திங்கள், 12 அக்டோபர், 2026

அன்னியூர்க் கரிவரதராஜப் பெருமாள் பஞ்சகம்

 

தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த

அன்னியூர்க் கரிவரதராஜப் பெருமாள் பஞ்சகம்

(அறுசீர் ஆசிரிய விருத்தம்)

பரிதி நிகர்த்த திருமுடியும்

பவள மன்னத் திருவாயும்

கரிய நீலத் திருமேனிக்

கவினும் கலினக் கடலின்மிசை

உரிய விருதே வியர்நாப்பண்

உனது சேவை சாதிக்க

வருவாய் அன்னி யூர்க்கொள்கரி

வரத ராஜப் பெருமாளே.        

 (1)

உலகைப் படைக்க பிரமனையும்

            உவகை அளிக்க காமனையும்

இலகப் படைத்தாய் அவரிருவர்

            இயற்றும் தொழிலால் சலிப்படைந்தேன்;

அலகில் கருணை விருதாயர்

            அருளில் திளைக்கப் புரிந்துனடி

மலர்தா அன்னி யூர்க்கொள்கரி

            வரத ராஜப் பெருமாளே.        

 (2)

பன்னும் தமிழ்ப்பா காஞ்சியிடை

            பகரும் கவிஞன் தனக்காக

மின்னும் பணிப்பாய் சுருட்டிப்பின்

            மேவும் விமலா  உனதடியேன்

அன்னை மார்கண் ணருள்பெற்றுன்

            அடியே கூடக் கூட்டிடுவாய்

மன்னும் அன்னி யூர்க்கொள்கரி

            வரத ராஜப் பெருமாளே.                                            

 (3)

ஏழ்வா ரிதிநேர் பெருங்கருணை

            எங்கள் பெருமா னுனைப்பாடி

வீழ்வார் பிறவித் துயர்நீங்கி

            மின்னு மருளில் கூடிடும்நல்

ஆழ்வார் கள்தா மடைந்தவின்பம்

            அதனை யளித்தான்  செல்வமுடன்

வாழ்வார் அன்னி யூர்க்கொள்கரி

            வரத ராஜப் பெருமாளே.                                            

 (4)

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்

            சூட்டும் மாலை யுடனன்பால்

பாடிக் கொடுத்த மாலைக்குப்

            பரிசாய் அன்னாள் தனையேற்றாய்

வாடித் துயரா லுனைப்போற்றும்

            வண்மை அடியேம் துயர்களைவாய்

மாடத் தன்னி யூர்க்கொள்கரி

            வரத ராஜப் பெருமாளே.                                            

 (5)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக