செவ்வாய், 13 அக்டோபர், 2026

இரத்தினாசலத் திருப்புகழ்

 

தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த

இரத்தினாசலத் திருப்புகழ்

                        தனத்த தானன தானன - தனதானா

வடித்த தேன்நிக ராமென

                        இனிப்பு தோய்தமி ழாலியல்

                        வகைப்பல் பாடல்கள் நாள்தொறும் - நுவலேனோ

            வகுத்த வாம்மத கோடிகள்

                        எவற்றி னூடும்நி லாவருள்

                        வளத்தை யாவரு மோர்வகை - புரியேனோ

கடித்த வாளுயி றோடொரு

                        பகட்டின் மேல்கொடு பாசமோர்

                        கரத்தி னூடுற வேவரும் - நமனாலே

            கலக்கம் மேவிட லோவிட

                        எழிற்செய் தோகையின் மீதொரு

                        கணத்தி லேவர நீயுளம் - இசைவாயே

படித்த மாமறை வேதியன்

                        அழச்செய் தேமறை தோய்பொருள்

                        பயிற்று தேசிக னாகிய - முருகோனே

            பகைத்த சூரன்அ நாளொரு

                        கடற்கண் மாமரம் சாடிய

                        பதத்தில் வேல்கொடு சாடிய - திறலோனே

இடிக்கு நேரொலி யார்குரு

                        கமைத்த நீள்கொடி தோய்புகழ்

                        இசைக்கும் மாதவ ராவல்கள் - தருவோனே

            இமைப்பி லாலம ரேசரும்

                        விருப்பம் மேவிட நீடெழில்

                        இரத்தி னாசல மீதுறை – பெருமாளே.

வாழ்த்து வெண்பா

(நேரிசை வெண்பா)

இரத்தினப்பேர்க் குன்றிலவி ரெங்கோன்சீர் வாழ்க

கரத்திலகு வேலைக் கழலை - உரத்தினுடன்

எண்ணிப் பணியுமண்பர் எஞ்ஞான்று மின்பமெய்திக்

கண்ணியமா நீடுவாழ் க.        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக