திங்கள், 12 அக்டோபர், 2026

அரசூர் அங்கித்தொழுவு காளியம்மை பதிகம்

 

தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த

அரசூர் அங்கித்தொழுவு காளியம்மை பதிகம்

(அறுசீர் ஆசிரிய விருத்தம்)

1.         திருப்பொலியும் மணிமுடியும் தாமரைநேர்

                        திருமுகமும், செய்ய வாயும்

            உருக்கருணை பொழிவிழியும், பரவபரத்

                        திருமார்பும் உதவும் சீர்சால்

            தருப்பொலியும் கரமலரும் ஆயுதந்தாங்

                        கியகரமும் தமியேன் காணக்

              கருத்துயர்தீர் காட்சிநல்கா யணியங்கித்

                        தொழுவில்வளர் காளித் தாயே.

 (1)

2.         நன்றான யாவுமருள் பெருந்தேவி

                        உனதுபதம் நாடிப் பாடிக்

            குன்றாத வழிபாடு செய்கின்ற

                        மெய்யடியார் கூட்டத் தோடே

            ஒன்றாகக் கூடி யிகபர நலச்சீர்

                        யாவுமெய்த வுதவி யுள்ளம்

            கன்றாத வாழ்வருள்வா யருளங்கித்

                        தொழுவில்வளர் காளித் தாயே.                                 

 (2)

3.         கொங்குவளத் திருநாட்டி லணித்தாரா

                        புரவட்டங் கோவில் கொண்டு

              கொங்குவே ளாளர்களில் நற்பவள

                        கூட்டத்தார்க் குலதே வாகத்

              தங்கியருள் புரிதேவி மயிடனைச்செற்

                        றன்பர்துயர் தனைத்தீர்த் தாண்டாய்

              கங்குல்பக லுனைவணங்க வருளங்கித்

                        தொழுவில்வளர் காளித் தாயே.                                 

 (3)

4.         நாட்டினிலே பொல்லாங்கு நண்ணிடலால்

                        உள்ளம்மிக நைந்துன் மேன்மைப்

            பாட்டினிலே யென்றுலகம் திருந்துமென

                        எண்ணுமெண்ணம் பலிக்கச் செய்து

            கேட்டினிலே செல்பவர்மேம் பாட்டினிலே

                        வீட்டுநெறிக் கேண்மை யெய்தக்

              காட்டிடுவாய் சரண்சரண மணியங்கித்

                        தொழுவில்வளர் காளித் தாயே.                                 

 (4)

5.         பொருள்நயமார் செந்தமிழின் சொன்மலரால்

                        பன்மலரால் போற்றி செய்வார்

            மருள்மயமார் மலமறுத்தாட் கொண்டருளும்

                        பெருந்தேவீ வளமார் கோவில்

            அருள்மயமாய் விளங்குதற்குத் திருப்பணிகள்

                        செய்திட்டோ ரனைவ ருக்கும்

            கருணையினால் நலமருள்வா யருளங்கித்

                        தொழுவில்வளர் காளித் தாயே.                                 

 (5)

6.         எந்தவிதத் தாலுமுனைப் பணிபவர்கள்

                        எல்லோருக்கு மினிய வாழ்வு

            தந்தருளும் கருணையுள்ளா யென்றறிந்து

                        நின்னடியைச் சார்ந்து நின்றேன்

            தந்தமத களிற்றுமுகக் கணபதிக்கும்

                        அயிலேந்துஞ் சாமி நாதக்

            கந்தனுக்கும் தாயான யணியங்கித்

                        தொழுவில்வளர் காளித் தாயே.                                 

 (6)

7.         புவிமுதலா மேடணையில் சிக்காமல்

                        உன்னடியில் பூசை செய்து

            கவியதனால் துதித்திடும்நற் கண்ணியமுற்

                        றிடவென்னைக் காத்தாட் கொள்வாய்

            அவிசொரிந்து பாண்டியன்செய் பெருவேள்விக்

                        கனலினிடை யன்று வந்த

            கவினுடைய பெருமாட்டீ யணியங்கித்

                        தொழுவில்வளர் காளித் தாயே.                                 

 (7)

8.         பண்ணொலிக்குஞ் செந்தமிழில் பாட்டிசைத்த           

                        கவிராச பண்டி தற்கு

            விண்ணொலிக்கும் மகளுருவில் சென்றமுது

                        செய்தளித்த வியன்சீர் கேட்டேன்

            நண்ணொருமைப் பண்பறியே னானாலும்

                        நயந்தருட்சீர் நல்கி யாள்வாய்

            கண்ணொருமூன் றுடையாளே  யருளங்கித்

                        தொழுவில்வளர் காளித் தாயே.                                 

 (8)

9.         நீட்சிபெறும் பிறப்பிறப்பால் நொந்துழலும்

                        பெரும்பாவ நிலைமை யாலே

            மீட்சிபெற முடியாம லிருப்பேனை

                        நீயருளால் விலக்கி யாள்வாய்

            மாட்சிபெறும் தென்மதுரை யரசாண்ட

                        பெருந்தேவீ வளமா ருன்றன்

            காட்சிபெறத் தந்தருள்வா யணியங்கித்

                        தொழுவில்வளர் காளித் தாயே.                                 

 (9)

10.       முமலவினைப் பிணிப்பகன்ற பெருந்தவத்தோர்

                        தொண்டுசெய்ய முயல கில்லேன்

            விமலமுறு பரஞான வீட்டினிடைச்

                        சேரும்நலம் மேவு வேனோ

            அமலபர சிவன்காணக் கனகசபை

                        இடத்திலெதி ராக வாடும்

            கமலமலர்த் தாளுடையாய்  யருளங்கித்

                        தொழுவில்வளர் காளித் தாயே.                                 

 (10)

11.       தஞ்சமென நினையடைந்தோர் தமைக்காக்கும்

                        தயையுடைய தாயே நின்றன்

            செஞ்சரணம் போற்றுமெனக் கஞ்சலெனக்

                        காட்சிதந்து திருந்த வாள்வாய்

            மிஞ்சணியார் காசியில்வி சாலாட்சி

                        மதுரையில்மீ னாட்சி யாகிக்

            கஞ்சியிற்கா மாட்சியாகி மணியங்கித்

                        தொழுவில்வளர் காளித் தாயே.                                 

 (11)

12.       பாலனெனக் குமரனென விருத்தனென

                        வாழ்ந்திருக்கும் பான்மை யற்ற

            சீலமுறும் சித்தரெலாம் பெரிதேத்தும்

                        தேவியெனத் திகழும் நீயே

            சாலவுயர் தெய்வமெனப் பணிபுரிவேன்

                        தருமனெனைச் சாரும் பொல்லாக்

            காலபயம் தவிர்த்தாள்வா யருளங்கித்

                        தொழுவில்வளர் காளித் தாயே.                                 

 (12)

13.       கந்தமலித் பொழிற்சிரவைக் கவுமாரத்

                        திருமடத்தில் கவிஞர் தொண்டு

            சொந்தமுறச் செயும்நலமார் சுந்தரப்பேர்

                        பெறுமடியேன் துதிப்ப தான

            சந்தம்மலி காளித்தாய்ப் பதிகமிதை

                        நாள்தோறுஞ் சாற்று மன்பர்

            சிந்தனையில் வந்தநல மத்தனையும்

                        பெற்றுமிகச்  சிறப்பா ரன்றே.                        

 (13)

வாழ்த்து

14.       அங்கித் தொழுவில் அவிர்காளித் தாய்வாழ்க

            துங்க முறப்போற்றும் தூயவரெல் லாம்வாழ்க

            அங்கவள்கோ யிற்காம் பணிசெய் பவர்வாழ்க

            மங்களமா யெவ்வுயிரும் மாண்புடனே வாழியவே.



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக