வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த
கங்கா
தேவி பதிகம் உரையுடன்
காப்பு
பொற்றைச்
சிலையாற் புரமெரித்த புண்ணியர்தங்
கற்றைச்
சடைநடுவாழ் கங்கையே - யிற்றைக்கே
யென்றன்
கிணற்றினிடை தோன்றி யாவருக்குங்
குன்றரு
மானந்தங் கொடு.
மேரு
மலையை வில்லாக்கி முப்புரங்களை எரித்த புண்ணியப் பொருளாகிய இறைவனின் சடைக் கற்றையின்
நடுவில் வாழும் கங்கையே! இன்றே என்னுடைய கிணற்றில் தோன்றி எல்லோருக்கும் குன்றாத இன்பத்தை
அருள்வாயாக!
பொற்றை: மலை, இங்கு
மேருவைக் குறித்தது.
நூல்
கடலேழும்
வற்றத் தகுங்காலம் வரினுங்கருங் கல்லினிற்
தொடலாய
வென்றன் கிணற்றூடுநன் னீர்துலங்கச் செய்வாய்
மடலூரு
வாரின் தொடர்ந்தென்னை யாள்கந்தன் மகவாதலால்
வடநீழ
லார்சென்னி மிசையேறியென் றென்றும்வளர் கங்கையே.
(1)
கல்லால
மர நிழலில் அமரும் இறைவன் சடாமகுடத்தில் ஏறி என்றும் பொங்கிப் பெருகுகின்ற கங்கையே!
மடலேறி வந்து தலைவியை நாடும் தலைவன் போல் தொடர்ந்து வந்தென்னை ஆளும் கந்தன் பிள்ளை
அல்லனோ நான்; என் மீது அருள்கொள்க. ஏழு கடல் நீர் வற்றுகின்ற காலம் வந்தாலும் கருங்கல்லிடையே
தோண்டுகின்ற என் கிணற்றிலே நன்னீர் தோன்றிப் பெருகுமாறு செய்வாய்.
மடலூரல்:
அகத்திணை மரபில் தலைவியின் காதலைப் பெற விரும்பும் தலைவன் தலைவியின் உருவம் பொறித்த
கொடியேந்தியவனாய்ப் பனங்கருக்கால் ஆன குதிரையில் அமர, ஊர்ச் சிறார் இழுத்து வர ஊர்ந்து
வருவான். காதலால் தன்னை வருத்திக்கொள்ளும் தலைவன் நிலையை அறிந்து தோழி தலைவியை உடன்படுத்துவாள்.
அவ்வாறே முருகவேளும் காதலன்போலத் தானே வந்து தனக்கு அருள் செய்து தன்னையே நாடுமாறு
செய்தான் என்பது கருத்து.
தொடுதல் - தோண்டுதல்.
தொட்டனைத்தூறும் மணற்கேணி என வள்ளுவனாரும் கூறியமை காண்க. வடம்: ஆலமரம்.
ஈனத்
தொழிற்றீயர் கூபத்தினுஞ் சென்றெழுஞ் செல்விநீ
யான்நத்து
மிந்தக்கிணற் றூடுவாரா திருப்பாய் கொல்லோ
வானத்
தரும்பூத லத்தோரு மற்றோரும் வாழச்செயும்
பானற்
கருங்க ணனந்தங் குலாவும்பருங் கங்கையே.
(2)
அமரரும்
மாந்தர்களும் ஏனையோரும் வாழ அருள் செய்கின்றவளே!
கருங்குவளை பலவற்றைக் கண்ணாகக் கொண்டு திகழும் உயர்ந்த கங்கையே! இழிந்த தொழில்
புரியும் தீயவர் கிணற்றிலும் சென்று அருளோடு பொங்கியெழும் செல்வி நீயன்றோ! நான் விரும்பித்
தோண்டுகின்ற இந்தக் கிணற்றிலே வராது இருப்பாயோ?
நத்தும்-
விரும்பும்; பானல் - கருங்குவளை; கூபம் - கிணறு.
சேலென்ற
கணவள்ளி கேள்வன்சொல் நம்பித்திற் றப்பாறையிற்
பாலென்ற
நீருண்டெனத் தொட்டவென்னைப் பழிக்கச் செயேல்
சூலென்ற
மேகத்தினுள் நின்றுபூ மங்கைதோள் சேர்நேர்
மாலென்று
அவாவிக் களிக்குங்குணங் கொண்டுவரு கங்கையே
(3)
சூல்கொண்ட
மேகத்திரளுள் நிறைந்து புவி மாதின் தோளைச் சேர்கின்ற திருமாலாகக் கருதி மகிழும் இயல்புடைய
கங்கையே! மீன் போலும் கண்களை உடைய வள்ளியின் மணாளன் சொல்லை நம்பி வலிய நிலத்தில் பால்
போலும் நீர் உண்டாகும் எனக்கருதித் தோண்டிய என்னைப் பிறர் பழித்துரைக்குமாறு செய்துவிடாதே.
திற்று:
திட்டு என்பதன் மரூஉ ஆக இருக்கலாம். மேட்டுநிலம்.
பொசுங்கற்
குணத்தோர்க ளெள்ளாம லென்றன் புதுக்கூபநீர்
விசும்பைப்
புரக்குங்குகன் செங்கை வேலாடும் வியனாளெதோ
விசும்புட்
கொளுந்தீயரு பூமியைத் தொட்டறிந் தின்புறப்
பசுங்கற்
பகக்காடெனப் பாதலத் தூடுபடர் கங்கையே.
(4)
வீம்புடைய
உள்ளத்துத் தீயவரும் கூட நிலத்தைத் தோண்டி நீர் நிலவுதல் அறிந்து இன்புறுமாறு கெட்டியான
பாறைகள் பிளக்கவும் காட்டில் படர்வது போலப் பாதாளம் வரை பாயும் கங்காதேவியே! உள்ளம்
புகையும் தீய குணத்தவர்கள் எள்ளியுரைக்காமல் நான் தோண்டுகின்ற புதிய கிணற்றில் ஊறும்
நீர் தேவருலகைக் காக்கும் குகனுடைய திருக்கை வேலை அபிஷேகம் செய்யுமாறு தோன்றும் நாள்
எந்தநாளோ? விசும்பு: வானில் வாழும் தேவர் என்ற பொருளிலும் வீம்பு என்ற பொருளிலும் வந்தது.
நீராசை
கொடுநீள் நிலந்தொட்டு முயலென்றன் நெஞ்சஞ்சநேர்
காரா
கற்பாறையிடை நின்றோ ரூற்றின்று காணச் செய்வாய்
தாரார்
கடுக்கைச் சடைத்தம்பிரா னார்தவம் போன்மலிந்
தோரா
யிரங்கோடி வதனத்தொ டுலகெங்குமுறு கங்கையே.
(5)
கொன்றைமாலை
புனைந்த சடையை உடைய இறைவன் புரிகின்ற தவம் போலப் பெருகி ஆயிரம் கோடி திருமுகமாய் உலகெங்கும்
சேர்கின்ற கங்கை நதியே. நீர் பெறும் வேட்கையால் நீண்ட பள்ளமாக நிலம் தோண்டி முயலும்
என் நெஞ்சம் மகிழ்ந்து காணுமாறு மையொத்த கரிய கற்பாறையிடுக்கில் நீரூற்று ஒன்றை இன்றே
பெருகச் செய்வாய்.
அஞ்சம்
- அஞ்சனம், மை; கடுக்கை - கொன்றை. ஈசன் என்றும் நீங்காத தவம் புரிகின்ற சிறப்பால் தம்பிரானார்
தவம் போல் மலிந்து என்றார்.
நிலைநின்ற
தருமந் தனக்காக விந்நானிலந் தொட்டநான்
வலையின்
கண்மானென்று வாடாதுனருள் வெள்ளம்வர வேணுமா
லிலைதுன்று
சூலத்தினார் கண்புதைப் பெய்தவினி தாடுமோர்
மலைமங்கை
விரலூடெழுந் தண்டருல கஞ்சவரு கங்கையே
(6)
இறைவனோடு
இனிது விளையாடி மகிழும் மலைமகள் ஆலிலை போலும் சூலத்தை உடைய சிவபெருமானின் கண்ணைப் புதைத்தவேளையில்
ஈசன் கண்களில் பெருகி மலைமகள் விரலூடே பாய்ந்து தேவருலகும் அஞ்சுமாறு வந்த கங்கையே!
தொன்று தொட்டு நிலைத்துவரும் தருமம் நிலைக்க வேண்டி இப்புவியைத் தோண்டுகின்ற நான்,
வலையகப்பட்ட மான் போல வாடாதிருக்க உனதருளாகிய வெள்ளம் வரவேண்டும்.
விடுமாறு
ரைப்பார் சொல்வெஃகாது கற்றொட்டு மிகநாடுவேன்
றடுமாறி
டாதோர் துதிக்கைப் புனற்றாரை தரநண்ணுவாய்
நடுமா
வலிக்கன்பு முதிர்கோல மெய்திப்பினா கத்தினீ
ணெடுமால்
பதத்தாமரைத் தேனெனச் சொல்லநிகழ் கங்கையே
(70
நடுநிலை
மாறாத மாவலி அன்பு கொள்ளும் கோலமாகிய பிள்ளையான வாமனனாகத் தோன்றிப் பின்னர் மலையின்
மேலும் நீளும் நெடிய வடிவமாகத் திருமால் தோன்றினார். அந்தத் திருமாலின் பாதத் தாமரையில்
பெருகிய தேன் என்று சொல்லுமாறுத் தோன்றிய கங்கையம்மே! கிணறு தோண்டும் என் செயலால் பலனில்லை
என்று எண்ணி அதனைக் கைவிடுமாறு கூறுவார் கருத்தை விரும்பாமல் கல்லைத் தோண்டி மிகவும்
ஆசையுடன் தண்ணீர்வரப் பார்த்திருப்பேன்; அத்தகைய நான் மனத் தடுமாற்றம் கொள்ளாதபடி துதிக்கை
அசைவது போல நீர்ப் பெருக்கு உண்டாகும்படி வருவாய்.
வெஃகுதல்
- ஆசை கொள்ளல். நடு மாவலி: அசுரகுரு தடுத்தபோதும் நடுநிலை தவறாது தானம் தர முன்வந்த
சிறப்பால் நடு என்னும் அடைமொழி தந்தார் எனலாம். திருமால் திருவடியால் உலகளந்தபோது அந்தப்
பாதம் பிரமலோகம் கடந்து சென்றது. அப்போது அந்தப் பாதத்தை ஆகாய கங்கையால் மஞ்சனமாட்டி
தேவபுஷ்பங்களால் பிரமன் அர்ச்சித்தார். அப்போது
திருமால் பாதத்தில் பட்ட ஆகாய கங்கை கீழ்நோக்கிப் பூமியில் வந்து விழுந்தது
என்பது புராணச் செய்தி. அவ்வகையில் திருமாலின் பாதத் தாமரையிலிருந்து வடியும் தேனாகக்
கங்கையைச் சுட்டினார்.
அசைவின்றி
யொருசிந்தை யொடுகற்றொடுந் தன்மையறி கின்றநீ
வசைதந்து
மெலியச்செயா திங்குவந் தீடின்மகிழ் வீகுவாய்
கசைகொண்டு
திருமால்நெடுந் தேர்கடாவக் கடும்போர் செய்வேல்
விசையன்கை
விற்பூசைகொடு கொண்கனுயிர் வாழ்விடு கங்கையே
(6)
சாட்டையை
ஏந்திப் பார்த்த சாரதியாய்த் திருமால் போர்க்களத்தில் தேரைச் செலுத்தினார். அந்தத்
தேரில் அமர்ந்து கடிய போரைச் செய்யும் வேல் கொண்ட அருச்சுனன் பாசுபதாத்திரம் பெறும்
வேளையில் கைவில்லால் ஈசன் தலையை அடித்தபோது அதனைச் சிவபெருமான் ஏற்றார். அவ்விறைவனுக்கு
உயிராக வாழும் கங்கையம்மே! தளராத ஒரே சிந்தையுடன் கல்லான நிலந்தோண்டுகின்ற என்னிலையை
நீயே அறிந்துள்ளாய். அவ்வாறிருக்க ஊரார் வசையால் நான் வருந்தி மெலியாதபடி இங்கு இந்தக்
கிணற்றில் தோன்றினால் எல்லையில்லா மகிழ்வு அடைவேன்.
அசைவு
- தளர்ச்சி; விசையன் - அருச்சுனன்; கொண்கன் - கணவன், இங்கு சிவபிரானைக் குறித்தது.
பொன்கற்
பொருந்தும்பி முகன்வேளெனிரு மைந்தர் புகழ்நல்குமா
றென்கற்
கிணற்றூடு நீவந்து விளையாடலெவ் வேளையோ
நன்கற்
றமறிதன்மை யுள்ளாயெனக் கெஞ்சிநனி நம்பினேன்
மின்கற்
றைநிகர் செஞ்சடைச் சித்தர்புய மோகமிகு கங்கையே
(9)
மின்னல்
போலும் ஒளி பொருந்திய செஞ்சடைச் சித்தராகிய சிவபெருமான் தோள் தழுவும் மோகம் கொண்ட கங்கையம்மே!
ஒருவருடைய துன்பத்தை அறியும்திறம் நன்கு கொண்டவள் என உன்னை மிகவும் நம்பிக் கெஞ்சினேன்.
மேருமலையை ஒத்த பெருவடிவமுடைய ஆனைமுகனும் முருகவேளும் என நின் இரு புதல்வர்களின் புகழைப்
பேசுகின்றவாறு என் கற் கிணற்றிலே நீ வந்து தோன்றி விளையாடுவது எவ்வேளையோ?
பொன்கல்
- மேருமலை; தும்பி - யானை; வேள்- முருகப்பெருமான்; அற்றம் - துன்பம், அழிவு, அவமானம்;
எள்ளுங்
குணக்குற்றவர்க் கொல்கிடேன் வெட்டிடும் பாறையிற்
குள்ளுன்
திருக்கோல மெப்போதிலங் குங்கொலுள வோர்கிலேன்
விள்ளுந்
தமிழ்ச்சீல ரொருநால்வர் தமைநாடு மேலோர்கள்சொற்
கொள்ளும்
பிரானுச்சி மேனின்று விலகாதுகுளிர் கங்கையே
(10)
பழிக்கும்
சிறுமதியாளர்க்கு அஞ்சி ஒதுங்கிவிட மாட்டேன். வெட்டும் பாறையில் உன் நீர்வடிவத் திருக்கோலம்
எப்போது தோன்றுமோ? என் நெஞ்சத்தால் அறிகிலேன். பேசுதமிழில் பாடிய சீலர்களான சமயக் குரவர்
நால்வரைப் போற்றும் பக்தியின் உயர்ந்த மேலோர் பாடல்களை உவக்கும் ஈசனார் திருச்சடையின் உச்சியில் நிலைத்து அகலாது
விளங்கும் குளிர்ச்சியான கங்கையே!
குணக்கு
- கோணல்; இங்குக் கோணல் புத்தியைக் குறித்தது. நால்வர் தமை நாடும் மேலோர்கள் சொல் கொள்ளும்
பிரான் - அடியவர்களைப் போற்றுவதையே ஆண்டவன் உவக்கிறான் எனலாம். தமை நாடும் மேலோர் என்பதை
ஈசன் தன்னை நாடும் மேலான பத்தர்கள் எனக் கொண்டால் சமயக் குரவர் நால்வரோடு ஏனைய திருமுறை ஆசிரியர்களையும் ஒருங்கு சுட்டினார்
என்று கொள்ள இடமுண்டு.
அல்லைப்
பழிக்குங் கறைக்கண்டர் சீர்மீதிலமர் கங்கையே
நெல்லைத்
தலத்திற்கொர் கனுகூல மெனவந்து நிகழ்பாவலன்
கல்லைப்
பிளக்குங் கிணற்றூடு வருகென்று கழற்படுஞ்
சொல்லைத்
துதிக்கத் துணிந்தால் விளங்குந்தொடுங் கூபமே.
(11)
இருளைப்
பழிப்பது போன்ற கரிய நிறமுடைய மிடற்றையுடைய ஈசன்மீது புகழுடன் வீற்றிருக்கும் கங்காதேவியே,
திருநெல்வேலிக்கு கரிய நீர்க்கரை போல பாவலனாகிய (தண்டபாணி சுவாமிகள்) நான் தோண்டும்
கிணற்றினுள்ளே பெருகி வருக என்று அவ்வன்னையின் கழல் அணிந்த திருவடிகளில் பணியும் இந்தச்
சொற்பதிகத்தைச் சொல்லித் துதிக்கத் துணிந்தால் தோண்டுகின்ற கிணறுகள் நீர்வளத்தால் விளங்கித்
தோன்றும்.
அல்-
இருள்; கூலம் - நீர்நிலையின் கரை (திவாகர நிகண்டு) இங்கு கரிய பாறை விளிம்புடைய கிணற்றைச்
சுட்டிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக