வழிவழியாக பின்பற்றப்பட்டு வந்த வேளாண் முறைகள் அவ்வக்காலத்து எழுந்த இலக்கியங்களில் ஆங்காங்கு இடம்பெற்றுள்ளமையைக் காணமுடிகிறது. மகாபாரதம், தந்வந்திரி தந்திரம், பிரஉறத்ஸம்உறிதை, சுக்கிர நீதி, விஷ்ணு தர்மோத்திரம், பலவகையான சிற்றிலக்கியங்கள் போன்ற இலக்கியங்கள் வேளாண் செய்திகளைக் குறிப்பிடுகின்றன. இதுமட்டுமல்லாமல் கிருஷிசாஸ்திரம், விருக்ஷாதி ஸம்ரக்ஷ்ண சாஸ்திர தீபிகை போன்ற நூல்கள் வேளாண் செய்திகளை மட்டுமே கொண்ட நூல்களாகத் திகழ்கின்றன. இவ்வெல்லா நூல்களிலுமுள்ள வேளாண் செய்திகளை ஆயின் ஆய்வு விரியும். எனவே, 'விருக்ஷாதி ஸம்ரக்ஷ்ண சாஸ்திர தீபிகை'யில் காணப்படக் கூடியவற்றை மட்டும் இங்குக் காண்போம்.
விருக்ஷாதி ஸம்ரக்ஷ்ண சாஸ்திர தீபிகை
இந்நூல் உரைநடையால் அமைந்த 80 பக்கங்களை(கிரவுன்)க் கொண்டுள்ளது. இதன் பதிப்பாசிரியர் ஆர். கோபால அய்யர். இந்நூல் தஞ்சை சரஸ்வதிமகால் நூலகத்தில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இந்நூலின் செராக்ஸ் படியை மட்டுமே பார்க்க முடிந்தது. "இந்நூலுள் சொல்லப்பட்டிருக்கின்ற செய்திகள் எல்லாம் மகாபாரதம் சாந்திபர்வத்தில் பிருகுபாரத்வாஜஸம் வாதத்திலும், தன்வந்திரி மகரிஷி தந்திரத்திலும், பிரஉறத்ஸம்உறிதை, சுக்கிரநீதி போன்ற நூல்களில் சொல்லப்பட்டு இருக்கின்றன்" என்று இந்நூலின் பதிப்பாசிரியர் குறிப்பிடுகின்றார். நூலின் பதிப்பாண்டையோ நூலின் காலத்தையோ அறியமுடியவில்லை. ஐந்து அத்தியாயங்களாக இந்நூல் பகுக்கப்பட்டுள்ளது. என்றாலும், செய்திகள் அனைத்தும் தொடர் எண் பெற்று பத்திப் பத்தியாக அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பத்தியும் ஒரு தனிச் செய்தியைக் கொடுக்கிறது. பொதுவாக இந்நூல் மரம், செடி, கொடிகளை எவ்வாறு வளர்ப்பது, அதிக பலனைத் தரத்தக்க வழிமுறைகள் யாவை? இவைகளுக்கு ஏற்படும் நோய்கள் என்னென்ன? அவற்றை நீக்குவதற்கான வழிமுறை யாவை? மண்ணின் வகைகள், விதைகளைத் தேர்வு செய்வதும் பாடஞ்செய்வதும்; மரங்களும் அவற்றுக்கான இடைவெளியும், மரம் வைக்கும் முறை, மரங்களுக்கான மூவகை நோயும் மருந்தும், மரங்களின் வகைகள், ஒட்டுவிதைகள் போன்ற பல செய்திகளைத் தருகிறது. இவற்றுள் சில மட்டும் இங்குக் காண்போம்.
மண்ணின் வகைகள்
மரங்கள் செழிப்புடன் வளர்ந்து நல்ல பலனைக் கொடுப்பதற்கு முக்கியக் காரணமாக அமைவது மண். மண்ணின் தன்மையைப் பொருத்தே மரங்களின் வளர்ச்சியும், சுவையும், நிறங்களும் அமையும். அப்படிப் பார்க்கும் போது மரங்கள் வளரத்தக்க மண் என்றும், மரங்கள் வளரத்தகா மண் என்றும் மண்ணை இரண்டாகப் பகுக்கலாம்.
கருப்பும் சிவப்பும் மஞ்சளும் கலந்த மண், கருப்பும் சிவப்பும் கலந்த மண், சிவப்பு மண், வௌ¢ளை மண், மஞ்சள் மண்(7) போன்ற மண்கள் மரங்களை வைக்கத்தக்க மண் என்றும்; கற்பாறை நிறைந்த இடத்திலுள்ள மண், உவர்மண், புத்துமண், தரிசுமண், கெட்ட நீர் உள்ள மண் (10) போன்ற மண்கள் மரங்கள் வைக்கத்தகா மண்கள் என்றும் இந்நூல் குறிப்பிடுகின்றது.
விதைகளின் தேர்ச்சி
மரஞ்செடி கொடிகளில் முற்றிய விதைகளை எடுத்து உலரவைத்து விதைக்குப் பயன்படுத்துவதைவிட அவ்விதைகளைப் பாடஞ்செய்து பயன்படுத்தினால் உடனடியாக நல்ல பலனைத் தரும் என்பது இந்நூலின் கருத்து. விதைகளை எவ்வாறெல்லாம் பாடஞ்செய்யலாம் என்பதைப் பின்வருமாறு இந்நூல் சுட்டும்.
- நன்கு காய்ந்த விதைகளைப் பசுவின் பாலில் ஊரவைத்து, பசுவின் சாணி, மூத்திரம், நெய் முதலியவைகளினால் பிசரி பூமியில் ஊன்றி தண்ணீரும் பசுவின் பாலும் கலந்து தினமும் ஊற்றி வந்தால் மரங்கள் நல்ல பலனைக் கொடுக்கும்(14).
- அழிஞ்சில் விதை எண்ணையிலாவது, நருளிப் பழத்தின் சாற்றிலாவது எவ்வகையான விதையையும் 100 முறை நன்றாக நனைத்துக் காயவைத்து விதைத்தால் விதைத்த சிறிது காலத்திற்குள் அந்தச் செடியானது பூவுடனும் காயுடனும் நன்றாகக் காணப்படும்(29).
- நருளிப்பழத்தின் விதையைப் போக்கி அந்தச் சாற்றில் எந்த விதையையாவது ஊற வைத்து, பிறகு அழுஞ்சில் பழச்சாற்றில் மேற்படி விதையை ஏழு தடவை ஊறவைத்து நிழலில் உலர்த்திய பின் ஏழு தடவை எருமைச் சாணியில் புதைத்து எடுத்து இளநீரால் நனைக்கப்பட்ட பூமியில் மேற்படி விதையைப் புதைத்தால் ஒரே நாளில் முளை கிளம்பி நல்ல பலனைத் தரும்(30).
- எந்த விதைகளையும் 10 நாட்கள் வரையில் தினந்தோறும் ஒரு மணிநேரம் வரையில் பாலில் ஊறவைத்து, பிறகு நெய்யில் பிசரி, மான், முள்ளம்பன்றி இவைகளினுடைய இறைச்சியை வேகவைத்து அதிலிருந்து உண்டாகும் புகையில் காட்டி, பின்பு மீன், பன்றி இவைகளின் இரத்தத்தில் நனைத்து, அந்த விதைகளை நல்ல சாரமுற்ற பூமியில் நட்ட பிறகு பாலும் நீரும் கலந்து விட்டால் முளைக்கும்போதே மலர்களுடன் உண்டாகும்(59).
- அரிசி, உளுந்து, எள்ளு, வார்க்கோதுமை இவைகளை வறுத்துப் பிறகு சமனிடையாகப் பொடி செய்து நன்றாகக் கலந்து அழுகிப்போன இறைச்சிகளுடன் சேர்த்து நீரில் கலந்து அதில் புளியங்கொட்டையை ஊறவைத்து, மஞ்சள் புகையில் மேற்படி விதையைக் காட்டி அந்த விதையைப் பயிர் செய்தால் நன்றாய்த் தழைத்துக் கொண்டு கிளம்பி ஏராளமாய்ப் பலனைத் தரும்(60).
இதுபோன்ற பாடங்கள் விதைக்குச் செய்வதனால் விதை மேலும் உரம்பெற்று வீணாகாமல் உரிய காலத்துக்கு முன்னதாகவே நல்ல பலனைத் தருவதாகக் சொல்லப்பட்டிருகின்றது. இம்முறைகளை நாம் இன்று பயன்படுத்தினால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
மரங்களும் இடைவெளியும்
மரங்களின் தன்மையைக் கொண்டு ஒவ்வொரு மரத்திற்கும் உள்ள இடைவெளியைக் கணக்கிட்டு இருக்கின்றனர். அடிமரம் பருப்பதாகவும் அதிகக் கிளைகளை விடுவதாகவும் மிகப் பரந்து வளரக் கூடியதாகவும் உள்ள மரங்களை உத்தம மரங்கள் என்றும்; அடிமரம் சிறுத்தும் குறுகிய கிளைகளை விடுவதாகவும் உள்ள மரங்களை மத்திம மரங்கள் என்றும் குறிப்பர்.
உத்தம மரங்களான ஆல், அரசு, அத்தி, இச்சி, மா, புளி, சந்தனம், அசோகு, ராஜதனம், அமிருதம், புன்னை, வெண்கடம்பு, வன்னி, தேவதாரு, வாகை, கடுக்காய் மரம், வேம்பு, வெப்பாலை, எழிலம்பாலை போன்றவைகளை 25 முழம் இடைவெளி விட்டுப் பயிர்செய்ய வேண்டும். மத்திம மரங்களான எலுமிச்சை, நாரத்தை, மகிழ், வில்வம், விளா, ஜண்பகம்(பிஸ்மடாகம்), சிம்சுவாகர்ஜீரம்(தாபிஞ்சம்), காட்டாத்தி, கருங்காலி, தேக்கு, மூங்கில், வெள்வேல், மருது, புரசு, நெல்லி போன்றவைகளை 20 முழம் இடைவெளிவிட்டுப் பயிர்செய்யவேண்டும். மேலும், இவ்விரண்டு வகைக்குள் அடங்காததும் நீண்டு வளருவதும் பக்கக் கிளைகள் அதிகம் இல்லததுமான தென்னை, பாக்கு, பன்னீர், பேயகத்தி, வாதா, மாதுளை, பனை, சீதா, கொன்னை, நாகல், மரமல்லிகை போன்ற மரங்களை 10 முழம் இடைவெளிவிட்டுப் பயிர்செய்யவேண்டும் என்ற வரையறை செய்யப்பட்டுள்ளது.
இம்முறைகள் இன்றும் வேளாண் துறையினரால் பின்பற்றப்பட்டு வந்தாலும் வீட்டுத் தோட்டம் அமைப்பவர்களால் இவ்விடைவெளி முறையைப் பின்பற்றப்படுவதில்லை. தோப்பு மரங்களை விட வீட்டுத் தோட்டத்து மரங்களின் வளர்ச்சியிலும் விளைச்சலிலும் குறைவான பலன் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
மரம் வைக்கும் முறை
மரங்கள் வைப்பதற்கும் சில விதிமுறைகள் இருப்பதைக் காணமுடிகிறது. விதைகள் பாடஞ்செய்து பயன்படுத்தியதுபோல் மரங்கள் வைக்கத்தக்க இடத்தையும் பக்குவப்படுத்த வேண்டும். இதனை இந்நூல், 'ஒரு முழ சதுரம் 2 முழ ஆழம் உள்ள ஒரு குழி வெட்டி, அதில் மீன் இறைச்சியையும் நீரையும் சேர்த்துவிட வேண்டியது. நன்றாய் அந்தக் குழியானது காய்ந்துபோன பிறகு மேற்படி குழியில் நெருப்பைப் போட்டு வெப்பப்படுத்தி அக்குழியில் நான்கு பக்கங்களிலும் தேன் மற்றும் நெய் இவைகளைச் சாம்பலுடன் சேர்த்துப் பூசவேண்டும். உளுத்தமா, எள்ளுப் பிண்ணாக்கு இவைகளைக் களிமண்ணுடன் நன்றாய்க் கலந்து பிறகு ஒன்றாகப் பிசைந்து குழியை நிரப்பவேண்டும். மீன் இறைச்சி கலந்த நீரை அக்குழியில் ஊற்றி நன்றாய் மேற்படி குழியிலுள்ள களிமண் இறுகிய பிறகு எந்த விதையையாவது நான்கு அங்குல ஆழத்திற்குக் கீழ் நட்டு மீன் இறைச்சி தொடர்பான நீரை வார்த்து வரவேண்டும்'(28).
இவ்வாறு செய்வதால் விதை நன்கு முளைத்துத் தளிர்த்துப் படர்ந்து நல்ல பலனைத் தரக்கூடியதாக வளரும். இன்று இம்முறை நடைமுறையில் இருப்பதாகத் தெரியவில்லை. முதலில் குழியின் சுற்றுப்புறத்தைச் செடிக்குத் தக்கபடி பாதுகாப்பு செய்யவேண்டும் என்பதையும் செடிக்குத் தக்கபடி மண்ணைப் பக்குவப்படுத்திக் கொள்வதால் எவ்விடத்தும் எவ்விதையையும் பயன்படுத்தலாம் என்பதையும் நன்கு அறியலாம்.
மரங்களுக்கான நோயும் மருந்தும்
உயிரினங்களுக்கு வாத, பித்த, கப நோய்கள் இருப்பதுபோல் மரங்களுக்கும் இவ்வகையான நோய்கள் இருப்பதைக் காண்கிறோம்.
"அனுபானம் முதல் உந்திவரை வாதநிலை
உந்தியின் மேல் மார்பு மட்டும் பித்தநிலை
மார்பு முதல் உச்சி வரை கபநிலை" (ப.66)
என்னும் சித்தமருத்துவச் சுடரில் கூறப்படும் கருத்து மரங்களுக்கும் பொருந்துவதாக உள்ளது. மனிதனுக்குத் தோன்றும் நோயின் அறிகுறிகளை மூன்றாகப் பிரித்துள்ளனர். அதாவது பாதம் முதல் உந்திவரை தோன்றும் நோயின் அறிகுறைகளைக் கொண்டு வாதநோய் என்றும்; உந்தி முதல் மார்பு மட்டும் தோன்றும் நோயின் அறிகுறிகளைக் கொண்டு பித்தநோய் என்றும்; மார்பு முதல் உச்சி வரை தோன்றும் நோயின் அறிகுறிகளைக் கொண்டு கபநோய் என்றும் பிரித்துள்ளனர். இதேபோல் மரங்களையும் மூன்றாகப் பகுப்பர். வேரிலிருந்து கிளைகள் பிரியத் தொடங்கும் வரை உள்ள பகுதியை அடிப்பாகம் என்றும், கிளைகள் உள்ள பகுதியை இடைப்பாகம் என்றும், கிளைகளின் நுனியில் உள்ள பகுதியை கடைப்பாகம் என்றும் கொள்ளலாம். அதாவது, அடிப்பாகத்தை வாதநிலை என்றும், இடைப்பாகத்தைப் பித்தநிலை என்றும், கடைப்பாகத்தைக் கபநிலை என்றும் கூறலாம். வாத, பித்த, கபத்தின் அறிகுறிகளை சித்தமருத்துவ நோய்நாடல் நோய் முதனாடல் திரட்டு என்னும் நூலில்,
"கண்டாயோ வாதத்தாலெ ழுந்த தேகம்
கட்டிமையாய்த் தடித்திருக்குங் கருமை செம்மை" (ப.234)
என்று வாதத்தின் குறிகுணத்தையும்,
"அறிவான பித்தத்தாலெ ழுந்த தேகம்
யறமெலிவு நிறம்வௌ¢ளை யரிவை யோடு" (ப.235)
என்று பித்தத்தின் குறிகுணத்தையும்,
"தானான சிலேற்பனத்தாலெ ழுந்த தேகம்
கனத்திருக்கு மனம்பெலக்குஞ் சரீரம் வேர்க்கும்" (ப.237)
என்று கபத்தின் குறிகுணத்தையும் குறிப்பிடும். இதுபோன்ற குறிகுணங்கள் மரங்களுக்கும் இருப்பதை விருக்ஷாதி ஸம்ரக்ஷ்ண சாஸ்திர தீபிகை கூறுகிறது. அவையாவன:-
உயரமாகவும் அதிகப் பருமனாக வளரக் கூடியதும், கடினமாக இருப்பதும், தூக்கம் இல்லாமலிருப்பதும், வெய்யில் சிறிது பட்டால் வாடுவதும், நீர் கொஞ்சமும் படாமல் வளர்வதும் வாதத்தின் குணம்(48) ஆகும். இதனைப் போக்கக் காரம், கசப்பு, கஷாய சாறுகளையோ மாமிச இரசங்களையோ வேர்களில் ஊற்றிவந்தால் இந்நோய்கள் குணமடையும்(51). மேலும், மரங்களில் முண்டுகள் உண்டாகினாலும் வாத நோயின் குணம் ஆகும். இதற்கு மரஉருவிப்பட்டை, கோமயம், வசம்பு இவைகளைத் தடவுவதால் வாதநோய் குணமாகும். பொதுவாக எவ்வகையான வாத நோயாயினும் மாமிச இரசத்தை வேரில் ஊற்றினால் வாதநோய்கள் குணமடையும்(54).
வெயில்பட்டால் வெளுப்பதும் திரும்பத்திரும்ப கிளைகள் ஒடிவதும் பித்தத்தின் குணம்(49) ஆகும். இதனைப் போக்கக் காரம், உப்பு, புளி இவைகளைச் சேர்த்துக் காய்ச்சப்பட்ட சாறுகளை மரத்தின் அடியில் ஊற்றினால் பித்த நோய்கள் குணமடையும்(52).
விசேஷமான கொம்புகள் கிளைகள் கூடியும் பல புஷ்பங்கள் சுமர்த்தியாகவும் அதன் சுற்றுப் பக்கங்கள் குளிர்ச்சியாகவும் இருந்தால் அது சிலேத்துமத்தின் குணம்(50) ஆகும். இதனைப் போக்கத் தித்திப்பு, புளி, உப்பு போன்ற சாறுகளை வேரில் ஊற்றுவதினால் சிலேத்தும நோய்கள் குணமடையும்(53).
இவ்வாறு வாத, பித்த, கப நோய்களுக்கான பொதுவான நோய்களையும் அந்நோய்களுக்கான மருத்துவ முறைகளையும் மட்டும் அல்லாமல் பல தனிப்பட்ட நோய்களுக்கும் மருத்துவ முறைகளைக் கூறியிருக்கிறது இந்நூல். அவற்றுள் சில மட்டும் இங்குக் காண்போம்.
காய்ந்த கிளைகளை வெட்டிவிட வேண்டும். வெட்டப்பட்ட பாகத்தை வாய்விளங்கம், நெய், களிமண் இவைகளைச் சேர்த்துப் பிசைந்து தடவிவிட வேண்டும். அம்மரத்தின் வேர்களில் பாலும் தண்ணீரும் கலந்து ஊற்றி வரவேண்டும்(35). இலைவிழுந்த மரத்தின் சாம்பலைக் கொண்டுவந்து தோட்டங்களிலுள்ள மரஞ்செடி கொடிகளின் பேரில் தெளிக்கவேண்டும். அப்படி தெளிப்பதினால் தோட்டங்களிலுள்ள மரஞ்செடிகள் வியாதி, அக்கினி முதலியவைகளால் பீடிக்கப்படாமல் காப்பாற்றப்படும்(37). கார்த்திகை மாதத்தில் சொக்கப்பானை கொளுத்தப்பட்ட சாம்பலையும், குயவன் சூளை சாம்பலையும், சுடுகாட்டுச் சாம்பலையும் மரஞ்செடி கொடிகளுக்குத் தெளிப்பதினால் பூச்சி முதலிய வியாதிகள் நீங்கி நல்ல பலனைத் தரும்(38).
மரத்தில் காய்கள், பிஞ்சுகள் உதிர்ந்துகொண்டிருந்தால், கொள்ளு, உளுந்து, மொச்சை, வார்க்கோதுமை, எள்ளு இவைகளை சமனிடை கலந்து வறுத்து சூடு ஆறிய பிறகு அம்மரங்களின் அடியிற் போட்டு மண்ணைப்போட்டு மூடிவைத்தால் அம்மரங்கள் நன்றாகப் பிஷ்பித்து அதிகமாக நல்ல பலனைத் தரும்(57). ஆட்டுப்புழுக்கை 1 மரக்கால், எள்ளு லு மரக்கால், வறுத்த அரிசிமா 1 மரக்கால், மாட்டின் மாமிசம் 12லு சேர் இவைகளை நீரில் கலந்து ஏழு நாட்கள் வைத்திருந்து ஏழாம் நாள் காலையில் மரங்களின் வேர்களில் எருவாகப் போட்டால் அம்மரங்கள் நல்ல பலனைத் தரும். பூச்செடியாக இருந்தால் அதிக பூக்களைத் தரும்(58).
மரத்தின் மீது இடி விழுந்து வெளிவளர்ச்சி மட்டும் இருந்து பலன் எதுவும் இல்லாமல் இருக்கும் மரத்திற்குக் கோரைக்கிழங்கு, வெட்டிவேர், இலுப்பைவேர், பச்சைப்பயறு, உளுந்து, எள்ளு இவைகளைச் சமனிடையாக எடுத்துக்கொண்டு மாவாகச் செய்து பாலும் நீரும் கலந்து மேற்படியான மரத்தின் வேரில் ஊற்றினால் அந்த மரம் முன்போல் ஆகும்(64). மரங்களிலுள்ள இலைகள் சுருண்டுபோதல், மீன்நாற்றம் அடித்தல், இலைகள் உதிர்தல், எறும்புகள் ஜாஸ்தியாக மொய்த்துக்கொண்டிருத்தல், இலைகள் அடிக்கடி சருகுகளாய்ப் போதல் போன்ற நோய்கள் மரங்களுக்கு உண்டானால் அம்மரத்தின் அடிமரத்தில் கோடரியினால் சிறு கொத்துகளாகக் கொத்தினால் அம்மரத்திலுள்ள விஷநீர்கள் வடிந்துவிடும். அதன் பேரில் தேன், நெய், வாய்விளங்கம் இவைகளைத் தண்ணீரில் அரைத்துப் பாலுடன் கலந்து மேற்படி மரத்தின் வேரில் போட்டு மண்ணினால் மூடி பாலும் தண்ணீரும் கலந்து ஊற்றி வந்தால் நல்ல பலனைத்தரும்(67). இதுபோன்ற செய்திகள் இன்னும் பலப்பல இந்நூலுள் அமைந்திருக்கின்றன.
ஒட்டு விதைகள்
பொதுவாக ஒரு செடியையோ மரத்தையோ இன்னொரு செடியுடனோ மரத்துடனோ ஒட்டி ஒட்டுச் செடியையோ ஒட்டு மரத்தையோதான் உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் பழங்காலத்தில் ஒட்டுவிதைகளையே உருவாக்கி இருக்கின்றனர். பூசணிக்கொடியில் கத்தரிக்காய் காய்ப்பதை, 'கொடியிலிருக்கும் இளம்பூசணிப் பிஞ்சின் நடுவில் சிறு துவாரஞ் செய்து நெய் தேன் இவைகளினால் நனைக்கப்பட்ட கத்தரி விதையை மேற்கண்ட பூசணிப் பிஞ்சுக்குள் செலுத்தி மேற்படி பாகத்தை மூடி வைத்து மேற்படி பிஞ்சு நன்றாய் முற்றிப் பழுத்த பிறகு அதனுள் இருக்கும் விதையை எடுத்து பூமியிற் போட்டு பயிர் செய்து வந்தால், பூசணிக்கொடியாகப் படர்ந்து அதில் காய்க்கும் காய்கள் கத்தரிக்காயாக இருக்கும்(102)' எனவும், முருங்கை மரத்தில் பாகற்காய் காய்ப்பதை, 'நன்றாய் முற்றிய முருங்கை நெற்றைக் கொண்டு வந்து அதிலிருக்கப்பட்ட விதைகளில் பாதி விதையை எடுத்துவிட்டு அந்தப் பள்ளத்தில் கொம்புப் பாகல் விதையை வைத்து மறுபடியும் மேற்படி நெற்றைக் கட்டி மண்ணில் அதைப்புதைத்து வைத்தால், அது முருங்கை மரமாகப் பயிராகி அதில் பாகற்காய், முருங்கைகாய் இவைகள் இரண்டும் காய்க்கும்'(103) எனவும் குறிப்பிடுகின்றதைக் காணலாம்.
ஒரு நிறப்பூவை மற்றொரு நிறப்பூவாகச் செடியிலேயே மாற்றுவதற்கான ஒட்டு வகைகளையும் இந்நூல் கூறுகிறது. பல வர்ணங்களுள்ள புஷ்பங்களை புஷ்பிக்க (சிவப்பு, வௌ¢ளை, கருப்பு, மஞ்சள்) இப்படி புஷ்பிக்கப்பட்ட செடிகளின் கிளைகளைப் பதியனாகப் போட்டு மேற்படி பதியன்கள் பயிரானவுடன் அவைகளை ஒன்றாகச் சேர்த்து நூல்களினால் கட்டி அதன்பேரில் நெய், தேன் இவற்றைத் தடவி பூமியில் நட்டு நீர் ஊற்றி வந்தால் அவைகள் அடிமரம் ஒன்றாயும் மேல்கிளைகள் பல கிளைகளாகப் பிரிந்து நானாவர்ணமுள்ள புஷ்பங்களைக் கொடுக்கும். இதே விதமாக நார்த்தை, எலுமிச்சை, கிடாரை முதலிய ஜாதிகளுக்கும் செய்யலாம்(105). பல வர்ணமாக செடிகளுண்டுபண்ண வேண்டுமானால் அவ்வித விதைகளை எந்தவர்ணமாக செய்யவேண்டுமோ அந்த வர்ணத்தையும் அழிஞ்சில் தைலத்தையும் சேர்த்து அதில் மேற்படி விதையை ஊறவைத்து பூமியில் ஊற்றின பிறகு அவைகள் எந்த வர்ணத்தினால் நனைக்கப்பட்டனவோ அந்த வர்ணத்தையும் தண்ணீருடன் கலந்து தினந்தோறும் காலை மாலை இரண்டு வேளைகளிலும் மேற்படி செடிகளுக்கு ஊற்றிவந்தால் அதே நிறமுள்ள புஷ்பங்களைக் கொடுப்பதுடன் செடிகளும் அதே வர்ணமாகிவிடும். மேற்கண்ட விதமாகப் பருத்தியும் செய்யலாம்(106).
இதுபோன்ற ஒட்டு விதை முறைகளும் ஒட்டு வண்ண முறைகளும் வீட்டுத் தோட்டத்தில் பயிரிட்டு வந்தால் குறைந்த இடத்தில் நிறைந்த செடிகளையும் பூக்களையும் வைத்த பெருமைக்குரியவராக இருப்போம். இந்நூலில் கூறப்பட்டுள்ள செய்திகளின் உண்மை நிலையை அறிந்து இன்றைய வேளாண் துறையில் செயல்படுத்த வேண்டும் என்பதும், இதுபோன்ற நூல்களை அரசே பதிப்பித்து வேளாண்மைத் துறைக்குப் படிக்கும் மாணவர்களுக்குப் பாடமாக வைக்கவேண்டும் என்பதும், பழைய மருத்துவ முறைகளுக்கும் புதிய மருத்துவ முறைகளுக்கும் உள்ள ஒன்றுமை வேற்றுமைகளை ஆய்வு செய்து வேளாண்மை செய்திட இதுபோன்ற நூல்கள் பயன்படும் என்பதும் இவனின் எண்ணமும் ஆசையுமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக