வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
அருளிய பார்ப்பனப்பட்டியில்
திருமலை என்ற பெண்குழந்தை பிரிவால் பாடிய பலகவி
(இவை, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளுக்குப் பிறந்த பெண்
குழந்தையின் மீது மிகுந்த பாசம் கொண்டருந்தார்.
அக்குழந்தைக்கு ஐந்து வயதில் நோய் கண்டு இறந்து விடுகிறார். அவரின் பிரிவை ஆற்றாமை காரணமாகப் பாடிய பாடல்கள்)
நேரிசை வெண்பா
என்மகளாத் தோன்றி
யெழிற்பழனி மாமலைக்கோன்
றன்மனைவி யென்றுதினஞ்
சாற்றியதோர் – நன்மகவைக்
கொன்றா னெழுப்பிக்
கொடுக்குந் திருநாளே
நன்றா மவற்றின்மிக்க
நாள்.
(1)
தென்றுவரை யான்மனைநேர்
செல்வத் திருமலையைக்
கொன்று நரிக்குக்
கொடுத்தாயே – நன்று
வருமாறு செய்தெனினும்
மாட்சி யடைவா
யருமாந்த வேற்கையிறை
வா.
(2)
கட்டளைக்
கலித்துறை
சூர்ப்படை யோடும்பர்
துன்பக் கடலுந் தொலைத்தருளி
நீர்ப்பழ னாபுரிக்
குன்றிடத் தேயென்று நின்றவனே
சீர்ப்பது மாதனை
நாணுந் திருமலைச் செல்வியுடற்
பார்ப்பனப் பட்டி
நரிக்கோ பிரமன் படைத்தனனே.
(3)
வெள்ளிலை வேற்படை
வீரா பழனி வியன்சிலம்பிற்
புள்ளி மயூரப்
பரியோ டுலாவும் புகழ்க்குமரா
தெள்ளிய நித்தில
வாயாற் றிருமலைச் செல்விதன்னை
வள்ளிதன் சாயை
யெனச்சொன்ன வார்த்தை மறக்கரிதே.
(4)
அந்தத் திருமலை
மாயாம லென்னை யளித்தத்தன்
பிந்தத் திருமலை
யென்றனக் கென்றொர்பெண் பெற்றுத்தந்த
திந்தத் திருமலை
பார்ப்பனப் பட்டி யிடத்தொளித்த
தெந்தத் திருமலைக்
கென்றழு வேன்மலை யீட்டத்தனே.
(5)
தேயுவைச் சேவற்
கொடியாக்கித் தானிவர் தேரில்வைத்துப்
போயுல கியாவுங்
களிகூரச் சூருரம் பொன்றவென்றாய்
நீயுளங் கொண்டெவண்
கொன்றாய் திருமலை நெற்றியுஞ்செவ்
வாயு முத்தன்ன
வெண்பல்லு மென்நெஞ்சில் வரைந்துள்ளவே.
(6)
கலித்துறை
வீர வாகுவங் கனுப்பிய
விசிகமொன் றாலோர்
தீர னாருயி ருடலொடு
மீளல்சத் தியமேற்
சீர தாங்கனி வாயத்திரு
மலைப்பெயர்ச் செல்வி
யார ணன்கர நாணவந்
திகத்தவிர் தருமே.
(7)
அறுசீர்
ஆசிரிய விருத்தம்
அன்றுனக்கே பாரியென
வந்தாளைத்
தண்ணீரி லமிழ்த்திக் கொன்றா
யின்றுனக்கே சொந்தமெனச்
சொன்னாளைக்
கொன்றுநரிக் கிரையா யீந்தாய்
நன்றுநன்றீ தறந்தானென்
றெண்ணுதியோ
வுன்மனதே நகைசெய் யாதோ
குன்றுளுயர் பழனிமலைக்
கோமானே
யிஃதுனக்காங் கொள்கை யன்றே.
(8)
அம்மணியுந் திருமலையும்
பழனியாயி
யுங்களங்கொய் தழிந்திட் டானு
மிம்மணில்வீழ்ந்
திறந்தோனும் நான்றுகொண்டு
செத்தானு மெழச்செய் தாள்வாய்
கைம்மணிப்பா வலனாநாள்
வெந்தனென்பிற்
பெண்ணுருவங் காணச் செய்தாய்
செம்மணிக்கோ டெனநாளுந்
திருப்பழனி
மலைத்தலையிற் றிகழ்கின் றோனே.
(9)
கட்டளைக்
கலிப்பா
கார்ப்ப யம்பொழிந்
தாலெனப் பல்கவி
கழறு வார்கள் கவின்றிரு நாத்தொறுங்
கூர்ப்ப றாமதி
தோய்முழு மாமதிக்
கோல வாணி குடிகொள லுண்மையேல்
சீர்ப்ப தாம்புயச்
செங்கிளிப் பேடுறழ்
திரும லைப்பெயர்ச் சேயதி சீக்கிரம்
பார்ப்ப னப்பட்டி
யூர்முழு தோரவே
பழைய மேலொடு பார்நின் றெழுகவே.
(10)
வெண்டளைக்
கலிப்பா
இன்னந் திருமலையை
யீடில்வட லூர்ப்புலவன்
முன்னன்பர் தம்மையிந்த
மூதுலகிற் கண்டன்றித்
தன்னந் தனிக்கதியிற்
சார்வதற்குச் சம்மதியா
வென்னந்த ரங்க
மெளியா ருணர்வரிதே.
(11)
இரட்டை
ஆசிரிய விருத்தம்
அன்றுசுந் தரன்முதலி
னோர்க்காக வவிநாசி
யறல்வாவி முதலையுண்ட
வந்தணச் சேய்முதலி யனநல்கு முதல்வனுக்
கல்லாது முருகனன்னை
யொன்றுரிமை வைத்திலாளென்
கைசத்திய மாகி
லுடல்விட்டி றந்துளாரி
லுன்னுமவர் தமையெலாம் வருவித்துவக் கும்வலி
யுறுமுன்பு வீடுபுகுதே
னென்றுயிற் கனவிலவன்
வந்துவந்தரு ணகிரி
யென்றுசொல் லியதுமன்றி
யெண்ணியப டிக்கெலாம்விளை யாடும்வாழ் வருள்செய்
திடுவலென வுஞ்சொற்றுளான்
கன்றுடன் பசுவலற
வுங்கொன்றுதின் கின்ற
கடையர்களி கூருநாளிற்
கருதாது முத்திபெற முயலுமறி வீனமொரு
கடுகளவு மருவிடேனே.
(12)
அறுசீர்
ஆசிரிய விருத்தம்
அஞ்சலென் றிருகை காட்டி யாண்டுகொண் டருள்செய் யாதே
வஞ்சகர் பழனிக் குன்றின் மகிமைகள் பலசெய் வானே
செஞ்சரோ ருகத்தாட் செவ்வாய்த் திருமலைச் செல்வி தன்னைக்
கஞ்சனாண் மலர்க்கை நாணக் காசினிக் கனுப்பு வாயே.
(13)
மலைக்கின்ற முற்றத் துந்தை மாதரி கழுத்திற் பூட்டுந்
தலைப்பெரு மங்க லத்திற் சதகோடி யாணை யிட்டேன்
கலைப்பய னின்னே நல்கிக் கருணையங் கடலி லாட்டாய்
நிலைப்படும் பழனிக் குன்றி னிமலநித் தியச்செவ் வேளே.
(14)
கீர்த்தனை
பல்லவி
கனவி லாண்டபடி
நனவி லாள்வதற்குக்
காலதாமத மேனையா
அனுபல்லவி
அனவர தமுந்திருத்
தண்டும்வே லுந்தாங்கி
யருட்பழ னாபுரி யசலத்தி லமர்ந்தோனே
(கனவில்)
சரணம்
காரணத் தாற்பிறந்
தாயென்று சொன்னதுங்
கைக்கிளி யென்றதுங் கவிநயங் கொடுத்தது
மாரண மாகாமன்
மலையி லுருண்டவன்று
வாழ்வித் ததுவும்பெருந் தாழ்வாகி விடலாமோ
(கனவில்)
சருவபிர சாதமுந்
தந்து திருவடித்
தாமரை கண்ணிலுந் தலையிலுஞ் சூட்டியே
யருவமு முருவமு
மானநிலையுஞ் சொல்லி
யமரருங் கண்டென்னை யதிசயித் திடப்பல
(கனவில்)
என்பைப்பெண் ணாக்கின்ற
கொருகலை யளித்தோனே
யீசற்குந் தாரக மியம்பிய குருநாதா
வன்பைத் துணைக்கொண்டு
நம்பித் துதிக்குமென்னை
யாளாக்கிக் கொள்ளாம லலக்களித் திடப்போமோ
கனவி லாண்டபடி
நனவி லாள்வதற்குக்
காலதாமத மேனையா,
(15)
நேரிசை
வெண்பா
ஒன்றான
தெய்வமே வுள்ளசம யங்களெல்லாந்
தன்றாள்
வணங்கிநிற்குஞ் சத்தியமே – யென்றாழ்ச்சி
முற்றுந்
தவிர்ந்து முதன்முத்தி சேருமட்டும்
பற்றுதியப்
பாலுட் பருகு.
(16)
இன்னிசை
வெண்பா
பங்குனித்தே
ரூர்ந்து பலர்மனத்தைக் கொள்ளைகொண்டு
தங்கும்
பழனித் தனித்தண்ட பாணியனே
யெங்குதலைச்
சேயா மெழிலார் திருமலையை
யிங்குகொன்றாய்
நொந்தே மெழுப்பியினி தீந்தருளே.
(17)
நேரிசை
வெண்பா
வடலூரார்க்
குந்தையன்று வாய்க்கவிட்ட பித்தத்
திடமேநீ
யானுமுறச் செய்தாய் – கடல்சூழும்
பாரும்விண்
ணும்போற்றும் பரிசுதவி யாண்டருள்வாய்
கூருலவா
வேற்கைக் குகா.
(18)
வெண்டளைக்
கலிப்பா
கொம்மை
வடிவார் குவடோங்குந் தென்பழனிச்
செம்மை
முருகாநின் தேவியென்றே யெப்பொழுதும்
மும்மை
யுலக முழுதறியச் சொல்லியதோ
ரம்மை
திருமலையை யந்தகன்கை தீண்டாதே.
(19)
அறுசீர்
ஆசிரிய விருத்தம்
சதமகன்றன் னானைதந்த குஞ்சரியு வள்ளிமின்னுந் தாமிக் கொல்க
மதனதுகைக் கணைபாயா வடிவத்தெந் திருமலைசொல் வார்த்தை கைத்தோ
விதமிரக்க மில்லார்போற் கொன்றனைசுந் தரன்தமிழ்க்கா விளஞ்சே யொன்றை
முதலைதந்தாங் கென்கவிக்கா நரியுதவச் செயலரிதோ முருக வேளே.
(20)
திருமலையைக் கொன்றதொக்கும் பெருந்துயர மெனக்கினிநீ செய்ய வேண்டாங்
கருமபந்த மேதேனுங் கடுத்தனவா யிருந்தாலுங் கழிக்க வேண்டு
மருமறையா கமங்களுக்கோர் பொதுவாய வநூபூதி யளித்தி லாயோ
குருமரபிற் கொருமுதலாய்ப் பழனிமலைத் தலையில்வளர் குமர வேளே.
(21)
அன்றிசைநா ரதமுனியும் வீரவா குவுமறிய வறைந்த வார்த்தை
யொன்றினுண்மை பொய்த்ததுவோ வுள்ளமறி யாத்திருட்டு முளது கொல்லோ
முன்றிருத்தொண் டருக்காக வுந்தைசெய்த விந்தையெற்கேன் முடிக்கி லாயோ
குன்றினத்தின் மிக்கதிருப் பழனிமலைக் கரசாய குகப்பெம் மானே.
(22)
ஆயிரம்பாட் டுரைத்தவெனக் கருட்பெருஞ்சா கரத்துளியொன் றருளி யப்பான்
மாயிருஞா லமும்நானுங் களிகூரச் செய்திலைநின் மனைவி யென்ற
வாயிளஞ்சேய் திருமலையை வதைத்தனை வெய்யிலிற்புழும்போல் வருந்து கின்றே
னீயிரக்க மில்லாவன் நெஞ்சினனோ பழனிவெற்பி னிற்குங் கோவே.
(23)
கட்டளைக்
கலித்துறை
பன்னக
பூடணத் தோகை மயூரப் பழனியப்பா
முன்னநின்
கைக்கிளி யென்றெனைச் சொன்ன மொழிபிழையோ
வென்னது
சுந்தரத் தோடியான் வருந்த விடும்புசெய்தா
யின்னமுந்
துன்பப் படுத்தாது நல்கரு ளின்பங்களே.
(24)
ஆயிரம்
பாடற் றிருப்புகழ் பாடற் கவாவுமென்னைச்
சேயினத்
தொன்றின் வதையாற் றடுத்துத் தியக்கினையே
நீயியற்
பாடல் விழைவாயென் றுள்ள நிசம்பொய்த்ததோ
தாயினு
மிக்கவ னேபழ னாபுரிச் சண்முகனே.
(25)
பெண்குண
பூடண மாகுந் திருமலை பெற்றியெல்லாங்
கண்குளி
ரக்கண்டுங் கொன்றாய் குகாமண் கலசமொன்றை
வண்குட
மென்றது நோய்ப்படும் போதினும் வாஞ்சித்ததும்
விண்குறி
காட்டி யதுநாடி நெஞ்ச மெலிகின்றதே.
(26)
ஐயுற
வெய்திக் கலைபேணி டாண்முத் தரும்பியவாய்
மெய்யுரை
யோபொய் கொலோகுக னாடன் மிகப்பகர்வான்
மையுண்கட்
சீர்கொ டிருமலைப் பேதைதன் மாப்பிளைக்குக்
கையும்
முகமுமிக் குள்ளவென் றாளதொர் காரணமே.
(27)
சம்பத்துண்
மிக்கதென் றியான்கண்டு கண்டு தருக்கடையக்
கும்பத்த
னாதியர் போற்றும் பழனிக் குமரனுக்கே
செம்பத்
தினித்திறம் பேசுமென் பேதை திருமலைக்கென்
றைம்பத்
தொருதிங்க ளேயோ விதித்த தயன்கரமே.
(28)
யானுமென்
கொண்கனு மான மிலேமென் றிசைந்துரைக்குந்
தேனுறழ்
தீஞ்சொற் றிருமலைப் பேதைதன் செங்கனிவாய்
தானுமண்
ணுண்டு நரியுண்ட தீமை சகிக்கின்றிலே
னேனுத
வாதிருக் கின்றாய் பழனிக் கிறையவனே.
(29)
செங்காட்டிற்
கொன்று குழம்பாக்கி வட்டித்த சேயதனை
யங்காதற்
றாய்தந்தை கண்டு கொண்டா டியதுநிசமேற்
சிங்கார
மேனித் திருமலை மீண்டு திகழச்செய்வான்
கொங்கார் கடம்பணி வான்பழ னாபுரிக் குன்றருகே.
(30)
கல்லார்க
ளேனுங் கருணையார் தாமெனிற் காத்தருளும்
வல்லான்
பழனி மலைக்கோயிற் சேந்தன் மனைவியெனச்
சொல்லாத
நாளொன் றறியாத திருமலை தூங்கியெழுந்
தெல்லாஞ்சொன்
னானவ னென்றசெவ் வாயெங் கிருக்கின்றதே.
(31)
கணந்தொறுந்
தொண்டரைக் காக்கும் பழனிக் கடவுன்மேன்
மணந்தரு
செங்கடம் பேநிகர் பாடல் வகுத்துரைத்தேன்
பணந்தரு
கின்றிலன் மெய்யருட் செல்வமும் பாலிக்கிலான்
குணந்திக
ழின்சொற் றிருமலை மீளக் குறித்துளனே.
(32)
எண்சீர்
ஆசிரிய விருத்தம்
ஆடுவெட்டிப்
பொங்கலிடு மிடைச்சந் நாசி
யனுப்பவருங் கறுப்பண்ண னான பேயை
நீடுசத்தி
பேற்படையாற் கீறி டாம
னெடிதுநாட் கடத்துவது நீதி தானோ
வேடுதொட்டுப்
பலபாடல் வரைந்து போற்றி
யிரவுபக லாறெழுத்தே யியம்பி யன்பாற்
பாடுபட்ட
தொண்டர்களுக் கெளிய னாகிப்
பழனிமலைத் திருக்கோயிற் பதிவாழ் வானே.
(33)
சுந்தரன்சொற்
பாட்டொடென்சொற் பாட்டொத் தாலுஞ்
சுடர்வேற்கைக் கடவுள்சிவன் சுதனென் றாலுஞ்
செந்தமிழ்மா
முனிமகிமை பெரிதென் றாலும்
தெய்வீகக் கனவுமுள்ள செயலென் றாலு
மிந்தவித
விபகாரம் முழுது முண்மை
யென்றாலுந் திருமலைப்பே ரெனது பேதை
சந்தநெடுங்
கடற்பாரிற் பழைய மேனி
தன்னொடுவந் துலவுவது சரதந் தானே.
(34)
கீர்த்தனை
பல்லவி
சத்துரு
சங்காரத் தெய்வமே – அரோகர
சத்துரு
சங்காரத் தெய்வமே.
அனுபல்லவி
மித்துரு
பரிபாலனத் தெய்வமு முன்னையன்றி
வேறில்லை
யென்றறிந்த மெய்யும்பொய் யாய்விடுமோ
(சத்துரு)
சரணம்
ஆனைமுகனை
விட்ட வண்ணன்முத லாவந்த
வனந்தம் பகையும் வென்றோ ராளாக்கிக் கொண்டநீ
பூனையை
நிகரிடைச் சந்நாசி பகையினாற்
பொன்றிடச் செய்வையோ புகழ்விளைத் திடுவையோ
(சத்துரு)
தன்னையொப்
பாமொரு சுப்பிர மணியத்தைத்
தந்திமுகக் கடவுள்தன்னை வல்வடுகனைப்
பின்னையும்
பலபல தேவரைச் செயித்தநீ
பேய்கருப் பண்ணனுக்குப் பின்னிட வேண்டாஞ்
சொன்னேன்
(சத்துரு)
இந்தப்
பனைமுறியப் பாடிய பாடலு
மென்மக டிருமலைக் கியம்பிய கவிகளும்
மந்தப்பட்டா
லந்த விளப்ப முனைக்கிலையோ
மயின்மீதி லேறிக்கொண்டு மலைதோறுந் திரிவானே
(சத்துரு)
எத்தனை
தேவரையான் றுதித்தா லுந்தின
மிரவி னித்திரைசெய் போதில் யாரைத்துணை
கொண்டுள்ளே
னத்தனை
தேவரு நீயென்று மறிந்துள்ளே
னடியனே னுள்வந்தன் றருணகிரி தானென்ற
சத்துரு
சங்காரத் தெய்வமே – அரோகர
சத்துரு
சங்காரத் தெய்வமே.
(35)
நேரிசை
வெண்பா
சித்தர்
பலருந் திடுக்கென் றவசமெய்தப்
பத்தர்பல
ருய்ந்துலவப் பண்ணினாற் – சத்தசத்தா
மெங்கெங்குந்
தானா யிருந்த பரம்பொருளே
யிங்கெங்
குலதேவா மே.
(36)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக