தவத்திரு இராமானந்த சுவாமிகள் அருளிச்
செய்த
அடைக்கலப் பதிகம்
(சந்தக் கலி விருத்தம்)
பூவேறிய
மணமேயுயர் பொன்னேறிய மாற்றே
நாவேறிய
சுவையேயெல்லா நலமேறிய பொருளே
சேவேறிய
முதலேபசுஞ் சிகியேறிய தேவே
கோவேயெனை
யாள்வாயென்றன் குருவேயடைக் கலமே.
(1)
ஊனேயெடுத்
திந்நாள்வரை யுழன்றேன்பல சென்ம
மானார்வயிற்
றிடையின்னமும் வாராதுகண் பாராய்
தேனோடுமுக்
கனிபாகுநெய் திரண்டாலுமொப் பாகாக்
கோனேயெனை
யாள்வாயென்றன் குருவேயடைக் கலமே.
(2)
சூதேசெயு
மனத்தான்மிகு துயரேகொளு முளத்தேன்
றீதேபுரி
செயலேன்வழி தெரியாதுழல் கின்றே
னேதேனுநன்
றறியாவெனை யிழியாதுகண் பார்த்துக்
கோதேதவிர்த்
தாள்வாயென்றன் குருவேயடைக் கலமே.
(3)
செடிசேருட
றனின்மேவிய தீயாகிய பிணியிந்
நொடிநேரமே
யகலும்படி நோக்காலருள் புரிவா
யடியார்பிழை
குறியானென வகிலஞ்சொலு முறையாற்
கொடியேனெனை
யாள்வாயென்றன் குருவேயடைக் கலமே.
(4)
மாலாகிய
மனமேசெயும் வஞ்சம்சகித் திடவென்
னாலேமுடி
யாதேயுனை நாடிச்சர ணடைந்தே
னாலாம்பதந்
தனைத்தாண்டிமெய் நடுவாகிய வெளியிற்
கோலாகல
மாய்நின்றிடுங் குருவேயடைக் கலமே.
(5)
இன்றைக்குளர்
நாளைக்கில ரெனக்கண்ணெதிர் கண்டுங்
குன்றொத்திடு
மனநைந்துனைக் குறியாதுழல் கின்றே
னென்றைக்குநின்
றிருத்தாடர வென்கண்ணெதிர் வருவாய்
கொன்றைச்சடை
யார்நற்றவக் குருவேயடைக் கலமே.
(6)
நாட்டங்கொடு
மாறாதுள நடுவாகிய வணையிற்
றேட்டங்கொடு
நிற்பார்தினந் தெரிசித்திடும் பொருளே
வாட்டங்கொடு
மாழ்குமெனை வாராயென வுண்மைக்
கூட்டந்தனில்
வைப்பாய்பொதுக் குருவேயடைக் கலமே.
(7)
இரவும்பக
லோவாதுநின் னிணைத்தாமரை யடிகள்
பரவுஞ்சுகந்
தருவாயெனப் பல்கான்முறை கேட்பாய்
கரவின்றிய
மனத்தார்நிதங் காணும்பெரு நிதியே
குரவம்புனை
தோளாய்பொதுக் குருவேயடைக் கலமே.
(8)
நில்லாவுட
லிதைமெய்யென நெடுநாளலைந் தின்னும்
பொல்லாமனத்
தானைந்திடும் புண்பாடொழிந் திலனே
யெல்லோனெனக்
காண்பாயிது வென்னோவறிந் திலையோ
கொல்லார்மனந்
தனைநாடிய குருவேயடைக் கலமே.
(9)
உள்ளத்தெழும்
புண்பாடிவ ணுனையன்றியா ரறிவார்
கள்ளத்தன
மன்றென்பதுன் கருத்திற்றெரிந் ததுவே
யெள்ளத்தனை
யருட்பார்வையிங் கெய்திற்றுயர் தீர்வேன்
கொள்ளற்கரு
நிதியேபொதுக் குருவேயடைக் கலமே.
(10)
கணநாதனொ
டுமையாயொளிர் கயிலைக்கதி பதியாய்
மணமார்துள
வொடுமாதினை மார்பிற்றரித் தவனாத்
தணவாதொளிர்
பரனாகிச்சண் முகனாகவு மவிர்வாய்
குணமேருவே
சமயப்பொதுக் குருவேயடைக் கலமே.
(11)
அருவாயுரு
வானாயெந்த வகிலந்தனி னீயே
மருவாப்பொரு
ளுளதோவென்றன் மனநோவறி யாயோ
தருவாய்சுகந்
தருவாய்பதந் தருவாய் நறுந்தமிழுக்
கொருதாயென
வொளிரும்பொதுக் குருவேயடைக் கலமே.
(12)
பூமாதுகோ
னெனத்தோன்றியிப் புவியின்றுயர் தீர்ப்பா
யேமாந்தவர்க்
கரியாயுன்ற னிருசீறடி மறவா
ராமானந்தன்
றுதிகேட்டரு ணல்கும்புவி யெங்குங்
கோமானென
வொளிர்வாய்பொதுக் குருவேயடைக் கலமே.
(13)
முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக