புதன், 23 செப்டம்பர், 2026

பார்ப்பனப்பட்டித் திருமால் பதிகம்

                 வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த 

                                பார்ப்பனப்பட்டித் திருமால் பதிகம்

காப்பு

(நேரிசை வெண்பா)

பார்ப்பனப் பட்டிப் பழைய பெருமாளே

சேப்பதுமத் தானைமுதற் சிட்டித்தீர் – காப்பதுவே

தன்றொழிலாக் கொண்டீர் தரணியொடு வானுமுய்ய

நன்றொருங்கு செய்வீர் நயந்து.

பதிகம்

(அறுசீர் ஆசிரிய விருத்தம்)

திங்கள்வாழ் சடையாற் கந்நாள்

            சிலைவலா னிடும்பூ நாறுஞ்

செங்கழற் கருது வேனைச்

            சிறியவ ரிகழா தாள்வாய்

மங்கள மனைத்து நல்கு

            மாமகண் மருவு மார்பா

பங்கய மலிநீர் வாவிப்

            பார்ப்பனப் பட்டி மாலே.

(1)

வட்டவா ரிதிசூழ் பூமி

            வருந்துறா துவக்கச் செய்பேற்

றிட்டமுற் றுழைக்கின் றேனை

            யினரிற் கடையாக் காதே

மட்டவிழ் கமலப் புத்தேண்

            மறைநெறி யிகழ்வார் கூற்றாம்

பட்டவர்த் தனர்கொண் டாடும்

            பார்ப்பனப் பட்டி மாலே.

(2)

வேம்பணி வானை யாண்ட

            விண்டுசித் தனைப்போன் மேன்மை

யாம்பரி சளிக்கி னல்லா

            லடியனேன் மகிழேன் கண்டாய்

தேம்படி யவர்பல் லோருஞ்

            செயம்பெறச் செய்வ தெண்ணிப்

பாம்பணை நீத்து வந்தாய்

            பார்ப்பனப் பட்டி மாலே.

(3)

மணிமர கதக்குன் றேபோல்

            வந்தெனு ளவிர்ந்த வாய்மை

யெணிநனி யிறுமாக் கின்றேற்

            கிகமுணர் பெரும்பே றீந்தா

ளணிமுழு மதியந் தானு

            மாதவச் சுடரும் போலும்

பணிலமோ டாழி கொண்டாய்

            பார்ப்பனப் பட்டி மாலே.

(4)

உன்னருட் டுளிவாய்ந் தோர்க்கு

            மொருசெய லரிதென் றெண்ணுஞ்

சின்னநெஞ் சகத்தார் கண்முற்

            றியக்குறா வரமின் றீவா

யன்னவா கனத்தார் பல்லோர்க்

            கன்னையும் பிதாவு மானாய்

பன்னலம் பொலிந்து காட்டும்

            பார்ப்பனப் பட்டி மாலே.

(5)

வஞ்சர்வே ரறுக்கும் வாழ்வே

            மறுவின்முத் தியின்மே லென்பார்

சஞ்சலந் தவிர்ந்தா லன்றித்

            தலைமைநின் றனதாங் கொல்லோ

நஞ்சமும் புனலிற் பெய்வார்

            நாசமா வதுவேட் டந்நாள்

பஞ்சவர் தூது மானாய்

            பார்ப்பனப் பட்டி மாலே.

(6)

செங்கண்மா முகினேர் கோலந்

            திகழ்தர நனவிற் றோன்றி

யிங்கவா வியபே றெல்லா

            மெளிதடைந் துவக்கக் காண்பா

யெங்கணு மியாவுஞ் செய்யு

            மெட்டெழுத் திசைக்க வல்லார்

பங்கநோய் முழுதுந் தீர்ப்பாய்

            பார்ப்பனப் பட்டி மாலே.

(7)

சகடுதைந் திகன்ற மாமன்

            றலையிட றியபூந் தாளென்

விகடநிந் தனைமுற் றீர்ந்திம்

            மேதினித் தலையா ளாதோ

வகடுறத் தின்பான் பற்று

            மடற்பல்வாய் முதலை யட்டோர்

பகடுயப் புரந்த வெந்தாய்

            பார்ப்பனப் பட்டி மாலே.

(8)

ஆடகா சுரனைக் கீன்ற

            வரும்புகழ் விரும்பிப் போற்றும்

பீடணைந் தவர்ச்சூழ் முன்னைப்

            பெருவினைப் பேய்கொல் லாயோ

கோடரத் திரளோ டேகிக்

            கொடியராக் கதனைச் செற்றாய்

பாடலம் மலர்தண் சோலைப்

            பார்ப்பனப் பட்டி மாலே.

(9)

தெள்ளருந் தமிழ்ப்பே ராண்மை

            திகழ்சட கோப னாதி

வள்ளலா ரொடுசேர்த் தென்னை

            மாநிலஞ் சொலச்செய் வாயோ

புள்ளத னெடுவாய் கீன்றாய்

            பூதனை யுயிரூ னுண்டாய்

பள்ளவார் வயற்சீ ரோங்கும்

            பார்ப்பனப் பட்டி மாலே.

(10)

விரிந்தபூ தலம்முற் றேத்தும்

            விரதவே லப்ப னன்பாற்

பரிந்துசெய் வழிபா டேற்கும்

            பார்ப்பனப் பட்டி மாலைத்

தெரிந்தவர் வியக்குந் தீஞ்சொற்

            திருப்புகழ்ப் புலவன் பாடன்

மரிந்தவ ருயலும் வேண்டும்

            மாதவர் மதித்தற் பாற்றே.

(11)

முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக