திங்கள், 12 அக்டோபர், 2026

இராமானந்தரின் அநுபவானந்தம்

 

தவத்திரு இராமானந்த சுவாமிகள் அருளிச் செய்த

இராமானந்தரின் அநுபவானந்தம்

 (கண்ணிகள்)

சித்தி மகோற்கடர்தஞ் சீரடியைப் போற்றிநித

மத்துவிதா னந்தமதை யறிவித்த படிசொல்வேன்.     

(1)

ஒருபொருளே யெல்லாமா யல்லதுமாய், நின்றெனக்குக்

குருவெனவுந் தோற்றியதின் குறிப்பா லுரைப்பேனே.

(2)

அருளே யுருவெனக்கொண் டவனிமிசை வந்தோர்முன்

மருளே வடிவானோன் வாய்திறத்தன் மடமையதே.  

(3)

கள்ளொழுகு நளினமலர் கண்டுமனம் நாணாது

வெள்ளெருக்கும் பூத்து மெலியாது நின்றதுவே.        

(4)

உள்ளபொரு ளொன்றி னுளவறியா தேயுழலுங்

கள்ளநெஞ்சன் மேலோர் கழற்றுணையாற் கூறுவதே.

(5)

ஓருயிர ருந்துவது முதிசமல வென்றுரைத்தோ

னாருயிரெல் லாமருந்த லடங்கா வதிசயமே. 

(6)

இறந்த வுடல்புசித்தா லேதமே யென்றுரைத்தோன்

சிறந்தவுயி ரோடருந்திற் செகத்தோர் நகையாரோ.

(7)

பரபொருளை யணுவேனும் பற்றொணா தென்றுலகிற்

கரவா லலகிலதைக் கவருவது மென்னேயோ.           

(8)

ஓரிரைச்சல் கேட்டே யுளங்கலங்கி வாடுமவன்

பேரிரைச்சல் கேட்டுப் பிரியஞ் செனிப்பதுதென்னே.

(9)

ஒருபொருளை மறைத்தோனை யுலகோர் மதியாரேல்

வருபொருள்க ளெல்லா மறைத்தான் மதிப்பாரோ.    

(10)

சீர்த்த விடத்திருக்கிற் றேசத்தோர் தான்திப்பார்

பார்த்திடவெங் குந்திரியிற் பழிப்புக் கிடமலவோ.

(11)

சிறுதீபத் தாற்றுயிலத் தீங்கென் றணைத்தவன்னோன்

பெருந்தீப மேற்றிப் பிணம்போற் கிடந்ததென்னே.   

(12)

அடுத்தவீட் டுக்குவர வஞ்சு மனமுடையோ

னடுத்தெருவி னிற்க நாண மொழிந்ததென்னே.        

(13)

எல்லாருக் கும்பொதுவா யிருந்த பொருளதனைச்

சொல்லா தெடுத்தொளித்த சூது சரிதானோ. 

(14)

பற்றொழிந்தான் மோட்சம் பலிதமெனக் கேட்டிருந்துஞ்

சற்றுமொன்றி லேனுஞ் சலியாது பற்றினையே.       

(15)

நன்றுதீ தென்பதனை நாடி யறிதியென்றே

னொன்றறிந் தேன்மற்று மொன்றொழிந்த தென்றனையே.

(16)

சேவித் தவனைத் தெரிசித்துப் பாடென்றா

லோவியம் போலநின்றே யூமையைப்போ லானதென்னே.

(17)

எந்நேர முஞ்சிவனை யேத்தி யிறைஞ்செனவே

சொன்னா லகமகிழ்ந்து சும்மா விருந்தனையே.         

(18)

அநுபவானந்த முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக