புதன், 23 செப்டம்பர், 2026

கைந்நோய் தீர்த்த பதிகம் - வண்ணச்சரபர்

 

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த 

கைந்நோய் தீர்த்த பதிகம்

காப்பு

நேரிசை வெண்பா

மெய்ந்நோவெல் லாந்தவிர வேண்டித் தவம்புரிவேன்

கைந்நோ வொழியக் கருணைசெய்வா – யெந்நோவு

மெவ்வின் பமும்படைத்த வீடிலருட் பூரணமே

வௌவியவா றாடல்புரி வாய்.

பதிகம்

(கொச்சகக் கலிப்பா)

அதிகவிதச் சமையங்க ளத்தனைக்கு மாதரமாய்

விதியுரைத்த நான்மறையின் மெய்ப்பொருளா மிளிர்தேவே

பதிதர்களு மேலான பக்குவரு மிகழரிய

கதிரவனைக் கும்பிடுமென் கைந்நோய்தீர்த் தருள்வாயே.

(1)

விண்ணுலகில் வாழ்வோரும் வேலையே ழுடுத்திலகும்

மண்ணுலகத் துள்ளாரும் வாழ்த்தெடுக்கும் வண்பரமே

பெண்ணுறையும் பாகனெனப் பெரியமால் விடையூருங்

கண்ணுதலைக் கும்பிடுமென் கைந்நோய்தீர்த் தருள்வாயே.

(2)

கெவுரவ வீனர்களாகிக் கேடுபட்டுக் கிடப்பார்க்கும்

மவுனசுகா தீதநிலை வருத்திடவும் வல்லவொன்றே

பவுரணைச் சந்திரனாணும் பதுமமல ரனையமுக்க

கவுரியினைக் கும்பிடுமென் கைந்நோய்தீர்த் தருள்வாயே.

(3)

பெரியோர்தம் பாதமலர்ப் பிரசமணி தலையார்க்கு

விரியோதப் புவியினிலும் வேண்டியபே றருண்மெய்யே

யெரியோடொத் தெழுந்தசினத் திரணியனை யீடழித்த

கரியோனைக் கும்பிடுமென் கைந்நோய்தீர்த் தருள்வாயே.

(4)

மெய்யாய நிலைநின்று மேனிதியுய்ந் திடநாடு

மொய்யாரப் பெருந்தவர்த முளத்திலொளிர் தருமொன்றே

மையார்கட் சித்திபுத்தி வலவையொடு மகிழைந்து

கையானைக் கும்பிடுமென் கைந்நோய்தீர்த் தருள்வாயே.

(5)

ஆவல்கொடி தாமென்றென் றருந்தவர்சொல் லிடக்கேட்டு

பூலலய முய்வதெண்ணும் புனிதரணி பூண்போல்வாய்

சேவலங்கே தனமேந்திச் சிகியேறித் திகழுமலைக்

காவலனைக் கும்பிடுமென் கைந்நோய்தீர்த் தருள்வாயே.

(6)

கழகநா வலர்தாமுங் காணரிய பொருள்கண்டுன்

குழவியெனும் புகழ்பூண்பார் கொள்கையிற்றோய் கோமானே

பழவினைவல் வழக்கறுக்கும் பண்புடைப்பற் பலர்குரவா

கழல்களையுங் கும்பிடுமென் கைந்நோய்தீர்த் தருள்வாயே.

(7)

மீதலத்து வாழ்வினையும் வேண்டாராய் மிக்கபுகழ்

பூதலத்துற் றரியகதி புகுவார்சூழ் புண்ணியனே

சீதளசிந் தையராகித் தெய்வமுள தெனத்தேறிக்

காதலித்துக் கும்பிடுமென் கைந்நோய்தீர்த் தருள்வாயே.

(8)

மற்றாரு முணர்வரிய மாயோக சாதனையி

லுற்றார்க்கு மெஞ்ஞான முதவியரு ளொருகோவே

பெற்றாரும் பிறந்தாரும் பிறவுயிருஞ் சமமென்னக்

கற்றாரைக் கும்பிடுமென் கைந்நோய்தீர்த் தருள்வாயே.

(9)

ஆரணனு நாரணனு மரன்முதலாம் பலதேவு

மோரருமைப் பரமேயென் றுணர்வாரு ளுறுமொன்றே

கோரகுணத் தினரேனுங் குருவுரைத்த நெறிசெலுண்மைக்

காரரெனிற் கும்பிடுமென் கைந்நோய்தீர்த் தருள்வாயே.

(10)

அற்புநிலை யுணராம லனந்தநூல் களின்மயங்கி

மற்புரியும் பாவலவர் மதிக்கரிதா மாமணியே

பொற்புமுத லியகருதிப் புலராமெய்ந் நிலையாய

கற்புடையார்க் கும்பிடுமென் கைந்நோய்தீர்த் தருள்வாயே.

(11)

நாடியவா றுருக்கொண்டு நலம்விளைக்கு நாயகன்பாற்

பீடிலங்கு மாமாத்தூர்ப் பெருந்தவநேர் திருப்புகழோன்

காடியன்மால் புகழ்வேட்ட கைந்நோய்தீர்த் தருளென்று

பாடியபாட் டிவைகற்போர் பலசுகமும் பெறுவாரே.

(12)

முற்றிற்று.

 

 

 

                       

           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக