செவ்வாய், 13 அக்டோபர், 2026

கணபதி பிளேக் மாரியம்மை பதிகம்

 

தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த

கணபதி பிளேக் மாரியம்மை பதிகம்

காப்பு

(நேரிசை வெண்பா)

விண்ணவரும் போற்றும் வியன்கணப திக்கணன்பர்

நண்ணவரும் மாரியம்மை நல்துதிப்பாப் - பண்ணமையச்

செய்ய நினைவேற்குச் சிந்துரப்பெம் மான்றனிரு

துய்யமலர்ப் பாதம் துணை.    

 (1)

நூல்

(இரட்டை ஆசிரிய விருத்தம்)

மஞ்சுநிக ருங்கருமை யுஞ்சுருண் டிலகுகவின்

                        மன்னிமண மலரணிந்த

            வார்குழலி னழகும்மீ னென்னப்பி றழ்ந்தணிசெய்

                        மையிலகோட கண்ணினழகும்

பிஞ்சுமதி யொத்தபுரு வத்தழகும், நீற்றணி

                        பிறங்குபொட் டணிநெற்றியின்

            பேரழகு மிருகுழைக் காதழகும், மூக்கழகு

                        பேணவரும் நத்தினழகும்

அஞ்சுகமெ னக்கனிவு மிஞ்சுரைசெய் செவ்வாயின்

                        அழகும்முத் தனையபற்கள்

            அவிரழகு மடியர்தமை யபயவர தம்காட்டி

                        அருள்புரிவ ளைக்கையழகும்

செஞ்சுடர்வி ரும்பும்மல ரனையகழ லழகும்

                        திகழ்ந்திடத் தினமும் வருவாய்

            சீரிலகு கணபதிப் பேரிலகு மூரிலவிர்

                        தேவியேமா ரிவுமையே.                                

 (2)

மம்மர்மிஞ் சிடுமிருள் இராவினில் கண்ணிலா

                        மகவுதளர் வுறுதல்போல

            மாயைசெறி வுலகிலுற் றுண்மையறி யாதுதடு

                        மாறுவேனீன் றவொருதாய்

கைம்மகவெ னக்கருவி ருந்துவந் தேனுனைக்

                        கருதும்நெறி யறியகில்லேன்;

            கருணையால் நீயேவி ழைந்தருளி னல்லாது

                        கடையனே னுய்த லுளதோ

பொய்ம்மலிந் திடுமுலக வாசனைச் சூழலில்

                        புக்குழலல் முன்வினைகொலோ

            பொன்னடித் துணைபரவும் நன்னெறிப் பெரியோர்கொள்

                        பூரணா னந்தஞானச்

செம்மலென வாழவைத் திடவில்லை யல்லையோ

                        திருவருட் காளாக்குவாய்

            சீரிலகு கணபதிப் பேரிலகு மூரிலவிர்

                        தேவியேமா ரிவுமையே.                                

(3)

எவ்வகை புண்ணியம் செய்தனைமுன் நெஞ்சமே

                        என்றுதமிழ் விரகரோதும்

            இன்தமிழ்ப் பாடலில்நன் மலர்பல விதம்பட

                        எடுத்துத் தொடுத்தருட்சீர்

ஒவ்வருட் பாடல்கொடு தோத்திரஞ் செய்வதால்

                        உற்றபிற வியைமேலதென்று

            ஓதினா ராதலா லுலகத்தி லுயிரினம்

                        உறும்பல பிறப்பிலெல்லாம்

வெவ்வினைத விர்க்கும்மனி தப்பிறப் பெய்திடினும்

                        மேவும்வழி பாடின்றெனில்

            வீணாகு மென்பதைய றிந்துளே னத்தகைய

                        மேன்மையுற வருள்புரிகுவாய்

தெவ்வரை யடுங்கொடுஞ் சூலம்முத லாவனகொள்

                        சிவையே பராசக்தியே

            சீர்இலகு கணபதிப் பேர்இலகும் ஊரில்அவிர்

                        தேவியேமா ரிவுமையே.                                

 (4)

சீவர்க ளெலாமுவகை சேரும் மேமனிதர்

                        செயலாயி ருக்கவேண்டும்

            தெய்வநெறி பேணுமுயர் நன்னெறியில் யாரும்

                        திருந்திவரும் நிலைமைவேண்டும்

யாவர்களு மோருயிரை இன்னலுறு மாறுகொன்

                        றிடுகொலைசெய் யாமைவேண்டும்

            இழிவுறும் புலையுண்டி டும்தீங்கி லாதவரும்

                        ஏற்றமுற் றிடுதல்வேண்டும்

மூவர்சொலு முயர்வா கத்தினொடு திருவாய்

                        மொழிப்பனு வலும்தவத்தில்

            முதிர்பெரியர் பாடல்களும் முறையாக ஓதுமவர்

                        மூதுலகி லுயரவேண்டும்

தேவர்களும் நாடுகொடை வள்ளலா யெவருஞ்

                        செகத்தினில்வி ளங்கவேண்டும்

            சீரிலகு கணபதிப் பேரிலகு மூரிலவிர்

                        தேவியேமா ரிவுமையே.                                

 (5)

உலகி லிதுவரை யெடுத்திட்ட பலவாய

                        உடலின்க ணக்கறிகிலேன்

            உற்றவிப் பிறவியிலிவ் வுடலோடெ நாள்வரையும்

                        உறுவதென் பதுமறிகிலேன்

இலகுவரு மறுபிறவி யெவ்விடத் தெய்திடுவது

                        என்பதையு மறியகில்லேன்

            இன்பமொடு துன்பது மெந்தெந்த நேரத்தில்

                        எய்துமென் பதுமுணர்கிலேன்

கலகமிட் டிடுமைந்து பொறிபுலனை வொருவழிக்

                        கட்டுப்ப டுத்தவியலேன்

            காலன்வரும் முன்னுனைக் கருதல்நல மெனமுனோர்

                        கழறும்மொழி யைக்கருதிலேன்

திலகமென வருமன்பர் திரளிலடி யேனையும்

                        சேர்த்தாள்வ துன்கடன்காண்

            சீரிலகு கணபதிப் பேரிலகு மூரிலவிர்

                        தேவியேமா ரிவுமையே.                                

 (6)

என்றுனது சேவையைக் கண்குளிரு மாறுகண்டு

                        இன்பக்க டல்க்குளிப்பேன்

            இவ்வுலகி லாசையாம் காற்றினிற் சுழலல்விட்டு

                        என்றுமன வமைதிபெறுவேன்

நின்றுனது சந்நிதிக் கண்பரவு மன்பரொடு

                        நீடுமுற வென்றுகொள்வேன்

            நிலையிலா வாழ்விதனை நிசமெனக் கொண்டலையும்

                        நெறியைவிட் டென்றுதெளிவேன்

அன்றுனது பாலுண்ட சம்பந்தர் போலவரு

                        ளாடல்செயு மாவல்கொண்டேன்

            ஆதலா லென்றனை யருட்களால் நோக்கிநீ

                        ஆதரிக்கப் பணிந்தேன்

சென்றுனது தலமெலாம் கண்டுதொழு தேத்திடத்

                        திருவருள்செய் தென்னையேற்பாய்

            சீரிலகு கணபதிப் பேரிலகு மூரிலவிர்

                        தேவியேமா ரிவுமையே.                                

 (7)

வந்தனைசெய் மெய்யன்பர் நிபந்தனைத ரும்கொடிய

                        வறுமையில்த் தளர்வுறாமல்

            வஞ்சனைம லிந்துதன் னலம்விரும் புநர்மனதில்

                        வன்மைமலி வுற்றிடாமல்

செந்தனைத் தும்தன்னை யொப்பெனக் கருதன்பர்

                        தீவினையில் நைந்திடாமல்

            தெய்வமே துணையெனுந் தீரமுறு வோரெலாந்

                        தீயருக் கஞ்சிடாமல்

மைந்தரைத் தாரம்முத லாம்பொருளை மதியாத

                        மாதவர்நல் வாழ்வுகொண்டு

            வையத்து நன்றெலாம் புரியவிழை யும்தூயர்

                        வளமெலாம் பெற்றுமிளிரச்

சிந்தனையில் நீநினைத் திடிலரிய தாகுமோ

                        திருவுளமி ரங்கியருள்வாய்

            சீரிலகு கணபதிப் பேரிலகு மூரிலவிர்

                        தேவியேமா ரிவுமையே.                                

 (8)

நெஞ்சகத் துன்றனை நினைந்துவழி பாடுசெயும்

                        நிலைமையென் றுங்கெடாமல்

            நேடிவந் திடுமவர்க ளெண்ணியப படிக்குதவும்

                        நேர்மைதளர் வுற்றிடாமல்

வஞ்சகத் தாலிடர்செய் கயவர்க்கும் நன்மைசெயும்

                        மாண்பைத்து றந்திடாமல்

            மன்னுயிர்கள் யாவையும் தன்னுயிர்க் கொப்பாக்கொள்

                        வண்மையை மறந்திடாமல்

அஞ்சகத் தோடுபழி பாவம்மரு வும்செயல்கள்

                        ஆமவற் றைச்செயாமல்

            அமரரூர் நலமேகை வருமெனினும் நேர்மைமா

                        றாமெனில் விரும்பிடாமல்

செஞ்சலம் நேர்பதத் தொண்டரொடு கூட்டிவுன்

                        சீரருட் காளாக்குவாய்

            சீரிலகு கணபதிப் பேரிலகு மூரிலவிர்

                        தேவியேமா ரிவுமையே.                                

 (9)

செந்தாம ரைப்பொட் டில்க்குலவு மெண்வகைத்

                        திருவா விளங்குவாய்நீ

            செப்புநால் வேதம்நுவல் பிரமனது நாவினில்

                        திகழ்வுறும் கலைவாணிநீ

வெந்தார்வெ ணீற்றணிப் பரமனிட முற்றவிரும்

                        மின்னிடைப் பார்வதியும்நீ

            மேவுமெவ் வுயிர்க்கும் நல்த்தாயாகி இன்றுமிள

                        மேனியெழி லுறுகன்னிநீ

கந்தாயெ னத்துதிப் பார்க்கருள் குகன்றனது

                        கைக்கண்ணயில் வேலாவைநீ

            கவினுயிர்க ளுய்யமுன் முப்பத்தி ரண்டறம்

                        கனிவினால்ச் செய்யம்மைநீ

சிந்தாகு லம்கெடக் கண்ணருள் புரிந்துனது

                        திருவருள்கா ளாக்குவாய்

            சீரிலகு கணபதிப் பேரிலகு மூரிலவிர்

                        தேவியேமா ரிவுமையே.                                

 (10)

மறியணி கரத்தீசன் நற்றமிழ்த் துதிகூறும்

                        வன்தொண்ட ராம்சுந்தரர்

            மனமகிழு மொருமணம் விலக்கியிரு மணமெய்து

                        மாறுசெய் துண்மைதவறும்

நெறிகண்டு, கண்மறைத் துப்பின்வெகு வாவேண்டும்

                        நிலையினா லீந்தருளினான்

            நீயவனொ டொன்றா யிருந்துந் தடுத்தியலாய்

                        நிறைகொண்க னுக்கிசைவதாம்

குறிகொண் டிருந்தனைகொல் தாயான நின்றனது

                        குணமன்ப ரானமக்கள்

            குற்றம்செய் தாலும்பொ றுப்பதியல் பாமெனும்

                        கொள்கையோர்த் துனையடைந்தேன்

செறிபிழையெ லாம்கருதி டாதேற் றெனக்குனருள்

                        செய்திடுதல் வேண்டுமம்மா!

            சீரிலகு கணபதிப் பேரிலகு மூரிலவிர்

                        தேவியேமா ரிவுமையே.                                

 (11)

திருப்புகழ்

தனதன தானன தானன தந்தன - தனதானா

விடவர வேநிகர்

தீயம னஞ்செயும் - இடராலே

            மெலிவுறும் நானடி

யாரொட விர்ந்தடி - பணிவேனோ

அடலரி வாகன

மீதில விர்ந்தென - தெதிராயே

            அருள்மலி சேவையை

நீதர வென்றுளம் - இசைவாயே

நடமிடு மீசனொ

டாடுமி ளம்பிடி - அனையாளே

            நவில்கவி ராசனுள்

ஆவலு றும்சிறு - மகளாவாய்

கடகரி மாமுக

னோடுகு கன்றனை - அருள்தாயே

            கணபதி யூருள

மாரியெ னும்பெயர் – உமையாளே.

 

ஆக்கியோனும் நூற்பயனும்

(நேரிசை வெண்பா)

மன்னு கணபதியூர் வாழ்பிளேக் மாரித்தாய்

பன்னு துதியாகும் பாட்டுரைத்தேன் - துன்னுபொழில்

சூழ்சிரவைக் கௌமாரன் சுந்தரனிப் பாட்டுரைப்போர்

வாழ்வுபல வும்பெருகு வார்.

 

பதிப்பித்தோர்

(எண்சீர் ஆசிரிய விருத்தம்)

கணபதிப்புத் தூரென்னக் கழறுதுண்டுக் காட்டில்

            கவினிரும்புத் தொழிற்சாலை கனமுறவே புரியும்

குணம்மருவு பாலசுந்த ரற்குரிய மனையாய்க்

            குலவுதிருக் கமலமாள் கோதில்பொருள் கொண்டு,

தணைவருசீர்ப் பிலவவரு டத்தானி மதியில்

            சார்மதிநாள் பன்னிரண்டாச் சாற்றுதினத் தன்று

மணமலிபொற் கும்பநீ ராட்டுவிழா திகழ்கால்

            வண்மையுறப் பதித்தளித்து மாண்படைத்தா ரினிதே.

 

வாழி வெண்பா

(நேரிசை வெண்பா)

சீர்தோய் கணபதியில்ச் சேர்பிளேக் மாரியெனும்

பேர்தோயு மம்மைகழல் பேணுமன்பர் - பார்தோயும்

நன்றென் பவையாவும் நாளும் மிகவெய்தி

என்றென்றும் வாழ்க இனிது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக