புதன், 23 செப்டம்பர், 2026

ஆவுடை நாயகியம்மன் பதிகம் - வண்ணச்சரபர்

 

 

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த கரிவலம்வந்த நல்லூர்

சங்கரன்கோவில் என்னும் புன்னைவனம்

ஆவுடை நாயகியம்மன் பதிகம்

காப்பு

(நேரிசை வெண்பா)

புன்னைவனத் தாவுடையே பொங்கரவம் பூண்டபிரான்

றன்னையொரு பாகம்வைத்த சங்கரியே – யென்னையுன

தாளாக்கு வாயென் றடுத்தே னருவினைநோய்த்

தேளால் தளராமல் செய்.

பதிகம்

(கொச்சகக் கலிப்பா)

எத்தனையோ தொண்டர்க் கெளிதிலருள் கூடுமுன்றன்

சித்தமென்றன் மட்டில் சிறிதிரங்க லாகாதோ

சத்தமறை தேடரியார் சங்கணியுங் காதருந்து

புத்தமிழ்தில் சொற்பயில்வாய் புன்னைவனத் தாவுடையே.

(1)

ஏத மிகக்கொண் டிளைத்தே னிரங்கிநின்பொன்

பாதமலர் சூட்டிப் பரிந்தருள மாட்டாயோ

காதளவு நிடும்விழிக் கார்க்கோகில மனையாய்

பூத கணத்தார் புரக்கு புன்னைவனத் தாவுடையே.

(2)

நற்பார் புரக்கு நரராதியர்க் கொல்கி

நிற்பான் விடலாமோ நியிரங்க வொண்ணாதோ

கற்பார் பரவுங் கவுணியற்குப் பால்சுரந்த

பொற்பார் முலைக்குயில்நேர் புன்னைவனத் தாவுடையே.

(3)

ஒன்னார் மகிழ வுறுகண் பெருத்துளத்தோ

டென்னகங் குன்றா திரங்கியருள் செய்திடுவாய்

பல்நாகம் புண்டார்தம் பாலமரு பைங்கிளியே

பொன்னார் மதிளுடத்த புன்னைவனத் தாவுடையே.

(4)

எல்லா நலமு மினிதருளி யாண்டுகொள்ள

வல்லாய்நீ யென்றடுத்தேன் மாநிலத்தோ ரேசவிடேல்

கல்லால நீழற் கடளளருள்க் காதலியே

பொல்லா ரணுகரிய புன்னைவனத் தாவுடையே.

(5)

ஆற்று பணிநலஞ்சற் றாய்ந்தறியே னாயினுநான்

சாற்றுந் துதிநின் றனதுசெவிக் கேறாதோ

கூற்று நிலைகுலையக் கோபித்தார் கொஞ்சிமிகப்

போற்றும் புகழ்ப்பொலிவார் புன்னைவனத் தாவுடையே.

(6)

ஆங்கடியேற் கவ்வா றருளு மருள்கருதி

லீங்களவி லின்னலெனைச் சேரல் நீதிகொல்லோ

தீங்கனந்தந் தீர்ப்பாய் திருமா லயன்விரும்பு

பூங்கமலத்தார் பரவு புன்னைவத் தாவுடையே.

(7)

ஐயவருக்கோர் தாயாநின் னன்பிலமிழ்ந் தார்வமுறு

மெய்வழியில் தோய்வார்பால் மேவுநல மீந்தருள்வாய்

தெய்வநிலை சற்றுந் தெளியா திறுமாக்கு

பொய்வழக்கர் சேரரிதா புன்னைவனத் தாவுடையே.

(8)

திண்ணியவே லாகியருட் சேந்ததன் றிருக்கரத்தில்

நண்ணியலையேல் விண்ணுலகு நானிலமும் வாழ்வதுண்டோ

பண்ணியற்சொல் பாவலர் பற்பலர்க்கோர் மெய்த்துணையே

புண்ணியசீர் மிக்கிலகு புன்னைவத் தாவுடையே.

(9)

காமியமும் வீடும் கருதுமவர்க் கீந்தருளு

நீமிடிநோய் தீர்க்க நினைத்தா லிளப்பமதோ

பாமிகச்சொல் சங்கரப்பேர்ப் பத்தனையன் றாண்டநங்காய்

பூமியெங்கு பேற்றுமெழிற் புன்னைவனத் தாவுடையே.

(10)

வேதமுட னாகமமு மிக்கொலிக்கும் வீறுமிஞ்சிப்

போத நலங்காட்டு புன்னைவனத் தாவுடையைச்

சீதமலி நெல்லைத் திருப்புகழோன் செப்புமிவை

யாதரமாக் கொள்வார்க் கருளாட்சி நல்குமன்றே.

(11)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக