செவ்வாய், 13 அக்டோபர், 2026

உடையாம் பாளையம் விசுவநாதர் பதிகம்

 

தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த

உடையாம் பாளையம் விசுவநாதர் பதிகம்

காப்பு

(நேரிசை வெண்பா)

பத்தர் திகழுடையாம் பாளையத்தி னில்ச்சுரரும்

நத்த வளர்விசுவ நாதன்மிசை - சித்த

முவந்து பதிகமு ரைக்கைங்கைக் கோமான்

நிவந்ததுணை ஆவானுள் நின்று.

 (1)

நூல்

(எண்சீர் ஆசிரிய விருத்தம்)

தூயபுனல்க் கங்கையுடன் திங்களிளம் பிறையைச்

            சூடியசெஞ் சடை முடியுந் தும்பையுடன் பிறையைச்

மேயமலர் மாலைதிரு மால்பிரமன் கொன்றை

            வியன்மாலை யாதியவிர் மேன்மைகொளுன் கோலம்

தூயதவத் தினர்கண்டு போற்றிமகிழ்ந் திருந்தார்

            துரியறும்நான் கண்டுமகிழ் தோய்ந்திடும்நா ளுளதோ

பாயடல்வெம் புலியின்தோ லுடையுடையா யுடையாம்

            பாளையத்தி னவிர்விசுவ நாதபசு பதியே.     

 (2)

மாலனைய நாயகன்தந் திடும்கனியை யடியார்

            மகிழ்ந்தருந்த உதவியநன் மாண்புறும் மெய்த் தவமார்

வேலனையக் விழிக்காரைக் காலம்மை வேண்ட

            வியன்கொளிரு மாங்கனியை மென்மையுறத் தந்தாய்

சேலனைய கண்கொளுமை யவளையிடத் தமைத்தாய்

            சிறு கழந்தை வேல்க்குகனை திகழநடு வைத்தாய்

பாலனைய நீறணிவாய் விடையுடையா யுடையாம்

            பாளையத்தி லவிர்விசுவ நாதபசு பதியே.                  

(3)

வீடுமனை மக்கள்சுற்ற மாயமெ யென்ன

            விரும்பியுழைத் துத்துரும்பாய் மேனிதளர் வெய்தித்

தேடுபொருள் பலவும்விட்டு நீடும்வினை தொடரத்

            தேகம்விடுத் ததற்பின்மறு செனனமுற்றிட் டிதுபோல்

வாடுவதே காண்பேனுன் மலரடியைப் போற்றி

            மாதவம்செய் யார்போல வருந்தவெனைப் புரியேல்

பாடுதமிழ் நால்வரருட் பாட்டுடையா யுடையாம்

            பாளையத்தி லவிர்விசுவ நாதபசு பதியே.                  

 (4)

நடையுடைமெய் யடியவர்போல் பாவனைசெய் துளத்தில்

            நஞ்சனைய வஞ்சகமே நாடியகே டுடையேன்

தடையுடைய வினைகளெலாம்  தவிர்ந்துயர்மா தவமே

            சார்ந்துநிலை தவறாமெய்ச் சார்புறுவேன் கொல்லோ

குடையுடைய நாடகத்துக் குகனைவிநா யகனைக்

            குழவியெனத் தழுவுமருட் கூத்துடையாய்; சூலப்

படையுடையாய் தொடையுடையாய் சடையுடையா யுடையாம்

            பாளையத்தி லவிர்விசுவ நாதபசு பதியே.                  

 (5)

பெண்புடையாம் படைசூழ வரும்மதனும் சமனும்

            பிரமனுமா மிவர்பகையைப் பெருந்தவத்தால் களைந்து

திண்புடைக்கும் புயமொருபத் துடையநின்சீர் போற்றும்

            தீரமுறும் வீரனெனச் சிறியனுறப் பணிப்பாய்

நண்புடையார் நாளும்வந்து நற்பணிசெய் தேத்தி

            நலம்பெறச்செய் கோயிலிடை நண்ணியினி தவிர்ந்தாய்

பண்புடையார் மிடையும்விருப் புடையானே உடையாம்

            பாளையத்தி லவிர்விசுவ நாதபசு பதியே.                  

(6)

அரிதினிற்பெற் றிடும்மனிதப் பிறப்பளித்தாய் நின்னை

            அநுதினம்போற் றிடப்பணித்தா யன்பர்குழு வளித்தாய்

விரிதிரைப்பார் புரந்தாலும் விண்ணரசாண் டாலும்

            மேவுபல வண்டங்க ளரசுபுரிந் தாலும்

பெரிதிதன்றென் றுணர்தகைமை யளித்தாய்மா யையினில்

                பிறழ்மனமோர் நிலையில்நிற்கும் பெருமையளித் திலையே

பரிதிமதி, தீயெனும்முக் கண்ணுடையாய் உடையாம்

            பாளையத்தி லவிர்விசுவ நாதபசு பதியே.      

 (7)

எங்குடையாய் நீயென்னத் தேடியலை யாமல்

            எங்குமுறு முனையென்மனத் தென்றுகண்டின் புறுவேன்

நங்குடையா யென்றிசைப்பத் தாருகமா வனத்து

            நங்கையர்முன் சென்றிரந்தந் நாளில்வசை பூண்டாய்

கொங்குடைவாத் தியுமிதழி மாலையும்தோய் புயத்தாய்

            குலவுமுன தோருருவில் கோதையையோர் பாற்கொள்

பங்குடையாய் தோலுடுக்கு மிடையுடையாய் உடையாம்

            பாளையத்தி லவிர்விசுவ நாதபசு பதியே.                  

(8)

விண்ணுருவாய்க் காற்றாகித் தீநீர்மண் ணாகி

            வெம்மைதண்மை தருசுடரா யுயிர்கள்பல வாகிப்

பெண்ணுருவோ டாண்ணுருவா யலியாகி நின்றாய்

            பேதுறுபன் றிக்குருளை பாலுணத்தா யானாய்

எண்ணுருநிற் கெதுமேலோ யானெவிதம் தேர்வேன்

            இமையமலைப் பாவையுட னெளிதுவந்தெற் காப்பாய்

பண்ணுறுபாட் டிசைவீணைக் கையுடையாய் உடையாம்

            பாளையத்தி லவிர்விசுவ நாதபசு பதியே.                  

(9)

வண்டிசைக்கும் மலரிலொன்று குறைந்ததற்காகத் தன்கண்

            மலர்பறித்துப் பூசைசெய்யும் மாயவனன் பெங்கே

தொண்டிசைக்கும் தவன்காண நின்திருக்கண் ணிடத்துச்

            சோரிநிற்கத் தனிவிழியைத் தோண்டுநனன் பெங்கே

விண்டிசைக்கும் தரம்மருவாச் சிறியேனன் பெங்கே

            விரும்பியெனை யாண்டருள்வா யாரூரன் முன்பு

பண்டிசைக்கும் வாதுடையாய் சீருடையாய் உடையாம்

            பாளையத்தி லவிர்விசுவ நாதபசு பதியே.                  

 (10)

புற்றரவப் பணியுடையாய் கற்றைநெடுஞ் சடையாய்

            பூம்புனலும் வேம்கனலும் பொருந்துமுரு வுடையாய்

பெற்றமிவர் தகையுடையாய் கொற்றமழுப் படையாய்

            பிரமனுடன் மால்காணாப் பேரழலாய் நின்றாய்

குற்றமடி யவர்செயினும் பொறுத்துநன்றே புரிவாய்

            கொடியநமன் றனையொறுக்கக் குலவுதிரு வடிவாய்

பற்றகல்மெய்த் தவமுடையார் மனமுடையாய் உடையாம்

            பாளையத்தி லவிர்விசுவ நாதபசு பதியே.                  

(11)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக