புதன், 23 செப்டம்பர், 2026

நல்லாற்றூரின் மழை பொழியச் செய்தாயே பதிகம் - வண்ணச்சரபர்

 

       வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த

நல்லாற்றூரின் மழை பொழியச் செய்தாயே பதிகம்

காப்பு

(நேரிசை வெண்பா)

வந்தநல் லாற்றூரின் மழைபொழியச் செய்தாற்போ

லெந்தவிதத் தேனுமெனக் கருட்பே – றிந்த

வுலகத்தி லீந்தருளென் றோர்பொருளைப் போற்றக்

கலகமற்ற மாதவர்தாள் காப்பு.

பதிகம்

(கொச்சகக் கலிப்பா)

இரவிமதி முதலாக விலங்குபல தெய்வமுமாய்ப்

பரவுமவர் விருப்பமுற்றும் பாலிக்கும் பழம்பொருளே

மரமலிநல் லாற்றூரின் மழைபொழியச் செய்தாற்போற்

றிரமுறவிங் கெனக்குனது திருவருட்பே றருள்வாயே.

(1)

ஈசனுமை முதலாக வியம்புமெந்தத் தெய்வமுமாய்ப்

பாசமொழித் தானந்தம் பாலிக்கும் பரஞ்சோதீ

மாசறுநல் லாற்றூரின் மழைபொழியச் செய்தாற்போற்

றேசமறி தாவெனக்குன் றிருவருட்பே றருள்வாயே.

(2)

மாதவன்செந் திருமுதலா வகுக்குமெந்தத் தெய்வமுமாய்ப்

போதபர மானந்தம் புகட்டியருள் பொதுப்பொருளே

வாதறுநல் லாற்றூரின் மழைபொழியச் செய்தாற்போற்

றீதகற்றி யெனக்குனது திருவருட்பே றருள்வாயே.

(3)

ஆனைமுகன் குகன்முதலா வறையுமெந்தத் தெய்வமுமா

யூனையுயி ரொடுமுருக்கி யுடன்கலக்கு மொண்பொருளே

வானைநல்லாற் றூரினிடை மழைபொழியச் செய்தாற்போற்

றேனையுங் கைத்திடச்செயுநின் றிருவருட்பே றருள்வாயே.

(4)

குருபதமே கதியென்னுங் கூர்ப்புடையா ரனைவர்க்கும்

பெருமையுறு பயன்முழுதும் பெறக்கொடுக்கும் பெருவெளியே

வருணனல்லாற் றூரினிடை மழைபொழியச் செய்தாற்போற்

றெருளில்சிறி யேற்குனது திருவருட்பே றருள்வாயே.

(5)

பூவில்வளர் நான்முகனாப் போற்றுமவர் முதலோர்க்கு

மாவியுய்யத் தக்கநல மளித்தருளு மரும்பொருளே

வாவியநல் லாற்றூரின் மழைபொழியச் செய்தாற்போற்

றேவினம்பற் பலவாநின் றிருவருட்பே றருள்வாயே.

(6)

அரசரடி யிற்றெய்வமதே யாதியெனு மன்பினராய்ப்

பரசுமவர் தங்களுக்கும் பயனுதவு பரம்பொருளே

சரசமலி நல்லாற்றூர் தனின்மழையின் றழைத்தாற்போற்

சிரசணியொப் பரமுனது திருவருட்பே றருள்வாயே.

(7)

அனியாயச் சிசுவாதை யாசிரிய னிந்தையன்ன

வினிதாகக் கொள்வார்க்கு மிறுமாப்புத் தருமொன்றே

கனிவாநல் லாற்றூரிற் கனமழையின் றழைத்தாற்போற்

செனியாதுன் னுடன்சேர்க்குந் திருவருட்பே றருள்வாயே.

(8)

அகத்தியனேர் பெரியோர்க ளனைவருக்கு மானந்த

மிகத்தினோடு பரத்தினிலு மீந்தருளு மெம்மானே

யுகப்புறுமா றின்றுநல்லாற் றூர்க்குமழை யுதவினையாற்

செகத்தினர்பா லிரவாதுன் றிருவருட்பே றருள்வாயே.

(9)

அத்திமுக லெறும்பீறா மனைத்தினுக்கு மவையாகி

முத்தியளித் தாண்டருளு முழுமுதலா முன்னோனே

நத்தியின்று மழைபெய்ய நல்லாற்றூர்க் கருளினையாற்

சித்தியெனக் குறுமாறுன் றிருவருட்பே றருள்வாயே.

(10)

மெய்ப்பிரண வர்க்கரத்தில் விரவியெங்கு மிளிரொன்றே

யெய்ப்பினல்லாற் றூர்க்குமறை யெண்ணியவா றீந்தனையான்

முப்பிணியுந் தீர்ந்துய்ந்த முனியாய்முன் னொருகனவிற்

செப்பியவா றின்றெனக்குன் றிருவருட்பே றருள்வாயே.

(11)

பண்ணியபலசொற் றிருப்புகழோன் பதிகமிரு மூன்றுரைத்தது

நண்ணியவர் மனமறிய நல்லாற்றூர் மழைகண்டு

திண்ணியமெய்ப் பொருட்பானின் றிருவருட்பே றருளென்னக்

கண்ணிநுவ லிவைகற்பார் கருதியவாழ் வடைவாரே.

(12)

முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக