வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த
பார்ப்பனப்பட்டிக்
கணபதி பதிகம்
காப்பு
(நேரிசை
வெண்பா)
பத்தர் மலிபார்ப்
பனப்பட்டி யூர்பரிக்குங்
கத்தனென வாழுங்
கணபதியே – சித்தமிசை
யெண்ணியபே றத்தனையு
மியானடைய நீயுரைத்த
திண்ணியசொற் காத்துதவி
செய்.
பதிகம்
(அறுசீர்
ஆசிரிய விருத்தம்)
நீரொடு திங்களுங்
கொன்றையும் பாந்த(ரு)ளு
நிலவுஞ் சடைமுதலாஞ்
சீரொடு மூடிக
வாகன மீதென்முற்
றிகழற் கிசையாயோ
நாரொடு மெய்யடி
யார்பணி யேநனி
நாடிச் செயுமவராற்
பாரொடு வானுல
கும்புகழ் பார்ப்பனப்
பட்டிக் கணபதியே.
(1)
முந்தவிம் மாநிலத்
திற்பல பாவலர்
முன்னும் படிசெய்த
செந்தமி ழின்றிற
மென்னிடத் தங்ஙனந்
திகழா விதமியாதோ
கொந்தலர் தண்பொழி
லிற்பல மேடையிற்
குளிர்வா வியின்மறுகிற்
பந்தண வுங்கைமி
னார்மலி பார்ப்பனப்
பட்டிக் கணபதியே.
(2)
சோகம னைத்துமி
ரிந்திடத் தக்கமெய்த்
துங்கம் பெறச்செய்திட்
டேகம யப்பெருந்
தாரக மேனியு
மெந்நா ளருள்வாயோ
போகநி லத்துறும்
வானவர் கண்டுளம்
புழுங்கிப் பெரிதொல்கப்
பாகந யப்புல வோர்புகழ்
பார்ப்பனப்
பட்டிக் கணபதியே.
(3)
எண்ணமோ ராயிரந்
தந்தனை யங்ஙன
மியாதும் புரிகில்லாய்
தண்ணளி வாரிவ
றந்தது வோவுனைத்
தடைசெய்வ தொன்றுளதோ
நண்ணல னாங்கய
மாமுகத் தானவ
னாசப் படவென்று
பண்ணவர் வாழவைத்
தாயெழிற் பார்ப்பனப்
பட்டிக் கணபதியே.
(4)
முன்னமெ னுள்ளமு
வப்புறத் தக்கசொன்
மொழிந்தா யதுசெய்யா
தின்னமுஞ் சோதனை
யேன்செய்கின் றாயினி
யெந்நா ளருள்வாயோ
வன்னமு யர்த்தவ
ராதியர் பற்பல
ரமர்பண் டியின்மிசையோர்
பன்னகம் பூண்டவ
னேயடற் பார்ப்பனப்
பட்டிக் கணபதியே.
(5)
கெண்டையங் கண்மட
வார்முத லேடணை
கெழுவுற் றயர்வேனின்
றண்டையந் தாள்கரு
திப்பெரி தின்புறுந்
தவமென் றடைவேனோ
மண்டையு மென்பு
மணிந்தவர் செய்தவ
மணியா கியும்வந்தாய்
பண்டைம றைத்தொனி
நீடிய பார்ப்பனப்
பட்டிக் கணபதியே.
(6)
நீசர்செ யுந்துயர்
முற்றற நீக்கிநன்
னெறியோர் நலங்காட்டி
யாசகல் சித்தியு
முத்தியு மென்றனக்
கருளற் கிசையாயோ
தேசமெங் கெங்குமு
தற்செயும் பூசனைத்
தேவே கொடுந்தீப்போல்
பாசம றுப்பவ னேயருட்
பார்ப்பனப்
பட்டிக் கணபதியே.
(7)
பொன்னியுந் தாம்பிர
வன்னியு நல்கிய
புகழ்நா டொறும்போற்று
மென்னினைப் புன்னசை
வன்றி மற்றொன்
றென்னுமீ
னர்க்கிளைப்பேனோ
வன்னிய மென்று
மனன்னிய மென்றுநன்
கறையுஞ் சமயங்கள்
பன்னிரண் டுங்கவர்
வாய்திருப் பார்ப்பனப்
பட்டிக் கணபதியே.
(8)
கஞ்சனைக் குட்டிய
கைக்குக னோர்குறக்
கன்னிக் கயர்காலங்
குஞ்சர மாமெனச்
சென்றதொத் தென்மனங்
குளிரும் பரிசீந்தாள்
நஞ்சமு தென்றயின்
றான்முதன் மூவரு
நம்புங் கையைந்துள்ளாய்
பஞ்சமின் றித்திரு
மிஞ்சிய பார்ப்பனப்
பட்டிக் கணபதியே.
(9)
வற்றன்ம ரங்கட
ழைத்துந றுங்கனி
வழங்கக் கவிசொன்னாள்
பெற்றவ ரந்தமி
யேனுமெய் தும்படி
பேணித் தருவாயோ
குற்றமுற் றுங்குண
மேயெனக் கொண்டருள்
குணபூ தரம்போல்வாய்
பற்றலர் வேலறுப்
பார்வளர் பார்ப்பனப்
பட்டிக் கணபதியே.
(10)
வீறுமு தாரகு
ணக்கட லேநிகர்
வேலப் பன்விருப்பாற்
பாறுபு ரைத்தவர்
போற்றரும் பார்ப்பனப்
பட்டிக் கணபதியைத்
தேறுதி ருப்புக
ழோன்பகர் பாடல்கள்
சிந்தைத் தலைநாடும்
பேறுமு ழுக்கவ
ழங்குமென் றேமிகப்
பேணித் துதிப்பனவே.
(11)
முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக