திங்கள், 12 அக்டோபர், 2026

இராமானந்தரின் திருவுந்தியார்

 

தவத்திரு இராமானந்த சுவாமிகள் அருளிச் செய்த

இராமானந்தரின் திருவுந்தியார்

தாழிசைகள்

அகிலத்தி லுள்ள சராசர மெல்லா

மசைத்திடு சித்தனென் றுந்தீபற

            வாசா னவனேயென் றுந்தீபற.          

(1)

அண்டங்க யெல்லா மணுவினுள் ளாக

வமைத்திட வல்லானென் றுந்தீபற

            யாவையு மானானென் றுந்தீபற.       

(2)

அல்ல லறுத்தென் னறிவை விளக்கிய

வப்ப னவனேயென் றுந்தீபற

            வன்னையு மானானென் றுந்தீபற.     

(3)

ஆசைவிட் டோர்களை நேசம்வைத் மென்று

மழியாது வைப்பானென் றுந்தீபற

            வாக்கி யளிப்பானென் றுந்தீபற.        

(4)

ஆதர வில்லாம லண்டங்க ளெல்லா

மடுக்கா யமைத்தானென் றுந்தீபற

            வானந்த சித்தனென் றுந்தீபற.           

(5)

ஆதியிற் றானே யடிமுடி காட்டாது

சோதியாய் நின்றானென் றுந்தீபற

            சொல்லி லடங்கானென் றுந்தீபற.     

(6)

இரவு பகலா யிருந்தே நடிப்போனைப்

பரவுவார் மேலோரென் றுந்தீபற

            பாலமு துண்பாரென் றுந்தீபற.          

(7)

இணங்கு மிடங்கொண் டிணங்கச்செய் வார்க்கு

வணங்கித் திரிவானென் றுந்தீபற

            மன்றுண் ணடிப்பானென் றுந்தீபற.   

(8)

ஈராறி னான்கை யெறியாது சேர்த்திடில்

வாராத தென்னேயென் றுந்தீபற

            வள்ள லவரேயென் றுந்தீபற. 

(9)

ஈரமில் லார்நெஞ்சில் வாரம்வைக் காதென்றுந்

தூரமாய் நிற்பானென் றுந்தீபற

            சூழ்ச்சி உடையான் என்று உந்தீபற. 

(10)

உசுவாச நிஸ்வாச வுண்மை யறிந்திடில்

விசுவாச மாவானென் றுந்தீபற

            வேதத்துக் கெட்டானென் றுந்தீபற.   

(11)

உள்ளும் புறம்பெங்கு மொன்றாகி நின்றானைத்

தள்ளுவ தென்னேயென் றுந்தீபற

            சர்வ மவனேயென் றுந்தீபற.  

(12)

ஊனாகி நானாகி வானாகி நின்றானை

யோதப் படுமோவென் றுந்தீபற

            வுண்மையி னுண்மையென் றுந்தீபற.

(13)

ஊதிப்பொன் னம்பலத் தொன்றாக்கிக் கொண்டிடிற்

சோதிப் பொருளாமென் றுந்தீபற

            தோன்ற லவரேயென் றுந்தீபற.         

(14)

எட்டானைக் கண்டே யிணங்கி யிருந்திடி

லிட்ட மளிப்பானென் றுந்தீபற

            வேகமாய் நிற்பானென் றுந்தீபற.      

(15)

எட்டா யிரண்டாகி யெல்லா வுயிர்களி

லொட்டாது நின்றானென் றுந்தீபற

            வுலவாப் பொருளேயென் றுந்தீபற.   

(16)

எங்கெங் கிருந்துயி ரேதேது வேண்டினு

மங்கங் களிப்பானேன் றுந்தீபற

            வண்ண லவனேயென் றுந்தீபற.        

(17)

ஏது மறியார்போ லெல்லா மறிந்துள்ளே

சூதா யிருந்தானென் றுந்தீபற

            சொல்லுக் கடங்கானென் றுந்தீபற.   

(18)

ஏக்கங் கெடுத்தவர்க் காக்கங் கொடுத்துள்ளே

யேகமாய் நிற்பானென் றுந்தீபற

            வேறி யிறங்கானென் றுந்தீபற.         

(19)

ஏமன் வராமலே சேமஞ்செய் வான்யாவு

மோடென்று கண்டோர்க்கென் றுந்தீபற

            வுள்ளாகி நிற்பானென் றுந்தீபற.       

(20)

ஐந்தொழில் செய்ய வணுவினுள் ளாகியே

சிந்தை களித்தானென் றுந்தீபற

            சிற்சபை யப்பனென் றுந்தீபற.           

(21)

ஒட்டானைக் கண்டுள்ளே யொன்றாக்கிக் கொண்டிடிற்

கிட்டாத தென்னேயென் றுந்தீபற

            கேடு தவிர்ப்பானென் றுந்தீபற.         

(22)

ஒத்த மனத்தோ டுறவாய்க் கலந்திடிற்

சித்தி யளிப்பானென் றுந்தீபற

            தீவினை தீர்ப்பானென் றுந்தீபற.       

(23)

ஒத்த விடந்தனி னித்திரை செய்யென்ற

துத்தமர் காண்பாரென் றுந்தீபற

            வுலக ரறியாரென் றுந்தீபற.   

(24)

ஒன்றே யிரண்டாகி மூன்றாகி யைந்தாகி

நின்றாடு வானேயென் றுந்தீபற

            நித்தியா னந்தனென் றுந்தீபற.          

(25)

ஓங்காரத் துண்ணின்றே ரீங்கார மாகவே

யோங்கி யெழுந்தானென் றுந்தீபற

            வுலகைப் படைத்தானென் றுந்தீபற.  

(26)

ஓட்டோடு பொன்னையு மொக்க மதிப்போர்க்குக்

கூட்டாளி யாவானென் றுந்தீபற

            கூடிப் பிரியானென் றுந்தீபற.

(27)

ஓவாப் பொருளாகி யுள்ளே நடிப்போனே

தேவாகி நின்றானென் றுந்தீபற

            சித்தி யளிப்பானென் றுந்தீபற.          

(28)

கண்டோரைக் கண்டு கலந்துற வாகிப்பின்

கொண்டாட்டஞ் செய்வானென் றுந்தீபற

            குதர்க்க மறியானென் றுந்தீபற.         

(29)

கற்பனை விட்ட கருத்தை யகலாது

பொற்பதம் வைப்பானென் றுந்தீபற

            புல்லற் கரியானென் றுந்தீபற.           

(30)

கலங்கு மனப்பேயைக் கட்டி யிருத்தில்

விலங்கா திருப்பானென் றுந்தீபற

            வேத முடிவானென் றுந்தீபற.

(31)

காணாம லுண்மை கலகஞ்செய் வாதர்கள்

வீணா யழிவரென் றுந்தீபற

            வெட்ட வெளியேயென் றுந்தீபற.      

(32)

காணு முயிர்கண்மேற் பூணுமன் புள்ளார்க்குத்

தோணும் பொருளேயென் றுந்தீபற

            சூழ்ச்சி யறிவானென் றுந்தீபற.         

(33)

காம வினையைக் கருத்தில் விடுத்தோர்க்குச்

சேம ம்ளிப்பானென் றுந்தீபற

            சிறப்பைத் தருவானென் றுந்தீபற.     

(34)

கிட்டாப் பொருளென்ற கீழ்மதி யோருட

னொட்டித் திரிந்தானென் றுந்தீபற

            வுள்ளே கலந்தானென் றுந்தீபற.        

(35)

கிட்டி யிருந்தும்பின் கேள்வியில் லாதாரை

விட்டுப் பிரிந்தானென் றுந்தீபற

            வேதப் புரவியென் றுந்தீபற.  

(36)

திருவுந்தியார் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக