வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
அருளிச் செய்த
பழனி கண்நோய் தீர்த்தருள்வாய் பதிகம்
காப்பு
(நேரிசை வெண்பா)
நெஞ்சகக் கவலையென்னு நீள்பிணிதீர்த் தாண்டருளி
யஞ்சற் றருகென் றடுத்தேற்கு – மிஞ்சக்கண்
னோயுந் தரலாமோ நோற்பார் வினைமுழுதுங்
காயும் பழனிமுரு கா.
பதிகம்
(கொச்சகக் கலிப்பா)
குருத்துவாண மதியமெனக் குலவுறுதற் குறக்கோதை
பருத்தமா முலைபோலும் பழனிமலைக் குமரேசா
திருத்தமார் தமிழ்கொண்டே தினந்துதிக்குஞ் சிறியேன்றன்
கருத்துநோய் தீர்ப்பதன்முன் கண்ணோய்தீர்த் தருள்வாயே.
(1)
போதனழச் சிறைசெய்து புலவனெனும் பெயர்தாங்கிச்
சீதமலர் பொழிற்பழனித் திருமலையின் மிசைநின்றாய்
கோதகன்ற பெரியோரிற் குலவுவேன் கொண்டபெருங்
காதனோய் தீர்ப்பதன்முன் கண்ணோய்தீர்த் தருள்வாயே.
(2)
தவளநிற முழுநீறு தரித்தொருகைத் தண்டேந்திச்
சிவசமய மிகவாழத் திருப்பழனி தனில்வந்தா
யவலைநினைத் துரலிடிக்கு மடியனேன ழச்சூழுங்
கவலைநோய் தீர்ப்பதன்முன் கண்ணோய்தீர்த் தருள்வாயே.
(3)
புலிக்கொடியோன் முதலாய புரவலர்பற் பலர்போற்றப்
பலிக்குழல்வார் வேடமிட்டுப் பழனிமலைத் தலைநின்றா
யெலிப்பகைநேர் சூதுடையார்க் கிடைந்துமறு குறுமென்றன்
கலிக்கொடுநோய் தீர்ப்பதன்முன் கண்ணோய்தீர்த் தருள்வாயே.
(4)
பூமகடன் முடிபோலும் புகழ்ப்பழனி பொருப்பதன்மே
னாமவேற் படையேந்தி நலம்விளைக்கு நாயகனே
தாமதர்கைப் பொருள்வேண்டித் தரங்குலைந்து திரிவேனுங்
காமநோய் தீர்ப்பதன்முன் கண்ணோய்தீர்த் தருள்வாயே.
(5)
பொற்பமைந்த மயிலேறிப் புவனியெங்கும் போய்த்திரும்பிச்
சிற்பரமிகப் புகழ்கோயிற் றிருப்பழனி யிடைசேர்வர்
யறழனத் தினர்கூடி யவர்கான படிபேசுங்
கற்பனைநோய் தீர்ப்பதன்முன் கண்ணோய்தீர்த் தருள்வாயே.
(6)
மூசுவரிச் சிறைவண்டின் முதிர்தமிழ்பா வலர்பல்லோர்
பேசுபுகழ்ப் பழனிமலைப் பெருஞ்சிகர மிசைநின்றாய்
மாசுபடு மனத்தோர்தம் மனைவாயிற் படியேறுங்
காசுநோய் தீர்ப்பதன்முன் கண்ணோய்தீர்த் தருள்வாயே.
(7)
பேணுசீர்ச் சண்பைநகர்ப் பிள்ளைமுதற் பெரியோரே
பூணும்வான் கலைதாங்கிப் புகழ்பழனிப் பொருப்புற்றாய்
நாணுநீ ரிலராகிய நகையுண்பார் நலன்றோய்தற்
காணுநோய் தீர்ப்பதன்முன் கண்ணோய்தீர்த் தருள்வாயே.
(8)
பூரவா கனத்தினளும் போற்றிசைப்பப் புரைதீர்ந்த
சேரமான் பணிகோயிற் றென்பழனித் தலத்துற்றாய்
சூரனூ ரவர்போல்வார் தொடர்ச்சியறச் சுடல்வேண்டுங்
கரநோய் தீர்ப்பதன்முன் கண்ணோய்தீர்த் தருள்வாயே.
(9)
தேவர்பிரான் றொழற்கரிய சிவன்றிருமா லயனென்னு
மூவர்களுந் தெரிந்தேத்து முதுபழனி முருகையா
வாவலறக் கொன்றருந்தி யாணழிக்கு மறிவீனர்
காவனோய் தீர்ப்பதன்முன் கண்ணோய்தீர்த் தருள்வாயே.
(10)
சடமிதெனச் சித்திதெனச் சார்ந்தறியுந் தகையில்லா
ரிடர்கெடவும் விளையாடி யெழிற்பழனி யிடத்துற்றாய்
புடவியினர்க் குயிர்போலும் பொருளென்னும் பொய்ப்பாசக்
கடனெனுநோய் தீர்ப்பதன்முன் கண்ணோய்தீர்த் தருள்வாயே.
(11)
முருகனடிக் கடிமையென மூதுலகு மொழிசீலத்
தொருபுலவன் பழனியிடத் துறுங்கண்ணோ யதுதீர்ந்து
பெருகுமுவப் புறுமாறு பேசுமிவை துதிசெய்வார்
மருமலர்க்கண் ணொளிநீடு மாசொன்று மணுகாவே.
(12)
முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக