செவ்வாய், 13 அக்டோபர், 2026

கணபதி அத்தனூரம்மை ஊசல்

 

தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த

கணபதி அத்தனூரம்மை ஊசல்

(எண்சீர் ஆசிரிய விருத்தம்)

திருமுகமண் டலமாடக் குழலு மாடச்

            செவியதனி லணியாடச் சீரார் கைகள்

மருவுபல விதம்விதமாம் வளைக ளாட

            மலர்மாலை திருக்கழுத்தில் வாடா தாட

இருமைநலம் நினைப்பவருக் கருள்வோ மென்னும்

            இருபாதங் களில்ச்சிலம்பு மினிதா யாட

அருமைபெறுங் கணபதியூர்க் கோயில் தன்னில்

            அமரத்த னூரம்மை யாடீ ரூசல்.                     

(1)

மலர்மகளும் கலைமகளும் வடம்தொட் டாட்ட

            வள்ளிதெய்வ யானையிசை மகிழ்வில்ப் பாடச்

சலமகளும் நிலமகளும் தொங்கல் சூட்டத்

            தனிஇரதி இந்திராணி கவரி வீசப்

பலபலவா மரமகளிர் பரத மாடப்

            பயின்றயாழ் கந்தருவர் பாவை மீட்ட

அலகில்வளக் கணபதியூர்க் கோயில் தன்னில்

            அமரத்த னூரம்மை யாடீ ரூசல்.

 (2)

பச்சைநிற மரகதக்கற் கால்கள் நாட்டிப்

            பைம்பொன்னால் வடம்நான்கும் பண்பா யாக்கி

இச்சைபெறும் வயிரத்தால் விதான மாற்றி

            எழில்மிகுந்த மாணிக்கப் பலகைப் பீடம்

கொச்சையறச் செய்துளபொன் னூச லாடும்

            கோகிலமே கற்பகப்பூங் கொம்பே யெங்கள்

அச்சமறக் கணபதியூர்க் கோயில் தன்னில்

            அமரத்த னூரம்மை யாடீ ரூசல்.

(3)

தேவர்குழாம் அரமகளிர் தம்மோ டாடத்

            திருமாலும் பிரமாஇந் திரனு மாடக்

காவலரும் வீரர்களும் களிப்பாய் யாடக்

            கவிவாணர் பலபாடல் கழறி யாடச்

சாவகன்றோம் முத்திபெற்றோம் என்று கூறித்

            தத்பதத்தோ டொன்றாம்மெய் அடியா ராட

ஆவலுடன் கணபதியூர்க் கோயில் தன்னில்

            அமரத்த னூரம்மை யாடீ ரூசல்.

 (4)

கருமுகிலில் மின்னாட இடியு மாடக்

            கனத்தமழைத் துளிபலவாம் கால்விட் டாடப்

பருவமறிந் தேபயிர்செய் யுழவோ ராடப்

            பசுமையுடன் பயிர்பலவுங் கதிர்விட் டாடத்

தருவினங்கள் பழுத்தகனி இனத்தோ டாடச்

            சர்க்கரைப்பூங் கரும்புதென்னை கமுகோ டாட

அருள்பெருகுங் கணபதியூர்க் கோயில் தன்னில்

            அமரத்த னூரம்மை யாடீ ரூசல்.                     

(5)

எவ்வுயிரும் தம்முயிர்போ லெண்ணித் துன்பம்

            ஏதொன்றுஞ் செய்யாரா யினிதே செய்யுஞ்

செவ்வியநெஞ் சுடையாரைத் திகைக்கச் செய்வார்

            தென்திசைக்கூற் றுவனூரைச் சேரச் சூலம்

வவ்வியநும் திருக்கரம்மே லோங்க வேண்டும்

            வாய்மூடி மவுனம்சா தித்தல் செய்யாது

அவ்வியமில் கணபதியூர்க் கோயில் தன்னில்

            அமரத்த னூரம்மை யாடீ ரூசல்.                     

(6)

பாவமொடு புண்ணியமும் தெய்வந் தானும்

            பரலோகம் சிவனுலகம் சத்தி லோகம்

தேவருல கம்பிரம னரிதன் லோகம்

            திருமறையா கமங்களெலாம் பொய்யென் றோதிப்

பாவம்மிகுங் கொடுந்தொழில்கள் செய்வார் நெஞ்சம்

            பகீரெனவே நடுநடுங்கிப் பதைத்துத் தாழற்கு

ஆவனசெய் கணபதியூர்க் கோயில் தன்னில்

            அமரத்த னூரம்மை யாடீ ரூசல்.                     

 (7)

சிவானந்தி யம்பிகையே யாடீ ரூசல்

            சிங்கவா கனத்தாயே யாடீ ரூசல்

பவானியுமை கல்யாணி  யாடீ ரூசல்

            பகவதியே திரிபுரையே யாடீ ரூசல்

சுவாலைமிகுஞ் சாமுண்டி யாடீ ரூசல்

            துர்க்கைசிவ காமியம்மை யாடீ ரூசல்

அவாவினொடுங் கணபதியில் யாடீ ரூசல்

            அருளத்த னூரம்மை யாடீ ரூசல்.        

 (8)

பூரணிப ராசக்தி யாடீ ரூசல்

            பொங்கருள்வி சாலாட்சி யாடீ ரூசல்

நாரணிம கேஸ்வரியே யாடீ ரூசல்

            ராஜரா ஜேஸ்வரியே யாடீ ரூசல்

காரணியே அபிராமி யாடீ ரூசல்

            காபாலி திரிசூல யாடீ ரூசல்

ஆரணியே கணபதியில் யாடீ ரூசல்

            அருளத்த னூரம்மை யாடீ ரூசல்.                    

 (9)

பைந்தமிழும் பயிரினமும் மழையும் வாழப்

            பசுக்குலமு மாலயமும் பாரும் வாழச்

சுந்தரந்தோய் மடமாதர் கற்பு வாழச்

            சுதந்திரச்செங் கோலாட்சி சுகமாய் வாழ

முந்தும்மறை யாகமங்கள் முறையே வாழ

            மூன்றெழுத்து மெட்டெழுத்தும் முழங்கி வாழ

ஐந்தெழுத்து மாறெழுத்துஞ் செபிப்போர் வாழ

            அருளத்த னூரம்மை யாடீ ரூசல்.                    

(10)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக