புதன், 23 செப்டம்பர், 2026

நெடும்பாக்கச் சிவபிரான் பதிகம் உரையுடன் - வண்ணச்சரபர்

 

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த 

நெடும்பாக்கச் சிவபிரான் பதிகம் உரையுடன்

காப்பு

(நேரிசை வெண்பா)

நீடும் புகழ்சேர் நெடும்பாக்கத் துள்ளான்மேற்

பாடுந் தமிழ்ப்பாடல் பத்துக்குங் – கோடுகொண்டு

பாரதத்தை வெற்பிற் பதித்தோனும் பன்னிருகை

மாரதனுங் காவல்புரி வார்.

கருத்துரை : நாளும் வளர்கின்ற கீர்த்தியை உடைய நெட்டப்பாக்கத்தில் திருக்கோயில் கொண்டு விளங்கும் சிவபெருமானைப் போற்றிப் பாடப்படும் பத்துச் செய்யுள்களால் ஆன இந்தப் பதிகத்தைத் தன் தந்தத்தையே எழுத்தாணியாகக் கொண்டு முன் காலத்தில் மகாபாரதத்தை மேரு மலையில் எழுதிய விநாயகப் பெருமானும், பன்னிரண்டு திருக்கரங்களை உடைய மாவீரனாம் முருகப்பெருமானும் காப்புக் கடவுளர்களாய் அமர்ந்து காத்தருளுவார்கள்.

பதிகம்

(கொச்சகக் கலிப்பா)

வேலணையுங் கண்ணுடைய மெல்லிநல்லா ளருகிருக்கப்

பாலனைய விடைமீதிற் பவனிவரப் பாரேனோ

சூலமழு மானிலங்குந் தோளுடைய சுந்தரனே

நீலமலர்த் தடஞ்சூழு நெடும்பாக்கத் துறைவோனே.

கருத்துரை : முத்தலைவேல், மழுப்படை, கலைமான் ஆகியன திகழ்கின்ற திருக்கைகளை உடைய அழகரே. குவளை மலர்கள் நிறைந்த குளங்களால் சூழப்பட்ட நெட்டப்பாக்கத்துள் எழுந்தருளியுள்ள சிவபெருமானே. ஈட்டியைப் போன்ற கூர் மிக்க விழிகளைப் பெற்ற பெண்ணில் நல்லாளாகிய உமாதேவியார் இடப்பாகத்தே விளங்கும் வண்ணம் பால்போன்று வெளுத்துள்ள எருதின்மேல் தேவரீர் உலா வருவதைத் தரிசித்துப் புகழ்ந்து போற்றும் பேற்றை அடியேன் பெறுவேனோ? பெறுமாறு அருள்புரிக.

(1)

இகத்தினிலு பரத்தினிலு மெல்லோரு மெடுத்தோத

வகத்தியனுக் களித்தபுக ழடியனேற் குதவாயோ

மகத்திடத்திற் றக்கனது வயிரமுடி யறுத்திட்டாய்

நிகழ்த்தருஞ்சீர்ப் பொழில்வாய்ந்த நெடும்பாக்கத் துறைவோனே.

கருத்துரை : தன்னை மதிக்காமல் தீவேள்வி செய்த தட்சப் பிரசாபதியின் மணிமுடியை அணிந்த தலையை வீரபத்திரராகத் தோன்றி அழித்தவரே. சொற்களால் உணர்த்த முடியாதபடி வளமும்  அழகும் நிறைந்த சோலைகளால் சூழப்பெற்ற நெட்டப்பாக்கத்துள் எழுந்தருளியுள்ள சிவபெருமானே.  இம்மை மறுமை ஆகிய இரு நிலைகளிலும் மக்கள், தேவர் முதலிய அனைவரும் சிறப்பாக விரித்துக் கூறும்படியாக அகத்திய மாமுனிவருக்குத் தேவரீர் வழங்கிய பெருங்கீர்த்தியைத் தொண்டனாகிய எளியேனுக்கும் அருளமாட்டீரோ?

(2)

சீரூருந் தமிழ்த்துதிபோற் சிறந்தபணி யில்லையென்றன்

றாரூரன் செவிகுளர வறைந்ததனை மறந்தனையோ

தேரூர்ந்து சிலையேந்திச் சிரித்தெயின்மூன் றெரித்தோனே

நீரூரு பழனமிகு நெடும்பாக்கத் துறைவோனே.

கருத்துரை : நில உலகையே இரதமாகச் செலுத்திக் கொண்டு மலை ஆகிய வில்லைத் தாங்கினவனாகப் பகைவர்களின் முப்புரங்களையும் ஒரு புன்சிரிப்பு மாத்திரத்தால் சுட்டெரித்தவனே. நீர் வளம் மிக்க வ யல்கள் மிகுந்த நெட்டப்பாக்கத்துள் எழுந்தருளியுள்ள சிவபெருமானே. தேவரீர் முன்னாளில் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் உள்ளம் குளிரும்படி “நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பில் மிக்க அர்ச்சனை பாட்டே ஆகும்; ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக” (பெரிய புராண வாக்கு) என்று உரைத்தருளிய உண்மையை மறந்துபோய் விட்டீரோ? அடியேனின் தமிழ்ப் பாடல்களை ஏற்றுக்கொண்டு விரைவில் அருள்புரியாதது ஏன்?

(3)

வேரிமலர்க் கொன்றையணி வேணியனே யெனக்கூவு

நாரிசைந்த பேறுபெற்று நானிலத்திற் றளர்வேனோ

காரிணங்கும் பொழிலிடத்துக் கலபமயிற் குலநாண

நேரிழையார் நடமாடு நெடும்பாக்கத் துறைவோனே.

கருத்துரை : மேகங்கள் பொருந்தும்படி உயர்ந்த மரங்களால் நிறைந்த சோலைகளினிடத்தே தோகைகளால் அழகு பெற்ற மயிற் கூட்டங்களும் பார்த்து வெட்கமடையும்படித் தமக்குப் பொருத்தமான அணிகலன்களைத் தேர்ந்தெடுத்து அணிந்து கொண்டுள்ள அழகிய மகளிர் நாட்டியம் ஆடுகின்ற நெட்டப்பாக்கத்தினுள் எழுந்தருளியுள்ள சிவபெருமானே.  நறுமணம் மிக்க கடுக்கை மலர்களின் அழகினைப் பெற்ற சடைமுடியை உடைய இறைவனே என அழைத்துப் போற்றுகின்ற பத்தியாகிய நற்பேற்றைப் பெற்றுள்ளவனாகிய அடியேன் இந்த உலகத்தில் கலக்கம் உற்று மெரியலாமா? தளர்வை அகற்றி ஆட்கொள்ள வேண்டும்.

(4)

கொல்வதற்குள் ளஞ்சாதார் குலமறுத்துக் களிகூரும்

வல்வழக்க னொருவனிங்கு வரநாடித் தவிக்கின்றேன்

செல்வமக ளுறுமார்பன் றிருவிழிகொண் டருள்செய்தாய்

நெல்வயலிற் கமலமலர் நெடும்பாக்கத் துறைவோனே.

கருத்துரை : திருமகளைத் தன் மார்பிடத்தே ஏற்றுள்ள திருமால், ஒரு காலத்தில் தன் கண்ணைப் பறித்துத் தாமரை மலராகப் பூசிக்க, அதனை ஏற்றுக் கொண்டு, அவருக்குச் சுதரிசனம் என்னும் ஆழியை வழங்கியவரே.  தாமரைப் பூக்கள் மலர்ந்துள்ள நெல்வளர்கள் நிறைந்த நெட்டப்பாக்கத்துள் எழுந்தருளியுள்ள சிவபெருமானே.  தன் உணவிற்காகப் பிற உயிர்களைக் கொலை செய்யச் சற்றும் தயங்காதவர்களின் கூட்டத்தை முற்றிலுமாக இல்லாமற் செய்து அதனால் உள்ளம் மகிழும் வலிமை மிக்க ஒருவன் இவ்வுலகில் தோன்ற வேண்டும் என விரும்பிப் பேராவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  உலகில் கொலை புலையை ஒழிக்க வேண்டும் என்பது வேண்டுகோள்.

(5)

தாண்டவநீ யாடியநாள் சதுமுகன்கைத் தாளமதோ

தூண்டகுதோண் முரகரிதன் றோற்பறையோ நலஞ்சொல்லாய்

வேண்டலெல்லாந் தரவல்லாய் வெண்டலையோட் டிரந்துண்டாய்

நீண்டசடைக் காடுடையாய் நெடும்பாக்கத் துறைவோனே.

கருத்துரை : அடியார்கள் விரும்பும் நலன்கள் அனைத்தையும் கொடுத்தருளும் வள்ளலே.  பிரமனின் மண்டையோட்டில் பிச்சை ஏற்றுச் சாப்பிட்டவரே.  மேலே நீண்டுள்ள சடாபாரத்தைப் பெற்றிருப்பவரே.  நெட்டப்பாக்கத்துள் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே.  தேவரீர் ஆனந்த நடனம் புரிந்தபோது நான்முகன் போட்ட கைத்தாளம், திருமால் வாசித்த மத்தளம் ஆகிய இரண்டில் எது உம் ஆட்டத்திற்கு ஏற்புடையதாக அமைந்தது? 

பிரமன், திருமால் ஆகிய இருவரும் போற்றச் சிவபெருமான் திருக்கூத்தியற்றுகிறார் என்பது கருத்து.

(6)

அறிவிழந்த பேதையர்போ லடியனேன் றளராமற்

பொறியிருந்த மார்புடையான் போன்மகிழப் புரிவாயோ

குறிகடந்த சிற்பரனே குன்றிரண்டிற் குடிகொண்டாய்

நெறியுணர்ந்தோர் பலர்வாழு நெடும்பாக்கத் துறைவோனே.

கருத்துரை : ஓர் அடையாளம் இட்டுக் குறிப்பிட முடியாதபடியும் உலகியல் அறிவால் அறிய முடியாதபடியும் அனைத்தையும் கடந்து நிற்கும் கடவுளே.  பொன்மலை, வெள்ளிமலை ஆகிய இரண்டையும் கோயிலாகக் கொண்டவரே.  நல்ல வாழ்க்கை முறையைத் தெரிந்து கடைப்பிடிக்கும் சான்றோர்கள் ஏராளமாக வாழ்கின்ற நெட்டப்பாக்கத்துள் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே.  நல்லறிவற்ற மூடர்களைப் போல எளியேன் கலக்கமுறாமல், திருமகள் குடிகொண்ட மார்பினை உடைய திருமாலைப் போன்று, எல்லா விதத்திலும் களிப்புடன் இருக்குமாறு அருள்வீர்களா? அருள வேண்டும் என்பது அவா.

(7)

பன்றிபின்னோர் வேடுவனாப் பார்த்தனுக்கன் றருள்செய்தா

யென்றியம்பு மொழிகேட்டின் றியானுமுனை யிறைஞ்சுற்றேன்

பொன்றிகழ்பூங் கொன்றைமதி புனைவோனே யெனப்போற்றி

நின்றிரப்பார் குறைதீர்ப்பாய் நெடும்பாக்கத் துறைவோனே.

கருத்துரை : தங்கம் போன்ற கொன்றை மலர்களையும், பிறைச் சந்திரனையும் அணிந்திருப்பவரே எனப் புகழ்ந்து எதிரில் நின்று வேண்டுபவர்களின் எல்லாக் குறைகளையும் போக்குபவரே.  நெட்டப்பாக்கத்துள் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே.  பன்னியின் வடிவத்தில் இருந்த மூகாசுரனை அழிப்பதாகிய சாக்கில், தவம் புரிந்து கொண்டிருந்த அருச்சுனனோடு போர்புரிந்து அவனுக்குப் பாசுபதக் கணையை வழங்கினீர்கள் என உலகத்தார் உரைக்கும் மொழிகளை நம்பி அடியேனும் இப்பொழுது தேவரீர்பால் பிரார்த்திருக்கின்றேன்.  எளியேனுக்கும் அப்படியே அருள்புரிய வேண்டும் என்பது கருத்து.

(8)

குஞ்சரமா முகன்போலுங் குகன்போலு மகவாகி

வஞ்சருரங் கிழித்தாட வாஞ்சையுற்ற துண்மைகண்டாய்

வெஞ்சமன்ற னுயிர்கொன்றாய் வெண்ணீறு மிகப்புனைந்தார்

நெஞ்சகந்தோ றமர்வுற்றாய் நெடும்பாக்கத் துறைவோனே.

கருத்துரை : இயமனை மாய்த்தவரே. திருநீற்றை மிகுதியாக அணிந்து கொள்ளும் அடியார்களின் உள்ளங்களில் எல்லாம் எப்போதும் வீற்றிருப்பவரே.  நெட்டப்பாக்கத்துள் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே.  யானைமுகன், ஆறுமுகன் ஆகிய தங்கள் திருக்குமாரர்களைப் போல அடியேனும் தீயவர்களின் வலிமையை ஒழித்து அருளாடல் புரிய விருப்பம் கொண்டிருப்பது மெய்யே ஆகும்.

            வஞ்சகர்களின் வலிமையை அழித்து என்றது அருத்தா பத்தியால் நல்லவர்களுக்கு வண்மையை அளித்து என்பதை உணர்த்துகிறது.  இவ்வேட்கை நிறைவேறத் தேவரீர் கடைக்கன் நோக்கம் புரிய வேண்டும் என்பது விண்ணப்பம்.

(9)

வீறாரு மெழுத்தைந்தா விளங்கியநீ யொருநால்வர்

பேறானா யின்னுமொரு பெரியவனைத் தடுத்தாள்வாய்

சீறாடற் பணிபூண்ட சிவனேயென் சிறப்புடையாய்

நீறாடு முக்கண்ணா நெடும்பாக்கத் துறைவோனே.

கருத்துரை : சீறுகின்றதும் ஆடும் இயல்பினைக் கொண்டதும் ஆகிய பாம்புகளை அணிகலன்களாக அணிந்துள்ள இறைவனே.  தன் வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேர் அருள் உடைமை, முடிவு இல் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை எனச் சைவாகமத்து உரைக்கப்படும் எட்டுப் பண்புகளை உடையவரே (பரிமேலகர் திருக்குறள் 9 உரை).  திருநீறு சண்ணித்த திருமேனியையும் மூன்று கண்களையும் உடையவரே.  நெட்டப்பாக்கத்துள் எழுந்தருளியுள்ள சிவபெருமானே.  திருவருட் சிறப்பு மிக்க பஞ்சாட்சத்தின் வடிவமாகவே இலங்குகின்ற தேவரீர்.  திருஞான சம்பந்தர் முதலிய சமயக் குரவர்கள் நால்வருக்கும் பெறுதற்கரிய பெரும்பயனாக ஆனீர்கள்.  அவ்வாறே இன்றைய உலகைத் திருத்தி நல்வழிகாட்ட மற்றுமொரு நல்லாசிரியரைத் தோற்றுவித்தருள்வீராக.

            எண் சிறப்புடையாய் என்னும் தொடரை வினைத்தொகை யாக்கி அறிஞர்களால் கருதப்படுகின்ற எல்லாப் பாண்பு நலன்களையும் பெற்றவரே எனினும் அமையும்.

(10)

நீதிசற்றும் வழுவாதார் நெடும்பாக்கத் துறைவோனைத்

தீதிலாத் திருநெல்லைச் சிறுபுலவன் பகர்பாட

லோதினார் வினவுற்றா ருணர்ந்துள்ளா ருலகத்து

மாதிநா ராயணன்போ லநுதினமு மகிழ்வாரே.

கருத்துரை : நன்னெறியைவிட்டு விலகாத சான்றோர்கள் நிறைந்த நெட்டப்பாக்கத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானைப் போற்றிக் குற்றமற்ற திருநெல்வேலியைச் சேர்ந்த எளியேனால் இயற்றப்பட்டுள்ள இந்தப் பதிகத்தைப் பாடுபவர்களும், பாடக் கேட்பவர்களும், இதன் பொருளை உணர்ந்து கொள்பவர்களும், மறுமைப் பயனைப் பெறுவது மட்டுமல்லாமல் இவ்வுலக வாழ்விலும் திருமாலைப் போல எல்லாப் பேறுகளையும் பெற்று நீடூழி வாழ்வார்கள்.

(11)

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக