செவ்வாய், 13 அக்டோபர், 2026

உடையாம் பாளையம் விசாலாட்சியம்மை பதிகம்

 

தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த

உடையாம் பாளையம் விசாலாட்சியம்மை பதிகம்

காப்பு

(நேரிசை வெண்பா)

செல்வியரு ளென்றும் திகழுடையாம் பாளையத்தின்

நல்விசா லாட்சியம்மை நற்பதிகம் - சொல்வதற்குத்

தும்பிமுகத் தானும் சுடர்வேற் பெருமானும்

நம்பியருள் வார்பொருட் சீர்.

 (1)

நூல்

(அறுசீர் ஆசிரிய விருத்தம்)

நளினமலர்க் கண்ணழகு பொழியும்முகம்

            முதலாக ஞானத் தோருள்

ஒளிருமிரு தாள்வரையு முள்ளதிருக்

            கோலமென்மு னோங்க வந்தாள்

தெளிதமிழ்ப்பாண் டியன்மகளாய் மதுரையினில்

            வந்தபர சிவையே செல்வங்

குளிருடையாம் பாளையத்தில் விசாலாட்சி

            அம்மையெனக் குலவுந் தாயே.                                  

 (2)

தலமனைத்துள் ளும்பரமன் றன்னோடு

            நீவிளங்கும் தன்மை போல

இலகுமெந்தப் பொருளிடத்துஞ் சிவனோடு

            நீயுமொன்றா யிசைந்து நின்றாய்

புலவுணும்வாய்த் தகுவர்குல மறத்தாக்கும்

            வீறுடையாய் பொலிசீ ரென்றுங்

குலவுடையாம் பாளையத்தில் விசாலாட்சி

            அம்மையெனக் கூடுந் தாயே.            

 (3)

மறிமழுவேந் தியகரத்துப் பெருமான்சொற்

            படியுன்னிசை வழுத்தன் பற்கு

நறியசுவை யமுதருத்திக் காசிவரை

            நடந்தவுன்சீர் நான்தேர் வேனோ

பறிதலைச்சா ரணர்க்கறுவும் சம்பந்தர்க்

            கருள்ஞானப் பரையே நன்மை

செறிவுடையாம் பாளையத்தில் விசாலாட்சி  

            அம்மையெனத் திகழுந் தாயே.                                  

(4)

கருவிருந்த நாள்முதலா யுனதருளை

            விழைவுற்றுக் கருணை பெறும்

பெருமையுறத் தவமில்லே னானாலும்

            அத்தகையோர் பேசும் வாய்மைப்

பொருளறியும் மதியமைத்தாய் புகழ்சிறிதா

            யினுமெய்தப் புரியாய் பத்தர்

மருவுடையாம் பாளையத்தில் விசாலாட்சி

            அம்மையெனத் திகழுந் தாயே!                                  

 (5)

கலியதனால் மெலிவடைந்தேன் கஞ்சனெழு

            தும்பொறியால் கருத்த யர்ந்தேன்;

பொலிசுவைப்பா வாணரைப்போல் தொண்டரைப்போல்

            துதிப்பாடல் புகன்று நின்றேன்

வலிதுவந்துன் திருவருளை நல்கி னல்லால்

            உய்திபெற மாட்டேன் செல்வம்

மலிவுடையாம் பாளையத்தில் விசாலாட்சி

            அம்மையென மன்னுந் தாயே!                       

(6)

கீற்றுமதி யாற்றுவெள்ளம் தோற்றுசடை

            முடிப்பரன்முன் கிளர்பொன் மன்றில்

ஆற்றுதிரு நடச்சேவை யடியனேன்

            கண்காண வருள்செய் யாயோ

மாற்றுரைத்தற் கரியபசும் பொன்மேனிப்

            பெருமாட்டீ மகிழ்ந்து தொண்டர்

போற்றுடையாம் பாளையத்தில் விசாலாட்சி

            அம்மையெனப் பொருந்துந் தாயே.                           

 (7)

முருந்துறழ்பற் கனிவாயும், கமலமலர்த்

            திருக்கரமும் முதல வாகித்

திருந்துமுன துருச்சேவை வொருதரமா

            யினும்காணச் செய்தி டாயோ

பெரும்தனத்தால் சிற்பவளம் பொலியவமைத்

            திடுகோயில் பொலிந்தாய் யேற்றம்

பொருந்துடையாம் பாளையத்தில் விசாலாட்சி

            அம்மையெனப் புகழுந் தாயே.                                   

 (8)

மழவிடையில் கணவரொடு வேலேந்தும்

            பிள்ளையுடன் வந்து வந்து

பழவடியார் பலர்க்கந்நா ளருள்செய்தாய்

            புதிதாயிப் படிறேன் முன்னும்

அழகுறநீ வொருக்கால்வந் தருள்புரிந்தால்

            ஆர்வம்மிக வடைவேன் நல்லோர்

பழகுடையாம் பாளையத்தில் விசாலாட்சி

            அம்மையெனப் பரவுந் தாயே.

 (9)

பூவுலகி லெவ்வுயிரு முன்னுருவாம்

            நிலையுணராப் பூரி யோர்தாம்

“தேவுயிர்கொன் றூனுணலை விரும்புமெனும்

            புலைப்பூசை தீர்வ தென்றோ

காவுடையான் பதிபுரக்குங் குகன்கரத்தில்

            வேற்படையாய்க் கவின்றா யன்பர்

மேவுடையான் பாளையத்தில் விசாலாட்சி

            அம்மையெ மிளிருந் தாயே.                           

 (10)

மழைமுகில்வந் தணைகடவூ ரபிராமப்

            பட்டர்மனம் மருண்டு கூறும்

பிழைநிசமா கிடவவன்சொல் நூறுகவி

            கேட்டருட்சீர் பிறங்கு மாறுன்

குழையெறிந்து முழுமதிய மமாவாசை

            யன்றுவரக் குயிற்றி னாய்சீர்

தழையுடையாம் பாளையத்தில் விசாலாட்சி

            அம்மையெனச் சாருந் தாயே.                         

(11)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக