திங்கள், 12 அக்டோபர், 2026

அரசூர்த் தோத்திரங்கள்

 

தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த

அரசூர்த் தோத்திரங்கள்

திருப்புகழ்

தந்தனா தனதான - தனதானா

1.         பந்தபா சமெலாம் கன்றமா தவம்மேவு

                                    பண்புநா யடியேனெய் - திடுவேனோ

                        பண்குலா வியபாடல் விண்டுனா தெழில்நீள்ப

                                    தங்கள்மேல் மலர்தூவி - மகிழ்வேனோ

            மந்தனா கியபாவி யென்றனா துளம்நோவ

                                    வந்துநீ ளிடர்கோடி - தரலேனோ

                        மங்களா கரமான வுன்றன்மா ணுறுசேவை

                                    மைந்தனா மடியேன்முன் - அருள்வாயே

            கந்தமா மலர்மேவு சைம்பொன்மா தொடுவாணி

                                    கஞ்சம்நேர் கழல்பேண - வருதாயே

                        கண்டுபா கொடுதேனை மிஞ்சுபா நுவல்சீலர்

                                    கண்டுகூ றிடநீடும் - இசையாளே

            சந்தமார் மலைமீது நின்றுநா டகமாடு

                                    தண்டைதோய் கழல்வேலன் - அனையாவாய்

                        தண்குலா வியசோலை துன்றுசீ ரரசூர்கொள்

                                    தங்க நாயகியான – உமையாளே.                  

 

அரசூர் விநாயகர் துதி

(எண்சீர் ஆசிரிய விருத்தம்)

2.         சந்திரன்ற னிளம்பிறையுங் கங்கையுஞ்செஞ் சடையில்

                        சாரவணிந் திட்டபரன் றன்சுதனா வந்தாய்

            தந்திமுகத் துடனைந்து கைகளுடைப் பரனே

                        தானவனாம் கயமுகனைத்தடித் தருள்கொம் புடையாய்

            புந்திமகிழ் வுடனன்பர் தருவனமுற் றேற்பாய்

                        புனிதமுறு மறுகெடுத்துப் பூசிப்பார்க் கெளியாய்

            வந்திறைஞ்சு மவர்க்கெல்லா வாழ்வுமளித் தருள

                        வளம்கொள் ளரசூரினிடை மருவுகண பதியே.

 

அரசூர் தண்டபாணிக் கடவுள் திருப்புகழ்

தனதான தந்ததான - தனதானா

3.         கருவூட மைந்துவாதை தருமோரு டம்புவேறு

                                    கவினாது யர்ந்தபேறு - பெறுவேனோ

                        கனிவாகும் நெஞ்சினோடு னிருதாள் பணிந்ததூயர்

                                    கழல்நாடு பண்பில்நாளும் - முயல்வேனோ

            மருவார்க டம்புலாவு புயமாறி ரண்டின்மீது

                                    வடிவேலி லங்குமாறு மயில்மீதே

                        மடவாரி ரண்டு பேரும் நிகழ்சேவை தந்துபாத

                                    மலர்சூடு கின்ற வாழ்வு தருவாயே

            கருமேக மென்று நீடு குழல்சோர நின்றமாது

                                    களிகூர வந்தமாயன் மருகோனே

                        கலைமான ணிந்த யீசர் கனல்வீசு கண்களூடு

                                    கவினார்பு லிங்கமாக வரும்வேளே

            அருணாச லமதனூடு வருமாத வன்சொல்பாடல்

                                    அறைவார்வி ரும்பும்யாவு மருள்சேயே

                        அணிமேவு தண்டபாணி யெனவேமெய் யன்பர்பேணும்

                                    அரசூரி டங்குலாவு பெருமாளே.

 

அரசூர் நாராயணக் கடவுள் துதி

(இரட்டை ஆசிரிய விருத்தம்)

4.         உலகினிடை உள்ளபல பொருளெலாம் நீயுண்

                                    டுமிழ்ந்திட்ட தாமவற்றை

                        உன்வடிவ மாகவே கண்டுணரும் ஞானநிலை

                                    ஒன்றைநீ யருள்செய்வயேல்

            கலகமிடும் ஐவருக் குள்ளாகி யழியாது

                                    கவின்நீடு குருகூரன்நேர்

                        காணும்மெய்ப் பாகவதர் தொண்டுசெய் துய்ந்திடும்

                                    கண்ணியம் நண்ணுவேன்காண்

            சலசமல ரனையகர மும்பாத மும்துணைத்

                                    தாள்களும் சாரும்மாலே

                        சங்குசக் கரமம்பு தண்டுவில் லாயபடை

                                    தாங்கிடும் செங்கையானே

            அலர்மகளுந் நிலமகளு மிருபுற மிலங்கிட

                                    அடற்கருடன் மீதுவருவாய்

                        அண்டர்கள்ப ராவருட் கொண்டலே   அரசூரில்                                              

                                    அவிர்நா ரணக்கடவுளே.          

 

அரசூர் இராசாத்தாள் துதி

(எண்சீர் ஆசிரிய விருத்தம்)

5.         ஆடுமர வப்பணிச்சங் கரன்றனிடத் தவிரும்

                        அம்மையென யெம்மையெலா மன்பொடுகாத் தருளும்

            பீடுபெறு முமையம்மை திருவருளாற் கொள்ளப்

                        பிறங்குபல வுருவிலொன்றாய்ப் பெரிதுவந்து நாளும்

            கூடுமன்பா லேத்திவழி பாடுசெய்வோ ருள்ளங்

                        குறித்தநல மெல்லாமும் கொடுத்தருளும் தாயே

            நாடுபுக ழரசூரின் கோயிலிடத் தவிரும்

                        ராசாத்தா ளென்றபெயர் நண்ணிடுமம் பிகையே.      

 

அரசூர் கருப்பராயசாமி துதி

(அறுசீர் ஆசிரிய விருத்தம்)

6.         உருப்ப டாத சிறுபயன்வேட்

டுயிர்கொன் றூணைப் படைக்கமனம்

            ஒருப்ப டாத மெய்யன்பர்

உவந்து நாளும் பணிந்தேத்த

            விருப்ப மாக வருமரசூர்

வியனார் பதியில் வாழ்வீரக்

            கருப்ப ராய னென்றபெயர்க்

கடவு ளே!நின் கழல்போற்றி. 

 

அரசூர் பேச்சியம்மன் துதி

7.         காய்ச்சி வடித்த பாலனைய

கவிசொற் றேத்தா துலகர்வஞ்சப்

            பேச்சி லேச்சில் சிக்கிமனம்

பிறழா வாறு காத்தெனையாள்

            வீச்சிற் கொடுந்தா னவரழிய

மின்னும் வடிவா ளேந்தியகைப்

            பேச்சி யம்மே அரசூரில்

பெரிது முன்தாள் பேணுவனே.

 

அரசூர் வாழ்த்து வெண்பா

(நேரிசை வெண்பா)

8.         வாழ்க அரசூரில் மன்னுதங்க நாயகித்தாய்

            வாழ்கமற்றைத் தெய்வ வடிவங்கள் - வாழ்கவே

            அக்கடவு ளாரை அநுதினமும் போற்றுமன்பர்

            மிக்கநலம் பெற்றுலகின் மேல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக