புதன், 23 செப்டம்பர், 2026

மாதை மழைப்பதிகம் - வண்ணச்சரபர்

 

           வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த

மாதை மழைப்பதிகம்

காப்பு

(நேரிசை வெண்பா)

ஓங்கும் பரமே யுலகோ ரொருங்கஞ்சுந்

தீங்குசெய்கின் றாயிதுநின் சீர்மையினுக் – காங்குணமோ

கன்னியிற் சேயுங் கவியு முளபோதே

மின்னிமழை பெய்திடச்செய் வி.

பதிகம்

(கொச்சகக் கலிப்பா)

கலாபமயி லாதியவுங் காசினியோ ரிட்டபயி

ரெலாமுமிகச் சோர்வுற்ற யிக்கணமே மழைபெயச்செய்

நிலாவுதெய்வ முழுதானாய் நீசமுற்ற சூரியன்றான்

றுலாமதியி லிவ்வாறு துலங்குவது முறையன்றே.

(1)

அசுரரினுங் கொடியாருக் கரசளித்த கொடுமையன்றி

விசுவமதை மழையின்றி வெதுப்புவது முறைதானோ?

முசுவினுக்கு முலகீந்த முக்கண னாதியரானாய்

நசுநசுத்த மழையிந்த நாட்டொடங்கிப் பெயச்செய்யே.

(2)

பெறலரும்பே றாகிமழை பேருலகப் பிணிப்பிதனா

லிறவியொடு பிறவியற்றோ ரியாரேனு மிலர்கொல்லோ?

வறம்வளர்த்தா ளாதியதே வத்தனையு மாமொன்றே

மறமுழுதுந் தீர்வதற்காம் வகைசெயச்சற் றிரங்குதியே.

(3)

உலகளிக்குந் தயைநீங்கி யொழிப்பதற்குத் துணிந்தான்போன்

றிலகுகின்றாய் மழையின்றே லியாதேனு முயுங்கொல்லோ?

மலரவனை யீன்றநெடு மான்முதலா மறைகூறும்

பலபலதே வருமாகிப் பரந்துளதோர் பரம்பொருளே.

(4)

நல்லாரிங் கொருவருற்றா னால்வகையோ னியிற்சீவ

ரெல்லார்க்கு மழைபெயுமென் றியம்பியசொற் பழுதாமோ?

பொல்லாதென் றுரைத்தாற்கும் புகழ்விளைத்த பூட்கைமுதல்

வல்லாரேத் தியதெய்வ வகைமுழுதாய் வாழ்வானே.

(5)

நின்பாட லத்தனையு நிகழ்த்துவிப்போ னியானெனவன்

றன்பாள ரிருவரெதி ரறைந்தமைசத் தியமானால்

வன்பாரு மறிந்துவப்ப மழையின்னே பெயல்வேண்டுங்

கொன்பாவும் வேலன்முதற் குலவுநர்முற் றாவானே.

(6)

இச்சகத்திற் கார்கால மெரிவேனி லாதலுணர்ந்

தச்சமுற்றுப் பலர்கூவென் றழுகின்றா ரருளாண்மை

மிச்சமுறு மொருதொண்டன் மேதினியி லிலைகொல்லோ?

பொச்சமிலா ருளந்தோறு புகுந்தொளிரு பூரணமே.

(7)

முன்னாளி னெல்லையிலென் மொழிக்காக மழையீந்தா

யிந்நாளிவ் வாமாத்தூ ரிடத்ததுசெய் தருளாயோ?

பின்னாளிற் பெற்றவருட் பேறிளைத்தா லிழிவுன்னை

மன்னாதோ யளப்பரிய மதந்தொறும்வாழ் வண்மையனே.

(8)

ஒருமதத்தோர் தொழுந்தேவென் றுரைத்தமொழிப் பலித்தெங்கு

மருவுபர மெனப்போற்றல் வம்புபடத் தகுங்கொல்லோ?

கருமுகில்பெய் திடுநாள்புற் கருகவிடல் கொடிதன்றோ?

சருவபிர சாதமனஞ் சான்றாகத் தருந்தேவே.

(9)

மெய்யுலகு மென்மனமும் வியப்பவிளை யாடிடுநீ

பெய்யுமுகிற் புனலீந்திப் பேயுலகங் களிகூரச்

செய்யுமதற் கிசையாயோ? திருவருளிற் பிழையுண்டோ?

பொய்யுரைக்கும் பாதகர்க்கும் போனகமீந் தருள்வானே.

(10)

அன்றிருவர்க் கருளீந்திட் டகிலமழுந் துயர்கண்டுட்

கன்றிடலின் மனந்தேற்றுங் கறைகண்டன் முதலோரா

நின்றிகத்திந் நாளெனையிந் நெடுந்துயர்செய் திடுவானே

பொன்றிடறீர் முகின்மாரி பொழியவருள் புரிவாயே.

(11)

வெறும்பாடற் புலவருக்கும் விருப்பளித்து வியன்சந்த

முறும்பாடற் கிரங்காத தொத்திருக்கு மொன்றின்பால்

செறுபான்மைக் கலியஞ்சத் திருப்புகழோன் செப்புமிவை

குறும்பாள ரிகழாமற் குலவுறிற்பார் குளிர்தருமே.

(12)

முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக