புதன், 23 செப்டம்பர், 2026

குறிஞ்சிப்பாடிக் குமரன் பதிகம் - வண்ணச்சரபர்

 

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த 

குறிஞ்சிப்பாடிக் குமரன் பதிகம்

காப்பு

(நேரிசை வெண்பா)

கொற்றிபுகழ் வைவேற் குமர குருநாதன்

பற்றிமகிழ் தென்குறிஞ்சிப் பாடிக்கு – வெற்றிமிகு

தண்டமிழா லோர்பதிகஞ் சாற்றத் தமியேனுட்

கொண்டதுணை கோழிக் கொடி.

பதிகம்

(கொச்சகக் கலிப்பா)

என்றுநல் லிளமையுற் றிருவர் தோள்புணர்

நன்றுடைக் குருபர நாதன் வாழுமூர்

சென்றுவான் மகளிரைச் சேரல் வேண்டியுங்

கொன்றுணார் பெருகிய குறிஞ்சிப் பாடியே.

(1)

சூர்த்தகட் பேயுயிர் தொலைத்து கீரனை

நீர்த்தடந் தோய்த்தரு ணிமல னீடுமூர்

சீர்த்தநூற் பயனெலாந் தெளியும் பேறுடைக்

கூர்த்தநெஞ் சினருறுங் குறிஞ்சிப் பாடியே.

(2)

வெயிலுடைப் பரியும் வெள்கும் வீறுசே

ரயிலுடன் றோகைமீ தமரு மாதியூர்

தயிலவார் குழலியர் தயங்க மாமிசைக்

குயிலினம் பயிலுறுங் குறிஞ்சிப் பாடியே.

(3)

பற்றலர் குலமறப் பறிக்கும்  போர்வலி

யுற்றவர் தொழுங்குக னுறையு மொப்பிலூர்

நற்றவர் நாவலர் நாட னல்குசீர்க்

கொற்றவ ரனையர்வாழ் குறிஞ்சிப் பாடியே.

(4)

ஆறொடு தும்பையு மரவுங் கொன்றையு

நீறொடு புனைதரு நிமலன் மைந்னூர்

சேறொடு கமலமுந் தினையுஞ் செம்மணிக்

கூறொடு நிலவிய குறிஞ்சிப் பாடியே.

(5)

அண்டரு முனிவரு மறியொ ணாநலந்

தொண்டருக் கருள்குகன் றுலங்குந் தூயவூர்

விண்டலந் தடவிய மேடை தோறுநற்

கொண்டல்வந் தமர்தகு குறிஞ்சிப் பாடியே.

(6)

பேயினேர் கொடுவினைப் பிணக்கந் தீர்த்தருட்

டாயில்வந் தாள்குகன் றறுகத் தக்கவூர்

வாயிலாற் பரிதியு மதியு போய்வருங்

கோயிலின் சிறப்புறுங் குறிஞ்சிப் பாடியே.

(7)

நஞ்சுறழ் சாரணர் நலிந்து மாய்வுறச்

செஞ்சுவைத் தமிழ்பகர் செல்வன் சேருமூர்

மஞ்சுலாம் பொழிலினு மகளிர் கையினுங்

கொஞ்சுபைங் கிளிமிகுங் குறிஞ்சிப் பாடியே.

(8)

காசிபன் றரவருங் கரிய சூரன்மேல்

வீசிய வேல்புனை விகிர்தன் மேவுமூர்

ராசிகூ றிடுமவர்க் கள்ளி நல்கிடக்

கூசிடார் வதிதருங் குறிஞ்சிப் பாடியே.

(9)

மூவருங் கைதொழு முருகன் முத்தமிழ்க்

காவலன் வழிபடுங் கடவுள் காக்குமூர்

சேவல புள்ளொடு சிறுபு றாவினங்

கூவலாற் சிறந்தொளிர் குறிஞ்சிப் பாடியே.

(10)

பரவுவார் மனமெனப் படிவங் கொண்டருள்

சரவணக் குருபரத் தலைவன் றங்குமூர்

மரவொடு செருந்தியு மாவும் வாழையுங்

குரவமுந் தழைதரு குறிஞ்சிப் பாடியே.

(11)

நீடிய வளமுறு நெல்லை யூரவன்

கூடிய தவன்வருங் குறிஞ்சிப் பாடியைக்

கேடில்சீர்க் குகனொடு கிளத்த லோதுவார்

தேடிய நலமெலாஞ் சேர்வ துண்மையே.

(12)

முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக