புதன், 23 செப்டம்பர், 2026

மழை வேண்டு கீர்த்தனைகள் – வண்ணச்சரபர்

 

        வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த

மழை வேண்டு கீர்த்தனை – 1

இராகம் : குந்தலவராளி                                           தாளம் : ஆதி

பல்லவி

ஐப்பசி மாதத்தி லிப்பனிப் பெய்கின்றது

அகில மெப்படி யுய்யுமோ                                      

(ஐப்பசி)

அநுபல்லவி

மைப்படுங் கண்டத்தன் மால்முதற் றேவரும்

வண்டமிழ் வெறுத்திட்டுத் திண்டுமிண்டு செய்கின்றார்

(ஐப்பசி)

சரணம்

தேக்கிய மறையவர் பறையர்பின் செல்கின்றார்

            செங்கோல் வெறுத்துமன்னர் தீக்கொடுங்கோல் கொண்டார்

யோக்கியந் தவிர்ந்து செட்டிகள் பொருள் சேர்க்கின்றார்

            உழுதொழி லோர்பிறர்க் குதவிசெய் தலைவிட்டார்.

(ஐப்பசி)

என்போலுந் தவமுள்ளா ராசைக் கடலுட்பட்டார்

            இயல்புலவோர் நிந்திப் பேதொழி லாயினார்

மின்போலும் மடந்தையர் கணவன்சொற் கடங்கிலார்

            மேன்மக்களுந் தாய்தந்தை வெதும்பச் செய்கின்றார்கள்.

(ஐப்பசி)

பனிக்கண் திறந்தால் மழைக்கண டைந்திடுமென்று

            பாரில்மின் னார்களும் பகர்வதுண்டே – இனி

அநித்தியம் நித்தியந் தெரிந்தசற் குருவந்திவ்

            அநியாயங்களை மாற்றினால் நன்மையா மையோ.

(ஐப்பசி)

தருமமுஞ் சத்தியமுந் நின்று மறைந்தாலுஞ்

            சருவவல் லமைத்தெய்வந் தனைநீசர் சொல்லாலுங்

கருமம்மே லென்றுபத் தரும்அஞ் சுவதனாலுங்

            கவின்றிருப் புகழைப்புன் கவிஞ ரெள்ளுவதாலும்

(ஐப்பசி)


மழை வேண்டு கீர்த்தனை – 2

 

இராகம் : நீலாம்பரி                                                  தாளம் : ஆதி

பல்லவி

மழைபெய்யப் புரிவாயே – தெய்வமே நல்ல

மழைபெய்யப் புரிவாயே.

(மழை)

அநுபல்லவி

உழையணிந் திட்டகைச் சிவன்முதலாந் தெய்வம்

உள்ளவெல் லாமாகி யொன்றாதல் நிசமானால்

(மழை)

சரணம்

செந்தமிழ்ப் புலவோர்முன் செப்பிய படியெல்லாஞ்

            செகதலத்தில் நடந்த சீர்த்திபொய்த் தொழியாமல்

இந்த நாளினுஞ்சரச் சுவதி கடாட்சமுண்

            டிகபர மறிந்ததோ ரீசனு முண்டென்ன

(மழை)

அரசன்செய் திடுங்கொடு நீதியைக் குறியாதே

            அகிலத் துள்ளார்செயு மசத்திய மதியாதே

பரவுமன் பரைக்கற்பு மகளிரைப் பாரென்று

            பாடி யாமாத்தூரிற் பரன்முன் வைத்ததையெண்ணி

(மழை)

பயிர்செய் துள்ளோர் தண்ணீ ரிறைக்கின்ற வோசையும்

            பணக்காரர் நெற்காரர் பவிசுமுல் லாசமுஞ்

செயிர்படு மாடுமா டாதிய வுயிர்களின்

            தியக்கமுந் தீர்ந்திடத் திருவருட் பெருக்கத்தால்

(மழை)

முன்னொருக் காற்சொன்ன பதிகம் பலித்ததெண்ணி

            முறைப்படி பின்னொன்றும் மொழிந்தவ மதிப்புற்றேன்

என்னோடின் னொருதொண்டன் சொன்னசொற் றள்ளாமல்

            இதுசொன்னே னின்னமு மவமானஞ் செய்யாதே.

(மழை)

பன்னிரு சமயத்துப் பொருள்களு மாய்நின்ற

            பரம்பொரு ளேமெய்ப் பராபர வத்துவே

அன்னியத் தோடனன்னிய மான பிரமமே

            அருந்தமிழ்த் திருப்புக ழதன்றொனிபோ லின்றே.

(மழை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக