வெள்ளி, 2 நவம்பர், 2018

தமிழ்ச்சுவடி நிறுவனங்கள் - பிற அமைப்புகள்

உலகிலேயே அதிக அளவில் சுவடித் தொகுப்புகள் இந்தியாவில்தான் இருக்கின்றன.  இச்சுவடிகள் இந்தியாவில் பேசக்கூடிய பல மொழிகளில் இந்திய மக்களின் கலை, இலக்கியம், சமயம், வரலாறு மற்றும் சமுதாயக் கருத்துக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளன.  இச்சுவடிகள் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் சென்றுள்ள நிலையை வரலாறு உணர்த்தும். இவற்றில் பெரும்பான்மை தமிழ்ச் சுவடிகள் இடம்பெற்றிருப்பதைப் பார்க்கும்போது, உலகச் சுவடி நிறுவனங்களில் தமிழ்ச் சுவடிகள் இடம்பெற்றிருக்கின்றன என்று உறுதிபடக் கூறலாம். உலகெங்கும் தமிழ்ச் சுவடிகள் இருக்கும் நிறுவனங்களை,

1. வெளிநாடுகளில் தமிழ்ச்சுவடி நிறுவனங்கள்
2. வெளிமாநிலங்களில் தமிழ்ச்சுவடி நிறுவனங்கள்
3. தமிழ்நாட்டில் தமிழ்ச்சுவடி நிறுவனங்கள்

என்றவாறு பாகுபடுத்திக் காணலாம். 

1. வெளிநாடுகளில் தமிழ்ச்சுவடி நிறுவனங்கள்

கி.பி.1750க்கும் பின் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த பாதிரிமார்களாலும், வெளிநாட்டுப் பயணிகளாலும், வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களாலும் இங்குள்ள பலவிதமான கலைப்பொருட்களையும், சுவடிகளையும் எடுத்துச் சென்று தங்கள் நாட்டு நூலகங்களில் வைத்துப் பாதுகாத்து வருகின்றனர்.  குறிப்பாக, இங்கிலாந்து, டென்மார்க், ஸ்காட்லாந்து, அயர்லாந்து, பிரான்சு, மேற்கு ஜெர்மனி, கிழக்கு ஜெர்மனி, இத்தாலி, ஸ்வீடன் மற்றும் யு.எஸ்.எஸ்.ஆர் ஆகிய பத்து நாடுகளில் தமிழ்ச் சுவடிகள் இருக்கின்றன.  தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறை வெளியிட்டுள்ள அனைத்துலகத் தமிழ் ஓலைச்சுவடிகள் அட்டவணை (தமிழ் 1-5 தொகுதிகள் மற்றும் ஆங்கிலம் 1-5 தொகுதிகள்) என்னும் நூலில் 1985ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் 344 வகையிலான பொருண்மைகளில் 21,973 தமிழ்ச் சுவடிகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.  இதில் வெளிநாடுகளில் இருக்கக் கூடிய தமிழ்ச் சுவடிகளும் இடம்பெற்றிருக்கின்றன.  குறிப்பாக,

1. இந்திய அலுவலக நூலகம், லண்டன்
2. பிரிடீஸ் அருங்காட்சியகம், லண்டன்
3. ராயல் ஏசியாடிக் சொசைட்டி நூலகம், லண்டன்
4. எடின்பர்க் பல்கலைக்கழக நூலகம், லண்டன்
5. ஸ்காட்லாந்து எடின்பர்க் தேசிய நூலகம், ஸ்காட்லாந்து
6. கிளாஸ்கோ பல்கலைக்கழகம், ஹண்டேரியன் நூலகம், கிளாஸ்கோ, 
ஸ்காட்லாந்து
7. ஜான் ரைலாட்ஸ், மான்செஸ்டர், இங்கிலாந்து
8. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நூலகம், கேம்பிரிட்ஜ்
9. போட்லியன் நூலகம், ஆக்ஸ்போர்டு
10. ட்ரினிட்டி கல்லூரி, பாப்லின் நூலகம், அயர்லாந்து
11. பிபிலோதேகு நேஷனல், பாரிஸ், பிரான்சு
12. தேசிய அருங்காட்சியகம், கோபன்ஹேகன், டென்மார்க்
13. ராயல் நூலகம், கோபன்ஹேகன், டென்மார்க்
14. கிங்ஸ் நூலகம், பாரிஸ்
15. ஜெர்மன் ஓரியண்டல் சொசைட்டி நூலகம், ஹேல், கிழக்கு ஜெர்மனி
16. லூதரன் மிஷன் சர்ச் அருங்காட்சியகம், லிப்ஷிக், கிழக்கு ஜெர்மனி
17. மாநில மற்றும் பல்கலைக்கழக நூலகம், ஹம்பர்க், மேற்கு ஜெர்மனி
18. உப்சலா பல்கலைக்கழக நூலகம், உப்சலா, சுவீடன்
19. எதினோகிராபிகல் அருங்காட்சியகம், ஸ்டாக்ஹோம், சுவீடன்
20. லெனின் மாநில நூலகம், மாஸ்கோ, சோவியத் யூனியன்
21. லெனின்கிராடு பல்கலைக்கழக நூலகம், லெனின்கிராடு,                                          சோவியத்யூனியன்
22. சோவியத் யூனியன் ஓரியண்டல் இன்ஸ்ட்டியூட் நூலகம்,                                              லெனின்கிராடு, சோவியன் யூனியன்

போன்ற இடங்களில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்களில் தமிழ்ச் சுவடிகள் இருப்பதை இவ்வட்டவணை உணர்த்துகின்றது.  

2. வெளிமாநிலங்களில் தமிழ்ச்சுவடி நிறுவனங்கள்

மேற்கு வங்காளம், புதுச்சேரி, ஆந்திரா, கேரளம் போன்ற வெளிமாநிலப் பகுதிகளில் உள்ள சில சுவடி நிறுவனங்களில் தமிழ்ச்சுவடிகள் இடம்பெற்றிருப்பதைக் காணமுடிகிறது.  குறிப்பாக, 

அ. இந்திய தேசிய நூலகம், கொல்கத்தா
ஆ. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், திருவனந்தபுரம்
இ. பிரெஞ்சு இந்தியவியல் நிறுவனம், பாண்டிச்சேரி
ஈ. ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம், திருப்பதி 

போன்ற இடங்களில் உள்ள வெளிமாநில நிறுவனங்களில் தமிழ்ச் சுவடிகள் இருப்பதை அறியமுடிகிறது.

அ. இந்திய தேசிய நூலகம், கொல்கத்தா

இந்திய தேசிய நூலகம், கொல்கத்தாவில் அமைந்துள்ளது.  இம்பீரியல் நூலகமாக இருந்ததை 1948ஆம் ஆண்டு நூலகச் சட்டப்படி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அறிவிக்கப்பட்டு மைய அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இந்நூலகம் செயல்பட்டு வருகின்றது.  இங்குச் சுமார் 3500 சுவடிகள் உள்ளன.  இச்சுவடிகள் ஓலை, காகிதம், பூர்ஜ பத்திரம், பார்ச்மெண்ட் ஆகியவற்றில் எழுதப்பட்ட சுவடித் தொகுப்புகளைக் கொண்டுள்ளது. இங்குள்ள தமிழ்ச்சுவடிகளுக்கான அட்டவணையை பேரா. மு. சண்முகம் பிள்ளை மற்றும் இ. சுந்தரமூர்த்தி ஆகியோர் வெளியிட்டுள்ளனர். 

ஆ. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், திருவனந்தபுரம்

1908ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சமஸ்கிருதச் சுவடி அலுவலகத்தையும், 1924ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மலையாளச் சுவடி நூலகத்தையும் 1930ஆம் ஆண்டு ஒன்றாக இணைத்தனர். 1937ஆம் ஆண்டு பல்வேறு குடும்பங்களிலிருந்து தொகுக்கப்பட்ட சுவடித் தொகுப்புகளைக் கொண்டு திருவிதாங்கூர் அரண்மனை நூலகம் தோற்றுவிக்கப்பட்டது. இச்சுவடி நூலகங்களை எல்லாம் 1940ஆம் ஆண்டு கேரளப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த கீழ்த்திசை ஆய்வு நிறுவனம் மற்றும் சுவடி நூலகமாக உருவாக்கப்பெற்றது.  இந்நிறுவனம் 1982 முதல் கேரளப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள புதிய கட்டடத்தில் குளிர்சாதன வசதியுடன் இயங்கி வருகிறது.  

இந்நூலகத்தில் சுமார் 55,000 சுவடிகளில் சுமார் 3500 தமிழ்ச் சுவடிகள் இடம்பெற்றிருக்கின்றன.  இச்சுவடிகளில் பெரும்பாலானவை மருத்துவம், மந்திரம், சோதிடம், சைவசித்தாந்தம், வேதாந்தம், யோகம், சிற்றிலக்கியம், நாட்டுப்புறக் கதைப்பாடல்கள், புராணங்கள், நிகண்டுகள் முதலிய பொருண்மைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில், 1091 தமிழ்ச் சுவடிகளுக்கான அட்டவணையை இரா. நிர்மலாதேவி அவர்கள் 1983ஆம் ஆண்டு சென்னை உலகத்தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடாக 'தமிழ்ச் சுவடிகள்' (அட்டவணை) எனும் நூலை வெளியிட்டுள்ளார்.  கேரளச் சுவடி நூலகம் 1984ஆம் ஆண்டில் 3341 தமிழ்ச்சுவடிப் பெயர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.  

இந்நூலகச் சுவடிகளை அடிப்படையாகக் கொண்டு சுவடிப் பதிப்புகளை வெளியிடும் பணி 1949ஆம் ஆண்டு தொடங்கப்பெற்று குற்றாலக்கோவை (1949), அரிச்சந்திர வெண்பா (1949), இராமாயணத் திருப்புகழ் (1987), திருவனந்தபுரந் தலவிலாசம் ஆகிய பதிப்புகளை வெளியிட்டுள்ளது.  மேலும், மருந்து செய்முறைகள் (1985), முத்தாரம்மன் கதை (1987) ஆகிய இரண்டு நூல்களை சென்னை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் இந்நூலகச் சுவடிகளைக் கொண்டு வெளியிட்டுள்ளது.

கேரளப் பல்கலைக்கழகச் சுவடிப்புலத்தின் வாயிலாக மலையாள மொழியில் ஆண்டுக்கு இருமுறை ப்ராசீன கைரளி என்ற இதழும், தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் தமிழ்த்துறையின் வாயிலாக இதே பெயரில் ஆண்டுக்கு ஒரு முறையும் இவ்விதழ் வெளிவருகின்றது.  அரிப்பாட்டு சுப்பிரமணிய சுவாமி பேரில் தாலாட்டு, இராமாயணம் குறத்திப்பாட்டு, உபமான சங்கிரகம், எண்ணெய்ப்பாட்டு, சனி எண்ணெய்ப்பாட்டு, நாசிகேது புராணம், பத்மநாப சுவாமி மகார வண்ணம், ஸ்ரீகண்டேசர் மீது கும்மி போன்ற சுவடிப்பதிப்புகளை இவ்விதழின் இணைப்பாக இந்நூலகம் வெளியிட்டுள்ளது.

கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் பயிலும் முதுகலை, ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்ட மாணவர்கள் இந்நூலகச் சுவடிகளைக் கொண்டு பதிப்பாய்வு செய்துள்ளனர்.  இந்நிலையில் வன்னிராசன் கதை, நளனம்மானை, சிவசரவணபவ மாலை, வள்ளியம்மன் கலியாணக் காவடிச் சிந்து, காராளர் அம்மானை, முருகர் ஒயில் கும்மி, தாது வருஷத்துப் பஞ்சக் கும்மி, மலுக்கு முலுக்கு ராஜன் கதை, மதுரை வீரையன் சிந்து, சாஸ்தா கதைப்பாடல், அபூஷா-ஹ-ம-மாலை போன்ற முதுகலை ஆய்வேடுகளும், நீலோடு நீலம் பொருந்தின நீலமக்கரியாள் கதை, பிரம்ம சக்தியம்மன் கதை, அமிர்த மதன நாடகம், நித்ய கன்ம நெறிக்குறள், மூவரசர் நாடகம் போன்ற ஆய்வியல் நிறைஞர் ஆய்வேடுகளும், சிந்துப் பாடல்கள், ஒடி முறிவு சரச் சூத்திரம், பாரத மாவிந்தம், பிரமசக்தியம்மன் கதை, மாறன் அகப்பொருள் போன்ற முனைவர் பட்ட ஆய்வேடுகளும் இந்நூலகச் சுவடிகளைக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டவையாகும்.  இவ்வாய்வேடுகளில் சில நூலாகவும் வெளிவந்திருக்கின்றன.

இ. பிரெஞ்சு இந்தியவியல் நிறுவனம், பாண்டிச்சேரி

பாண்டிச்சேரியில் உள்ள இந்நிறுவனம் சுவடிகளைத் தொகுத்துப் பாதுகாத்தல், நூல்கள் வெளியிடுதல் மற்றும் ஆய்வு செய்தல் போன்ற பணிகளைச் செய்து வருகிறது.  இங்குச் சுமார் 20,000 சுவடிகள் உள்ளன.  தமிழியல் சார்ந்தவை, சமஸ்கிருதவியல் சார்ந்தவை, இந்தோ-ஆரிய மொழிகள் சார்ந்தவை, வரலாறும் தொல்லியலும் சார்ந்தவை, அறிவியல் சார்ந்தவை என்று நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழ்ப் பதிப்பு நூல்களை பிரெஞ்சு மொழிபெயர்ப்பில் வெளியிடுவதை இந்நிறுவனம் தலையாய நோக்கமாகக் கொண்டு காரைக்காலம்மையார் பாடல்கள், திருவிளையாடற்புராணம், காஞ்சிப்புராணம், கந்தபுராணம், பரிபாடல் மூலம், ஆண்டாள் பாடல்கள், திருமுருகாற்றுப்படை, தொல்காப்பியச் சொல்லதிகாரம் - சேனாவரையம் போன்றவற்றை பிரெஞ்சு மொழியில் மொழியாக்கம் செய்தும், ஆங்கில மொழிபெயர்ப்பில் குணசாகரரின் யாப்பருங்கலக் காரிகையையும்  வெளியிட்டுள்ளது. மேலும், பழந்தமிழ் நூற்சொல்லடைவு (1-3 தொகுதிகள்), சைவம் - பக்தி இலக்கியம் (1-3 தொகுதிகள்) போன்ற நூல்களையும் இந்நிறுவனம் வெளியிட்டு தமிழ்ப் பணி செய்து வருவதை உணரமுடிகிறது.  

ஈ. ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம், திருப்பதி

இந்நிறுவனம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் 1939ஆம் ஆண்டு நிறுவப்பட்டுள்ளது.  ஆந்திராவில் பல்வேறு பகுதிகளிலிருந்து சுவடிகளைத் தொகுப்பதும், பாதுகாப்பதும், பதிப்பு செய்வதும் இந்நிறுவனத்தின் நோக்கமாகும்.  இந்நிறுவனத்தில் சுமார் 12,000 ஓலை மற்றும் காகிதச் சுவடிகள் உள்ளன.  இந்நிறுவனம் சுவடிகளை நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டும், நூல்களை வெளியிட்டும் வருகின்றது. 

3. தமிழ்நாட்டில் தமிழ்ச்சுவடி நிறுவனங்கள்

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுவடி நிறுவனங்கள் அமைந்திருக்கின்றன.  இந்நிறுவனங்கள் தமிழ்ச் சுவடிகளை மட்டுமோ, தமிழ்ச் சுவடிகளுடன் பிறமொழிச் சுவடிகயையுமோ பெற்றுள்ளன.  தமிழ்நாட்டில் தமிழ்ச் சுவடிகள் பெற்ற நிறுவனங்களாக,

1. அடையாறு நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம் (பிரம்மஞான சபை),                     சென்னை
2. அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், சிதம்பரம்
3. அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை
4. ஆசியவியல் நிறுவனம், செம்மஞ்சேரி, சென்னை
5. உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை
6. கலைமகள் கல்வி நிலையம், ஈரோடு
7. குப்புசாமி சாஸ்திரி ஆராய்ச்சி நிறுவனம், சென்னை 
8. கோயிலூர் மடம், திருக்கோயிலூர், காரைக்குடி
9. கௌமார மடாலயம், சரவணம்பட்டி, கோவை 
10. சரஸ்வதிமகால் நூலகம், தஞ்சாவூர்
11. சி.பி. ராமசுவாமி அய்யர் பவுண்டேசன், சென்னை
12. தமிழ்ச் சங்கம், மதுரை
13. தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
14. தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி, பேரூர், கோவை
15. திருவாவடுதுறை ஆதீகம், திருவாவடுதுறை
16. மகாமகோபாத்தியாய உ.வே.சாமிநாதையர் நூலகம், சென்னை
17. மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், மதுரை
18. ஸ்ரீமௌன சுவாமிகள் மடம், சிதம்பரம்

போன்ற நிறுவனங்களைக் குறிப்பிடலாம்.  இந்நிறுவனங்களை,

1. அரசு நிறுவனங்கள்
2. அரசு சார்ந்த நிறுவனங்கள்
3. கல்வி நிறுவனங்கள்
4. மடங்கள்
5. தனியார் நிறுவனங்கள்

எனப் பகுக்கலாம்.  இவ்வாறு பகுக்கப்பெற்றவற்றில் "தமிழ்ச் சுவடிகள் : பன்முகப் பார்வை - நிறுவனங்கள்" என்னும் பொருண்மையின் சென்னைப் பல்கலைக்கழக தமிழிலக்கியத்துறை நடத்தி வரும் இக்கருத்தரங்கில் மடங்கள் (திருவாவடுதுறை ஆதீனம், ஸ்ரீமௌசுவாமிகள் மடம், கோவிலூர் மடம், கௌமார மடாலயம்) என்ற தலைப்பில் புலவர் ப.வெ. நாகராசன் அவர்களும், அரசு சார்ந்த நிறுவனங்களில் சரஸ்வதிமகால் நூலகம் என்ற தலைப்பில் முனைவர் ப. பெருமாள் அவர்களும், மதுரைத் தமிழ்ச் சங்கம் என்ற தலைப்பில் பேராசிரியர் சு. வெங்கட்ராமன் அவர்களும், அரசு நிறுவனங்களில் அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் என்ற தலைப்பில் முனைவர் இரா. சீனிவாசன் அவர்களும் உரையாற்றி உள்ள நிலையில் அவற்றைத் தவிர்த்த ஏனைய அமைப்புகளைப் பற்றி இங்குக் காணலாம்.

அரசு சார்ந்த நிறுவனங்கள்  
அ. குப்புசாமி சாஸ்திரி ஆராய்ச்சி நிறுவனம், சென்னை 

வடமொழிப் பேராசிரியரான குப்புசாமி சாஸ்திரி அவர்களின் நினைவாக 1944ஆம் ஆண்டு குப்புசாமி சாஸ்திரி ஆராய்ச்சி நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது.  இந்நிறுவனம் வடமொழி ஆய்வுக்காக ஏற்படுத்தப்பட்ட நிறுவனம் ஆகும்.  இங்குச் சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சுமார் 450 ஓலை மற்றும் காகிதச் சுவடிகள் உள்ளன.  இந்நிறுவனச் சுவடிகளுக்கான கைப்பிரதி அட்டவணை ஒன்றுள்ளது.  பாதுகாப்பு செய்யும் வசதி இல்லை.  மைய அரசின் நிதியுதவியுடன் இந்நிறுவனம் நடைபெற்று வருகின்றது.

ஆ. மகாமகோபாத்தியாய உ.வே.சாமிநாதையர் நூலகம், சென்னை

சென்னை திருவான்மியூரில் இந்நூலகம் அமைந்துள்ளது.  டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள் தமிழ் நூல்களைப் பதிப்பிக்க விரும்பி தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்குச் சென்று சுவடிகள் சேகரித்துள்ளார்.  அவர் சுவடி சேகரித்தது மட்டுமின்றி 90 நூல்களுக்கும் மேல் பதிப்பித்து வெளியிட்டிருக்கின்றார்.  அவர்தம் மறைவிற்குப் பின் அவர் தொகுத்த சுமார் 1600 சுவடிகளைக் கொண்டு 1942ஆம் ஆண்டு திருமதி ருக்மணி அருண்டேல் அவர்களால் இந்நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது இந்நூலகத்தில் 3200 ஓலை மற்றும் தாள் சுவடிகள் இருப்பதாக அறியமுடிகிறது.  இன்று இந்நூலகம் அரசு உதவிபெறும் நூலகமாகத் திகழ்கின்றது.  சுவடிகளுக்கு அட்டவணை தயாரித்தல், நூல்கள் வெளியிடல் போன்ற பணிகள் இங்கு நடைபெற்று வருகின்றன.  இந்நூலகச் சுவடிகள் விளக்க அட்டவணையின் ஆங்கில மொழிபெயர்ப்பை சென்னை ஆசியவியல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
  
மகாமகோபாத்தியாய உ.வே. சாமிநாதையர் வெளியிட்ட நூல்களை இந்நூலகம் மறுபதிப்பு செய்து வருகின்றது.  மேலும், உ.வே.சா. எழுதி வெளியிடாத சில நூல்களையும், சில சுவடிப் பதிப்புகளையும் இந்நூலகம் வெளியிட்டுள்ளது.  திருக்கழுக்குன்றக்கோவை (1943), நவநீதப் பாட்டியல் (1944), கும்பேசர் குறவஞ்சி (1944),  மூவர் உலா (1946), தோலாமொழித்தேவரின் 'சூளாமணி' (1954), குலசை உலா (1972), குற்றாலக் குறவஞ்சி (1945), கம்பராமாயணம் - பாலகாண்டம் (1946), யாப்பருங்கலக்காரிகை (1948), கம்பராமாயணம் - அயோத்தியா காண்டம் (1951), திருக்குற்றால உலா (1955), கம்பராமாயணம் - சுந்தரகாண்டம் (1957), கம்பராமாயணம் - ஆரணிய காண்டம் (1959), நளவெண்பா (1960), மநுவிஞ்ஞானேசுவரீயம் (1960), அகிலாண்டநாயகிமாலை (1961), கம்பராமாயணம் - கிட்கிந்தா காண்டம் (1961), திருக்குறள் - பழைய உரை (1961), கம்பராமாயணம் - யுத்த காண்டம் நான்கு தொகுதிகள் (1962-63), திருஅம்பர்ப் புராணம் (1965), வாட்போக்கிக் கலம்பகம் (1976), சங்கர ராஜேந்திர சோழன் உலா (1977), வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா (1980), குமாரலிங்கர் குறவஞ்சி (1982), சொர்ணகிரி அம்பிகை பிள்ளைத்தமிழ் (1982), திருக்கரந்தை ஆதிவராகப்பெருமாள் வருக்கக்கோவை (1982), நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி (1982), மூவரையன் விறலிவிடுதூது (1982), அகராதி நிகண்டு (1983), காஞ்சிப்புராணம் (1983), தனிப்பாடல்கள் (1983), வடமலை நிகண்டு (1983), இறைவாச நல்லூர்த் தலபுராணம் (1984), சிவகாமி அம்மன் அந்தாதி (1984), கீழ்வேளூர் முருகன் பிள்ளைத்தமிழ் (1985), சீவலமாறன் கதை (1985), மகரநெடுங்குழைக்காதர் பிள்ளைத்தமிழ் (1986), அபிதான மணிமாலை (1988), சாந்தாதி அசுவமகம் (1989 குறைப்பதிப்பு), நற்றிணை (1989) போன்ற சுவடிப்பதிப்புகளை இந்நூலகம் வெளியிட்டுள்ளது.

கல்வி நிறுவனங்கள்
அ. அண்ணாமலைப் பல்கலைக்கழக நூலகம், சிதம்பரம்

செட்டிநாட்டரசர் ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்களால் 1929ஆம் ஆண்டு சிதம்பரம் - அண்ணாமலைநகரில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிறுவப்பெற்றது.  இப்பல்கலைக்கழக நூலகத்தில் சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சுவடிகள் உள்ளன.  1987இல் 182 தமிழ்ச் சுவடிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.  தற்போது இந்நூலகத்தில் 430 சுவடிகள் இருப்பதாக அறியமுடிகிறது. இப்பல்கலைக்கழகச் சுவடிப்பதிப்பு வரலாறு 1952லிருந்துதான் தொடங்குகிறது.  1952 - 1970 வரையிலான 18 ஆண்டுகள் கம்பராமாயணச் செம்பதிப்புப் பணி நடைபெற்று கம்பராமாயணத்தின் ஆறு காண்டங்களும் பதினாறு மடலங்களாக வெளியிட்டுள்ளது.

இ. உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை

1968ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டின்போது கருத்தளவில் தோற்றுவிக்கப்பெற்று, 21.10.1970இல் சங்கங்கள் பதிவுச் சட்டத்தின்படி பதிவு செய்யப்பெற்று 1972முதல் ஆய்வு நோக்கில் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் என்ற பெயரில் சென்னை - தரமணியில் செயற்பட்டு வருகின்றது.  இந்நிறுவனம் இதுவரை 480 தமிழ்ச் சுவடிகளைத் திரட்டிச் சேகரித்துப் பாதுகாத்து வருகிறது.  இச்சுவடிகளுக்கான விளக்க அட்டவணையை நான்கு தொகுதிகளாக இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.  மேலும், இச்சுவடிகளை கொண்டும், பிற நிறுவனச் சுவடிகளைக் கொண்டும் பல சுவடிப் பதிப்புகளை வெளியிடுவதை இந்நிறுவனம் தலையாய நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நிலையில், கூவநூல், சின்னமகிபன் குளுவ நாடகம், திருக்குருகூர் திருவேங்கடநாதன் பிள்ளைத்தமிழ், முத்துவிசய ரகுநாத சேதுபதி பணவிடுதூது, பிரபந்தத்திரட்டு, தந்திவனப் புராணம், மனை நூல், கண் மருத்துவம், கருவூரார் பலதிரட்டு, கும்மிப் பாடல்கள், பிரபந்த தீபிகை, திருமயிலை உலா, மீனாட்சியம்மன் திருப்புகழ், வௌ¢ளைக்காரன் கதை, தன்வந்திரி குழந்தை வாகடம், தேரையர் அந்தாதி, புதுவூர்ச் சக்கரவர்த்தி அம்மானை, சந்திரபதன் கதை, கருணையம்மன் அந்தாதி, சித்த மருத்துவ மணிகள், அமிர்த மதகன் கூத்து நாடகம், மூலிகைக் கற்பங்கள், சடத்தலம், தடிவீரசுவாமி கதை,  நன்னூல் மூலமும் கூழங்கைத் தம்பிரான் உரையும், மன்னான் சின்னாண்டிக் கதை, வாத்திய மரபு, தோட்டுக்காரி கதை, குசலவர் சுவாமி கதை, சிவகிரி குமர சதகம், முத்தாரம்மன் கதை, காத்தவராய நாடகம், சின்னணைஞ்சான் கதை, காசி விசுவநாதன் சதகம், சாமிநாதப் பள்ளு, எட்டையபுரப் பள்ளு, அழகர் பெருமாள் கதை, சிறுத்தொண்டர் நாடகம், கோவலன் கதை, தட்சிணாமூர்த்தி குருமுகம் 100 போன்ற சுவடிப்பதிப்புகளை இந்நிறுவனம் வெளியிட்டு சுவடிப்பதிப்பு வரலாற்றில் தனக்கென ஒரு தனியிடத்தைப் பெற்றுள்ளது.  

1979முதல் சுவடியியல் ஓராண்டுப் பட்டய வகுப்பு தொடங்கப்பெற்று தொடர்ந்து நடத்தப்பெற்று வருகிறது.  இப்பட்டயத் தேர்வின் ஒருபகுதியாக அளிக்கப்படவேண்டிய ஆய்வேடும் சுவடிப்பதிப்பாகவே அமைகிறது. இந்நிலையில் 100க்கும் மேற்பட்ட சுவடிப்பதிப்பு ஆய்வேடுகளும், முனைவர் பட்ட ஆய்வேடுகளின் வழியாகவும், தனித் திட்டங்களின் வழியாகவும் தமிழ்ச் சுவடிகளைப் பயன்படுத்தி பல ஆய்வேடுகளையும், நூற்பதிப்புகளையும் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஈ. கலைமகள் கல்விநிலைய நூலகம், ஈரோடு

ஈரோடு நகரில் அமைந்துள்ள கலைமகள் கல்வி நிலையம் ஒரு மேல்நிலைப்பள்ளி யாகும்.  இப்பள்ளியை நிறுவிய தாளாளராலும் நிருவாகம் செய்யும் முதல்வர்களின் வரலாற்று ஆர்வத்தினாலும் அப்பகுதியில் கிடைக்கும் அரும்பொருட்கள், நாணயங்கள் மற்றும் சுவடிகள் ஆகியவற்றைக் கொண்டு ஒரு அருங்காட்சியகம் ஏற்படுத்தியுள்ளார்கள்.  இந்நிறுவனத்தில் சுமார் 140 தமிழ்ச் சுவடிகளும், சில சுவடிகள் சமஸ்கிருதத்திலும், தெலுங்கிலும் ஆக 180 சுவடிகள் உள்ளன. இச்சுவடிகளுக்குக் கைப்பிரதி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

உ. தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறை, தஞ்சாவூர்

பழமையைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்னும் உயரிய நோக்கில் 15.9.1981ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழகம் தோன்றியுள்ளது.  முதற் புலமாகச் சுவடிப்புலத்தை உருவாக்கிய தமிழ்ப் பல்கலைக்கழகம் ஓலைச்சுவடிக்கென ஒருதுறையை 2.1.1982ஆம் ஆண்டு தனியே நிறுவி இயங்கி வருகிறது.  தமிழ்ச் சுவடிகளைத் தேடித்தொகுத்துப் பாதுகாப்பதும், அவற்றைப் பதிப்பித்து வெளியிடுவதுமே இத்துறையின் தலையாய நோக்கமாகும்.  

இவ்வடிப்படையில் அமைக்கப்பெற்ற ஓலைச்சுவடித்துறை இன்று வரை 6000க்கும் மேற்பட்ட தமிழ் ஓலைச்சுவடிகளையும், 1000க்கும் மேற்பட்ட பிறமொழி (சமஸ்கிருதம், தெலுங்கு, மலையாளம், பாலி) ஓலைச்சுவடிகளையும், 1000க்கும் மேற்பட்ட ஆவணச் சுருணைகளையும் தொகுத்துப் பாதுகாத்து வருகிறது.  அவற்றுள் பெரும்பாலான சுவடிகள் மடங்கள், கோயில்கள் மற்றும் தனியாரிடமிருந்து நன்கொடையாகவும், விலைக்கும் பெற்றவையாகும். 

சுவடிப்பதிப்புகளையும், பாடநுண் பதிப்புகளையும், தமிழ்ப் பல்கலைக்கழகச் சுவடிகள் விளக்க அட்டவணைகளையும், அனைத்துலகத் தமிழ் ஒலைச்சுவடிகள் அட்டவணைகளையும் இத்துறை வெளியிட்டுள்ளது. குறுந்தொகை பாடநுண் பதிப்பு (1985), ஆத்திசூடி உரை (1985), தொல்காப்பியம் - பொருளதிகாரம் செய்யுளியல் இளம்பூரணர் உரை (1985), சீவேந்திரர் சரிதம் (1985), கங்காதரச் செழியன் பேரில் திருவாணி வாது, திருவேங்கடச் செழியன் நன்னெறி, தாகந்தீர்த்த செழியன் கோவை, கங்காதரச் செழியன் வண்ணம், தாகந்தீர்த்த செழியன் பிள்ளைத்தமிழ், அந்தாலந்தீர்த்த செழியதரையன் மஞ்சரி ஆகிய ஆறு நூல்களைக் கொண்ட செழியதரையன் பிரபந்தங்கள் (1986), நற்றிணை எடுத்துக்காட்டுப் படிவம் (1986), தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணர் உரை (1988), இலக்கணச் சூடாமணி (1990), அறுவகை இலக்கணம் விரிவுரையுடன் (1991), நோயும் மருந்தும் (1994), அகத்தியர் வைத்திய காவியம் (1994), நான்மணிக்கடிகை மூலமும் பழைய உரையும் (2001), வைத்திய சிந்தாமணி (2003), சாந்தாதி அசுவமகம் (2004), தன்வந்திரி வைத்தியக் கும்மி 300 (2004) ஆகிய சுவடிப்பதிப்புகளை இத்துறை வெளியிட்டுள்ளது. 

Union Catalogue of Tamil Palmleaf Manuscripts (1985), தமிழ்ச் சுவடி விளக்க அட்டவணை தொகுதி 1-4 (1987), தமிழ்ச் சுவடி விளக்க அட்டவணை தொகுதி 5 (1989), அனைத்துலகத் தமிழ் ஓலைச்சுவடிகள் அட்டவணை தொகுதி 1-5 (1991) மற்றும் Computerised International Catalogue of Tamil Palmleaf Manuscripts volums 1-5 (1991), தமிழ்ச் சுவடி விளக்க அட்டவணை தொகுதி 6 (1992) ஆகிய ஓலைச்சுவடிகள் அட்டவணைகளை இத்துறை வெளியிட்டுள்ளது. 

இத்துறையில் உள்ள ஆவணச் சுவடிகளை அடிப்படையாகக் கொண்டு சென்னை சென்டர் ஃபார் பாலிசி நிறுவனமானது திருப்போரூர் மற்றும் வடக்குப்பட்டு 18ஆம் நூற்றாண்டு ஆவணங்கள் (2001), Thirupporur & Vadakkuppattu : The 18th Century Accounts (2001) ஆகிய இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளது.

இத்துறை பதினொரு கருத்தரங்குகளை நிகழ்த்தியுள்ளது. அவைபின்வருமாறு: 

  1. சுவடிப்பதிப்பு நெறிமுறைகள் என்னும் பொதுத்தலைப்பில்  22-24.3.1988 ஆகிய மூன்று நாள்கள் நடத்தப்பெற்று இதில் 21 ஆய்வுக்கட்டுரைகள் படிக்கப்பட்டு, பின்னர் இக்கட்டுரைகள் 'சுவடிப்பதிப்பு நெறிமுறைகள்' (1989) எனும் தலைபில் நூலாக வெளிவந்துள்ளது.
  2. மொழிவளர்ச்சியில் சுவடி பதிப்பித்தலின் தேவை என்னும் பொதுத்தலைப்பில் 15-7.3.1989 ஆகிய மூன்று நாள்கள் நடத்தப்பெற்று, 22 ஆய்வுக் கட்டுரைகள் படிக்கப்பட்டு, தனிச்சுற்றாக வெளியிடப்பட்டு உள்ளது.
  3. சுவடிப்பதிப்பு வரலாறு - 1 என்னும் பொதுத்தலைப்பில் 2-4.4.1990 ஆகிய மூன்று நாள்கள் நடத்தப்பெற்று, 23 ஆய்வுக் கட்டுரைகள் படிக்கப்பட்டு, தனிச்சுற்றாக வெளியிடப்பட்டுள்ளது.
  4. பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை நூற்றாண்டு விழா - கருத்தரங்கம்      10-12.4.1991 ஆகிய மூன்று நாள்கள் நடத்தப்பெற்று, 32 ஆய்வுக் கட்டுரைகள் படிக்கப்பட்டு, தனிச்சுற்றாக வெளியிடப்பட்டுள்ளது.
  5. சுவடிப்பதிப்பு வரலாறு - 2 என்னும் பொதுத்தலைப்பில் 25-26.4.1994 ஆகிய இரண்டு நாள்கள் நடத்தப்பெற்று, 26 ஆய்வுக் கட்டுரைகள் படிக்கப்பட்டு, தனிச்சுற்றாக வெளியிடப்பட்டுள்ளது.
  6. சுவடிப்பதிப்பு வரலாறு - 3 என்னும் பொதுத்தலைப்பில் 28-29.3.1996 ஆகிய இரண்டு நாள்கள் நடத்தப்பெற்று, 24 ஆய்வுக் கட்டுரைகள் படிக்கப்பட்டு, தனிச்சுற்றாக வெளியிடப்பட்டுள்ளது.
  7. தண்டபாணி சுவாமிகள் நினைவு நூற்றாண்டு விழா மற்றும் மாநாடு, கோவை கௌமார மடாலயத்துடன் இணைந்து கோவை கொளமார மடாலயத்தில்    19-21.6.1998 ஆகிய மூன்று நாள்கள் நடத்தப்பெற்று, 172 ஆய்வுக் கட்டுரைகள் படிக்கப்பட்டு, தண்டபாணி சுவாமிகள் ஆய்வுமாலை என்ற பெயரில் கருத்தரங்க நாளிலேயே இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது.
  8. குமரகுருபரர் இலக்கிய ஆய்வு மாநாடு, திருப்பனந்தாள் காசித் திருமடத்துடன் இணைந்து வாரணாசியில் 4-6.10.1999 ஆகிய மூன்று நாள்கள் நடத்தப்பெற்று, 283 ஆய்வுக் கட்டுரைகள் படிக்கப்பட்டு, குமரகுருபரர் ஆய்வுமாலை என்ற பெயரில் கருத்தரங்க நாளிலேயே மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது.
  9. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் நூல்கள் - கருத்தரங்கம் 30.3.2002இல் நடத்தப்பெற்று, 20 ஆய்வுக் கட்டுரைகள் படிக்கப்பட்டு, தனிச்சுற்றாக வெளியிடப்பட்டுள்ளது.
  10. சிவப்பிரகாசர் இலக்கிய ஆய்வு மாநாடு, கோவை பேரூர் ஆதீனம் மற்றும் களம்பூர் கோவிந்தசாமி அடிகளார் அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து கோவை பேரூர் ஆதீனத்தில் 12-14.7.2002 ஆகிய மூன்று நாள்கள் நடத்தப்பெற்று, 126 ஆய்வுக் கட்டுரைகள் படிக்கப்பட்டு, சிவப்பிரகாசர் ஆய்வுமாலை என்ற பெயரில் கருத்தரங்க நாளிலேயே நூலாக வெளியிடப்பட்டுள்ளது. 
  11. தமிழ்க் கடவுள் முருகன் இலக்கிய ஆய்வு மாநாடு, கோவை கௌமார மடாலயத்துடன் இணைந்து கோவை கொளமார மடாலயத்தில் 27-29.12.2007 ஆகிய மூன்று நாள்கள் நடத்தப்பெற்று, 171 ஆய்வுக் கட்டுரைகள் படிக்கப்பட்டு, முருகன் இலக்கிய ஆய்வுமாலை என்ற பெயரில் கருத்தரங்க நாளிலேயே இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது.


மேலும், இத்துறையில் திரு.எஸ்.என்.எம். உபயதுல்லா அவர்கள் பேரில் ஒரு அறக்கட்டளையும் (1989), காசி குமரகுருபரர் மாநாட்டு நினைவு அறக்கட்டளையும் (1999) ஆக இரண்டு அறக்கட்டளைகள் நிறுவனப்பெற்றுள்ளன. திரு.எஸ்.என்.எம். உபயதுல்லா அவர்களின் அறக்கட்டளையின் வழி 1989ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் சுவடியியல் தொடர்பான சொற்பொழிவினையும்,  காசி குமரகுருபரர் மாநாட்டு நினைவு அறக்கட்டளையின் வழி 1999ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் சமயம் மற்றும் சுவடியியல் தொடர்பான சொற்பொழிவினையும் இத்துறை நிகழ்த்தி வருகின்றது.  உபயதுல்லா அறக்கட்டளைச் சொற்பொழிவுகளில் சிலவற்றை நூலாகவும் வெளியிட்டுள்ளது.  அவை பின்வருமாறு:

1. தமிழ் எழுத்தும் ஏடும் - தி.வே. கோபாலையர் (1989) 
2. சுவடிப்பதிப்பு வரலாறு - புலவர் இரா. இளங்குமரன் (1990)
3. பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை வாழ்வும் தொண்டும் -                                                  பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளை (1991)

இதுபோன்ற பணிகளில் ஈடுபடுவதோடு இத்துறை இன்றைய நவீனப்பாதுகாப்பு முறையில் சுவடிகளை டிஜிட்டல் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.  

ஊ. தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை மற்றும் தமிழ்க்கல்லூரி, கோவை

பெரும்புலவர் எழுமாத்தூர் திரு.வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டரின் 374 சுவடிகளைக் கோவை நகருக்கு அருகில் உள்ள பேரூர் சாந்தலிங்க அடிகளார் மடத்தின் சார்பில் நடைபெறும் கல்லூரிக்கு மேற்படியாரின் மறைவிற்குப் பிறகு அவரது திருமகனார் திரு. திருநாவுக்கரசு அவர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டது. இச்சுவடிகளுடன் தற்போது இக்கல்லூரியில் 520 தமிழ்ச் சுவடிகள் இருப்பதாக அறியமுடிகிறது. இச்சுவடிகளுக்கான விவர கைப்பிரதி இக்கல்லூரி நூலகத்தில் உள்ளது. 

இங்குள்ள சுவடிகளை அடிப்படையாகக் கொண்டு கம்பநாத சுவாமிகளின் கொங்குமண்டல சதகம் எனும் பதிப்பை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.  மேலும், ஆய்வாளர்களுக்கு உதவும் முகத்தான் இங்குள்ள சுவடிகள் பயன்பட்டிருக்கின்றன.  குறிப்பாக, மதுரைக் காமராசர் பல்கலைக்கழக திருக்குறள் உரைவளப் பதிப்பிற்குத் திருக்குறள் உரைச்சுவடிகளையும், பாரதியார் பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்டப்பேற்றிற்காக செல்வி த. இரமணி அவர்களுக்கு இலக்கணச் சூடாமணி சுவடிகளையும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறையிலிருந்த இலக்கணச் சூடாமணியைச் செம்பதிப்பாக வெளியிட எண்ணியபோது இங்குள்ள சுவடிகளையும் ஆய்வேட்டையும் அளித்து உதவிய தன்மையைப் பார்க்கமுடிகிறது.

எ. மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை

மதுரைப் பல்கலைக்கழகத்தின் சுவடித்துறையில் 316 ஓலைச்சுவடிகள் உள்ளன.  இவற்றுள் 266 தமிழும், 50 கிரந்த எழுத்தில் அமைந்த வடமொழியும் ஆகும்.  கைப்பிரதி அட்டவணை ஒன்றுள்ளது.  

"1. உரைவளம் - உரைக்களஞ்சியம், 2. கருவி நூல்கள் - ஆய்வடங்கல் - ஆய்வுத் தலைப்புப் பட்டியல்கள், 3. கருத்தரங்கக் கட்டுரைகள், 4. அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், 5. இலக்கிய வரலாற்று வரிசை நூல்கள், 6. அகராதிகள், 7. ஆய்வேடுகள் - ஆய்வு நூல்கள் - ஆய்வுத்திட்ட நூல்கள், 8. நாட்டார் கதைப்பாடல்கள், 9. பாடப்புத்தக நூல்கள், 10. தகவல் குறிப்பேடுகள்" (முனைவர் சு. வேங்கடராமன், பதிப்பு நிறுவனங்கள், ப.29) என்று இப்பல்கலைக்கழக வெளியீடுகளை வகைப்படுத்துவர்.  

சுவடித் தொகுப்பிலிருந்தும் சில நூல்களை இப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இத்தொகுப்பிலிருந்து தனியார் வெளியீடாக ஐவர்அம்மானையும், பல்கலைக்கழக வெளியீடாக வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல், முத்துப்பட்டன் கதை, காத்தவராயன் பாடல், கட்டபொம்மு கூத்து, கான்சாகிபு சண்டை, ஐவர் ராசாக்கள் கதை ஆகிய நாட்டார் இலக்கியங்களை இப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

தனியார் நிறுவனங்கள்
அ. அடையாறு நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம், சென்னை

அடையாறு நூலகம் எனும் தியோசபிக்கல் சொஸைட்டி நூலகம் 1886ஆம் ஆண்டு ஹென்றி ஸ்டீல் ஆல்காட் என்பவரால் நிறுவப்பட்டுள்ளது.  இந்நூலகத்தில் மிக அரிய சுவடிகள் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன.  இந்நூலகத்தில் உலகின் மிகப் பழமையான 20,000க்கும் மேற்பட்ட சுவடிகள் மற்றும் நூல்கள் உள்ளன.  இவற்றில் 1500 தமிழ்ச் சுவடிகள் இருப்பதாக அறியமுடிகிறது.  இந்நூலகம் 1990ஆம் ஆண்டு முதல் சிகாகோ பல்கலைக்கழகத்துடன் இணைந்து சுவடிகளை நுண்படம் எடுத்துப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.  இங்குள்ள சுவடிகளுக்கான அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆ. ஆசியவியல் நிறுவனம், செம்மஞ்சேரி - சென்னை

ஆசிய நாடுகளின் பண்பாடுகள், வரலாறுகள் போன்றவற்றை ஆய்வு செய்து உலகறியச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு சென்னை - திருவான்மியூரில் 1982ஆம் ஆண்டு ஆசியவியல் நிறுவனம் பேராசிரியர் ஜான்சாமுவேல் அவர்களால் உருவாக்கப்பெற்று, இன்று சென்னை - செம்மஞ்சேரியில் எழிலார்ந்த சொந்தக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது.  இந்நிறுவனத்தின் குறிக்கோள்களில் ஒன்று பழஞ்சுவடிகளைத் தேடித் திரட்டி அவற்றைப் பதிப்பிப்பதாகும்.  இதற்கென சுவடியியல் ஆய்வுப்புலம் ஒன்று 1985ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு சிறப்புடன் செயற்பட்டு வருகிறது.

இந்நிறுவனத்தில் 1400 தமிழ்ச் சுவடிகள் இருப்பதாக அறியமுடிகிறது.  இச்சுவடிகளை அடிப்படையாகக் கொண்டு இலக்கியம், நாட்டுப்புறவியல், பழந்தமிழ் இசை, சித்த மருத்துவம், கணிதவியல் போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை ஆங்கில மொழிபெயர்ப்புடன் 1987ஆம் ஆண்டு முதல் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.  மேலும், மகாமகோபாத்தியாய உ.வே. சாமிநாதையர் நூலகச் சுவடிகள், அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகச் சுவடிகள், ஆசியவியல் நூலகச் சுவடிகள் ஆகிய நூலகங்களில் இருக்கக் கூடிய தமிழ்ச் சுவடிச் செய்திகளைத் திரட்டி ஆங்கில மொழிபெயர்ப்புடன் தமிழ்ச்சுவடி விளக்க அட்டவணைகளையும் இந்நிறுவனம் பல தொகுதிகளாக வெளியிட்டுள்ளது.

"தாஷ்கண்டில் 1996இல் நடைபெற்ற கூட்டத்தில் யுனெஸ்கோ நிறுவனம் ஆசியவியல் மருத்துவச் சுவடிகளை உலகின் அரிய ஆவணங்களுள் ஒன்றாக அறிவித்துள்ளது" (முனைவர் கா. சத்தியபாமா, பதிப்பு நிறுவனங்கள், ப.10) என்பதால் இந்நிறுவனத்தில் இருக்கும் தமிழ்ச் சுவடிகளின் மதிப்பை உணரலாம்.

இ. சி.பி.ராமசுவாமி அய்யர் பவுண்டேசன், சென்னை

பாரம்பரியப் பொருட்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதிக ஆர்வம் கொண்ட சி.பி. ராமசுவாமி அய்யர் பவுண்டேன் சென்னையில் இயங்கி வருகிறது.  இந்நிறுவனத்தில் சுவடித் தொகுப்புப் பணியும் நடைபெற்று வருகிறது.  இதுவரை 22 தமிழ்ச் சுவடிகள் தொகுத்துப் பாதுகாத்து வருகின்றது.

தொகுப்புரை

இவற்றையெல்லாம் உற்று நோக்கும் போது சுவடி நிறுவனங்களை மூன்று நிலையாகப் பகுத்துக் காணலாம்.  
1. சுவடிப் பதிப்புகளை வெளியிடுவது
2. சுவடிப் பதிப்புகளை வெளியிடுவதும் சுவடிப் பதிப்புகளுக்கு உதவுவதும்
3. சுவடிகள் பாதுகாப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டதும்
எனப் பகுக்கலாம்.  மேலும், இதுபோன்ற பல நிறுவனங்களில் சுவடிகள் இருந்த போதிலும் இன்னும் பலர் வீடுகளில் கேட்பாரற்று இருட்டறைக்குள் பல சுவடிகள் இருக்க வாய்ப்பிருக்கின்றது.  அண்மையில் 2006ஆம் ஆண்டு புதுதில்லியில் உள்ள National Mission for Manuscripts (NMM) கணக்கெடுத்த  போது தமிழ்நாட்டில் மட்டும் பல ஆயிரம் சுவடிகள் இன்னும் சேகரிக்க வேண்டிய நிலையை எடுத்துரைத்துள்ளது.  இந்நிலையில் தஞ்சையில் இயங்கி வரும் தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறையானது 2008ஆம் ஆண்டைச் சுவடிகள் சேகரிப்பு ஆண்டாகக் கொண்டாடி, சுவடிகளைச் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு சேகரித்து வருகிறது.  ஆக, நிறுவனங்களில் இருக்கக் கூடிய சுவடிகளைப் பாதுகாப்பதை விட தனியார்களிடம் ஆங்காங்கே இருக்கக்கூடிய சுவடிகளையும் சேகரித்தல் மேற்காணும் நிறுவனங்களின் தலையாய பணியாகக் கொள்ளவேண்டுவது இன்றைய தேவையாகும்.

பயன்பட்ட நூல்கள்

  1. சுவடிப்பதிப்புத் திறன் - தொகுதி 1, முனைவர் சா. கிருட்டினமூர்த்தி முதலியோர், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2002.
  2. சுவடிப்பதிப்பு வரலாறு - 1, கருத்தரங்கள் கட்டுரைத் தொகுப்பு, ஓலைச்சுவடித்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2-4.4.1990.
  3. சுவடிப்பதிப்பு வரலாறு - 2, கருத்தரங்கள் கட்டுரைத் தொகுப்பு, ஓலைச்சுவடித்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 25,26.4.1994.
  4. சுவடிப்பதிப்பு வரலாறு - 3, கருத்தரங்கள் கட்டுரைத் தொகுப்பு, ஓலைச்சுவடித்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 28,29.3.1996.
  5. பதிப்பு நிறுவனங்கள், முதுமுனைவர் ம.சா.அறிவுடைநம்பி & முனைவர் சி. இலட்சுமணன், அரிய கையெழுத்துச் சுவடித்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2002.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக