புதன், 23 செப்டம்பர், 2026

திருச்செங்காட்டங்குடி சிவன் பதிகம் - வண்ணச்சரபர்

 

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச்செய்த

திருச்செங்காட்டங்குடி சிவன் பதிகம்

காப்பு

(நேரிசை வெண்பா)

இன்றுபுக லூரானி மையாரு மெச்சும்வியப்

பொன்றுசெய்தா லன்றி யொருகோயிற் – சென்றுதுதி

பாடல்செய்யேன் செங்காட்டூர் பண்ணவனென் பாமாலை

நாடலீங் குற்றுரைப்பே னான்.

 

பதிகம்

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

பொன்னைப் புகலூ ரானிந்நாள்

            போதகத் தரினே புகல்வேன்காண்

மன்னைப் போலு மவர்பாலும்

            வாய்விட் டிரக்க மாட்டேன்மெய்

தென்னைப் பொழிலா லெழிலோங்குந்

            திருச்செங் காட்டங் குடியானே.

(1)

புகலூர்க் கடியேன் பகர்பாடற்

            பொலிவார் சுவடி கொடுபோநீ

யிகலோர் செயல்கண் டுள்ளகநேர்

            மெனையேன் வருவிக் கின்றில்லா

யகனமே தினியிற் கலியாலியான்

            பாடவுற் றுழல்கை யறியாயோ

சிகரா சலவிற் கொளவல்லாய்

            திருச்செங் காட்டங் குடியானே.

(2)

பாடா விரதங் கொள்வேனைப்

            பதறிப் பாடும் படிசெயுநீ

பீடார் கருணை செயலென்றாற்

            பெரியோ னாக்கற் கிசையாயே

வேடார் மலரிற் கடையமென்றியன்

            மாலை யையெள் ளிடலாமோ

தேடா ருணர்தற் கருமையதாய்

            திருச்செங் காட்டங் குடியானே.

(3)

மரைமா னயமா தியகொன்றூன்

            வாஞ்சித் துண்ணு மடமாந்தர்

புரைதீர் நினமேற் பழிகூறும்

            பொல்லாங் கெந்நாள் போக்குவையோ

பரையோ டொருசே யருறுநீ

            பாலர் சொல்லும் பழிமெய்யோ

திரைநீர் மன்னுஞ் சடைநம்பா

            திருச்செங் காட்டங் குடியானே.

(4)

உலகைப் பொருளென் றெண்ணாதோ

            ரோடே துணையென் றேகிடுநா

னிலகற் புதமார் நின்னிசையே

            யேத்திக் கருத யெண்ணிலையோ

பலகற் பனைதே டியபுலவோர்

            பண்புற் றடியேன் கெடலாமோ

திலகத் திருவா ணுதல்பங்கர்

            திருச்செங் காட்டங் குடியானே.

(5)

ஆசா பாசங் கொடிதேயென்

            றறிவிட் டுலகத் தலைவேனை

மாசார் கிரக வாதனையு

            மதவா தனையுந் தொடவிட்டாய்

பேசா ஞானத் தொடுசித்தும்

            பெறநல் கிடினே பிழையெய்தேன்

றேசார் மழுமான் விரதோளர்

திருச்செங் காட்டங் குடியானே.

(6)

பத்தன் மகவைக் கொல்வான்போற்

            பாசாங் கதுசெய் ததனாலே

சுத்தத் தகையெய் திலர்பல்லோர்

            சொல்லும் பழியுந் தோய்கின்றாய்

நித்தத் துவனீ யென்றோர்ந்தே

            நினைவேற் கோனோ  வருள்செய்யாய்

சித்தர்க் கொருபோர் சானாய

            திருச்செங் காட்டங் குடியானே.

(7)

ஒன்னார் குலவே ரதுகெல்வா

            னொருவன் பெறவா ளியுமீந்தாய்

நன்னா கரிக்கப் பசுவாழ்வா

            னாடுந் தமியேற் கருளாயோ

கொன்னார் கொன்றைச் சடையானே

            குளிர்மென் மலராத் தியினாறாந்

தென்னா வெனவண் டிசைபாடுந்

            திருச்செங் காட்டங் குடியானே.

(8)

இருநன் மகர்பெற் றுளநீயன்

            றேழைத் தொண்ட னொருவன்பா

லருமைப் புதல்வற் கொல்லென்றா

            யவ்வா றிணியா டுதல்வேண்டல்

கருணைத் திறமென் னிடமின்றோர்

            கடுகத் தனைசெய் திசைதோய்வாய்

தெருளோர் பலருந் துதிசெய்யுந்

            திருச்செங் காட்டங் குடியானே.

(9)

சைவத் தலைவ ரொருநால்வர்

            தமையாண் டதுசத் தியமானான்

மெய்வரத் தனைசற் றானாலு

            மிளிரச் செய்தென் வினைதீர்ப்பாய்

பொய்வக் கணையுஞ் சிலர்பானமுன்

            புரியும் பெருமைப் புனிதர்மெய்த்

தெய்வத் தலைமைப் பொருளானாய்

            திருச்செங் காட்டங் குடியானே.

(10)

குரவோ ரிருவர்க் கருள்செய்தோன்

            குலவும் புகலூ ரிடைவந்து

பரவே னினிநீ யருளிந்நாள்

            பாலித் திலையே லெனவேற்கு

முரவோன் முழுநீ றணிதொண்ட

னொளிர்செங் காட்டங் குடியான்செய்

கரவோர்ந் துரைசெய் பதிகமிது

கற்பார்க் கெய்துங் கருதியதே.

           

முற்றிற்று. தெய்வமே துணை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக