திங்கள், 12 அக்டோபர், 2026

தோத்திரக் கீர்த்தனைகள்

 

தவத்திரு இராமானந்த சுவாமிகள் அருளிச் செய்த

தோத்திரக் கீர்த்தனைகள்

இராகம் : பியாக்                     தாளம் : ரூபகம்

(பல்லவி)

அஞ்சி வந்துன் செஞ்சர ணத்தை

யண்டினன் போதித்தரு ளானந்தச் சோதி

(அநுபல்லவி)

தஞ்ச மென்னும் பஞ்சை பாவின்

றாரணி தோளா! மாய

வஞ்ச மான சஞ்சலமெனை

வாட்டுதே நாளாய்! தயை

அஞ்சி வைத்தெனை ளாளாய்

அஞ்சி

(சரணங்கள்)

நிதமுன்றன் றிவ்யபதந் னைத்தொழ

            நினைவருள் பூமா! வீணில்

மதமு றும்பொருள் சதமலவென

            மாற்றிடுஞ் சோமா! துய

ராற்றிடு நாமா!

அஞ்சி

கூறுங்வலை தீரும் படியாட்

கொண்டடிடுந் தேவே! விட

வேறுகதியிப் பாரி லிலைமெய்

விண்டிட வாவே! புகழ்

                        விண்ணவர் கோவே!  

அஞ்சி

அடிமையாளப் படியின் மிசையி

லவதரித் தாயே! ராமன்

கொடியபிறவி மிடியை யகற்றக்

குறித்து, இவண் நீயே! வந்து

குறைதவிர்ப் பாயே.   

அஞ்சி.

(1)

இராகம் : அரிகாம்போதி                   தாளம் : சாப்பு

(பல்லவி)

குருபாத நினை மனமே - முன்

குறைதீரு மித்தினமே

(அநுபல்லவி)

கருணைப்ர காசக் கண்ணரு ளீசன்

றருண மறிந்தடியார் தமைக்காக்கும் நேசன்  

குரு

(சரணங்கள்)

உலகத்தி லோடி யுழலா தேவாடி

பலபல நினை யாதே பரகதி தருந்தேடி

குரு

துற்குணம் விடுத்துத் தூநெறி யடுத்து

மற்கடம் போற்பிடி வாதத்தைத் தொடுத்து    

குரு

காம மதியா லோதுங் கறைதவிர்த் தருள்சாது

இராமா னந்தன் கவிக்கு நன்மைதரு மெப்போதும்    

குரு

(2)

இராகம் : சங்கராபரணம்                   தாளம் : ஆதி

குருவடியே நம்ம தெய்வம் - தினங்

கொண்டா டித்துதி செய்வம் - நம்பி

வருபவ ரைத்துதி செய்வம் - மன

வஞ்சக ரைத்தூ ரஞ்செய்வம். 

(3)

இராகம் : நாதநாமக்கிரியை              தாளம் : ஆதி

(பல்லவி)

கனவிலும் யமபய மேது நம்மைக்

காக்கும் தெய்வ மிருக்கும் போது

(அநுபல்லவி)

மனதேசஞ் சலமதை நீக்கு - குரு

மலரடியைப் பிடித்து வீக்கு    

கனவிலும்

(சரணங்கள்)

உலக மயக்கமதை யோட்டு - உன்ற

            னுளத்தில் குருவடிவை நாட்டு

பலபல நினைவதை வாட்டு - எல்லாப்

            பற்று மொழிந்திடத்தீ மூட்டு  

கனவிலும்

காலை மாலை தன்னை நாடு - கொண்டு

            கடும்பகல் தனிலொன்றாய்க் கூடு

வாலை வயதுப் பெண்ணைத் தேடு - கூடி

            மகிழ்ந்திருப் பதற்கென்ன பாடு?        

கனவிலும்

விட்ட குறையைத் தொட்டு வாங்கு - அது

            வேண்டுங் குறைமுடிக்கும் பாங்கு

கட்டில் விழாம லுனைத் தாங்கு - மதன்

            காலைப் பிடித்துக் கொண்டு தூங்கு   

கனவிலும்

சோம னமிர்தம் மிகப் பொங்கும் - உடற்

            றுன்ப மில்லாம லிலங்கும்

இராமா னந்தன் கவிதங்கும் - பதம்

            நற்றவத் தோர்காண்பா ரெங்கும்        

கனவிலும்

(4)

இராகம் : பூரிகல்யாணி                     தாளம் : ரூபகம்

(பல்லவி)

கண்டுகொள் வீரே - பரப்ரமம்

கண்டுகொள் வீரே.

(அநுபல்லவி)

கண்டுகொள்வீ ரிந்த மண்டலத் துள்ளீரே

தொண்டரெலாந்துதி புண்டரீகப்பதங்

கண்டு

(சரணங்கள்)

பத்தியுடன் மிக நித்திய - நத்திப்

            பாடு மடியவர்க் கேயுடன்சித்தி

யத்திமுத லெறும்பீறாமுற் - பத்தி

            யடையாது செய்ய வடிதொழ முத்தி   

கண்டு

அறியாத பேருக்கு மானிட - ரூப

            மைம்புலன் வென்றோ ரடைந்திடும் தீபம்

குறியாக நம்பினாற் கூடாது - பாபங்

            கும்பிட்டுக் கொள்ளுங் குணமிது லாபங்        

கண்டு

மூடர் தமக்கும் நல்லறி - வூட்டு

            முத்தி வழிதனைச் சத்தியங் காட்டு

நாடு மடிமை யிராமனைக் - கூட்டு

            நானெனு மாணவம் நாடிடா தோட்டுங்         

கண்டு

(5)

இராகம் : சௌராட்டிரம்        தாளம் : ஆதி

(பல்லவி)

ஏதுக்காவெனை ஆண்ட தோவென்

றெண்ணி மன நாணுதே

(அநுபல்லவி)

சூதுக்கா என் கோதுக்கா -நினை

யாதுக்கா அவப் போதுக்கா   

ஏதுக்

(சரணங்கள்)

பத்திக்கா நற் சுத்திக்கா மடம்

புத்திக்கா தவச் சித்திக்கா       

ஏதுக்

பூசைக்கா பே ராசைக்கா வீண்

பாசைக்கா நி ராசைக்கா        

ஏதுக்

மடமைக்nகா என் திடமைக்கோ பொன்

உடைமைக்கோ என் கடமைக்கோ    

ஏதுக்

(வேறு சரணங்கள்)

புண்ணியத்தை நண்ணியோ

கண்ணியத்தை எண்ணியோ

மண்ணிலென் போற்பாவிக

யெண்ணிப்பார்க் கினுங்கிட்டா         

ஏதுக்

நித்தியந்தொ டர்ந்துவரும்

எத்தனையா பத்திலொன்று

பற்றிடாவ கைநீசூழ்ந்து

முற்றிலுங்கி ருபைவைத்து     

ஏதுக்

சோமன்ற னைத்தரித்தாய்

காமனைக்கண் ணாலெரித்தாய்

சேமம ளித்துப் பேதை

ராமன்மேற் கருணை வைத்து 

ஏதுக்

(6)

இராகம் : சங்கராபரணம்                   தாளம் : சாப்பு

(பல்லவி)

சந்த தங்குரு சிந்தனை செய்மனமே

யென்சீவ ரத்தினமே

(அநுபல்லவி)

நிந்தனை செய்யும் அந்தகருடன் கூடி

நேசியா துன்னுள் வாசியைப் பார்த்துநீ         

சந்ததம்

(சரணம்)

எட்டுட னிரண் டொட்ட வறியாமல்

இறந்த பேர்களை யறிந்தாயே யினியேனும்  

சந்தம்

(7)

இராகம் : காம்போதி              தாளம் : சாப்பு

(பல்லவி)

சீச்சி யினியிந்த வுலக வாழ்க்கை யெந்தச்

சென்மத்தும் ஆகாதையா

(அநுபல்லவி)

ஏய்ச்சுப் போடமேற் பூச்சுக் குரைத்த தல்ல

ராச்சிய முழுதுமென் பேச்சுக்குள் நின்றாலும்

சீச்சி

(சரணங்கள்)

நன்மைசொன் னால்யாரும் நம்புவதில்லை மட்டி

            நாயைப்போ லெனக்கு நாணமில் லையெட்டி

வன்மையா ரெவரையும் வலியக்கூ வித்தெட்டி

            வாயிற்போட் டுக்கொள்ள மனதுமிக வுங்கெட்டி

சீச்சி

உலகோரைத் தூஷிக்க வோடும்ம னதெந்நேரம்

            உள்ளேநோக் கம்வைத்தா லொடுங்குமே வெகுதூரம்

புலன்கள்செல் லும்வழியிற் போகுமே மனக்கோரம்

            போக்கிநல் லவழியிற் புகுதவென் றாற்பாரம்

சீச்சி

வார்த்தையுள் ளமட்டும் வழக்குத்தீர் வதில்லை

            வருந்தியெ டுத்துரைக்கும் வழுவாச்சே யினந்தொல்லை

தூர்த்தனா கிக்காலந் தொலைத்தேனுன் றயவில்லை

சுகமுண்டு பாரென்று சொன்னாலும் வரவில்லை

            சீச்சீ

இச்சையென் வாய்வார்த்தை யுள்ளமட் டுமறாது

            இரக்கத்து னிந்தாலன்றி யிகத்தில்சு கமுறாது

கொச்சைம னிதர்களைக் கூடிற்றன் பமறாது

            குருவடி யேகதி யென்றாற்கு றைவராது        

சீச்சி

இப்படிச் செய்வதி லுனக்குவந் ததோலாபம்

            இதுநாண்மட் டுமின்னந்தீ ராக்கோபம்

எப்படிச் சொன்னாலு மின்னமேன் மனஸ்தாம்

            ஏழைநெஞ்சி னில்வைப்பா யிருளோடப் பெருந்தீபம்

            சீச்சி

எளியேனைவெ ளியினிலி ழுக்காத வகைசெய்யும்

            இராமானந் தன்சொல்லுக் கிரங்கிம னதுவையும்

பழியான வுலகத்தைப் பார்த்தாலென் மனம்நையும்

            பஞ்சப்பு லனேதீராப் பகையாக வெனைக்கொய்யும்

சீச்சி

(8)

இராகம் : ஆரபி                      தாளம் : சாப்பு

(பல்லவி)

மங்களம்மங் களம்மங்க ளம் நடேசருக்கு

மங்களம்மங் களம்மங்க ளம் சபேசருக்கு

(அநுபல்லவி)

எங்களறி வேகுருவா யெழுந்தந டேசருக்குந்

துங்கச பேசருக்கு மங்களம் - அருட்

            சோதி சுயஞ் சோதிக்கு மங்களம்       

மங்களம்

(சரணங்கள்)

அருட்பெருஞ் சோதிக்கும் ஆனந்த நாடர்க்குந்

தெருட்பெருஞ் சித்தருக்கு மங்களம் - நம்ம

            சிற்சபை நாதருக்கு மங்களம்  

மங்களம்

ஆக்கிய ளிப்பவர்க்கு மனைத்துந்தா னானவர்க்குந்

தாக்கித்தாக் காதவர்க்கு மங்களம் - தங்கும்

சாதுசங்கத் தலைவர்க்கு மங்களம்      

மங்களம்

இருசுட ராயெவைக்கு மின்பந்த ருபவர்க்கு

மொருபொரு ளானவர்க்கு மங்களம் - என்றும்

            உலவாப்பெ ருஞ்சோதிக்கு மங்களம் 

மங்களம்

பொதுவின டித்துமற்றைப் புலன்கட் கருள்புரியு

மதுரமொ ழியருக்கு மங்களம் - அன்பர்

            மனத்துறை வள்ளலுக்க மங்களம்

மங்களம்

தாயிலி னியவற்குந் தந்தையாய் நின்றவற்குஞ்

சேயாய்வ ளர்ப்பவற்கு மங்களம் - எங்கள்

             சிற்றம்ப லவருக்கு மங்களம்  

மங்களம்

ஆதிய நாதியாகி யண்டத்த ரசுசெய்யும்

நீதியி றைவருக்கு மங்களம் - என்றும்

            நித்தியா னந்தருக்கு மங்களம்

மங்களம்

மெய்யடி யவருக்கும் வேடங்கொண் டவருக்கும்

அய்யன்றி ருவடிக்கு மங்களம் - நெஞ்சுள்

            ளன்புடை யவருக்கும் மங்களம்         

மங்களம்

இராமானந் தன்சொல்லை நேமமுடனே கொள்ளுஞ்

சீமான்க ளனைவர்க்கு மங்களம் - நல்ல

திருக்கூட்டத் தார்களுக்கு மங்களம்   

மங்களம்.

(9)

முற்றிற்று.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக