நகர்வேட் டுளிர்சினைக் காரனந்தைக்

காம னலையடற் புள்ளேறித் தோன்றக் கருதுமினீங்

காம னலைய வநுபூதி நல்குங் கணத்தகத்தே.

(50)

கணக்கற்ற வாசகத் திற்புரிந் தானைக் கமலனைமுக்

கணக்கற்ற வாசகற் றித்தென் னனந்தையிற் காப்பவனைக்

கணக்கற்ற வாசக சப்பட வேண்டென் கனவிலவன்

கணக்கற்ற வாசகஞ் சொற்றா னனவினிற் காண்கிலனே.

(51)

இலங்காழி யங்கையிற் றோட்பர கால னியல்புலமை

இலங்காழி யங்கைய வீரமில் லேமெம்மை யேற்குங்கொலோ

இலங்காழி யங்கைப் பெருமா ளனந்தைக் கிறைவனந்நாள்

இலங்காழி யங்கை யிலங்கையின் சேனைமுற் றிட்டவனே.

(52)

இட்டம் பரவன்பி னாற்புரி வாருக் கெளியன்வெம்பர்

இட்டம் பரவவொட் டானனந் தாபுரிக் கேகிமிக்கோல்

இட்டம் பரவரக் கர்ச்செற்ற சீர்முத லேத்தியெம்மை

இட்டம் பரவச மெய்தாத தேன்பக ரின்சொன்மின்னே.

(53)

இன்னம் பிறக்கம் பணிக்கோனொவ் வார்நமக் கென்னுமையல்

இன்னம் பிறக்கம் புரிவாரை நாடி யிணங்கனெஞ்சே

இன்னம் பிறக்கம்ப நட்டா னனந்தை யிடத்தருள்வான்

இன்னம் பிறக்கம்வெங் கூற்றாதி யோரு மிடைவரன்றே.

(54)

இடையலங் காரத் துமைகேள்வ னுக்குநல் லெண்கணற்கும்

இடையலங் காரது போலநின் றான்றெண்ட ரேத்தனந்தை

இடையலங் காரந் தருவான் மதன்செ யிகலொழிக்கும்

இடையலங் காரகன் றாழ்மதி யால்வெம்பு மென்மகளே.

(55)

என்னந் தரங்கத் தகலா லிலையி லெறிகடலில்

என்னந் தரங்கத் தனந்தைப் பதியொத் திருக்குமரி

என்னந் தரங்கத் தறலணிந் தானய னிந்திரற்காம்

என்னந் தரங்கத் தலர்மெய்க ணேர்பொய்க ளெண்மடங்கே.

(56)

எண்ண மடங்கனந் தந்துன்ன லாலெய்த் திரணியன்சேய்

எண்ண மடங்க லுருவாகி னாய்மறை யீரிரண்டின்

எண்ண மடங்கக் கரத்தா யனந்தையி லியாருமென்னை

எண்ண மடங்கழ லானந்த போகமிக் கீந்தருளே.

(57)

ஈயாத கையரை நீயென்றும் வாழ்த்தி யிரந்துழலும்

ஈயாத கையரை யந்தமி யேற்கிட லேனிரங்காய்

ஈயாத கையரை யர்ச்சீற் றனந்தை யிடந்துயிலர்

ஈயாத கையரைப் பான்கரத் தான்மலை யேந்தினனே.

(58)

ஏந்தலை யாழி தனைநீத் தனந்தை யிடந்துயிலும்

ஏந்தலை யாழியங் கையிற்சங் காழி யெடுத்தபிரான்

ஏந்தலை யாழின னாகச்செய் தானெட் டெழுத்தைநம்பின்

ஏந்தலை யாழிறிச் றாண்மலர் சூட்டுவ தென்றுகொலோ.

(59)

என்றுய ரஞ்சனம் போலக் கறுக்கச்செய் தியாவுநின்ன

என்றுய ரஞ்சகப் பாண்டவர்க் காத்த விறைக்குநம்பும்

என்றுய ரஞ்சச் செயலரி தோசெய் திடாதவிதம்

என்றுய ரஞ்சல்பெற் றார்க்கு மனந்தை யிடத்தினரே.

(60)

இடங்கரை யாட்டல் வேழம் புரந்தமை யெண்ணுமன்பின்

இடங்கரை யட்ட மகாசித்த யோகரொ டென்னைவைப்பாய்

இடங்கரை யட்ட புவியா யனந்தைக் கிறைவவுடல்

இடங்கரை யட்டழு வுஞ்சிவன் போற்று மிசையினனே.

(61)

இசையினங் கோடிரித் தாள்வாயென் றேத்துறு மெம்மைமிடி

இசையினங் கோடிக் கயங்காத்த துண்மைகொ லியாவருஞ்சொல்

இசையினங் கோடி யுடையா யனந்தைக் கினியவின்னே

இசையினங் கோடிய புன்னெறி யோர்வசை யேற்றிடலே.

(62)

ஏற்றந் தருக வெனவேத்து மென்றற் கிரங்குகிலாய்

ஏற்றந் தருகச் செகுத்தண்டர்க் காத்தன்மெ யென்பர்கொல்லோ

ஏற்றந் தருகக்க நின்றா யனந்தை யிடத்திலென்னை

ஏற்றந் தருகண்டு நாணுறு மாட லினிதுசெய்யே.

(63)

இனியனந் தார்வத் தடியார்க் கெளிய னெழிலனந்தை

இனியனந் தாழிக் கரத்தா னுலகத் தெவர்க்குமென்றும்

இனியனந் தாமரை யாள்கேள்வன் றஞ்ச மெனநம்பினேம்

இனியனந் தாங்கயன் கைதரு மியாக்கை யெமக்கில்லையோ.

(64)

எமனஞ் சுறவக் கடல்சூ ழனந்தைக் கிறையவனை

எமனஞ் சுறச்செகுத் தாற்கெளி யானைமிக் கெண்ணல்வெள்ளை

எமனஞ் சுறழ்சினந் தீர்ந்தரு ளெய்தமற் றிவ்வுலகில்

எமனஞ் சுறவொழித் தப்பே றளிப்பவ னெங்குமின்றே.

(65)

இன்றா தரித்திர ளார்மல ராளைக்கொண் டெங்களைநீ

இன்றா தரித்தி சகங்காக்கு முன்ற னிதயத்தருள்

இன்றா தரித்திரந் தாங்கவல் லேமல்ல மீடில்கலி

இன்றா தரித்திளை யார்வா ழனந்தைக் கிறையவனே.

(66)

இறையள வாயினு மெய்யன்பில் பாவி யெனநினைத்தோ

இறையள வாரித் துரும்பாகச் செய்தன னீனமுற்றும்

இறையள வாமுரத் தம்மா னனந்தை யிடமகலா

இறையள வானந்த நல்குபல் பாட லியம்பியுமே.

(67)

இயம்புங் கவியையன் னார்பலர் கேட்டுமிக் கின்புறநான்

இயம்புங் கவிகளி லொன்றுநின் றாண்மலர்க் கேற்றதன்றோ

இயம்புங் கவிற்படை குன்றா வனந்தை யிடத்தையவாழ்

இயம்புங் கவியப் பொருதாய்மெய்த் தொண்டர்க் கெளியவனே.

(68)

அவமான மற்றகி லத்திலெந் நாளு மலைந்துழைக்கு

அவமான மற்றவ ரெல்லா மதிக்குநல் லாக்கநல்காய்

அவமான மற்றணந் தோர்சிலை கோலி யனந்தையின்மேய்

அவமான மற்றடந் தோண்முகி லேயொத் தமர்தெய்வமே.

(69)

அமர திவாகர னேகரிற் சீர்பெற் றனந்தையில்வாழ்

அமர திவாகர வண்டரைத்  தாக்கு மவுணரஞ்சும்

அமர திவாகரந் தன்பனைக் காத்த வருளவென்னுள்

அமர திவாகர ரந்தையெல் லாங்கெடற் காசித்ததே.

(70)

ஆசி யணிவரைத் துன்பஞ்செய் பாவி யறையுமிந்த

ஆசி யணியத் துணிந்தினி தாண்டு னருளுநல்க

ஆசி யணியற் றுழாயுடை யாய்தென் னனந்தையெந்தாய்

ஆசி யணிய குழல்சூடும் பூவு மணிந்தனையே.

(71)

அணியனந் தன்றலை யாதனத் தான்றென் னனந்தைநகர்

அணியனந் தன்றலை யாதனத் தான்ற வமலனம்பொன்

அணியனந் தன்றலை யாதனத் தான்மகி ழண்ணல்வெள்ளை

அணியனந் தன்றலை யாதனத் தான்மெய் யறிந்தனமே.

(72)

அறியலங் காதிபற் செற்றா யனந்தை யதிகமையல்

அறியலங் காயிரஞ் சொன்னாற் கெளிய வருமறையின்

அறியலங் கார நிறத்துநின் சேய்முன் னமைத்தவென

அறியலங் காத்தரு ளெந்நாளு மியாமு னடைக்கலமே.

(73)

அடையிட மாந்துயி னீத்திட் டனந்தை யரவணையில்

அடையிட மார்பத்து மாதவ னேயிக லாருரஞ்சல்

அடையிட மார்கனை மிக்குடை யாயென்னை யாண்டடியில்

அடையிட மாதுடை யான்முத லோர்வியப் பாகிடவே.

(74)

ஆகாரங் கொண்டலொப் பாவான்றண் முல்லை யளைதிருடி

ஆகாரங் கொண்ட பெருமா ளனந்தை யதிபனன்பில்

ஆகாரங் கொண்டகை மண்டபஞ் சேர்கல ரம்புவியின்

ஆகாரங் கொண்டநெற் றின்பணம் போலுமென் றாய்கலரே.

(75)

ஆயமின் னாரைய மீயநொந் தேமுன தன்பர்மொழி

ஆயமின் னாரையல் சேர்வதென் றோர்கில மார்வநல்காய்

ஆயமின் னாரை யடங்கக்கொண் டாயண்ட ராதியர்தம்

ஆமாயமின் னாரை யனந்தா புரிக்கொ ரழகியனே.

(76)

அழலன்ன மங்கை யமராகத் தாதி யனந்தைப்பிரான்

அழலன்ன மங்கைய ராதாடை நல்கின னாண்டுகொண்டால்

அழலன்ன மங்கைய தாமலர்த் தாள்சிர மாருமிழி

அழலன்ன மங்கைய மற்றோர்க்குந் தீர்த்திங்  கவிர்வனன்றே.

(77)

அவியாகத் தந்தம்மை நல்கினர் தாமு மறியவந்நாள்

அவியாகத் தந்தரங் கங்கொதித் தேசு மவன்றனையும்

அவியாகத் தந்தண் பதத்தில்வைத் தாயனந் தாபுரிமேய்

அவியாகத் தந்தப் பசுவினம் போலெம்மை யாதரியே.

(78)

ஆதரிப் பானை பெறச்செய்த தன்றியங் கவ்விடையன்

ஆதரிப் பானைக்கு நல்கென்ற வாறு மருளினைபல்

ஆதரிப் பானையந் தீர்சொற் சொலாதென்னை யாண்டுகொள்வாய்

ஆதரிப் பானையன் னார்போற் றனந்தை யதிபதியே.

(79)

அதிகவித் தாரணி மாதல றாம லருமறைநிய்

அதிகவித் தாரப்புரக் கின்ற நாளென்னை யாக்கிலையென்

அதிகவித் தாரணி கின்றாயென் றாள்வை யணியனந்தை

அதிகவித் தாரக னாலிலங் கேசனை யட்டவனே.

(80)

அட்டாக் கரத்தைய லொன்றைநம் பாரை யடையகில்லேன்

அட்டாக் கரத்தைய கண்ணாரை நாடி யகமெலிந்தேன்

அட்டாக் கரத்தை யயில்வார்க்கஞ் சாதுய ரார்வநல்கம்

அட்டாக் கரத்தை யமராகத் தாய்தென் னனந்தையனே.

(81)

அனந்தனந் தந்தவ ராரேனும் போற்று மகத்திலழி

அனந்தனந் தந்தமன் னார்க்கேங்க லென்கொ லருள்புரியாய்

அனந்தனந் தந்தனிற் பொய்த்துயில் காட்டி யனந்தையுற்றாய்

அனந்தனந் தந்தனப் பாட்டளிப் பூக்கொ ளயன்றந்தையே.

(82)

அயனத்த னாதிரை யாற்கெளி யானெண் ணரியபல

அயனத்த னாதி யனந்தைப் பிரான்முற் றறிதுயிலான்

அயனத்த னாதில்செஞ் சக்கரத் தான்பொன் னடித்துணையை

அயனத்த னாதிக்கம் பார்க்கும்விண் ணூர்க்கு மளிக்கினுமே.

(83)

அளிக்கையி லங்கம்பன் றன்னைத்தந் தான்பொரு ளாகமுயிர்

அளிக்கையி லங்கவிக் குங்களிப் பான்றென் னனந்தைப்பிரான்

அளிக்கையி லங்கறை மார்பில்வைத் தானுல கத்தனையும்

அளிக்கையி லங்கச் சமயங்கள் கோடியுண் டாயினவே.

(84)

ஆயங் கடந்த பெரியோர்க ளேயறி யச்சுதனை

ஆயங் கடந்தங் கருத்தாற் கருது மழகனைத்தாய்

ஆயங் கடந்தங்கி னானை யனந்தை யரசைநெஞ்சால்

ஆயங் கடந்தக் களத்தானில் வாழ்க்கைக் கவாவினமே.

(85)

வாவிக் கமல மலர்ச்சீ ரனந்தையின் மாயனைய

வாவிக் கமல மிறைத்துத் துழாய்சிந்தி வாழ்த்துகில்லேன்

வாவிக் கமலங் கடப்பது நாடி வருந்தினன்றவ்

வாவிக் கமலனைங் கோல்சிந்தி நாளு மருட்டினனே.

(86)

மருவல ரானிய மப்படி போற்றி வணங்குமென்னை

மருவல ரானி நினைத்தேங்கச் செய்யும் வழக்கென்கொலோ

மருவல ரானிவ னென்ன விடேலுண்மை வாழ்வுடைக்கா

மருவல ரானிழற் பாலேத் தனந்தையின் மாதவனே.

(87)

மாதவ ராகவ நாரா யணாவென வாழ்த்தியுய்ந்த

மாதவ ராகவர் தம்மோடு சேர்த்தென்னை வைப்பதென்றோ

மாதவ ராக வசத்தெய்த்து ளேனிகன் மாற்றுபிர

மாதவ ராக வனந்தா புரியில் வளர்கண்ணனே.

(88)

வளத்த வனகமுந் தண்டுள வும்புனை மார்பனற்ற

வளத்த வனகவ வராகமு மானவன் மாதர்முலை

வளத்த வனகம் பொருதோண் முராரி மதிளனந்தை

வளத்த வனக மலர்மீதெந் நாளும் வருவதுண்டே.

(89)

வருத்த மதிக்ககில் லாதார் மனைமுன்றில் வாய்நடந்த

வருத்த மதிசை யுறக்காண வேண்டென்னை வாழ்விதகு

வருத்த மதிலிளை யாதபஞ் சாயுத வாகநல்ல

வருத்த மதிப்புல வோர்வா ழனந்தை மணிவண்ணனே.

(90)

மணிவண்ண மேகன துன்புற் றிடாமலென் வன்மனத்தின்

மணிவண்ண மேக மெனவீற் றிருந்தொர் வரமருள்வாய்

மணிவண்ண மேகலை யாரா டனந்தையின் மன்னுமெந்தாய்

மணிவண்ண மேகணி நாப்புல வோர்பகர் வந்தனனே.

(91)

வந்தசந் தோடலொல் குஞ்சிறை யார்பட்சி மன்முதுகில்

வந்தசந் தோட மறைதனன் றோவருண் மாசறச்சி

வந்தசந் தோடவிழ் பூவுந்தி யாய்குந்தி மைந்தர்தம்ப

வசந்தசந் தோடணைந் தாயனந் தாபுரி மாயவனே.

(92)

மாயக்கண் ணாரியர் மோகாந்த கார வலையிற்பட்டு

மாயக்கண் ணாரிசை யாதென்னை யாண்டருண் மாணனந்தை

மாயக்கண் ணாரிபு நாசவுல் லாச மனத்துடனெம்

மாயக்கண் ணாரின்ப மோவாய் மவுன மகாரத்தனே.

(93)

மகரா லயப்பள்ளி நீத்தனந் தாபுரி வந்தவதன்

மகரா லயப்பள்ளி யாற்கினி யாய்செஞ்சொல் வாணர்தஞ்சே

மகரா லயப்பள்ளி னாற்றடுத் தான்கண் மறைத்தவநின்

மகரா லயப்பள் ளிரியத்தந் தாய்முற்று மாற்றுதியே.

(94)

மாற்றம் பகர வனியென்னு மேடணை வாதனைக்கும்

மாற்றம் பகரணச் சீர்குலைந் தேனின்று வாழ்வியவை

மாற்றம் பகரங்க நேரனந் தாபுரி வாசவன்றோர்

மாற்றம் பகரக் கனவூடவ் வாறு வரலெண்ணியே.

(95)

வரந்தந்த வாரண மொன்றளித் தொன்றை வதைத்தவதே

வரந்தந்த வாழ்வி லுறத்தா னவர்ச்செறும் வாகநல்ல

வரந்தந்த வாக்கத் தனந்தா புரிப்புங்க வாவெனக்கு

வரந்தந்த வாறு நடவா திருப்பது வம்பில்வம்பே.

(96)

வம்பரை யாசித்து வாடாம லுன்னை வழுத்துமெய்த்த

வம்பரை யாசித் துதவா யனந்தையின் வண்டுளவ

வம்பரை யாசித்து முற்றறி மாய மலையளித்த

வம்பரை யாசித்து ளாற்கொரு பாதி வகுத்தவனே.

(97)

வகுத்தவை யத்தொகைக் கெல்லா முயர்ந்தொளிர் வைகுந்தத்தே

வகுத்தவை யங்குகண் ணாரா டனந்தையில் வாழ்கரிய

வகுத்தவை யஞ்சு மலர்மாது கேள்வநின் மைந்தனந்நாள்

வகுத்தவை யன்றி யடியேன் விரும்பு வனவுநல்கே.

(98)

வனச மலருந் திருமார்பத் தானயன் வைகுமெழில்

வனச மலருந்தி யானனந் தாபுரி மன்னுபுங்க

வனச மலருந் திடாதரு ளார்குலம் வாழச்செய்கு

வனச மலருந்தி நீங்கிக் கமழு மறைக்கணமே.

(99)

மறையாம லேற்றம் பொலியனந் தாபுரி வள்ளலைமான்

மறையாம லேறுவென் றாயென வேத்தி வணங்குநர்க்கு

மறையாம லேசி லொளியாகுந் தீதொன்றும் வந்தணுகா

மறையாம லேயென்று முன்னின்று காக்கு மலர்த்திருவே.

(100)

முற்றிற்று.

அனந்தை யமகவந் தாதிவர் பூவொத் தகமலரும்

அனந்தை யமகவந் தாதின முற்று மறுமருளாள்

அனந்தை யமகவந் தாதியும் போற்றட லாழிப்பிரான்

அனந்தை யமகவந் தாதிநன் கோதி யறிபவர்க்கே.

ஆழ்வார் திருவடிகளே சரணம்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக