திங்கள், 12 அக்டோபர், 2026

இரத்தினாசலம் குமரக்கடவுள் பதிகம்

 

தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த

இரத்தினாசலம் குமரக்கடவுள் பதிகம்

காப்பு

(நேரிசை வெண்பா)

தரத்திலுயர் கோவைத் தலத்தின் வடபால்

இரத்தினப்பே ரன்ப ரிசைக்கும் - வரத்தியல்பார்

குன்றி லவிருங் குகன்துதிப்பாக் கூறெனக்கு

வென்றி தரும்துணைவை வேல்.        

 (1)

நூல்

(எழுசீர் ஆசிரிய விருத்தம்)

திருவளர் தருசெந் தாமரை முகமும்

            திருவருள் விழிகளும் பவள

உருவளர் மேனிப் பொலிவும்வந் தடைந்தோர்க்கு

            உதவிடும் கைகளும் தொண்டர்

கரவளர் பிறவி நீக்கிடும் பதமும்

            கவின்றிடக் காட்சிதந் தருள்வாய்

குருவளர் மகிமை இரத்தின கிரிவாழ்

            குமரனே அமரர் நாயகனே.                

 (2)

நாடியே உன்னைச் செந்தமிழ்க் கவியால்

            நன்குபா டாமல்வை தவர்க்கும்

தேடிய நல்வாழ் வருளுவா யென்று

            திருவரு ணாபுரிப் புலவன்

பாடிய பாடல் கேட்டடிச் சிறியேன்

            பைந்தமிழ்த் துதிசெய விழைந்தேன்

கூடிய தொண்டர் இரத்தின  கிரிவாழ்

            குமரனே அமரர்நா யகனே.                

 (3)

பொங்கும்மங் கலங்கள் தந்திடு முனது

            பொற்பதம் தன்னையுள் ளமைத்துக்

கங்குலும் பகலும் கருதியே வின்பக்

            கடலினில் மூழ்கிடப் புரிவாய்

பங்குகொண் டன்பர் காவடி யெடுத்துப்

            பாடியா டிப்பணிந் தேத்தக்

கொங்குநாட் டணியா மிரத்தின கிரிவாழ்

            குமரனே அமரர்நா யகனே.                            

 (4)

தருவடி யிருந்திட் டின்புறுந் தேவர்

            தமதுல காசையும் விடுத்துன்

திருவடி கருதி யன்புறும் யோகச்

            சிறப்பினைப் பெறத்தயை புரிவாய்  

பெருவடி வம்கொண் டவுணர்கோன் காணப்

            பிறங்கினை யன்றிந்தா ளெமக்கோர்

குருவடி வாகி இரத்தின கிரிவாழ்

            குமரனே அமரர்நா யகனே.                            

 (5)

நம்பிடு மன்பர்க் கிகபரச் சீர்த்தி

            நல்கிடு முன்றனை மறந்து,

வெம்பிடு முலக வாழ்க்கையி லுழலும்

            வினையினை யகற்றியாட் கொள்வாய்

வம்பிடு மலர்கள் கொண்டுநற் பூசை

            வளம்பெறச் செய்துவந் தன்பர்

கும்பிடு மகிமை இரத்தின கிரிவாழ்

            குமரனே அமரர்நா யகனே.                            

 (6)

அறமெலா முயிர்கொல் லாமையு ளடங்கும்

            அருமையை யுலகினர்க் குணர்த்துந்

திறமெனக் கருளி யாண்டருள் புரியத்

            திருவுளத் தினிற்கரு தாயோ

மறவர்கோ னாகி, வேங்கையாய்ப் பின்பு

            மாதவ முனிவனு மாகிக்

குறமகட் கொண்டாய் இரத்தின கிரிவாழ்

            குமரனே அமரர்நா யகனே.                            

 (7)

தஞ்சமு னடியே யாகவந் தடைந்தேன்;

            சற்றுநீ திருவுள மிரங்கி

அஞ்சலென் றருளி யாண்டருள் புரிவாய்

            அன்புடன் திருவடி நினையா

வஞ்சனென் றென்னை நீபுறம் தள்ளில்

            மற்றுமோர் துணையிலேன் கண்டாய்

கொஞ்சுமஞ் சுகமார் இரத்தின கிரிவாழ்

            குமரனே அமரர்நா யகனே.                            

(8)

உற்றதாம் பிறப்புத் தோறும்வீ ணுடலை       

            ஓம்பியே அவத்தினி லுழன்றேன்

பெற்றவிப் பிறப்பி லேனுமுன் பணியே

            பெரிதுசெய் திடக்கடைக் கணித்து

நற்றவத் தொண்டர் தம்முடன் கூட்டி

            நல்லருள் வழங்கிலார் தடுப்பார்

குற்றமற் றவர்சூழ் இரத்தின கிரிவாழ்

            குமரனே அமரர்நா யகனே.                            

 (9)

பிறைமுடிச் சடைகொள் சிவபிரான் உமையாள்

            பிறங்குசீர் மடித்தலத் தினிலும்

மறைமுடி யிடத்தும் மலைமுடித் தலத்தும்

            வயங்குமுன் திருவடித் துணைகள்

கறைமுடிப் பமையென் சிந்தையி னிடத்தும்

            கவின்றிட வேண்டினே னன்பர்

குறைமுடித் தருள இரத்தின கிரிவாழ்

            குமரனே அமரர்நா யகனே.                

(10)

பந்தமார் வினையில் சுழன்றிடா தின்பப்

            பதியெனும் பாததா மரைக்கண்

சந்தவண் ணங்கள் முதலிய பாடல்

            சாத்திரத் திடத்தயை புரிவாய்

வந்தனை புரிவோர்க் கிருமையின் பங்கள்

            வழங்கிடத் திருவருள் சுரந்து

கொந்தலர்ப் பொழில்சூழ் இரத்தின கிரிவாழ்

            குமரனே அமரர்நா யகனே.                            

 (11)

நன்றெலாம் தினமு முலகினர் கொள்ள

            நல்கிட வேண்டுமன் புடனே

சென்றெலா விடத்தும் நின்புகழ் கூறுஞ்

            சிறப்புற வேண்டுமென் றருள்வாய்

மன்றெலாம் நடிக்கும் பரமனா ரருட்கண்

            மணியென வந்துதித் துயர்ந்த

குன்றெலாம் கொண்டாய்  இரத்தின கிரிவாழ்

            குமரனே அமரர்நா யகனே.                            

 (12)

அடுத்தநின் கோவில் சிறப்புற வேண்டி

            ஆவல்கொண் டரும்பெரும் பணிகள்

எடுத்துள தொண்ட ரெண்ணிய யெண்ணம்

            யாவையும் நிறைவுறப் புரிவாய்

தொடுத்தவல் வினையைத் தொலைத்திடும் புகழ்ப்பாச்

            சொல்லியெத் திடுமவர்க் கின்பம்

கொடுத்தருள் புரிய இரத்தின கிரிவாழ்

            குமரனே அமரர்நா யகனே.                            

 (13)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக